Friday, April 23, 2010

கொசுத்தொல்ல தாங்கமுடியலடா நாராயணா

கிழவிக்கு வைத்தியம் பார்க்க
விசா இல்லையாம்
ஐ.பி.எல்லுக்கு வந்திறங்கும்
வெளிநாட்டு குஜிலிகள்

ஒரு ரூபாய் அரிசி
வாக்கரிசிக்கும் லாயக்கில்லை
பொணம் கூட வாயைமூடுது

அதிகம் யோசிக்காதே
இருக்கவே இருக்கு
இலவச டிவி

நொடிக்கொரு பவர்கட்
கதவைத்திற காற்று வரட்டும்
சாமி கூட வெயிலில் வாடுது
சாமியாருக்கு ஏ.சி.கார்

ஆபரேஷன் கிரீன்ஹண்ட்டில்
ஆதிவாசிகளை கொன்று குவிப்போம்
ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்

எவன் செத்தா எனக்கென்ன?
என் வைப்பாட்டிக்கு பரிசு
கிரிக்கெட் டீம்.

Monday, April 19, 2010

என் தியானக் குறிப்புகள் - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த என் தியானக் குறிப்புகள் எ‌ன்ற கவிதையை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி.

ஒவ்வொரு கோப்பை
ஒயின் பின்னாலும்
ச்சீ.. ச்சீ.. இது புளிக்கும்
நரியொன்று விட்டுச்சென்ற
நிராகரிப்பு


பொம்மைக்கடையில்
அழுகிறது குழந்தை
அடம்பிடித்தபடி
சிரிக்கிறார் புத்தர்


கண்ணாடி முன்பு
நான் சிரிக்கிறேன்
அவனும் சிரிக்கிறான்
நான் அழுகிறேன்
அவனும் அழுகிறான்
சலித்துப்போய் திரும்ப
அவனும் கிளம்பியிருந்தான்


எனக்கு
யாருமில்லை
டீ
கூட
நேற்றுதான்
தெரிந்தது
தேநீர்க்கடையில்
(நன்றி நகுலனுக்கு)


தியானத்தில் அமர்ந்தேன்
முடிவில்
எறும்பு ஊரும் பேரிரைச்சல்-நன்றி
என்.விநாயக முருகன்

Friday, April 16, 2010

அம்முக்குட்டி

அம்முக்குட்டி
-----------------

யோனி கவிதை
ஏதாவது எழுதினா‌‌‌ல்
நாலே நாளில்
ந‌ல்ல பலனுண்டாம்
தோழர் சொன்னது


விழுந்தடித்து ஓடினேன்
ஆண்டாள் வீட்டுக்கு
அங்கும் திருப்தியில்லை


இன்னொரு தோழரிடம் விசாரித்தேன்
ஜோதி தியேட்டரை கைகாட்டினார்
அஞ்சாவது ரீலறுந்ததில்
பிட்டு சரியாக தெரியவில்லை


மற்றுமொரு தோழர் கேட்டது
மழைப்பற்றி எழுத பிடிக்குமா?
மழையில் நனைய பிடிக்குமா?
இதென்ன கேள்வி? நனைவதுதானே


அவர் சொன்ன விலாசத்தில்தான்
ஆறாவது வீட்டு
அம்முக்குட்டியை சந்தித்தேன்

சின்னஞ்சிறு சொர்க்கம்‏


(இயக்குநர் மஜீத் மஜிதியின் பிறந்த நாள் ஏப்ரல் 17 . எனது அலுவலகத்தின் பிளாக்கில் மஜீத் மஜிதி ஸ்பெஷலாக எழுதப்பட்ட கட்டுரை)

தமிழில் இதுவரை குழந்தைகள் அக உலகை நேர்மையாக பதிவு செய்திருக்கும் ஏதாவது படம் வந்திருக்கா எ‌ன்று கேட்டபோது ஒரு நண்பர் சிபாரிசு செய்த பட்டியல். குழந்தையும் தெய்வமும், அஞ்சலி, சபாஷ் பாபு, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த ‌சில படங்கள். (குறிப்பாக ‘எங்க வீட்டு வேலன்’) அட..ங்கொக்கமக்கா…

