Wednesday, May 21, 2014

ஒரு பீரோவின் வரலாறு

மலைகள்.காம் ஐம்பதாவது இதழில் எனது ஒரு பீரோவின் வரலாறு என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. மலைகள்.காமிற்கு நன்றி      

எங்கள் வீட்டில் ஒரு பழைய மரப்பீரோ இருந்தது. இப்போது அது எங்கள் வீட்டில் இல்லை. மதுரையில் இருக்கும் எனது பெரிய அண்ணனின் வீட்டுக்கு அதை தள்ளிவிட்டாச்சு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கடலூரில் வசிக்கும்போது கடிலம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக எனது அம்மா அடிக்கடி சொல்வார்கள். இப்போது எனது அம்மாவின் வயது எழுபது. அப்படி வெள்ளப் பெருக்கு வந்த தினத்தன்று எனது தந்தையும், அவரது நண்பர்களும் தங்கள் அலுவலக ஜீப்பை எடுத்துக் கொண்டு கடலூரின் சுற்றுப்பக்க கிராமங்களுக்குச் சென்றார்களாம். எனது அப்பா தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையில் அலுவலகராக பணியாற்றியதால் இந்த காலரா மருந்து கொடுப்பது, மலேரியா தடுப்பு ஊசி, யானைக்கால் வியாதிகளுக்கு மாத்திரை கொடுப்பது போன்ற வேலைகள் அவருக்கு. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் சேரிகளை பார்வையிட சென்றபோது கடிலம் ஆற்றில் பெரிய காட்டு தேக்கு மரம் வந்து ஒதுங்குவதை பார்த்துள்ளார்கள். அந்த காட்டு மரத்தை பற்றி எனது அம்மா, அந்த காலத்து ஆசாமிகள் எல்லாம் விவரிக்கும்போது காது கொடுத்து கேட்க முடியாது. அவதார் திரைப்படத்தில் வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த பெரிய கல்மரம் அளவுக்கு இருக்கும். அவர்கள் சொல்லும் கதையை வைத்து அப்படியே ஒரு வரலாற்று ஆவணப்படம் எடுத்துவிடலாம். அவ்வளவு விவரணைகளோடும், ஏராளமான நுண்ணிய அடுக்குகளுடன் கூடிய தகவல்களுடன் அந்தக் கதை இருக்கும்.

நல்லவேளை நான் அப்போது பிறந்திருக்கவில்லை. பிறந்திருந்தால் அந்த அதீதக்கதைகளை எல்லாம் அப்போதே சுக்குநூறாக உடைத்திருப்பேன். சரி. அடிச்சு விடுறாங்கன்னு கதை கேட்பேன். அதெப்படி கோடாலியால் கூட பிளக்க முடியாத ரம்பத்தால் கூட அறுக்க முடியாத மரம் இருக்கும்? அதென்ன மரமா? அல்லது கருங்கல் பாறையா? மரத்தை வெட்ட வெட்ட கோடாலிகள் உடைந்துப் போனதுதான் மிச்சம் என்று எனது அம்மா சொல்வார். என் அம்மா சொல்லித்தான் மரங்களின் வயதை எப்படி கணக்கிடுவது என்று எனக்கு தெரிய வந்தது. மரங்களை குறுக்காக வெட்டினால் வளையங்கள் வருமல்லவா? அந்த வளையங்களின் எண்ணிக்கையை வைத்துதான் மரத்தின் வயதை கணிப்பார்களாம். மாமரம் என்றால் குறைந்த வளையங்களும், ஆலமரம் என்றால் அதிக எண்ணிக்கையிலான வளையங்களும் இருக்குமென்று எனது அம்மா சொல்வார். வளையங்களின் எண்ணிக்கை பெருக பெருக அந்த மரத்துக்கு காற்றுக்கும், புயலுக்கும் தாக்குக்கொடுக்கும் திறன் அதிகரிக்கும். தேக்கு மரம் நூறாண்டுகள் தாண்டியும் வளரும் என்று சொன்னார்கள். சில மரங்கள் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும், சில மரங்கள் ஒவ்வொரு ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும் சொன்னார். அப்படியென்றால் ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் கூட இருக்குமல்லவா? கேட்டேன். இருக்கலாம். யார் கண்டது? இந்த பீரோ செய்ய எடுத்துட்டு வந்த மரமே நூறாண்டு பழமையானது என்று அம்மா சொன்னார். ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொருவித பொருட்கள் செய்ய உதவும். பனை மரமென்றால் உத்திரம் அமைக்கும் சட்டங்கள் செய்யவும், மாமரம் என்றால் சின்ன சின்ன நாற்காலி சட்டங்கள் செய்யவும், பலாமரமென்றால் இசைக்கருவிகள் செய்யவும் உதவும். இதெல்லாம் என் அம்மா சொல்லித்தான் தெரியும். ஒருமுறை நாங்கள் திருவண்ணாமலையில் குடியிருந்தபோது எங்கள் வீட்டு கொல்லைப்பக்கம் இருந்த பனைமரத்தில் இடி விழுந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். மழையிலும் மரம் பற்றிக்கொண்டு எரிந்தது. ஆனால் மாந்தோப்பிலோ, தென்னந்தோப்புகளிலோ இடி விழவில்லை. அது ஏன் பனைமரத்தில் மட்டும் சரியாக இடிவிழுந்தது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மற்ற மரங்களை விட பனை மரங்களுக்கு இடியை கடத்தும் தன்மை அதிகம். தென்னையை விட பனையின் வேரில் அதிகம் நீர் நிறைந்திருக்கும். அதனால் இடி வேகமாக இறங்குமென்று சொன்னார்கள். பனை மரம் மின்னலை கடத்தும் கடத்தி என்று பின்னாட்களில் கல்லூரியில் இயற்பியல் வகுப்பெடுத்த ஆசிரியரும் சொன்னார். சரி. அதெல்லாம் போகட்டும் கடிலம் ஆற்றில் கண்டெடுத்த மரத்தின் கதைக்கு வருகிறேன்.

