Showing posts with label Book-Review. Show all posts
Showing posts with label Book-Review. Show all posts

Monday, August 8, 2016

வலம் நாவல் -- இரா.முருகவேள்

வலம் நாவல் பற்றி எழுத்தாளர் இரா.முருகவேளின் விமர்சனம்.

வலம்
----------
----இரா.முருகவேள்

தன் மனதுக்கு மூளைக்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் எழுத்துக்கள் எப்போதுமே முக்கியமானவை. அவைதான் காலத்தின் வரலாற்றுப் பதிவுகளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன. அதிலும் நூலாசிரியருக்கு தான் எடுத்துக் கொண்ட காலப் பகுதியின் மக்கள் வாழ்வைத் தேடிக் கண்டுகொள்ளும் பிடிவாதமும் ஆவலும் இருந்து அவர் அதற்காக உழைக்கவும் தயாராக இருந்து விட்டால் நிச்சயம் ஒரு நல்ல இலக்கியம் பிறந்து விடும்.

அந்த வகையில் விநாயக முருகனின் வலம் குறிப்பிடத்தக்க நாவலாக உருவாகியிருக்கிறது. சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் நாவலின் பின்னணி. நரிகளுக்கும் சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும் அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது வலம்.

தமிழக நாட்டுப்புறக் கதைகளில் நரிக்குத் தனி இடம் உண்டு என்று விமர்சகர் முருகேச பாண்டியன் குறிப்பிடுகிறார். நரி எப்போதும் மனிதனுடன் போட்டி போடும். நரியை வெற்றி கொள்வதுதான் மனிதனின் சாம்ர்த்தியம் என்று நாட்டுப்புறக் கதைகளில் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படும். இயற்கையின் நுட்பமான வலைப் பின்னலில் நரி ஒரு தவிர்க்க முடியாத இணைப்பு. இப்போது தமிழக மலையோர கிராமங்களி நரிகளும் கீரிகளும் அழிந்ததால் மயில்களும் மற்ற பறவைகளூம் பெருகி விவசாயிகளுக்குப் பெரும் தொல்லையாக மாறிவருகின்றன. நரிகள் போதுமான எண்ணிக்கையில் இருந்திருந்தால் அவை பறவை முட்டைகளைக் குடித்து பறவைகளில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கும்.

நுட்பமாகப் பார்த்தால் இந்த உறவை நமது நாட்டுப்புறக் கதைகள் வலியுறுத்துவதை உணர முடியும். ஆனால் வெள்ளையர்களின் பார்வை வித்தியாசமானது. தங்கள் நாடுகளில் பெரும் காடுகளை அழித்தும் தனியுடமையாக்கியும் பெற்ற அனுபவங்களோடு வெள்ளையர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் நமது மலைக்காடுகளை வெட்டிச் சாய்த்தனர். சதுப்பு நிலங்களை வடித்தனர். யானைகளையும் புலிகளையும் மான்களையும் மற்ற மிருகங்களையும் கொன்று குவித்தனர். பின்பு நடந்ததை துன்பக் கேணீயும் தமிழக மலையக எஸ்டேட் இலக்கியமும் பேசும். இவற்றின் தொடக்கம் சென்னையைச் சுற்றி ஆரம்பித்தது என்பதை வலத்தில் காண முடிகிறது.

கதை நரி மேட்டு சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும் இயற்கைக்கும் சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி பதினெட்டாம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரி மேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த வெள்ளையர்களின் வாழ்வை ஒரு கொலை வழக்கு மற்றும் நரி வேட்டையின் பின்னணீயில் சொல்கிறார் விநாயக முருகன்.

ஓர் ஓவியம் வரையும் போது அதையொட்டிய காட்சிகள் அதனதன் இடத்தில் இயல்பாக உட்கார்ந்து விடுவது போல புதிய சென்னை நகரத்தில் நீக்கமற நிறைந்து கிடக்கும் சாதி, அயோத்திதாசப் பண்டிதரின் தலைமையில் முதல் தலித் இயக்கம் துளிர்விடுவது, பஞ்சம், பாலியல் தொழிலாளர்களீன் நிலை, என்று அனைத்தையும் நம் முன்னர் விரித்து வைக்கிறது வலம். அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து விலகிச் செல்வதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோஹன் சென்னையின் காவல்துறை அதிகாரி. பிரபு குடும்பத்தில் வந்தவன். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய கோஹனின் பெயர் தனக்கு வைக்கப்பட்டிருப்பதை பெருமையாக உணர்பவன். மொத்தத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

புளியந்தோப்புப் பகுதியில் இரண்டு சிறுவர்கள் நரிகளால் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து விசாரிக்கச் செல்கிறான். அங்கு வாழும் ஆதிதிராவிட மக்கள் தங்கள் குழந்தைகள் நரிகளால் கொல்லப்பட்டன என்பதை நம்ப மறுக்கின்றனர். அங்குதான் கோஹன் உள்ளூரில் வாழும் ஆங்கிலம் தெர்ந்த தலித் மக்களின் தலைவனான ரத்தினத்தைத் சந்திக்கிறான். உடல்களை உயர்சாதி அதிகாரியின் வண்டியில் ஏற்றச் சொல்லும் போது அவர் மறுக்கிறார். சென்னையின் சாதி பற்றிய ஆரம்ப அறிவு அவனுக்குக் கிடைக்கிறது.

பேட்டர்ஸன் அய்ர்லாந்தைச் சேர்ந்த படைவீரன். அவனது அப்பா அயர்லாந்தில் பண்ணையில் வேலையாளாக இருந்தார். குலப்பெருமை அற்றவனாகவும் பணமில்லாதவனாக இருப்பதையும் உணர்ந்த தாழ்வு மனப்பான்மை அவனை உறுத்திக் கொண்டே இருக்கிறது. மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் கோபம் அதி தீவிரத்துடன் அவனை நரி வேட்டையில் ஈடுபடச் செய்கிறது. அவன் வெறி பிடித்தவனாக சென்னையைச் சுற்றி நரிகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறான்.

சென்னையில் வேட்டைக்காரர்களுக்காக ஒரு கிளப் இயங்குகிறது. அதன் உரிமையாளர் மெக்கன்ஸி உயர்ரக நாய்களையும் குதிரைகளையும் நரிவேட்டையாடுபவர்களுக்கு அளிக்கிறார். கவர்னர் (கன்னிமாரா?) பெரும் குடிகாரராகவும் பெண் பித்தராகவும் இருக்கிறார். சென்னையை விரிவுபடுத்த திட்டங்கள் தீட்டுகிறார். அவரது இனிமையான குணமுடைய ஓவியரான மனைவி சூஸன் கவர்னரின் குணத்தால் வெறுப்படைந்திருக்கிறார். இந்தப் பின்னணியில் சென்னையின் அக்கால வாழ்க்கை குறிப்பாக வெள்ளையர் வாழ்க்கை நம் கண் முன் விரிகிறது.

பஞ்சப் பிரதேசங்களில் இருந்து மக்கள் நிழல்கள் போல நகரினுள் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். உணவின்றிக் குழந்தைகள் உயிர்விடுகின்றன. நெல் ஏற்றிச் செல்லும் வண்டிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அரசு சென்னைக்கு ரயில் பாதை அமைக்கவும் நகரை இன்னும் விரிவுபடுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறது.

வலம் முழுமையும் தலித்துகளைப் பற்றிய நாவல் அல்ல என்றாலும் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்காத நரிகள், தாக்க வழியில்லாத தலித்துகள், பிரிட்டிஷ் அரசு என்று ஒரு முக்கோண பிணைப்பு நாவலில் இருக்கத்தான் செய்கிறது.

சதுப்பு நிலங்களும் ஓடைகளும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பிய ஒரு மென்மையான நிலப்பரப்பின் ஒரு மூர்க்கமான, பஞ்சங்களுக்கும் கொள்ளை நோய்களுக்கும் இருப்பிடமான நகரத்தைக் கட்டியமைக்கிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. விரட்டியடிக்கப்படுகின்றன.

நரிகளைப் போலவே கோட்டை இருக்கும் கடலோரப் பகுதியில் வாழ்ந்த மீனவர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்விடங்கள் ஆகிரமிக்கபட்டு அங்கே எழுகிறது ஒரு வலிமை வாய்ந்த கோட்டை. தலித்துகளுக்கு பல புதிய வாயில்கள் திறக்கின்றன. ஆனால் அவற்றையும் அரசே அடைக்கிறது. ஒரு புதிய வகையிலான அடிமைத்தனம் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.

இக்கதை நடக்கும் காலத்துக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் மருது பாண்டியர், பூலித்தேவன், கட்டபொம்மன், எல்லோருக்கும் மேலாக ஊமைத்துரை தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போர்கள் நிகழ்ந்தன. அப்போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலர் எல்லா பாளையக்காரர்களின் படைகளீலும் தளபதிகளாகவும், வீரர்களாகவும் பணீபுரிந்தனர். அதற்கான தேவை இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சாதியக் கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு சாதிய அமைப்புமுறையைக் குலைக்காத ஒரு நுட்பமான பாதையைப் பின்பற்றியது. ராணுவத்துக்கும், ஆலைகளுக்கும் தேவைப்பட்ட அளவுக்கே தலித்துகள் அரசு அமைப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி சாலைகளீலும், நிறுவனங்களிலும் ப்ரந்து விரிந்த கிராமப் பகுதிகளீலும் சாதிய முறை தடையின்றித் தொடர அனுமதிக்கப்பட்டது.

இதைத்தான் வலத்திலும் காண்கிறோம். பின்னி மில்லில் பாதிப்பேர் தலித்துகள். அவர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்து ஆங்கிலம் படிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் காயம் பட்ட ஒருவனை தன் வண்டியில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்று சொல்லும் உரிமை உயர்சாதிக்காரனுக்கு அனுமதிக்கப்பட்டது. சாதியக் கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் மேல்சாதிக்காரர்களின் பொருளாதார பலத்தைத் தகர்க்காமல் சாதிய அமைப்பில் பலவீனத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்பதை அயோத்திதாசரின் அனுபவத்திலிருந்து இன்று வரையிலான அனுபவங்கள் காட்டுகின்றன. தலித்துகள் படிக்கவும், மில்களில் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரம் சாதி ஆதிக்க வாதிகள் சாதியைக் காப்பாற்றும் பொருளாதார மேல்நிலையை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கபப்டுகின்றனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடக்கம் வலத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இவையனைத்தையும் விட நாவலில் வரும் வெள்ளைக்காரர்களின் பத்திரங்களின் உருவாக்கத்தில்தான் விநாயக முருகனின் நேர்த்தி தெரிகிறது. குறிப்பாக பாட்டர்ஸனின் பாத்திரம். ஒரு விளையாட்டாகத் தொடங்கி நரி வேட்டையில் அவன் கொள்ளும் தீவிரம், மூர்க்கம், எதிர்ப்புக் காட்டாமல் தப்பி ஓட மட்டுமே முயலும் பலவீனமான உயிரிகள் மீது வரும் கண்மூடித்தனமான வெறுப்பு உலகத்தில் தான் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவமாக நரிகளை அவன் உருவகப்படுத்திக் கொள்வது அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. பேட்டர்ஸனின் நாயான புல்லட்டின் விசுவாசம் சக்திக்கு மீறிய உழைப்பால் தளர்ந்து வரும் அதன் உடல்நிலை . . . விநாயக முருகனின் எழுத்துத் திறன் தனிச்சிறப்புடன் வெளிப்படுகிறது. அவர் வருணிக்கும் நரிவேடையின் நுணுக்கங்கள் இந்தப் பகுதியை நாவலில் மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது.

நரி வேட்டை ராயல் விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது நரியைக் கொல்வது வேட்டை அல்ல, விளையாட்டு என்று பிரிட்டிஷாரால் கருதப்பட்டது. குதிரையில் செல்லும் வேட்டைக்காரன் நரியைச் சுடுவது கௌரவக் குறைச்சல் என்று கருதப்பட்டது. எல் போன்ற இரும்புத் தடியால் நரியின் மண்டையை அடித்துப் பிளப்பதே சிறந்த விளையாட்டு வீரனுக்கு அடையாளமாகும் .எதிர்ப்புக்காட்டாத மனித குலத்தின் ஒரு பகுதியை அடக்கி ஒடுக்குவதிலும் அதை அதன் அற்பமான வாழ்விடங்களில் இருந்து ஓரப்பகுதிகளுக்கு விரட்டியடிப்பதிலும் மற்ற பகுதி காட்டும் முனைப்பை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். பழைய கொண்டாட்டமான தமிழக கிராமப்புற வேட்டைக்கும், ஆங்கிலேயர்களின் இது போன்ற கேளிக்கை அல்லது உள்ளே குமையும் மூர்க்கத்திற்கு வடிகாலான வேட்டைக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்து வரும் நகரம் நரிகள் வாழத் தகுதியில்லாததாக மாறிப் போகிறது. நரிகள் எங்கோ தொலை தூரங்களில் சென்று மறைகின்றன. பஞ்சமும், பசியும் நோய்களும் அவை விட்டுச் சென்ற இடங்களில் நிரந்தரமாகக் குடியேறுகின்றன.

நாவல் முழுக்க விநாயக முருகனின் பிடிவாதமான உழைப்பு தெரிகிறது. நாவலில் சொல்லப்படும் எதைக் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டாலும் துல்லியமாக ஆதாரங்களுடன் அவர் விடையளிப்பதை முக நூலில் பார்த்திருக்கிறேன். சென்னை செங்கற்களால் ஆன நகரம் மட்டுமல்ல. ஓடைகளையும், பசும்புல் வெளிகளையும், வயல்களையும் சின்னஞ்சிறு அழகிய கிராமங்களையும் புதைத்துக் கட்டிய மாபெரும் புதைகுழியும்கூட என்பதை வலம் உணரவைக்கிறது.

ஓர் இடத்தில் மட்டும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. தோடர் பழங்குடியின கரோலின் பாத்திரம் அது. வெள்ளைக்காரன் தொடர்பால் அவளது அம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். கரோலின் கோஹனைக் காதலிக்கிறாள். கவர்னரின் வேட்கைக்கு இரையாகிறாள். குற்ற உணர்வால் உந்தப்பட்டு கோஹனின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் கன்னியாஸ்திரியாவதாக நாவல் முடிகிறது. பழங்குடியினங்களில் குழந்தைகள் ஒருபோதும் அனாதைகளாக விடப்படுவதில்லை. அவர்களது பாலியல் சார்ந்த பார்வையும் நமது மத்திய தரவர்க்கப் பார்வையிலிருந்து வித்தியாசமானது. விநாயக முருகன் கட்டாயம் ஏதோ ஒரு வரலாற்று ஆவண்த்திலிருந்துதான் இந்த பாத்திரத்திற்கான தாக்கத்தைப் பெற்றிருப்பார் என்று உணரமுடிகிறது. அந்த சூழலை சற்று விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சென்னையின் ஆரம்ப நாட்களையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வையும் இயற்கையின் நுட்பமான வலைப்பின்னலின் பின்னணியில் சுவாரஸ்யமான நாவலாக்கிய விநாயக முருகன் பாராட்டத்தக்கவர்.

நன்றி:- இரா.முருகவேள்

Monday, November 9, 2015

ராஜீவ் காந்தி சாலை - எனது ஆசிரியரின் விமர்சனம்

அன்புள்ள விநாயகமுருகன்

என் பெயர் மு.அருணகிரி. என்னை நினைவில் இருக்குமென்று நினைக்கிறேன். தஞ்சாவூரில் நீங்கள் படித்த பொன்னையா ராமஜெயம் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக இருந்தேன். இப்போது தஞ்சாவூரில் இல்லை. நன்னிலத்தில் வசிக்கிறேன். கடந்தாண்டு நூலகத்தில் உயிர் எழுத்து பத்திரிக்கை படிக்கும்போது அதில் எஸ்.வி.ராஜதுரையின் ஒரு கட்டுரை படித்தேன். அதில் உங்கள் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. பெயரை வைத்து சற்று சந்தேகமாக இருந்தது. நீங்கள்தான் என்று பிறகுதான் உறுதிப்படுத்திக் கொண்டேன். எனது மாணவர்களிடம் விசாரித்தேன். நீங்கள் முகநூலில் தீவிரமாக இயங்குவதை கேள்விப்பட்டு ஆச்சர்யமாக இருந்தது. எனக்கு முகநூல் கணக்கு இல்லை. எப்போதாவது வலைப்பதிவுகள் வந்து பார்ப்பதுண்டு. எனது மாணவன் ஒருவன் உங்கள் வலைப்பதிவை தேடிப்பிடித்து கொடுத்தான். உங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது. உங்கள் புகைப்படத்திலிருந்து என்னால் அடையாளம் கண்டுக்கொள்ள முடியவில்லை. எஸ்விஆரின் கட்டுரையை உங்கள் வலைத்தளத்தில் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன். எஸ்.வி.ராஜதுரையிடமிருந்து அவ்வளவு எளிதாக அபிப்ராயங்களை பெறமுடியாது. உங்கள் முதல் நாவலுக்கான அவரது விமர்சனம் உண்மையில் மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் விசாரித்த உங்கள் நாவல் எங்கும் கிடைக்கவில்லை. சமீபத்தில்தான் எனது மாணவர் ஒருவர் எங்கிருந்தோ தேடிப்பிடித்து கொண்டு வந்தான். படித்தேன்.

முதலில் நாவலின் முக்கிய குறையை சொல்லிவிடுகிறேன். அந்த கட்டுரையின் இறுதியில் எஸ்.வி.ஆர் குறிப்பிட்டதுதான். நாவலில் பல இடங்களில் வாக்கியப்பிழைகள், இலக்கணப்பிழைகள் உள்ளன. அது நாவலை தொடர்ந்து படிக்கவிடாமல் தொந்தரவு செய்கிறது. நாவலின் தலைப்பிலேயே பிழை. ராஜீவ் காந்தி என்று பிரித்து எழுத வேண்டும். ஆசிரியராக என்னால் மன்னிக்கமுடியாத பிழை இது. இது முக்கியமான குறைபாடு. சரிசெய்து கொள்ளுங்கள்.

ஆனால் இந்த ஒரேயொரு குறையை தவிர வேறு எதையும் என்னால் பார்க்க முடியவில்லை. இது ஒரு அசாத்தியமான முயற்சி என்றுதான் சொல்ல தோன்றுகிறது. நாவலுக்கு காலம் (Time), வெளி (Space) இரண்டு புள்ளிகள் முக்கியம். அதன் மீது கதாபாத்திரங்களை சிருஷ்டித்து எழுத வேண்டும். இந்த நாவலில் காலமும், வெளியும் இரண்டு புலனாகாத(Invisible) புள்ளிகள் மீது மிக அழகாக வரையப்பட்ட ஒரு கோலத்தை பார்க்கிறேன். சாலை ஒரு புள்ளியாக வருகிறது. ஆண்டின் பல்வேறு மாறும் பருவநிலைகள் இன்னொரு புள்ளியாக வருகிறது. ஒவ்வொரு பருவநிலைக்கு ஏற்ப மனிதர்களின் குணங்கள் மாறுகின்றன. சாலை மாறுகின்றன. மழை, பனி, கோடைக்கு ஏற்ப சாலை விரிந்தும், நெகிழ்ந்தும் தன்னை மாற்றிக்கொள்கின்றது. மனிதர்களும் தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அன்னத்தை,செட்டியாரை தவிர வேறு எந்த மனிதர்களும் நிலையான குணங்கள் கொண்டவர்களாக இல்லை. சந்தர்ப்பத்துக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொண்டு பிழைக்கிறார்கள். நாவலின் இந்த அம்சத்தை யாரும் வேறு யாரும் தங்கள் விமர்சனத்தில் குறிப்பிட்டார்களாக என்று தெரியவில்லை. படிக்கும்போது எனக்கு தோன்றியது இது. இந்த மையத்தை நாவலின் வடிவமாக தேர்வு செய்ததாலேயே உங்களால் இந்த படைப்புக்குள் ஒரு பெருநாவலுக்கான விரிவையும், செறிவையும் , பிரமாண்ட களனையும் கொண்டு வர சாத்தியமாகியுள்ளது. ஏனெனில் தமிழில் வெளிவரும் வரலாற்று நாவல்கள் எல்லாம் பிரமாண்டத்தை கொண்டுவர சில நூற்றாண்டுகள் கதைக்களன் இருக்குமாறு பார்த்துக்கொள்வார்கள். ஆனால் உங்கள் நாவலுக்கு நீங்கள் இருபதாண்டுகாலத்தை மட்டும் எடுத்துக்கொண்டு இதை சாத்தியப்படுத்தி இருக்கின்றீர்கள்.

இரண்டாவது இந்த நாவலின் பிரமாண்டத்தன்மை என்பது அதன் இருபக்க சித்தரிப்பு. பல்வேறு வர்க்கநிலை மனிதர்களை சித்தரித்து அவர்களின் முரண்களை நுட்பமாக காட்டியுள்ளீர்கள். சான்றாக ஓர் அத்தியாயத்தில் மேல்தட்டு மக்கள் நட்சத்திர விடுதியில் குடித்தபடி பேசிக் கொண்டிருப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் குடித்தபடி பேசுவார்கள். ஓர் அத்தியாயத்தில் அவர்கள் கீழ்தட்டு மக்களின் பாலியல் உறவை விமர்சிப்பார்கள். அடுத்த அத்தியாயத்தில் கீழ்தட்டு மக்கள் உயர்வர்க்க மனிதர்களின் பாலியல் கிசுகிசுக்களை ஆர்வமாக பேசிக்கொள்வார்கள். இப்படியேதான் நாவல் முழுக்க செல்கிறது. மென்பொருள் நிறுவனம் உள்ளே இருக்கும் உயரதிகாரிகள் கீழ்நிலை அதிகாரிகளை மட்டம் தட்டுவார்கள். அடுத்த அத்தியாயத்தில் அவர்கள் மேலதிகாரிகளை கிண்டல் செய்வார்கள். ஜாதியக்கட்டமைப்பு , பணம், பாலியல் இச்சைகள், குடும்ப உறவுகள், மதம் , பண்பாட்டுக்கூறுகள் இப்படியாக எல்லா விஷயங்களையும் அதன் இன்னொரு பக்கத்தை வேறொரு மாறுபட்ட கதாப்பாத்திரங்கள் வழியாக விவாதத்துக்கு உட்படுத்துகின்றீர்கள். அன்னம், செட்டியாருக்கு இடையே இருக்கும் முறைகேடான உறவு அர்த்தம் பொதிந்த அழகிய கவிதையாக மலரும் அதே தருணம் சுஜாவின் உறவு ரத்தமும், சதையுமாக வந்துபோகிறது. நாவலின் ஊடாக இறுதிவரை செல்லும் இந்த விவாதத்தன்மையும், கருத்து, எதிர்கருத்து பரிமாற்றங்களும் நாவலுக்கு செறிவை தருகிறது. நாணயத்தின் இரண்டு பக்கங்களை நுட்பமாக விவரித்து எழுதியுள்ளீர்கள். இதை திட்டமிட்டு செய்தீர்களாக அல்லது இயல்பாக கதையின் போக்கில் வந்ததா என்று தெரியவில்லை. இறுதி அத்தியாயத்தை படித்து முடித்ததும் அந்த சாலையும் மனிதர்களும் வெகுநேரம் வரை மனதில் அப்படியே இருந்தார்கள். ஒரு நல்ல படைப்புக்கான குணமாக இதை பார்க்கிறேன்.

நாவலை பற்றி நீண்ட விமர்சனக்கட்டுரை ஒன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். தஞ்சை தமிழ்பல்கலைக்கழகத்தில் படிக்கும் எனது மாணவர்களில் சிலர் உலகமயமாக்கல் குறிப்பாக தமிழ் பண்பாட்டுத் தளத்தில் மென்பொருள்துறை ஏற்படுத்திய தாக்கத்தை பற்றி ஆய்வு செய்ய என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு இந்த நாவலை பரிந்துரை செய்தேன். வாழ்த்துகள்.


