Wednesday, June 30, 2010

முரண்கள்

கைக்குழந்தைகளோடு பிச்சையெடுக்கிறார்கள்
தங்க நாற்கர சாலைகளில்


வீடு வீடாய் யாசிக்கிறார்கள்
ஓட்டு போட சொல்லி
தொலைக்காட்சியில் பாடும் குழந்தைகள்


தற்கொலை செய்துக்கொள்ள போவதாக
நண்பனிடமிருந்து குறுஞ்செய்தி வந்தது.
பதில் அனுப்பலாமென்றால்
பேலன்ஸ் இல்லையாம்


செத்தாலும்
செம்மொழியில் முனகிவிட்டு
செத்துத் தொலை


குமரிக்கு அந்தப்பக்கம்தான் கொல்கிறார்கள்
திரும்பி நின்றுக்கொண்டார்
திருவள்ளுவர்


இரண்டு லட்சம் பேர்
குருதியில் நனைந்தமொழி
எங்கள் மொழி - செம்மொழி


கோயிலுக்கு சென்றேன்
சாமியை காணவில்லை
அவர் சாமியாராக கிளம்பி விட்டாராம்


செத்துவிடலாமென
பூச்சிமருந்தை குடித்தேன்
போலி மருந்தாம்
பிற்பாடுதான் தெரிந்தது

Monday, June 21, 2010

புவியரசனின் கோவை விசயம்

சேரன் Express-ஐ
Sharp-ஆக பிடித்து
CellPhone-ல் நண்பனை அழைத்து
RailWayStation-ல் Pickup செய்த
நண்பனை நலம் விசாரித்து
Call Taxi -ல் ஏறி
Traffic Jam -ல் நொந்து
ஒருவழியாக மாநாட்டுத்திடலுக்கு
சென்ற புவியரசன் Laptop-ஐ
திறக்க பாடல் ஒலித்தது இப்படி
செம்மொழியான தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்

பின்குறிப்பு
(ஜ தமிழ் எழுத்து இல்லை. எ‌னவே கோவை விஜயத்தில் வரும் ஜ வுக்கு ச வந்துள்ளது.)

எனக்கு பிடித்த கவிதை - காலவழுவமைதி

“தலைவரார்களேங்…
தமிழ்ப்பெருமாக்களேங்… வணக்கொம்.

தொண்ணூறாம் வாட்டத்தில் பாசும் வாய்ப்பய்த்
தாந்தமைக்கு மகிழ்கின்றேன். இன்றய்த் தீனம்
கண்ணீரில் பசித்தொய்ரில் மாக்களெல்லாம்
காலங்கும் காட்சியினெய்க் காண்கின்றோங் நாம்”

‘வண்ணாரப் பேட்டகிள சார்பில் மாலெ’

“வளமான தாமிழர்கள் வாட லாமா?
கண்ணாளா போருக்குப் போய்வா யேன்ற
பொற நான்ற்றுத் தாயெய் நாம் மறந்திட்டோமா?
தாமிழர்கள் சொகவாழ்வாய்த் திட்டாமிட்டுக்
கெடுப்பவர்கள் பிணாக்குவ்யல் காண்போ மின்றே
நாமெல்லாம் வரிப்பொலிகள் பகைவர் பூனெய்
நாரிமதி படைத்தோரை ஒழிப்போம் வாரீர்
தலைவரார்களேங்
பொதுமாக்களேங் நானின்னும்
யிருகூட்டம் பேசயிருப்பதால்
வொடய் பெறுகறேன் வணக்கொம்”

‘இன்னுமிருவர்பேச இருக்கிறார்கள்
அமைதி… அமைதி…


ஞானக்கூத்தன் பற்றி நான் சொல்லி நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டியதில்லை. ஞானக்கூத்தனின் பல கவிதைகள் எனக்கு பிடிக்கும். எங்க ஊர் (கும்பகோணம்) பக்கம் ஊமை குசும்புனு ஒரு வார்த்தை உண்டு.