அந்த மரத்தை ஐம்பது ஆட்கள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று நாட்கள் கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்தார்களாம். கயிற்றை நம்ப முடியாது. காட்டுக்கொடிகள் உறுதியானவை என்பதால் தடிமனான கயிறுகளோடு காட்டுக்கொடிகளையும் பிணைத்து வெள்ளத்திலிருந்து நாணல் புதர்கள் நிறைந்த கரைக்கு முதலில் இழுத்து வந்துள்ளார்கள். பிறகு கரையில் இருந்த பெரிய மரங்கள், பாறைகளோடு கயிற்றின் இன்னொரு நுனியை கட்டி வைத்துள்ளார்கள். மூன்றாம் நாள் ஆற்றில் வெள்ளம் குறைந்தபோது கூலிக்கு யானை கொடுக்கும் ஆட்களை தேடியுள்ளார்கள். ஆனால் மழைக்காலம் என்பதால் பெரும்பாலான யானைப்பாகன்கள் வரவில்லையாம். ஒருவழியாக எனது அப்பாவின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் கொசுமருந்து அடிக்கும் ஆட்கள் வழியாக அவர்கள் வசிக்கும் குப்பத்தில் இருந்து ஐம்பது பேர்களை திரட்டி ஆற்றங்கரைக்கு அழைத்து வந்து அந்த காட்டு மரத்தை கரையேற்றியுள்ளார்கள். பிறகு அந்த மரத்தை அரசு அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து வெட்டி ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டார்களாம். பெரிய துண்டுகளை எல்லாம் மேலதிகாரிகளும், கிளைத்துண்டுகளையெல்லாம் கீழ்நிலை அதிகாரிகளும் பிரித்துக்கொண்டார்களாம். அப்படி பிரித்ததில் ஒரு பெரிய துண்டு எங்க வீட்டுக்கு வந்தது. அந்த மரத்துண்டை வந்து பார்த்த உள்ளூர் ஆசாரிங்க வியந்து போய் தங்களால் இந்த மரத்தை செதுக்கி பீரோ செய்ய முடியும். ஆனால் தங்களுக்கு வேலைப்பாடுகள் செய்ய அவ்வளவாக வராது என்று கைவிரித்துவிட்டார்கள். பிறகு அப்பாவின் நண்பருக்கு தெரிந்த இரண்டு ஆசாரிங்க சிதம்பரத்திலிருந்து வந்தார்களாம். மரத்துண்டை ஒரு லாரியில் ஏற்றி சிதம்பரம் கொண்டுச்சென்று அங்கு அவர்கள் தச்சுப்பட்டறையில் வைத்து பீரோவுக்கான வேலைப்பாடுகளை செய்தார்களாம். பீரோவின் தலைப்பகுதியில் இரண்டுப்பக்கங்களிலும் இருந்து இரண்டு அன்னப்பறவைகள் எதிரெதிரே இடமும்,வலமும் அமர்ந்து முத்தமிட்டுக்கொள்வது வடிவமைப்பு இருக்கும். மயில் தரையில் அமர்ந்திருக்கும்போது அதன் நீண்ட தோகை மண்ணில் படிந்திருப்பது போன்றதொரு வடிவமைப்பை பீரோவின் கால்பகுதியில் செதுக்கியிருந்தார்கள். எனக்கு கால்பகுதியை விட தலைப்பகுதியைத்தான் அதிகம் பிடிக்கும். அந்த அன்னப்பறவைகள் முத்தமிட்டுக்கொள்வது சற்று கிளர்ச்சியை தூண்டுவது போன்று கூட இருக்கும். இப்போதிருக்கும் இரும்பு பீரோக்கள் போல இரண்டு கதவுகள் இருக்காது. ஒரே கதவுதான். இரண்டு கதவுகள் இருந்தால் மரத்தின் உறுதி போய்விடுமென்று யாரோ அனுபவம் வாய்ந்த ஆசாரி தச்சுப்பட்டறையில் சொன்னாராம். கதவின் இடுக்கு வழியாக காற்றின் ஈரப்பதம் நுழைந்து நாளடைவில் கதவின் இரண்டு பக்கங்களிலும் தேய்மானம் பூச்சி அரிப்பு வந்துவிடுமென்று ஆலோசனை சொன்னாராம். அப்பா சரியென்று ஒரே கதவை வைக்க சொல்லிவிட்டார். திண்டுக்கல்லிலிருந்து வரவழைக்கப்பட்ட பித்தளைப்பூட்டை கதவின் முனையில் பொருத்தியிருந்தார்கள். நாங்கள் இதுவரை குடியிருந்த எத்தனையோ வீடுகளில் இந்த பிரச்சினையை சந்தித்துள்ளோம். மழைக்காலம் வந்துவிட்டால் மரக்கதவு, ஜன்னல்களில் ஈரம் இறங்கி உப்பி விடும். கதவுகளை, ஜன்னல்களை தாழிட சிரமமாக இருக்கும். சரியாக தாழ்ப்பாளில் பொருந்தாது. ஆனால் இந்த பீரோவின் கதவை மட்டும் எப்படி நாற்பது வருடங்களாக எந்த சிறுப்பிரச்சினையும் இல்லாமல் தாழிட முடிகிறது என்று வியப்பாக இருக்கும்.

அந்த பீரோ செய்துவிட்டு மிச்சமிருந்த துண்டில் ஒரு கட்டிலும் செய்தார்கள். கட்டில் கூட அவ்வளவு விசேஷம் இல்லை. அந்த பீரோதான் என்னை எப்போதும் கவர்ந்திழுக்கும். எட்டடி உயரமும் ஐந்தடி கொஞ்சம் குறைவான அகலமும் இருந்ததா என்று சரியாக நினைவில்லை. பள்ளிக்கூட நாட்களில் தீபாவளி நேரம் நெருங்க நெருங்க காசு சேர்த்து வாங்கும் வெடிகளை எல்லாம் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். சிறுவர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய அறைகளை கொண்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொடுக்கும் ரூபாய்த்தாள்களை நானும், எனது அண்ணன்களும் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். நான் வைப்பதை அவனாலும், அவன் வைப்பதை என்னாலும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. இந்த பீரோ மரமாக இருந்தபோது இதில் எத்தனை குருவிகள் கூடுக்கட்டியிருக்குமென்று ஒருநாள் நினைத்துக்கொண்டேன். எத்தனையோ பாம்புகளும், பல்லிகளும், சிறுத்தைகளும் இந்த மரத்தில்தானே ஊர்ந்துச்சென்றிருக்கும். அப்போதெல்லாம் இந்த மரத்தில் வசித்த பறவைகள் தங்கள் முட்டைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க இப்படித்தானே ரகசிய பொந்துகளை உருவாக்கி அதில் மறைத்து வைத்திருக்குமென்று தோன்றியது. அப்பாவிற்கு அரசாங்க வேலை என்பதால் அடிக்கடி இடமாற்றம் செய்வார்கள். ஊர் ஊராக பெட்டியை கட்டிக் கொண்டு ஓடுவோம். நான் பிறந்த பிறகும் அப்படிதான். ஒவ்வொரு வாடகை வீடு மாறும்போதும் அந்த மரப்பீரோவை தூக்க ஐந்து பேர் வேண்டும். பொணக்கணம் என்பார்களே. அது இதுதான். இந்த பீரோவோ இந்தக்கணம் இருக்கே. அந்த பெருமரம் எப்படியிருந்திருக்கும் என்று யோசிக்கவே மலைப்பாக இருக்கும்.