அன்புடன் ஆசிரியர்
மு.அருணகிரி

Saturday, August 8, 2015

ரசிகன்



மகத்தானவற்றின் மீது நாம் வைக்கும் நம்பிக்கையும், உறுதிப்பாடும் பொய்த்துப் போகிறபோது நொறுங்கிவிடுகிறோம். அவநம்பிக்கை மேலெழுகிறது. குழப்பங்களும், வினாக்களும் தோன்றுகின்றன. இதுநாள்வரை நாம் எதன்மீது பற்று வைத்திருந்தோமோ அது இற்று விழுகிறது. நம் மனதிலேயே எதிர்வாதம் தோன்றி நம்மை உருமாற்றம் செய்கிறது. நாம் அதுவரை நம்பிக்கொண்டிருந்தவைக்கு எதிரானவராக அத்தருணத்தில் மாறிவிடுகிறோம்
--– அபிலாஷின் ரசிகன் நாவல் பற்றி அழகிய பெரியவன் எழுதிய கட்டுரையிலிருந்து
எண்பதுகளின் தொடக்கத்தில் பிறந்தவர்களை பாக்கியசாலிகள் என்று நான் எனது நண்பர்களிடம் அடிக்கடி சொல்வேன். காரணம் அவர்கள் வளர்ந்து பதின்பருவம் அடையும்முன்னரே தமிழ்நாட்டில் குளோபலைசேஷன், லிபரலேஷன் காலூன்றிவிட அவர்கள் உலகத்தை புரிந்துக்கொள்வதற்கு முன்பே அவர்களால் இயல்பாக ஒரு காலமாற்றத்துக்குள் அடியெடுத்து வைத்து விட்டார்கள். ஆனால் அதற்குமுன்பு பிறந்து அதிலும் குறிப்பாக தீவீர லட்சியவாதம் பேசிய சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த பல இளைஞர்கள் என்ன ஆனார்கள் என்று எனது கண்முன்னால் பார்த்திருக்கிறேன். எனது நண்பர்கள் சிலர் அப்படி மைய நீரோட்டத்தில் கரைந்து காணாமல் போனதையும் தற்கொலை செய்துக்கொண்டதையும் சிலர் துபாய் போன்ற நாடுகளில் கிடைத்த வேலை செய்து தங்கள் அடையாளம் இழந்துப் போனதையும், பலர் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் போனதையும் பார்த்திருக்கிறேன்.
ரசிகன் நாவலில் வரும் சாதிக் என்ற கதாபாத்திரத்தின் சாயலில் நான் பார்த்த சில நெருங்கிய நண்பர்களின் சாயலை உணர முடிந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்த லட்சியவாத சிறுபத்திரிக்கை மரபை சேர்ந்த சாதிக் தொண்ணூறுகளின் காலகட்டத்துக்கு வரும்போது அவன் வாழ்க்கை உள்ளும் புறமும் எப்படி மாறுகிறது? அவன் நம்பிக்கைகள் எப்படி சிதறுகின்றன? என்பதுதான் ரசிகன் நாவலின் மையம்.
சாதிக்தான் இந்த நாவலின் மையப்புள்ளி என்றாலும் சங்கர் என்ற கதாபாத்திரத்தின் பார்வையில் நாவல் ஆரம்பிக்கிறது. சந்திரமுகி படம் வெளிவந்த காலகட்டத்தில் நாவலின் கதை ஆரம்பிக்கிறது. சென்னையில் கதை தொடங்குகிறது. சந்திரமுகி படத்தின் நூறாவது நாள் வெற்றிவிழாவில் கலந்துக்கொள்ளும் சாதிக் தியேட்டர் வாசலில் இருக்கும் ரஜினி கட்டவுட் மீது ஏறி கால்தடுமாறி அல்லது தற்கொலை எண்ணத்துடன் தானாகவே கீழே விழுந்து மண்டை உடைந்து மூளை சிதறி இறக்கிறான். சாதிக் இறந்த விஷயத்தை சங்கர் ஊரிலிருக்கும் சாதிக்கின் பழைய காதலி ரெஜினாவிடம் சொல்கிறான். அங்கிருந்து பிளாஷ்பேக்காக சாதிக்கின் பின்னணியை சங்கர் சொல்வதாக நாவல் விரிகிறது.
எண்பதுகளில் சாதிக்கை போன்ற ஆட்களை எளிதாக கண்டு பிடித்துவிடலாம். எல்லாருக்கும் ஒரேபோல முகத்தில் தாடி கண்களில் தீர்க்கம், பேச்சில் அலட்சியம், உடம்பில் நீளமான ஜிப்பா என்று பொதுத்தன்மை கொண்டிருப்பார்கள். சாதிக்கின் உலகம் சிற்றிதழ் வாசிப்பு, உலக அரசியலை பேசுவது, நண்பர்களுடன் சேர்ந்து மொட்டை மாடியில் டிவியில் மாற்றுத் திரைப்படங்களை பார்ப்பது, கையில் புகையும் பீடி, தேதீருடன் அகிரகுரசோவா படங்களை பற்றி விவாதிப்பது என்று சுற்றுகிறது. டுட்டோரியல் பள்ளியொன்றில் குறைந்த ஊதியத்தில் வேலை செய்யும் சாதிக் பொருளாதாரத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப் படுவதில்லை. தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், நகுலன், புதுமைப்பித்தன், பிராய்டு,சார்த்தார் என்று வேறு ஓர் உலகத்தில் வாழ்கிறான். சூரியனுக்கு கீழே உள்ள எல்லா விஷயங்களையும் பற்றி அவனால் தீவிரமாக விவாதிக்கமுடியும். எல்லாவற்றையும் ஒரு புதுகோணத்தில் பார்த்து அவன் தனது நண்பர்களுக்கு அறிவாசானாக இருக்கிறான். மார்க்கிசிய சித்தாந்தத்தில் தீவிரமாக நம்பிக்கை கொண்டவன். ஊரில் செங்கதிர் என்னும் சிற்றிதழ் நடத்திவருகிறான்.
இந்நாவல் மூன்று தளங்களில் மூன்று பகுதிகளாக விரிந்து செல்கிறது. முதல் பகுதியில் சாதிக்கின் இலக்கிய நண்பர்கள் அவர்களின் அரசியல் நம்பிக்கைகள் சித்தாந்தங்கள் அவர்களில் சிலரின் வெகுஜன ரசனையை பொருளியல் யதார்த்த வாழ்க்கையை கடுமையாக விமர்சித்து சாதிக் செய்யும் உரையாடல்கள் என்று செல்கிறது. அடுத்த பகுதி சாதிக் அவனது காதலி ரெஜினா பிறகு அவன் திருவனந்தபுரம் பேரலல் கல்லூரியில் பேராசிரியராக சேருவது என்று சுழல்கிறது. மூன்றாவது பகுதியில்தான் சாதிக் சென்னைக்கு வந்து வெகுஜன ரசிக மனோபாவத்தை விரும்பி ஏற்று தீவிர ரஜினி ரசிகனாக மாறி கட்அவுட்டுக்கு பால், பீர் ஊற்றும் வெறிப்பிடித்த ரசிகனாக மாறுவது நடக்கிறது.
சாதிக்கின் தனிப்பட்ட வாழ்க்கையில் பாலியல் ஆர்வமற்று இருக்கிறான். கிட்டத்தட்ட பிரவீணாவிடமும் இதேபோல நிறைவேறாத அல்லது திருப்தியடையாத அலல்து தன்னைத்தானே சுயவதை செய்துக்கொள்ளும் ஒருவித மனநிலை இருக்கிறது. பாலியல் ஆர்வம் இல்லாதவர்கள் கொஞ்சம் டேஞ்சரான ஆட்கள்தான். அதோடு இலக்கியக்கிறுக்கும் சேர்ந்துவிட்டால் இன்னும் மோசம். ஆனால் இந்நாவலின் ஆரம்பத்தில் மிக தீவிரமாக வெகுஜன ரசிக மனோபாவத்தை கிண்டல் செய்யும் ரஜினி படங்களை திட்டும் சாதிக் குறிப்பாக தீவிர மார்க்சியம் பேசும் ஒருவன் எப்படி இப்படியொரு இடத்துக்கு வந்து சேர்ந்திருப்பான்? இது சாத்தியம்தானா என்று யோசிக்கும்போது இலக்கிய உலகத்திலும் ரசிகமனோபாவம் இருப்பதை தாஸ் போன்ற கதாபாத்திரம் வழியாக அபிலாஷ் பதிவு செய்து அதற்கான விளக்கத்தை கொடுக்கிறார்.
மனிதர்களால் சமநிலையை பேணுவது மிகவும் கடினம். ஏதோவொன்றின் மேல் எல்லா மனிதர்களுக்கும் ரசிகமனோபாவம் தேவைப்படுகிறது. சங்கருக்கு ஆன்மிகம். ஆணை பெண் ரசிப்பதும் பெண்ணை ஆண் ரசிப்பதும் அரசியல் தலைவரை தொண்டர்கள் ரசிப்பதும் என்று எல்லாமும் ஒரே புள்ளியில் மனிதர்களின் பாதுகாப்பின்மை ஏற்படுத்தும் பதற்றத்திலிருந்தே பிறக்கின்றன
தாஸ் கதாபாத்திரம் வரும்போதெல்லாம் இவர் யார்? இவரா அவரா என்று யோசிக்க வைக்கிறது. பிற்பாதியில் எழுத்தாளர் தாஸ் சென்னைக்கு வந்து தனக்கென்று வாசகர் வட்டம் என்ற பெயரில் ரசிக அடிவருடிகளை வைத்து ரஜினிக்கு நிகராக தனது கட்அவுட்டுக்கு பீர் அபிகேஷம் செய்யும் பவர்ஸ்டார் கோமாளித் தனங்களை புன்னகையுடன் படித்தேன். குறிப்பாக தாஸின் வாசகர்கள் நாவல் வெளியீட்டு விழாவுக்கு ஒரு பெண்ணை காசுகொடுத்து அழைத்து வருகிறார்கள். அந்தப்பெண் தாஸை தனது மார்பில் கையெழுத்து போட சொல்லி வற்புறுத்துகிறாள். இவள்தான் தனது உணமையான வாசகி என்று தாஸ் மேடையில் பெருமையாக பேசுகிறார். அதே மேடையில் ஏறும் சாதிக் ரஜினி பட வசனங்களை பேச தாஸின் வாசகர்கள் அதற்கும் கைதட்டுகிறார்கள். இரண்டாயிரத்துக்கு பிறகு கிட்டத்தட்ட இலக்கிய ரசிகர்களும் (வாசகர்கள் அல்ல) சினிமா ரசிகர்களும் ஒரே மாதிரித்தான் தங்கள் மூளையை அடகுவைத்து கிடக்கிறார்கள். பிறகு அந்தபெண் மேடைக்கு பின்னால் சென்று மனுஷனா அவன்? கையெழுத்து போட சொன்னால் பேனாவால் கீறி வைக்கிறான். ஒழுங்கா பேசுன காசை கொடுத்துடுங்க என்று தாஸின் வாசகர்களிடம் சண்டை போடுகிறாள்.
எண்பதுகளின் மார்க்சிய சித்தாந்தம் சிதைந்து பின்நவீனத்துவம் வந்தபிறகு அது ஒரு தனிமனித நம்பிக்கைகளை இருப்பை எப்படி அலைக்கழிக்க வைத்து அவனை காணாமல் போக வைத்தது என்பதை வலுவாக பதிவு செய்தவகையில் இந்நாவல் முக்கியம்பெறுகிறது. அதே நேரம் சாதிக் தோற்றுப்போனால் அது அவன் கொண்ட நம்பிக்கைகளின், சித்தாந்தங்களின் தோல்வி அல்ல. வச்சா குடுமி. அடிச்சா மொட்டை என்று சொல்வார்கள். சாதிக்கும் அப்படியொரு பிடிவாத மனநிலையில்தான் வாழ்கிறான். வெகுஜன ரசிக மனோபாவத்தின் உச்சத்துக்கு சென்று ராகேவந்திரா மண்டபம் சென்று ரஜினி காலில் விழுந்து ஆசிப்பெற்று வருகிறான்.
நாவலில் நுட்பமாக வரும் சில இடங்களும் உண்டு. கறுப்பு நாயொன்று சாதிக்கை பின்தொடர்ந்து வந்தபடியே இருக்கிறது. ரஜினி கட்அவுட் மீதிருந்து சாதிக் கால் தவறி விழும்போது அந்த நாய் வந்து அவனது மூளையை நக்குகிறது. எல்லா மகத்தான மூளைகளையும் கடைசியில் ஓர் அற்பநாய் வந்துதான் நக்கிவிட்டு செல்கிறது.

Friday, October 17, 2014

கால்களின் கீழே சுழலும் உலகம்

இம்மாத புதிய புத்தகம் பேசுது இதழில் ஆர். அபிலாஷின் கால்கள் நாவல் குறித்து நான் எழுதியிருந்த நூல் அறிமுகம்.

தமிழ் இலக்கியப்பரப்பில் இதுவரை மாற் றுத்திறனாளிகள் உலகையும்,அவர்கள் இருப்பையும், இருப்பிற்கான தத்தளிப்பையும், அவர்களின் உடல் வலியையும்,வலி சார்ந்த தகவல்களையும் இவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்த நாவல்கள் எதுவும் வந்துள்ளதா என்று தெரியவில்லை. அந்தவகையில் தமிழின் குறிப்பிடத்தக்க நாவலாக அபிலாஷின் கால்கள் நாவலைச் சொல்லலாம்.

தனது இளம்பிராயத்தில் போலியோ அட்டாக் வந்து கால்கள் பாதிக்கப்பட்ட மதுக்‌ஷரா என்ற மதுவின் அகவுலகமும் அவள் புறவுலகில் சந்திக்கும் வேறுபட்ட குணங்கள் கொண்ட எண்ணற்ற மனிதர்களும், அவர்களுக்குள் நடக்கும் இடையறாத உரையாடல்களுமே நாவலின் மையப்புள்ளி. அழகென்றும் சொல்லமுடியாத அழகி இல்லையென்றும் சொல்லமுடியாத சராசரித் தோற்றமுடைய மதுவின் அகஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக்கொள்ளலாம்.

மது தனது வீட்டில் அவளுக்காக ஒதுக்கப்பட்ட தனியறையில் அமர்ந்து தனது உடலின் ஒருபகுதியாக இருக்கும் காலிப்பரையும் அது ஏற்படுத்தும் வலியையும் தொடர்ந்து கவனித்தபடியே இருக்கிறாள். ஒவ்வொரு முறை காலிப்பரைப் பொருத்தும்போதும், தனியாக கழிவறைக்குச் சென்று திரும்பும்போதும், சக்கர நாற்காலியில் உட்காரும்போதும், மாடிப்படிகளில் ஏறி இறங்கும்போதும், வெளியிடங்களுக்குச் சென்று திரும்புகிறபோதும் மது அடையும் பெருவலியை அவளது அந்தரங்க மனம் கவனித்து வலியுடன் தொடர்ந்து அவள் உரையாடுவது போன்ற தருணங்கள். பிறகு அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் அவளது உடம்பு அடையும் மாறுதல்களையும், அது தரும் வேறுவிதமான வலியையும், இனம்புரியாத அவஸ்தையையும் தொடர்ந்து கவனிப்பது என்று இந்நாவல் முழுக்க வலி சார்ந்த நுட்பமான தகவல்கள் மதுவின் அகவுலகத்தில் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கின்றன.
இரண்டாவது மதுவின் புறஉலகம். மதுவின் புறஉலகத்தை இரண்டு அடுக்காகப் பிரித்துக் கொள்ளலாம். முதல் அடுக்கில் மதுவின் அப்பா,அம்மா, கார்த்திக், பேராசிரியர் மதுசூதனன் அவரது மகன் பாலு போன்ற மைய துணைப்பாத்திரங்கள். இரண்டாவது அடுக்கில் அந்த மைய துணைப்பாத்திரங்களோடு தொடர்புடைய எண்ணற்ற மனிதர்கள். வேறுபட்ட குணாதிசயங்களுடன் உலவும் இந்த மனிதர்களின் இடையே நடக்கும் உரையாடல்கள், உரையாடல்கள் வழியே விரியும் அரசியல், தத்துவம், வரலாறே இந்நாவலுக்கான விரிவையும், ஆழத்தையும் கொடுக்கிறது.

எதிலும் ஆர்வமற்ற மது ஒரு சுவர்ப்பல்லி போலத் தொடர்ந்து தனது உடலையும், சுற்றியுள்ள மனிதர்களையும், அவர்களது பேச்சுகளையுமே விளையாட்டுப் போல கவனித்துக் கொண்டிருக்கிறாள். ஒருகட்டத்தில் அவளுக்கு அதுவே வாழ்க்கையாகவும் மாறிவிடுகிறது. வளர்ந்ததும் ஆங்கில இலக்கியம் படிக்கச் செல்கிறாள். அங்கும் அதுவே தொடர்கிறது. புத்தகங்களும், மனிதர்களும் அவளுக்கென்று ஒரு தனித்த சிந்தனையை, தர்க்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவளிடம் இருப்பது முன்கூட்டிய பிடிவாதமான சிந்தனைகள் என்று சொல்லமுடியாது. ஆனால் யாராவது அவளது சுயத்தைக் காயப்படுத்தினால் அவளால் அவ்வளவு எளிதில் அதை உதறிப்போக முடியாமல் வாதங்களால் அதைச்சாடுகிறாள். அதனாலேயே பிடிவாதக்காரி என்றும் முரட்டுப்பெண் என்றும் சிலரால் நினைக்கப்படுகிறாள்.
மதுவின் அப்பாவுக்கும் மதுவுக்குமான உறவு நுட்பமாக நாவலில் பதிவாகியுள்ளது போன்று மதுவுக்கும், அவளது அம்மாவுக்குமான உறவு அவ்வளவு விரிவாக இல்லையோ என்று தோன்றுகின்றது. மதுவை சிறுவயதிலிருந்து வைத்தியசாலைக்குத் தூக்கிச்செல்வதும், கால்களுக்கு எண்ணெய் தடவிவிடுவதுமாக அற்புதமான தந்தையாக இருக்கும் அவரேதான் பல நேரங்களில் மது மீது எரிந்து விழுந்து அவளை வெறுக்கிறார். சுடிதார் வாங்கித் தரச் சொல்லிக் கேட்கும் நேரத்தில் கடுமையாகத் திட்டும் அவரேதான் பின்னாட்களில் மதுவுக்கு வாய்பேசாத வரன் அமையும்போது காலம் முழுக்க என் பெண்ணை நானே தூக்கிச் சுமக்கிறேன். ஆனால் ஓர் ஊமைக்கு கட்டிக்கொடுக்க மாட்டேன் என்று தீர்மானமாகச் சொல்கிறார். மதுவுக்கு அவளது தாயிடம் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை. ஒருசில நேரங்களில் கழிவறை செல்லும்போது மதுவின் அம்மா உதவி செய்கிறாள். சில நேரங்களில் மது அவளது அம்மாவுக்கு சமையலில் உதவி செய்கிறாள். எஞ்சிய நேரங்கள் எல்லாம் மதுவின் வீடு முழுக்க அவளது அப்பாதான் நிறைந்து விடுகிறார். தூக்கத்தில் ஆடை கலைந்த அப்பாவின் ஆண்குறி அவளது கனவில் வருகிறது. அப்பாவின் மீதுள்ள ஈர்ப்பு போல கார்த்திக் மீது மதுவுக்குப் பெரிதாக எந்த சுவாரசியமும் இல்லையோ என்றுதான் தோன்றுகிறது.

