Friday, October 10, 2014

கவலைகள்

என்னிடம் பத்து கவலைகள் இருந்தன
உன்னிடம் ஐந்து கவலைகள் இருந்தன
நாம் இருவரும்
மாலைப்பொழுதொன்றில் சந்தித்தோம்
மதுபான விடுதியில் அமர்ந்தபடி
ஆளுக்கொரு மதுவை வரவழைத்தோம்
நமது கவலைகளை ஒவ்வொன்றாக
முன்னால் இருந்த தட்டில் கொட்டினோம்

உன்னிடம் இருப்பது ஐந்துதான்
ஆனால் ஐநூறு கவலைகளுக்கு சமமென்றாய்
உன்னை சமாதானப்படுத்த வேண்டி
உன்னிடம் இருந்த ஒரு கவலையை
எடுத்து மென்றபடி ஒரு மிடக்கு விழுங்கினேன்
இப்போது உன்னிடம் நான்கு
என்னிடம் அதே பத்து

உனது கவலைகளோடு ஒப்பிட்டால்
எனது கவலைகள் அனைத்தும்
அற்பத்திலும் அற்பமென்றாய்

நான் கோபத்தின் உச்சத்தில்
இன்னொரு மிடறு விழுங்கையில்
நீ செய்த காரியம் அதிஅற்புதமானது
எனது தட்டில் இருந்த ஒரு கவலையை
என்னை கேட்காமலேயே எடுத்து வாயில் போட்டுக்கொண்டாய்
எனது கவலைகளில் ஒன்று குறைந்துப்போனது

உனது தட்டில் இருந்த நான்கு கவலைகளை
எனது பக்கம் நகர்த்தி வைத்தாய்
எனது தட்டில் இருந்த ஒன்பது கவலைகளை
உன் பக்கம் நகர்த்த எனக்கு தயக்கமாக இருந்தது

நீண்ட யோசனைக்கு பிறகு இருவரும்
பொது உடன்படிக்கையொன்றை செய்துக்கொண்டோம்
மீண்டும் ஒரு போத்தல் வரவழைத்தோம்

இரண்டு தட்டில் இருந்த கவலைகளையும்
ஒரே தட்டுக்கு இடம்மாற்றினோம்
இருவரும் மதுவருந்ததொடங்கும்போது
நமது தட்டில் பதிமூன்று கவலைகள் இருந்தன
அதை எப்படி சரிசமமாக பங்கிட்டுக்கொள்வதென்று
இருவரும் குழம்பி தவித்தோம்
இறுதியில் பார்த்துக்கொள்ளலாமென்று
ஆளுக்கொரு கவலையை
கையில் எடுத்து கொறிக்க ஆரம்பித்தோம்

கடைசி வாய் அருந்தும்போது
நமது தட்டில் ஒரேயொரு கவலை எஞ்சியிருந்தது
அதை யார் எடுத்துக்கொள்வதென்ற
புதுக்கவலையொன்று இப்போது நம்மிடம் வந்துவிட்டது

1 comment:

  1. சேர்ந்து கொண்ட கவலைக்காக
    போத்தல் ஒன்றையும் சேர்த்துக்கொண்டு
    மிடறு மிடறாய் விழுங்கிக்கொண்டு
    சேர்த்துக் கொண்டேயிருப்போம்
    கவலைகளை மட்டும்.....

    ReplyDelete