Monday, August 31, 2009

"ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை" - உயிரோசை கவிதைகள்

உயிரோசை மின்னிதழில் வெளியான எனது "ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை" மற்றும் "பார்வைகள்" கவிதைகள் வாசிக்க...

ஒரு மழை இர‌வி‌‌ல் நடந்தவை
---------------------------------------------
யாரோ கேட்டார்கள்.
இன்று மழை வருமா?
வரலாம்.
வராது.
வரவேண்டாம்.
வரக்கூடும்.
வரவேண்டும்..

இவற்றில்
எந்த ஒன்றைச் சொல்வது?
நமக்கான சந்திப்பின்
இன்றைய
இட‌ம் பொருள் பற்றிய
தெளிவான தகவல் வராதவரை

2.
ஒரு மழை இரவின்
திடீரென இறங்கிய
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்பார்வைகள்
---------------------------
பெண் தோழிகளுடன்
பேசும்போதும்
வீசாமல் இருக்க முடிவதில்லை
ஒருக்கணமேனும்
மார்புகளை நோக்கி

பெண் கடவுள்களை
வழிபடுகையில் மட்டும்
கொஞ்சம் கூடுதல்
பயத்துடன்-நன்றி
என். விநாயக முருகன்

Sunday, August 30, 2009

"சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்" - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் வெளிவந்த எனது "சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்" கவிதை வாசிக்க...

சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சல்
------------------------------
சற்றுமுன் வ‌ந்த மின்னஞ்சலில்
சிறுமியொருத்திக்கு
இதயமாற்று அறுவை சிகிச்சை
பண உதவி தேவையென்று
வரிகள் துவங்கியிருந்தன.
சுவாரசியமற்று மேலே படித்தேன்.
சிறுமியின் பெயர் அகிலாவென்றும்
தந்தை பெயர் பாஸ்கரென்றும்
தொடர்ந்தது.
பால்யகால பள்ளிக்கூட நண்பன்
பாஸ்கரோவென ஒடினேன்
மருத்துவமனையில் நான் பார்த்த
புதிய நபரொருவர் தான்தான்
பாஸ்கரென்றும் மகள் கோகிலாவென்றும்
தவறாக அகிலா வ‌ந்துவிட்டதாகவும்
விளக்கினா‌‌‌ர்.
அகிலாவுக்கும் , கோகிலாவுக்கும்
இருந்த வித்தியாசத்தை
சுமந்தபடி திரும்பினேன்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, August 26, 2009

"தனிமை" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சத்தில் வெளியான ஒரு கவிதை.


தனிமை
---------
நூறாண்டுக்கு முந்தைய
பாழடைந்த வெறுமை
படர்ந்த கோயில்களுக்கு
தனியாக செ‌ன்று
திரும்பும்போதெல்லாம்
முதுகுக்கு பிறகு
சன்னமாக கேட்கிறது
விசும்பலொலி
அடு‌த்த முறையாவது
உன்னிப்பாகப் பார்க்க வேண்டும்

-நன்றி
என்.விநாயக முருகன்

Saturday, August 22, 2009

"நான்கு கவிதைகள்" - யூத்புல் விகடன்

யூத்புல் விகடன்-ல் வெளியான எனது நான்கு கவிதைகள் வாசிக்க...

உயிர்ப்பு
..........
கொஞ்சமும்
மனதை கவர்ந்திராத
தெருநாய்க் குட்டியொன்று
ரத்தச் சகதியில்
சாலையில் கிடந்தது இனி
எப்போதும் மனதின்
ஒரு மூலை
துள்ளிக்கொண்டோ
துடித்துக்கொண்டோ இருக்கும்

பயணங்கள்
..........

ரயில் பயணங்களின்
பசுமையான நினைவுகளை
பின்னோக்கி இழுத்துப்போட்டு
விரைகிறது
தட்கல் மறுக்கப்பட்டதில்
சபிக்கபட்ட ரயிலொன்று


கரையளவு வாழ்க்கை
......................

கடலில் இருந்து
பிடித்துவரப்பட்டு
கூடைகளில் அளந்து
கடல் மண்ணில் கொட்டும்
அந்த ‌சில கணப்பொழுதுகளில்
மட்டும் மணலிலும்
வாழப் பழகியிருந்தன

சந்திப்பிற்கு பிறகான
.........................

சந்திப்பிற்கு பிறகான
பிரிந்த தருணமொன்றில்
வீடு திரும்பிய நீ
குறுஞ்செய்தி அனுப்பினா‌‌‌ய்
நிறைய வலித்தது
பிறிதொரு நாளில்
உன் வீட்டை
தாண்டி வருகையில்
தண்டவாளமொன்றை
கவனித்தேன்
பழுப்பும் சிவப்புமுமாய்
தீற்றலாய் கறைகள்
முன்பு எப்போதையும் விட
அதிகமாக அழுதேன்

-நன்றி

என்.விநாயக முருகன்

Friday, August 21, 2009

"எனது கவிதைகள்" - திண்ணை.காம்

திண்ணை.காமில் வெளியான எனது ஐந்து கவிதைகள் வாசிக்க...துறவு
—————

இலையுதிர்கால
மரம் போல
முற்றும் துறந்த
ஞானியைப் போல
ஒரு குழந்தையின்
செய்கையைப் போல
கொஞ்சமும் வெட்கப்படாமல்
சட்டையை கழற்றி வைத்து
ஊர்ந்து செ‌ன்றிருந்தது
சர்ப்பமொன்று

————————————————————————————————————

ஒரு காலக்குழப்பம்
—————————————————
எதிர்காலத்தை நினைத்தபடி
காரோட்டும் ஓட்டுனர்
கடந்தக்கால நினைவுகளை
அசைப்போட்டபடி
‌பி‌ன்னிருக்கையில் நான்
ஒரு திருப்பத்தின் சுதாரிப்பில்
எந்தக்காலத்திலோ வந்தவன்
எங்களை நிகழ்காலத்துக்கு
இழுத்துப்போட்டு
கடந்த காலத்துக்குப் போனவனாய்
சக்கரத்துக்கடியில் கிடந்தான்

————————————————————————————————————

சாலைகள்
—————————

மனிதர்கள் புழங்காத
சாலைகள் எல்லாம்
நாக்கு தள்ளி
நீண்டுக் கிடக்கின்றன
தற்கொலை செய்தபடி
தற்கொலை செய்துக்கொள்ள
முடிவெடுத்து நடப்பவன்
மனசு மாற்றியும்
திருப்பி அனுப்புகிறது
‌சில நேரங்களில்

————————————————————————————————————

ஊதியம்

—————————————

புலி வளையம் தாண்டுகிறது
கிளி சீட்டு எடுக்கிறது
குரங்கு கர்ணம் போடுகிறது
கரடி தாயத்து விற்கிறது
யானை காசு கேட்கிறது
மனிதன் பிடுங்கிக் கொள்கிறான்

————————————————————————————————————

புரியாமை
—————————

இத்தனை எளிமையாக
இருக்கிறதே கவிதையென்று
விமர்சித்தார்கள்
புரியாமை கொண்ட வாழ்க்கையில்
தோற்றுப்போன வரிகளை எழுத
ஜோடனைகள் ஒரு கேடா?


-நன்றி

என்.விநாயக முருகன்

Thursday, August 20, 2009

ஐந்து கவிதைகள்

ஐந்து கவிதைகள்

1.
சின்னமனிதன்
——————
உணவு விடுதியில்
கைகழுவுமிடத்தில்
பெ‌‌ரிய வாஷ்பேசினொன்றும்
சின்ன வாஷ்பேசினொன்றும்
அருகில் அப்பாவின்
கைப்பிடித்து நடக்கும் சிறு
குழந்தையொன்று தனக்கும்
பெ‌‌ரிய வாஷ்பேசின்
வேண்டுமென்று அழ
வேறுவழியில்லாமல் நான்
நான்கடி குனிந்து கைகழுவ
என்னை சின்னமனிதனாக
எண்ணி சிரித்தாள் அவள்
அப்பா தோளிலிருந்து

2.
ரயில் ‌விளையா‌ட்டு
———————

வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து ‌விளையா‌ட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்.

3.
சப்தஸ்வரங்கள்
—————-
நடக்கும்போது
க்கீ க்கீயென்று
கத்தும் காலணிகளை
அந்த குழந்தை
ஆச்சர்யத்துடன்
பார்த்தது. வாங்கி
அணிவித்தவுடன்
இடதுகாலை ஓங்கி
தரையில் மிதித்தது
ஒரு க்கீ
வலதுகாலை மிதிக்க
அடு‌த்த க்கீ
குழந்தை கொஞ்சம்
குழம்பியபடி
இரண்டுகால்களையும்
ஊன்றி நின்றது அசையாமல்
கொஞ்சநேரம் மவுனம்
பிறகு ஏதோ புரிந்தது
இரண்டு கால்களையும்
க்கீ க்கீ யென்று
இசைத்தபடியே நடக்க
புதுப்புது ஸ்வரங்களாய்
தெறித்து கிளம்பின

4.

குடைக்காம்பு
————–
அப்பாவின்
மரணத்துக்குப்பின்
புதுவீடு மாறிவந்ததில்
இடப்பிரச்சினை நிறையவே

தேவையற்ற
தட்டுமூட்டு சாமான்கள்
கந்தல் துணிகள்
பழைய வாரப்பத்திரிக்கைகள்
யார்யாரோ அனுப்பிய
‌திருமண அழைப்பிதழ்கள்
துருவேறிய டிரங்க் பெட்டியொன்று
கூடவே
முன்பொருநாள்
அம்மாவை அடிக்க
அப்பா பயன்படுத்திய
குடைக்காம்பு

எல்லாம் எடைப்போட்டு
சில்லறை வாங்கியதில்
குடைக்காம்பு மட்டும்
செல்லாதென்று
பழைய பேப்பர்க்காரன்
திருப்பி தந்தான்

அம்மாவும் ஏனோ
தடுக்கவில்லை
அன்றைக்கும்

5.

அலைகள்
————————-
அது ஒரு
அபூர்வமான தருணம்
அன்றொரு நாள்
எதேச்சையாக
தொலைக்காட்சியின்
அலைவரிசை மாற்றியபோது
ஆறாம் நம்பர் சேனலில் ஓடிய
அதே பாடல் காட்சியை
ஐந்தாம் நம்பர் சேனலிலும்
பார்க்க நேரிட்டது.
ஒரு ஆர்வத்தில் படபடப்பாக
மீண்டும் ஆறாம் நம்பர் சேனல்
தாவினேன். அதே பாடல்
நம்ப முடியவில்லை. மீண்டும்
ஐந்தாம் நம்பர்.அதே பாடல்.
வேறு வழியில்லாமல்
ஐந்தை ஆறாக நினைத்துக்கொண்டு
அமைதியாக பார்க்க ஆரம்பித்தேன்.
வேறு யாரேனும் எங்காவது
ஆறை ஐந்தாக பார்க்கக்கூடுமோ?
அந்த நினைப்பு தோன்ற
மீண்டும் மனது
ஐந்துக்கும் ஆறுக்கும் அலைபாய்ந்தது.

Monday, August 17, 2009

"விடுபடல்" - கீற்று.காம் கவிதை

கீற்று.காமில் வெளியான எனது விடுபடல் என்ற கவிதை வாசிக்க...

விடுபடல்
நெற்காட்டில்
அடாவடி செய்யும்
எல்லா எலிகளையும்
கொன்றுவிட்டாலும்
கொஞ்சம் எலிகளை
மிச்சம் வைத்தோம் உயிரோடு
பஞ்ச காலத்தில் சாப்பிடவென

-நன்றி
என்.விநாயக முருகன்

Saturday, August 15, 2009

ஆக்கிரமிப்பு

ஆக்கிரமிப்பு
--------------------
தெருக்கோடி மரத்தில்
விடாமல் பால் வடிந்த
மறுதினம் முதல்
மாரியம்மன் வந்தமர்ந்திருந்தாள்
மஞ்சள் தடவி குங்குமம் பூசி
பச்சைப்பட்டுக் கட்டி மரத்தை
அலங்கரிக்கத்தொடங்கினா‌‌‌ர்கள்
நேர்ந்திக்கட்டிய மஞ்சள் கயிறுகளுடன்
சூலம் நட்ட இடம் சுற்றி
சிமெண்ட் தளம் பூசினா‌‌‌ர்கள்
சுற்றி வர இரண்டு அடி இட‌ம் விட்டு
இடுப்பளவு உண்டியலும்
ஆடிமாசம் கூழ் ஊற்றும் செலவை
அடுத்தத்தெரு அண்ணாச்சியுமாய்
களைகட்டியது

இதெல்லாம் பழைய கதை

கொஞ்சம் கொஞ்சமாக
பால்வரத்து அறவே நின்றுபோக
பாழாப்போன மின்சாரக்கம்பம் உரச
உண்டியலும் வெறிச்சோடிய நேரத்தில்
அடுத்ததெருவில் ஐந்துகிரவுண்டில்
அமர்க்களமாய் குடியேறினார்
வெங்கடசுப்ரமணியர்
டைல்ஸ் உபயம் : அண்ணாச்சி

நவக்கிரகம் சுற்றிவரும் இடத்தில்
சந்தோஷி மாதா எதிரே ஆஞ்சநேயர்
சுப்ரமணியர் ‌வலப்பக்கம் நடராஜர்
சன்னதி முன்னால் குருபகவான்
இடப்பக்கம் துர்க்கை கூட மின்சார கோயில்மணி
மணி உபயம் : பிரபா மெடிக்கல்

வெங்கடசுப்ரமணியருக்கு சாபம்
கொடுத்தபடி தலைவிரிகோலமாக
அழுதுபுரள்கிறாள் கோடித்தெரு மாரி

மூன்று முறை
நோட்டீஸ் கொடுத்தும்
காலிசெய்யாமல் போனதால்
முனிசிபாலிட்டி வண்டியொன்று
முட்டுச்சந்தில் திரும்பிநிற்கிறது

Friday, August 14, 2009

எனது மூன்று கவிதைகள் - திண்ணை.காம்

திண்ணை.காம் ல் வெளியான எனது மூன்று கவிதைகள் வாசிக்க...

ஒரு விசாரிப்பு
--------------------

நீண்ட நாட்கள் கழித்து
நண்பனொருவன்
தொலைபேசினான்‌‌‌
எப்படி இருக்கிறாய்?
எப்படி போகிறது? கேட்டான்.
அப்படியேத்தான் இருக்கின்றேன்
அப்படியேத்தான் போகிறதென்றேன்
சுவாராசியமற்றவனா‌‌‌ய்
துண்டித்தான் தொடர்பை
அப்படியே இருந்து
அப்படியே போவதிலென்ன
அப்படியொரு ஏமாற்றம்?


சரிபார்த்தல்
------------------
நீ‌ங்க‌ள் டயல் செ‌ய்த
எண்ணை சரிபார்க்கவும்
என்று சொன்னதில் குழம்பி
மீண்டும் தொடர்பு கொண்டேன்
இந்த முறையும்
அதையே சொன்னாள்
நான் சரிபார்த்த
தகவலை எப்படி
புரியவைப்பது
இவளுக்கு?


பெருநகர கோடாங்கி
-----------------------
பெருநகரில் அபூர்வமாக
பார்த்த ஒரேயொரு
குடுகுடுப்பைக்காரனுக்கும்
கிராமத்துக்கோடாங்கிக்கும்
மாறியிருக்கவில்லை
எதுவும் பெரிதாக
கையேந்துவது உட்பட
ஒரு வித்தியாசமாய்
பெசண்ட் நகரின்
மின்சார சுடுகாட்டில்
இரவெல்லாம்
இருந்துவிட்டு வந்ததை
தவிர

Thursday, August 13, 2009

விடுமுறை தினமொன்றில்

விடுமுறை தினமொன்றில்
—————————————————————————————
விடுமுறை தினமொன்றில்
சற்று தாமதமாக
கண்விழித்து
காபி குடித்து
செய்தித்தாளை மெல்ல மேய்ந்து
ஓய்வாக நகம் வெட்டியபடியே
அன்றைய சிறப்பு நிகழ்ச்சிகளை
தொலைக்காட்சியில்
பார்க்க ஆரம்பித்தோம்
நடிகையொருத்தியின் பேட்டி
நடிகரொருவரின் பாட்டு
அடுத்து வெளிவரவிருக்கும்
அமர்க்களமான புதுப்பட
முன்னோட்டம் பிறகு
பட்டிமன்றம் கொறிக்க
கொஞ்சம் சிப்ஸ்
இன்னொரு குவளை
தேனீர் இடையில்
மதியம் வைக்கவேண்டிய
மட்டன் குழம்பு பற்றி
‌சில விவாதம்
பள்ளி முடித்து வரும்
மகன் சேனல் மாற்றி
கொஞ்சம் பாட்டு
உண்ட களைப்பில் சிறிது
உறக்கம் மாலை
எழுந்து தேனீர் கூட சமோசா
இந்தியத் தொலைக்காட்சியில்
முதல்முறையாக பார்த்தல்
இரவு தோசையா? இடியாப்பமா?
நீண்ட சர்ச்சை வாக்கெடுப்பு

முடிவில் இட்லிக்கு சம்மதித்து
புதினா சட்னிக்கு தலையாட்டி
கொஞ்சம் இணையத்தில் மேய்ந்து
மின்னஞ்சல்கள் அனுப்பி
பிளாக்கில் திட்டியோ
கவிதை எழுதியோ முடிக்கையில்
கதவு தட்டும் மகன்

இன்னைக்கு காத்தால
எதுக்குமா ஸ்கூல்ல
முட்டாய் கொடுத்தாங்க?