சில குறைவான பக்கங்களே வரும் துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அவ்வளவு கவனமாகவும், நுட்பமாகவும் செதுக்கப்பட்டுள்ளன. அந்த துணைக் கதாபாத்திரங்கள் இல்லாமல் போனால் இந்நாவலுக்கு கிடைத்திருக்கும் அபாரமான விரிவும், சுவாரசியமும் கிடைக்காமல் வெறுமனே ஏதோ ஒரு பெண்ணின் கழிவிரக்கத்தைச் சொல்லும் நாவலாகத் தடம்மாறிப் போயிருக்கலாம். மதுவின் வாழ்க்கையில் அவ்வப்போது இதுபோன்ற எண்ணற்ற மனிதர்கள் நீர்க்கோலம் போன்று வந்து மறைந்துபோகிறார்கள். மதுவின் இளம் வயதில் வரும் மத்தாயி என்ற செயற்கைக்கால் பழுது பார்க்கும் கடை நடத்துபவர் மற்றவர்களால் அவருக்கும் அவரது சித்திக்கும் இருப்பதாக நம்பப்படும் உறவு, பக்கத்துக்கு வீட்டில் இருக்கும் பிளேடு என்ற பட்டப்பெயர் கொண்ட மனிதர் அவரது குடும்பம், பெண்களோடு பேசும்போது அவர்களின் மார்பை மட்டுமே கவனிக்கும் ஹரிஹர ஐயர் என்ற மனிதர், ஆட்டோ ஓட்டும் கணேஷ், உலகத்துக்கு கீழ் இருக்கும் அனைத்திற்கும் கருத்து எழுதும் மார்க்கண்டேயன் என்ற எழுத்தாளர். அவர் எழுதும் சி++ என்ற புத்தகம்,டாக்டர் ஆபிரகாம் போன்று நாவல் முழுக்க வரும் உதிரிமனிதர்களால் நாவல் பிரமாண்டமாக விரிகிறது. மது இறுதிவரை அதே ஊரில் இருந்தாலும் பல துணைக்கதாபாத்திரங்கள் நாவலில் தொடர்ந்து பயணிக்காமல் ஆங்காங்கே மறைந்து விடுகிறார்கள். ஆனால் இதை நாவலின் ஒரு பிரச்சனையாகவும் பார்க்க முடியாது. வாழ்க்கையில் ஒரு மனிதன் சந்திக்கும் நிறைய மனிதர்களில் யாரோ ஒரு சிலர் மட்டும் அவனது இறுதிவரை பயணம் செய்து வருகிறார்கள்.

மாற்றுத்திறனாளிகளின் உலகத்தைப் புரிந்துகொள்வது பெரிய விஷயமில்லை. உடல் வலி அவர்களுக்கு ஒரு பிரச்சனையில்லை. உதாசீனமும், கேலியும், கிண்டலும், அல்லது அளவுக்கதிகமான கரிசனமும் (பாசாங்கற்றதாகவே இருந்தாலும்), ஒப்பீடு செய்வதுமே அவர்களைக் காயப்படுத்துகின்றன. அதுவே அவர்களை சராசரி மனிதர்களிடமிருந்து விலக்கிவைப்பதாகவும் உணர்கின்றார்கள்.

நாவலின் ஒரு அத்தியாயத்தில் மதுவின் அப்பா அவரது அலுவலக நண்பரின் வீட்டுக்கு மதுவை அழைத்துச்செல்வார். அலுவலக நண்பரின் வீட்டில் இருக்கும் பவித்ரா என்ற மதுவின் வயதையொத்த பெண்ணுக்கும் கால்கள் செயலிழந்த நிலையில் இருக்கும். ஆனால் அவள் அதீத தன்னம்பிக்கையுடன் இருப்பாள். கணிப்பொறி கற்றுக்கொண்டிருப்பாள். வண்டி ஓட்டுவாள். பெரிய வேலையில் இருப்பாள். சந்தோஷமாகவும், வசதிகளுடன் கூடிய ஒருவித நடுத்தர மேல்தட்டு வர்க்கம் போல சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப்பெண் அதீத நம்பிக்கையுடனும், மகிழ்வுடனும் வாழ்க்கையை எதிர்கொள்வாள். மதுவின் அப்பா அந்தப்பெண் போல ஏன் உன்னால் தன்னம்பிக்கையாக வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை என்று கேட்டு மதுவைத் திட்டுவார். மதுவுக்கு குழப்பமாக இருக்கும். அவளது உடல் குறைபாட்டின் அளவு வேறு. எனது குறைபாடு வேறு. நான் ஏன் அவள் போல இருக்க வேண்டும்? என்று கேட்பாள்.
மதுவுக்கு வைத்தியம் செய்ய வரும் சித்த வைத்தியர்கள் எல்லாம் ஏதேதோ செய்து தொடர்ந்து தோற்றுப்போகிறார்கள். அவர்கள் கொடுக்கும் எந்த மருந்தும் அவளது காலை குணப்படுத்தவில்லை. மாறாக மருந்துகள் அவளது யானைப்பசியைத்தான் அதிகரிக்கின்றன. அதனால் உடல் பருமன் ஆகிக்கொண்டே போகிறது. ஆரம்பத்தில் தனது உடல் பருமனைப் பற்றி லேசாகக் கவலைப்படும் மது பிறகு ஒருக்கட்டத்தில் அதை அலட்சியம் செய்கிறாள்.

சமீபத்தில் எனக்குத் தெரிந்த ஒரு நண்பரின் ஆறு வயது மகன், மாற்றுத்திறனாளி. கழிவறையில் கால் வழுக்கி அங்கிருந்த இரும்புவாளியில் தலை அடிபட்டுவிட்டது. ஐசியூவில் சேர்க்கும் நிலைமைக்குப் போனது. பொதுஇடங்களை விட்டுவிடலாம். இந்தியாவில் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீடுகளில் கூட அவர்களுக்கான முறையான கழிப்பறை, சக்கர நாற்காலி ஏற்றிச்செல்லும் மாடிப்படி வசதிகள் இல்லை. அதைப்பற்றி பேஸ்புக்கில் விரிவான கட்டுரையொன்றை எழுதியிருந்தேன். சென்னை போன்ற பெருநகரங்களில் இருக்கும் ஷாப்பிங் மால்களில், இப்போது கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையம் போன்ற சொற்ப இடங்கள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் அளவுக்குத் தகுதி கொண்டவையாக இருக்கின்றன. அங்கும் அவர்களுக்கான கழிவறை வசதிகள் எப்படி என்று தெரியவில்லை. அதைக் கூட சகித்துக்கொள்ளலாம்.
இந்நாவலின் இறுதியில் மது பிரத்யேக வண்டியோட்டுவதற்காக விண்ணப்பிக்கின்றாள். அங்கு மதுவுக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கும் மருத்துவர் முதல் போக்குவரத்து அதிகாரி வரை லஞ்சம் வாங்குகிறார்கள். மற்றவர்களிடம் அதிகமாகக் கைநீட்டும் அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளிடம் இரக்கப்பட்டு கொஞ்சமாக லஞ்சம் வாங்குவதை நானே பலமுறை நேரில் பார்த்து அவர்களது இரக்ககுணத்தை வியந்து பாராட்டியுள்ளேன்.

நாவலுக்காக அபிலாஷ் பயன்படுத்தியுள்ள கவித்துவமான மொழி கவனிக்கத்தக்கது. அதிக சிடுக்குகள் இன்றியும், சாதாரணமாக இல்லாமலும் வாசிக்க சிரமப்படுத்தாமல் செல்லும் இந்நாவலைப் பற்றி சில நண்பர்கள் பொதுக்கருத்தொன்றைச் சொல்வதைக் கவனித்துள்ளேன். அது இந்நாவல் மெதுவாகச் செல்கிறது. எல்லா ரயிலும் வேகமாகச் செல்ல வேண்டுமா என்ன? மலைரயிலுக்கென்று ஓர் அழகு உண்டு. இந்த மலைரயிலில் பயணிக்கும்போது ஆங்காங்கு வரும் பிளேடு,எழுத்தாளர் மார்க்கண்டேயன், டாக்டர் ஆபிரகாம் போன்ற மனிதர்கள், அவர்கள் ஊடான உரையாடல், அதில் இருக்கும் மெல்லிய அங்கதம், சமூகக் கோபம் என்று இந்நாவல் தொடர்ந்து அதன் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டே நம்மைக் கடத்திச்செல்கிறது.
ஒரு பெண் மாற்றுத்திறனாளியின் உலகையும், அவள் சார்ந்திருக்கும் சமூகத்தையும் விரிவாக இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் வகையில் இந்நாவல் கொண்டாடப்பட வேண்டியது. சமீபத்தில் இந்நாவல் எழுதிய ஆர்.அபிலாசுக்கு சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அபிலாசுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்வோம்.

Sunday, October 12, 2014

ராஜீவ்காந்தி சாலை - இரண்டு விமர்சனங்கள்

ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றி  ஈழத்து எழுத்தாளர் வ.ந.கிரிதரன் விமர்சனம்

(நன்றி:-வ.ந.கிரிதரன்)

அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

இதே வகையானதொரு நிலையினைத்தான் இந்தியாவில் உலகமயமாக்கலின் விளைவாக உருவான 'பணம் புழங்கும்' நடுத்தர மக்களின் வாழ்க்கையிலும் காணலாம். மேற்கு நாட்டுசமூகக் கலாச்சாரச் சூழலை அப்படியே கொண்டு வந்து, வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடொன்றில் நட்டுவிட்டால் எவ்வகையான விளைவுகள் உருவாகுமோ அவ்வகையான விளைவுகள் அனைத்தும் இங்கும் உருவாகும். அவைதான் 'ராஜீவ்காந்தி சாலை'யிலும் உருவாகின. பணம் புழங்கும் மத்தியதர மக்கள் மில்லின் கணக்கில் உருவானதும், மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் புதியதொரு சந்தையினை இந்த மாற்றம் திறந்து விட்டது. குறைந்த அளவு ஊதியத்துடன் உழைப்பை வாங்குவதன் மூலம் இலாபத்தை அதிகரித்த மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்துத் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் இலாபத்தைச் சம்பாதித்தன. ஒரு கல்லில் இரு மாங்காய்கள். 'கோல்கேற்' பற்பசை , கோர்ன் ஃபிளாக்௶ஸ் சீரியல்கள் தொடக்கம், ஃபோர்ட் வாகங்கள், ஜிஎம் வாகனங்கள் போன்ற வாகனங்கள் தொடக்கம், புதிய சந்தை நிலவும் நாட்டில் பேசப்படும் பன்மொழிகளில் திரைப்படங்களை மிகச்சிறப்பாக 'டப்பிங்' செய்வது தொடக்கம் இலாபத்தை அள்ளிக்குவித்தன மேற்கு நாட்டின் நிறுவனங்கள். 'மாஸ்டர் கார்ட்', 'விசா', 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' என்று அத்தனை கடன் அட்டை நிறுவனங்களும் நுழைந்து விட்டன. பல்வேறு வகையான காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், 'மல்டி லெவல் மார்கட்டிங்' என்று அனைத்து நிறுவனங்களும் நுழைந்து விட்டன.

மேற்கு நாடுகளின் நிறுவனங்களின் பணியினைக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்காகப் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பூற்றீசல்களைப் போல் முளைத்தன. இவ்விதமான நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பார்க்கும் மக்களை மையமாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் வலையை விரித்தன. கையில் காசு புழங்கத்தொடங்கியதும் இவ்வகையான நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை மாறத்தொடங்கியது. மேற்குக் கலாச்சாரம் அவர்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து விட்டது. வாகனம் வாங்குவது, கார் வாங்குவது என்பவையே அவர்களது கனவுகளாகின. புதிய சூழல், புதிய வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அழுத்தத்தினையும் கூடவே கொண்டுவந்து விட்டது. சக்திக்கு மீறிய வகையில் கடன்களைப் பெறும் சூழல் உருவாகியது. கடன்களைப் பெற்று வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு, வேலை சிறிது காலம் இல்லாமல் போனால் கூடத் தாங்க முடியாத நிலைதான். வாசலில் நின்று கடன்களை அவர்கள் மேல் திணித்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் இவ்விதமான இக்கட்டான நிலையில், உதவுவதில்லை. பணத்தைத் திருப்பிக் கட்டும்படி நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கும் சூழலுருவாகும். விளைவு? குடும்பங்கள் பிளவுறுதல், தற்கொலைகள், கொலைகள் என்று பல்வேறு வகையான பக்க விளைவுகள் உருவாகும். இரவினில் தனித்துப் பெண்கள் வேலை செய்யும் சூழல்கள், அவர்களுடன் பணி புரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தும். வேலையிழத்தல் போன்ற சூழல்கள் உருவாக்கும் பொருளியற் சுமைகள் காரணமாக ஒருவருக்கொருவர் பண உதவிகள் பெறுவது, பின்னர் அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அநுசரித்து வாழ்வது என்று ஏற்படும் மாற்றங்கள் தம்பதியினரின் குடும்ப வாழ்வினைச் சீரழிக்கின்றன.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் விமர்சிக்கின்றது. குழந்தைகள் மேல் புரியப்பட்டும் பாலியல் வன்முறைகள் எவ்விதம் அவர்களது வாழ்வினைச் சிதைத்து விடுகின்றன என்பதை நாவலில் வரும் கெளசிக் பாத்திரத்தினூடு ஆசிரியர் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். சிறுவயதில் ஆண் உல்லாசப்பிரயாணிகளினால், முதிய செல்வந்தப் பெண்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் அவன் வளர்ந்ததும் இளம்பெண்களைப் பாலியல்ரீயில் வதைப்பதில் இன்பம் காணுமொரு வெறியனாக உருமாற்றமடைகின்றான். அதன் விளைவாகக் கொலையுண்டும் போகின்றான். சிறு வயதில் அவன் மிக அதிகமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாகியது ஆண் உல்லாசப்பிரயாணிகளால்தான். எனவே அவனது ஆத்திரம் அவ்விதமான ஆண்கள்மேல் ஏற்படாமல் எதற்காகப் பெண்கள் மேல் ஏற்பட வேண்டும் என்றொரு கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை இவ்விதமாக உலகமயமாதலால் அடியோடு மாறுதலடைந்து, ராஜீவ்காந்தி சாலையாக மாறிய சென்னையின் மகாபலிபுரச்சாலையின் மாறுதல்களை விமர்சிக்கின்றது. உண்மையில் உலகமயமாதல் எவ்விதம் செல்வந்த நாடுகளின் இலாபத்திற்காக வளர்முக நாடுகளில் நிலவிடும் இயற்கைச் சூழலினை , விவசாயம் போன்ற தொழில்களை, சிறுவர்த்தகச் செயற்பாடுகளைச் சிதைத்து விடுகின்றது. எவ்விதம் நகர்ப்புறங்களில் செல்வச்செழிப்புள்ள பகுதிகளை உருவாக்கும் அதே சமயம், மிகவும் வறிய மக்களைக்கொண்ட சேரிகளையும் உருவாக்கி விடுகின்றது. எவ்விதம் பாலியல்ரீயிலான உளவியற் பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின் தீய விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. இவற்றைப்பற்றியெல்லாம் விமர்சிக்கின்றது. அந்த வகையில் 'ராஜீவ்காந்தி சாலை' ஒரு குறியீடு. உலகமயமாதல் வளர்ந்துவரும், அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றில் ஏற்படுத்தும் சமூக, பொருளியல், கலாச்சார மற்றும் சூழற் பாதிப்புகளை விமர்சிக்குமொரு குறியீட்டு நாவல் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'.


டிசே தமிழனின் விமர்சனம்
(நன்றி :- டிசே தமிழன்)

அளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.

Saturday, September 20, 2014

எழுத்தால் இருளைக் கடந்தவன்

(இம்மாத 'உயிர் எழுத்து' இதழில் வெளியான எனது கட்டுரை) 

இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமியின் 'யுவபுரஸ்கார்' விருது 'கால்கள்' நாவல் எழுதிய எழுத்தாளர் அபிலாசுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து படைப்புலகில் இயங்கிவரும் தகுதியான இளம் எழுத்தாளருக்கு விருது கிடைத்துள்ளது. விருதுஅறிவிப்பின் இரண்டுநாட்களுக்கு முன்புதான் நாங்கள் அவரது அடுத்த நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். 

அபிலாஷை நேரில் சந்தித்தது ஓர் இலக்கியக்கூட்டத்தில்தான். சென்னை மேற்கு கே.கே.நகரில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலசில் நடந்த விஜயமகேந்திரனின் நூல் விமர்சனக்கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் நல்ல மழை. பெரும்பாலானோர் கடைக்கு வெளியே மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள். மாடியில் அபிலாசும், நானும் இன்னும் சில நண்பர்களும் மட்டும் இருந்தோம். 'உயிரோசை'யில் கவிதைகள் எழுதியுள்ளேன் என்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். 

பேஸ்புக் வந்திராத காலம் அது. வலைப்பதிவர்கள் பலர் செறிவாக எழுதிக்கொண்டிருந்த காலம். இணையப்பத்திரிக்கைகள் செல்வாக்கு நிறைந்த காலம். மனுஷ்யபுத்திரன் நடத்திவந்த உயிரோசை என்ற இணையத்தளம் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி செறிவான கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுக்கொண்டிருந்த காலம். எங்கள் அலுவலக ஊழியர்கள் மட்டுமே படிக்கும் உள்வலைத்தளம் ஒன்றுள்ளது. பெரும்பாலும் அவரவர் மொழியில் எழுதும் சுதந்திரம் அங்குண்டு. அதில் எங்கள் அலுவல ஊழியர்கள் கவிதை, கட்டுரை,சிறுகதைகள் எழுதுவார்கள். அந்த வலைத்தளம் தவிர அலுவலகம் வெளியில் இயங்கும் இணையப்பத்திரிக்கைகளிலும் எழுதுவார்கள். அவர்களில் சிலர் அவ்வபோது கேண்டீனில் சந்தித்து தாங்கள் படித்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள். திண்ணை,கீற்று,உயிரோசை போன்ற இணையதளங்களில் வெளியாகும் தங்கள் கவிதை,கதைகளை பெருமையாக மற்றவர்களிடம் காட்டுவார்கள். அது போன்ற தருணமொன்றில்தான் அபிலாசின் எழுத்துக்கள் அறிமுகமானது. அலுவலக நண்பர் உயிரோசை இணையத்தளத்தில் வெளியான அபிலாசின் கட்டுரையை எனக்கு லிங்க் அனுப்பி வைத்தார். கட்டுரை படிக்க தனித்துவமான மொழியில் மிகசெறிவாக சுருக்கமாக இருந்தது. அன்றிலிருந்து உயிரோசையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். எனது முதல் கவிதையை உயிரோசைக்கு அனுப்பி வைக்க பிரசுரம் ஆனது. தொடர்ச்சியாக கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த வேளையில்தான் அபிலாஷை முதலில் சந்தித்து என்னை அறிமுகம் செய்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன். அபிலாஷை சந்திக்கும்வரை அவர் கட்டுரை, மொழிபெயர்ப்பு கவிதைகள் எழுதுபவர் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரை சந்தித்து பேசிய சில நிமிடங்களில் அவர் கதை, கவிதை, சிறுகதை, நாவல் என்று பலதுறைகளில் இயங்குபவர் என்று தெரியவந்தது. பிறகு அவர் உயிரோசையில் எழுதுவதையும், அவரது பிளாக்கில் எழுதுவதையும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அடிக்கடி போனிலும் எப்போதாவது அபூர்வமாக மட்டுமே நேரிலும் சந்தித்து பேச ஆரம்பித்தோம். 

கடந்த ஆண்டு நாவல் எழுதவேண்டும் என்று எனக்குள் ஏதோவோர் எண்ணமும், உந்துதலும் கொந்தளிப்பான தீவிர மனநிலையும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. அதற்குமுன்பு அப்படியெல்லாம் எந்தவித திட்டமிடலும் எனக்கு இல்லை. ஏதாவது தோன்றுவதை பிளாக்கில், பேஸ்புக்கில் எழுதுவது என்றுதான் நாட்கள் ஓடின. யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஒருநாள் அபிலாசுக்கு போன் செய்து நான் ஒரு நாவல் எழுத ஆரம்பித்துள்ளேன். அது சரியா வருமா என்று தெரியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பத்து பக்கங்கள் எழுதி பார்த்தேன். சரியாக வரவில்லை. கிழித்துப்போட்டாலும் உறக்கம் வரவில்லை. திரும்ப எழுத வேண்டும் போல ஏதோ துரத்துகிறது என்று சொன்னேன். அபிலாஷ் தனது கால்கள் நாவலை பற்றியும், அதை என்ன மாதிரியான மனநிலையில் எழுத ஆரம்பித்தார் என்பதை பற்றியும் நிறைய பேசினார். 

போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடல்கன்னி போல உட்கார்ந்திருக்கிறாள். அந்த காட்சிபடிமம் எனது மனதில் வந்ததும் ஏதோ ஓர் உத்வேகத்தில் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னார். எனக்கும் அதுவே நடந்தது. இரை விழுங்கிய மலைப்பாம்பு போல சாலை நீண்டு வளைந்து கிடந்த ஒரு காட்சிபடிமம் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அதைத்தான் எப்படி இன்னும் விரிவாக எழுதுவது என்று தவித்துக்கொண்டிருந்தேன். ஒரு சொல் அல்லது ஒரு காட்சிபடிமம் மெல்ல மெல்ல வளர்ந்து பிரமாண்டமான கதையாக உருவெடுக்கும் என்று அபிலாஷ் சொன்னார். எழுதுங்க. உங்களால் முடியும் என்று ஒருமணி நேரம் வரை பல ஆலோசனைகள் சொன்னார். சரிதான் நம்மை ஊக்கப்படுத்த சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த நாட்கள் அவராகவே போன் செய்து தொடர்ந்து நாவலை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். மெல்ல மெல்ல தயக்கமும், பயமும் மறைந்து எனக்கு வேறுவிதமான கவலை வர ஆரம்பித்தது. நாவல் எழுதுவது ஒரு நல்ல அனுபவம். ஆறுமாதங்களோ ஒரு வருடமோ ஒரு நாவல் எழுதுவீர்கள். அந்த காலக்கட்டத்தில் உங்கள் அன்றாட வேலைகளை செய்துக்கொண்டே இருப்பீர்கள். குளித்துமுடித்து சாப்பிட்டு பஸ் பிடித்து அலுவலகம் சென்று மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது. இது ஓர் உலகம். ஆனால் உங்களுக்குள் இன்னோர் உலகம் சுழன்றுக்கொண்டே இருக்கும். அங்கே உங்கள் நாவலில் வரும் மனிதர்கள் இருப்பார்கள். நாவலில் வரும் சம்பவங்கள் நடக்கும். அங்கேயும் நீங்கள்தான் இருப்பீர்கள். ஆனால் இங்கே இருப்பவர்களால் அங்கே இருக்கும் உங்களை பார்க்க முடியாது. மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் நீங்கள் உருவாக்கின உலகத்தில் நீங்கள் உருவாக்கின மனிதர்களோடு நடமாடிக்கொண்டிருப்பீர்கள். அது ஓர் அழகிய அனுபவம். அதை அனுபவித்தால் போதையாக இருக்குமென்று அபிலாஷ் சொன்னார். எனக்கு பயம் வந்துவிட்டது. நாவலை எப்படி எழுதுவது என்பதிலிருந்த கவலை மெல்ல மெல்ல திசைதிரும்பி நாவலை எப்படி முடிப்பது என்று மாற ஆரம்பித்தது. நான் எழுத எழுத அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். முழுக்கதையை சொல்லாவிட்டாலும் என்னமாதிரி எழுதுகிறேன் என்னமாதிரி கதாபாத்திர அமைப்புகள் வருகின்றன என்று சொல்வேன். அவர் உடனே வேறு ஏதாவது படித்த நாவலை பற்றி பேசுவார். அதைப்பற்றி விவாதிப்போம். மனச்சோர்வு இல்லாமல் இருந்தது. இப்படியாக நான்கைந்து மாதங்கள் ஓடின. 

நாவலை எழுதி முடித்ததும் மென்பிரதியை அவருக்கு அனுப்பி இதை படித்துபார்த்து உங்கள் ஆலோசனை சொல்லமுடியுமா என்று கேட்டிருந்தேன். அப்போது அவர் கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியிடுவதற்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தார் என்று தெரியவந்தது. சரி. தொந்தரவு செய்ய வேண்டாமென்று அதிகம் வற்புறுத்தவில்லை. டிசம்பர் மாதம் நாவல் வெளியீட்டுவிழா என்று போன் செய்து தேதியை சொன்னேன். எனது கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவும் அன்றுதான் என்றார். எங்கள் இருவரின் புத்தகங்களும் ஒரே பதிப்பகம் என்பதாலும் ஒரே நாள் என்பதாலும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஒரே மேடையில் அமர்ந்திருந்ததும் சந்தோஷமாக இருந்தது. 

பிறகு ஜனவரி மாதம் பேஸ்புக்கில் சிலர் என்னை தொடர்ந்து மோசமாக தாக்கி எழுத ஆரம்பித்தார்கள். ஏன் தாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட என்னையும் எனது குடும்பத்தினரையும் திட்டி ஆபாசமாக விமர்சனம் என்ற பெயரில் பதிவுகள் எழுதினார்கள். பேஸ்புக் கணக்கை கூட மூடிவைத்துவிடலாமா என்று தோன்றியது. அப்போதுதான் அபிலாஷ் எனக்கு போன் செய்து "ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் நாவலை பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததால்தான் இப்படி நடக்கிறது. நீங்கள் ஒருவேளை பேஸ்புக்கில் இல்லாமல் போயிருந்தால் அல்லது விளம்பரம் செய்யாமல் அப்படியே புத்தகத்தை வெளியிட்டிருந்தால் எதுவும் நடந்திருக்காது" என்று சொன்னார். அடுத்தநாள் அவரது வலைதளத்தில் எனது நாவலை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை வெளியிட்டார். அபிலாஷ் எழுதிய கட்டுரைதான் எனது நாவலுக்கு வந்த முதல் விமர்சனம். கறாராக விமர்சனம் செய்திருந்தார். அதன்பிறகு பேஸ்புக் புழுக்களின் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது.அபிலாஷ் என்னிடம் அடிக்கடி சொல்வார். உடனடியாக எந்தவித எதிர்வினையும் செய்யாதீர்கள். ஒரு நாவலை எழுதிமுடித்தால் அடுத்த படைப்பு பற்றி யோசித்து அதை நோக்கி நகர்ந்துச்செல்வதே நல்லது. நல்ல புத்தகம் என்றால் அது சில வருடங்கள் கழித்து கண்டிப்பாக பேசப்படும் என்றார். அது உண்மைதான் என்று தோன்றுகின்றது. உடனடி எதிர்வினை ஆரோக்கியக்குறைவை உண்டுசெய்து நம்மை நோயில் தள்ளிவிடும். 

பிப்ரவரி மாதம் ஊட்டியில் வசிக்கும் மலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம் அமைப்பின் நிறுவனர் பாலநந்தகுமார் எனக்கு போன் செய்து உங்கள் நாவலை இந்த வருடத்தின் விருது நாவலாக அறிவித்துள்ளோம். சென்னையில் இருந்து உங்கள் நண்பர்கள் யாரையாவது பேச அழைத்து வாங்க என்று சொன்னார். எனக்கு சென்னையில் நண்பர்கள் அவ்வளவாக இல்லை. அப்படியே இருந்தாலும் நேரில் அழைத்தால் முகத்தை திருப்பிக்கொண்டு போகின்றவர்கள்தான் அதிகம். நண்பர்கள் அதுவும் புத்தகத்தை பற்றி பேச யாரை அழைப்பது என்று தெரியவில்லை. அபிலாஷிடம் தயக்கத்துடன் கேட்டேன். அவர் உடனே வர சம்மதம் சொல்லிவிட்டார். அதுவரை அபிலாஷிடம் போனில்தான் பேசியிருக்கிறேன். அபூர்வமாக ஒன்றிரண்டு முறை நேரில் சந்தித்துக்கொண்டதோடு சரி. ஊட்டியில் அபிலாசுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தது மறக்க முடியாத அனுபவம். 

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் ரயிலில் சென்றோம். நள்ளிரவு ஆகிவிட்டது. பாலநந்தகுமார் மேட்டுப்பாளையத்தில் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு இரவை கழித்துவிட்டு மறுநாள் காலை பத்துமணிக்கு மேல் காரில் மெதுவாக மலை ஏற ஆரம்பித்தோம். அப்போது தருண் தேஜ்பாலின் நாவல் ஒன்றை அபிலாஷ் கையில் வைத்திருந்தார். ரயிலில், பூங்காவில், காரில் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை இடையிடையே வாசித்துக்கொண்டே இருந்தார். அபிலாசின் வாசிப்பை விட என்னை அதிகம் பொறாமைப்பட வைத்தது இன்னொரு நிகழ்ச்சி. சென்னையிலிருந்து நாங்கள் சென்ற ரயிலிலும் மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்த விடுதியிலும் ஒருசிலருக்கு அபிலாஷை தெரிந்திருந்தது. இவர் விஜய் டிவியில வர்றவர் என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் சந்தோஷம் கலந்த வெட்கத்துடன் கோயம்புத்தூர் பெண்கள் சொல்வதை பார்க்க எனக்கு பொறாமையாக இருந்தது. அதற்கு ஊட்டியில் பழிதீர்த்துக்கொண்டேன். நாங்கள் படகுச்சவாரி செல்லும்போது எங்கள் படகுக்கு அழகான வடநாட்டு இளம்பெண்கள் வந்தார்கள். நான் கரையிலேயே இருக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க என்று அபிலாஷ் சொல்லிவிட்டார். ஏரிக்கரையில் அமர்ந்து பறவைகளை தீவிரமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அபிலாசும், நானும், பாலநந்தகுமாரும் அவ்வளவு பேசினோம். அரசியல், எழுத்து, சினிமா என்று பலவருடங்கள் கழித்து கல்லூரி நண்பர்களோடு பேசுவது போன்ற உணர்வு. தமிழ் இலக்கியம் படிப்பவர்களை விட ஆங்கில இலக்கியம் படிப்பவர்களே அதிகமாக தமிழ் நாவல்களையும்,கவிதைகளையும் படிப்பார்கள் என்பது எனது அபிப்ராயம். அபிலாசின் வாசிப்பு பரந்துபட்டது. கா.நா.சுவின் விமர்சனக் கட்டுரைகளிலிருந்து முகுந்த் நாகராஜன் ஏன் இப்போது கவிதைகள் எழுதுவதில்லை என்பது வரை எது பற்றி பேசினாலும் விரிவாகவும், ஆழமாகவும் தனித்த கோணத்தில் அவரது கருத்துகளை முன்வைப்பார். 

அபிலாஷ் நல்ல கட்டுரை எழுதுபவர் என்றே எனது அலுவலக நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ அவரை அப்படி பொதுமைப்படுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. உயிரோசை ஆரம்பித்த காலத்திலேயே அபிலாஷ் அப்படி இருந்தில்லை. கட்டுரைகள் எழுதுவார். திடீரென ஹைக்கூ கவிதைகளை மொழிப்பெயர்ப்பு செய்து எழுதுவார். பிறகு அடுத்த வாரம் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார். சிக்கலான மொழியில் இரண்டுமுறை வாசிப்பை கோரும் எழுத்தில் கட்டுரையின் நடை இருக்கும். ஆனால் அடுத்த வாரமே ஜாலியாக வேறொரு கட்டுரை வெளிவரும். பலதுறைகளில் ஆர்வம் கொண்ட புதுபுது விஷயங்களை தேடி படிக்கும் மனநிலையில் இருக்கும் ஒருவராலேயே இப்படி எழுத முடியும் என்று நினைத்துக்கொள்வேன். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். குறைவாக எழுதினால்தான் அது நல்ல எழுத்து என்று அவர் ஆரம்பத்தில் நினைத்ததாகவும் இந்த விஷயத்தில் மேலைநாடுகளில் இருக்கும் தொழில்முறை எழுத்தாளர்களை பாருங்க என்று மனுஷ்யபுத்திரன் அறிவுரை சொன்னதாக குறிப்பிட்டார். மனுஷ்யபுத்திரன்தான் தனது சோம்பேறித்தனத்தை உடைத்து நிறைய எழுத வைத்ததாக சொன்னார். எழுத்தாளன் என்பவன் தினமும் நாலு வரியாவது எழுதி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்பதில் எனக்கும் உடன்பாடுதான். 

'கால்கள்' அபிலாஷின் முதல் நாவல். இந்த நாவலுக்கு பிறகு அபிலாஷ் எழுதிய ப்ரூஸ்லீ பற்றிய ஒரு கட்டுரைத்தொகுப்பு வெளிவருகிறது. பிறகு அபிலாசின் முதல் கவிதைத்தொகுப்பு வெளிவருகிறது. இடையில் கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் என்ற கட்டுரைநூல். கிரிக்கெட் பற்றி தமிழில் ஆழமான பார்வையுடன் வெளிவந்த நூல்கள் மிகவும் குறைவு. துறைசார் நூல்களில் இருப்பது போன்று நுட்பமான தகவல்களும், ஆழமான பார்வையும், பல இடங்களில் தீவிர மொழியுடனும், சில இடங்களில் அங்கதமுமாய் எழுதப்பட்ட வகையில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க புத்தகம் என்பேன். "இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்" என்பது அபிலாஷின் சமீபத்திய புத்தகம் (முதல் கவிதைத்தொகுப்பு) 

கடந்த மாதம் டிஸ்கவரி புக் பேலசில் அபிலாசின் கவிதைத்தொகுப்பின் மீதான விமர்சனக்கூட்டம் நடந்தது. இந்திரன்,அமிர்தம் சூர்யா, உமாசக்தி, நரன், விஜயமகேந்திரன் போன்ற சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற சிறுகூட்டமாக இருந்தாலும் அபிலாஷின் எழுத்தை பற்றி நண்பர்கள் பேச,விவாதிக்க உண்மையில் ஏற்ற இடமாக அது இருந்தது. ஆச்சர்யமூட்டும் வகையில் அந்தச்சந்திப்பிலும் கூட்டம் முடிந்ததும் வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. புத்தகக்கடைக்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் குறைந்த முன்னிரவு சாலையில் கொட்டும் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக கவிதை எழுதுபவர்கள் அடுத்து சிறுகதை எழுதுவார்கள். பிறகு கொஞ்சநாளில் நாவல்கள் பக்கம் தாவிவிடுவார்கள். பிறகு ஒருபோதும் கவிதைகளின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். இந்த வசீகர பரிணாமவளர்ச்சி வரிசையை அபிலாஷ் திட்டமிட்டோ எதேச்சையாகவோ மீறுகிறாரோ என்று சந்தேகம் வந்ததுண்டு. இதைபற்றி அவரிடம் கேட்டேன். இது எப்படி நடந்ததென்று எனக்கும் தெரியவில்லை என்றார் சிரித்துக்கொண்டே. 

அவரது கட்டுரைகளில் கூட இதேபோன்ற நியதியை பின்பற்றுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் தோன்றும். ஒரு கட்டுரையை தீவிரமாக எழுதுவார். அடுத்து வெளிவரும் கட்டுரை கொஞ்சம் அங்கதமாக இருக்கும். ஆனால் நடையில் அதே துல்லியமான கறாரான ஒழுங்கு இருக்கும். அபிலாஷின் சினிமா கட்டுரைகளில் குறிப்படத்தக்கது அவர் ஆயிரத்தில் ஒருவன் (செல்வராகவன்) என்ற சினிமா பற்றி எழுதியது. அந்தக்கட்டுரை உயிர்மையில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அவர் அந்த படத்தின் நுட்பமான அம்சங்களை கவனித்து செறிவாக எழுதியிருந்தார். சாருநிவேதிதா அதற்கு எதிர்வினை செய்து அத்திரைப்படத்தை குப்பை என்று எழுதினார். அந்திமழை,காட்சிப்பிழை பத்திரிக்கைகளில் அபிலாஷ் எழுதி வரும் சினிமாக்கட்டுரைகளை நண்பர்கள் பலர் எனக்கு போன் செய்து படித்தீர்களா என்று கேட்டு அதை பற்றி விவாதிப்பது அடிக்கடி நடக்கும். அபிலாஷ் கட்டுரைகள் தனித்துவம் மிக்கதாக தெரிய இரண்டு விஷயங்கள் அவருக்கு உதவுகின்றன. கட்டுரைகளுக்கென்று அபிலாஷ் தேர்வு செய்யும் ஒருவித வசீகர மொழி லாவகம். ஒரு விஷயத்தை வேறொரு கோணத்தில் அவதானிக்கும் பாங்கு. கட்டுரைகளுக்கு மட்டுமல்ல கவிதைகளுக்கும் இதையே அவர் பயன்படுத்திக்கொள்கிறார். 

அபிலாஷின் கவிதைத்தொகுப்பு பற்றி தமிழவன் எழுதிய விமர்சனத்திலிருந்து.... 

"பொதுவாய் அபிலாஷின் கவிதையாக்கல் உத்தி என்பது இந்த எதிர்பாராத, சாதாரண விசயத்தை கவனித்து எதிர்பாராத இன்னொரு பார்வையை அதில் பதிய வைத்து கவிதையாக மாற்றுவது தான். இது பல கவிதைகளில் காணப்படுகிறது"

எங்கேயோ இருக்கும் இரண்டு மூன்று புள்ளிகளைகூட ஆச்சர்யமூட்டும் வகையில் ஒன்றாக இணைத்துவிடுவார். அவரது தனித்துவம் என்று நான் இதையே நம்புகிறேன். ரஜினியையும், பூக்கோவையும் இணைத்து ஒரு கட்டுரை எழுத அவரால் மட்டுமே முடியும். நீட்சேவும்,செந்திலும் என்று கட்டுரைக்கு தலைப்பு வைப்பார். 

எனது நண்பர்கள் சிலருடன் இருக்கும்போது அபிலாசின் ஏதாவது கட்டுரை பற்றி பேச்சு எழும். "உங்களுக்கு அவரை தெரியுமா? அவரோடு நட்பில் இருப்பது சிக்கலான விஷயம் ஆச்சே" என்று ஆச்சர்யமாக கேட்பார்கள். அவர்கள் ஆச்சர்யத்தை பார்த்துதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் அவரோடு இருந்த நாட்களில் அபிலாஷ் கால்கள் நாவலில் வரும் மதுபோல சிலநேரங்களில் முரட்டு பிடிவாதம் கொண்ட குழந்தையாக தெரிகிறாரோ என்றுகூட நினைத்தது உண்டு. ஆனால் அது ஒரு பாவனைதான் என்று தோன்றியது. உலகத்தில் சிக்கலான விஷயம் குழந்தைகளுடன் நட்பில் இருப்பதுதான். ஆனால் ஆபத்தில்லாத விஷயமும் அதுவே. ஊட்டியிலிருந்து சென்னைக்கு திரும்பிவந்ததும் அபிலாஷ் ஊட்டி பயணம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் இறுதியில் "கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான் இவ்வளவு சிரித்து உற்சாகமாக இருந்திருக்கிறேன். அதன் பிறகான என் வாழ்க்கையில் தான் ஏதோ கோளாறு இருக்கிறது என நினைத்தேன். வயிற்றில் அமிலம் கட்டிய ஆட்களை கடவுள் என்னைச் சுற்றி படைத்து வைத்திருக்கிறார். அடுத்த நாள் காலை சென்னை வந்த பின்னரும் இதோ இப்போது வரை அந்த சந்தோஷத்தின் தடம் என் உதடுகளில் இருந்து நீங்கவில்லை. ரொம்ப நாள் தங்காது. ஏதாவது ஒரு சென்னை இலக்கியவாதியை பார்க்காமலே போய் விடுவேன்?" என்று எழுதியிருந்தார். இந்த பயம்தான் எனக்கும் சென்னை நண்பர்களை பார்த்து. அதனால்தான் ஊட்டிக்கு வர முடியுமா என்று தயக்கத்தோடு கேட்டேன். 

அபிலாஷின் 'கால்கள்' நாவல் பற்றி வெகுசிலரே குறிப்பிட்டிருக்கிறார்கள். அது பற்றி அவருக்குள் உள்ளுக்குள் ஏதாவது வருத்தம் இருக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு அந்த ஆதங்கம் இருந்தது. உங்கள் நாவலை பற்றி அடிக்கடி பேஸ்புக்கில் எழுதுங்க என்று சொல்வேன். ஆனால் அவர் அதை தீர்மானமாக மறுத்துவிடுவார். ஒரு நாவல் எழுதப்பட்ட சில காலங்கள் கழித்தே அது பேசப்படக்கூடுமென்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பார். அவரது இந்த நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்தபோது எதிர்கால திட்டங்கள் பற்றி நிறைய சொன்னார். கவிதைக்காக இன்மை.காம் என்ற இணைய இதழ் தொடங்கியுள்ளதாக சொன்னார். கவிதை கருத்தரங்கம் ஒன்றை தொடங்குவது பற்றிய தனது கனவை அவர் சொன்னார். "முன்பைக்காட்டிலும் கவிதை பற்றி விவாதிக்கும் கூட்டங்கள் குறைந்து வருகின்றன. குற்றாலத்தில் நடந்தது போல வருடத்துக்கு ஒருமுறை ஊட்டியில், கொடைக்கானலில் ஒரு பட்டறை நடத்தினால் எப்படியிருக்கும்" என்று கேட்டார். அதுபற்றி விரிவாக பேசினோம். சென்னை திரும்பியதும் விரிவாக திட்டமிடலாம் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் சென்னை திரும்பியதும் வேலைப்பளு அது இதுவென்று தள்ளிக்கொண்டே போய்விட்டது. முதலில் மாதம் இருமுறை பத்திரிக்கையை கொண்டுவருவது என்றுதான் திட்டமிட்டிருந்தார். முதல் மாதம் அப்படித்தான் வந்தது. ஆட்களிடமிருந்து கவிதைகளை வாங்குவதும், அதை தேர்வு செய்வதும், பிறகு படங்களை வடிவமைப்பு செய்பவரோடு நேரம் செலவழிப்பதும் என்று பணிச்சுமை இழுப்பதால் இன்மை.காமை மாதம் ஒருமுறை மட்டுமே கொண்டுவர போகிறேன் என்றும் வருத்தத்தோடு சொன்னார்.

கடந்த மாதம் பேசும்போது இரண்டாவது நாவல் எழுதிமுடித்துவிட்டதாகவும் இப்போது எடிட்டிங் வேலையில் இறங்கியுள்ளதாகவும் உற்சாகமாக சொன்னார். நேற்று சாகித்ய அகாடமி இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் தேசிய விருது பட்டியலில் அவர் பெயர் அறிவித்திருந்ததை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்து சொன்னேன். இந்த விருது அவருக்கு மேலும் உற்சாகத்தையும்,தெம்பையும் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கீகாரமும், உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டுக்களும்தானே மனிதனை தொடர்ந்து ஆர்வமாக இயங்க வைக்கின்றன.

Wednesday, August 13, 2014

புதிய புத்தகம் பேசுது - ராஜீவ்காந்தி சாலை

ஆகஸ்ட் மாத "புதிய புத்தகம் பேசுது" இதழில் வெளிவந்துள்ள "ராஜீவ்காந்தி சாலை" நாவல் விமர்சனம்.  

நன்றி:- சா.சுரேஷ்
 
 
 

Sunday, July 27, 2014

சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை

நன்றி:- ந.முருகேச பாண்டியன்

தமிழ் இந்துவில் ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றிய ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...  


சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல.

பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாய முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப் பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது.

கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமை யாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன் றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற் றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணி யாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கிறது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடை பெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மன அமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம் பெண்கள், காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன் வாழ முயலுகின்றனர்.

பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப் பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார். சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும் அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள் பற்றிய விவரிப்பு ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும் பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும் மனிதர்கள் இப்படியெல்லாம் தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன் என யோசிக்க வைக்கிறது நாவல்.

வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டு புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

மனப் பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டி டதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாகத் தேடி அலையும் மனிதர்கள் மனப் பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கிறார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவிய லாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது.

நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்துகொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ் காந்தி சாலை நாவல் நீள்கிறது எனவும் வாசிக்கலாம்.