அப்பா, அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம். நான் பிறந்தது கூட கும்பகோணத்தில்தான். அப்பாவை கடலூரிலிருந்து கும்பகோணத்துக்கு பணி மாற்றம் செய்ததில் அம்மாவுக்குதான் சந்தோஷம். ஊர் ஊராக அலைந்துக்கொண்டிருக்காமல் கும்பகோணத்துக்கே வந்தாச்சே. வந்து இரண்டாவது வருடம் நான் பிறந்தேன். மருத்துவமனையிலிருந்து ரிக்சா பிடித்து வீட்டுக்கு வந்து தொட்டிக்கட்டி என்னை போடும்போது கண்டிப்பாக அந்த பீரோ இதேதுடா புதுவரவு வந்திருக்கு என்று என்னை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கும். நானும் அந்த பளபளவென்று மின்னும் பீரோவை பார்த்து சிரித்திருக்கலாம். இதென்ன எல்லாரும் நகர்கிறார்கள். இது மட்டும் நகராமல் இருக்கே என்னவென்று எனது பாஷையில் கேட்க எல்லாரும் குழப்பத்தோடு எனது தொட்டிலுக்கு மேலே கிலுகிலுப்பையை ஆட்டி எனக்கு விளையாட்டு காட்டியிருக்கலாம். நினைவில்லை. ஆனால் முதல்முதலில் என் கையில் கிடைத்த ஸ்டிக்கரை கொண்டு வந்து அந்த பீரோவில் ஒட்டியது இன்னமும் நினைவில் உள்ளது. ஒருநாள் பாய் கடையில் பபிள்கம் வாங்கும்போது பாய் இலவசமாக ஒரு ஸ்டிக்கர் கொடுத்தார். அந்த ஸ்டிக்கரில் இருந்த உருவத்தை பார்த்து எனது பள்ளிக்கூட நண்பன் பால்ராஜ் இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றான். அப்போதெல்லாம் எங்கள் தெருவில் ஏன் எங்கள் ஊரிலேயே தொலைக்காட்சிகள் அவ்வளவாக இல்லை. சினிமா திரையரங்குதான் ஒரே பொழுதுபோக்கு. பிறகு நான் அம்மாவுடன் சினிமா செல்லும்போதெல்லாம் ரஜினி நடித்த திரைப்படத்துக்கு அழைத்துச்செல்ல அடம்பிடிக்க ஆரம்பித்தேன். பில்லா, பொல்லாதவன், முரட்டுக்காளை என்று நிறைய ரஜினி படங்கள் அடிக்கடி வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. பெட்டிக்கடைகளில் எல்லாம் மிட்டாய் வாங்கினால் ரஜினி ஸ்டிக்கர்கள் இலவசமாக கிடைக்கும். அல்லது பத்துகாசு கொடுத்தால் ஐந்து ஸ்டிக்கர்கள் விற்றார்கள். அதை எல்லாம் வாங்கி வந்து பீரோவில் ஒட்டுவேன். அதுக்காக பலமுறை வீட்டில் அடிவாங்கியுள்ளேன். ஸ்டிக்கரை கிழித்தெடுக்கும்போது பீரோவில் நகக்கீறல்கள் பட்டு தேய்வு ஏற்பட்டது. அதை தவிர்க்க ஸ்டிக்கரை கையால் கிழித்துவிட்டு ஈரத்துணியை வைத்து தேய்த்து அழுத்தினால் ஸ்டிக்கர் பிசிறுகள் மறைந்துவிடும். ஆனால் அந்த இடம் மட்டும் கரை படிந்தது போல அசிங்கமாக இருக்கும். ஒருநாள் போகிப்பண்டிகை என்று நினைக்கிறேன். ஒரு ஆசாரி வந்தார். பீரோவை நான்கைந்து பேர்கள் வீட்டுக்கு வெளியே தூக்கிச்சென்று வைத்தார்கள். அந்த ஆசாரி கையில் இருந்த உப்புத்தாளால் பீரோ எங்கும் தேய்த்தார். இப்போது பீரோவின் பளபளப்பு சுத்தமாக இல்லை. பிறகு நான் பள்ளிக்கூடம் சென்று வந்து பார்த்தபிறகு அந்த பீரோ பளபளவென்று முன்னைக்காட்டிலும் மின்னிக்கொண்டிருந்தது. அது பெயின்ட் இல்லை. வார்னிஷ் என்று பால்ராஜ் சொன்னான். அவங்க வீட்டு பீரோவில் கூட அப்படித்தான் நான்கைந்து வருடங்களுக்கு ஒருமுறை வார்னிஷ் அடிப்பார்களாம். ஆனால் எனக்கு விபரம் தெரிந்து இரண்டு முறை மட்டுமே பீரோவுக்கு வார்னிஷ் அடித்தோம். தேக்கு மரங்களுக்கு இயல்பிலேயே எண்ணெய் கசிந்து பளபளப்பு விடும் தன்மை உண்டு. அதனால்தான் பீரோ இப்படி பளபளப்பாக இருக்கிறது என்று அப்பா சொல்வார்.

எனது அப்பா இறந்தபிறகும் ஒவ்வொரு வீடாக அந்த பீரோவை தூக்கிக் கொண்டு சுற்றியலைந்தோம். கட்டிலை தூக்குவதில் எங்களுக்கு சிரமம் இருக்கவில்லை. கட்டில் சட்டங்களை கழற்றி மாட்டிவிடும் வசதி இருந்தது. நான்கு பெரிய நீண்ட எக்கு ஆணிகளை மட்டும் ஸ்பேனர் வைத்து கழற்றி விட்டால் போதும். நான்கு கால்களும் இரண்டிரண்டாக வந்துவிடும். நான்கு பெரிய நீள் பக்கவாட்டு சட்டங்களையும், குறுக்குவாட்டு சட்டங்களையும் இரண்டு ஆட்கள் தாராளமாக தூக்கி சுமந்து நடந்து செல்லலாம். ஆனால் அந்த பீரோதான் தொல்லை செய்யும். கட்டிலை எனக்கு பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் உள்ளது. எங்க பாட்டி மரணித்தபோது அந்த கட்டிலில்தான் படுத்திருந்தார். அப்பாவும் பக்கவாதம் வந்து ஆறுமாதங்கள் அந்த கட்டிலில்தான் கிடந்தார். படுக்கும் மெல்லிய அட்டை மூத்திரம் இறங்கி ஊறிப்போய் சொதசொதவென்று இருக்கும். அதெல்லாம் பலவருடங்கள் முன்பு நடந்த கதை.

