Friday, October 17, 2014

கால்களின் கீழே சுழலும் உலகம்

இம்மாத புதிய புத்தகம் பேசுது இதழில் ஆர். அபிலாஷின் கால்கள் நாவல் குறித்து நான் எழுதியிருந்த நூல் அறிமுகம்.

தமிழ் இலக்கியப்பரப்பில் இதுவரை மாற் றுத்திறனாளிகள் உலகையும்,அவர்கள் இருப்பையும், இருப்பிற்கான தத்தளிப்பையும், அவர்களின் உடல் வலியையும்,வலி சார்ந்த தகவல்களையும் இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்த நாவல்கள் எதுவும் வந்துள்ளதா என்று தெரியவில்லை. அந்தவகையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாக அபிலாஷின் கால்கள் நாவலைச் சொல்லலாம்.

தனது இளம்பிராயத்தில் போலியோ அட்டாக் வந்து கால்கள் பாதிக்கப்பட்ட மதுக்‌ஷரா என்ற மதுவின் அகவுலகமும் அவள் புறவுலகில் சந்திக்கும் வேறுபட்ட குணங்கள் கொண்ட எண்ணற்ற மனிதர்களும், அவர்களுக்குள் நடக்கும் இடையறாத உரையாடல்களுமே நாவலின் மையப்புள்ளி. அழகென்றும் சொல்லமுடியாத அழகி இல்லையென்றும் சொல்லமுடியாத சராசரித் தோற்றமுடைய மதுவின் அகஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக்கொள்ளலாம்.

மது தனது வீட்டில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்து தனது உடலின் ஒருபகுதியாக இருக்கும் காலிப்பரையும் அது ஏற்படுத்தும் வலியையும் தொடர்ந்து கவனித்தபடியே இருக்கிறாள். ஒவ்வொரு முறை காலிப்பரைப் பொருத்தும்போதும், தனியாக கழிவறைக்குச் சென்று திரும்பும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், வெளியிடங்களுக்குச் சென்று திரும்புகிறபோதும் மது அடையும் பெருவலியை அவளது அந்தரங்க மனம் கவனித்து வலியுடன் தொடர்ந்து அவள் உரையாடுவது போன்ற தருணங்கள். பிறகு அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் அவளது உடம்பு அடையும் மாறுதல்களையும், அது தரும் வேறுவிதமான வலியையும், இனம்புரியாத அவஸ்தையையும் தொடர்ந்து கவனிப்பது என்று இந்நாவல் முழுக்க வலி சார்ந்த நுட்பமான தகவல்கள் மதுவின் அகவுலகத்தில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
இரண்டாவது மதுவின் புறஉலகம். மதுவின் புறஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் அடுக்கில் மதுவின் அப்பா,அம்மா, கார்த்திக், பேராசிரியர் மதுசூதனன் அவரது மகன் பாலு போன்ற மைய துணைப்பாத்திரங்கள். இரண்டாவது அடுக்கில் அந்த மைய துணைப்பாத்திரங்களோடு தொடர்புடைய எண்ணற்ற மனிதர்கள். வேறுபட்ட குணாதிசயங்களுடன் உலவும் இந்த மனிதர்களின் இடையே நடக்கும் உரையாடல்கள், உரையாடல்கள் வழியே விரியும் அரசியல், தத்துவம், வரலாறே இந்நாவலுக்கான விரிவையும், ஆழத்தையும் கொடுக்கிறது.

எதிலும் ஆர்வமற்ற மது ஒரு சுவர்ப்பல்லி போலத் தொடர்ந்து தனது உடலையும், சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களது பேச்சுகளையுமே விளையாட்டுப் போல கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு அதுவே வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறது. வளர்ந்ததும் ஆங்கில இலக்கியம் படிக்கச் செல்கிறாள். அங்கும் அதுவே தொடர்கிறது. புத்தகங்களும், மனிதர்களும் அவளுக்கென்று ஒரு தனித்த சிந்தனையை, தர்க்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவளிடம் இருப்பது முன்கூட்டிய பிடிவாதமான சிந்தனைகள் என்று சொல்லமுடியாது. ஆனால் யாராவது அவளது சுயத்தைக் காயப்படுத்தினால் அவளால் அவ்வளவு எளிதில் அதை உதறிப்போக முடியாமல் வாதங்களால் அதைச்சாடுகிறாள். அதனாலேயே பிடிவாதக்காரி என்றும் முரட்டுப்பெண் என்றும் சிலரால் நினைக்கப்படுகிறாள்.
மதுவின் அப்பாவுக்கும் மதுவுக்குமான உறவு நுட்பமாக நாவலில் பதிவாகியுள்ளது போன்று மதுவுக்கும், அவளது அம்மாவுக்குமான உறவு அவ்வளவு விரிவாக இல்லையோ என்று தோன்றுகின்றது. மதுவை சிறுவயதிலிருந்து வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்வதும், கால்களுக்கு எண்ணெய் தடவிவிடுவதுமாக அற்புதமான தந்தையாக இருக்கும் அவரேதான் பல நேரங்களில் மது மீது எரிந்து விழுந்து அவளை வெறுக்கிறார். சுடிதார் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கும் நேரத்தில் கடுமையாகத் திட்டும் அவரேதான் பின்னாட்களில் மதுவுக்கு வாய்பேசாத வரன் அமையும்போது காலம் முழுக்க என் பெண்ணை நானே தூக்கிச் சுமக்கிறேன். ஆனால் ஓர் ஊமைக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்கிறார். மதுவுக்கு அவளது தாயிடம் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை. ஒருசில நேரங்களில் கழிவறை செல்லும்போது மதுவின் அம்மா உதவி செய்கிறாள். சில நேரங்களில் மது அவளது அம்மாவுக்கு சமையலில் உதவி செய்கிறாள். எஞ்சிய நேரங்கள் எல்லாம் மதுவின் வீடு முழுக்க அவளது அப்பாதான் நிறைந்து விடுகிறார். தூக்கத்தில் ஆடை கலைந்த அப்பாவின் ஆண்குறி அவளது கனவில் வருகிறது. அப்பாவின் மீதுள்ள ஈர்ப்பு போல கார்த்திக் மீது மதுவுக்குப் பெரிதாக எந்த சுவாரசியமும் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது.

சில குறைவான பக்கங்களே வரும் துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு கவனமாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அந்த துணைக் கதாபாத்திரங்கள் இல்லாமல் போனால் இந்நாவலுக்கு கிடைத்திருக்கும் அபாரமான விரிவும், சுவாரசியமும் கிடைக்காமல் வெறுமனே ஏதோ ஒரு பெண்ணின் கழிவிரக்கத்தைச் சொல்லும் நாவலாகத் தடம்மாறிப் போயிருக்கலாம். மதுவின் வாழ்க்கையில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணற்ற மனிதர்கள் நீர்க்கோலம் போன்று வந்து மறைந்துபோகிறார்கள். மதுவின் இளம் வயதில் வரும் மத்தாயி என்ற செயற்கைக்கால் பழுது பார்க்கும் கடை நடத்துபவர் மற்றவர்களால் அவருக்கும் அவரது சித்திக்கும் இருப்பதாக நம்பப்படும் உறவு, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பிளேடு என்ற பட்டப்பெயர் கொண்ட மனிதர் அவரது குடும்பம், பெண்களோடு பேசும்போது அவர்களின் மார்பை மட்டுமே கவனிக்கும் ஹரிஹர ஐயர் என்ற மனிதர், ஆட்டோ ஓட்டும் கணேஷ், உலகத்துக்கு கீழ் இருக்கும் அனைத்திற்கும் கருத்து எழுதும் மார்க்கண்டேயன் என்ற எழுத்தாளர். அவர் எழுதும் சி++ என்ற புத்தகம்,டாக்டர் ஆபிரகாம் போன்று நாவல் முழுக்க வரும் உதிரிமனிதர்களால் நாவல் பிரமாண்டமாக விரிகிறது. மது இறுதிவரை அதே ஊரில் இருந்தாலும் பல துணைக்கதாபாத்திரங்கள் நாவலில் தொடர்ந்து பயணிக்காமல் ஆங்காங்கே மறைந்து விடுகிறார்கள். ஆனால் இதை நாவலின் ஒரு பிரச்சனையாகவும் பார்க்க முடியாது. வாழ்க்கையில் ஒரு மனிதன் சந்திக்கும் நிறைய மனிதர்களில் யாரோ ஒரு சிலர் மட்டும் அவனது இறுதிவரை பயணம் செய்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தைப் புரிந்துகொள்வது பெரிய விஷயமில்லை. உடல் வலி அவர்களுக்கு ஒரு பிரச்சனையில்லை. உதாசீனமும், கேலியும், கிண்டலும், அல்லது அளவுக்கதிகமான கரிசனமும் (பாசாங்கற்றதாகவே இருந்தாலும்), ஒப்பீடு செய்வதுமே அவர்களைக் காயப்படுத்துகின்றன. அதுவே அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து விலக்கிவைப்பதாகவும் உணர்கின்றார்கள்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் மதுவின் அப்பா அவரது அலுவலக நண்பரின் வீட்டுக்கு மதுவை அழைத்துச்செல்வார். அலுவலக நண்பரின் வீட்டில் இருக்கும் பவித்ரா என்ற மதுவின் வயதையொத்த பெண்ணுக்கும் கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும். ஆனால் அவள் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பாள். கணிப்பொறி கற்றுக்கொண்டிருப்பாள். வண்டி ஓட்டுவாள். பெரிய வேலையில் இருப்பாள். சந்தோஷமாகவும், வசதிகளுடன் கூடிய ஒருவித நடுத்தர மேல்தட்டு வர்க்கம் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப்பெண் அதீத நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் வாழ்க்கையை எதிர்கொள்வாள். மதுவின் அப்பா அந்தப்பெண் போல ஏன் உன்னால் தன்னம்பிக்கையாக வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று கேட்டு மதுவைத் திட்டுவார். மதுவுக்கு குழப்பமாக இருக்கும். அவளது உடல் குறைபாட்டின் அளவு வேறு. எனது குறைபாடு வேறு. நான் ஏன் அவள் போல இருக்க வேண்டும்? என்று கேட்பாள்.
மதுவுக்கு வைத்தியம் செய்ய வரும் சித்த வைத்தியர்கள் எல்லாம் ஏதேதோ செய்து தொடர்ந்து தோற்றுப்போகிறார்கள். அவர்கள் கொடுக்கும் எந்த மருந்தும் அவளது காலை குணப்படுத்தவில்லை. மாறாக மருந்துகள் அவளது யானைப்பசியைத்தான் அதிகரிக்கின்றன. அதனால் உடல் பருமன் ஆகிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் தனது உடல் பருமனைப் பற்றி லேசாகக் கவலைப்படும் மது பிறகு ஒருக்கட்டத்தில் அதை அலட்சியம் செய்கிறாள்.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் ஆறு வயது மகன், மாற்றுத்திறனாளி. கழிவறையில் கால் வழுக்கி அங்கிருந்த இரும்புவாளியில் தலை அடிபட்டுவிட்டது. ஐசியூவில் சேர்க்கும் நிலைமைக்குப் போனது. பொதுஇடங்களை விட்டுவிடலாம். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளில் கூட அவர்களுக்கான முறையான கழிப்பறை, சக்கர நாற்காலி ஏற்றிச்செல்லும் மாடிப்படி வசதிகள் இல்லை. அதைப்பற்றி பேஸ்புக்கில் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில், இப்போது கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையம் போன்ற சொற்ப இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அளவுக்குத் தகுதி கொண்டவையாக இருக்கின்றன. அங்கும் அவர்களுக்கான கழிவறை வசதிகள் எப்படி என்று தெரியவில்லை. அதைக் கூட சகித்துக்கொள்ளலாம்.
இந்நாவலின் இறுதியில் மது பிரத்யேக வண்டியோட்டுவதற்காக விண்ணப்பிக்கின்றாள். அங்கு மதுவுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர் முதல் போக்குவரத்து அதிகாரி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களிடம் அதிகமாகக் கைநீட்டும் அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் இரக்கப்பட்டு கொஞ்சமாக லஞ்சம் வாங்குவதை நானே பலமுறை நேரில் பார்த்து அவர்களது இரக்ககுணத்தை வியந்து பாராட்டியுள்ளேன்.

நாவலுக்காக அபிலாஷ் பயன்படுத்தியுள்ள கவித்துவமான மொழி கவனிக்கத்தக்கது. அதிக சிடுக்குகள் இன்றியும், சாதாரணமாக இல்லாமலும் வாசிக்க சிரமப்படுத்தாமல் செல்லும் இந்நாவலைப் பற்றி சில நண்பர்கள் பொதுக்கருத்தொன்றைச் சொல்வதைக் கவனித்துள்ளேன். அது இந்நாவல் மெதுவாகச் செல்கிறது. எல்லா ரயிலும் வேகமாகச் செல்ல வேண்டுமா என்ன? மலைரயிலுக்கென்று ஓர் அழகு உண்டு. இந்த மலைரயிலில் பயணிக்கும்போது ஆங்காங்கு வரும் பிளேடு,எழுத்தாளர் மார்க்கண்டேயன், டாக்டர் ஆபிரகாம் போன்ற மனிதர்கள், அவர்கள் ஊடான உரையாடல், அதில் இருக்கும் மெல்லிய அங்கதம், சமூகக் கோபம் என்று இந்நாவல் தொடர்ந்து அதன் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டே நம்மைக் கடத்திச்செல்கிறது.
ஒரு பெண் மாற்றுத்திறனாளியின் உலகையும், அவள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் விரிவாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வகையில் இந்நாவல் கொண்டாடப்பட வேண்டியது. சமீபத்தில் இந்நாவல் எழுதிய ஆர்.அபிலாசுக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அபிலாசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

Sunday, October 12, 2014

ராஜீவ்காந்தி சாலை - இரண்டு விமர்சனங்கள்

ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றி  ஈழத்து எழுத்தாளர் வ.ந.கிரிதரன் விமர்சனம்

(நன்றி:-வ.ந.கிரிதரன்)

அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

இதே வகையானதொரு நிலையினைத்தான் இந்தியாவில் உலகமயமாக்கலின் விளைவாக உருவான 'பணம் புழங்கும்' நடுத்தர மக்களின் வாழ்க்கையிலும் காணலாம். மேற்கு நாட்டுசமூகக் கலாச்சாரச் சூழலை அப்படியே கொண்டு வந்து, வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடொன்றில் நட்டுவிட்டால் எவ்வகையான விளைவுகள் உருவாகுமோ அவ்வகையான விளைவுகள் அனைத்தும் இங்கும் உருவாகும். அவைதான் 'ராஜீவ்காந்தி சாலை'யிலும் உருவாகின. பணம் புழங்கும் மத்தியதர மக்கள் மில்லின் கணக்கில் உருவானதும், மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் புதியதொரு சந்தையினை இந்த மாற்றம் திறந்து விட்டது. குறைந்த அளவு ஊதியத்துடன் உழைப்பை வாங்குவதன் மூலம் இலாபத்தை அதிகரித்த மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்துத் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் இலாபத்தைச் சம்பாதித்தன. ஒரு கல்லில் இரு மாங்காய்கள். 'கோல்கேற்' பற்பசை , கோர்ன் ஃபிளாக்௶ஸ் சீரியல்கள் தொடக்கம், ஃபோர்ட் வாகங்கள், ஜிஎம் வாகனங்கள் போன்ற வாகனங்கள் தொடக்கம், புதிய சந்தை நிலவும் நாட்டில் பேசப்படும் பன்மொழிகளில் திரைப்படங்களை மிகச்சிறப்பாக 'டப்பிங்' செய்வது தொடக்கம் இலாபத்தை அள்ளிக்குவித்தன மேற்கு நாட்டின் நிறுவனங்கள். 'மாஸ்டர் கார்ட்', 'விசா', 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' என்று அத்தனை கடன் அட்டை நிறுவனங்களும் நுழைந்து விட்டன. பல்வேறு வகையான காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், 'மல்டி லெவல் மார்கட்டிங்' என்று அனைத்து நிறுவனங்களும் நுழைந்து விட்டன.

மேற்கு நாடுகளின் நிறுவனங்களின் பணியினைக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்காகப் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பூற்றீசல்களைப் போல் முளைத்தன. இவ்விதமான நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பார்க்கும் மக்களை மையமாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் வலையை விரித்தன. கையில் காசு புழங்கத்தொடங்கியதும் இவ்வகையான நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை மாறத்தொடங்கியது. மேற்குக் கலாச்சாரம் அவர்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து விட்டது. வாகனம் வாங்குவது, கார் வாங்குவது என்பவையே அவர்களது கனவுகளாகின. புதிய சூழல், புதிய வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அழுத்தத்தினையும் கூடவே கொண்டுவந்து விட்டது. சக்திக்கு மீறிய வகையில் கடன்களைப் பெறும் சூழல் உருவாகியது. கடன்களைப் பெற்று வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு, வேலை சிறிது காலம் இல்லாமல் போனால் கூடத் தாங்க முடியாத நிலைதான். வாசலில் நின்று கடன்களை அவர்கள் மேல் திணித்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் இவ்விதமான இக்கட்டான நிலையில், உதவுவதில்லை. பணத்தைத் திருப்பிக் கட்டும்படி நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கும் சூழலுருவாகும். விளைவு? குடும்பங்கள் பிளவுறுதல், தற்கொலைகள், கொலைகள் என்று பல்வேறு வகையான பக்க விளைவுகள் உருவாகும். இரவினில் தனித்துப் பெண்கள் வேலை செய்யும் சூழல்கள், அவர்களுடன் பணி புரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தும். வேலையிழத்தல் போன்ற சூழல்கள் உருவாக்கும் பொருளியற் சுமைகள் காரணமாக ஒருவருக்கொருவர் பண உதவிகள் பெறுவது, பின்னர் அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அநுசரித்து வாழ்வது என்று ஏற்படும் மாற்றங்கள் தம்பதியினரின் குடும்ப வாழ்வினைச் சீரழிக்கின்றன.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் விமர்சிக்கின்றது. குழந்தைகள் மேல் புரியப்பட்டும் பாலியல் வன்முறைகள் எவ்விதம் அவர்களது வாழ்வினைச் சிதைத்து விடுகின்றன என்பதை நாவலில் வரும் கெளசிக் பாத்திரத்தினூடு ஆசிரியர் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். சிறுவயதில் ஆண் உல்லாசப்பிரயாணிகளினால், முதிய செல்வந்தப் பெண்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் அவன் வளர்ந்ததும் இளம்பெண்களைப் பாலியல்ரீயில் வதைப்பதில் இன்பம் காணுமொரு வெறியனாக உருமாற்றமடைகின்றான். அதன் விளைவாகக் கொலையுண்டும் போகின்றான். சிறு வயதில் அவன் மிக அதிகமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாகியது ஆண் உல்லாசப்பிரயாணிகளால்தான். எனவே அவனது ஆத்திரம் அவ்விதமான ஆண்கள்மேல் ஏற்படாமல் எதற்காகப் பெண்கள் மேல் ஏற்பட வேண்டும் என்றொரு கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை இவ்விதமாக உலகமயமாதலால் அடியோடு மாறுதலடைந்து, ராஜீவ்காந்தி சாலையாக மாறிய சென்னையின் மகாபலிபுரச்சாலையின் மாறுதல்களை விமர்சிக்கின்றது. உண்மையில் உலகமயமாதல் எவ்விதம் செல்வந்த நாடுகளின் இலாபத்திற்காக வளர்முக நாடுகளில் நிலவிடும் இயற்கைச் சூழலினை , விவசாயம் போன்ற தொழில்களை, சிறுவர்த்தகச் செயற்பாடுகளைச் சிதைத்து விடுகின்றது. எவ்விதம் நகர்ப்புறங்களில் செல்வச்செழிப்புள்ள பகுதிகளை உருவாக்கும் அதே சமயம், மிகவும் வறிய மக்களைக்கொண்ட சேரிகளையும் உருவாக்கி விடுகின்றது. எவ்விதம் பாலியல்ரீயிலான உளவியற் பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின் தீய விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. இவற்றைப்பற்றியெல்லாம் விமர்சிக்கின்றது. அந்த வகையில் 'ராஜீவ்காந்தி சாலை' ஒரு குறியீடு. உலகமயமாதல் வளர்ந்துவரும், அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றில் ஏற்படுத்தும் சமூக, பொருளியல், கலாச்சார மற்றும் சூழற் பாதிப்புகளை விமர்சிக்குமொரு குறியீட்டு நாவல் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'.


டிசே தமிழனின் விமர்சனம்
(நன்றி :- டிசே தமிழன்)

அளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.