செம்மொழி மாநாடு பற்றி கோவை பொதுமக்களிடம் பேட்டி எடுத்து நேற்று தொலைக்காட்சி செய்திகளில் காட்டினா‌‌‌ர்கள். அதில் ஒரு பெண்மணி செமொளி தமிளுக்கு தலீவர் செஞ்சிருக்க விசயத்தை பாராட்டாம இருக்கமுடியாது. கோயம்புத்தூர் சிட்டியே பிரைட்டா இருக்கு என்றார்.

Monday, June 14, 2010

செம்மொழியான தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்

இறப்பொக்கும் எல்லா உயிரும்
இறந்த பின்னர்


ஏது ஊரே.ஏ...ஏ...ஏ
யாவரும் சவங்கள்


உண்பது வரிசை
உடுப்பது கிழிசல்
உறைவிடமெங்கே முள்வேலி


செத்துப் பிழைத்தோ...தோ...தோம்
பிழைத்தும் சாவோம்...வோ...வோ...வோம்


தீதும் சூதும்
பிறர் தர வாழு எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்

அ..அ..ஆ...ஆ..ஆ...


சிறு குழந்தை முதல்
பேரிளம் பெண்களும் வரையிலே
உடம்பினை புணர்ந்து
கூறுபோடும்


விகாரைகள், மகா வம்சங்கள்
முள்வேலிக்குள் நீளும் கைகள்
ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும்,
பசிக்கின்ற வயிறுகளும்,
மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம்


அ..அ..ஆ...ஆ..ஆ...
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழி. செம்மொழி
தமிழ்மொழி தமிழ்மொழி அ..அ..ஆ...ஆ..ஆ...

குட்டிமணி முதல்
முத்துக்குமார் வரை
செத்துப் போனவர்
எத்தனையோ எத்தனையோ
ஓ...ஓ...ஓ...ஓ
ஓ...ஓ...ஓ...ஓ


இரண்டு லட்சம் பேர்
குருதியில் சிவந்த மொழி
எங்கள் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான
தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
அ..அ..ஆ...ஆ..ஆ...

Friday, June 11, 2010

ஒரு பயணம் - இரண்டு நண்பர்கள்

(எர்னஸ்டோ சே குவேரா பிறந்த நாளையொட்டி எழுதப்பட்ட கட்டுரை)

வருடம் 1952. இடம் அர்ஜெண்டீனா. இரண்டு நண்பர்கள். ஒருவன் ஆல்பர்ட்டோ கிரெனாடோ. வயது 29 . பயோ கெமிஸ்ட். இன்னொருவன் ப்யூசர். மருத்துவம் படிக்கிறான்.வயது 23. ப்யூசரின் உண்மையான பெயர் எர்னஸ்டோ குவேரா. எர்னஸ்டோவும், கிரெனாடோவும் பரபரப்பாக இருக்கின்றார்கள். கிரெனாடோ உற்சாகமாய் உடைகளை மடித்து பெட்டியில் அடுக்குகிறான். எர்னஸ்டோ உடைகளோடு தான் உட்கொள்ளும் ஆஸ்துமா மருந்து பாட்டில்களை எடுத்து வைக்கிறான். அவர்கள் ஒரு நீண்ட பயணத்துக்கு தயாராகின்றார்கள். எட்டாயிரம் கிலோமீட்டர் பயணம். நான்கு மாதங்களில் பயணத்தை முடிக்க வேண்டுமென்பது திட்டம். பயணத்திற்கு கூட வரும் துணை அரத பழசான 39 நார்டான் 500 என்னும் ஓட்டை மோட்டார் சைக்கிள். 1939 ஆம் வருட மாடல் மோட்டார் சைக்கிள். ஆல்பர்டோவின் பிறந்த நாளான ஏப்ரல் இரண்டுக்குள் அவர்கள் திரும்பி வரவேண்டும். ஒரு விநாடி கூட தாமதிக்க அவர்கள் விரும்பவில்லை. இதுநாள் வரை அவர்கள் புத்தகங்களில் மட்டுமே படித்து கற்பனை செய்து வந்த லத்தீன் அமெரிக்க நாட்டை இப்பொழுது சுற்றி பார்க்க கிளம்புகிறார்கள்.புறப்படும் வழியில் எர்னஸ்டோ அவனது வீட்டிற்கு செல்கிறான். எர்னஸ்டோவின் அம்மா மற்றும் தங்கைகள் கண்ணீருடன் வழியனுப்புகிறார்கள்.

கிரெனாடோ பைக் ஓட்ட எர்னஸ்டோ பின்னால் அமர மூட்டை முடிச்சுகளுடன் அந்த ஓட்டை பைக் தடதடக்க நண்பர்கள் இருவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். நெடுஞ்சாலை, மலைகள்,வயல்களை ரசித்தபடி பயணம் செல்கிறது. திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் விழுகிறது. எர்னஸ்டோ வைத்திருந்த ஒரு பை கீழே விழுந்து உருள பதறிப்போய் அதை எடுக்கிறான். பையில் இருப்பது அவனது செல்ல நாய்க்குட்டி கம்பா. பயணத்தின் நடுவில் தனது காதலி சிச்சினாவை சந்தித்தால் அவளிடம் தருவதற்காக கம்பாவை எடுத்து வந்திருந்தான் எர்னஸ்டோ. கம்பா பத்திரமாக இருப்பதை பார்த்து எர்னஸ்டோவுக்கு உயிர் வருகிறது. மகிழ்ச்சியில் அவனுக்கு கீழே விழுந்த அடி கூட பெரிதாக வலிக்கவில்லை.பயணம் தொடர்கிறது. ஜனவரி 13 1952 சரியாக 601 கிலோமீட்டர் பயணம். இருவரும் மிராமரில் இருக்கும் சச்சினா வீட்டை அடைகிறார்கள்.

சிச்சினா வீட்டில் அனைவரும் அன்பாக உபசரிக்கிறார்கள். பயண களைப்பு. நண்பர்கள் இருவரும் விருந்தை ஒரு பிடி பிடிக்கிறார்கள். சிச்சினாவிடம் கம்பாவை தந்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்கிறார்கள். அர்ஜெண்டைனா மொழியில் கம்பா என்றால் திரும்பி வருதலென்ற அர்த்தம். கண்ணீருடன் காதலி முத்தம் தருகிறாள். கூட பதினைந்து அமெரிக்கா டாலர்கள். வட அமெரிக்க சென்றால் தனக்கு ஒரு ஆடை வாங்கி தரச்சொல்லி சிச்சினா தந்த டாலர்கள். ஏற்கனவே எர்னஸ்டோ கவிஞன். இப்போது காதலியின் முத்தம். வழியில் எர்னஸ்டோ தனது டைரியில் இப்படி எழுதுகிறான். எனது இதயம் கடிகார பெண்டுலம் போல அவளுக்கும் வீதிகளுக்கும் இடையில் ஊஞ்சலாடுகிறது. பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையை அசைபோட்டபடி எர்னஸ்டோ வண்டி ஓட்டுகிறான்.

வழியில் பலமுறை மோட்டார் சைக்கிள் பழுதடைகிறது. உணவுக்கு கூட கையில் காசு இல்லாத நிலையிலும் சிச்சினா தந்த பணத்தை துளியும் செலவழிக்காமல் எர்னஸ்டோ பாதுகாக்கிறான். கிரெனாடோ அவனை கிண்டல் செய்கிறான். எர்னஸ்டோவுக்கு ஆஸ்த்துமா தொந்தரவு அதிகரிக்கிறது. பிப்ரவரி-15. 2306 கிலோமீட்டர் தூரம் பயணம். சீலேவை அடைகிறார்கள். சீலேவில் இவர்களுக்கு ஒரு மெக்கானிக் வண்டியை இலவசமாக ரிப்பேர் செய்து விருந்து தருகிறார். இரவு விருந்தில் அந்த மெக்கானிக் (சேகுவேரா பற்றிய நாவலில் வரும் இந்த பகுதியை ரசித்து படித்தேன்) மனைவியுடன் எர்னஸ்டோ நடனமாடுகிறான். எர்னஸ்டோ பெண்பித்தன் அல்ல. என்றாலும் வலிய வரும் தேவதையை பார்த்து ஒதுங்கி போகும் முனிவரும் அல்ல. அவளுடன் மறைவாக வெளியில் செல்லும்போது மெக்கானிக் பார்த்துவிட அந்த பெண் எர்னஸ்டோ மேல் பழியைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்ய, ஊரே அவர்களை துரத்துகிறது. நண்பர்கள் இருவரும் பைக்குடன் ஓடுகிறார்கள்.
3573 கிலோமீட்டர் பயணம் முடிவடையும்போது மார்ச்-7-1952. அடகாமா பாலைவனத்தில் கிரெனாடோவும், எர்னஸ்டோவும் ஒரு தம்பதியினரை சந்திக்கிறார்கள். பனி இரவில் பாலைவனத்தில் தீ மூட்டி வட்டமாக அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கையில், அந்த தம்பதியினர் கம்யூனிஸ்ட்டுகள் என்று தெரிய வருகிறது. அவர்களது நிலத்தை உள்ளூர் முதலாளிகள் பிடுங்கிக்கொள்ள பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்துக் கொண்டிருப்பதும் தெரிய வருகிறது. எர்னஸ்டோ அவனது கம்பளி போர்வையை அந்த பெண்ணுக்கு தந்துவிட்டு விடைபெறுகிறான். மறுநாள் ஒரு கும்பல் கூலி வேலைக்கு ஆடு மாடுகள் போல லாரியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் இடத்தில் அந்த தம்பதியினரை மீண்டும் எர்னஸ்டோ சந்திக்கிறான். அந்த பெண்ணை மட்டும் விட்டுவிட்டு அவள் கணவனை லாரியில் ஏற்றுகிறார்கள். அந்த வேலையாட்கள் கொத்தடிமை போல நடத்தப்படுவதை பார்த்து எர்னஸ்டோ கொதிக்கிறான். அவர்களுக்கு குடிக்க தண்ணீராவது தரும்படி ஆத்திரத்துடன் கத்துகிறான். கூலியாட்களை அழைத்துச் செல்பவனுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. எர்னஸ்டோ ஓடும் லாரி மீது கற்களை விட்டெறிகிறான். எர்னஸ்டோவை கிரெனாடோ சமாதானப்படுத்துகிறான். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக் கிடையிலும் பாதுகாப்பாக வைத்திருந்த காதலியின் பணத்தை அந்த தம்பதியினருக்கு தந்து விடுகிறான். இ‌து பிறிதொரு காட்சியில் எர்னஸ்டோ சொல்லும் வசனம் மூலமாக தெரிய வரும். பெருவின் கிராமங்களில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறார்கள். விவசாயிகள் படும் சிரமங்கள், அவர்களை சுரண்டி பிழைக்கும் கும்பல்,வர்க்க வேறுபாடுகள் எர்னஸ்டோவுக்குள் தீயை மூட்டுகிறது. அவன் இப்போதெல்லாம் அடிக்கடி டைரி எழுதுகிறான். நீண்ட பின்னிரவுகளின் தனிமையில் எதையோ ஆழ்ந்து யோசிக்கிறான்.