அப்பா இறந்தபிறகு எனது கல்லூரி மேற்படிப்பும் முடிய நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது சென்னையில் வளசரவாக்கத்தில் குடியிருக்கின்றோம். இத்தனை வருடங்களில் அப்பாவின் சாம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு வாங்கியதில்லை. எல்லாமே வாடகை வீடுகள்தான். அப்பாவுக்கு தெரிந்த ஆட்கள் ஒருமுறை காட்டில் இருந்து மலைத்தேன் எடுத்து வந்து தந்தார்கள். பிறகு சந்தனக்கட்டை வந்தது. கோடைக்காலங்களில் அதைத்தான் வேர்க்குருவுக்கு அரைத்து தேய்ப்போம். பிறகு காட்டுப்பலாக்கள் வரும். அப்பா அரசு அதிகாரியாக இருந்ததால் இப்படி எத்தனையோ பொருட்கள் வந்துக்கொண்டே இருக்கும். ஆனா கடைசி வரை அவர் ஏன் சொந்த வீடு எதுவும் வாங்கியதில்லை என்று நினைத்தால் எனக்கு அவர் மீது கோபம்தான் வரும். நாங்கள் இதுவரை எத்தனையோ முறை வீடுகள் மாறியுள்ளோம். ஒவ்வொரு முறையும் வீடு மாறும்போதும் அந்த பீரோவை தூக்கிக்கொண்டு அலைந்தோம். முன்ன போல இப்ப யாருங்க மரப்பீரோ வச்சிருக்காங்க? இப்ப எல்லாம் ஸ்டீல் பீரோ வந்தாச்சு. தூக்கிப்போட்டு வேற வாங்குங்க என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். அந்த பீரோவை பார்க்கும்போதெல்லாம் எனக்கும் எங்க அம்மாவுக்கும் பெரிய சண்டையே நடக்கும்.

“உனக்கு இதோட வரலாறு தெரியாது” என்பார்.

“என்ன பெரிய நெப்போலியன் வரலாறு? திருட்டுத்தனமா ஆத்துல இறங்கி கவர்மென்ட்டுக்கு தெரியாம காட்டுமரத்தை அமுக்கிட்டு வந்த ஆளுதானே?” என்று திட்டுவேன்.

வாடகைக்கு வீடு மாறுவது போன்ற கொடுமையான விஷயங்கள் எதுவும் இல்லை. சென்னைக்கு நான் வந்த புதிதில் இங்கு சேரிகளிலும், கூவம் கரையோரங்களிலும் வசிக்கும் சிலரை பார்த்துள்ளேன். அவர்களிடம் மரச்சாமான்கள் எதுவும் இருக்காது. மிஞ்சிப்போனால் ஐந்தாவது படிக்கும் பையன் கூட தூக்கி சுமக்குமளவுக்கு எடை கொண்ட சின்ன மர நாற்காலி இருக்கும். அவ்வளவுதான். அவர்களிடம் இருப்பதெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள், எளிதில் மடக்கக்கூடிய இரும்பு கட்டில்கள், தகர பீரோக்கள். சென்னையில் வசிக்கும் சேரி மக்கள் தவிர பெரும்பாலான நடுத்தர மக்கள் கூட இப்படி தங்களை சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் எளிமையாகவே வைத்துள்ளார்கள் என்று நினைக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தலைக்கு மேலே பறக்கும் போர் விமானங்கள் சத்தம் கேட்டதும் குடுகுடுவென்று கைக்கு கிடைத்த பொருட்களுடன் ஓடிச்சென்று பதுங்குகுழிக்குள் மறைந்துக்கொள்ளும் மனித எலிகள் போலவே சென்னை மக்கள் தெரிந்தார்கள். புதுவீடுகளுக்கு குடிமாறுபவர்களை சென்னையில் வீதிக்களில் பார்த்துள்ளேன். சேரிகளில் வசிப்பவர்கள் என்றால் அதிகபட்சம் ஒரு மீன்பாடி வண்டியோ, தள்ளுவண்டியோ போதும். நடுத்தர மக்கள் வீட்டை காலி செய்யும்போது மினிலாரி போதும். ஆனால் எங்கள் வீட்டுக்கு ஒரு லாரி தேவைப்படும். தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள். குடைத்துணி இல்லாத வெறும் குடைக்காம்புகள், எப்போதோ நாங்கள் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகள். (அவையெல்லாம் எங்கள் குழந்தைகள் வைத்து விளையாட அம்மா பத்திரமாக எடுத்து வைத்திருந்தாள்) இதெல்லாம் போதவில்லை என்று அந்த பொணக்கனம் இருக்கும் பீரோ. உண்மையில் சவத்தை சுமப்பது போலவே நாங்கள் ஒவ்வொரு முறையும் அந்த பீரோவை சுமந்துக்கொண்டு அலைந்தோம். நகரத்தில் சுமை தூக்கும் கூலியாட்கள் கிடைப்பதே அபூர்வம். அதுவும் அவர்கள் என்ன கிராமத்து ஆட்கள் போல நல்ல ஆஜானுபாகுவாகவா உள்ளார்கள்?

