Monday, May 31, 2010

மூன்று கவிதைகள்

அடையாள அட்டைகள்
—————————————————————

முத‌ல் கவிதை இந்த வார விகடனில் வெளிவந்துள்ளது.

1.
இப்போதெல்லாம்
ரயில் நிலையத்தில்
பேருந்து நிலையத்தில்
விமான நிலையத்தில்
வழிபடும் இடத்தில்
இன்னும் ஆயிரம் ஆயிரம்
காரணங்களுக்கு
ஆடைகளை களைந்து
சோதனை செய்கிறார்கள்
கவனமிருக்கட்டும்
ஒரு
அடையாள அட்டையென்பது
ஆடை களையும் சடங்கிலிருந்து
தற்காலிகமாக தப்பிக்க
தரப்பட்டுள்ள சிறுசலுகையே

(நன்றி - ஆனந்த விகடன்)


2
நாளுக்கு நாள்
எனது அடையாள அட்டைகள்
பெருகிக் கொண்டே செல்கின்றன
உடம்பில் புதுபுது மச்சங்களும்,மருக்களும்
உற்பத்தியாவதை போல
கடைசியாக வ‌ந்து சேர்ந்தது
வாக்காளர் அடையாள அட்டை
எனது மருத்துவ நண்பரிடம்
கேட்டபொழுது
வளர்சிதை மாற்றம்
பயப்பட தேவையில்லெயென்கிறார்


3
சாலையோர நடைபாதையில்
அனா‌‌‌தையாக கிடந்தது
அடையாள அட்டை
முகத்தை தவிர
வேறெதுவும் புலப்படவில்லை
அந்த பழுப்பேறிய
நைந்துப்போன அட்டையில்
நூறாண்டுகளாய்
சலித்து நின்ற மரமொன்று
இலைகளை உதிர்த்து விட்டு
‌மிக மிக சந்தோஷமாய்
மண்ணை முத்தமிட்ட
கணம் போல சிரித்திருந்தது
அந்த முகம்


நன்றி
-என்.விநாயக முருகன்

Tuesday, May 25, 2010

இரண்டு கவிதைகள் - உயிரோசை & கீற்று.காம்

கவிதைகளை வெளியிட்ட உயிரோசை மற்றும் கீற்று.காம் மின்னிதழ்களுக்கு நன்றி

போன்சாய் மரம்- சில ஆலோசனைகள்
போன்சாய் மரங்களை
வளர்ப்பது சாதாரண விஷயமல்ல
வெயிலில் அதிகநேரம்
வாடவிடக்கூடாது.
வாரத்திற்கு ஒருமுறை
இலைகளைக் கிள்ளி
தண்டுகளைக் கட்டி
பிள்ளைகள் போல
பராமரிக்க வேண்டும்

தண்ணீரை ஊற்றக்கூடாது
தெய்வத்தின் மீது
தூவும் மலர்களைப் போல
தெளிக்க வேண்டும்
குறிப்பாக
பூச்சிகளை அண்டவிடக்கூடாது

போன்சாய் மரங்களை
உயரமாய் வளரவிடக்கூடாது
பக்கவாட்டில் கிளைபரப்பினாலும்
பிரச்சினைதான்
கறாராக வெட்டிவிடவும்

போன்சாய் மரங்களுக்கு
தாய்மண் இருந்ததில்லை
தாய்மண்ணுக்குக் குரல்கொடுக்கும்
போன்சாய் மரங்கள்
அதிகநாள் இருந்ததில்லை
அவற்றை மட்டும்
வளர்க்கவே வளர்க்காதீர்என்ன செய்யலாம்?

ஓர் இனம் அழிக்கப்படும்போது
நாம் செய்ய வேண்டிய
‌சில கடமைகள் உள்ளன

ஷெல்லடிகளின் சத்தம்
செவிகளில் விழாமலிருக்க
தொலைக்காட்சிப் பாடலின்
ஒலியளவை அதிகரிக்கலாம்

செய்தித்தாள்களில் வரும்
சினிமா பக்கங்களை தவிர
எஞ்சியவற்றை கிழித்து விடலாம்

சில அறிக்கைகள் விடலாம்
‌சில கணக்குகளை போடலாம்
‌சில எதிரிகளை திட்டலாம்
‌சில துரோகிகளை சபிக்கலாம்

ஆத்திரப்படலாம்
எரித்துக் கொள்ளலாம்
அடித்துக் கொள்ளலாம்

விதியெனலாம்
மதிகெட்டவர்களெனலாம்

தப்பி பிழைத்தவர்களின்
கண்ணீரை கேட்டுவைக்கலாம்
பிறகொரு நாளில்
நிதானமாக
நாலுவரி கவிதையெழுதலாம்


நன்றி
-என்.விநாயக முருகன்

Saturday, May 8, 2010

ஊர்க்கோல வாழ்வை நச்சி

இந்த ஊரில் இறந்துப்போவதில்
புண்ணியம் பலவுண்டாம்
கூடத்தில் படுக்கவைத்து
திண்ணையில் விடியவிடிய
பேசிக்கொண்டிருக்க மாட்டார்களாம்


மின்சார சுடுகாடெல்லாம்
கணினி மயமாம்
அஞ்சே நிமிடத்தில்
காரியம் முடித்து
பார்சலும் கொடுப்பார்களாம்


அர்த்தஜாமத்தில் எழுந்தமர்ந்து
அடிவாங்க தேவையிருக்காதாம்
அன்பாகவே கவனிப்புண்டாம்
உடன் வந்தவர்களை
உபசரிக்க ஊழியர்களுமுண்டாம்


எனது கவலையெல்லாம்
நான் செல்லும் அமரர் ஊர்தி
போக்குவரத்து நெரிசலில்
மாட்டக் கூடாதென்பதில்தான்
இன்னொருமுறை சாக தயாரில்லை நான்


அடுத்த கவலை எனது
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
யாரும் சிறுநீர் அடித்துவிடக்கூடாதென்பதில்

Sunday, May 2, 2010

அட..ங்கொய்யால

நூறுகோடிக்கு குறைவான
ஊழல்களில் சுவாரசியமில்லையாம்
எந்த தொலைக்காட்சியும்
கண்டுக்கொள்வதில்லை


மூன்று கொலைகள் செய்தால்
மட்டுமே
முத‌ல் பக்கத்தில் பிரசுரமாம்
வண்ண புகைப்படம் வர
நான்கு கொலைகளாம்


சிவனே வந்தாலும்
சின்ன வீட்டுடன்
கையும் களவுமாய்
பிடிபடாதவரை
பிரபலமில்லையாம்


நாயே ஆனா‌‌‌லும் சரி
பேயே வந்தாலும் சரி
மனிதனை கடித்தால் செய்தியில்லையாம்


நடுவானில் வெடிக்க வேண்டும்
தலை துண்டிக்கப்பட வேண்டும்
கதற கதற ஓட ஓட
எல்லாமே எங்களுக்கு
சுட சுட வேண்டும்
ஆறாத வரை புதுக்கஞ்சிதான்


அப்ப கஞ்சிக்கு செத்தவன்?
அட..ங்கொய்யால
இதென்ன வெட்டிப்பேச்சு
அவனை பத்தி