Thursday, June 21, 2012

ஆடுகளம்
-----------------
ஒரு மாலை வேளையில்
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு மெல்லிய தலையசைப்பு

ஒரு புன்சிரிப்பிற்கு பிறகு
ஒரு அன்பான கைகுலுக்கல்
ஒரு நலம் விசாரிப்பில்

இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு நிதானமான
தேநீர் பருகலுக்கு பிறகு
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது

நமக்கான இடத்தை தேர்வு செய்து
கறுப்பும் வெண்மையும்
கலந்த கட்டங்களின் முன்பாக
நேருக்கு நேர் அமர்கின்றோம்

கட்டங்களின் நிற வேறுபாடுகளை
எதேச்சையாக கவனிக்கும் நாம்

திடீரென நமது முகங்கள்
எதிரெதிர் சந்தித்துக்கொள்வதின்
தர்மசங்கடத்தை உணர தொடங்குகிறோம்

நாம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்
சதுரங்க காய்களை அடுக்குகின்றோம்
களத்திற்கு செல்லும் சாமுராய்

தனது கொலைவாளை
மிருதுவான எண்ணெய் துணியால்
துடைப்பதை போன்று
அவ்வளவு நேர்த்தியாக

ஆட்டத்தை முதலில் ஆரம்பிக்கும் நீ
உனது படைவீரனை களம் இறக்குகின்றாய்

குதிரையிலிருந்தபடி அவனை வீழ்த்தும்
என் ஆவேசம் கண்டு
நீ அரண்டு போகிறாய்
உனது பயம் ரசிக்க வைக்கின்றது

ஒரு வளைவில் திரும்பும்போது
உனது யானை படைகள்
என்னை வழிமறித்து தாக்குகின்றன
தடுமாறி விழுபவனை பார்த்து
மதகுருமார்களும் படைவீரர்களும்
கைகொட்டி சிரிக்கின்றார்கள்

ஆட்டம் மெல்ல மெல்ல
கட்டுப்பாட்டை மீறி போகின்றது
ரெளத்திரம் கொள்ளும்
எனது படைவீரர்கள்
ஆவேசத்துடன் பாய்கின்றனர்

வஞ்சகமும் வெறியும் கலந்த
நமது மதகுருமார்களின் போதனைகள்
கொலைக்களமெங்கும் எதிரொலிக்கின்றன

இதுநாள் வரை ஆடுகளத்திற்கென்று
வரையறுக்கப்பட நியதிகள் உடைபடுகின்றன

நாம் அமர்ந்திருக்கும்
அறையெங்கும் குருதி வாசனை
கவிழ தொடங்குகிறது

நம்மிடம் இன்னும்
ஐந்து போர்வீரர்கள் மட்டும்
எஞ்சியுள்ளார்கள்
யார் யாரை கொல்வார்கள்
என்று தீர்மானிப்பது கடினமாயுள்ளது

ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொருட்டு
எழுந்து வெளியில் செல்லும் நான்
நடுங்கும் கைகளுடன்
ஒரு சிகரெட் பற்றவைத்து
களத்திற்கு திரும்பி வருகின்றேன்
பதற்றமாக சதுரங்க களத்தை
பார்வையிடுகின்றேன்

நான் இல்லாத நேரத்தில்
எனது சதுரங்க காய்களை
யாரும் நகர்த்தி வைக்கவில்லையென்று
உறுதி செய்கின்றேன்
முதுகில் குத்தி கொலை
செய்யப்படவில்லையென்று
ஆசுவாசமடைகின்றேன்

ஆட்டத்தை தொடங்கும்போது
இருந்த நமது முகங்கள்
இப்போது இங்கு இல்லை
அவை வேறொருவடையதாய் மாறியிருக்கின்றன

கூடுமானவரை
நானும் நீயும்
இந்த ஆட்டத்தை
தள்ளி போடவே விரும்புகின்றோம்

இந்த 64 கட்டங்களில்
எங்கோ ஒளிந்துள்ளது
மரணமும்
மரணத்தை தள்ளிபோடும்
இந்த விளையாட்டும்

இன்னும் சில நிமிடங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில மணித்துளிகளில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில யுகங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்

கருணையற்ற இந்த இரவு
நீண்டுக்கொண்டே செல்கின்றது



நன்றி

என்.விநாயக முருகன்