Friday, October 10, 2014

அற்புதங்கள் நிகழ்த்துபவன்

இந்நாட்களில்
நான் அற்புதங்கள் நிகழ்த்துபவனாக மாறியிருந்தேன்
என்னைச்சுற்றி அற்புதங்களின் குறியீடுகள்
கணந்தோறும் பல்லைக்காட்டி நடனமிடுகின்றன

நான் குடையெடுத்து
தெருவில் நடந்தால்
கொட்டும் மழை கூட ஓடிவிடுகிறது

நான் பயணச்சீட்டு முன்பதிவு செய்தால்
இணையத்தளம் முடங்கிவிடுகிறது

நான் தேர்தலில் தேர்வுசெய்த எம்எல்ஏ
எனது ஊர்பக்கம் வருவதை நிறுத்திவிட்டார்

நான் முதலீடு செய்த
தனியார் வங்கியை அன்றே மூடிவிட்டார்கள்

சாவதற்காக விஷம் அருந்தினேன்
கலப்படம் என்பதால்
அப்படி எதுவும் நடக்கவில்லை

நான் ஒரு தேவதையை கண்டேன்
மெல்ல எனது அருகில் வந்தவள்
தனது இமைகளை மூடி
அழகிய வதனத்தை உயர்த்திய தருணத்தில்
அவளை ஆசையுடன் முத்தமிட்டேன்
அடுத்த விநாடி
அவள் தவளையாக உருமாறி குதித்தோடி
வேலிக்கப்பால் மறைந்துப்போனாள்

நேற்று பக்கத்து ஊரில் இருந்த
ஜோசியரை பார்க்க போனேன்
அவன் தலையில் தேங்காய் விழுந்து
மருத்துவமனையில் கிடப்பதாக சொன்னார்கள்

கவலைகள்

என்னிடம் பத்து கவலைகள் இருந்தன
உன்னிடம் ஐந்து கவலைகள் இருந்தன
நாம் இருவரும்
மாலைப்பொழுதொன்றில் சந்தித்தோம்
மதுபான விடுதியில் அமர்ந்தபடி
ஆளுக்கொரு மதுவை வரவழைத்தோம்
நமது கவலைகளை ஒவ்வொன்றாக
முன்னால் இருந்த தட்டில் கொட்டினோம்

உன்னிடம் இருப்பது ஐந்துதான்
ஆனால் ஐநூறு கவலைகளுக்கு சமமென்றாய்
உன்னை சமாதானப்படுத்த வேண்டி
உன்னிடம் இருந்த ஒரு கவலையை
எடுத்து மென்றபடி ஒரு மிடக்கு விழுங்கினேன்
இப்போது உன்னிடம் நான்கு
என்னிடம் அதே பத்து

உனது கவலைகளோடு ஒப்பிட்டால்
எனது கவலைகள் அனைத்தும்
அற்பத்திலும் அற்பமென்றாய்

நான் கோபத்தின் உச்சத்தில்
இன்னொரு மிடறு விழுங்கையில்
நீ செய்த காரியம் அதிஅற்புதமானது
எனது தட்டில் இருந்த ஒரு கவலையை
என்னை கேட்காமலேயே எடுத்து வாயில் போட்டுக்கொண்டாய்
எனது கவலைகளில் ஒன்று குறைந்துப்போனது

உனது தட்டில் இருந்த நான்கு கவலைகளை
எனது பக்கம் நகர்த்தி வைத்தாய்
எனது தட்டில் இருந்த ஒன்பது கவலைகளை
உன் பக்கம் நகர்த்த எனக்கு தயக்கமாக இருந்தது

நீண்ட யோசனைக்கு பிறகு இருவரும்
பொது உடன்படிக்கையொன்றை செய்துக்கொண்டோம்
மீண்டும் ஒரு போத்தல் வரவழைத்தோம்

இரண்டு தட்டில் இருந்த கவலைகளையும்
ஒரே தட்டுக்கு இடம்மாற்றினோம்
இருவரும் மதுவருந்ததொடங்கும்போது
நமது தட்டில் பதிமூன்று கவலைகள் இருந்தன
அதை எப்படி சரிசமமாக பங்கிட்டுக்கொள்வதென்று
இருவரும் குழம்பி தவித்தோம்
இறுதியில் பார்த்துக்கொள்ளலாமென்று
ஆளுக்கொரு கவலையை
கையில் எடுத்து கொறிக்க ஆரம்பித்தோம்

கடைசி வாய் அருந்தும்போது
நமது தட்டில் ஒரேயொரு கவலை எஞ்சியிருந்தது
அதை யார் எடுத்துக்கொள்வதென்ற
புதுக்கவலையொன்று இப்போது நம்மிடம் வந்துவிட்டது