Wednesday, November 16, 2011

புயலுடன் உரையாடுபவன்

பண்டிகை நாளொன்றின்
முந்தைய இரவில்
வானிலை ஆராய்ச்சி மையத்தில்
தனியாக அமர்ந்துள்ளான் அவன்


வெளியே எங்கோ
தொலைதூர அதிர்வேட்டுகளும்
வானவெடிகளின் கொண்டாட்டங்களும்
சன்னமாய் ஒலிக்கின்றன


அவன் அமர்ந்திருக்கும்
கட்டுப்பாட்டு அறையில்
கழுவப்படாத
காலி தேநீர்க்கோப்பைகளும்
எரிந்துப்போன சிகரெட் துண்டுகளும்
மல்லிகைப்பூக்களின் வாசமும்
சிதறி கிடக்கின்றன


அமைதியாக தலையை
கவிழ்ந்திருக்கும் அவன்
சலிப்பாக
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்


அவனது இருப்பிடத்திலிருந்து
ஐநூறு கிலோமீட்டர் தள்ளி
புயல் சின்னம் நகர்கிறது


சலிப்புற்றிருந்த அவன் முகம்
இப்போது
காதல் கடிதம் கிடைக்கப் பெற்ற
பதின்ம பெண்ணாய் மாறுகிறது
அந்த அறையில் பரபரப்பு
சூல் கொள்கிறது


அவன்
கட்டுப்பாட்டு அறையிலிருக்கும்
கருவிகளின் திசையை மாற்றுகிறான்
கணக்கீடுகளை மீண்டும் சரிபார்க்கிறான்


இதுவரை சந்தித்திராத புதிய புயல்
இதுவென்று அவனுக்கு படுகிறது
வெள்ளைத்தாளில் எதையோ
கிறுக்குகிறான்
தொடர்பு துண்டிக்கப்பட்ட யாருக்கோ
மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறான்
சில மின்னஞ்சல்களை அனுப்புகிறான்


அவன்
புயலின் மையத்தை
புயலின் உருவத்தை
உன்னிப்பாக உற்றுப் பார்க்கிறான்
சிறுவயதில்
கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட
பால்ய காலத்தோழனின் முகம்
அவனுக்கு நினைவுக்கு வருகிறது
சாட்டிலைட் சமிஞ்கைகளை
கவனமாக ஒலிப்பெயர்க்கிறான்


புயல் வடமேற்கு திசையில் நகர்கிறது
அவனது திசையும் அதுவே
அவன் ஆர்வமாக பார்க்கிறான்
தேநீர் குடித்தபடி
புயலை பார்த்து ரசிக்கின்றான்
நேரம் செல்ல செல்ல
புயலின் வேகம் அதிகரிக்கிறது


அவன்
புயலுக்கு ஒரு செல்லப்பெயர் சூட்டுகிறான்
புயலின் மையம் சற்று விரிகிறது
அவன் இப்போது
புயலுடன் உரையாட தொடங்குகின்றான்


புயலுக்கும் அவனுக்கும்
இடையிலிருக்கும் பிணைப்பு
அந்தரங்கமானது
புதிரானது
சுவாரசியமானது
அவர்கள் இருவரும் உரையாடிக்கொள்ளும்
மொழி மற்றவர்கள் அறியாதது
சங்கேத குறியீடுகளால் நிறைந்தது
அவர்கள் உரையாடல்கள்
காதல் நிறைந்தது


நீண்ட உரையாடலின் முடிவில்
புயலின் மையம் சிறிது சிறிதாக சுருங்குகிறது
அது மெல்ல மெல்ல உருமாறுகிறது
புயலின் திடீர் செய்கை
புரியாமல் அவன் திகைக்கிறான்


புயல் இப்போது வடகிழக்காக நகர்கிறது
அவனுக்கு கைகள் நடுங்குகின்றன
புயலின் இலக்கை
அதற்கு நினைவூட்டுகின்றான்
அது பயணிக்க வேண்டிய பாதை
அதுவல்லவென்று கண்டிக்கின்றான்
அது பயணிக்க வேண்டிய வேகமும்
அதுவல்லவென்று கூறுகிறான்


பெயர் தெரியாத தீவுக்கூட்டங்களை நோக்கி
புயல் மெல்ல மெல்ல நகர்கிறது
அவனுக்கு வியர்க்கிறது
கவலையோடு
கணிப்பொறித்திரையை பார்க்கிறான்
மெல்ல மெல்ல புயல்
அவன் பார்வையிலிருந்து மறைகிறது


தலைக்கு மேல் கடக்கும்
மாபெரும் பறவையொன்று
தொடுவானில் மறைந்தார்போல்
இறுதி புள்ளியாய்
திரை ஒளிர்கிறது


அவனுக்கு கண்ணீர் பெருகுகிறது
அழுகையினூடே ஒரு சிகரெட் பற்றவைக்கிறான்


அவன் இப்போதுமீண்டும்
கட்டுப்பாடு அறையின் மையத்தில்
தலைகுனிந்தபடி
அமைதியாக காத்திருக்கிறான் தனியாக


நன்றி
என்.விநாயக முருகன்

3 comments:

  1. முதன் முதலாக தங்கள் வலைத்தளத்தில் நான் வாசித்த்த கவிதை இது. அழகான கவிதை. எளிமையான கவிதை. வாசிக்க வாசிக்க, அடுத்த வரியில் என்ன இருக்கும் என்ற எண்ணத்தை அதிகரிக்கச்செய்கிறது. காட்சிகளும் கண்முன்னே விரிகிறது. ஆனால், முடிவு மட்டும் முற்று பெறாததுபோல் ஒரு தாக்கம். நீங்கள் சொல்ல வந்ததை முழுமையாக சொல்லிவிட்டீர்களா?. இல்லை, எனது எதிர்பார்ப்பு என்னை ஏமாற்றிவிட்டதா?. என் பிழை என்றே கருதுகிறேன். புரியவில்லை எனக்கு. பணி தொடற வாழ்த்துக்கள்.

    ReplyDelete