Thursday, July 25, 2013

ஒரு ரயில் பயணத்தின்போது

ரயிலுக்கும், எனக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதோ இங்கு இருக்கும் கூடுவாஞ்சேரிக்கு ஏன் டவுன் பஸ்சிலோ , ஷேர் ஆட்டோவிலோ போகாமல் எலக்ட்ரிக் ட்ரெயினில் போக வேண்டும்?

சனிக்கிழமை அலுவலகம் போறதை விட சள்ளை பிடித்த வேலை எதுவும் இல்லை. ஆனால் சனிக்கிழமை என்றால் நிதானமாக எழுந்து சன் டிவியோ, புதிய தலைமுறை செய்திகளையோ பார்த்து பதினோரு மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். ஆமாம் சனிக்கிழமை அலுவலகம் போறதால கூடுதல் சம்பளம் வர போகுதா என்ன? பதினோரு மணிக்கு கிளம்பும் எண்ணத்தில்தான் கண்விழித்தேன். ஆனால் விழித்ததும் நண்பர் ஒருத்தர் போன் செய்து விட்டார். படப்பையில் நிலம் தேடிக்கொண்டிருந்தார் அவர்.

"நீங்க கூடுவாஞ்சேரி வந்தீங்கனா அரை மணி நேரத்துல லேண்ட் பார்த்துட்டு உங்க ஆபீஸ்க்கு போயிடலாம்" என்றார். மறுக்க முடியாது. நிறைய உதவிகள் செய்துள்ள நெருங்கிய நண்பர்.

வடபழனியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு வழக்கம் போல அலுவலகம் செல்லும் நினைப்பில் தாம்பரம் இறங்கி விட்டேன். எனது அலுவலகம் தாம்பரத்தில் இருந்தது. மணி ஒன்பதரை. பதினோரு மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். சரி கூடுவாஞ்சேரிக்கு இன்னொரு பேருந்து பிடிக்கலாமென்று நினைத்தபோதுதான் தோன்றியது. எலக்ட்ரிக் ரயிலில் போனால் என்ன என்ற ஆசை. ரயிலில் சென்று பல வருடங்கள் ஆகின்றது. தாம்பரத்தில் டிக்கெட் எடுத்து ரயில் பிடித்தேன். தாம்பரம் பெருங்களத்தூர் வண்டலூர் ஊரப்பாக்கம் அடுத்து கூடுவாஞ்சேரிதான். மின்சார ரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. எனது எதிரே ஒரு பெரியவரும்,நடுத்தர வயதுக்காரரும் அமர்ந்து தினத்தந்தியை பகிர்ந்து படித்துகொண்டு வந்தார்கள்.

"ரயில்ல அடிப்பட்டான்னு சொல்றாங்க. அப்படி தெரியலையேப்பா" என்றார் பெரியவர்.

"ஆமா.உடம்ப பார்த்தா அப்படிதான் இருக்கு " என்றார் நடுத்தர வயதுக்காரர்.

அவர்கள் பேச்சிலிருந்து என்னவென்று யூகிக்க முடிந்தது .

கும்பகோணத்தில் நாங்கள் குடியிங்கியிருந்த பகுதியின் பெயர் மாதுளம்பேட்டை. பெயர்க்காரணம் எல்லாம் கேட்காதீர்கள். அது அப்படிதான். எங்கள் வீட்டின் பின்னால் கொல்லைப்புறத்தை தாண்டி (அரை ஏக்கரில் மா,தென்னை,புளியமரம்) தடுக்கி விழுந்தால் ரயில்வே கேட். இந்தப்பக்கம் தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள். அந்தப்பக்கம் சென்னை சீர்காழி மயிலாடுதுறையில் இருந்து வரும் ரயில்கள். எனக்கு தெரிந்து ஒரு ரயிலும் சத்தம் போடாமல் சென்றதில்லை. காட்டு மனிதனுக்கு குயில்களின் சத்தத்தை வைத்து அந்த குயில் கர்ப்பமாக இருக்கின்றதா என்று கணிக்க தெரியுமாம். அது போல எங்களுக்கு ரயில்களின் சத்தத்தை வைத்தே அது தெற்கில் இருந்து வருதா,வடக்கு நோக்கி போகுதா என்று ஊகிக்க முடியும். சத்தத்தை வைத்தே அது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸா அல்லது திருப்பதி நோக்கி போகுதா என்று தெரியும். அந்தளவு சத்தங்களும் நேரங்களும் பழகி விட்டிருந்தன.கடிகாரத்தை பார்க்காமல் ரயில்களின் சத்தத்தை வைத்தே மணி அஞ்சு அன்றோ ஒன்பது என்றோ சொல்லிவிடுவோம். அப்போதெல்லாம் ரயில்கள் ஓரளவுக்கு நேரம் தவறாமல் வந்துக் கொண்டிருக்கும் காலம். மழைக்காலம் ,புயல் சின்னம் ,மறியல் போன்ற சில விதிவிலக்குகள் தவிர.

முதன்முறையாக ரயிலில் அடிபட்ட மனிதனை பார்த்தபோது எனக்கு வயது ஏழு. இப்போது நினைத்தால் காட்சிகள் மங்கலாக இருக்கின்றன . மாதுளம்பேட்டையில் பழைய சாக்குத் துணிகளை ஏலத்தில் எடுத்து விற்கும் ஒரு நடுத்தர வயது மனிதர். குடும்பப்பிரச்சினை காரணமாக ரயில் முன்னே விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். தண்டவாளம் பக்கத்தில் கூட்டமாக இருந்தது. வீட்டுக்கு தெரியாமல் வேடிக்கை பார்க்க சென்று திரும்பியபோது செம அடி விழுந்தது என் அம்மாவிடம். அன்று காய்ச்சல் வந்துவிட்டது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு பார்த்தபோது இரண்டு கால்கள் துண்டாக கிடந்தன. சற்று தள்ளி ரத்தம். சற்று தள்ளி குப்புற கிடந்தார் அந்த சாக்குத்துணி வியாபாரி. பக்கத்தில் அவர் மனைவி தலைவிரி கோலமாக சத்தம் போட்டு அழுதுக் கொண்டிருந்தார். எனக்கு காய்ச்சல் வந்ததற்கு காரணம் அந்த கால்களை பார்த்ததினால் இல்லை. அந்த பெண்மணியை பார்த்துதான். எப்படி சொல்வது. பார்ப்பதற்கு பத்ரகாளி போல அவ்வளவு ஆவேசத்துடன் உக்கிரமாக இரண்டு கைகளால் தலையில் அடித்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தார். ஏழு வயது பையனுக்கு அது போன்றதொரு காட்சி கொஞ்சம் அதிகம்தான்.

அதன் பிறகு ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை பார்க்கும்போது எனக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்திருந்தது. நான் ஆறாவது வகுப்பு சென்றிருந்தேன். நாங்கள் மாதுளம்பேட்டையிலிருந்து ரயிலடிக்கு குடி பெயர்ந்தோம். கும்பகோணம் ரயில் நிலையத்தின் எதிரே தண்டவாளத்திற்கு அந்தப்புறமாக இருக்கும் தெருவை ரயிலடி என்பார்கள். ரயில் அடியில் இருப்பதால் ரயிலடி. ரயிலில் அடிபட்டு இறப்பவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம் அங்கு சென்ற பிறகுதான் மாதத்திற்கு ஒரு ரயில் சாவை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. மூன்று வருடங்கள் அங்கு குடி இருந்தோம். இருபது தற்கொலைகளை பார்த்திருப்பேன். ஆட்டுக்குட்டியை காப்பாற்ற வேண்டி ரயிலுக்கு முன்னே விழுந்து அடிப்பட்டு இறந்துப்போன சிறுவன். ஓடும் இரயிலிலிருந்து குதித்து எதிரே வந்த ரயில் முன்னே அடிப்பட்டு இறந்த பெண். கணவன் திட்டியதால் குழந்தையுடன் ரயில் முன்னே விழுந்து செத்த இரண்டு உடல்கள். பெண்ணுக்கு வளைக்காப்பிற்காக ஸ்வீட் பாக்கெட்டுகளுடன் வாங்கி வந்து திரும்பி தண்டவாளத்தில் கால் சிக்கி அடிப்பட்ட பெரியவர். ரயில் கிராஸிங்கிற்காக காத்திருக்கும்போது ரயிலில் இருந்து இறங்கி எதிரே இருக்கும் வெள்ளரித் தோட்டத்தில் வெள்ளரிப்பிஞ்சு பறிக்க சென்று எதிரே வரும் ரயிலில் அடிப்பட்ட சிறுமி. படிக்கட்டில் தொங்கியபடி சென்று எதிரே வந்த போஸ்ட் மரத்தில் அடித்து ரயில் பெட்டிகளுக்கு நடுவில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவன் . இன்னும் பலர்.சரியாக நினைவு இல்லை. ஆமாம் செத்த பிறகு எல்லாருடைய கைகளும், கால்களும் ஒரே மாதிரிதானே சிதறி கிடக்கும். நள்ளிரவில் ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்கள் ஆளில்லா பகுதிக்குள் இறப்பவர்களது நிலைமைதான் பரிதாபமாக இருக்கும். காட்டுக்குள் கை,கால்களை நாய்கள் இழுத்துக்கொண்டு வந்து எங்காவது கருவக்காட்டுக்குள் போட்டுவிடும். ஆடு மேய்க்கும் சிறுவர்கள் வந்து சொன்னால்தான் உண்டு. ஒருமுறை பக்கத்துக்கு வீட்டுப்பெண் அதிகாலையில் வாசல் தெளிக்க செல்லும்போது நாய் இழுத்து வந்த கையை பார்த்து தெருவே அமளியானது இன்னமும் நினைவில் உள்ளது.

எட்டாவது கோடை விடுமுறையில் நாங்கள் ரயிலடியை விட்டு வெகுதூரம் குடி பெயர்ந்திருந்தோம். எப்பவாவது ரயில் சாவுகளை கேள்விப்படுவதோடு சரி. நேரில் எதுவும் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை. ஆனால் சில வருடங்கள்தான் மீண்டும் ரயில் எனது வாழ்க்கையில் குறுக்கிட ஆரம்பித்தது. கும்பகோணத்தில் கணிப்பொறி படிப்புக்கென்று கல்லூரி இல்லாததால் தஞ்சாவூர் சென்று படிக்க வேண்டியதாகிவிட்டது. கும்பகோணத் திலிருந்து தஞ்சாவூர் ஒரு மணி நேர பயணம். தினமும் பேருந்தில் செல்ல முடியாது. கட்டணம் அதிகம். ரயில் என்றால் கல்லூரி மாணவர் என்று சொல்லி சலுகைவிலை பாஸ் வாங்க முடியும். கிட்டத்தட்ட மூன்று வருடம். ஆயிரம் நாட்கள் . போக வர நூறு கிலோமீட்டர்கள். ஒரு மனிதன் எத்தனை ரயில் சாவுகளை பார்த்திருப்பான். எத்தனை ரயில் சாவுகளை கேள்விப்பட்டிருப்பான். அவனுக்கு எத்தனை ரயில் டிரைவர்கள் ,டிடிஆர்க்கள் பழக்கமாகி இருப்பார்கள். எத்தனை புதிர்கதைகளை கேட்டிருப்பான். யூகித்து கொள்ளுங்கள்.

ஒரு நாள் மாலை தஞ்சாவூர் ரயில்வே காண்டீனில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் இருந்த ரயில் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மறுநாள் வேலையை ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார். என்னவென்று விசாரித்தேன். அவர் செங்கொட்டை எக்ஸ்பிரஸ் டிரைவர். காலை அவர்தான் வண்டியை எடுத்துள்ளார். திட்டை பக்கத்தில் வரும்போது தண்டவாளத்தின் இடதுபுறமிருந்து ஒரு இளைஞன் ஓடிவந்துள்ளான். வலதுபுறமிருந்து ஒரு பெண் ஓடிவந்து இரண்டு பேரும் அப்படியே தண்டவாளம் நடுவே கட்டிப்பிடித்து நின்றுள்ளார்கள். இது என்ன டவுன் பஸ்ஸா? நினைத்தவுடன் பிரேக் போட. இரண்டு பேரையும் தூக்கி எறிந்து விட்டதாம். காதல் தோல்வின்னா வேறு எங்கேயாச்சும் போய் சாகவேண்டியதுதானே. எதுக்கு நம்ம முன்னாடி விழுந்து கஸ்டப்படுத்தறாங்க என்றார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. கண்டிப்பாக இறந்துப்போன அந்த பெண் வயதில் ஒரு மகளோ ஒரு மகனோ அவருக்கு இருந்திருக்கலாம். இரயிலில் அடிபட்டு சாகும் தருணங்களில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் இறந்துப்போன மனிதர்களுக்கு நெருங்கியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் ரயில் ஓட்டுநர்களாகவே இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் கொலை குற்றவாளிகளை போல தங்களை உணர்கின்றார்கள் .                 

