Monday, December 7, 2009

நான்கு கவிதைகள்

சமாதானப் புறா
--------------
சமாதானப் புறாக்களை
ஏதாவதொரு மாநாட்டில்
பறக்கவிடுவதை
அடிக்கடி நீங்கள்
தொலைக்காட்சியிலோ நேரிலோ
பார்த்திருக்கலாம்
அதற்கப்புறம்
அந்த புறாக்கள்
எங்கு செல்கின்றன
என்னவாகின்றன
தெரிந்தால் சொல்லுங்களேன்



உப்பிட்டவரை
————————————

காலை தெருமுனையில்
பார்த்தேன் அவனை
உடம்பெல்லாம் உப்பு
தடவியபடியே இறங்கிக்கொண்டிருந்தான்
முகத்தை கவனிக்க முடியவில்லை
பாதாள சாக்கடை துர்நாற்றமோ
அலுவலகம் செல்லும் அவசரமோ
சரியாக நினைவில் இல்லை

மூங்கில் குச்சிகளோடு முங்கியவன்
தலைக்குமேல் கைகள் அசைகையில்
ரயில்களுக்கு டாட்டா சொல்லும் குழந்தைகளோ
கற்பூர ஆரத்திக்கு உருகும் பக்தர்களோ
சரியாக சொல்ல தெரியவில்லை


மதியம் 1:12 மணிக்கு
சிவப்பு நிற
டப்பாவை பிரிக்கையில்
முத‌ல் கவளம் ருசிக்கையில்
உப்பு வைக்க மறந்த
மனைவியை சபிக்கையில்
சரியாக வ‌ந்து தொலைத்தான்

அவன்
——————
எப்படி இருப்பான்
எ‌ன்ற கேள்விக்கு
எப்படி இருந்தால்
எனக்கு பிடிக்குமோ
அப்படித்தான் இருப்பான் என்றேன்.
நடுவில்
எப்படி எப்படியோ
மாறிவிட்டது எல்லாம்.
அவன் அப்படியேத்தான் இருக்கிறான்.


நான் அவன் இ‌ல்லை
--------------------

சத்தியமாக
நான் பிடுங்கிக் கொள்ள போவதில்லை
நான் அப்படிப்பட்டவனும் இல்லை
எடுக்கவா தொடுக்கவா
எ‌ன்று கேட்கும் ஆளுமில்லை
இருந்தாலும்
எதிர்ப்படும் இந்த பெண்கள்
எல்லாம் ஏனோ
அடிக்கடி முந்தானையை
சரிசெய்துக் கொள்கிறார்கள்

6 comments:

  1. எல்லாமே நல்லா இருக்கு வி.மு.

    உப்பிட்டவரை அபாரம்.

    ’அவன்’ கவிதையில் கடைசி வரி முதல் வார்த்தை ‘அவள்’ என்று வருவது சரியா?

    ReplyDelete
  2. நன்றி அனுஜன்யா. Sorry Technical fault. Corrected

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல்ல இருக்கு
    விநாயக முருகன்...

    ReplyDelete
  4. //சத்தியமாக
    நான் பிடுங்கிக் கொள்ள போவதில்லை
    நான் அப்படிப்பட்டவனும் இல்லை
    எடுக்கவா தொடுக்கவா
    எ‌ன்று கேட்கும் ஆளுமில்லை
    இருந்தாலும்
    எதிர்ப்படும் இந்த பெண்கள்
    எல்லாம் ஏனோ
    அடிக்கடி முந்தானையை
    சரிசெய்துக் கொள்கிறார்கள் //

    சரிதான்!

    -கேயார்

    ReplyDelete
  5. நன்றி நண்பா
    நன்றி கமலேஷ்
    நன்றி கேயார்

    ReplyDelete