Monday, December 19, 2011

ஜப்திக்கு வந்த வீடு

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் ஆண்கள்
அந்த தெருவை
விரைந்து கடக்க முயற்சிக்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் பெண்கள்
அந்தரங்க சுவடுகளை
அழித்து விட்டு செல்கிறார்கள்

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
பொம்மையுடன் வெளியேறும்
குழந்தைகளின் கைகளில்
அப்படியொரு பொறுப்புணர்ச்சி

ஜப்திக்கு வந்த வீட்டிலிருந்து
வெளியேறும் குருவியொன்று
கூடுதல் வைக்கோல் குச்சிகளோடு
மீண்டும் உள்சென்று தாழ பறக்கிறது

Saturday, November 26, 2011

ஒரு மழை

ஒரு மழை
சில கணங்கள்
கால இயந்திரத்தில்
பின்னோக்கி இழுத்து செல்கிறது

ஒரு மழை
புறக்கணிக்கப்பட்ட
சில பிரியங்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பிரிந்து சென்றவர்களை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பழைய காயங்களை கீறி
வலியை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காதலியை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
பள்ளி தோழிகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கல்லூரி ஆசிரியைகளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
நண்பனை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
நண்பனின் காதலியை,
நண்பனின் தங்கையை
நண்பனின் மனைவியை
நண்பனின் அம்மாவை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சாலையில் கடந்து சென்ற
முகம் தெரியாத பெண்ணை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
குழந்தையை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
கடவுளை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
சைத்தானை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
காதலை நினைவூட்டுகிறது

ஒரு மழை
காமத்தை நினைவூட்டுகிறது

ஒரு மழை
கவிதை எழுத நினைவூட்டுகிறது

ஒரு மழை
கொலை செய்ய நினைவூட்டுகிறது

ஒரு மழை
பொய் சொல்ல நினைவூட்டுகிறது

ஒரு மழை
தற்கொலையை நினைவூட்டுகிறது


ஒரு மழை
மது விடுதியை புகை பிடித்தலை
நினைவூட்டுகிறது

ஒரு மழை
தேநீர் இடைவெளியை
நினைவூட்டுகிறது


ஒரு மழை
சில நேரங்களில்
இன்னொரு மழையை
நினைவூட்டுகிறது


நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, November 16, 2011

புயலுடன் உரையாடுபவன்

பண்டிகை நாளொன்றின்
முந்தைய இரவில்
வானிலை ஆராய்ச்சி மையத்தில்
தனியாக அமர்ந்துள்ளான் அவன்


வெளியே எங்கோ
தொலைதூர அதிர்வேட்டுகளும்
வானவெடிகளின் கொண்டாட்டங்களும்
சன்னமாய் ஒலிக்கின்றன


அவன் அமர்ந்திருக்கும்
கட்டுப்பாட்டு அறையில்
கழுவப்படாத
காலி தேநீர்க்கோப்பைகளும்
எரிந்துப்போன சிகரெட் துண்டுகளும்
மல்லிகைப்பூக்களின் வாசமும்
சிதறி கிடக்கின்றன


அமைதியாக தலையை
கவிழ்ந்திருக்கும் அவன்
சலிப்பாக
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்


அவனது இருப்பிடத்திலிருந்து
ஐநூறு கிலோமீட்டர் தள்ளி
புயல் சின்னம் நகர்கிறது


சலிப்புற்றிருந்த அவன் முகம்
இப்போது
காதல் கடிதம் கிடைக்கப் பெற்ற
பதின்ம பெண்ணாய் மாறுகிறது
அந்த அறையில் பரபரப்பு
சூல் கொள்கிறது


அவன்
கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்
கருவிகளின் திசையை மாற்றுகிறான்
கணக்கீடுகளை மீண்டும் சரிபார்க்கிறான்


இதுவரை சந்தித்திராத புதிய புயல்
இதுவென்று அவனுக்கு படுகிறது
வெள்ளைத்தாளில் எதையோ
கிறுக்குகிறான்
தொடர்பு துண்டிக்கப்பட்ட யாருக்கோ
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான்
சில மின்னஞ்சல்களை அனுப்புகிறான்


அவன்
புயலின் மையத்தை
புயலின் உருவத்தை
உன்னிப்பாக உற்றுப் பார்க்கிறான்
சிறுவயதில்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
பால்ய காலத்தோழனின் முகம்
அவனுக்கு நினைவுக்கு வருகிறது
சாட்டிலைட் சமிஞ்கைகளை
கவனமாக ஒலிப்பெயர்க்கிறான்


புயல் வடமேற்கு திசையில் நகர்கிறது
அவனது திசையும் அதுவே
அவன் ஆர்வமாக பார்க்கிறான்
தேநீர் குடித்தபடி
புயலை பார்த்து ரசிக்கின்றான்
நேரம் செல்ல செல்ல
புயலின் வேகம் அதிகரிக்கிறது


அவன்
புயலுக்கு ஒரு செல்லப்பெயர் சூட்டுகிறான்
புயலின் மையம் சற்று விரிகிறது
அவன் இப்போது
புயலுடன் உரையாட தொடங்குகின்றான்


புயலுக்கும் அவனுக்கும்
இடையிலிருக்கும் பிணைப்பு
அந்தரங்கமானது
புதிரானது
சுவாரசியமானது
அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்ளும்
மொழி மற்றவர்கள் அறியாதது
சங்கேத குறியீடுகளால் நிறைந்தது
அவர்கள் உரையாடல்கள்
காதல் நிறைந்தது


நீண்ட உரையாடலின் முடிவில்
புயலின் மையம் சிறிது சிறிதாக சுருங்குகிறது
அது மெல்ல மெல்ல உருமாறுகிறது
புயலின் திடீர் செய்கை
புரியாமல் அவன் திகைக்கிறான்


புயல் இப்போது வடகிழக்காக நகர்கிறது
அவனுக்கு கைகள் நடுங்குகின்றன
புயலின் இலக்கை
அதற்கு நினைவூட்டுகின்றான்
அது பயணிக்க வேண்டிய பாதை
அதுவல்லவென்று கண்டிக்கின்றான்
அது பயணிக்க வேண்டிய வேகமும்
அதுவல்லவென்று கூறுகிறான்


பெயர் தெரியாத தீவுக்கூட்டங்களை நோக்கி
புயல் மெல்ல மெல்ல நகர்கிறது
அவனுக்கு வியர்க்கிறது
கவலையோடு
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
மெல்ல மெல்ல புயல்
அவன் பார்வையிலிருந்து மறைகிறது


தலைக்கு மேல் கடக்கும்
மாபெரும் பறவையொன்று
தொடுவானில் மறைந்தார்போல்
இறுதி புள்ளியாய்
திரை ஒளிர்கிறது


அவனுக்கு கண்ணீர் பெருகுகிறது
அழுகையினூடே ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்


அவன் இப்போதுமீண்டும்
கட்டுப்பாடு அறையின் மையத்தில்
தலைகுனிந்தபடி
அமைதியாக காத்திருக்கிறான் தனியாக


நன்றி
என்.விநாயக முருகன்

Monday, November 14, 2011

குழப்பம்

கரையில் அலைவதில்
எந்த அலையில்
கால நனைப்பதென்று குழப்பம்

இதிலென்ன யோசனை
எந்த அலை
முன்னால் வருகிறதோ
அதில் நனைப்பதுதானே
என்றொரு குரல் கேட்டது

முந்தி வந்த அலையில்
கொஞ்சம் கால்
நனைத்து திரும்புகையில்
அதற்கு பிந்தி வந்த
அலைகளும் கெஞ்ச ஆரம்பித்தன

இப்போது
எந்த அலையில்
கால் நனைத்தோமென்று குழப்பம்


நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, November 10, 2011

இப்படியான வாழ்விலே

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் கோவிலுக்கு போனால்
செருப்பு காணாமல் போய்விடுகிறது

நான் திருமணத்துக்கு போனால்
பந்தி முடிந்து விடுகிறது

நான் நிதிநிறுவனத்தில் பணம் போட்டால்
சொல்லாமல் கூட ஓடி விடுகிறார்கள்

நான் நேர்மையாக சம்பாதித்தால்
கடன்காரர்கள் வந்துவிடுகிறார்கள்

நான் வீடு வாங்கினால்
வட்டி விகிதத்தை உயர்த்தி விடுகிறார்கள்

நான் வாகனம் வாங்கினால்
எரிபொருள் விலையை உயர்த்தி விடுகிறார்கள்

நான் ஒட்டு போட்டால்
மந்திரிசபையை கவிழ்த்து விடுகிறார்கள்

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் ஆசிரமத்துக்கு சென்றால்
அங்கு காவல்துறை நுழைந்து விடுகிறது

நான் ஊழல் செய்தால்
அங்கு சிபிஐ வந்து விடுகிறது

நான் நடிகன் ஆனால்
அங்கு நிருபர்கள் வந்து விடுகிறார்கள்

நான் உப்பு விற்க போனால்
மழை கொட்டி தீர்க்கிறது

நான் பொரி விற்க போனால்
காற்று வீசி தீர்க்கிறது

நான் நாய் வளர்த்தால்
அது பக்கத்து வீட்டு நாயோடு ஓடிவிடுகிறது

என்னை நீங்கள்
எங்கும் பார்த்திருக்கலாம்

நான் பிள்ளையார் பிடித்தால்
குரங்காய் மாறிவிடுகிறது

நான் கதை எழுதினால்
கந்தலாக மாறி விடுகிறது

நான் கவிதை எழுதினால்
அது எப்போதும்
இப்படித்தான் முடிந்து விடுகிறது

நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, October 19, 2011

வழித்துணை

பக்கத்து இருக்கையில் அமர்ந்திருப்பவன்
அவன் ஊர் வந்ததும்
எழுப்பச் சொல்லி உறங்கப்போகிறான்

அப்படியென்ன இருக்கலாம்
அந்த ஊரில்?

நதியா,மலையா,கோவிலா
மண்ணா,மரமா,க‌ல்லா
மாமன் மகளா
பொங்குமாக்கடலா
பகையா,உறவா,கடனா
பகலா,இரவா,மழையா
பூவா,காயா

உறங்குபவனைத் தட்டியெழுப்ப மனமின்றி
அவன் ஊரை சுமந்து
பயணிக்கின்றேன் ‌மிக பத்திரமாய்

ஊர் வந்ததும்
அவசரம் அவசரமாய் இறங்கி செல்பவன்
மறக்காமல்
என்னிடம் ஒப்படைத்த
அவன் ஊரை வாங்கிக்கொண்டுப் போகிறான்
திரும்பிப் பார்க்காமலேயேநன்றி
என்.விநாயக முருகன்

Thursday, September 8, 2011

குஞ்சுண்ணியும்,காந்தியும்

குஞ்சுண்ணியை
உங்களுக்குத் தெரியும்தானே

எழு‌தி எழு‌தியே
எழுத்தாய் போனவர்

குஞ்சுண்ணி
எதைப் பற்றியும் எழுதுவார்
எல்லார் பற்றியும் பேசுவார்
எல்லாமும் விவாதிப்பார்

குஞ்சுண்ணி
ஒருநாள் தேநீர் கடைக்கு செ‌ன்றார்

தேநீர் அருந்தியபடியே
தினத்தந்தி பேப்பரை
மெதுவாக படித்தார்

என்னது காந்தியை சுட்டுட்டாங்களா?
குஞ்சுண்ணிக்கு அதிர்ச்சி
கோபத்தில் பேப்பரை கசக்கி எறிந்தார்
அடக்கடவுளே வடைபோச்சே..

வீட்டுக்கு வந்ததும்
காந்தியை பற்றி தேட ஆரம்பித்தார்

காந்தி பிறந்த இடத்துக்கு செ‌ன்றார்

சபர்மதி ஆசிரம் செ‌ன்று
காந்தி சிலையை வணங்கினா‌‌‌ர்

ஹேராம் படத்தை
டிவிடியில் பார்த்தார்

காந்திக்கு குல்லா தைத்து கொடுத்த
சுலைமான் சேட்டிடம் பேட்டி எடுத்தார்

மூச்சுக்கு நூறுமுறை
காந்தி காந்தி எ‌ன்றர்

மனைவி சாந்தியை கூட
காந்தி எ‌ன்று விளித்தார்

பூந்தி தட்டை பார்த்தாலும்
காந்தி காந்தியென்று உருகினா‌‌‌ர்

ஊண் உருகி
உள்ளொளி பெருகி
காந்தியாகவே மாறினா‌‌‌ர்

காந்தியை பற்றி
கவிதை எழுத ஆரம்பித்தார்

காந்தியை பற்றி
கட்டுரைகள் எழுதி குவி்த்தார்

காந்தி கிராமத்திற்கு
கால்நடையாகவே செ‌ன்றார்

காந்திக்கே தெரியாத
பல விஷயங்களை
கண்டுபிடித்து எழுதினார்

காந்தி குளித்தது
காந்தி பல்விளக்கியது
காந்தி கிரிக்கெட் ‌விளையாடியது
இன்னும் பல பல

குஞ்சுண்ணி
ஒரு சுபயோக சுபதினத்தன்று
தனது எழுத்துகளையெல்லாம்
திரட்டி நூலாக வெளியிட்டார்

ஆயிரம் பிரதிகளில்
காந்தி சிரித்தாலும்
ஆத்ம திருப்தி வரவில்லை
குஞ்சுண்ணிக்கு

ஒரு யோசனை பிறந்தது
ஒரு காந்தி எடுத்தால்
இன்னொரு காந்தி இலவசமென்று
ஆரம்பித்தார்

ஒரு புத்தகம் ஐநூறு ரூபாய்
எ‌ன்று விற்க ஆரம்பித்தார்
ஐந்து நூறுரூபாய்
பத்து ஐம்பதுரூபாய்
ஐநூறு பத்துரூபாய்

குஞ்சுண்ணிக்கு வீடெங்கும்
காந்தி கொள்கைகள்
பத்தாய் நூறாய்
ஐநூறாய் ஆயிரமாய்

குஞ்சுண்ணி
காந்தியை போன்று சிரிக்கிறார்ர்
காந்தியை போன்று உண்கிறார்
காந்தியை போன்று நடக்கிறார்
காந்தியாகவே வாழ்கிறார்

குஞ்சுண்ணி
இப்போது ஒரு முழு காந்தியவாதி....

Friday, July 1, 2011

இரண்டு கவிதைகள்

இயல்பு
-------
கேசவப் பெருமாள் கோவிலில்
ராமகாதை சொல்லிக் கொண்டிருந்தார்
பத்து அவதாரமெடுத்தவர் கதையை
பட்டாச்சாரியார் பாடிக்கொண்டிருந்தார்
கேட்க கேட்க கண்ணீர் மல்கியது

கதையின் கிளைமாக்சில்
ராமன் தனது பாதுகைகளை
பரதனிடம் ஒப்படைக்க
கோவில் வாசலில் கழற்றிப்போட்ட
புதுச்செருப்பு ‌மீது
பார்வை செ‌ன்றது


புகழ்
----
மார்க்கெட் போன
நடிகர் ஒருவரை
துணிக்கடை திறப்பு விழாவில்
சந்திக்க நேரிட்டது
சிரித்தபடி கைகுலுக்கியவரிடம்
ஆட்டோகிராப் நோட்டை தந்தேன்

விழுந்தால் விதையாவேன்
எழுந்தால் மரமாவேன்
அன்புடன்………எ‌ன்று முடிந்திருந்தது
அழகான கையெழுத்து

பாவம்
எங்கு விழுந்து எழுந்தாரோ

.

Wednesday, June 29, 2011

ஆரண்யகாண்டம்-ஒரு கலந்துரையாடல்ஆரண்ய காண்டம் தமிழின் மிக புதுமையான முயற்சி. இந்தப்படம் பற்றி இன்னும் விரிவான விவாதங்களும்,பரவலான கவன ஈர்ப்பும் தமிழ்ச்சூழலில் நிகழ்த்தப்பட வேண்டும். இதன் தொடக்கமாக நானும், நண்பர் விஜயமகேந்திரனும் இணைந்து ஆரண்யகாண்டம் திரைப்படம் பற்றிய ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளோம். இதில் ஆரண்யகாண்டம் திரைப்பட இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கலந்துக் கொள்கிறார். கருத்துரை வழங்குபவர்கள் அரவிந்தன் (காலச்சுவடு), கவிதா முரளிதரன் மற்றும் வெளிரங்கராஜன்.

இட‌ம்:- டிஸ்கவரி புக் பேலஸ் (பாண்டிச்சேரி ஹெஸ்ட் ஹவுஸ்அருகில்)
மேற்கு கே.கே.நகர்,சென்னை-78

நாள்:- ஜூலை 2 , சனிக்கிழமை

நேரம்:- மாலை 6 மணி

நண்பர்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பு அனுப்ப இயலவில்லை. இந்த அறிவிப்பை அழைப்பாக ஏற்றுக்கொண்டு அனைவரும் கலந்துக்கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றேன்.

நன்றி !!!

தொடர்புகளுக்கு:-
விநாயக முருகன் 9841790218
விஜயமகேந்திரன் 9444658131
வேடியப்பன் 9940446650

.