ஒரு நாள் மதியம் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றுக்கொண்டிருந்தேன். ரயில் நிலையத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நடைமேடை பெஞ்சில் அமர்ந்து தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் ரயில் வந்துக் கொண்டிருந்தது. நான் எழுந்து நின்றேன். பின்னால் ஏதோ சத்தம் . திரும்பி பார்ப்பதற்குள் அந்த வயிறு பெருத்த ஆடு தண்டவாளத்தில் பாய்ந்தது. அதன் வயிற்றின் அளவை வைத்து பார்த்தால் அது எப்படியும் இரண்டுக் குட்டிகளை போடும். நிறைமாதம் என்று ஊகிக்க முடிந்தது. கணநேரத்தில் எதுவும் தோன்றவில்லை. நாங்கள் எல்லாரும் அந்த ஆட்டை விரட்ட அது குழப்பமடந்து தண்டவாளத்தை விட்டு விலகி ஓடாமல் ரயிலை நோக்கி ஓட ஆரம்பித்தது. நிலையம் பக்கத்தில் என்பதால் ரயிலும் மெதுவாகத்தான் வந்தது. தூரத்திலிருந்து இதை கவனித்து விட்ட ரயில் டிரைவரும் மிக சாமர்த்தியமாக பிரேக் போட்டு நிறுத்தினார். ஆனாலும் ரயில் மிக சரியாக வந்து ஒரு அடி. ஒரே அடிதான். ஆடு சற்று எம்பி விழுந்தது. பத்து விநாடிகளில் மெல்ல அப்படியே கண்ணை மூடி இறந்துவிட்டது. ஆச்சர்யமாக ஒரேயொரு கீறல் கூட ஆட்டின் மேல் இல்லை. எனக்கு பக்கத்தில் இருந்த பெரியவர் பார்த்துவிட்டு வந்து சொன்னார். அந்த ஆடு ரயிலில் அடிபடவில்லை. அதிர்ச்சியில் இறந்துருக்கும்.

இன்னொரு முறை ரயிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே சென்றுக் கொண்டிருந்தேன். திடீரென பயங்கர சத்தம். ரயில் நிற்க பக்கத்துப்பெட்டிகளில் இருந்த எல்லாரும் கீழே குதித்து ஓடினார்கள். நானும் குழப்பத்துடன் ஓடி சென்று பார்த்தேன். ஸ்கூல் யூனிபார்ம் அணிந்திருந்த ஒரு மாணவன் உடல் கருவமரம் பக்கத்தில் கிடந்தது. தலையை மட்டும் காணவில்லை. தண்டவாளத்தில் ஒரு நசுங்கி போன டிபன் பாக்சிலி ருந்து சிதறிய தயிர்சாதம் கூட சிதறிப்போய் கிடந்த மூளை. அந்தக் காட்சியை பார்த்த இரண்டு மாதங்கள் என்னால் அசைவ உணவை கூட சாப்பிட முடியவில்லை.

ரயிலுக்கு வெளியே பார்த்தேன். கூடுவாஞ்சேரி போர்டு தெரிந்தது. இப்படி ரயிலில் அடிப்பட்டவர்களை பற்றிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் பழைய நினைவுகள் வந்து மனதை என்னவோ செய்கின்றது.

ரயிலில் அடிப்பட்டு இறந்த உடல்களை பார்க்கும்போதெல்லாம்,அது போன்ற செய்திகளை கேள்விப்படும்போதெல்லாம் ஏதோ ஒரு புதிரின் ரகசியங்களை அவிழ்ப்பது போல தோன்றும் எனக்கு. பேருந்தில் அடிப்பட்டு இறப்பவர்களுக்கும் ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. அது என்னைப் போன்ற ரயில் சாவுகளை நிறைய பார்த்த ஆட்களுக்கு நன்றாக அடையாளம் கண்டுப்பிடிக்க முடியும். இதில் எல்லாம் பெருமையா என்று கேட்காதீர்கள். ஏதோ சொன்னேன். அவ்வளவுதான்.