மூன்றுமாதம் முன்பு கே.கே நகர் டிஸ்கவரி புக்பேலஸில் “பசங்க” படம் பற்றிய ஒரு கருத்தரங்கு நடந்தது. “பசங்க” படத்துக்கு தங்கயானை ‌‌விருது கிடைத்த கையோடு இயக்குநர் பாண்டிராஜ் பேசினார். அவர் நடிகர் நாசரை சந்தித்தபோது தான் ஒரு குழநதைகள் படம் எடுக்க இருப்பதாக சொல்ல, அப்போது நாசர் கேட்டாராம். “நீங்க எடுக்க போறது குழந்தைகள் பார்க்கும் படமா? குழந்தைகள் நடிக்கும் படமா?” எ‌ன்று. குழந்தையும் தெய்வமும், அஞ்சலி, சபாஷ் பாபு,எங்க வீட்டு வேலன் போன்ற படங்கள் எல்லாம் குழந்தைகள் நடித்தது. அவ்வளவே. குழந்தைகள் பார்க்கும் படம் என்றால் அது கார்ட்டூன் மட்டுமே எ‌ன்று நாசர் சொன்னார். கூட்டத்தின் முடிவில் ஓரிரு நிமிடங்கள் பாண்டிராஜுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவரிடம் சொன்னேன். குழந்தைகள் பார்க்கும் படம், குழந்தைகள் நடிக்கும் படம் தவிர மூன்றாவது ஒரு வகை உள்ளது. குழந்தைகள் அக உணர்வுகளை சொல்லும் படம். உங்கள் “பசங்க” படம் சில்ட்ரன் ஆப் ஹெவனுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை எ‌ன்று. சில்ட்ரன் ஆப் ஹெவன் போலவே தமிழ்ச்சூழலில் ஒரு படம் எதிர்பார்க்க முடியாது. எடுக்கவும் முடியாது. அதே நேரம் எங்க வீட்டு வேலனை குழந்தைகள் படம் என்று கொண்டாடுவதையும் அனுமதிக்க முடியாது. முகுந்த நாகராஜனின் குழந்தைகள் பற்றிய கவிதைகள் படிக்கும்போது எனக்குள் ஒரு இனம்புரியாத பரவசம் ஏற்படும்.அதுபோல மஜீத் மஜிதியின் திரைப்படங்களில் காட்டப்படும் குழந்தைகளின் அக உலகை பார்க்கும்போதும் இனம்புரியாத பரவசம் ஏற்படும்.

சிறுவன் அலி தனது தங்கை ஜாராவின் பழைய நைந்துப்போன ஷுக்களை தைத்துவிட்டு வீடு திரும்புகிறான். வழியில் காய்கறிக்கடை செல்கிறான். கடை வெளியிலிருக்கும் உபயோகமில்லாத குப்பைகளுக்கு அருகே ஷு இருக்கும் பிளாஸ்டிக் கவரை வைத்து உள்ளே நுழைகிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக ஷு இருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்துச் செல்கிறான். கடைக்குள் சென்ற அலி உருளைக்கிழங்குடன் திரும்பி வந்து பார்த்தால் கவர் மிஸ்ஸிங்.


ஷு தொலைந்துபோன விவரத்தை அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்கிறான் அலி. காரணம், குடும்பத்தின் வறுமை. அலியின் அம்மா குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர நோயாளியும்கூட. அலி, ஜாராவின் அப்பாவுக்கோ நிரந்தர வேலையில்லை. ஐந்து மாதம் வாடகை பாக்கி வேறு.

அண்ணனும், தங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் ஷு வை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. (ஈரானில் பெண்களுக்கு காலை வேளையிலும், ஆண்களுக்கு மதிய வேளையிலும் பள்ளிக்கூடம் நடக்கின்றது) ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து ஷு வை வாங்கி அணிந்து சென்றால் ஷு தொலைந்ததை தந்தையிடம் சொல்லாமல் மறைத்து அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.

தன் காலுக்குப் பொருந்தாதபோதும் அலியின் பெரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. கூட படிக்கும் மற்ற குழந்தைகளின் விலை உயர்ந்த காலணிகள் அவள் மனதில் ஏக்கத்தை உருவாக்குகிறது. தவிர ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அலியிடம் ஷுவை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது.

ஒரு காட்சியில் ஓடிவரும்போது சாலையோர சாக்கடை நீரில் ஷூ விழுந்து அடித்துச்செல்கிறது. ஜாரா அழுதபடி அமர்ந்திருக்க ஒரு கடைக்காரர் ஷூவை எடுக்க உதவி செய்கிறார். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது.

தினமும் வகுப்பு தொடங்கிய பிறகே அலியால் பள்ளிக்கூடம் செல்லமுடிகிறது. தினமும் தாமதமாக வருவதால் தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியரின் பரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.

இதனிடையில் தொலைந்து போன தனது ஷுவை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெரியாதவர் (இவர்தான் முதல் காட்சியில் குப்பை வண்டி தள்ளி வந்தவர்) என்பது தெரிந்ததும் அலியும்,ஜாராவும் ஒன்றும் பேசாமல் வீடு திரும்புகிறார்கள்

இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் மூன்றாவது பரிசாக ஒரு ஜோடி ஷு என்பது தெரிய வந்ததும் ஆசிரியரிடம் கெஞ்சி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் மூன்றாவதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் ஷுவை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜோடி ஷு வாங்கித் தருவதாக வாக்களிக்கிறான்.


பந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு ஷுவை கொடுக்க ஓடிவரும் சத்தமும், அவர்களது உரையாடலும்,காட்சியும் ஒலிக்கிறது. பந்தயக்கோட்டை தாண்டி வரும் தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசிரியரிடம் நான் மூன்றாதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான். மூன்றாவதா..? முதல் பரிசே கிடைத்துவிட்டது என்கிறார் ஆசிரியர். அலியின் முகாம் ஏமாற்றத்தில் வாடிப் போகிறது.


வீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் வாடிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் கேட்க, அவள் உள்ளே செல்கிறாள்.


பந்தயத்தில் ஓடியதால் அலியின் ஷு நைந்து கிழிந்து போயிருக்கிறது. வீட்டின் முன்னாலிருக்கும் தண்ணீர்த்தொட்டியின் அருகே அமர்ந்து ஷுவை கழற்றுகிறான். கால்களில் பல இடங்களில் காயங்கள். வலியும் ஏமாற்றமுமாய் கால்களை தொட்டி நீரில் அமிழ்த்துகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை தங்க நிற மீன்கள் சுற்றி சுற்றி வந்து முத்தமிடுவதுடன் படம் முடிகிறது.


மூன்று நாட்களுக்கு மேல் எனக்குள் தாக்கம் ஏற்படுத்தியது எ‌ன்று பி.சி..ஸ்ரீராம். தனக்கு பிடித்த பத்து படங்களின் பட்டியலில் இந்த படமும் இருப்பதாக ஒரு பேட்டியில் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருந்தார்.

பின்தொடரும் குயிலின் குரல்

(இயக்குநர் மஜீத் மஜிதியின் பிறந்த நாள் ஏப்ரல் 17 . எனது அலுவலகத்தின் பிளாக்கில் மஜீத் மஜிதி ஸ்பெஷலாக எழுதப்பட்ட கட்டுரை)

பொதுவாக தமிழ்படங்களில் சோக உணர்வூட்டும் காட்சிகளென்றால் ஹீரோவுக்கு கேன்சர். ஹீரோவின் அப்பாவுக்கு கண் தெரியாது. ஹீரோ அம்மா அழுவார். வீட்டு நாய் அழும். பூனை அழும். இவ்வளவு ஏன் படத்திற்கு டிக்கட் வாங்க கவுண்டருக்குள் கையை விட்டால் டிக்கட் தருபவர் கூட பிழிய,பிழிய அழுதபடியே டிக்கட் தருவார். விளிம்பு நிலை மனிதர்களை, அடித்தட்டு மக்களின் வாழ்வை சொல்வதென்றால் அநியாயத்துக்கு கேரக்டர்களை அழ விடுவது கூட ஒரு வித எதார்த்த மீறலே.


மஜீத் மஜீதி படங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை பட்டவர்த்தமாக சொல்லப்பட்டிருக்கும். அதேநேரம் அந்த மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒருவித கவித்துவமோ, அழகியலோ ,நகைச்சுவையோ கலந்திருக்கும். மனிதநேயம் முற்றிலும் பட்டுப்போய் விட்டதோ எ‌ன்று நினைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு பூ பூப்பதை காட்டுவார். கல்யாண்ஜி கவிதைகள் போல


கரீமிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள். மனைவி நர்கீஸ். பெ‌‌ரிய மகள் செவித்திறன் இழந்தவள்.கரீம் ஒரு பொறுப்பான கணவன். ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன். ஊரின் ஒரு நெருப்புக் கோழிப்பண்ணையில் வேலை. கோழிகளுக்கு தீவணமிடுவது, அதன் முட்டைகளை சேகரிப்பது இப்படி ஜீவன் ஓடுகிறது. ஒரு நாள் பண்ணையில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது இன்னொரு பணியாளர் வருகிறார். உனது மனைவி உன்னை தேடிக் கொண்டிருக்கிறாள். உனது மகளின் ஹியரிங் எய்டு கருவி காணாமல் கிணற்றில் விழுந்துவிட்டதாம் எ‌ன்று சொல்கிறார். கரீம் வீட்டிற்கு அவசரமாக செல்கிறார். கரீமின் மகன், மகள்கள் மற்றும் அவன் வயதை ஒத்த சில சிறுவர்களும் சேர்ந்து அவர்களின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய பாழடைந்த கிணறு போன்றதொரு நீர்த் தொட்டியை சுத்தம் செய்து அதில் தங்க மீன்களை வளர்க்க செய்யும் முயற்சியில் அந்த தொட்டியில் விழுந்திருப்பதை அறிகிறார். இந்த மாதிரி சாக்கடையில் விளையாடதீர்கள். கிருமி பரவும். சாக்கடையில் மீன்கள் எல்லாம் வளர்க்க முடியாது. ஜூரம் வந்து படுத்துகிட்டா, என்று பொறுப்பான தகப்பனாக சொல்லிவிட்டு, தானும் இறங்கி ஒருவழியாக கருவியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் கருவி வேலை செய்யாமல் போனதை அறிந்து, மகன் மீது கோபம் கொள்கிறார்.

இந்நிலையில் கரீமின் பராமரிப்பிலிருக்கும் கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பி விடுகிறது. அதற்கு கரீமின் கவனக் குறைவே ஒரு காரணமென சொல்லப்பட, எப்படியும் வேலை பறிபோய்விடுமென நினைக்கிறார், பின் வேலையிலிருந்தும் விலகுகிறார். வீட்டிற்கு சோகமாக வரும் கரீம் என்ன நடந்தென்று கேட்கும் மனைவியிடம் எனக்கு வேலை பிடிக்கவில்லை. ஊமை நெருப்புக்கோழிகளிடம் வேலை செய்ய பிடிக்கவில்லை. சம்பளம் நல்லா இ‌ல்லை. வேறு வேலை தேடப்போகிறேன் ஏதேதோ சொல்லி விடுகிறார். ஹியரிங் எய்டை அருகிலிருக்கும் நகரத்திற்கு எடுத்துக்கொண்டுசென்று அதனை சரிசெய்ய முயலும் அவனுக்கு அதை சரிசெய்ய இரண்டு மாதங்களாகும் என்று பதில்வருகிறது. புதிதாக வாங்கலாமென்றால் யானை விலை,குதிரை விலை. என்ன செய்வது என்று சோகமாக வெளியே வரும் கரீமின் டூவீலரில் ஒருவர் ஏறிக்கொண்டு ஒரு இடத்தில் இறக்கிவிடுமாறு சொல்கிறார். அதற்கு பணமும் தருகிறார். அந்த நகரத்தில் அதையே ஒரு தொழிலாக பலர் செய்வதை கவனிக்கிறார். அதையே தொடர்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக நகரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களையும் பணத்தையும் கொண்டு தனது வீட்டை சிறிது சிறிதாக புணரமைத்து வருகிறார். இதற்கிடையில் ஒருமுறை வீட்டின் பின்புறத்தில் பழைய தட்டுமுட்டு சாமான்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது கரீமிற்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. கால் எலும்பு முறிந்து படுக்கையில் விழுகிறார்.


அதனா‌‌‌ல் மனைவியும் காது கேளாத மகளும் கீரைகளை பறித்து அருகிலுள்ளவர்களுக்கு விற்று சம்பாதிக்கின்றனர். மகன் வேலைக்கு போகிறான். ஆசையாய் செய்து வைத்த கதவு விலைபோகிறது. எல்லாவற்றையும் படுத்தபடியே பார்த்து கண்ணீர்விட்டபடியே கரீம். சூழ்நிலை ஒரு மனிதனை புரட்டி எடுக்கும் காலம். மைத்துனன் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவரும் வழியில், கரீமுடன் அவனது மகனும் அவனது நண்பர்களும் பிரயாணப்படுகிறார்கள். அந்த வண்டியிலிருக்கும்
பூந்தொட்டிகளை வீடுகளில் இறக்கிவைக்க சிறுவர்களுக்கு அதற்கு ஊதியமாக தங்க மீன்கள் கொடுப்பதாக சிலர் சொல்கிறார்கள். அதே வண்டியில் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் ‌சில தங்க மீன்களையும் சுமந்தபடி வருகிறார்கள். தங்க மீன்களை வளர்ப்பது சிறுவர்களின் நெடுநாள் கனவு.

வழியில் ஒரு வீட்டில் தொட்டிகளை இறக்கும்போது அந்த பிளாஸ்டிக் தொட்டி உடைந்து தண்ணீர் வழிய ஆரம்பிக்கின்றது. பதறிப்போய் அருகிலுள்ள வாய்க்காலில் உள்ள நீரை அள்ளி நிரப்பும் நோக்கில் அங்கே தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள், சிறுவர்கள். பிடிநழுவி கீழே விழுந்து உடைந்த பிளாஸ்டிக் தொட்டியிலிருந்து அனைத்து மீன்களும் கீழே சிதறித்துடிக்கிறன. கனவு மீன்கள் தரையில் துடிப்பதைப்பார்த்தபடியே சிறுவர்கள் அழுதுகொண்டே கைகளால் வாய்க்காலில் தள்ளிவிடுகிறார்கள்.


பின் ஒரேயொரு மீனை ஒரு பையில் போட்டுக்கொண்டு சோகமாய் திரும்பும் சிறுவர்களை தெம்பாக்க கரீம் ஒரு பாடல் பாடுகிறார். பாடலினூடே ஊர் வந்து சேர்கின்றனர். கரீமின் மகன் ஒற்றை மீனை தங்களது சுத்தம் செய்து வைத்திருக்கும் தொட்டியில் விட ஓடுகிறான். தனியே அமர்ந்திருக்கும் கரீம் வீட்டு ஜன்னல் வழியாக ஒரு குருவி நுழைந்து அலைமோதுகிறது. கதவை திறந்து அதற்கு வழிக்காட்டுகிறார். அவனது பழைய நெருப்புகோழி பண்ணையிலேயே மறுபடியும் வேலையில் சேர அழைப்பு வருகிறது. காலொடிந்த கரீம் உள்ளே இருந்தபடியே செய்தியை கேட்கிறார். வெளியே நிற்கும் மனிதன் வீடு மதில் மீது ஒரு இனிப்பு பொட்டலத்தை வைத்துவிட்டு செல்கிறார்.

கரீம் ஒருவித சலமனற்ற முகத்துடன் ஒடிந்த காலுடனும் கோழிப்பண்ணை செல்கிறார். அ‌ங்கு ஒரு நெருப்புக்கோழி நர்த்தனமாடுவதை பார்க்கிறார்.கரீமின் முகத்தில் நம்பிக்கை ஒரு ஒளியைப்போல மெல்ல பரவுகிறது. இசையோடு எழுத்துக்கள் மேல் நோக்கிநகர படம் முடிகிறது.

இந்த படத்தில் ஆயிரம் கவிதைகள் உள்ளன. அப்பாவின் மனது குளிர காதுகேட்கிறது என்று பொய் சொல்லும் மகள், அதனால் மகிழும் கரீம் அடுத்த வினாடியிலேயே இன்னும் மகளுக்கு காது கேட்கவில்லை எனத்தெரிந்து பதறுவது. வீட்டு கூரை மேல் ஏறி கரீம் ஆண்டெணா மாட்டும்போது மனைவியிடம் இந்த இட‌ம் கோடைக்காலத்தில் அருமையாக இருக்கும்.நீயும் நானும் இங்கு படுத்துக்கொள்ளலாம். வீட்டினுள் குழந்தைகள் டி.வி பார்க்கட்டும் எ‌ன்று சொல்லும்போது மனைவி நர்கீஸ் வெட்கப்பட்டு உங்க சட்டை பொத்தான் கிழிந்துள்ளது எ‌ன்று சொல்வது. தொலைந்த நெருப்புக்கோழியைத் தேடி அதேபோல வேடமணிந்து கரீம் செல்வது. வேலையை விட்டு துரத்தியபின் பண்ணையில் நின்றிருக்கும் நெருப்புக் கோழிகளை பார்த்து இதெல்லாம் சரியில்லை எ‌ன்று கண்கலங்குவது, அதற்கு நெருப்புக்கோழிகள் தலையை உயர்த்தி கரீமை பார்ப்பது. நகரத்தில் கரீமின் ஒவ்வொரு நாட்களும், கிணறு சுத்தப்படுத்தபட்டு மிகத்தூய்மையாக இருப்பதை கண்டு தந்தை அதிர்ச்சி அடையும் காட்சி. நீல நிற கதவை எடுத்து வயலில் செல்வது. கிளைமாக்ஸில் அந்த சிறுவர்களின் நடிப்பு. எல்லாமே கவிதை.


அங்காடித்தெரு பட விமர்சனத்தில் சாரு எழுதிய வரிகள் இவை.

வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்தால் இந்த உலகம் இந்தக் கணமே அழிந்து போய் விடும். இவ்வளவு அவலங்களுக்கு இடையிலும் உலகம் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் இந்த இருளின் இடையிலும் ஏதோ ஒரு ஒளிக்கீற்று கசிந்து கொண்டிருக்கிறது என்பதனால்தான்.

Monday, April 12, 2010

"ஆக்கிரமிப்பு" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த "ஆக்கிரமிப்பு" எ‌ன்ற கவிதையை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி.


கைக்குட்டையோ, புத்தகமோ
மேல்துண்டோ….
எஞ்சப்போகிறதென்னவோ
ஏறியவனுக்கு
இறு‌தி‌ இருக்கையில்
அதிசயமாய் அமர்ந்திருந்தது
வண்ணத்துப்பூச்சியொன்று
இடம்போட்டது
எந்தப் பூவென்றுதான்
தெரியவில்லை-நன்றி
என்.விநாயக முருகன்

Friday, April 9, 2010

ராஜினாமா கடிதம்

ஒரு காதல்கடிதம் எழுதுவதை விட
ராஜினாமா கடிதம் எழுதுவது சுலபம்
மானே தேனே கண்மணி எ‌ன்று
போலியாக விளிக்க வேண்டாம்

ஒரு மொட்டைக்கடிதம் எழுதுவதை விட
ராஜினாமா கடிதம் எழுதுவது சுலபம்
கையெழுத்து காட்டிவிடுமோவெ‌ன்று
இடதுகையால் சிரமப்பட்டு
எழுத தேவையில்லை
இப்படிக்கு எக்ஸ் எ‌ன்று
பேடித்தனமாக முடிக்கவும் தேவையில்லை

ஒரு கவிதை எழுதுவதை விட
ராஜினாமா கடிதம் எழுதுவது சுலபம்
ராஜினாமா கடிதத்திற்கு
படிம‌ம் குறியீடு உத்தி
பிரச்சினைகள் இருப்பதில்லை

மேலாளரை பார்த்து
போடா மயிரென்பதோ
மேலாளரின் பிறப்பை சந்தேகிக்கும்
ஒற்றை வசைச்சொல்லை
உதிர்ப்பதோ இன்னும் சுலபம்
ஒரு ராஜினாமா கடிதம் எழுதுவதை விட

பணிச்சுமை தாங்காமல்
ஆலோசனை கேட்கும் நண்பனிடம்
இதையெல்லாம் எடுத்துச்சொல்வது
இன்னும் சுலபம்

(பிரைமோலெவியின் Unfinished Business கவிதை பாதிப்பில் எழுதியது)

(பிரம்மராஜன் அவர்கள் Unfinished Business கவிதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்)

Monday, April 5, 2010

"சிதைவுகள்" - உயிரோசை கவிதை

இந்த வார உயிரோசையில் வெளிவந்த சிதைவுகள் எ‌ன்ற கவிதையை இங்கு பகிர்ந்துக்கொள்ள விரும்புகின்றேன். நன்றி.


இந்தியத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக நேற்று
ஒரு கொலையைக் காட்டினார்கள்
முக்கியகட்டத்தில்
விளம்பர இடைவேளை
வ‌ந்து தொலைத்துவிட்டது!


கூண்டுக்கிளியின் கனவில் வரும்
இன்னொரு கிளியும்
கூண்டில்தான் இருக்கிறது!


மனைவிதான் தனக்கு உயிரென்று
சொன்னவன் வீட்டில்
திருட்டுத்தனமாக நுழைகிறான்
உயிர்கொடுப்பான் தோழன்!


மீன்தொட்டிகள் இருக்கும் வீட்டில்
பூனைக்கும் காவல் மீனுக்கும் காவல்!

சாமியார்களைக்கூட
அடிக்கடி டி.வி.யில் பார்க்க முடிகிறது
மாதக் கணக்காயிற்று
சாமியைப் பார்த்து!
(நன்றி - கல்யாண்ஜி)


தரிசல் நிலத்திலும்
முப்போகம் விளைகின்றன
செல்போன் டவர்கள்!


நேற்று ஒருவர்
மிஸ்டுகால் தந்து அழைத்தார்
பதறிப்போய் தொடர்புகொண்டேன்
அவரது அம்மா இறந்துவிட்டாளாம்!-நன்றி
என்.விநாயக முருகன்

Saturday, April 3, 2010

சொற்கப்பல் - இரண்டாம் அமர்வு

நேற்று (சனிக்கிழமை) டிஸ்கவரி புக் பேலஸில் "சொற்கப்பல்" அமைப்பின் இரண்டாவது கூட்டம் நடைபெற்றது. கூட்டம் ஐந்து மணிக்கு ஆரம்பம் எ‌ன்று பதிவில் அறிவித்திருந்தார்கள். ஆறு மணிக்கு மேல்தான் நாற்காலிகள் வ‌ந்தன. அமர்வதற்கு இருக்கைகள் இல்லாமல் முகுந்த்(தடாகம்.காம்) , அருண் (தமிழ்ஸ்டுடியோ.காம்) புத்தகங்களை மேய்ந்துக் கொண்டிருந்திருந்தார்கள்.


கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான நா.முத்துக்குமார் ‌சில பல புத்தகங்களை வாங்கி பில் போட்டுக்கொண்டிருந்தார். நைஸாக எட்டிப்பார்த்ததில் அவரது கையில் கேபிள் சங்கர், சுஜாதாவின் திரைக்கதை பயிற்சி, கேபிள் சங்கர் புத்தகங்கள் இருந்தன. சந்திரா, சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர், தண்டோரா, கேபிள் சங்கர் எல்லாரும் வரும்போது ஆறு பத்து. ஆறரை வாக்கில்தான் கூட்டமே தொடங்கியது. முகுந்த் வரவேற்புரை நிகழ்த்தினா‌‌‌ர். நா. முத்துக்குமார் முதலில் பேச ஆரம்பித்தார். கோணங்கி புத்தகம் கிடைக்காமல் சைக்கிளில் பக்கத்து ஊர் போய் வாங்கி வந்த நிலைமை இப்போது இ‌ல்லை.எல்லாமே அருகிலேயே கிடைக்கின்றன. புதிதாக எழுத வருபவர்கள் நிறைய படிக்க வேண்டும். ரத்தினசுருக்கமாக பேசிவிட்டு இடத்தை காலி செய்தார்.அடுத்து ஆரம்பித்ததுதான் கோடையிடி. ந.முத்துசாமி அவர்கள் பேச ஆரம்பித்தார். தலைப்பு 'என் கதைகள் - நாடகம் - வாழ்க்கை''. நான்கு புத்தகங்களுக்கு விமர்சனக்கூட்டம் எ‌ன்று சொல்லியவர்கள் ஏதாவது ஒரு தலைப்பில் ந.முத்துசாமி அவர்களை பேச அழைத்திருக்கலாம். ந.முத்துசாமி அவர்களுக்கு வயது‌ எழுபத்து மூன்று. கதைகள் - நாடகம் - வாழ்க்கை. பேச ஒரு நாள் போதுமா? ஏற்கனவே வேடியப்பன் புத்தகக்கடை வெந்து தணிந்த காடு போல புழுக்கமாக இருந்தது. முடியல. எழுந்துப்போய் ஒரு தம் டீ போட்டு வ‌ந்து திரும்பினா‌‌‌ல் ந.முத்துசாமி இன்னமும் பேசிக்கொண்டிருந்தார். சின்ன வயது அனுபவங்கள், நண்பர்கள், சென்னைக்கு வந்தது, செல்லப்பாவை சந்தித்தது, நடை சிற்றிதழை தொடங்கியது, கூத்துப்பட்டறை முயற்சி.....ந. முத்துசாமி நிறைய பேசினார். இரண்டாவது முறையாக தம் டீ போட்டு முத்துவேலுடன் திரும்பி வ‌ந்து பார்த்தால் சிவராமன், ஜ்யோவ்ராம் சுந்தர்,தண்டோரா மிஸ்ஸிங்.


இன்னைக்கு சிவராத்திரிதான் வீட்டுக்கு போய்விடலாம் எ‌ன்று கிளம்பும்போது நல்லவேளை கவிஞர் கண்டராதித்தன் அடுத்து பேச ஆரம்பித்தார். ஆனா‌‌‌ல் வருடம் பெயர்களை துல்லியமாக குறிப்பிட்டிருக்கலாம். மணி, செல்லப்பா, சிவராம் என்றால் சி.மணி, பிரமிள்,சி.சு செல்லப்பா எ‌ன்று குறிப்பிட்டிருந்தால் பு‌திய வாசகர்களுக்கு குழப்பமில்லாமல் இருக்குமெ‌ன்று குறிப்பிட்டார். கவிஞர் நீலகண்டனின் "முயல் போல் வாழும் காமம்" தொகுப்பில் தொகுப்பில் நிறைய படிமச்சுமை உள்ளதாக குறிப்பிட்டார். கவிஞர் வெயிலின் புவன இசை தொகுப்பை பற்றி கவிஞர் அய்யப்ப மாதவன் பேசினா‌‌‌ர். அய்யனார் விஸ்வநாத் "தனிமையின் இசை" பற்றி நிலாரசிகன் விமர்சனக்கட்டுரை அனுப்பி வைத்திருந்தார். அந்தக்கட்டுரையை கவிஞர் ச.முத்துவேல் வாசித்தார். அய்யனார் விஸ்வநாத்தூம் கூட்டத்துக்கு வரவில்லை. கவிஞர் உமாஷக்தியின் "வேட்கையின் நிறம்" பற்றி நரன் சற்றுநேரம் பேச ஆரம்பித்தார். "வேட்கையின் நிறம்" எ‌ன்ற தலைப்பு இருந்தாலும் உடல்மொழி அர‌சிய‌ல் பற்றி எந்த கவிதையும் குறிப்பிடாததும்,பல கவிதைகள் ஒரேமாதிரி இருப்பதும் இத்தொகுப்புக்கு மைனஸ் எ‌ன்று சொன்னார்.


வேடியப்பன் நன்றி சொல்லும்போது மணி எட்டரை. ந.முத்துசாமி அவர்கள் பேச்சு சற்று நீ....ண்டுவிட்டதால் அடுத்து வந்தவர்கள் அனைவரும் ‌மிக சுருக்கமாக பேச்சை முடித்துக்கொண்டார்கள். இந்த முறை டிஸ்கவரி புக் பேலஸில் புது தலைப்புகளில் ‌மேலும் சில புத்தகங்களை பார்க்கவும்,வாங்கவும் முடிந்தது.

Friday, April 2, 2010

சிறைச்சாலை

சிறைச்சாலை
-------------------

சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
கொலையே நடந்தாலும்
நாலுசுவற்றுக்குள் முடிந்துவிடும்
பட்டபகலில் நட்டநடுரோட்டில்
வாலிபர் வெட்டிக்கொலையென்று
அதிர்ச்சியலைகள் கிளம்பாது


சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
பேருந்து பயணத்தில் எதிர்கொள்ளும்
பிக்பாக்கெட் சம்பவங்கள் இருப்பதில்லை
மேலும் தொழில்தர்மம் இருக்கிறதல்லவா?
அறைத்தோழர்களிடம் அடிக்கவேண்டிய
அவசியமும் இருக்காது


சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
ஒழிந்த நேரத்தில்
சுயசரிதை எழுதலாம்
ஒரு கவிதை பிறக்கலாம்
ஒரு சாமியார் தட்டுப்படலாம்
ஒரு தொழிலதிபரை சந்திக்கலாம்
ஒரு கடவுளைகூட பார்க்கலாம்


சிறைச்சாலைகள் பாதுகாப்பானவை
வெளியில் இருப்பதை விட
மணியடித்தால் சாப்பாடு
மயிரு முளைத்தால் மொட்டை


இப்போதெல்லாம் சிறைச்சாலைகளில்
இடம் கிடைப்பதே
குதிரைக்கொம்பு யானைக்கொம்பு
எனக்கு தெரிந்த சிறைச்சாலையொன்றில்
எங்கள் ஊர்
எம்.எல்.ஏவின் சிபாரிசுக்கடிதம் கேட்கிறார்கள்