சென்னை வந்த இந்த பதினைந்து வருடங்களில் வளசரவாக்கத்திலேயே நாங்கள் ஐந்து முறை வீடு மாறிவிட்டோம். சென்னையில் இன்னொரு விநோதமான பழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு குடியிருப்பவர்களுக்கு இல்லாத தொல்லைகள் கொடுப்பார். ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டில் குடியிருப்பவரே வீட்டின் உரிமையாளர் ஆகி விடுவார் என்று பாழப்போன நம்பிக்கையை யாரோ தவறாக எப்போதோ எங்கோ சொல்லியிருந்தார்கள். அதை நம்பிக்கொண்டுதான் சென்னையில் இருக்கும் வாடகைக்கு வீடு விடும் மனிதர்கள் அப்படி நடந்துக்கொள்கின்றார்கள்.

ஒருமுறை மதுரையிலிருந்து எனது பெரிய அண்ணன் வந்திருந்தார். அவர் முப்பது வருடங்களுக்கு முன்பு மதுரையில் செட்டில் ஆனவர். மதுரையில் சொந்த வீடு வைத்துள்ளார். அவரிடம் எனது கஷ்டத்தை சொல்ல அவர் இந்த பீரோவை நான் எடுத்துட்டு போறேன் என்றார். அம்மாவுக்கு அந்த பீரோவை அண்ணனிடம் கொடுக்க விருப்பமில்லை. நான்தான் அவரை திட்டி சம்மதிக்க வைத்தேன் அப்படியே அதே மரத்துல செஞ்ச இந்த கட்டிலையும் தூக்கிட்டு போங்க என்று சொன்னேன். எனக்கு அந்த கட்டிலை பார்க்கும்போதெல்லாம் இறுதிவரை ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியாமல் கடைசிக்காலத்தில் பக்கவாதம் வந்து கட்டிலில் படுத்து இறந்துப்போன அப்பாவும், அவரது மேலுள்ள எனது வெறுப்பும் நினைவுக்கு வரும்.

போரூரில் அண்ணனுக்கு தெரிந்த லாரி சர்வீஸ் ஆட்கள் இருந்தார்கள். அவர்களிடம் சொன்னோம். போரூரில், வளசரவாக்கத்தில், கே.கே.நகரில் எங்குமே சுமை தூக்கும் ஆட்கள் இல்லை. ஒருவழியாக லாரி சர்வீஸ் ஆட்கள் எங்கேயோ அலைந்து தேடி மூன்று பேர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு வந்தவர்களிடம்

நான் எட்டு ஆட்கள் இல்ல கேட்டேன் என்று சொன்னேன்.

எட்டா? இந்த பீரோவை தூக்க மூன்று பேர் போதுமே. நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க என்று அலட்சியமாக சொன்னார்கள். நான் எதுவும் பேசாமல் சட்டையை அணிந்துக்கொண்டு தெருமுனையில் இருந்த கடைக்கு சென்று சிகரெட் பிடித்து வீட்டுக்கு திரும்பி வரும்போது அந்த ஆட்கள் மிகவும் சோர்ந்துபோய் வெயில் காலத்தில் நாக்கு வெளியே தள்ளி மூச்சு வாங்கும் நாய் போல தெரிந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்தது. அதென்ன மரமா? பாறையில் செய்த கல் பீரோ ஆச்சே. பிறகு எப்படியோ கூடுதலாக ஆட்களை அழைத்து வந்து பீரோவை லாரியில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தோம். வீட்டுக்குள் நுழைந்தபோது பீரோ, கட்டில் இருந்த இடம் வெறுமையாக இருந்தது. நிம்மதியாக இருந்தாலும் மனதை ஏதோ செய்தது. பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஊரிலிருந்து எனது அண்ணி போன் செய்தார்கள். அம்மாவிடம் பேசிவிட்டு என்னிடம் பேசினார்கள்.

“என்ன அண்ணி. அந்த பீரோ நல்லபடியா வந்துச்சா? அதை வீட்டுக்குள்ள எடுத்துட்டு வர்றதுக்குள்ள உயிர் போயிருக்குமே?” என்று சிரித்தபடியே கேட்டேன்.