பேருந்தில் அடிபட்டு இறக்கும் உடல்களை பார்த்தால் பேருந்து அவர்களை உள்ளே இழுத்து அரைத்து தள்ளியது போல இருக்கும். ஆனால் ரயில் அப்படி செய்யாது. அது மனிதர்களை என்னிடம் வராதே போ அந்தப்பக்கம் என்று கடுப்புடன் சிதறடித்து வீசி விடும். கை கால்கள் சிதறி தள்ளி போய் விழுவார்கள். பேருந்தில் அடிபடுவர்களை பார்த்தால் அநேகமாக குடல் வெளிவந்து விடும். ஆனால் ரயில் விபத்தில் அதற்கான வாய்ப்பு குறைவு. கையோ,காலோ,தலையோ உடல் உறுப்புகள் ஒன்றாவது பிய்ந்து தனியாக வீசி தூக்கி எறியப்படும். மிகச்சரியாக இரண்டு துண்டுகளாக பிய்த்தெறியப்பட்ட ஒரு உடலை பார்த்துள்ளேன். ரயிலடியில் வசிக்கும்போது வீட்டு ஓனரின் ஆட்டுக்குட்டியொன்று ரயிலின் முன்பு விழுந்து அடிபட்டு விட்டது. குட்ஸ் ஷெட்டின் பக்கமாக தண்டவாளம் ஓரமாக ஆட்டுக்குட்டிகளை மேய விட்டதால் ஆர்பிஎப் போலீசார் அபராதம் கட்டச்சொன்னார்கள். அப்போது ஆர்பிஎப் போலீசார் வைத்திருந்த ஆறடி நீள காக்கிநிற பைகளை பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. அவர்களிடம் கேட்டபோது ரயிலில் அடிபட்டு சிதறி போகும் மனித உறுப்புகளை இதில்தான் பொட்டலம் கட்டி வைப்போம் என்றார். பிரேத பரிசோதனை முடிந்து உரியவர்களிடம் கொடுப்போம் என்றார். அப்படி ஒரு பையை பார்த்தது அபூர்வம். அதுவும் அடிப்பட்ட உடல்களை கட்டவென்றே பிரத்யேக பைகள் பைகள் செய்கின்றார்கள் என்பது வியப்பாக இருந்தது. தவிர ரயிலில் அடிப்பட்டால் உடல் ஒருவிதமாக கருத்து விடும். கிட்டத்தட்ட மின்சாரக்கம்பியை பிடித்தவர்கள் போல அட்டைக்கரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு கருப்பாக இருக்கும். உறைந்த ரத்தமும் கருத்துப் போய் இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட ரயில் சாவு கொடுமையானது என்று நினைக்கின்றேன். நீ ரயில்ல அடிபட்டுத்தான் சாவ என்று சாபம் விடும் ஆட்கள் நிறைய பேரை பார்த்துள்ளேன். எழுதுவதற்கும்,பகிர்வதற்கும் நிறைய சாவுகள் உள்ளன.

வெளியே பார்த்தேன் . கூடுவாஞ்சேரி நிலையம் . ரயிலை விட்டு இறங்கினேன். முதுகுக்கு பின்னால் இருவரும் இப்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து போன வாலிபரை விட்டுவிட்டு விவசாயம், லோன் தள்ளுபடி பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இது விபத்துதானா? கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி சாலையில் நடக்கும் வரை இளவரசனின் அந்த பிளவுண்ட முகமும் இது விபத்துதான் என்று மருத்துவர்கள் சொன்ன அறிக்கையுமே மனதில் அலை போல அடித்துக் கொண்டிருந்தது. சாலையில் இருந்த பெட்டிக்கடைகளில் எல்லாம் இளவரசன் படம் போட்ட செய்தித்தாள் போஸ்டர்கள் தொங்கின. லேசான காற்றோடு மழை வரும் போல மேகங்கள் திரண்டுக் கொண்டிருந்தன. மனது குழப்பமாக இருந்தது. தூரத்தில் ஒரு புள்ளிபோல எனது நண்பர் பைக்கோடு காத்திருந்தார்.

5 comments:

  1. மனது கனக்கும் நடை..

    ReplyDelete
  2. அடப்பாவி மனுஷா....ஒரு கொலை கேஸை இப்படி போட்டு உடைச்சிருக்கியே !
    தைரியம் தான் !

    ReplyDelete