ஏதேதோ சொல்லியபடி
உறங்கியும் போவோம்

Tuesday, August 11, 2009

"இரண்டு கவிதைகள்" - நவீன விருட்சம்

சமீபத்தில் நவீன விருட்சத்துக்கு அனுப்பிய எனது "இரவெல்லாம்" மற்றும் "சட்டையொன்று" கவிதைகளை இங்கு பகிர்கிறேன்

இரவெல்லாம்
----------------------
இரவெல்லாம் கத்தியபடி
வழியெங்கும்
வயிறு வெடித்து
கிடந்த தவளைகள்
நினைவூட்டுகின்றன
முன்தின மாலையின்
நமக்கான பிரிவொன்றை


சட்டையொன்று
----------------------
என்னை
தன்னுள்ளே உடுத்தியபடி
சட்டையொன்று கிளம்பியது.
எதிர்வந்தவர்கள்
நலம் விசாரிக்க
என்னை இறுதிவரை
பேசவிடாமல்
தன்னைப் பற்றியே
பெருமையடித்து தீர்த்தது.
புறக்கணிப்பின் உச்சத்தில்
ஒரு நாள்
சட்டைக்குள்ளிருந்த
நானொன்று
அம்மணமாக வெளியேறியது
யாரிடமும் சொல்லாமல்

- நன்றி
என். விநாயக முருகன்

Sunday, August 9, 2009

நீலப்படம்

நீலப்படம்
--------------------------------

நண்பர்கள் அறையில்
நீலப்படம் பார்க்கையில்
அரைமணி நேரம் கழித்து
அலுத்தபடியே புகைப்பிடிக்க
வெளியேறுகிறான் ஒருவன்
எல்லாம் ஓரே மாதிரித்தான்
இருக்கிறது சலித்தபடி சொல்கிறான்

எல்லாரும் ஒரேமாதிரித்தான்
இருக்கானுங்கவென்று
சுவாரசியமற்று
வெறுப்பின் உச்சத்தில்
நடித்துக்கொண்டிருக்கிறாள்
புறநகரின் பங்களாவொன்றில்
நடிகையொருத்தி


-நன்றி
என். விநாயக முருகன்

முன்னொரு காலத்து கவிதை

பத்து வருடங்கள் முன்பு நான் எழுதிய முத‌ல் கவிதை. இதை தவிர மற்ற எந்த கவிதையை இப்போது எடுத்து படித்தாலும் சிரிப்பாக வரு‌கிறது. மொக்கையாக இருக்கிறது.இந்த ஒரு கவிதை மட்டும் ஏனோ மனதுக்கு (எனக்கு) நிறைவாக இருக்கிறது


எங்களிடமும் இருக்கிறது
———————————————————————
இறைந்துக் கிடக்கும்
துணிகளை அடுக்க
அக்காவுக்கு சோம்பல்.

பிரித்துப் படித்ததை
மடித்து வைக்க
அப்பாவுக்கு தயக்கம்.

அண்ணாவுக்கு தெரியாது
அயர்ன் செய்து உடுத்தும்
கலை.

தங்கையவள் பழகவில்லை
தனித்து சென்று
சிறுநீர் கழிக்கும்
வித்தை.

யாருக்கும் கைவரவில்லை.
அவரவர் வேலைகளை
அவரவர் செய்ய.

