Wednesday, July 24, 2013

இந்த பொழப்புக்கு எருமை மாடு மேய்க்கலாம்

சனிக்கிழமை காலை ஏழு மணி. அம்மாவும், மனைவியும் எங்காவது வெளியில் போகலாம் என்று திடீரென சொல்ல எங்கு போவதென்று குழப்பம். வெளியே தாழ்வழுத்த காற்று மண்டலம். விட்டு,விட்டு பெய்துக்கொண்டிருந்தது. சென்னைக்கு பக்கத்திலேயே எங்காவது சென்று வரலாம் என்று தோன்றியது. எங்கு போவது? அப்போதுதான் சுருட்டுப்பள்ளி நினைவுக்கு வந்தது . சுருட்டுப்பள்ளியில் ஒரு சிவன் கோவில் இருக்கின்றது. அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்று வீட்டில் நச்சரிப்பு ஆரம்பித்தது. போதாதற்கு சரியாக அன்று சனிபிரதோஷம். டிரைவருக்கு போன் செய்தபோது காலை மணி எட்டு. எனக்கு சுமாராகவும் எனது மனைவிக்கு அசாத்திய திறமையுடனும் கார் ஓட்ட தெரியுமென்றாலும் மழையில் கார் ஓட்டுவது ரிஸ்காக தோன்றியது.    

டிரைவர் மெதுவாக வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது மணி எட்டரை. இதற்குள் எனது மகள் தண்ணி பாட்டில்கள் ,கேமரா எல்லாம் எடுத்து காருக்குள் காருக்குள் தயாராக வைத்து விட்டாள். அவளுக்கு லேசாக காய்ச்சல் வேறு. இருந்தாலும் வெளியில் செல்லும் குஷி அவளுக்கு. போரூர் சிக்னல் போக்குவரத்தை தாண்டி மதுரவயலை நோக்கி செல்லும் சென்னை பைபாஸில் ஏறும்போது மணி ஒன்பது.

எனது மனைவிதான் சுருட்டுப்பள்ளி செல்லும் வழியை டிரைவருக்கு சொல்லிக்கொண்டே வந்தாள். இரண்டு டோல்கேட்டுகளை தாண்டி கல்கத்தா செல்லும் அந்த மெகா பைபாஸில் கார் இறங்கும்போது மெதுவாக கேட்டேன். 

சுருட்டுப்பள்ளிதான் போறோமா?     

பேசாம வாங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் கூகிள் மேப்புல ஏற்கனவே வழி பார்த்துட்டேன். இப்படித்தான் போகனும். 

சுருட்டுப்பள்ளிக்கு பூந்தமல்லி ஸ்ரீ பெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் சென்று பெரியபாளையம் பக்கம் போகுமென்று எப்போதோ கேள்விப்பட்ட நினைவு. டிரைவரிடம் கேட்டேன். அவரும் புதுசு. வழி தெரியாது என்று சொல்லிவிட்டார். எனது மனைவி டிரைவருக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தார். வழியெல்லாம் பாலங்களும்,பைபாஸ்களும்,பிளை ஓவர்களும் கட்டிக்கொண்டே இருந்தார்கள். இந்த உலகம் இன்றுதான் பிறந்தது போல எங்கு பார்த்தாலும் சாலைகளை புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். தடை காரணமாக நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றபட்ட காலி டாஸ்மாக் கடைகள் ஆங்காங்கே பரிதாபமாக நின்றுக்கொண்டிருந்தன.           

கார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும். தடா பத்து கிலோமீட்டர் என்று அறிவிப்பு பலகை வந்தது. நான் பயந்து போய் காரை நிறுத்த சொன்னேன்.

எனது மனைவிக்கும் குழப்பம் வந்துவிட்டது. இந்நேரம் சுருட்டுப்பள்ளி வந்திருக்கனுமே. நான் கூகிள் மேப்ல பார்த்தேனே. இங்குதானே சுருட்டுப்பள்ளி இருக்குதுன்னு சொன்னாங்க என்றாள். டிரைவர் காரை விட்டு இறங்க, நான் கண்ணுக்கு எட்டுன தூரத்தில சுருட்டுப்பள்ளி இருக்குதான்னு பார்த்தேன். தெரியவில்லை. இங்கு இருந்த ஊர் எங்கு போயிருக்கும் என்று குழப்பம். ஒரு மினி லாரி நின்றுக் கொண்டிருந்தது. அவரிடம் கேட்டோம். என்னது சுருட்டுப்பள்ளியா? அதுக்கு எதுக்கு இந்த ரூட்டுல வந்தீங்க? நீங்க சென்னையில இருந்து வந்தா பெரியபாளையம் ரூட்டுல இல்ல போயிருக்கனும். ஊத்துக்கோட்டை வழியா போயிருக்கலாம் என்றார் .  

எங்கள் டிரைவர் என்னைப பார்த்து, ஊத்துக்கோட்டையா. இதை முன்னாலே சொல்லியிருக்கலாமே. நீங்க கல்கத்தா ரோடு, ஆந்திரா பார்டர்ன்னு சொன்னதும் நானும் இந்த பக்கம் வந்துட்டேன் என்றார்

நான் எனது மனைவியை பார்த்தேன். இல்ல கூகிள் மேப் ஒருவேளை தப்பா இருக்குமோ என்றாள். பெரிய மழை வரும் போல வானம் இருண்டுக்கொண்டு வந்தது. காரை திருப்பிக்கொண்டு வந்த வழியே போரூர் வரை செல்வது சள்ளை பிடித்த வேலை. அதுக்கு பேசாமல் வீட்டுக்கு சென்றுவிடலாம். மணி பத்து. யாரும் சாப்பிடவில்லை. காருக்குள்ளும் குடிதண்ணீரை தவிர வேறு எதுவும் சாப்பிட எடுத்து வைக்கவில்லை இதற்கிடையில் எனது மகளுக்கு லேசாக காய்ச்சல் வந்து காருக்குள் ஒருமுறை வாந்தி எடுத்து விட்டாள்.

வந்த வழியே போக முடியாது. வேறு ஏதாவது வழியிருக்கா என்று அவரிடம் கேட்டேன் . மினி லாரி டிரைவர் நெடுஞ்சாலையில் இருந்து கிளைபிரிந்த சின்ன சாலையை கைகாட்டினார். இப்படியே போனா வெள்ளவேடுன்னு ஒரு ஆந்திர கிராமம் வரும். அப்படியே வெள்ளவேடு கிராமத்தை தாண்டினா செக்போஸ்ட் வந்துடும் . அங்கிருந்து சுருட்டுப்பள்ளி பக்கம் என்றார். நான் எனது மனைவியை பார்த்தேன். அப்போது கூட அவள் கூகிள் மேப்தான் தப்பு என்று சொல்ல நான் எதுவும் பேசாமல் டிரைவரை வெள்ளவேடு போக சொன்னேன்.      

வெள்ளவேடு நோக்கி கார் செல்ல செல்லதான் எவ்வளவு பெரிய மடத்தனம் செய்துவிட்டோம் என்று. அது போன்ற ஒரு சாலையை இதுவரை பார்த்ததே இல்லை. அரைமணிநேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு பக்கமும் மாந்தோப்புகள். ஒருவேளை கார் ரிப்பேர் ஆகி நின்றால் கூட யாருக்காவது தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் அங்கு காத்திருக்க முடியாது. நல்லவேளை செல்போன் சிக்னல் இருந்தது. குண்டும் குழியுமான சகதி நிறைந்த சாலை முடிவற்று சென்று கொண்டே இருந்தது. ஒரு சின்ன கிராமம் வந்தது . எனது மகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்க கடையை தேடினால் அந்த கடையில் எதுவும் இல்லை. முறுக்கு,பிஸ்கட் மட்டும்தான் இருந்துச்சு. பயபுள்ள வேறு சிட்டியிலேயே வளர்ந்தாச்சுல்ல. பிஸ்கட் வேண்டாம். ஏதாவது கேக்,பப்ஸ் இருந்தா வாங்கி கொடுங்கன்னு சொல்ல, இந்த நடுக்காட்டில் கேக் கடைக்கு எங்கே போறது. சிப்ஸ் பாக்கெட் இருந்தது. சரி ஒரு பாக்கெட் கொடுங்க என்று வாங்கினால் லேயிஸ் சிப்ஸ் இல்லை. எனது மகளுக்கு லேயிஸ் சிப்ஸ்தான் பிடிக்கும்.

சரி எப்படியாவது வெள்ளவேடு போயிடலாமென்று டிரைவரை காரை வேகமாக விட சொன்னேன். எங்கிருந்து வேகமாக போறது. ஒத்தையடி சாலையின் இந்தப்பக்கம் பெரிய கண்மாய். கொஞ்ச நேரத்தில் தூரத்தில் மலைகள் தெரிய ஆரம்பித்தன. அநேகமாக அவை தடா பால்ஸ் ஏரியாவாக இருக்குமென்று நினைக்கின்றேன். பிறகு வந்தது அட்டகாசமான இயற்கை காட்சிகள். இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று நெல் வயல்கள். எருமை மாடுகள். கண்ணுக்கெட்டிய தூரம் ஆட்கள் இல்லை. எருமைகள் தனியாக மேய்ந்துக்கொண்டிருந்தன. பத்து நிமிடங்கள் மெய்மறந்து அந்த இயற்கை காட்சியை பார்த்துக்கொண்டே வந்தேன். எனது இடது பக்கமிருந்து ஒரு பெரிய வாத்துக்கூட்டம் சரேலென சாலையில் ஏறியது. எனது மகளுக்கு கான்பித்தேன். அந்த பசி மயக்கத்திலும் அவள் வாத்துக்கூட்டங்களை பார்த்து சிரித்தாள். கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய சினைப்பன்றி குட்டிகளோடு சாலையில் நிதானமாக சென்று க்கொண்டிருந்தது. தூரத்தில் சிறுவர்கள் பம்ப்செட்டில் குளித்துக்கொண்டே எங்கள் காரை பார்த்து வேகமாக கைகாட்டினார்கள். கார் ஒரு சின்ன கிராமத்திற்குள் நுழைந்தது.

அங்கும் பப்ஸ் இல்லை. லேயீஸ் சிப்ஸ் இல்லை. பசி அதிகமானதால் வேறு வழியில்லாமல் லேபிள் எதுவும் ஒட்டாத பெயர் தெரியாத எண்ணையில் பொறித்த ஏதோவொரு வற்றல் பாக்கெட்டை எனது மனைவி வாங்கி கொண்டு வந்தாள்.  

வெள்ளவேடு செல்லுமுன்பு கடைசியாக ஒரு ஆந்திர கிராமம் வந்தது. வயதான மனிதர்கள் எல்லாம் தலையில் முண்டா துண்டுகளை கட்டிக்கொண்டு பீடி புகைத்தபடியும் , சிறுவர்கள் குளங்களில் கல் வீசி எறிந்துக் கொண்டும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புறப்படுவதற்கு தயாராக இருந்த ஒரு மினி லாரியில் பெண்கள் உற்சாகமாக அமர்ந்திருந்தார்கள்.  

அந்த கிராமத்தை தாண்டியவுடன் செக்போஸ்ட் வந்தது. லாரி டிரைவர்களிடம் ஆந்திர போலீசார்கள் மாமூல் வாங்கும் லாவகம் பிரமிப்பாக இருந்தது. முன்பெல்லாம் டிரெயின் டிரைவர்கள் ரயிலை ஓட்டிக்கொண்டு வரும் வேகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் டோக்கன் மாற்றுவார்கள். அது போல டிரைவர்கள் வரும் வேகத்தில் செக்போஸ்ட் ஆட்களிடம் டக்கென கையில் இருக்கும் சுருட்டி இருக்கும் நூறு ரூபாய்த்தாளை தந்து விட்டு செல்கின்றார்கள். ஒருவழியாக செக்போஸ்ட் தாண்டியதும் ஒரளவு சிற்றூர் போல இருந்தது. அங்கே எல்லா கடைகளும் குறிப்பாக மெடிக்கல் ஷாப்பும் கிளினிக்குகளும் இருந்தன.  

உயிர் வந்தது போல இருந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. என்னதான் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வளர்ந்தாலும் இப்போதெல்லாம் சென்னையை விட்டு ஓரடி நகர்ந்தாலே ஏன் பதற்றம் வந்து விடுகின்றது? நகரத்துல இந்த பொழைப்பு பொழைக்கறதுக்கு பதில் கிராமத்துல நாலு எருமைமாடுகள் மேய்க்கலாம் என்று பதிவுகள் எழுதுகின்றோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்மால் ஒரு நாள் கூட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமத்தில் தங்க முடியாது என்பது உண்மை. நாம் தங்க விரும்பும் கிராமம் வேறு. அங்கு செல்போன் இருக்க வேண்டும். சேட்டிலைட் டிவி சேனல்கள் வர வேண்டும். மல்ட்டி பிளக்ஸ் இருக்க வேண்டும். கோவில் இருக்க வேண்டும். ஐடி நிறுவனங்கள் இருக்க வேண்டும். கேஎப்சிக்கள்,மெக்டிக்கள் இருக்க வேண்டும். டெர்பி,ஆலன் ஷோலி கடைகள் இருக்க வேண்டும். கூடவே நெல்வயல்கள், பம்ப்செட்டுகள், கூட எருமை மாடுகள் இருக்க வேண்டும்.

6 comments: