Sunday, November 2, 2014

ஹெர்குலிஸ்

மலைகள்.காம் நவம்பர் மாத இதழில் ஹெர்குலிஸ் என்ற சிறுகதை பிரசுரமாகியுள்ளது. 

சித்தப்பா அந்த சைக்கிளை வாங்கும்போது எனக்கு பத்து வயது. இப்போது நாற்பது வயது. முப்பது வருடத்துக்கு முன்பு கும்பகோணம் இப்படி இருப்பதுபோல இருந்ததில்லை. குறிப்பாக ரயிலடி. மகாமக (மாமாங்குளம் என்று உச்சரிப்பார்கள்) குளத்திலிருந்து நூல்பிடித்ததுபோல நேராக நடந்து வந்தால் ரயிலடிக்கு வந்துவிடலாம். காபி கடைகளும், குதிரை வண்டிகளும், ரிக்சா வண்டிகளும், புகையை கக்கிக்கொண்டே தெற்கு, வடக்காக ஓடும் கரி எஞ்சின் வண்டிகளும் ரயிலடியை சுற்றி இருக்கும் கரிமேடும், அங்கு குவிந்துகிடக்கும் எரிந்துப்போன நிலக்கரிகளை பொறுக்கவரும் மாதளம்பேட்டை சிறுவர்களும், அவர்களை விரட்டும் ரயில்வே போலீஸ்காரர்களும் என்று ஒருபுறம் ஏதோவோர் ஆதிகால சலனப்படம் போலவும், மற்றொருபுறம் நீலமேக மேம்பாலம், அதன் மீதேறிச்செல்லும் சோழன் பேருந்துகள், சுவர்களில் ரஜினி பட போஸ்டர்கள் என்று நவீனமும் கலந்துக்கட்டி நின்றிருந்த காலம். எதிர்ப்படும் எந்த மனிதர்களை பார்த்தாலும் வெற்றிலை எச்சிலும், காபி மணமும் தெறிக்கும். இப்போதுபோல ஊரைச்சுற்றி இருக்கும் நவக்கிரகங்கள் அப்போது பிரபலம் இல்லை. மகாமகத்திருவிழா அன்று வெளியூர் ஆட்கள் நிறையபேர் ஊருக்குள் வருவார்கள். மற்றபடி வழக்கமாக மார்கழி மாதம், கருடச்சேவை என்று வாரத்துக்கு ஒரு திருவிழா நடக்கும். சப்ளாங்கட்டை அடித்துக்கொண்டு பாகவத கதைகளை சொல்பவர்களை பார்க்கலாம். லாட்ஜுகளின் வாசலில் மல்லிகைச்சரம், உதட்டுச்சாயத்துடன் நமுட்டுச்சிரிப்பு சிரிக்கும் பெண்களை ரிக்சாக்காரர்கள் கிண்டல் செய்தபடியே போவார்கள். கரும்பு ஏற்றிக்கொண்டு தார்ச்சாலையில் செல்லும் டிராக்டர்களை துரத்திக்கொண்டே போய் டிரைவர்களுக்கே தெரியாமல் பின்புறமாக கரும்புக்கட்டை உருவி எடுக்கும் ஜகதல பிரதாபன்களும், வீடுகளில் திருடிவிட்டு செல்லும் திருடர்களும், ரயிலடியிலிருந்து பார்த்தால் தெரியும் ஊசிமாதா கோவில் பின்பக்கம் இருந்த அடர்ந்த வயல்களில் சாராயம் காய்ச்சும் ஆட்களுமாய் ஊர் இருந்த காலம் அது.

அப்பாவுக்கு பெரும்பாலும் வெளியூரில்தான் வேலை இருக்கும். நான் பிறந்தபிறகு அவருக்கு கும்பகோணத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில் இருந்த நாச்சியார்கோவில் என்ற ஊரில் ஓர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணிமாற்றம் கிடைத்திருந்தது. அந்நாட்களில் பேருந்தில் பத்து கிலோமீட்டர் பயணம் செய்தாலே உடம்பை நோகவைத்துவிடும். கிலோமீட்டருக்கு மூன்று பேருந்து நிறுத்தங்கள் வரும். அப்பா எவ்வளவோ கேட்டுப்பார்த்தும் கும்பகோணத்துக்குள் பணிமாறுதல் வாங்க முடியவில்லை. அப்போது புதியபேருந்து நிலையம் கட்டியிருக்கவில்லை. பழைய பேருந்துநிலையத்திலிருந்து வரும் சோழன் பேருந்தை ரயிலடி நிறுத்தத்தில் கைக்காட்டி மறித்தால் அரைமணிநேர பயணத்துக்கு பிறகு பித்தளை விளக்குகள் உற்பத்திக்கு பெயர்பெற்ற நாச்சியார்கோவில். நாச்சியார்கோவில் ஆரம்ப சுகாதார மையத்தில் காலரா, யானைக்கால் நோய்க்கு அரசு விநியோகம் செய்யும் த/அ என்று எழுத்துகள் பொறிக்கப்பட்ட மாத்திரைகளை கணக்குப்பார்ப்பதும், வெள்ளை நிற காலி கொசு மருந்து கேன்களை கணக்குப் பார்ப்பதும்தான் அப்பாவின் வேலை. மழை, வெள்ளம் வரும் நாட்களில் அலுவலகத்திலிருந்து ஜீப்பில் பயணித்து சுத்துப்பட்டு கிராமங்களுக்குச் சென்று மருந்து,மாத்திரைகளை விநியோகிக்க வேண்டும். விநியோகம் செய்தவற்றை முறையாக நோட்டில் கணக்கு எழுதவேண்டும். வேலைக்குச்செல்லும் அப்பா மாலையில் வீடு திரும்பும்போது குடித்துவிட்டுதான் வருவார். கையில் மீன்கள் இருக்கும். எங்கள் வீட்டில் பெரும்பாலும் இரவில்தான் மீன் சமையல் நடக்கும். அப்பா வேலைக்கு செல்லாத நாட்களில் அம்மா கோழிக்கறி எடுத்து வந்து குழம்பு வைப்பார். அப்பா வீட்டுக்கு வெளியே இருக்கும் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டிலை போட்டு உறங்கிக்கொண்டிருப்பார். கறிக்குழம்பு தயாரானதும் அப்பாவை எழுப்பி சோறு போடுவார். மாலையில் அப்பாவின் நண்பர்கள் யாராவது சைக்கிளோடு வருவார்கள். அவர்கள் சைக்கிள் ஓட்ட அப்பா கேரியரில் உட்கார்ந்துக்கொள்வார். அவர்கள் எங்காவது சீட்டுக்கச்சேரி நடத்த கிளம்பிவிடுவார்கள். பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருக்கும்போது அப்பா எல்லா வேலைநாட்களிலும் செய்வது போன்றே குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். சோற்றை போடும் அம்மா அழுதபடியே வந்து எனது பக்கத்தில் படுத்துக்கொள்வார்.

அப்பா வேலைக்கு சென்றிருந்த நாளொன்றின் பகல்பொழுதில் ராஜேந்திரன் உற்சாகமாக வந்தான். வீட்டு வாசலில் நின்றபடி என்னை பெயர் சொல்லி அழைத்தான். நான் வெளியே வந்து பார்த்தபோது அவன் கால்கள் தரையில் பாவியிருக்கவில்லை. சிறுவன் பக்கத்தில் நிற்கும் அவன் வளர்ப்பு நாய்க்குட்டிபோல என்னை பார்த்ததும் தரையிலிருந்து எம்பி எம்பி குதித்து தன்னோடு வரும்படி சைகை செய்தான். ராஜேந்திரன் மாதளம்பேட்டையில் குடியிருப்பவன். பெரியவனானதும் சைக்கிள் கடை வைப்பதுதான் தனது லட்சியம் என்று சொல்லி வாத்தியாரிடம் பிரம்படி வாங்கியவன். தெருவில் யார் சைக்கிளில் போனாலும் அந்த சைக்கிள் பின்னாலேயே கொஞ்சதூரம் வரை ஓடுவான். அந்தக்காலத்தில் ராஜேந்திரன் வயதையொத்த எங்களில் பலருக்கும் சைக்கிள் பைத்தியம் இருந்தது.

சித்தப்பா வீட்டுக்கு பக்கத்துத்தெருவில் ஒரு சைக்கிள்கடை இருந்தது. அந்த சைக்கிள்கடைக்காரர் எப்போதும் கட்டம் போட்ட அழுக்கு லுங்கி அணிந்திருப்பார். கிரீஸ் கறைகளை லுங்கியில் துடைக்கமாட்டார். அதற்கென்று தனியாக துண்டு வைத்திருப்பார். எப்போதும் சிவப்புநிற பார்டர் வைத்த மஞ்சள்நிற முண்டாபனியன் அணிந்திருப்பார். மடித்துக்கட்டிய லுங்கியுடன் குத்துக்காலிட்டு அவர் உட்காரும்போது அவரது வலுவான பின்னங்கால்களின் சதைகள் திரண்டு நிற்கும். அகன்ற தோள்களுடன் வலுவான புஜங்களுடன், நெஞ்சு நிறைந்த கருத்த சுருள் முடிகளோடு கடை முன்பு உட்கார்ந்து சக்கரத்துக்கு கோட்டம் எடுப்பது , பொத்தல் விழுந்த ட்யூப்களில் பஞ்சர் ஒட்டுவது, ஒவாராயிலிங்க் செய்வது என்று எந்நேரமும் அவர் ஏதாவதொரு வேலை செய்துக்கொண்டே இருப்பார். சைக்கிள் கடைக்கு பின்புறம் ஒரு காலித்திடல் இருந்தது. அதில் இரண்டு ப வடிவ இரும்பு உருளைகளை தலைகீழாக மண்ணில் அடித்து எதிரெதிரே இறக்கியிருப்பார்கள். இருட்டிய மாலை நேரங்களில் சைக்கிள்கடைக்காரர் அந்த இரும்பு உருளைகளின் மீது தொங்கிக்கொண்டு உடம்பை முறுக்கி பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார். கொழுத்த சதை திரட்சியில் பச்சை நரம்புகள் மின்னல்போல நெளிந்தோடும். தண்ணீர் பிடிக்கச்செல்லும் பெண்கள் மடித்து கட்டிய லுங்கியுடன் இரும்புபாரில் உடற்பயிற்சி செய்யும் சைக்கிள்கடைக்காரரையும் , வியர்வை ஊற்றெடுத்து ஓடும் அவரது உடம்பையும் பார்த்தபடியே செல்வார்கள். இரும்பு பொருட்களோடு வேலை செய்பவர்களுக்கு நாளடைவில் உடம்பு இரும்பாக மாறிவிடும் என்று ராஜேந்திரன் சொல்வான். ராஜேந்திரனுக்கு ஏனோ அந்த சைக்கிள்கடைக்காரரை மிகவும் பிடிக்கும். வளர்ந்து பெரியவன் ஆனால் சைக்கிள் கடை வைக்கப்போவதாக என்னிடம் சொல்ல நாங்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட எனது அம்மா என்னை அதட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் படித்துவிட்டு சைக்கிள்கடை வேலைக்கு போனால் என்ன? குழப்பமாக இருந்தது.

எனது அப்பாவுக்கு ராஜேந்திரனை பார்த்தாலே முகம் மாறிவிடும். ராஜேந்திரன் மூக்கில் எப்போதும் சளி ஒழுகிக்கொண்டிருக்கும். கால்சட்டை இடுப்பில் நிற்காது. ஒருகையால் டவுசரை இழுத்து விட்டுக்கொண்டே ஓடிவருவான். மறுகையில் ஏதாவது தின்பண்டம் இருக்கும். அல்லது ஒரு குச்சியால் சைக்கிள் டயரை ஓட்டிக்கொண்டே வருவான். சாலையில் நரிக்குறவர்கள் சென்றால் அவர்கள் பின்னாலேயே நடந்து வயலுக்கு போவான். அவர்கள் எப்படி குருவி சுடுகிறார்கள் என்பதை மறுநாள் வகுப்புக்கு வந்து எங்களிடம் விவரிப்பான். ராஜேந்திரன் மீது எப்போதும் ஒருவித கவுச்சிவாடை அடிக்கும். காக்கையை சுட்டு தின்பவர்கள் மீது அப்படித்தான் நாறும் என்று எங்கள் வகுப்பில் படிக்கும் சேதுராமன் அடிக்கடி சொல்வான். ராஜேந்திரன் வீட்டில் மாட்டுக்கறி சமைப்பார்கள். அதுகுறித்து சேதுராமனும், மற்றவர்களும் ராஜேந்திரனை அடிக்கடி கிண்டல் செய்வார்கள். ஆனால் ராஜேந்திரன் அவர்களுடன் சண்டைக்கு போகமாட்டான். நான் ஆடு,கோழி, மீன் சாப்பிடும் எங்களை சேதுராமன் கிண்டல் செய்யமாட்டான். ஒருமுறை ராஜேந்திரனிடம் “நீங்க ஏன் மாட்டுக்கறி சாப்பிடுறீங்க?” என்று கேட்டேன். அது தனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது என்றும், எங்க வீட்டில் வேறு கறி எதுவும் எடுப்பதில்லை என்றும் சொன்னான். “ஆட்டுக்கறி சாப்பிட்டதே இல்லையா?” என்று வியப்புடன் கேட்டேன். “சாப்பிட்டிருக்கேன். தீபாவளி அன்னைக்கு மட்டும் எங்க வீட்டில் ஆட்டுக்கறி வாங்குவாங்க” என்று சொன்னான். அதன்பிறகு மாட்டுக்கறி குறித்து நாங்கள் அதிகம் எதுவும் பேசிக்கொள்வதில்லை. நான் ராஜேந்திரனிடம் பழகுவது சேதுராமனைபோலவே எனது அப்பாவுக்கும் பிடிக்காது. ஒருமுறை ராஜேந்திரனோடு சேர்ந்துக்கொண்டு கோனார் தோப்பில் மாங்காய் அடித்தேன். விஷயம் கேள்விப்பட்ட எனது அப்பா என்னை தெருவிலேயே நிற்க வைத்து செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார். அம்மாவும் வந்து என்னை அடிக்க ஆரம்பித்தபிறகுதான் அப்பா அடிப்பதை நிறுத்தினார். என்னை அடித்தபிறகு அம்மாவும் என்னோடு சேர்ந்து அழுதார். இனிமேல் நான் ராஜேந்திரனோடு சேரக்கூடாது என்று திட்டியபடியே என்னை வீட்டுக்குள் அழைத்து வந்தார்.

ராஜேந்திரன் சொல்லித்தான் எனக்கு விஷயம் தெரிந்தது. சித்தப்பா புதுசைக்கிள் வாங்கிவிட்டார் என்று. சித்தப்பா வீட்டு வாசலில் புதுசைக்கிள் நிற்பதாக தலையில் கைவைத்து சத்தியம் செய்தான். நான் மெதுவாக வீட்டின் பின்புறம் எட்டிபார்த்தேன். அம்மா கொல்லையில் பாத்திரங்கள் கழுவிக்கொண்டிருந்தார். சித்தப்பா வீட்டுக்கு போனால் எனது வீட்டில் அடிவிழும். அதுவும் ராஜேந்திரனுடன் சேர்ந்துப்போனால் கொன்றேவிடுவார்கள். ஏன் அப்பாவுக்கு எனது நண்பன் ராஜேந்திரனையும், சித்தப்பாவையும் பிடிக்கமாட்டேங்குது என்று வெகுநாள் வரை எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தேன். அம்மா முதுகை காட்டியபடி கொல்லையில் உட்கார்ந்திருக்க விளையாட போறேம்மா என்று சொல்லிவிட்டு நானும், ராஜேந்திரனும் தெருவில் இறங்கி மறைந்தோம். நான்கைந்து தெருக்கள் தள்ளியிருந்த எனது சித்தப்பா வீட்டுக்கு ஆர்வத்தோடு ஓடினோம். சித்தப்பா ரயிலடியிலிருந்து மகாமக குளம் செல்லும் வழியிலிருந்த பவர்லைட் சோப் தயாரிக்கும் கம்பெனி பக்கத்தில் சொந்தமாக மருந்துக்கடை வைத்திருந்தார். சித்தப்பாவுக்கும்,சித்திக்கும் திருமணம் ஆகி ஐந்து வருடங்கள் இருக்கும். பிள்ளைகள் இல்லை. சித்தப்பா அழகன் என்றால் சித்தி பேரழகி.

சித்தப்பா வீட்டின் தெருவில் நுழையும்போது தூரத்திலிருந்தே சைக்கிளை பார்க்க முடிந்தது. திண்ணைக்கு சற்றுத்தள்ளி கம்பீரமாக நின்றிருந்தது அந்த சைக்கிள். குதிரைக்குட்டியின் உறுதியான எலும்புக்கூடுபோல அந்த இரும்பு வாகனம் நின்றிருந்தது. பச்சைநிறத்தில் இருந்த இருக்கையில் கைவைக்க கை பொதிந்துப்போனது. கைகள் கூச்சமாகவும்,உடல் சிலிர்ப்பாகவும் இருந்தது. அப்படியே அந்த பஞ்சுப்பொதியை கையால் அமுக்கிக்கொண்டே இருக்க வேண்டும்போல தோன்றியது. சைக்கிளின் முன்பாரில் பச்சை நிற லெதர் சுற்றப்பட்டிருந்தது. தோலுறையின் ஏழு இடங்களில் சின்ன பொத்தல் போட்டு சின்ன அலுமினியவளையங்கள் அடித்து அந்த இடத்தில பொன்னிற பட்டுக்குஞ்சத்தால் முடிபோடப்பட்டு கட்டப்பட்டிருந்தது. இரும்பு ரிம்களில் சூரிய வெளிச்சம் பட்டு கண்ணை கூச வைத்தன. ஹெட்லைட் மீது இருந்த மஞ்சள்நிற துணி மட்டும் பொருத்தமற்றதாக தெரிந்தது. அதையும் பச்சை நிறத்தில் வாங்கியிருக்கலாம் என்று தோன்றியது.

அப்படியே சைக்கிளின் மற்ற பகுதிகளை நோட்டம் விட்டேன். முன்பாரிலிருந்து முக்கோண வடிவில் சரிவாக இறங்கியிருந்த கம்பியில் யாரோ ஒரு மாவீரன் ஒரு காலை நிலத்தில் அழுத்தமாக ஊன்றி முழங்காலிட்டு அமர்ந்திருந்தான். அந்த மாவீரன் உடல் அவ்வளவு உறுதியாக அழகாக இருந்தது. அவன் சற்று தலையை தாழ்த்தியிருந்தான். அவனது தோள்பட்டையில் உலக உருண்டை இருந்தது. அப்படி ஒரு வசீகர படத்தை நான் அதற்கு முன்னால் பார்த்ததே இல்லை. நான் அந்த அட்லஸ் சைக்கிளை பார்த்து பிரமித்து நின்றிருக்க வீட்டுக்குள்ளிருந்து சித்தி கொலுசு சத்தம் ஒலிக்க வந்தார். எங்கள் பின்னால் சைக்கிள்பெல் சத்தம் கிணிங் கிணிங்கென்று ஒலித்தது. திரும்பி பார்த்தோம். தெருமுனையில் சைக்கிள்கடை வைத்திருப்பவர்தான்.

“என்ன ராசு? புது சைக்கிள் இறக்கிட்டே போல?” என்று சிரித்தபடியே எங்களை கடந்துப்போனார். திரும்பி பார்த்தால் இப்போது சித்தி பக்கத்தில் சித்தப்பாவும் நின்றிருந்தார்.

“ஏன் நாங்க எல்லாம் சைக்கிள் வாங்கக்கூடாதா?” என்று சித்தப்பா கேட்டார்.

“அட சைக்கிள் வாங்கினது சந்தோஷமுன்னு சொன்னேன்ப்பா” என்று சொல்லிவிட்டு அவர் சைக்கிளை மிதித்தபடி பக்கத்து சந்தில் மறைந்தார்.

சித்தி என்னையும், ராஜேந்திரனையும் உள்ளே கூப்பிட்டார்கள். ராஜேந்திரன் என்னோடு சேர்ந்து சித்தப்பா வீட்டுக்குள் நுழைய தயங்கினான்.

“சரிதான் கிடக்கு வாடா பெரிய மனுஷா” என்று சித்தி ராஜேந்திரனை கிண்டல் செய்தார். அவனுக்கு கூச்சமாக இருந்தது.

“என்னடா ஸ்கூல் போகலையா? ரெண்டு பேரும் இங்க சுத்திக்கிட்டு இருக்கீங்க?” சித்தப்பா கேட்டார்.

“இன்னைக்கு லீவ் சித்தப்பா”

சித்தி எங்களுக்கு மணக்க மணக்க காபி போட்டு கொடுத்தார்கள். காபி குடித்துவிட்டு திண்ணைக்கு வந்து அந்த புது சைக்கிளையே அதிசயமாக பார்த்தபடி நின்றோம். சித்தப்பா வீட்டிலிருந்து திரும்பிவரும்போது, “உங்க சித்தி ரொம்ப நல்லவங்கடா. சித்தப்பாதான் மோசம்” என்று ராஜேந்திரன் என்னிடம் சொன்னான். காரணம் எனது சித்தப்பா அவர் முன்பு எங்களை சைக்கிளை தொடக்கூட அனுமதிக்கவில்லை. அதட்டிக்கொண்டே இருந்தார். எங்களுக்கு வருத்தமாக இருந்தது. சைக்கிளில் பார்த்த அந்த மாவீரனின் உருவம் பற்றி ராஜேந்திரனிடம் கேட்டேன். அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்று ராஜேந்திரன் சொன்னான். நான் நம்பவில்லை. அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி. இவன் ஏதோ அடித்துவிடுகிறான். ஒருவேளை அந்த வீரனின் பெயர் அட்லஸ் என்றாலும் இவனுக்கு எப்படி அது தெரியும்?

“அட்லஸ் என்பது சைக்கிள் கம்பெனி பெயர். மனுஷனுக்கு எல்லாம் அப்படி பெயர் வைப்பாங்களா?” என்று கேட்டேன். அவன் முழித்துவிட்டு அப்படித்தான் எங்க பேட்டைல இருக்கற ஒரு அண்ணா சொன்னார். அவர் இங்க்லீஷ் எல்லாம் நல்லா பேசுவார் என்றும் சொன்னான். அதைப்பற்றி மேலும் பேச விவாதிக்க எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் அந்த தோளில் உலகை சுமக்கும் வசீகர உருவம் எனக்கு பிடித்திருந்தது. பெரியவன் ஆனால் அந்த அட்லஸ் உருவம் போலவே எனது உடலும் மாறும் என்று தீர்மானமாக நம்ப ஆரம்பித்தேன். இந்த அட்லஸ் பெண்ணாக பிறந்தால் எப்படி இருக்குமென்று யோசிப்பேன். கண்டிப்பாக அவள் இப்படி பலசாலியாக இருக்கமாட்டாள். ஆனால் பேரழகியாக இருப்பாள். சிவப்பாக, மேலுதட்டின் மேல் சின்ன மச்சத்தோடு, சாயம் பூசாத ஆனால் சிவந்த உதட்டுடன், காதில் சின்ன ரோஜாப்பூ வைரக்கல் பதித்த தோடுடன், தலையில் இருக்கும் மல்லிகைச்சரம் முன்புற தோளில் புரள நடந்துவருவாள். எனக்கு ஒருக்கணம் சித்தியின் முகம் நினைவுக்கு வந்தது.

சித்தப்பா வாங்கிய அந்த புதுசைக்கிளை பார்ப்பதற்காக நானும், ராஜேந்திரனும் ஏதாவது சாக்கு வைத்துக்கொண்டு தினமும் அவர் வீட்டுக்கு செல்ல ஆரம்பித்தோம். நாங்கள் செல்லும்போதெல்லாம் சித்தப்பா அந்த புதுசைக்கிளை துடைத்துக்கொண்டே இருப்பார். சின்ன தண்ணீர் பக்கெட்டில் துணியை போட்டு பிழிந்தெடுத்து நிதானமாக சைக்கிளின் ஒவ்வொரு அங்குலத்தையும் பார்த்து பார்த்து துடைப்பார். சைக்கிள் டயரில் கூட மண் இருப்பது அவருக்கு பிடிக்காது. மழையில் நனைந்த பனைமரத்தின் நிறத்தில் டயர் எப்போதும் கருப்பாகவே இருக்கும். ஒருவேளை இவர் சைக்கிளை தரையில் விடாமல் ஆகாயத்தில் விடுகிறாரோ என்றுகூட தோன்றும். வாங்கும்போது எப்படி இருந்ததோ அதேபோலவே ஒருவருடம் ஆகியும் சைக்கிள் புதிதாக இருந்தது. சித்தப்பா பக்கத்தில் ஒரு மரப்பெட்டி இருக்கும். அதில் கிரீஸ், எண்ணெய் கேன், சின்ன, சின்ன ஸ்பேனர்கள் உப்புத்தாள் எல்லாம் இருக்கும். சித்தப்பா கருப்பு உப்புத்தாள் வாங்க மாட்டார். அது கொஞ்சம் முரட்டுத்தனமாக இருக்கும். வெள்ளையும், மஞ்சளும் கலந்த நிறத்தில் ஒருவித மென்மையான உப்புத்தாளே எனக்கும் பிடிக்கும். அதைத்தான் அவரும் பெட்டியில் வைத்திருப்பார். புதுசைக்கிளுக்கு அந்த உப்புத்தாள் அநேகமாக தேவைப்படாது. அதை ஏன் வாங்கி வைத்திருக்கார் என்று நினைத்துக்கொள்வேன். சக்கரத்தில் இருக்கும் ஒவ்வொரு போக்ஸ் கம்பிகள் மீதும் மடக்கிய துணியை வைத்து ரம்பத்தால் மரத்துண்டை அறுப்பது போல தேய்த்து துடைப்பார். அதற்கே அரைமணி நேரம் ஆகும். சித்தப்பா கடைக்கு சென்று சைக்கிளுக்கு காற்று அடிக்க மாட்டார். காற்று அடிக்கும் பம்பு வாங்கி வைத்திருந்தார். விசுக்விசுக்கென அவர் காற்று அடிப்பதை பார்க்க சிரிப்பாக இருக்கும். எப்போது பார்த்தாலும் சைக்கிளை துடைத்துக்கொண்டே இருக்கும் சித்தப்பாவை பார்த்தால் ஒருவிதத்தில் எனக்கு சைக்கிள்கடை வைத்திருப்பவர் நினைவுக்கு வருவார். அவருக்கு அது தொழில். பலவிதமான சைக்கிள்களை கடையில் நிற்க வைத்திருக்கிறார். நாள் முழுவதும் சைக்கிளோடு புழங்குகிறார். இவருக்கு கூடவா சைக்கிள் பைத்தியம். அதுசரி சிறுவர்களாகிய எங்களுக்கே சைக்கிள் பைத்தியம் இருக்கும்போது பெரியவர்களுக்கு இருக்காதா?

பல வருடங்கள் முன்பு நடந்த அந்த சைக்கிள் பற்றிய நினைவுகளை எல்லாம் இப்போது அசைபோட காரணம் இருக்கிறது. இன்று காலையில் சென்னை கேகேநகரில் ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன். ஷேர்ஆட்டோ ஓட்டிகொண்டு வந்த யாரோ ஒருத்தன் சைக்கிள்காரனை இடித்து கீழே தள்ளிவிட்டான். நல்லவேளை சைக்கிள்காரனுக்கு பெரிய அடி எதுவும் இல்லை. ஆனால் சைக்கிள் முன்சக்கரம் நசுங்கி கிடந்தது. அந்த சைக்கிள் பார்க்க பொம்மை சைக்கிள் போல இருந்தது. ஐந்து வயது சிறுவன் கூட அநாயசமாக ஒருகையால் தூக்கிவிடுவான் என்று தோன்றியது. இப்போது வரும் எந்த சைக்கிளுமே பழைய அட்லஸ்போல பலம்வாய்ந்த சைக்கிள் இல்லையோ என்று தோன்றியது. அந்த பழைய அட்லஸ் சைக்கிள்தான் எவ்வளவு கம்பீரமானது? எவ்வளவு எடை மிக்கது? ஒருமுறை நானும், ராஜேந்திரனும் சைக்கிள்கடைக்காரனிடம் கெஞ்சி கூத்தாடி அட்லஸ் சைக்கிளை வாடகைக்கு எடுத்து வந்தோம். கடைக்காரன் லேசில் தரவில்லை. ராஜேந்திரனிடம் காசு இல்லை. அவன் வீட்டில் மூன்றுவேளை சமைப்பதே பெரிய விஷயம். நான்தான் தீனி வாங்கி தின்ன அம்மா கொடுத்த தினந்தோறும் கொடுக்கும் காசுகளை மிச்சம் பிடித்து வைத்திருந்தேன். அந்த காசை வைத்துக்கொண்டு வார இறுதியில் வாடகை சைக்கிள் எடுத்து ஓட்டுவோம். சின்ன பசங்க சைக்கிள் பழக என்று சின்ன சைக்கிள் ஒன்று இருக்கும். அதை பார்த்தாலே எனக்கு பிடிக்காத்து. அது ஏதோ சர்க்கஸில் வரும் பபூன் போல கோமாளியாக தெரியும். எனக்கு பெரிய சைக்கிள் ஓட்டத்தான் ஆசை. ஆனால் கால் எட்டாது. குரங்குப்பெடல் போட கேட்டால் கூட கடைக்காரர் தரமாட்டார். அதை எங்களிடம் கொடுத்தால் பெரும்பாலும் பெரியவர்களுக்கு வேறு வாடகை சைக்கிள் இருக்காது. தவிர பெரிய சைக்கிளை எடுத்துக்கொண்டு போகும் சிறுவர்கள் கற்றுக்கொள்ளும்போது சைக்கிளை கீழே போட்டு ஏதாவது சேதமடைந்தால் என்ன செய்வது? அதற்கு பயந்துதான் சிறுவர்களாகிய எங்களுக்கு எந்தக்கடையிலும் யாரும் பெரிய சைக்கிளை வாடகைக்கு தருவதேயில்லை.

ஆனால் அன்று ஏதோ பெரிய மனது வைத்து சைக்கிள்கடைக்காரர் எங்களுக்கு அட்லஸ் சைக்கிளை கொடுத்தார். நானும், ராஜேந்திரனும் அந்த சைக்கிளை ரயிலடி பின்னால் இருந்த குட்ஷெட்டுக்கு தள்ளிக்கொண்டுச் சென்றோம். அங்குதான் பகலில் கூட அவ்வளவாக ஆள் நடமாட்டம் இருக்காது. பெரும்பாலும் ரயில்வே போர்ட்டர்கள் அரிசி குடோன் முன்பு இருக்கும் ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் நன்றாக குறட்டைவிட்டு தூங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்களை தவிர வேறு யாரும் அங்கு வரமாட்டார்கள். நாங்கள் இருவரும் அங்குதான் சைக்கிளில் குரங்குபெடல் போட கற்றுக்கொண்டோம். சின்ன சைக்கிளை நாங்கள் அருமையாக ஓட்டுவோம். ஏன் கைகளை ஹேண்டில்பாரிலிருந்து எடுத்து அகல விரித்தபடியே கூட ஓட்டுவோம். ஆனால் பெரிய சைக்கிளை முதலில் ஓட்டப்பழகிக்கொண்டது அன்றுதான். அன்றுதான் ராஜேந்திரன் என்னிடம் திட்டமொன்றை சொன்னான். முதலில் எனக்கு பயமாக இருந்தாலும் அதில் இருந்த சாகசம் என்னை கவர்ந்தது. ஒரு பெரிய பாறாங்கல் அருகே சைக்கிளை கொண்டுச்சென்றோம். நான் சைக்கிளை பிடித்துக்கொள்ள ராஜேந்திரன் பாறாங்கல் மேல் ஏறி சீட்டில் உட்கார்ந்தான். ராஜேந்திரன் என்னை விட உயரம். ஆனாலும் அவனது கால்கள் பெடலை எட்டவில்லை. உடம்பை வலதுபக்கம் லேசாக சாய்த்தும் எட்டவில்லை. அவனுக்கு பயம் வந்துவிட இறங்கி என்னிடம் சைக்கிளை கொடுத்தான். நான் சைக்கிள் மீது உட்கார்ந்தபிறகுதான் தெரிந்தது. பெடலுக்கும் எனது காலுக்கும் இடையே நான்கு அடியாவது இடைவெளி இருந்தது. டேய் டேய் என்று பயத்தில் கத்த அவன் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் சிரித்தபடியே என்னை சைக்கிளின் கேரியரில் கைவைத்து என்னை அப்படியே முன்னால் தள்ளிவிட்டான். நான் பயத்தில் கத்தியபடியே அவ்வளவு பெரிய சைக்கிளில் பயணம் செய்யும் எலிக்குஞ்சுபோல முன்னால் சென்றுக் கொண்டிருந்தேன். முன்னால் வேறு பெரிய மண்சரிவு. சரிவில் வண்டி உச்சக்கட்ட வேகத்தில் இறங்கியது. எப்படி சைக்கிளை நிறுத்துவது? பிரேக் போட்டாலும் தரையில் காலை ஊன்ற முடியாது. தடுமாறிக்கொண்டிருக்க சைக்கிள் அப்படியே வலதுப்பக்கம் விழுந்தது. நான் தரையில் ரத்த சிராய்ப்புகளுடன் கிடக்க எனது தொடையின் மேல் அந்த கனத்த சைக்கிள் கிடந்தது. அப்போதுதான் அட்லஸ் சைக்கிளின் பலம் புரிந்தது. முரட்டு இரும்பை ஆலையில் உருக்கி வார்ப்புகளில் ஊற்றி தயார் செய்யப்பட்ட எல்லா அட்லஸ் சைக்கிள்களும் அப்போது ஒரே நிறத்தில்தான் இருந்தன. ஒரு துளிக்கூட பிளாஸ்டிக் இல்லை. இப்போதெல்லாம் கலர்கலராக நிறைய பிளாஸ்டிக் சைக்கிள்கள் வந்துவிட்டன.

அது போன்ற ஒரு பிளாஸ்டிக் சைக்கிளை ஓட்டி வந்த ஆளைத்தான் கேகே நகரில் பார்த்தேன். ஷேர் ஆட்டோ மோதியதில் ஜிம்னாஸ்டிக் செய்யும் பெண்களின் பாவனைபோல விநோதமான தோரணையில் உடம்பை வளைத்து கிடந்தது. அன்று அந்த அட்லஸ் வாடகை சைக்கிள் அவ்வளவு பெரிய மண்சரிவிலிருந்து கீழே விழுந்தும் ஹெட்லைட் மட்டும் உடைந்துப்போனது. அந்த வாடகை சைக்கிள் கடைக்காரன் எனது அப்பாவிடம் சொல்ல அன்று எனக்கு வீட்டில் பிரம்படி விழுந்தது. மறுநாள் எனக்கு காய்ச்சல் வந்தது. ஒரு வாரம் பள்ளிக்கூடம் செல்லவில்லை. எனது படுக்கையருகே அமைதியாக நடந்து வந்த அப்பாவை பார்த்து “எங்களை ஒரேடியா கொன்னுடுங்க” என்று அம்மா சீறிக்கொண்டு வந்தார். அப்பா சட்டையை எடுத்து அணிந்து மவுனமாக வீட்டை விட்டு வெளியே சென்றதையும் படுக்கையில் படுத்தபடியே பார்த்துக்கொண்டிருந்தேன். அதற்கு பிறகு அட்லஸ் சைக்கிளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கம் எப்படி மறைந்தது என்று நினைத்துப்பார்த்தால் சரியாக சொல்ல தெரியவில்லை.

இப்போது என்னிடம் போர்டு கார் இருக்கிறது. அட்லஸை விட பலமடங்கு கனத்த உருவம் கொண்ட அசுரன். சைக்கிள் மேலே விழுந்தால் கூட உயிருக்கு ஒன்றும் நேராது. ஆனால் கார் விழுந்தால்? சைக்கிளை விட கார்தானே வலிமையானது? ஒருநாள் ஈசிஆரில் இருக்கும் மாயாஜாலுக்கு படம் பார்க்க மனைவியோடு காரில் சென்றிருந்தேன். ஓர் இளைஞன் பல்சரில் நூறு கிலோமீட்டர் வேகத்தில் வந்து திரையரங்கு வாசலில் சடன்பிரேக் அடித்தான். பல்சரின் முன்சக்கரம் தாழ்ந்து பின்னிருக்கை சற்று உயர்ந்து நின்றது. பல்சரின் பின்னால் உட்கார்ந்திருந்த ஜீன்ஸ் அணிந்த அழகான இளம்பெண்ணொருத்தி வாவ் என்று அதீத திகைப்புடன் அவனை இறுக்கி கட்டிக்கொண்டாள். எனது மனைவி என்னிடம் “நீங்க ஏன் இருசக்கர வாகனம் வாங்கக்கூடாது?” என்று கேட்டாள். பெண்களுக்கு காரைவிட இருசக்கர வாகனம்தான் பிடிக்கிறது என்று எனக்கு அன்றுதான் தெரிந்தது. அன்றிலிருந்து கார் மீதான எனது பார்வை மாறிப்போனது. நான் பத்தாவது படிக்கும்வரை எனக்கு கிளர்ச்சியூட்டும் கனவொன்று அடிக்கடி வரும். ஏதாவது ஒரு பெண்ணை சைக்கிளின் முன்பக்கம் இருக்கும் முன்பாரில் உட்கார வைத்து நான் ஊருக்கு வெளியே தனியாக காடு,மலை என்று சைக்கிள் ஓட்டிச்செல்வது போல. அப்படி சைக்கிள் ஓட்டிச்செல்லும்போது அந்த பெண்ணின் உடலோடு எனது தொடைகள் உரசும்போது பெரும்பாலும் கனவிலிருந்து விழித்துக்கொள்வேன். உடம்பு வியர்த்து தொண்டை வறட்சியாக உணர்வேன். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தகிக்கும் அந்த வேட்கை அடங்காமல் தூக்கமும் வராமல் அவஸ்தையாக இருக்கும். இப்போது சைக்கிள் பற்றிய எந்த நினைவுகளும் என்னை வருத்தம் கொள்ள செய்வதில்லை. எப்போதாவது அபூர்வமாகவே கனவுகள் வரும். அதில் சைக்கிள் வராது. மனிதனுக்கு ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு பொருள் மீது காதல். ஒவ்வொரு காலத்தில் ஒவ்வொரு கனவுகள். வெளியில் சொல்லமுடியாத எத்தனையோ ஏக்கங்கள்.

சென்னையில் சைக்கிள் ஓட்டிச்சென்றால் சிரிப்பார்கள். சென்னையில் பெரும்பாலும் சேரிமக்களே சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. நான் அமெரிக்காவுக்கும்,ஜெர்மனிக்கும் அலுவலக வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். அங்கு எனது பிராஜக்ட் மேனேஜர்கள் சிலர் ஒருசில நாட்களில் சைக்கிளில் அலுவலகம் வந்துச்செல்வதை பார்க்க வியப்பாக இருக்கும். அமெரிக்கர்களுக்கு பிறகு சென்னையில் இருக்கும் விளம்புநிலை மனிதர்கள்தான் வெட்கப்படாமல் சைக்கிள் ஓட்டுகிறார்கள் என்பது எனது கண்டுபிடிப்பு. பொருளாதாரத்தில் முன்னேறிய மக்களுக்கும் சைக்கிள் பிடித்திருக்கிறது. ஏழைகளுக்கும் சைக்கிளே உற்றத்தோழன். ஏன் சென்னையில் இருக்கும் நடுத்தரமக்கள் பலருக்கும் சைக்கிள் வாங்கி ஓட்ட வெட்கமாக உள்ளது என்று யோசித்ததுண்டு. கேகேநகரில் இன்று காலை ஒரு சைக்கிள் விபத்தை பார்த்தேன் என்று சொன்னேன் அல்லவா? அந்த பொம்மை சைக்கிளை போன்றே மேலும் சில பொம்மை சைக்கிள்களை எனது வீட்டருகே பள்ளிச்சிறுமிகள் ஓட்டி கவனித்துள்ளேன். அந்த சைக்கிள்களில் பிஎஸ்ஏ என்று பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து திகைப்பாக இருந்தது. ஒருவேளை இப்போது உறுதியான முரட்டு இரும்பை விட கவர்ச்சியான வண்ண சைக்கிளைத்தான் மக்கள் விரும்புகிறார்களோ?

அட்லஸ் சைக்கிள் பற்றி நினைக்கும்போதெல்லாம் எனக்கு ஹெர்குலிஸ் என்ற இன்னொரு சைக்கிள் நினைவுக்கு வரும். இதுபற்றி அப்போது எங்களுக்குள் பெருந்த சண்டையே நடக்கும். அட்லஸ் சைக்கிளில் இருக்கும் மாவீரனின் லோகோவை சிலர் ஹெர்குலிஸ் என்று தவறாக நினைத்ததுண்டு. சேதுராமனின் அப்பா ஒரு சைக்கிள் வாங்கியிருந்தார். அந்த சைக்கிளின் பெயர் ஹெர்குலிஸ். எனக்கும்,ராஜேந்திரனுக்கும் ஏனோ ஹெர்குலிஸ் சைக்கிளை பிடிக்காது. ஆனால் சேதுராமன் எங்களை கிண்டல் செய்துக்கொண்டே இருப்பான். ஹெர்குலிஸ்தான் மாவீரன், அட்லஸ் வீரன் இல்லை என்று சொல்வான். எங்களுக்கு வரலாறு பாடம் எடுத்த சொக்கலிங்கம் சார்தான் அந்தக்கதையை எங்களுக்கு சொன்னார். அந்தக்கதையை கேட்டபிறகும் சேதுராமன் எங்களிடம் ஹெர்குலிஸ்தான் மாவீரன் என்றே தொடர்ந்து வாதிட்டான்.

முன்னொரு காலத்தில் இந்த உலகத்தில் பிரம்மாண்டமான, வலிமையான உடலை கொண்ட ஒரு மனித இனம் இருந்தது. அந்த இனத்திற்கு ‘டைடன்ஸ்’ என்று பெயர். அதில் இனத்தில் ஒருவன்தான் அட்லஸ்.

ஒருமுறை டைடன்ஸுகளுக்கும், கிரேக்க கடவுள்களுக்கும் பெரிய யுத்தம் ஆரம்பித்தது. அதில் டைடன்கள் அனைவரும் தோற்றுப்போய் கடவுளர்களால் தண்டிக்கப்பட்டனர். அவ்வளவு பெரிய தண்டனையை அட்லஸ் என்ற மாவீரன் தனது இனத்துக்காக ஏற்க தானாகவே முன்வந்தான். தனது தோளில் பூமியை தூக்கி சுமக்க வேண்டும் என்பதுதான் அட்லஸுக்குக் கிடைத்த தண்டனை. அட்லஸ் அந்த தண்டனையை ஏற்று பல பல யுகங்கள் தனது தோளில் பூமியை சுமந்துகொண்டு நின்றிருந்தான்.

ஒருநாள் இன்னொரு கிரேக்க மாவீரன் ‘ஹெர்குலிஸ்’ அட்லஸை சந்திக்க வந்தான். ஹெர்குலிஸ் கிடைத்தற்கரிய தங்க ஆப்பிள்களை தேடி அலைந்துக்கொண்டிருந்தான். ஆனால் அந்த ஆப்பிள்கள் இருக்குமிடத்தை அட்லஸ் மட்டுமே அறிவார். அதனால் அட்லஸ் ஹெர்குலிஸிடம் தான் சென்று அந்த ஆப்பிள்களை கொண்டு வருவதாகவும் அதுவரை பூமியை சுமக்கும்படியும் கேட்டுக் கொண்டார். அட்லஸைப் போலவே ஹெர்குலிஸும் பெரிய கனத்த உருவத்துடனும்,மாவீரனாகவும் இருந்ததால் பூமியை சுமக்க ஒப்புக்கொண்டான்.

பல யுகங்கள் கழித்து அட்லஸ் தங்க ஆப்பிள்களுடன் திரும்பி வந்தபோது, ஹெர்குலிஸ் பூமியை தூக்கமுடியாமல் வியர்த்து தடுமாறிக்கொண்டு இருந்தான். அப்போதுதான் அட்லஸுக்கு பூமியைத் தூக்கி சுமப்பது எத்தனை கடினமான காரியம் என்று புரிந்தது.

எதாவது தந்திரம் செய்து ஹெர்குலிஸையே பூமியை சுமக்கும்படி செய்துவிட்டுத் தான் சுதந்திர மனிதனாக இருக்கலாம் என்று அட்லஸ் நினைத்தான். ஆனால் அட்லஸ் மனதில் நினைத்தது ஹெர்குலிஸுக்குத் தெரிந்துவிடுகிறது. அட்லஸிடம் சற்று நேரம் மட்டும் இந்த பூமியை பிடித்துக்கொள். எனது ஒரு தோளில் இருந்து இன்னொரு தோளுக்கு மாற்றி வைத்துக்கொள்கிறேன். உதவி செய் என்று சொல்ல . அட்லஸ் அதை நம்பி ஹெர்குலிசிடம் இருந்து பூமியை வாங்குகிறான். பூமியை கொடுத்தும் ஹெர்குலிஸ் அங்கிருந்து ஓடிவிடுகிறான்.

திகைத்துப்போன அட்லஸ் வேறுவழியில்லாமல் யுகயுகமாக தனது பாரத்தை சுமந்தபடியே மலையாக சமைந்துவிடுகிறான். வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள மலைகள் ‘அட்லஸ் தி டைடன்’ என்றே அழைக்கப்படுகின்றன. அம்மலைகள் இன்றும் சொர்க்கத்தை தூக்கிப் பிடித்திருப்பதாக நம்பப்படுகிறது.

சொக்கலிங்கம் சார் எங்களிடம் சொன்ன கதை இதுதான். பல வருடங்கள் சென்றபிறகும் இன்றும் அந்த கிரேக்க கதை அதே காவியச்சுவையுடன் என்னை வசீகரிக்க வைக்கிறது. சில நாட்கள் சென்றபிறகு சேதுராமனின் தாத்தா அவனிடம் ஒரு கதை சொன்னதாக எங்களிடம் சொன்னான். அந்த புராணக்கதையில் ஒரு கடவுள் பன்றி அவதாரம் எடுத்து உலகத்தை தாங்கி பிடித்ததாக சொன்னான். பன்றி எப்படி உலகத்தை தூக்கமுடியும் என்று எதிர்கேள்வி கேட்டோம். அவனுக்கு சரியாக பதில் சொல்ல தெரியவில்லை.

எனது வாழ்க்கையில் மறக்கமுடியாத நாளென்று ஒன்றை சொல்ல வேண்டும். அது நான் எனது சித்தப்பாவின் அட்லஸ் சைக்கிளை எடுத்து ஓட்ட ஆரம்பித்த தினம். நன்றாக நினைவுள்ளது. அன்று அப்பா ஊரில் இல்லை. வேலைக்குச் சென்றிருந்தார். வேலைக்கு கிளம்பிச்செல்வதற்கு முன்பு “தம்பியாடி அவன். குடும்ப மானத்தையே வாங்கிட்டான்” என்று சொல்லிவிட்டு அம்மாவின் முடியை இழுத்துப்போட்டு அடித்தார். எதற்கு அம்மாவை அடிக்கிறார் என்று தெரியாமல் நான் நடுக்கத்துடன் சுவர்பல்லி போல கட்டிலின் மூலையில் தொடைநடுங்க ஒளிந்துக்கொண்டேன். எனது டவுசரில் இரண்டொரு சொட்டு சிறுநீர் கூட கழித்துவிட்டேன். அப்பா கோபத்துடன் கிளம்பி வேலைக்கு கிளம்பிவிட்டார். அன்று அப்பா கையில் டிபன்பாக்ஸ் இல்லை. வாசல்வரை சென்ற அப்பா “மானங்கெட்டவன். அவன் வீட்டுப்பக்கம் போனா உன்னை வெட்டி போட்டுடுவேன். எனக்கே தம்பி இல்லைன்னு ஆச்சு. உனக்கு என்னடி பாசம். பத்துமாசம் சுமந்து பெத்தவ மாதிரி” என்று ஊருக்கே கேட்கும்படி கத்திவிட்டு ரபப்ர் செருப்பை காலில் மாட்டிக்கொண்டு விடுவிடுவென தெருவில் இறங்கி நடந்துப்போனார்.

அவர் சென்றபிறகு நான் கட்டில் மூலையிலிருந்து வெளியே வந்தேன். எனது உடம்பு நடுங்கிக்கொண்டிருந்தது. அம்மா என்னை பார்த்து கைகளை நீட்டினார். நான் கோழிக்குஞ்சு போல குடுகுடுவென ஓடிச்சென்று அம்மாவின் கைகளுக்குள் எனது சின்ன உடலை புதைத்துக்கொண்டேன். அம்மாவின் இளஞ்சூடு எனக்கு ஆசுவாசமாக இருந்தது. வெகுநேரம் வரை விசும்பிக்கொண்டிருந்த அம்மா ஏதோ தீர்மானமாக எழுந்து முகம் கழுவி என்னை அழைத்துக்கொண்டு சித்தப்பா வீட்டுக்கு கிளம்பிச்சென்றார். சித்தப்பா வீட்டுக்குள் சோகமாக உட்கார்ந்திருந்தார். வீட்டு திண்ணையில் ஆண்களில் சிலர் ஏதேதோ பேசிக்கொண்டும், கத்திக்கொண்டும் உட்கார்ந்திருந்தார்கள். சிலர் அமைதியாக இருந்தார்கள். அவர்களில் பலர் எங்கள் தூரத்து உறவினர்கள். அக்கம்பக்க வீட்டிலிருந்த பெண்கள் ரகசியமாக ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து ஏதோ அவர்களுக்குள் கிசுகிசுத்துக்கொண்டிருந்தார்கள். திண்ணையில் உட்கார்ந்திருந்த ஆண்களை பார்த்த சில பெண்கள் அவசரமாக ஜன்னலை மூடிக்கொண்டார்கள். அம்மா வேகமாக சித்தப்பாவின் வீட்டுக்குள் நுழைந்தார். நேராக சமையல்கட்டுக்கு சென்று வயர்கூடையை எடுத்த அம்மா தெருவில் இறங்கி நடந்தார். தெரு முனையில் பெட்டிக்கடை இருந்தது. பால்பாக்கெட்டுடன் திரும்பி வந்த அம்மா வீட்டுக்குள் நுழைந்து காபி போட்டு மணக்க மணக்க எடுத்து வந்தார். சித்தப்பா குடிக்கவில்லை. திண்ணையில் அமர்ந்திருந்த ஆண்கள் அனைவரும் வீட்டுக்குள் வந்து சித்தப்பாவை வற்புறுத்தி குடிக்க வைத்தார்கள். சித்தப்பா அழுதபடியே காபியை குடித்தார். வந்திருந்தவர்கள் எல்லாரும் மெல்ல மெல்ல கலைந்துப்போனார்கள்.

நான் சித்தப்பாவின் வீட்டுக்குள் போகாமல் தெருவில் திண்ணையை ஒட்டி நின்றுக்கொண்டிருந்த சைக்கிள் பக்கத்திலேயே நின்றுக்கொண்டிருந்தேன். அந்த அட்லஸ் உருவத்தின் மீதான காதல் எனது மனதில் நாள்தோறும் வளர்ந்துக்கொண்டே சென்றது. அட்லஸ் சாதாரண ஆள் இல்லை. புலிவாலை கையால பிடிச்சு அந்தரத்துல சுழற்றி தரையில அடிப்பான். மலையை பெயர்த்து கடலுக்குள்ள வீசுவான் என்று ராஜேந்திரன் சொன்னதே மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இருக்காதா பின்ன. உலகத்தையே தோளில வச்சு தூக்கிட்டானே என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது சித்தப்பா உள்ளிருந்து வந்தார். அவர் முகம் வீங்கி கண்கள் கருத்துப்போய் கிடந்தன. அவர் கையில் சைக்கிளின் சாவி இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. சித்தப்பாதானா? காற்றில் மிதப்பதுபோல உணர்ந்தேன்.

சந்தோஷத்துடன் சாவியை வாங்கிக்கொண்டு குரங்குப்பெடல் போட்டுக்கொண்டே பக்கத்துக்கு தெருவுக்கு வந்தேன். ராஜேந்திரன் கண்கள் அகலவிரித்தபடியே ஆச்சர்யத்துடன் என்னை நோக்கி ஓடிவந்தான்.

“டேய்…எப்படிடா உங்க சித்தப்பா சைக்கிளை கொடுத்தார்?”

“அதாண்டா எனக்கும் தெரியல. ஒரே சந்தோஷமா இருக்கு”

சைக்கிள் ஹெட்லைட்டில் புதுமஞ்சள் துணி சுற்றியிருந்தது. இரண்டு வீல்களிலும் நடுவில் தூசிபடியாமல் இருக்க மாட்டிவிட்டிருந்த கலர்ப்பூ பார்க்க கவர்ச்சியாக இருந்தது. ராஜேந்திரன் முன்வீலில் இருந்த கலர்ப்பூவை தொட்டு பார்த்துவிட்டு பறவை றெக்கை மாதிரி கலர் கலரா இருக்குடா என்றான். நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்த தெருவில் எங்கள் பக்கவாட்டில் இருந்த சைக்கிள் கடை பூட்டிக்கிடந்தது.

“சைக்கிள கொடுத்ததுக்கு உங்க சித்தப்பா ஒண்ணும் சொல்லலையாடா?”

ராஜேந்திரன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று நான் அன்று பெரிதாக யோசிக்கவோ, கவலைப்படவோ இல்லை. என் கண்கள் எல்லாம் சைக்கிளின் மீதே பதிந்திருந்தன. நான் இருட்டும்போதுதான் சித்தப்பா வீட்டுக்கு சென்றேன். சித்தப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். சைக்கிளின் சாவியை சித்தப்பாவிடம் கொடுத்தேன்.

“நீயே வச்சுக்கடா. வீட்டுக்கு எடுத்துட்டுப்போ’ என்றார். எனக்கு திகைப்பாக இருந்தது. நம்பமுடியாமல் அவர் என்னிடம் கொடுத்த சாவியை வாங்கிக்கொண்டு வாசலுக்கு வந்தேன். ஹாலில் மாட்டியிருந்த சித்தப்பா திருமணப்போட்டோவை காணவில்லை. அடுத்தடுத்த நாட்களில் நானும், ராஜேந்திரனும் பூட்டிக்கிடந்த சைக்கிள்கடை பின்னாலிருந்த காலித்திடலில் உற்சாகமாக கத்தியபடியே சைக்கிளை மாற்றி மாற்றி கொண்டாட்டத்துடன் கால்வலிக்கும்வரை ஓட்டினோம்.