எர்னெஸ்டோவைப் பற்றி குறிப்பிட வேண்டிய ஒன்று முகத்துக்கு நேராக பேசிவிடுவது. பயணத்தின் போது ஒரு டாக்டர் உதவி செய்கிறார். டாக்டர் தான் எழுதிவைத்திருக்கும் நாவலை நண்பர்கள் இருவருக்கும் படிக்கக்கொடுத்து அபிப்ராயம் கேட்கிறார். எர்னெஸ்டோ, நாவல் மொக்கை - உங்களுக்கு தெரிந்த விசயத்தை மட்டும் செய்யுங்க என்று டாக்டரின் முகத்துக்கு நேராக சொல்ல, டாக்டர் திகைத்து நிற்கிறார். அந்த டாக்டர் இதுவரை யாரும் என்னிடம் இப்படி பேசியதில்லை.நீ மட்டும், உனக்கு மட்டுமே இப்படி சொல்லும் நேர்மை இருக்கிறது என்று பெருமையாக சொல்கிறார்.
ஜூன்- 8 - 1952 10223 கிலோமீட்டர்கள் பெருவின் சான் பாப்லோ இடத்திற்கு நண்பர்கள் இருவரும் செல்கின்றனர். அது தொழுநோயாளிகள் கூடாரம் இருக்குமிடம். அங்கு தொழுநோயாளிகளிடம் பேசக்கூட பயப்படுகிறார்கள். எர்னெஸ்டோ மருத்துவர்கள் எச்சரிக்கைகளை மீறி கையில் கிளவுஸ் கூட மாட்டாமல் நோயாளிகளிடம் அன்பாக பழகுகிறார்.கால்பந்து விளையாடுகிறார். ஒருகட்டத்தில் மருத்துவர்களது மனநிலையும் முற்றிலும் மாறி நோயாளிகளிடம் அன்பாக பழகுகின்றார்கள்.ஜூன்-13 நள்ளிரவு. விடிந்தால் எர்னஸ்டோவின் பிறந்தநாள். மருத்துவர்கள், நர்ஸ்கள் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். ஆட்டம் பாட்டம். கேளிக்கைகள். முகாமை விட்டு எர்னஸ்டோ வெளியே வருகிறான். எதையோ தீவிரமாக யோசித்தபடியே அமேசான் நதியின் மறுகரையை பார்க்கின்றான். எர்னஸ்டோவை தேடி வருகிறான் கிரெனாடோ. நான் அவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடப்போகிறேன் எர்னஸ்டோ மறுகரையை காட்டுகிறான். இருட்டில் படகு இருக்குமிடம் தெரியவில்லை. எர்னஸ்டோ தாமதிக்கவில்லை. சட்டையை கழற்றுகிறான். கிரெனாடோ சுதாரிப்பதற்குள் அமேசான் நதியில் குதிக்கிறான். கிரெனாடோ அதிர்ந்து போய் கத்துகிறான். முட்டாள். திரும்பி வாடா. உன் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வேன்.கிரெனாடோ கதறி அழுகிறான். சத்தம் கேட்டு மருத்துவர்கள், நர்ஸ்கள் எல்லாம் வெளியே ஒடி வருகிறார்கள். எர்னஸ்டோ வெறியோடு நீந்தி மறுகரை செல்கிறான். கிரெனாடோ பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் கேட்கிறான். இதுவரை இந்த நதியை யாரும் நீந்தி உயிரோடு கடந்திருக்கின்றார்களா? மருத்துவர் இல்லையென்று சொல்கிறார். எர்னஸ்டோ கடும் ஆஸ்துமா நோயாளி வேறு. அனைவரும் படபடப்போடு கவனிக்க மறுகரையில் விளக்கொலிகள், சத்தம், ஆரவாரம். எர்னஸ்டோ மறுகரையை களைத்து போய் தொடுகிறான். அங்கு இருக்கும் தொழுநோயாளிகள் அன்போடு எர்னஸ்டோவை தூக்கி சுமந்தபடி அவர்கள் முகாமிற்கு செல்கிறார்கள்.

——-

கிரெனாடோவும், எர்னஸ்டோவும் பயணத்தின் இறுதிக்கட்டத்தை தொடும்போது ஜூலை-26,1952 . கிட்டத்தட்ட 12425 கிலோமீட்டர்கள். எர்னஸ்டோ இப்போதெல்லாம் ஆழ்ந்த சிந்தனையில் அடிக்கடி மூழ்குகிறான். பயணம் நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. கிரெனாடோவை விட்டு பிரிந்து எர்னஸ்டோ விடைபெறும் நேரம். எர்னஸ்டோ படிப்பை தொடர வேண்டும். கிரெனாடோ வேலைக்கு செல்ல வேண்டும். எர்னஸ்டோவை ஓர் உள்ளூர் சரக்கு விமானத்தில் ஏற்றி வழியனுப்பும் கிரெனாடோ சரக்கு விமானம் பார்ப்பதை பார்த்தபடியே நிற்கிறான். திரை கருமையாகி சேகுவாராவை பற்றிய சில குறிப்புகள் காட்டப்படுகின்றன. 1967 அக்டோபரில் அமெரிக்கா ராணுவம் அவரை கொலை செய்த குறிப்பு காட்டப்படுகிறது. முகத்தில் சுருக்கங்களுடன் வயதான தோற்றத்துடன் நிற்கும் கிரெனாடோ வானத்தை வெறித்துப்பார்த்தபடி நிற்கிறார்.

உலகில் இரண்டு வித மனிதர்கள் இருக்கிறார்கள்.

அக்கிரமங்களை மவுனமாக பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் நெடுந்தூரம் ஆயாசமாய் பயணிப்பது. கிரெனாடோ போல

அதர்மம் தலை விரித்தாடும்போது எதிர்த்து வீரமரணம் அடைவது. வலிகளும், வேதனைகளும் நிறைந்த இந்த குறுகியப் பயணம் அவ்வளவு சுகமாக இருக்காது. நம் பாஷையில் பிழைக்க தெரியாதவர்கள்.

ஆனால் இவர்களும் இல்லையென்றால் இந்த உலகம் எப்போதோ சுற்றுவதை நிறுத்தியிருக்கும்.


ஜூன்14 சேகுவேரா பிறந்த நாள். சே சொன்ன ஒரு வாசகத்தை இங்கு பகிர விரும்புகின்றேன்.

“உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!!!”

Friday, June 4, 2010

பூஜ்யங்கள் - விகடன் கவிதை

இந்த வார விகடனில் வெளிவந்த எனது கவிதை.
(நன்றி ஆனந்தவிகடன்)

பூஜ்யங்கள்
---------
ஆறாவது வகுப்பு
ஈ பிரிவில் மறக்கமுடியாதவன்
வே. அரங்கநாயகம்
வருடத்துக்கு நாலு முறை
கணக்குப் பாடத்தில்
முட்டை எடுப்பான்


ஒரு தேர்வில்
பத்தோடு பத்தை பெருக்கி
பத்துக்கு பிறகு
பத்து பூஜ்யங்களை போட்டது
உலக பிரசித்தம்
வாத்தியார் வெங்கடரமணி
அதை சுழித்து
பத்து முட்டைகள் போட்டது
கூடுதல் சுவாரஸ்யம்


கோழிப்பண்ணை வைக்கலாம்டா
கிண்டலடித்தலும் வையமாட்டான்
பூஜ்யங்களுக்கு மதிப்புள்ளன
புன்னகையோடு சொல்வான் முரடன்


பத்தாம் வகுப்பில்
பாதியை தாண்டாத
அரங்கநாயம் போட்டோவை
வெகுநாட்களுக்கு பிறகு
செய்தித்தாள்களில் பார்க்க நேரிட்டது
மத்திய அமைச்சராம்
ஆயிரம் கோடி ஊழலாம்
சட்டென எண்ண வரவில்லை
எத்தனை பூஜ்யங்கள்?

நன்றி
-விநாயக முருகன்