என்ன செய்ய
எங்களிடமும் இருக்கிறது
ஒரு அம்மா.
-நன்றி
என்.விநாயக முருகன்

Saturday, August 8, 2009

"கோவில் மிருகம்" மற்றும் "இரண்டு கவிதைகள்" - நவீன விருட்சம்

சமீபத்தில் நவீன விருட்சத்துக்கு அனுப்பிய எனது "கோவில் மிருகம்" மற்றும் "இரண்டு கவிதை" களை இங்கு பகிர்கிறேன்

கோவில் மிருகம்
-------------------
என்னதான் அடித்தாலும்
அ‌ங்குசத்தால் காதில்
குத்தினாலும்
வாலை முறுக்கி
வலியேற்றினாலும்
வற்புறுத்தி பிச்சையெடுக்க
வைத்தாலும்
கா‌ட்டு‌ப்பாகனொருவன்
நம்பி உறங்குவது
கோவில் மிருகத்தின்
காலடி நிழலில்

ஒழுங்கு
--------
வரிசையாக ஆடுகின்றன
பிரசவ ஆஸ்பத்திரி
தொட்டில்கள்
வரிசை வரிசையாக
பார்த்து சிரிக்கிறார்கள்
பார்வையாளர்கள்
வரிசை தவறாமல் பெற்று
வரிசையில் சேர்த்து
உச்சி முகர்கிறார்கள்
தகப்பன்கள்
வரிசையாக நின்றும்
வரிசையில் தின்றும்
வரிசையில் படுத்தும்
வரிசையாகவே செத்தும் போகிறார்கள்

ஒரு மழை இரவின்
-------------------------
ஒரு மழை இரவின்
திடீரென இறங்கிய
இடிச்சத்தத்தில்
அர்ச்சுனாவென்று அலறி
கட்டிப்பிடித்தாய் என்னை
கீதாஉபதேசம் பெற்றேன்

-நன்றி
என். விநாயக முருகன்

Friday, August 7, 2009

"நான்கு கவிதைகள்" - திண்ணை.காம்

திண்ணை.காம் ல் வெளியான எனது "நான்கு கவிதைகள்" வாசிக்க...

நான்கு கவிதைகள்


கைப்பைகள்
———————
நெரிசலான பேருந்துகளின்
ஜன்னலோர இருக்கைகளிலும்
வந்தமர்கின்றன
கைப்பைகள் மீதான
கவனம்
பைகளற்ற பயணத்தில்
எப்போதும் தொந்தரவு
செய்கின்றன
அடுத்தவர் சுமக்கத்தரும்
பைகள்
நெரிசலற்ற பேருந்தில்
ரசிக்கவிடாமல் தடுக்கும்
காலிப்பைகளின் கனம்

தேநீர்க்கோப்பைகள்
——————————
கழுவப்பட்டு
சீராக அடுக்கப்பட்டிருக்கும்
காலி தேநீர்க்கோப்பைகளில்
மிச்சமிருக்கின்றன
சிலத்துளி ரகஸ்யங்கள்
சிலத்துளி துரோகங்கள்
சிலத்துளி பிரியங்கள்
சிலத்துளி சோகங்கள்
சிலத்துளி
சந்திப்புக்கான அடையாளங்கள்
இவையென்று எப்போதும்
கழுவப்படாமலேயே


விதி
———
ஆறுச்சக்கர
டேங்கர் லாரியொன்று
வடக்கு நோக்கிச் செல்கிறது.
இருச்சக்கர வாகனக்காரன்
தெற்கு நோக்கிச் விரைகிறான்.
இவர்களை
மோதவிட்டால் என்னை
மோசமான கவிஞன்
என்பார்கள்.
அப்படியே விட்டால்
சாதாரணக் கவிதையென்று
விமர்சிப்பார்கள்.
அவரவர் விதிகளையும்
அவரவர் கவிதைகளையும்
அவரவர்களே எழுதுகிறார்கள்
எ‌ன்று முடிக்கவும்
இஷ்டமில்லை
என்ன செய்வதென்று
தெரியவில்லை
கைகளை பிசைகிறேன்

காலிக் கூண்டு
——————————
எப்போதும்
காலிக் கூண்டில்
அடைப்பட்டுக் கிடக்கும்
பறந்துப்போன
கூண்டுக்கிளியைப் பற்றிய
நினைவுகள்

-நன்றி
என். விநாயக முருகன்

Tuesday, August 4, 2009

மயிர்நீப்பின்

மயிர்நீப்பின்
————————————
மயிர்நீப்பின் வாழாவென்று
எழுதி முடித்து
உயிர் விட்டது
கொஞ்சம் கொஞ்சமாக
சாக்பீஸ் துண்டொன்று
மிச்சம் சொச்சமிருந்த
மயிரும்
ஆசிரியரின் கைஉதறலில்
பறந்து மறைந்தது….