Wednesday, July 21, 2010

காற்றுக்கென்ன வேலி…கடலுக்கென்ன மூடி



கிம்கிடக் படங்களின் சிக்கலே இதுதான். அவரது படங்களில் மிக மிக அபூர்வமாகவே வசனம் இருக்கும். படம் முழுதும் அமைதியாக செல்லும். அந்த அமைதியே கத்திபோல மனதில் இறங்கும். நாலு நாள் தூங்க முடியாது. படத்தின் அமைதி காதுக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சற்று முன் ரயில் கடந்து சென்ற தண்டவாளம் போல மனது தடதடத்துக் கொண்டிருக்கும்.



டே-சாக் (Tae-suk ) க்கிற்கு ஒரு கெட்டப்பழக்கம். கெட்டப்பழக்கம் என்று கூட சொல்லமுடியாது. விநோத பழக்கம். ஆளில்லா வீட்டிற்குள் உரிமையுடன் நுழைந்து, அந்த வீட்டில் சிலநாட்கள் தங்கியிருந்து விட்டு திரும்பிவிடுவான். அந்த வீட்டிலிருந்து ஒரு தூசியை கூட களவாடமாட்டான். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் போலவே சமையலறையில் நுழைந்து சமையல் செய்வான். அவர்கள் படுக்கையில் படுத்துக்கொள்வான். அவர்கள் டாய்லெட்டை உபயோகப்படுத்துவான். அவர்கள் வீட்டை சுத்தம் செய்வான். இறைந்துக்கிடக்கும் அழுக்கு துணிகளை துவைத்து அயர்ன் செய்வான். கையோடு கொண்டுசெல்லும் டிஜிட்டல் கேமாராவால் அந்த வீட்டின் அறைகளில் நின்று அவனையே போட்டோ எடுத்துக்கொள்வான். வெளியூர் சென்று செல்லும் வீட்டின் உரிமையாளர் வருவதற்குள் வீட்டிலிருந்து மாயமாக மறைந்து கம்பி நீட்டி விடுவான். எதையும் திருடி செல்லமாட்டான்.

தினமும் டே-சாக் தெருவில் மோட்டார் சைக்கிளுடன் செல்வான். வீடுவீடாய் சென்று கதவுகளில் விளம்பர பேப்பர்களை தொங்கவிட்டு செல்வான். மாலையில் வீடு திரும்பும் நபர்கள் கதவை திறந்தால் அந்த விளம்பர பேப்பர்களை எடுத்து விடுவார்கள். அப்படி யாரும் விளம்பர பேப்பர்களை எடுக்காத பட்சத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் ஊரில் இல்லை என்று அர்த்தம். டே-சாக் அதுபோன்ற வீடுகளில் ஒன்றை தேர்வு செய்து இரண்டு நாள் தங்கிவிட்டு செல்வான். டே-சாக் உண்மையில் ஒரு வித்தியாசமான திருடன் இல்லை சைக்கோ இல்லை.. சொல்ல தெரியவில்லை. அவன் வித்தியாசமானவன். யாருக்கும் அவனால் தொந்தரவு இல்லை. நீங்கள் இல்லாத இடத்தில் அவன் இருப்பான். அவன் இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.

வழக்கம்போல டே-சாக் ஒரு பூட்டப்பட்டுள்ள வீட்டிற்கு செல்கிறான். பூட்டை கள்ளசாவி போட்டு திறக்கிறான். சமையல் செய்கிறான். துணிகளை துவைக்கிறான். புகைப்படம் எடுத்துக் கொள்கிறான். ஆனால் அந்த பூட்டப்பட்டுள்ள வீட்டில் அவனை தவிர இன்னொரு நபரும் இருப்பது அவனுக்கு தெரியாது. அவன் அந்த வீட்டிற்குள் வநதது முதல் அவன் செய்யும் எல்லா செயல்களையும் அமைதியாக கண்காணித்தபடியே ஒரு ஜோடி கண்கள் இருக்கின்றது. அந்த கண்களுக்கு சொந்தக்காரி ஷன்-யவா(Sun-hwa). அவள் கணவன் கோபத்தில் சண்டை போட்டு அவளை அடித்து துன்புறுத்தி வீட்டிற்குள் வைத்து பூட்டி வெளியூர் சென்று விடுகிறான். அது தெரியாமல் டே-சாக் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்.

டே-சாக் அந்த வீட்டின் அழுக்கு துணிகளை எடுத்து துவைக்கிறான். ஷன்-யவா அமைதியாக வீட்டின் இன்னொரு மூலையில் இருந்தபடி அவனது செயல்களை கவனிககிறாள். அவளுக்கு அவனது செயல்கள் ஆச்சர்யமாக இருக்கிறது.டே-சாக் சமைத்து சாப்பிட்டு வீட்டின் பின்புறம் கோல்ப் விளையாடுகிறான். டே-சாக்கிற்கு பிடித்த விளையாட்டு கோல்ப். ஷன்-யவா வீட்டின் கண்ணாடி சன்னல் வழியே அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரவு வருகிறது. அந்த வீட்டின் படுக்கையில் படுத்தபடி பாலியல் கிளர்ச்சியுடன் கனவு காண்கிறான். ஷன்-யவா அவனையறியாமல் படுக்கையறை வாசல்கதவு பின் நின்றபடி கவனிககிறாள். திடீரென சலனம் கேட்டு திரும்பும் டே-சாக் அங்கு அமைதியாக நின்றபடி அவனையே வெறித்தபடி பார்க்கும் ஷன்-யவாவை பார்த்துவிடுகிறான். திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுகிறான். ஆளில்லா வீட்டில் நுழைந்தால் இதென்ன ஒரு பெண் இருக்கிறாளே என்று மனதில் நினைத்தபடி மெதுவாக எழுந்து வாசலுக்கு ஓட பார்க்கிறான். தொலைபேசி ரிங் அடிக்கிறது. ஷன்-யவா மெல்ல நடந்து சென்று தொலைபேசியை எடுக்கையில் டே-சாக் வேகமாக அந்த வீட்டிலிருந்து நழுவ பார்க்கிறான். ஷன்-யவா பயங்கர சத்தத்துடன் கத்தியபடியே தொலைபேசியை வைக்க, அந்த சத்தத்தில் திகைத்துபோய் டே-சாக் நின்றுவிடுகிறான். கணவன் அடித்து துன்புறுத்தியதால் ஷன்-யவா கன்னம், உதடுகளில் ரத்தம் கட்டி வீங்கியிருக்கிறது. அவள் ஏக்கத்துடன் டே-சாக்கை பார்க்கிறாள். ஷன்-யவாவை பார்த்தபடியே
டே-சாக்கை அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறான்.

சாலையோரமாக மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு டே-சாக் சிந்திக்கிறான். அவன் மனம் தடுமாறுகிறது. அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த சோகமும்,ஏக்கமும் அவனை தடுமாற வைக்கிறது. மோட்டார்சைக்கிளுடன் மீண்டும் அந்த வீட்டிற்கு திரும்புகிறான். அவன் திரும்பும் முன் அந்த பெண்ணின் கனவன் அங்கு வந்து விடுகிறான்.

ஷன்-யவாவுக்கும் அவளது கணவனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அமைதியாக அடி உதையை வாங்கி அமர்ந்திருக்கும் ஷன்-யவாவுடன் அவளது கணவன் முரட்டுத்தனமாக உடலுறவு வைக்க முயல்கிறான். வீட்டின் பின்புறம் நிற்கும் டே-சாக் அந்த காட்சியை பார்த்தபடியே வெறியோடு கோல்ப் பந்தை மட்டையால் அடிக்கிறான். பந்து சத்தம் கேட்டு ஷன்-யவா அதிர்ச்சியுடன் கண்ணாடி சன்னல் வழியாக பார்க்கிறான். திடீரென தன் வீட்டிற்குள் ஒரு மூன்றாவது நபர் நுழைந்து கோல்ப் ஆடுவது கணவனுக்கு திகைப்பாக இருக்கிறது. ஆத்திரமடைகிறான். மனைவியை சந்தேகமாய் பார்க்கிறான். டே-சாக்கை திருடனென்று நினைத்து செல்போனில் போலீஸை அழைத்தபடியே பதற்றத்தோடு வெளியே வருகிறான்.டே-சாக் நிதானமாக கோல்ப் மட்டையால் பந்தை அடிக்க, பந்து ஷன்-யவா கணவனை பதம் பார்க்கிறது. டே-சாக் ஷன்-யவாவை பார்க்கிறான். அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாள். அடுத்த பந்தை எடுத்து குறிவைத்து அடிக்கிறான்.கையிலிருந்த செல்போனை பறிக்கிறது. ஷன்-யவாவின் கணவன் செயலிழந்து சுருண்டு கிடக்கிறான். டே-சாக் அமைதியாக அந்த வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் அமர்கிறான். ஆக்சிலரேட்டரை திருகி சப்தமெழுப்ப, ஷன்-யவா வீட்டை விட்டு வெளியே வந்து பின்சீட்டில் அமர்கிறாள். ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர்கள் இருவரும் பைக்கில் செல்கிறார்கள்.