“நீங்க எல்லாம் சுத்த வேஸ்ட்டுடா. ஒரு மரப்பீரோவை தூக்க முடியுதா? ஒருத்தன் வந்தான். உங்க அண்ணனுக்கு தெரிந்த நண்பர் அவனை எங்கேயோ ஆவணிவீதியிலிருந்து அழைத்து வந்திருந்தார். அவன் அந்த பீரோவை அப்படியே முதுகில தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டு போயிட்டான்”

“என்னது? பீரோவை முதுகிலேயே தூக்கிட்டு வந்தானா?

“ஆமா. ஒரே ஆள். பார்க்க கடோத்கஜன் மாதிரி இருந்தான். அவன் தனியாத்தான் வந்தான். அவன்தான் தனியாவே பீரோவை முதுகில தூக்கிட்டு வந்தான்”

“சான்ஸே இல்லை அண்ணி. அதெப்படி அந்த பீரோவை ஒரு தனி ஆள் லாரியில இருந்து இறக்க முடியும்?”

“நான்கைந்து பேர்கள்தான் இறக்கினாங்க. ஆனா அவன் தனியாகத்தான் முதுகில தூக்கிட்டு வந்தான்”

“ஐயோ..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியலை”

எனது அண்ணி சிரித்தபடியே, ‘அது பெரிய கதை. லாரி சர்வீஸ் ஆளுங்க பக்கத்துக்கு தெருவிலேயே பீரோவை இறக்கி வச்சுட்டாங்க. தெரு குறுகலா இருந்ததால வீட்டு வாசல் லாரிய எடுத்துட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. தெருமுனையிலேயே லாரியை நிறுத்திட்டாங்க. டிரைவரும், கிளீனரும் லாரியோட பின் கதவை திறந்து ஒரு பெரிய பலகையை தரைக்கும்,லாரியின் உடம்புக்கும் இடையே சரிவாக வச்சாங்க. அப்புறம் பீரோவோட அடிப்பாகத்துல கால்மிதிக்கற துணியை வச்சாங்க. லாரி மேல இருந்து மூன்று ஆட்கள் பீரோவை மெதுவா பலகையில சரிச்சுட்டே வர கீழேயிருந்து மூன்று பேர் பிடிச்சு கொஞ்ச கொஞ்சமா இறக்கி வச்சுட்டாங்க. எல்லாருக்கும் வேர்த்து விறுவிறுத்து போச்சு”

அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு காட்டு யானைகளை லாரியில் ஏற்றிச்சென்று சரணாலயங்களில் இறக்கி விடும் காட்சி நினைவுக்கு வந்தது.

“அப்புறம் என்ன நடந்தது?”

அந்த பீரோவை இறக்கி வச்சுட்டு லாரி சர்வீஸ் ஆளுங்க போயிட்டாங்க. அரைமணிநேரம் கழிச்சு அந்த கடோத்கஜன் ஆள் வந்தான். அவன் கையில் பெரிய தாம்புக்கயிறு வச்சிருந்தான். இன்னொரு கையில போர்வை மாதிரி பெரிய துணி இருந்துச்சு. அவன் சட்டையை கழற்றி வச்சுட்டு அந்த துணியை உடம்பில சுத்திக்கிட்டான். அப்புறம் அந்த தாம்புக்கயிற்றை இரண்டா மடிச்சு சுருக்கு மாதிரி செஞ்சான். அவன் சுருக்கு போட்ட விதமே விநோதமா இருந்துச்சு. ஒரு நொடியில சரசரன்னு கயித்தை இரண்டா மடிச்சு வளையம் போல பின்னி வச்சுட்டான். அது கொக்கி போல இருந்துச்சு. நெல் மூட்டை தூக்குறவங்க கையில வச்சிருக்கும் இரும்பு கொக்கி போலவே அந்த துணி சுருக்கு இருந்துச்சு. அப்புறம் பீரோவோட பின்பக்கம் போனான். அந்த கயித்தை அப்படியே பீரோ குறுக்கால வச்சு அந்தப்பக்க முனையை வலது கையிலேயும், இந்தப்பக்க முனையை இடது கையிலேயும் பிடிச்சுக்கிட்டான். அப்படியே முன்னால குனிஞ்சு கயித்தை இறுக்கி பீரோவை கொஞ்சம் கொஞ்சமாக முதுகுக்கு சாய்ச்சுக்கிட்டான். அப்படியே அலேக்காக உப்பு மூட்டை மாதிரி முதுகிலேயே தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டான்”

எனக்கு வயிற்றில் அமிலம் பெருகியது.

“விளையாடாதீங்க..ஒரே ஆளா? திரும்ப கேட்டேன்”

“நான் என்ன பொய்யா சொல்றேன். வேணா உங்க அண்ணன்கிட்ட கேளு” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

என்னால் நம்ப முடியவில்லை. ஒரே ஆள் எப்படி அந்த பீரோவை தூக்கினான். எனது அம்மாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒரு ஆள் கண்டிப்பாக தூக்க முடியாது. அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும். ஏன்னா இருபத்தைந்து வருடமாக அந்த பீரோவை எனக்கு தெரியும். அம்மாவுக்கு ஐம்பது வருடங்களாக பீரோவை தெரியும். சரி அண்ணி ஏதோ விளையாட்டு காட்டுறாங்க என்று அண்ணனிடம் கேட்க அவரும் அதையேத்தான் போனில் சொன்னார். ஒரு ஆள்தான். எப்படி தூக்கினான்னு எனக்கும் தெரியல. முதுகில தூக்கிட்டு வந்துட்டான் என்றார். நான் அந்த ஆளை ஆறடி உயரம். கருப்பு நிறம். அர்னால்டு போல கற்பனை செய்துக் கொண்டேன். ஆனால் அந்த கற்பனை எதுவும் பொருந்தவில்லை. எனக்கு இப்போது கடிலம் ஆறு, ஆற்றில் மிதந்து வந்த காட்டு மரம், மன்னர்களுக்கு மர சிற்பங்கள் செய்த தச்சு ஆசாரிங்க கதைகள், எனது பால்யகால கதைகள் எல்லாமே பின்னுக்கு சென்றுவிட்டன. எங்கு திரும்பினாலும் பீரோவை தூக்கிய அந்த மாவீரனே கண்ணுக்குள் நின்றான். அந்த சம்பவம் நடந்து இன்றோடு பத்து வருடங்கள் ஆகின்றன. அன்றிலிருந்து அந்த பேய் பீரோவை தூக்கின அந்த காட்டு மனுசனை சந்திக்க வேண்டும். அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி ஆர்வம் தோன்றும். ஆனால் எங்கே மதுரைக்கு செல்வது? ஓயாத வேலை. நிமிர்ந்து பார்ப்பதற்குள் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. இந்த பத்து வருடங்களில் சென்னையில் சொந்தமாக அடுக்குமாடி வீடும், காரும் வாங்கியிருந்தேன். அம்மாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அம்மாவுக்கு ஒருவகையில் நிம்மதி. அந்த மரப்பீரோவை யாரோ முகம் தெரியாத ஆளிடம் விற்காமல் அண்ணன் வீட்டில் பத்திரமாக உள்ளதை நினைத்து.

இன்று காலை ஏதோ ஒரு விஷயமாக நான் மதுரையில் வசிக்கும் அண்ணனின் நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “இப்ப எல்லாம் கூலிக்கு ஆளுங்க கிடைக்கவே சிரமமா இருக்கு. வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. ஆளுங்க தேடினா கிடைக்க மாட்டேங்குறாங்க” என்று சொன்னார். அப்போது நான் பலவருடங்கள் முன்பு பீரோவை ஒத்தையாக தூக்கின ஆளை பற்றி விசாரித்தேன்.

“அந்த ஆள் செத்துப்போய் ஒரு வருடம் ஆச்சு. தல்லாக்குளம் டாஸ்மாக் கடை வாசலில் ரத்த வாந்தி எடுத்தே செத்து போனான். அளவுக்கு மீறிய குடி”

மனதுக்கு சங்கடமாக இருந்தது. இனி என்னால் அவனை சந்திக்க முடியாது. இப்போது நினைத்தால் கூட நான் ரயிலையோ, விமானத்தையோ பிடித்து மதுரை சென்று அண்ணனின் வீட்டில் இருக்கும் அந்த பீரோவை பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் என்னால் ஒருபோதும் மனதில் இருக்கும் அந்த மாவீர பிம்பத்தை நேரில் பார்க்கவே முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு ஏதோவொரு பறவை அடர்ந்த காட்டின் ஊடாக பறந்துச்சென்றிருக்கும். அப்படி பறக்கும்போது அதன் எச்சம் அந்த காட்டில் விழுந்து அதிலிருந்து விருட்சமொன்று முளைத்திருக்கலாம். அது எத்தனையோ மழை,புயல், இடி,வெள்ளப்பெருக்கை பார்த்திருக்கலாம். நூற்றாண்டுகள் பழமைமிக்க அந்த விருட்சத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட துண்டுகள் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு கதைகளை சுமந்துக்கொண்டு திரிய போகிறதென்று அந்த பறவைக்கு அப்போது தெரிந்திருக்குமா? தெரியவில்லை. எல்லாமே வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்றுக்கதைகளையும், எல்லா வணக்கத்துக்குரிய பிம்பங்களையும் கால் அடி உயரம் கூட இருக்காத இந்த டாஸ்மாக் பாட்டில் அடித்து விட்டதே என்று நினைக்கும்போது வியப்பிலும் வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்று கதாநாயகர்களும் சாதாரணத்திலும், சாதாரணமாக செத்துப்போனதை போல.

1 comment: