Thursday, September 25, 2014

புலி விளையாட்டு

காட்டில் வேடிக்கை பார்க்கச்சென்றவனை
எதேச்சையாக கவனிக்கும்
புலியொன்று அடித்துக்கொல்கிறது


அதை கவனிக்கும்
இன்னொரு மனிதன்
தனது அலைபேசியில்
கவனமாக பதிவு செய்கிறான்

அடுத்த ஐந்து நிமிடங்களில்
அந்த பதிவு நகரமெங்கும் பரவுகிறது
இணையம், பத்திரிக்கை, தொலைக்காட்சி
என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது

கருணையற்ற வேட்டைக்கண்கள் முன்பு
தனது கைகளை கூப்பியபடி அமர்ந்திருக்கும்
மனிதனின் இறுதிக்கணத்தை பார்த்து
நகரத்தின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள்

காப்பாற்றாமல் படம் எடுத்தவனின்
பொறுப்பற்றத்தனத்தை
திட்டி தீர்க்கிறார்கள்

அப்படி செய்திருந்தால்
அவனையுமல்லவா புலி கொன்றிருக்குமென்று
சிலர் வாதாடுகிறார்கள்

புலி அடித்த மனிதனை பற்றிய
விதவிதமான ஊகங்கள் நகரெங்கும் பரவுகின்றது

அவன் தற்கொலை செய்ய
உத்தேசித்து காட்டுக்குச்சென்றவன்

என்னதான் இருந்தாலும்
புலி அப்படி செய்திருக்கக்கூடாது

புலி பயந்திருக்கும்

அந்த மனிதன் எதற்கு
புலியின் வீட்டுக்குள் செல்ல வேண்டும்

புலியை எல்லாம் கைது செய்ய முடியுமா?
என்னதான் இருந்தாலும் தப்பு அந்தாளு மேலதான்

எவ்வளவு நுட்பமாக பதிவு செய்திருக்கிறான்
கண்டிப்பாக கேனான் கேமராவேதான்

புலிக்கும் அவனுக்கும்
இடையே நடந்த இறுதி உரையாடல்
தெரிந்துக்கொள்ள நகரமக்கள் விழைகிறார்கள்

தனது வாழ்வின் இறுதியில்
ஏன் புலியை பார்த்து கும்பிட்டான்
படம் எடுத்தவனை பார்த்து கும்பிடவில்லை

புலி ஏன் பத்து நிமிடங்கள்
அமைதியாக காத்திருந்து பிறகு தாக்கியது

புலிக்கும் அவனுக்குமான
அந்தரங்கத்தை அறிந்துக்கொள்ள
முடியாமல் மீண்டும் மீண்டும் வீடியோவை
பார்த்து குழம்பி தவிக்கிறார்கள்

புலி அடித்த மனிதனுக்காக
ஒருக்கணம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்

இனி யாரும் புலியுடன் பேசக்கூடாது என்று
தங்கள் குழந்தைகளுக்கு போதனை செய்கிறார்கள்

இது எதுவும் தெரியாத புலி
நகரின் எல்லையில் இருக்கும் வனத்தில்
ஒரு ஜென்துறவி போல
தனிமையின் சூன்யத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதனிடம் எந்த தத்துவச்சிக்கல்களும் இல்லை
எந்த கேள்விகளும் இல்லை
எந்த குற்றவுணர்வும் இல்லை
எந்த பெருமிதமும் இல்லை
கனவுகள் இல்லை
அடுத்தவேளைக்கான
இரை பற்றிய கவலை கூட இருப்பதாக தெரியவில்லை
அடுத்து செய்யக்கூடிய திட்டம் எதுவுமில்லை
அது மனிதனல்ல
அது வெறும் புலி
அவ்வளவே

1 comment: