Saturday, August 8, 2015

ரசிகன்



மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்று வைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம்
--– அபிலாஷின் ரசிகன் நாவல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய கட்டுரையிலிருந்து
எண்பதுகளின் தொடக்கத்தில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்று நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். காரணம் அவர்கள் வளர்ந்து பதின்பருவம் அடையும்முன்னரே தமிழ்நாட்டில் குளோபலைசேஷன், லிபரலேஷன் காலூன்றிவிட அவர்கள் உலகத்தை புரிந்துக்கொள்வதற்கு முன்பே அவர்களால் இயல்பாக ஒரு காலமாற்றத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டார்கள். ஆனால் அதற்குமுன்பு பிறந்து அதிலும் குறிப்பாக தீவீர லட்சியவாதம் பேசிய சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த பல இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று எனது கண்முன்னால் பார்த்திருக்கிறேன். எனது நண்பர்கள் சிலர் அப்படி மைய நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போனதையும் தற்கொலை செய்துக்கொண்டதையும் சிலர் துபாய் போன்ற நாடுகளில் கிடைத்த வேலை செய்து தங்கள் அடையாளம் இழந்துப் போனதையும், பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போனதையும் பார்த்திருக்கிறேன்.
ரசிகன் நாவலில் வரும் சாதிக் என்ற கதாபாத்திரத்தின் சாயலில் நான் பார்த்த சில நெருங்கிய நண்பர்களின் சாயலை உணர முடிந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்த லட்சியவாத சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த சாதிக் தொண்ணூறுகளின் காலகட்டத்துக்கு வரும்போது அவன் வாழ்க்கை உள்ளும் புறமும் எப்படி மாறுகிறது? அவன் நம்பிக்கைகள் எப்படி சிதறுகின்றன? என்பதுதான் ரசிகன் நாவலின் மையம்.
சாதிக்தான் இந்த நாவலின் மையப்புள்ளி என்றாலும் சங்கர் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் நாவல் ஆரம்பிக்கிறது. சந்திரமுகி படம் வெளிவந்த காலகட்டத்தில் நாவலின் கதை ஆரம்பிக்கிறது. சென்னையில் கதை தொடங்குகிறது. சந்திரமுகி படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் கலந்துக்கொள்ளும் சாதிக் தியேட்டர் வாசலில் இருக்கும் ரஜினி கட்டவுட் மீது ஏறி கால்தடுமாறி அல்லது தற்கொலை எண்ணத்துடன் தானாகவே கீழே விழுந்து மண்டை உடைந்து மூளை சிதறி இறக்கிறான். சாதிக் இறந்த விஷயத்தை சங்கர் ஊரிலிருக்கும் சாதிக்கின் பழைய காதலி ரெஜினாவிடம் சொல்கிறான். அங்கிருந்து பிளாஷ்பேக்காக சாதிக்கின் பின்னணியை சங்கர் சொல்வதாக நாவல் விரிகிறது.
எண்பதுகளில் சாதிக்கை போன்ற ஆட்களை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். எல்லாருக்கும் ஒரேபோல முகத்தில் தாடி கண்களில் தீர்க்கம், பேச்சில் அலட்சியம், உடம்பில் நீளமான ஜிப்பா என்று பொதுத்தன்மை கொண்டிருப்பார்கள். சாதிக்கின் உலகம் சிற்றிதழ் வாசிப்பு, உலக அரசியலை பேசுவது, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் டிவியில் மாற்றுத் திரைப்படங்களை பார்ப்பது, கையில் புகையும் பீடி, தேதீருடன் அகிரகுரசோவா படங்களை பற்றி விவாதிப்பது என்று சுற்றுகிறது. டுட்டோரியல் பள்ளியொன்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் சாதிக் பொருளாதாரத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப் படுவதில்லை. தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், நகுலன், புதுமைப்பித்தன், பிராய்டு,சார்த்தார் என்று வேறு ஓர் உலகத்தில் வாழ்கிறான். சூரியனுக்கு கீழே உள்ள எல்லா விஷயங்களையும் பற்றி அவனால் தீவிரமாக விவாதிக்கமுடியும். எல்லாவற்றையும் ஒரு புதுகோணத்தில் பார்த்து அவன் தனது நண்பர்களுக்கு அறிவாசானாக இருக்கிறான். மார்க்கிசிய சித்தாந்தத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவன். ஊரில் செங்கதிர் என்னும் சிற்றிதழ் நடத்திவருகிறான்.
இந்நாவல் மூன்று தளங்களில் மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. முதல் பகுதியில் சாதிக்கின் இலக்கிய நண்பர்கள் அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் சித்தாந்தங்கள் அவர்களில் சிலரின் வெகுஜன ரசனையை பொருளியல் யதார்த்த வாழ்க்கையை கடுமையாக விமர்சித்து சாதிக் செய்யும் உரையாடல்கள் என்று செல்கிறது. அடுத்த பகுதி சாதிக் அவனது காதலி ரெஜினா பிறகு அவன் திருவனந்தபுரம் பேரலல் கல்லூரியில் பேராசிரியராக சேருவது என்று சுழல்கிறது. மூன்றாவது பகுதியில்தான் சாதிக் சென்னைக்கு வந்து வெகுஜன ரசிக மனோபாவத்தை விரும்பி ஏற்று தீவிர ரஜினி ரசிகனாக மாறி கட்அவுட்டுக்கு பால், பீர் ஊற்றும் வெறிப்பிடித்த ரசிகனாக மாறுவது நடக்கிறது.
சாதிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலியல் ஆர்வமற்று இருக்கிறான். கிட்டத்தட்ட பிரவீணாவிடமும் இதேபோல நிறைவேறாத அல்லது திருப்தியடையாத அலல்து தன்னைத்தானே சுயவதை செய்துக்கொள்ளும் ஒருவித மனநிலை இருக்கிறது. பாலியல் ஆர்வம் இல்லாதவர்கள் கொஞ்சம் டேஞ்சரான ஆட்கள்தான். அதோடு இலக்கியக்கிறுக்கும் சேர்ந்துவிட்டால் இன்னும் மோசம். ஆனால் இந்நாவலின் ஆரம்பத்தில் மிக தீவிரமாக வெகுஜன ரசிக மனோபாவத்தை கிண்டல் செய்யும் ரஜினி படங்களை திட்டும் சாதிக் குறிப்பாக தீவிர மார்க்சியம் பேசும் ஒருவன் எப்படி இப்படியொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருப்பான்? இது சாத்தியம்தானா என்று யோசிக்கும்போது இலக்கிய உலகத்திலும் ரசிகமனோபாவம் இருப்பதை தாஸ் போன்ற கதாபாத்திரம் வழியாக அபிலாஷ் பதிவு செய்து அதற்கான விளக்கத்தை கொடுக்கிறார்.
மனிதர்களால் சமநிலையை பேணுவது மிகவும் கடினம். ஏதோவொன்றின் மேல் எல்லா மனிதர்களுக்கும் ரசிகமனோபாவம் தேவைப்படுகிறது. சங்கருக்கு ஆன்மிகம். ஆணை பெண் ரசிப்பதும் பெண்ணை ஆண் ரசிப்பதும் அரசியல் தலைவரை தொண்டர்கள் ரசிப்பதும் என்று எல்லாமும் ஒரே புள்ளியில் மனிதர்களின் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் பதற்றத்திலிருந்தே பிறக்கின்றன
தாஸ் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் இவர் யார்? இவரா அவரா என்று யோசிக்க வைக்கிறது. பிற்பாதியில் எழுத்தாளர் தாஸ் சென்னைக்கு வந்து தனக்கென்று வாசகர் வட்டம் என்ற பெயரில் ரசிக அடிவருடிகளை வைத்து ரஜினிக்கு நிகராக தனது கட்அவுட்டுக்கு பீர் அபிகேஷம் செய்யும் பவர்ஸ்டார் கோமாளித் தனங்களை புன்னகையுடன் படித்தேன். குறிப்பாக தாஸின் வாசகர்கள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு பெண்ணை காசுகொடுத்து அழைத்து வருகிறார்கள். அந்தப்பெண் தாஸை தனது மார்பில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்துகிறாள். இவள்தான் தனது உணமையான வாசகி என்று தாஸ் மேடையில் பெருமையாக பேசுகிறார். அதே மேடையில் ஏறும் சாதிக் ரஜினி பட வசனங்களை பேச தாஸின் வாசகர்கள் அதற்கும் கைதட்டுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இலக்கிய ரசிகர்களும் (வாசகர்கள் அல்ல) சினிமா ரசிகர்களும் ஒரே மாதிரித்தான் தங்கள் மூளையை அடகுவைத்து கிடக்கிறார்கள். பிறகு அந்தபெண் மேடைக்கு பின்னால் சென்று மனுஷனா அவன்? கையெழுத்து போட சொன்னால் பேனாவால் கீறி வைக்கிறான். ஒழுங்கா பேசுன காசை கொடுத்துடுங்க என்று தாஸின் வாசகர்களிடம் சண்டை போடுகிறாள்.
எண்பதுகளின் மார்க்சிய சித்தாந்தம் சிதைந்து பின்நவீனத்துவம் வந்தபிறகு அது ஒரு தனிமனித நம்பிக்கைகளை இருப்பை எப்படி அலைக்கழிக்க வைத்து அவனை காணாமல் போக வைத்தது என்பதை வலுவாக பதிவு செய்தவகையில் இந்நாவல் முக்கியம்பெறுகிறது. அதே நேரம் சாதிக் தோற்றுப்போனால் அது அவன் கொண்ட நம்பிக்கைகளின், சித்தாந்தங்களின் தோல்வி அல்ல. வச்சா குடுமி. அடிச்சா மொட்டை என்று சொல்வார்கள். சாதிக்கும் அப்படியொரு பிடிவாத மனநிலையில்தான் வாழ்கிறான். வெகுஜன ரசிக மனோபாவத்தின் உச்சத்துக்கு சென்று ராகேவந்திரா மண்டபம் சென்று ரஜினி காலில் விழுந்து ஆசிப்பெற்று வருகிறான்.
நாவலில் நுட்பமாக வரும் சில இடங்களும் உண்டு. கறுப்பு நாயொன்று சாதிக்கை பின்தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ரஜினி கட்அவுட் மீதிருந்து சாதிக் கால் தவறி விழும்போது அந்த நாய் வந்து அவனது மூளையை நக்குகிறது. எல்லா மகத்தான மூளைகளையும் கடைசியில் ஓர் அற்பநாய் வந்துதான் நக்கிவிட்டு செல்கிறது.