பிறகு டே-சாக் தான் செல்லும் பூட்டிகிடக்கும் வீடுகளுக்கெல்லாம் ஷன்-யவாவையும் அழைத்துச் செல்கிறான். கொடுமைக்கார கணவன் பிடியிலிருந்து தப்பி வந்த ஷன்-யவாவுக்கு டே-சாக் மீது இனம் புரியாத காதல். பூட்டிகிடக்கும் ஆளில்லா வீடுகளில் அவர்கள் இருவரும் ஒன்றாக தங்குகிறார்கள். சமைக்கிறார்கள். துணி துவைக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். உறங்குகிறார்கள். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்வதேயில்லை. மவுனம் அவர்களது பொது மொழியாக இருக்கிறது. மவுனத்தால் இருவரும் ஆயிரம் விசயங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இருவரும் ஒருமுறை பூட்டி கிடக்கும் ஒரு வீட்டிற்கு செல்லும்பொது அந்த வீட்டின் உரிமையாளர் திடீரென வந்துவிடுகிறார். அவர் ஒரு குத்துச் சண்டை வீரர். டே-சாக்கை செமத்தியாக மொத்தி அவனுடன் ஷன்-யவாவையும் வெளியே துரத்தி விடுகிறான். இன்னொரு பூட்டிகிடக்கும் வீட்டுக்கு செல்லும்போது அங்கு ஒரு வயதான பெரியவர் அநாதையாக நுரையீரல் புற்றுநோயால் ரத்தம் கக்கி இறந்துகிடப்பதை பார்க்கிறார்கள். அதிர்ந்து போய் ஓட முயற்சி செய்யும் டே-சாக் கையை பிடித்து தடுக்கும் ஷன்-யவா அமைதியாக அந்த பெரியவரின் உடலை பார்க்கிறாள். இருவரும் சேர்ந்து அந்த பெரியவரை ஒரு துணியில் கட்டி ஒரு ஈமச்சடங்கிற்கு உரிய அனைத்து மரியாதையுடன் அவரை ஒரு சவப்பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் புதைத்துவிடுகிறார்கள்.

வெளியூர் சென்றிருக்கும் அந்த பெரியவரின் குடும்பம் முன்னதாக வீட்டிற்கு வந்துவிட அவர்கள் டே-சாக்கையும்,ஷன்-யவாவையும் திருடர்கள் என்று நினைத்து விடுகிறார்கள். இருவரையும் போலீஸில் பிடித்து கொடுத்து விடுகிறார்கள். பணத்துக்காக நடந்த கொலை என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. டே-ஷாக் கையிலிருக்கும் கேமராவில் அவன் படம் எடுத்த வீட்டின் புகைப்படங்களை எல்லாம் பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர்களுடன் விசாரணை செய்கிறார்கள். அவர்கள் எதுவும் திருடு போனதாக புகார் கொடுக்காத நிலையில் அந்த பெரியவர் இயற்கையாக மரணமடைந்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் சொல்கிறது.

ஆனால் ஷன்-யவாவின் கணவன் அவன் மனைவியை கடத்தி வந்துவிட்டதாக காவல்துறை மேலதிகாரியிடம் புகார் தருகிறான். காவல்துறை மேலதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து டே-சாக்கை ஜெயிலில் தள்ளுகிறான். வலுக்கட்டாயமாக வீட்டுக்கு வரும் மனைவியிடம் அன்பாக இருப்பது போல நடிக்கிறான்.ஷன்-யவாவுக்கோ டே-சாக் நினைவாகவே இருக்கிறது. முன்பு டே-சாக்குடன் சென்ற வீடுகளுக்கெல்லாம் அவள் தனியாக சென்று வருகிறாள்.



கிம்கிடக்கின் படங்களுகே உரிய ஒருவித புதிர்த்தன்மையோடு கூடிய குறியீடுகள் இங்குதான் ஆரம்பிக்கின்றது. ஜெயிலில் இருக்கும் டே-சாக் யார் கண்ணிலும் படாமல் மறைவாக இருக்க விரும்புகின்றான். அடிக்கடி ஜெயில் கதவுகளின் மேல், சுவர்களின் மேல் ஏறி மறைந்துக்கொள்கிறான். அவனை காணாமல் திகைக்கும் காவல்துறை அதிகாரிகள் அவனை கண்டுபிடிக்கும் போதெல்லாம் அடித்து துவைக்கிறார்கள். ஒருமுறை சாப்பாடு கொண்டுவரும் காவலர் பின்னால் மறைந்துக்கொள்கிறான். அவன் தப்பித்துவிட்டதாக நினைக்கும் காவலர் அதிர்ச்சியடைகிறார். காவலர் முதுகுக்கு பின்னால் மறைந்து நிற்கும் டே-சாக் நிழல் ஜெயில் சுவரில் விழுகிறது. அவனது நிழலசைவை வைத்து கண்டுப்பிடிக்கும் காவலர் அவனை அடித்து துவைக்கிறார்.

டே-சாக் இப்போதெல்லாம் காற்றை விட வேகமாக நகர நிழலை விட வேகமாக மறையும் பயிற்சி எடுக்கிறான். மனிதர்களின் கண்களிலிருந்து மறைய விரும்புகிறான். இந்த உலகிலிருந்து துண்டித்துக்கொள்ள விரும்புகிறான். நிழலை வைத்துக்கூட அவனை யாரும் கண்டுபிடிக்க முடிவதில்லை.ஜெயிலுக்குள் வரும் காவலர் டே-சாக்கை காணாமல் திகைத்து போகிறார். காவலர் இடதுப்பக்கம் திரும்பும்போது டே-சாக் அவரது வலதுப்பக்கம் மறைந்துக்கொள்கிறான். காவலர் வலதுபக்கம் திரும்பும்போது டே-சாக் அவரது இடதுப்பக்கம் மறைந்துக் கொள்கிறான். அவர் பின்னால் திரும்பினா‌‌‌ல் டே-சாக் மின்னல் வேகத்தில் அவரது முதுகிற்கு பின்னால் செ‌ன்று மறைந்துக்கொள்கிறான்.அவன் நிழலை கூட கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. டே-ஷாக் காற்றில் கரைந்துவிட்டான். அவன் காற்று. அவன் மனம். இரண்டுமே எடையற்றவை. அவனை ஸ்தூல உடலோடு பார்க்க முடியாது. அவனை பார்க்க சூட்சும உடல் வேண்டும். இந்த உலகில் டே-சாக்கை இரண்டு பேர் மட்டுமே பார்க்க முடியும்.ஒ‌ன்று டே-சாக் . இரண்டாவது ஷன்-யவா. டே-ஷாக் ஷன்-யவா சேர்ந்தார்களா? படம் அழகிய கவிதை போல முடிகிறது.

படத்தில் ஷன்-யவா டே-ஷாக் இடையே ஒருவரி கூட வசனம் இ‌ல்லை. அவர்களுக்குள் ஓராயிரம் காதல் இருக்கிறது. படம் முழுக்க அமைதி.அமைதி.அமைதி. படம் முடிந்ததும் அந்த அமைதி பார்வையாளர்களது மனதிற்கு இடம்பெயர்கிறது.

Tuesday, July 20, 2010

காந்தியை கொன்றது தவறுதான்

கடந்த சனிக்கிழமையன்று கே.கே.நகர் டிஸ்கவரி புக்பேலஸில் விஜயமகேந்திரனின் "நகரத்திற்கு வெளியே" சிறுகதைத்தொகுப்பு விமர்சனக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் துவக்கத்தில் ஒருவர் (அவர் பெயர் தெரியவில்லை) கவிதை நிகழ்த்துதல் என்ற அருமையான நிகழ்ச்சியொன்றை நடத்தி பிரமிக்க வைத்தார்.அதில் சி.மணியின் சி.மோகனின் கவிதையையும், ரமேஷ்பிரேதனின் "காந்தியை கொன்றது தவறுதான்" தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளையும் வாசித்து அற்புதமாக நடத்திக் காட்டினார். நவீன நாடகத்திற்கு கவிதை வரிகளை பின்புலமாக பயன்படுத்தியது மிகவும் புதுமையாகவும் இருந்தது.

ரமேஷ் பிரேதனின் "காந்தியை கொன்றது தவறுதான்" கவிதைத் தொகுப்பை அண்மையில் படித்தேன். இத்தொகுப்பு ஒரு விநோத அனுபவத்தை தருகிறது. வாசிக்கையில் இதொகுப்பிலுள்ள கவிதைகள், வாசகனிடையே ஒரு சுவாரசிய கண்ணாமூச்சி ஆட்டத்தை விளையாடுகிறது.

பிரிவு என்ற தலைப்பில் இருக்கும் ரமேஷ் பிரேதனின் கவிதை வரிகள் இப்படி தொடங்குகின்றன...

நீந்தி அடையமுடியாத தூரத்தில் நீ
உனது கப்பலை நிறுத்திவைக்கிறாய்


நூறு கவிதைகள் கொண்ட இத்தொகுப்பில் காந்தியை கொன்றது தவறுதான் என்ற தலைப்பில் பத்து கவிதைகள் உள்ளன.

அதில் பத்தாவது கவிதைதான் மேலே குறிப்பிட்ட நிகழ்ச்சியில் நவீன நாடகத்தில் நடித்து காண்பிக்கப்பட்டது.

காந்தியை கொன்றது தவறுதான் -10

நேற்று எனது கனவில்
காந்தி வந்தார்
எனது இருக்கையிலிருந்து எழுந்து
அவரை அமர்த்திவிட்டு
தரையில் அமர்ந்தேன்
என் கனவில் வந்த காந்திக்கு
வயது முப்பத்தாறு
என்னைவிட மூன்று வயது இளையவர்

ஆழ்ந்த இறுக்கத்தில் இருந்தார்
சில நிமிடங்களுக்குப் பிறகு
ஆழந்த மெளனத்திலிருந்து
கண்ணீர் வழிந்தது
சப்தமின்றி அழுதார்
மழை போலவோ
அருவி போலவோ
பேரோசை எழுப்பாத
நீரின் வீழ்ச்சி
சப்தமற்ற அழுகைதானே

என்னிடம் ஒரு துப்பாக்கியை எடுத்து நீட்டினார்
நான் பதற்றத்தோடு பெற்றுக்கொண்டேன்
தன்னை சுடச்சொல்லிச் சைகை செய்தார்
நான் தயங்கினேன்
பல மணி நேரம் வார்த்தையின்றி மன்றாடினார்
ஒரு கட்டத்தில் என்மீது
வெறித்த பார்வை நிலைகொள்ள
கண்களிலிருந்து முடிவற்று நீர்வழிய
ஆழ்ந்த இறுக்கத்தில் சமைந்தார்
வலி தாளமுடியவில்லை
அவரது நெற்றியில் பொருத்தி
வெடித்தேன்

திடுக்கிட்டு கனவிலிருந்து
வெளிப்பட்டேன்
உடம்பெல்லாம் பெரும் நடுக்கம்
விளக்கைப் போட்டேன்
சுவரில் கிழவர் சிரித்துக்கொண்டிருந்தார்

வியர்வை புழுக்கத்தில்
என் நெற்றி குங்குமம் வழிந்து
மூக்கின்மீது ஊர்ந்துகொண்டிருந்தது
நதையைப் போல
காந்தியின் ரத்தம்

இந்த கவிதையை தொகுப்பில் படித்தபொழுது சாதாரணமாக இருந்தது.ஆனால் நிகழ்ச்சியில் அவர் நடித்துக்காட்டிய விதம் அதிர வைத்தது. குறிப்பாக அவரது நெற்றியில் பொருத்தி// வெடித்தேன் என்ற வரிகளுக்கு அவர் துப்பாக்கி தோட்டா வாங்கி தரையில் மூர்ச்சையாக விழுந்த விதம் கவிதை வரிகளின் வீரியத்தை இன்னும் கூடுதலாக்கியது.“பலூன் வியாபாரி” என்ற இன்னொரு ரமேஷ் பிரதேனின் அழகிய கவிதையும் நடித்துக் காண்பிக்கப்பட்டது

பலூன் வியாபாரி

கோமாளிகள் நிறைந்த திருவிழாவில்
பலூன் வியாபாரியான நான்
குழந்தைகளின் குதூகலத்திற்கான
கோமாளியாகிறேன்

நான் வாய்கொண்டு ஊத
நீல நிறப் பாம்பு படம் எடுக்க
அதன் வால்முனையை முடிந்து
குழந்தையிடம் கொடுத்தேன்
கூட்டத்திற்குள் பலூன் பாம்பை
தூக்கிக்கொண்டு ஓடினாள்
கூட்டம் மருண்டு விலகியது

இன்னொருப் பிள்ளை
கீரிப்பிள்ளை பலூனைப் பெற்றுக்கொண்டு
பாம்பை துரத்தினாள்
கூட்டம் சிரித்து அலைமோதியது

பலூன்களால் கை கால் முகம் உடம்பு
எனச் செய்யப்பட்ட சாமி
தேரில் பவனி வந்தது
ஓடிச்சென்ற பாம்பு
சாமியின் கழுத்தில் சுற்றி
தலைக்கு மேல் படம் விரித்து
கீரியைப் பயமுறுத்தியது
குழந்தையின் கையைக் கடித்துவிட்டு
பிடிவிலக்கிக்கொண்ட கீரி
கூட்டத்துக்குள் தாவி ஓடியது

பாம்பையும் கீரியையும் இழந்த
இரு குழந்தைகள்
பலூன் வியாபாரியான என்னிடம் வந்தனர்
நான் அவர்களின் அழுத முகம் துடைத்து
ஆப்பிள் பலூன்களை தந்தேன்
தின்றபடி வீடு திரும்பினர்
நேற்றைய எனது கனவில்


நிகழ்ச்சிக்கு வந்திருந்த எத்தனை பேர் ரமேஷ்பிரதேனின் "காந்தியை கொன்றது தவறுதான்" தொகுப்பை படித்திருப்பார்கள் என்று தெரியாது. ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து இந்த கவிதைகளை பார்வையாளர்களிடம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். கவிதைகளை பொதுவெளியில் பகிரும்போது அதுவும் இதுபோன்ற நவீன நாடக உத்தியில் கொண்டு வரும்போது அதன் வீச்சும், இருப்பும் இன்னுமொரு பரிமாணத்தில் மின்னுகிறது.இதுபோல அடுத்தடுத்த கூட்டங்களில் மற்ற கவிஞர்களின் கவிதைகளையும் நவீன நாடக வடிவில் நிகழ்த்தி காட்டினா‌‌‌ல் உண்மையில் இதுவொரு ஆரோக்கியமான முயற்சியாக இருக்கும்

காந்தியை கொன்றது தவறுதான் தொகுப்பில் இருக்கும் பல கவிதைகளை அவ்வளவு சுலபமாக கடந்து செல்ல இயலவில்லை.ஒவ்வொரு கவிதையையும் மீண்டும்,மீண்டும் படிக்கிறேன்.கவிதைகளின் அதிர்வுகளிலிருந்து மீள்வதற்கு. ஆனால் ஒரு மாய சிலந்தி வலையில் சிக்கிக்கொண்ட பூச்சி போல வாசகர்களை வெளியே விட முடியாமல் உள்ளே உள்ளே இழுத்துச்செல்கிறது.


காந்தியை கொன்றது தவறுதான்
ரமேஷ் பிரதேன்
காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ 100

Friday, July 16, 2010

சிரிப்பு வருது

சிரிப்பு வருது

எங்கள் ஊரில் பைத்தியக்காரர்களின்
எண்ணிக்கை நாள்தோறும் பெருகுகிறது

சாலை சந்திப்புகளில்
சிக்னலிற்கு காத்திருக்கும்போது
ஏதாவது ஒரு பைத்தியத்தை
எதிர்கொள்ளாமல் இருந்ததில்லை

இன்னும் ‌சில பைத்தியங்கள்
காதில் ஏதோ மாட்டியபடி
தனக்குத்தானே பேசியபடியும்
வண்டியோட்டியபடியும் சிரித்தபடியும்

அலுவலகத்தில் சக பைத்தியமொன்று
நொடிக்கொருதரம் பங்குச்சந்தை
செய்திகளை வாசிக்கும்

இன்னொரு பைத்தியம்
காப்பீட்டு திட்டங்கள் பற்றி
நாள் முழுதும் பேசிக்கொண்டிருக்கும்

நேற்று ஒருவர் வீட்டுக்கு வந்திருந்தார்
அவருக்கு ஓட்டு போட்டால்
அடு‌த்த வருடமே
ஊரை சொர்க்கமாக்கி விடுவதாக
உறுதியளித்தார்
விடாமல் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

Tuesday, July 13, 2010

அப்படி ஒரு காலம்

நன்றி உயிரோசை 12.07.2010


உடல் நிலை சரியில்லாததால் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து வீட்டில் படுத்துக் கிடந்தேன். நண்பகல் இருக்கும். அபார்ட்மெண்ட் வாசலில் கூர்க்கா யாருடனோ கத்தியபடி வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டது. பால்கனியிலிருந்து கீழே பார்த்தேன். ஒரு சேல்ஸ்மேன் கையில் பஞ்சு பொம்மைகளுடன் கெஞ்சிக் கொண்டிருந்தான். பாவமாக இருந்தது. எங்கள் அபார்ட்மெண்டின் விதிகளில் ஒ‌ன்று சேல்ஸ்மேன்களைக் கண்டிப்பாக உள்ளே விடக்கூடாது.

"பொம்மை சார்…பொம்மை.." அந்தக் குரல் என்னை இருபது முப்பது வருடங்கள் முன்பு பால்யத்திற்கு அழைத்துச் சென்றது. அப்போதெல்லாம் இதுபோன்ற விதவிதமான குரல்கள் நண்பகலில் தெருக்களில் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

"பயனீ…பயனீய்" எ‌ன்று காலையில் ஒரு குரல் தெருவில் கேட்கும். ஒரு பெண் தலையில் மண்பானையுடன் பதநீர் விற்றுக்கொண்டு வருவாள். "ஓமத்திராகம்ம்ம்ம்" எ‌ன்று ராகத்துடன் இழுத்தபடியே தலையில் முண்டாசுடன் ஒருவர் சென்றுகொண்டிருப்பார். முண்டாசிற்கு மேல் கூடைக்குள் கண்ணாடி பாட்டில்கள் இருக்கும். பாட்டில்களில் ஓமத்திராவகம் இருக்கும். குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமப்பொடியை உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.ஓமப்பொடியைத் துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.ஓமத்திரவம் விற்பவனிடம் அரை மணி நேரமாவது மக்கள் பேசுவார்கள். அவன் குடிக்க தண்ணீர் கேட்பான். நீராகாரமே தருவார்கள். சிறுகூட்டம் அவனைச் சுற்றி இருக்கும். தேவைப்படுவோர் ஓமத்திராவகம் வாங்குவர்கள்.

அரைமணி நேரத்தில் "சாணேய்ய்…சாணேய்ய் புடிக்கலீயா.." இன்னொரு ராகம் கேட்கும். ஒரு முரட்டு மீசைக்காரர் தோளில் ஒரு இயந்திரம் தொங்கும். வீட்டில் உள்ள அரிவாள்மனை, கத்திகளுக்கு சாணை (கூர் ‌தீ‌ட்டுத‌ல்) பிடிப்பார்கள்.

"ஏம்பா அது ஆரு? மொகவெட்டு பார்த்தமாதிரி இருக்கே." திண்ணையில் அமர்ந்திருக்கும் ஒரு கிழவி நெற்றியில் கைவைத்து கூராக பார்க்கும். சாணை பிடிப்பவன் பக்கத்தில் இருக்கும் ஏதாவது சிற்றூர் அல்லது கிராமத்தின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வான். கூடவே இன்னார் பேரன் என்றோ இன்னார் என் சித்தப்பா என்றோ சொல்ல கிழவியும், சாணை பிடிப்பவனும் அரைமணிநேரம் திண்ணையில் பேசிக்கொண்டிருப்பார்கள். கிழவியிடமிருந்து சாணை பிடிப்பவனுக்கு வெற்றிலை பாக்கு இலவசமாகக் கிடைக்கும்.

"வாயில் பொடவேய்ய்ய்….. " இன்னொரு ராகம் ஒலிக்கும். தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் ஓடிவர ஆண்களுக்கு எரிச்சலாக இருக்கும். ஒரு பெ‌‌ரிய வீடு அல்லது திண்ணைக்குச் சென்று விதம் விதமாய் அவன் புடவைகளைக் காண்பித்துக் கொண்டிருப்பான். இரண்டு ரூபாய் கொடுத்தால் கூட போதும். மீதம் வாரத் தவணை அல்லது மாதத் தவணையில் வாங்கிக் கொள்வான். நம்பிக்கைதான் அப்போது ஆதாரம். தேன் விற்றபடி ஒருவன் சைக்கிளில் வருவான். திண்ணையில் கதைப் பேசிக் கொண்டிருக்கும் பெருசுங்க அவனைச் சுற்றி நின்று கொள்வார்கள். கொல்லிமலையில எடுத்தது என்பான். இ‌து வெறும் சக்கரை தண்ணீப்பா- இன்னொரு ஆள் கையில் ஊற்றி நக்கிப் பார்த்துச் சொல்ல, தேன் வியாபாரிக்கு மூக்கில் கோவம் வரும். "சக்கரைத் தண்ணினா‌‌‌ காசு கூட கொடுக்க வேணாம். இனா‌‌‌மா எடுத்துக்கோ"- சொல்ல ஒரு பெருசு தேனை எடுத்து ஆராய்ச்சி செய்யும்.

"பழைய அண்டா..குண்டா…பித்தள பாத்திரத்துக்கு ஈயம் பூசலியோ ஓஓ..ஈயம்" எ‌ன்று ஒரு குரல் ஒலிக்கும். தெருமுனையில் மரத்தடியில் ஈயம் பூசுபவன் மகனோ, மனைவியோ அமர்ந்து துருத்தியால் காற்று அடித்துக் கொண்டிருப்பார்கள். தீக்கங்குகள் மின்மினிக்கள் போல பறக்கும். ஈயம் பூசித் தருபவன் வீடு, வீடாகச் சென்று அண்டா, குண்டாக்களை வாங்கியபடி மரத்தடிக்குச் செல்வான். அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு வயதான பெரியவர் தோளில் மஞ்சள் பையுடன் வருவார். அம்மி கொத்தலையோ ஓஓ..அம்மி எ‌ன்று குரல் கொடுப்பார். வரிசை, வரிசையாக எறும்பு ஊர்வது போல அம்மிக் கொத்துவார். "என்னமா வீட்டுள்ள கருவாட்டுக் குழம்பா…?" பேசிக்கொண்டே வேலையைக் கவனிப்பார். சிவப்பாய் உயரமாய் ஒருவர் வருவார். "வல்லீலீஈஈ… வல்லீலீஈஈ" எ‌ன்று குரல் ஒலிக்கும். வேறொன்றுமில்லை. வளையல் என்பதைத்தான் அவர் அப்படி சொல்கிறார் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும். அநேகமாக எல்லாருமே இப்படித்தான். பொருட்களைக் கூவிக்கூவி விற்பதால் நாளடைவில் எழுத்துகளை சுருக்கி ராகம் போல மாற்றிவிடுவார்கள். குரல்கள் தெருக்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பழைய ஈயம் பித்தளைக்கு பேருச்..ச..ம்ப..லம்...!!" புலியாமுத்து.. இருக்கா புலியாமுத்..தோ...ய்"


ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். கட்டைக்குரல். கீச்சுக்குரல் என்று. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு தாளலயம் இருக்கும். சில குரல்கள் பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்படி சங்கேதமாய் இருக்கும்.அலுமினியப் பாத்திரங்கள் விற்பவர் விநோதமாய் கூவிக்கொண்டு வருவார். ஒரு வார்த்தைகூட புரியாது. ஒரு சைக்கிளில் பாத்திரக்கடையையே தொங்கிக் கொண்டு வருவது பார்க்க அதிசயமாய் இருக்கும். புடவை வியாபாரிகள் போலவே இவர்களும் தவணையில் விற்பார்கள். சிலர் பழைய பாத்திரங்களையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்துப் புதுபாத்திரங்கள் வாங்கிக் கொள்வார்கள்.

பிற்பகல் தெருக்களில் குறிசொல்பவர்கள், கைரேகை சொல்பவர்கள்,கிளி ஜோஸ்யமென்று குரல்கள் நிரம்பியிருக்கும். சிலருக்குப் பழைய சோறு கூட கிடைக்கும். உண்டு விட்டு ஏதாவது மரத்தடியில் குட்டித்தூக்கம் போடுவார்கள். யாராவது ஒரு பொடியன் கிளியிடம் வம்பு இழுக்க கிளி ஜோஸ்யக்காரன் தூக்கத்திலேயே அதட்டுவான். மாலை வேளைகளில் தேங்காய்பன், கைமுறுக்கு,சோன் பப்டி எ‌ன்று விதவிதமாய் விற்றுக் கொண்டு வருவார்கள்.

தெருக்கள் முழுதும் குரல்கள் ததும்பிக் கொண்டேயிருக்கும். யாரும் கதவை அடைத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் யாருமே எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களாய் இருக்க மாட்டார்கள். ஆனா‌‌‌ல் இவர்கள் இல்லாமல் எங்கள் ஊர் தெருக்களில் உயிரோட்டம் இருக்காது. இப்போதெல்லாம் தெருக்களில் அலைபவர்களை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள். ஒருவித வெறுமையுடனும், இனந்தெரியாத பயத்துடனும் இருக்கிறது பெருநகரத் தெருக்கள். பால்யகால தெருக்கள் பற்றிய நினைவுகள், வேப்பங்கிளைகளிலிருந்து உதிரும் மழைத் தூறலைப் போல இருக்கிறது.

முந்தைய கட்டுரைகள் 1 2