Saturday, May 30, 2009

பேசும் கற்கள்

பேசும் கற்கள்
——————————————
இதுவரை
நாக்கின் அடியில்
ஒதுக்கி வைத்திருந்த
கூழாங்கற்களை
ஆற்றில் எரிந்து
திரும்பி நடக்கிறான்
திக்குவாய்
சிறுவனொருவன்.

இதுவரை
அடக்கப்பட்ட சிறுவனது
பேச்சுகளை சுமந்தபடி
வெளியில் வந்து
விழுகின்றன
கூழாங்கற்கள்.

இதுவரை
யார் யாரோ
துப்பிய கூழாங்கற்கள்
யார் யாரோ பேசிய
பேச்சுகளை கவர்ந்து
தங்களுக்குள்
பேசத் தொடங்கின.

ஐந்து கவிதைகள் - நவீன விருட்சம்

நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் அழகிய சிங்கர் ஆசிரியராக இருக்கும் நவீன விருட்சம் இதழில் வெளியான எனது "ஐந்து கவிதைகள்" வாசிக்க...

இன்று முத‌ல்
----------------
வழிதப்பிய குறுஞ்செய்தியொன்று
ஒலித்தது.
வேணுகோபால் இறந்துவிட்டான்
உடனே கிளம்பி வா.
உண்மையில் வேணுகோபால்
என்று எனக்கு யாரும் இல்லை.
இன்று முத‌ல்
அந்தக் கவலையும் தீர்ந்தது.

முத‌ல் நிலவு
----------------
இறுக மூடிக்கிடக்கும்
அந்தக் குழந்தையின்
கைகளை யாரோ
விடுவிக்கிறார்கள்.

அந்தக் குழந்தை
தன்னோடு கொண்டு வந்த
நட்சத்திரங்கள், நிலவுகள்
உ…ரு…ண்…டோடுகின்றன.

கனவில்
கடவுள் கோபிக்கிறார்.
குழந்தை சிரிக்கிறது.

இரண்டாம் முறையும்
நட்சத்திரங்கள், நிலவுகளை
தருகிறார்.

அது ஒருபோதும்
முதல் நிலவு
முதல் நட்சத்திரங்கள்
போல் இருந்ததில்லை.

யாரும் சொல்லாத கவிதை
----------------------------------
இதுவரை யாரும் சொல்லாத
கவிதையை
எடுத்துக்கொண்டு
திரும்பினேன்.

அ‌ங்கே
நீ இல்லை.
நான் இல்லை.
யாரும் இல்லை.
எதுவும் இல்லை.
எதுவுமற்ற அதுவும் இல்லை.

நீட்சி
------

முன்பொருநாள்
எவனோ ஒருவன்
தன் சதைகளை அரிந்து
கழுகுக்கு போட்டானாம்.
அவனது நீட்சியென்று
அடுக்குமாடி குடியிருப்பின்
என் ஜன்னலோரம்
காத்துக்கிடக்கின்றன
அதே புறாக்கள்.

---------------------------------
பாரியின் காலத்திலிருந்து
கிளம்பி வந்த
கொடியென்று
இருசக்கரவாகனம் மீது
படர்ந்தெழுந்திருந்தது.
எடுக்கவா தொடுக்கவா
என்றது
என்னைப் பார்த்து.

நன்றி...!
-என்.விநாயக முருகன்

சாரு நிவேதிதா - செம ஃபிகரு...

சாருவுக்கு நான் எழுதிய முத‌ல் கடிதமொன்று இங்கே...

http://www.charuonline.com/May2009/Semapikaru.html

நன்றி...!
-என்.விநாயக முருகன்

எல்லோருக்குமாய் - கீற்று.காம் கவிதை

கீற்று இதழில் வெளியான எனது "எல்லோருக்குமாய்" கவிதையை வாசிக்க..

http://www.keetru.com/literature/poems/vinayagam_1.php

எல்லோருக்குமாய்
————————————————
சற்றுமுன்
தொலைபேசியவள்
தான் யாரென்று
இறுதிவரை சொல்லவேயில்லை.
எனக்கு தேவையுமில்லை.
புகழ்பெற்ற வங்கியின்
கிளைநிறுவனம் சொல்லி
தனிநபர் கடன்
வாங்கச் சொன்னாள்.
தனிநபர் கடன்களின்
சாதகங்களைப் பட்டியலிட்டாள்.
தனிநபர் மேம்பாடு
நாட்டின் மேம்பாடு என்றாள்.

என் பதிலுக்கும்
காத்திராமல்
துண்டிக்கப்பட்டது
புன்னகைத்த குரலொன்று.

பிடித்தப் பாடலை
பதிவு செய்யும்படி
பல குரல்களில்
பாடிக் காட்டியது
நட்புக் குரலொன்று.

நலமாவென்று
தொடங்கிய குரலொன்று
கட்டணச் சலுகைகளை
பட்டியலிட்டது.

சில வந்தனங்கள்
சில வாழ்த்துகள்
சில புன்முறுவல்கள்
சில நலம்விசாரிப்புகள்
சில நட்புக்குரல்கள்
எங்கோ எப்போதோ
யாரோ யாருக்கோ
பதிவுச் செய்யப்பட்ட
குரல்கள்
பொதுவிதியாக
பொருந்திவிடுகின்றன.
சில நேரங்களில்
எல்லோருக்குமாய்.
எனக்கானவை அல்ல இவையென்று
கடந்துச்செல்லவும் இயலவில்லை.


நன்றி...!
-என்.விநாயக முருகன்

தெகிமாலா நாட்டு சரித்திரம் - கீற்று.காம் சிறுகதை

கீற்று இதழில் வெளியான எனது "தெகிமாலா நாட்டு சரித்திரம்" சிறுகதையைப் படிக்க

http://www.keetru.com/literature/short_stories/vinayakamurugan.php


நன்றி...!
-என்.விநாயக முருகன்

ஒரு கிராமிய விளையாட்டு - உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளியான எனது "ஒரு கிராமிய விளையாட்டு" கவிதையை வாசிக்க...

ஒரு கிராமிய விளையாட்டு
இடது கையால்
பம்பரம் பிடித்து
வலது கையால்
வேகமாகக் கயிறு
சுற்றுகிறான்.
பாவு நூலின்
இடையே
ஊடு நூலை
தறியில் அடிக்கும்
தேர்ந்த நெசவாளியின்
லாவகமென.
இடையிடையே
அப்பீ‌ஸ் சத்தம்.
தாமதித்து அப்பீ‌ஸ்
சொன்னவன்
முதுகில் விழுகிறது
ஆக்கர் கரும்புள்ளி.
கரும்புள்ளி சிறுவன்
மீண்டும் சுழற்றுகிறான்
மவுஸை.
தோல்வியை மாற்றியெழுத.
மாற்றப்பட்ட விதி
திரையில் விரிகிறதுநன்றி...!

-என்.விநாயக முருகன்

"காத்திருத்தல்" மற்றும் "எச்ச‌ங்கள்" - உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளியான எனது "காத்திருத்தல்" மற்றும் "எச்ச‌ங்கள்" கவிதையை வாசிக்க...

காத்திருத்தல்
வீட்டுக்கு மாடியில்
அத்துவானக் காட்டில்
காக்கைகள் பறந்தன.

“காக்கைகள் கரைந்தால்
விருந்தாளிகள் வரக்கூடும்”

செத்துப்போன அப்பா
சொன்னது.
செத்துப்போன மாமா
சொன்னது.
செத்துப்போன அக்கா
சொன்னது.
செத்துப்போன எல்லோரும்
சொன்னது.

காக்கைகள்…விருந்தாளிகள்
விருந்தாளிகள்…காக்கைகள்
காக்கைகள்…விருந்தாளிகள்
விருந்தாளிகள்…காக்கைகள்

மற்றும் சற்றுமுன்
இறந்துப்போன நான்.

எச்ச‌ங்கள்
அடுக்குமாடிக் குடியிருப்பின்
வெட்டுப்பட்ட மரத்தடியில்
இறைந்து கிடக்கின்றன.
பறவைக் கூடுகளின்
எச்ச‌ங்கள்.
வாழ்ந்து கெட்ட
வீட்டின்
ஏலம் வந்த பொருட்களின்
மிச்சங்களாக..நன்றி...!

-என்.விநாயக முருகன்

"வித்தை" மற்றும் "என் கடல்வெளி நினைவுகள்" - உயிரோசை கவிதை

நான் மிகவும் நேசிக்கும் கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஆசிரியராக இருக்கும் உயிரோசை இதழில் வெளியான எனது "வித்தை" மற்றும் "என் கடல்வெளி நினைவுகள்" கவிதையை வாசிக்க...

வித்தை
அவன் ஒரு கழைக்கூத்தாடி
ஆறடி உயரம்.
பதினைந்த‌ங்குல விட்டத்தில்
குறுக்கி நுழைகிறான்.
அறுபதடி அந்தரத்தில்
அந்தப் பக்கமும்
இந்தப் பக்கமுமாய்…
ஏழங்குல கத்தி
உண்டு செரிக்கின்றான்
கண்கட்டி வீசுகிறான்
கழுத்துக்கு ஓரங்குலம் மட்டுமே.

அதைவிட அதிசயமாய்…..….….
......
......
ஐம்பது காசுகளில்
ஒரு நாள்
உயிர் தப்பும் வித்தை.

என் கடல்வெளி நினைவுகள்
இளஞ்சூடாய் கைகளில்
இறங்கின.
அப்பா சொன்ன கதைகள்.
ஆறெங்கும் அ‌ஸ்தியாய்
வழிந்தோடின
அப்பா சொன்ன கதைகள்.

பெருநகர காலலைகளில்
அலைபாயும் ஆசைகளாய்.
இப்போதும் தட்டுப்படுமா
அப்பா சொன்ன கதைகள்
எ‌ன்று…
அதிகபட்ச ஆசையாய்…
அப்பாவே கிடைப்பாரென.நன்றி...!

-என்.விநாயக முருகன்