Wednesday, January 8, 2014

காலகண்டம்

நவீன தமிழ் இலக்கியத்தில் இதுவரை பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நாவல்கள் வந்துள்ளதா என்று யோசித்து பார்த்தால் எதுவும் எனது நினைவுக்கு வரவில்லை. சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரம் போன்ற தரவுகள் உள்ளன. சினிமாவில் கூட ஏதோ ஒரு பாரதிராஜா படத்தில் கார்த்திக் பொன்னாசாரியாக வருவார். அந்த படத்தில் பொன்னாசாரி பிரிட்டிஷ் பெண்ணை காதலிப்பார். பேண்டஸிக்காக கார்த்திக் ஒரு சின்ன சுத்தியலால் ரஞ்சிதா மூக்கில் ஆணியை வைத்து அடித்து மூக்கு குத்திவிடுவார். பிறகு அருள் என்ற படம். அந்த படத்தில் அரசியல்வாதியை வெட்டிவிட்டு ஜெயிலுக்கு போவார். பொன்னாசாரிகளை பற்றி ஏதாவது நல்ல இலக்கியம் வந்துள்ளதா என்று நீண்ட நாட்களாக தேடிகொண்டிருந்தபோதுதான் எஸ்.செந்தில்குமார் நாவல் பொன்னாசாரிகளின் நான்கு தலைமுறைகளை பற்றிய கதை என்ற அறிவிப்பு வந்தது. புத்தகம் வெளிவந்ததும் எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இந்த நாவலின் பின்னட்டையில் 500 வருடங்களிற்கு மேற்பட்ட பாரம்பரியம் கொண்ட பொன்னாசாரிகளது சமூகம் என்று குறிப்படப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரத்தை இன்னும் பிற தரவுகளை வைத்து பார்த்தால் அந்த சமூகம் இன்னமும் பலமடங்கு பழமையான சமூகம் என்றே கணிப்பிட தோன்றுகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல் பொன்னாசாரிகளுக்கு அப்படியென்ன இறுக்கமான சமூக அழுத்தம் இருக்க போகிறதென்று நினைத்துதான் நாவலை திருப்ப ஆரம்பித்தேன். காரணம் தலித்துகளை போலவோ பிற ஜாதிகளை போலவோ சமூக அடுக்கில் ஆதிக்கசாதியினரின் வீடுகளை தேடிச் சென்று அவர்கள் தரும் வேலைகளை செய்யும் சமூகம் அல்ல ஆசாரிகள். பார்ப்பனர்களுக்கு நிகராக பூணூல் அணியும் ஜாதி. சாமி சிலைக்கே கண் திறக்கும் ஜாதி நாங்கள் என்று சிலர் பெருமையாக சொல்வார்கள். எந்த சமூகத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள்தான் பொன்னாசாரிகளது வீடுகளுக்கு தேடிச் சென்று தாலி செய்ய வேண்டும். அது தலித்தோ, நாயக்கமார்களோ, மணியக்காரர்களோ, பார்ப்பனர்களோ எல்லாரும் தேடிச்சென்று வேலை கொடுக்கும் சமூகம் ஆசாரிகளுடையது. எனவே அவர்களுக்கு பெரிதாக சமூக அழுத்தம் இருக்க போவதில்லை என்ற எண்ணத்தில்தான் நாவலை படிக்க ஆரம்பித்தேன்.

நாவலின் கதை சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்தில் பிரிட்டிஷார் ஆண்ட மதுரை ஜில்லாவில் இருந்து ஆரம்பிக்கிறது. நாவலின் களம் தெலுங்கு பேசும் நகை ஆசாரிகளும், தச்சாசாரிகளும், நாயக்கமார்களும், மணியக்காரர்களும் நிறைந்த போனூர்,தேவாரம் ஜமீன் பாத்தியம் கொண்ட பெரியரேவூப்பட்டி கிராமங்கள்.

பொன்னாசாரி சுப்புலுவும்,பெரியநாச்சியும் போனூரில் தச்சு வேலை செய்கிறார்கள். பொன் ஆபரணங்கள், மரப்பொருட்கள் வேலைகளை வருடத்திற்கு பத்துபடி வரகும், சோளமும், கேழ்வரகும் சம்பளமாக நாயக்கமார்களிடமும், மணியக்காரர்களிடமும் வாங்கிக்கொண்டு உழைக்கிறார்கள். சுப்புலுவும், பெரியநாச்சியின் மகன் பெத்தையா. ஊருக்குள் காலரா நோய் பரவியபோது பெத்தையாவின் மனைவி இறந்து விடுகிறார். காலரா நோயில் இறந்த ஆட்களை ஊருக்கு வெளியே புதைக்க சொல்லி மணியக்காரர்கள் சொல்லிவிட பெத்தையா அவரது மனைவியை ஊருக்கு வெளியே புதைத்து விடுகிறார். பெத்தையாவிற்கு இரண்டு ஆண் பிள்ளைகள். மூத்தவன் ராஜய்யா. இளையவன் சென்னய்யா. மனைவி இறந்ததும் பெத்தையா அவர்களை அழைத்து சென்று தனது தம்பியிடம் ஒப்படைத்து வளர்க்க சொல்கிறார். பெத்தையாவின் தம்பி பொன் ஆசாரி அல்ல. தச்சு ஆசாரி. பெத்தையாவின் பிள்ளைகள் இருவரும் அவர்கள் சித்தப்பாவிடம் தங்கி தச்சு வேலைகளை கற்றுக்கொள்கிறார்கள். பெத்தையாவிற்கு ஒரு தங்கை. அவள் பெயர் வீரவீருசின்னம்மா. கணவன் பெயர் சில்லையா ஆசாரி. அவளது மகன் கிருட்டிணாசாரி.

கிருட்டிணாசாரி தலைமுறையில் நாவல் தொடங்குகிறது. அவனுக்கும் பெரியரேவூப்பட்டியில் வசிக்கும் பொன்னழகு ஆசாரி மகள் திரஜம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது. அந்தகால வழக்கம் போல பால்ய விவாகம். பிறகு திரஜம்மா பருவம் அடைந்ததும் குடும்ப வாழ்க்கை தொடங்குகிறது. ஒரு மகளும்,மகனும் பிறக்க சில ஆண்டுகளில் திரஜம்மா இறந்து போகிறாள். கிருட்டிணாசாரி இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறான். மனைவி பெயர் வீருசின்னு. அவர்களுக்கு மூன்று மகன்கள். கதை அப்படியே மூன்றாவது தலைமுறை செல்கின்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டம். இப்படியே சமகாலம் வரை நீளும் ஒரு குடும்பத்தின் வழியாக அதன் உறவுகளின் ஊடாக அந்த குடும்பம் வசிக்கும் ஊர்களின் வழியாக அவர்கள் குலத்தெய்வங்கள் வழியாக அந்த குலதெய்வங்கள் அமர்ந்திருக்கும் நிலபரப்பின் ஊடாக மாறும் பருவ நிலைகள் வழியாக ஒரு சமூகத்தின் கதை சொல்லப்படுகிறது. காலச்சக்கரம் சுழல சுழல ஒரு காலத்தில் மிடுக்காக வாழ்ந்த பொன்னாசாரிகள் சமூகம் எப்படி சிதைந்து போகின்றது என்பதையும், நவீன இயந்திர காலத்தின் முன்பு அவர்களது பழமையான பட்டறைகள் எல்லாம் தோற்று போவதையும், அவர்களின் இன்றைய தலைமுறைகள் பலர் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்வதையும், ரஜினி படம் பார்க்க சென்று வழியில் கழுதை மோதி சைக்கிளோடு சாக்கடைக்குள் விழுந்து எழுவதையும் , சாராயக்கடைக்குள் விழுந்து கிடப்பதையும் சொல்வதோடு நாவல் முடிகிறது.

இந்த நாவலின் வெளியீட்டு விழாவில் அ.இராமசாமி சொன்னது போல இந்த நாவலில் மனிதர்கள் இறந்துக் கொண்டே இருக்கிறார்கள். முதல் தலைமுறையில் விஷக்காய்ச்சல், பஞ்சம் என்று மனிதர்கள் இறக்க இறக்க பூமி புதிது புதிதாக மனிதர்களை உற்பத்தி செய்துகொண்டே இருக்கிறது. நாவலின் இறுதி செல்ல செல்ல காலகண்டம் அந்த சமூகத்தை வேகமாக வீழ்ச்சியடைய வைக்கிறது. ஆனால் இந்த முறை நடக்கும் வீழ்ச்சியில் மனிதர்கள் ஒரு போதும் மீண்டெழுவதில்லை. போனூர் கிராமத்தின் எல்லா சுவடுகளையும் காலம் அழிந்துவிடுகிறது. நெடுநேரம் கழித்து நாவலை புரட்டி மீண்டும் முதல் பகுதியை படித்தேன். வடக்குவீரநாச்சி ஒரு குழந்தையை காலில் போட்டு மிதித்து கொன்று அதன் குடலை உருவி மாலையாக போட்டு கொண்டு கற்சிலையாக நிற்கிறாள். இப்படி ஒரு தொன்ம கதையுடன்தான் நாவல் தொடங்குகிறது. வடக்குவீரநாச்சி என்பது வேறு யாருமில்லை. அது காலம். அது பலிகொண்ட குழந்தை போனூர்.

பொன்னாசாரிகள் சமூகம் பற்றி பதிவு செய்த வகையில் இது ஒரு முக்கிய நாவலாக படுகிறது.

Sunday, December 29, 2013

நண்பர்களுக்கு ஓர் அறிவிப்பு

'ராஜீவ் காந்தி சாலை' என்ற எனது முதல் நாவலின் வெளியீட்டு விழா வரும் ஜனவரி ஒன்றாம் தேதி சென்னை அண்ணாசாலையில் இருக்கும் (ஸ்பென்சர் எதிரே) புக்பாயிண்ட் புத்தகக்கடை அரங்கில் நடக்க உள்ளது. உயிர்மை பதிப்பக சார்பில் நடக்கும் இந்த விழாவில் மேலும் பல நண்பர்களின் புத்தகங்கள் வெளிவர உள்ளன. நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு இந்த விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறேன். 



காமம் , பணம், துரோகம், நம்பிக்கையின் முறிவு சொந்த ஆன்மாவின் அழிவு, உறவுகளுக்குள் படியும் குற்ற நிழல்கள், அர்த்தம் தெரியாத தற்கொலைகள். இதுதான் இந்த நாவலின் மைய நீரோட்டம்.
ராஜீவ் காந்தி சாலை என்பது ஒருஇடம் மட்டுமல்ல, அது ஒரு பிரமாண்டமான வளர்ச்சிக்கு உள்ளும் புறமும் படந்திருக்கும் பிரமாண்டமான் அவலத்தின் நிலப்பரப்பு.
(நாவலின் பின்னட்டையிலிருந்து)

நன்றி
விநாயக முருகன்


ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்குமிடம்:-

அகநாழிகை 

டிஸ்கவரி புக் பேலஸ்

வீகேன்

Thursday, December 5, 2013

பட்ட விரட்டி



காலித் ஹுசைனி எழுதிய நாவல் The Kite Runner. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்ற இந்த புத்தகத்தை போன வாரம் ஒபாமா படிக்க வாங்கிச் சென்ற விஷயத்தை நியூயார்க் டைம்ஸில் படித்தேன். அவர் இன்னுமா அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான நூல் இது.

தமிழில் பட்ட விரட்டி என்ற தலைப்பில் எம்.யூசூப் ராஜா மொழிப்பெயர்த்துள்ளார். அபாரமான மொழிபெயர்ப்பு. எந்த சிரமும் இல்லாமல் சல்ப்படைய வைக்காமல் ஒரே அமர்வில் படிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.

கதை ஆப்கானின் காபூல் நகரில் நடக்கிறது. ஹசனின் அப்பா அலி. அலியின் மனைவி சனோபர். அவர்கள் அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். ஹசன் பிறந்த ஐந்தாம் நாள் சனோபர் ஒரு நாடோடி கும்பலுடன் ஓடி விடுகிறாள். ஹசனின் அப்பாதான் குழந்தையை வளர்க்கிறார்.

அலி வேலை செய்யும் எஜமான் பெயர் ஆகா. ஆகா செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் அமீர் (இந்த நாவலின் ஆசிரியர்). அவர்கள் பஸ்டூன் இனத்தை சேர்ந்தவர்கள்.

ஹசனும்,அமீரும் சிறுவயது முதல் எந்த வர்க்க பாகுபாடுகளுமின்றி ஒன்றாக பழகி ஒன்றாக விளையாடுகிறார்கள். பட்டம் விடுவதில் இருவரும் வல்லவர்கள். ஒருநாள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து பட்டம் விடுவது சண்டை நடக்கிறது. அந்தச் சண்டையில் ஆஸிப் என்னும் பஸ்டூன் இனச் சிறுவன் ஹசனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகிறான். அதை அமீரால் தடுக்க முடியவில்லை. பிறகு அது குறித்து அமீர் அடிக்கடி குற்ற உணர்ச்சிக் கொள்கிறான். சிறுவர்கள் அமீருக்கும்,ஹசனுக்கும் இடையே இருக்கும் நட்பில் விரிசல் விழுகிறது. பிறகு ஹசன் மீது அவன் வேலை செய்யும் வீட்டில் ஒரு திருட்டுப்பழி விழ அவனும் அவனது தந்தை அலியும் அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.

இதனிடையே ஆப்கானில் சோவியத் ரஷ்யாவின் இராணுவ வீர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். பலர் அகதிகளாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். ஆகாவும்,அமீரும் வீடு சொத்தையெல்லாம் போட்டுவிட்டு அகதியாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்கா ஓடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் தங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். அமீர் இலக்கியம் படிக்கிறான். எழுத்தாளன் ஆகிறான். நாவல்கள் எழுதுகிறான். திருமணம் நடக்கிறது. அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். பிறகு அமீரின் தந்தை புற்றுநோயால் மரணமடைகிறார்

இடையே ஆப்கானில் இருக்கும் ரஷ்ய படைகள் அங்கிருந்து ஓடுகிறார்கள். தாலிபான்கள் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். தாலிபான்கள் அட்டகாசம் செய்யும் அந்த கொடுமையான காலக்கட்டத்தில் (19 98) அமெரிக்காவிலிருந்து ஆப்கான் செல்கிறான் அமீர். அவன் ஏன் அங்கு செல்கிறான்? அங்கு தாலிபான்கள் அவனை என்ன செய்தார்கள்? ஹசன் என்ன ஆனான்? என்றெல்லாம் நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரான் பாமுக் எப்படி துருக்கியின் ஆன்மாவை எழுத்துக்குள் இழுத்துக் கொண்டு வருகிறாரோ அது போல இவர் ஆப்கானின் ஆன்மாவை இழுத்துக் கொண்டு வந்துள்ளார். இரண்டு வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் பிளவுகள். ஒரே மதத்தின் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பூசல்கள். மதமும், தீவிரவாதமும் எந்த புள்ளியில் இணைகிறது என்றும், ஆப்கானும்,பாகிஸ்தானும் நட்புநாடுகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்றும் அருமையாக புனைவில் கொண்டுவந்துள்ளார்.

எனது ஒரு வருத்தம் என்னவென்றால் தாலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்காதான். அந்த அரசியலையும்,அயோக்கியத்தனத்தையும் அவர் நாவலில் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் இந்த நாவல் இரண்டு கோடி எண்ணிக்கையில் விற்றிருக்காது. ஒபாமாவும் வாங்கியிருக்க மாட்டார்.

பட்ட விரட்டி
காலித் ஹூசைனி
தமிழில் எம்.யூசூப் ராஜா
எதிர் வெளியீடு

Monday, October 21, 2013

பனி




நாற்பத்தியிரெண்டு வயதான கரீம் அலாகுஷோலு அப்படி அழைத்தால் அவனுக்கு பிடிக்காது. கா என்று அழைக்கப்படுவதையே அவன் விரும்புகின்றான். பத்திரிக்கைகாரன். கவிஞனும் கூட. கூச்ச சுபாவம் கொண்ட தனிமை விரும்பி. மிகப்பெரிய லட்சியங்களை தலைக்கு மேல் கொண்ட ஆனால் வாழ்க்கையில் வெற்றியடையாத   செக்காவின் கதாப்பாத்திரங்கள் போல இருப்பவன் கா. குறிப்பாக இறை மறுப்பாளன்.

இப்படிதான் முதல் அத்தியாத்தில் காவை அறிமுகப் படுத்துகின்றார் ஒரான் பாமுக். அரசியல் காரணங்களுக்காக துருக்கியிலிருந்து நாடுகடத்தப்பட்டு ஜெர்மனியின் பிராங்க்பர்ட்டில் பன்னிரண்டு ஆண்டுகாலம் வசிக்கின்றான். இஸ்தான்புல்லில் அவனது அம்மா இறந்து போனதை அறிந்து ஈமசடங்கு செய்ய மீண்டும் இஸ்தான்புல் வருகின்றான். என் பெயர் சிவப்பு போன்று பாமுக்கின் மற்ற எல்லா கதைகளிலும் வரும் இஸ்தான்புல் நிலபரப்பில்தான் இனி ஐநூறுக்கும் மேற்பட்ட பக்கங்களில் பயணம் செல்ல போகின்றோம் என்று நினைத்தால் கா கார்ஸ் என்ற எல்லையோர சிறு நகரத்திற்கு அந்த வருடத்தின் பனிக்காலத்தில் பயணம் செய்கின்றான். பாமுக்கின் தனித்துவமான நாவல் இது. இந்த முறை இஸ்தான்புல்லை விட்டு வெளியே சென்று விளையாடியுள்ளார். கதையும் அதை சொல்லும் அந்த பரபரப்பு நடையும் கூட வித்தியாசமானது. என் பெயர் சிவப்பு  போலல்லாமல் நாவலில் மிக வெளிப்படையாக பாமுக் இஸ்லாமிய அரசியலை பேசுகின்றார்.  

கார்ஸில் பல இளம்பெண்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்துக் கொள்கின்றார்கள்.அதையும் தவிர அங்கு வரவிருக்கும் தேர்தலை பற்றிய செய்திகளையும் சேகரிக்க கா கார்ஸ் செல்கின்றான். அங்கு முன்னூற்று சொச்சம் பிரதிகள் மட்டுமே விற்கும் பார்டர் சிட்டி கெஜட் என்ற பத்திரிக்கையின் பதிப்பாளர் சர்தார் பேவை சந்திக்கின்றான். தற்கொலைக்கான காரணங்களை சேகரிக்க காஸிம் பே என்ற காவல்துறை துணைத்தலைவரை சந்திக்கின்றான். கார்ஸில்  அவன் தங்கியிருக்கும் ஹோட்டலின் உரிமையாளர் துர்குத் பே என்பவரின் மகள் இபெக்கை சந்திக்கின்றான். இபெக்கும், காவும் ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள். இபெக்கின் முன்னாள் கணவன் முக்தார் பேவும் கூட காவின் பள்ளித்தோழன்தான்.

ஒட்டாமன் ராஜ்ஜியம் முடிந்து துருக்கியில் ஐரோப்பிய நாகரீகமும், கலாச்சாரமும் நடப்பதால் அங்கு ஒருவித அரசியல் சமனற்ற சூழல் இருக்கின்றது. பர்தாவை எடுக்க முடியாமலும், பர்தாவை அணிய முடியாமலும் இரண்டு எல்லைகளுக்குள் அங்கு இருக்கும் இளம்பெண்கள் சிக்கி தவிக்கின்றார்கள். இபெக் பர்தா அணிவதில்லை. அவள் மேற்கத்திய கலாச்சாரத்தை ஆதரிக்கின்றாள். இபெக்கின் தங்கை கடிஃபோ நேர் எதிரி. இபெக்கை விவாகரத்து செய்தவுடன் முக்தார் பே முழுநேர இஸ்லாமிய அடிப்படைவாதியாக மாறிவிடுகின்றான். ஒருநாள் காவும்,இபெக்கும் ஒரு நியூலைப் பாஸ்ட்ரி என்ற கடையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு அவர்கள் கண்முன்னால் கொலை நடக்கின்றது. சுட்டுக் கொல்லப்பட்டவர் கல்வித்துறை இயக்குனர். என்ன காரணமென்றால் அவரது கல்விக்கூடத்தில் பர்தா அணிந்த பெண்களை அவர் அனுமதிக்க மறுத்து விட்டார். பார்தா அங்கு தடை செய்யப்பட்ட சூழலில் அரசாங்கம் பர்தாவை அணிந்தால் மிரட்டுகின்றது. அடிப்படை மதவாதிகள் பர்தா அணிவதை தடுக்கும் ஆட்களை கொலை செய்கின்றார்கள். நாவலின் இந்தப்பகுதியில் அந்த கொலைக்காரனுக்கும், கல்வித்துறை இயக்குநருக்கும் இடையே நடக்கும் அந்த உரையாடலில் பாமுக் ரகளை செய்திருப்பார்.(அசத்தலான நடை இது. அந்த கொலைகாரன் கல்வித்துறை இயக்குநரை கிண்டல் செய்தபடியே அதே நேரத்தில் உன்னை கொலை செய்ய வந்திருக்கின்றேன் என்று மிக பணிவாக பேசி அவருடன் மரியாதையாக உரையாடி இறுதியில் கொலை செய்வான்)

பிறகு நீலம் என்ற மத பயங்கரவாதியை கா சந்திக்க நேரிடுகின்றது. இடையில் முக்தார் பேவை கா சந்திக்க செல்லும்போது அங்கு வரும் காவல்துறை ஆட்கள் முக்தார் பேவை கைது செய்து அழைத்துச் சென்றுவிடுகின்றார்கள்.
நீலத்தை கா சந்தித்து உரையாடும் அந்த இடத்தில் துருக்கியின் அரசியல் தீவிரமாக பேசப்படுகின்றது. அங்கு நெசிப், ஃபாசில் என்ற இரண்டு மத தீவிரவாத இளைஞர்களை கா சந்திக்கின்றார். அதில் நெசிப்பிற்கு இபெக்கின் தங்கை கடிஃபே மீது காதல்.  நேஷனல் தியேட்டரில் பர்தா அணிவதை தடுக்கும் ஒரு நாடகத்தையொட்டி நிகழும் கலவரத்தால் கார்ஸின் இராணுவ வீரர்கள் சுட அதில் இறந்து போகின்றான். ரகசிய மறைவிடத்தில் ஒளிந்திருக்கும் நீலத்தை இராணுவம் கைது செய்கின்றது. காவின் சமரசம் மூலம் நீலத்தை விடுவிக்க இராணுவம் சம்மதிக்கின்றது. அந்த சமரசம் திட்டம் என்னவென்றால் நீலத்தின் காதலி பர்தாவை அகற்றும் நாடகமொன்றில் நடித்து இராணுவத்திற்கு பிரச்சாரம் செய்து தரவேண்டுமென்பது...
 
துருக்கியை ஈரான் போல தீவிர மத அடிப்படை நாடாக மாற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஒருப்பக்கமும், இன்னொரு பக்கம் அங்கு பர்தாவை தடைசெய்து மேற்கத்திய கலாச்சாரத்தை இறக்கும் அரசாங்கமும், இவர்களுக்கு இடையில் மாட்டிக்கொள்ளும் கார்ஸின் மக்களும், தொடரும் இளம்பெண்களின் மர்மமான தற்கொலைகளும் என்று நாவல் செல்கின்றது.

பர்தாவை நெருப்பில் எரித்து போராட்டம் செய்வது.மத அடிப்படைவாதிகள் பெண்கள் மீது ஏவும் வன்முறை என்று துருக்கியின் அந்த கொந்தளிப்பான சூழலை அப்படியே நுட்பமாக பதிவு செய்துள்ளார்.

எனது முதலும் கடைசியுமான அரசியல் நாவல் இது என்று ஒரான் பாமுக் சொல்லியிருந்தார். அவருக்கு மரணதண்டனை வாங்கிதரும் அளவுக்கு சென்ற நாவலும் கூட.. ஐக்கிய நாடுகளின் தலையீட்டால் துருக்கி அந்த மரணதண்டனை விதிக்கும் முயற்சியை கைவிட்டது. 2007-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கும்போது பாமுக் உலகம் முழுவதும் பிரபலம் அடைந்திருந்தார். 

ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பை பற்றி நான் ஏற்கனவே முந்தைய என்பெயர் சிவப்பு,கடல் நாவல்களின்,ஹாருகி முரகாமிசிறுகதை தொகுப்பின்
பதிவுவில் குறிப்பிட்டுள்ளேன். சரளமாகவும், அடர்த்தியாகவும் படிக்க தூண்டுகின்றது. அதே நேரம் பாமுக்கின் இந்த நாவல் துப்பறியும் நடையில் கதைக்களன் பரபரப்பாக இருப்பதால் மிக சரளமாக படிக்க வைக்கின்றது.

நாவலின் முக்கியமான பகுதியில் காவின் டைரியை இந்த நாவலின் ஆசிரியர் ஒரான் படிக்கின்றார். கா அவனது டைரியில் எழுதியிருந்த வரிகள்... 
 
 
அறுகோணத்தில் பனித்திவலை ஒன்று படிகமானபின்,அது வானத்திலிருந்து கீழே விழுவதற்கு எட்டிலிருந்து பத்து நிமிடங்கள் வரை ஆகின்றது. வரும் வழியில் அதன் அசல் வடிவத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து மறைகிறது. அவன் மேலும் படித்தறிந்து கொண்டது, ஒவ்வொரு பனித்திவலையின் வடிவமும், வெப்பம்,காற்றின் திசை,வேகம்,மேகத்தின் உயரம் மற்றும் வேறுபல புரியாத அம்சங்களைக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் பனித்திவலைகள் பலவிதங்களில் மனிதர்களை ஒத்திருக்கிறது என்பதும்

Monday, July 1, 2013

ஓநாய் குலச்சின்னம்


ஓலோன்புலாக் என்ற பகுதி மங்கோலியாவின் சிறந்த மேய்ச்சல் புல்வெளி பிரதேசம். மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஏரிகளும் நிறைந்த பகுதி. அங்கு ஆடு,மாடுகளை பேணி வளர்க்கும் மந்தைக்கு சொந்தக்காரர் பில்ஜி என்ற மேய்ப்பர் அவரது மகன் பட்டு, மருமகள் கஸ்மாய் தவிர அவர்களின் ஒன்பது வயதுச் சிறுவன் பாயர் வசித்து வருகின்றார்கள். பில்ஜி சிறந்த வேட்டைக்காரரும் கூட. அவர்களுடன் திறமை மிக்க ஒரு மேய்ப்பர்குழு இருக்கின்றது. 

இவர்களுடன் ஜென்சென் என்னும் மாணவரும் அவரது சக மாணவ நண்பர்களும் இரண்டாண்டுகளாக தங்கியுள்ளார்கள். ஜென்சென் மற்றும் அவரது சக மாணவர்கள் பீஜிங்கிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஓலோன்புலாக் பூர்வீகம் கிடையாது. ஆடு மேய்ப்பது பற்றியும் , ஓநாய்களைப் பற்றியும், மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலங்களை ஆராய்ச்சி செய்யவும் ஜென்சென்னும்,அவரது நண்பர்களும் இரண்டாண்டுகளாக ஓலோன்புலாக்கில் தங்கியுள்ளார்கள்.  

மங்கோலியர்களுக்கும், சீனர்களுக்கும் கலாச்சார சிந்தனை வித்தியாசங்கள் உள்ளன. சீனர்கள் ஓநாய்களை துரதிர்ஷ்டமாக வெறுக்கத்தக்க விலங்காக பார்க்கின்றார்கள்.ஆனால் நாய்களை அப்படி கருதுவதில்லை. மங்கோலியர்கள் ஓநாய்களை கடவுளாக பார்க்கின்றார்கள். மங்கோலியர்களை  பொறுத்தவரையில் நாய்கள் என்பது ஒரு அடிமை விலங்கு.  என்னதான் நாய்கள் ஓநாய்களிலிருந்து வந்த வம்சமாக இருந்தாலும் நாய்கள் மங்கோலிய மனிதர்களுக்கு ஒரு சேவகன் மட்டுமே. அது வேட்டையாடும் அவ்வளவே. ஆனால் ஓநாய்கள் அப்படி அல்ல. அவை மனிதர்களை காட்டிலும் புத்திக்கூர்மை உடையவை. மனித நாகரீகமே ஓநாய்கள் நாகரீகம்தான். இவ்வளவு ஏன் ஒருக்காலத்தில் உலகின் பாதி நிலப்பரப்பை வெற்றிக்கொண்ட செங்கிஸ்கான் கூட ஓநாய் வளர்த்த பிள்ளைதான் என்று ஒரு மித் மங்கோலியர்களுக்கு உண்டு. மங்கோலிய குலச்சின்னமாக ஓநாய்கள் கருதப்படுகின்றன.

ஒருநாள் பில்ஜியும், ஜென்சென்னும் ஓநாய் கூட்டமொன்று மான்களை வேட்டையாடுவதை பார்க்கின்றார்கள். பிறகு அவர்கள் தங்கள் இடத்துக்கு வந்து விடுகின்றார்கள். மறுநாள் ஜென்சென்னை பில்ஜி அந்த வேட்டை பனி ஏரிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே பனி ஏரியில் இறந்து போன மான்களின் உடல் குவியல் குவியலாக இருக்கின்றன. சில மான்கள் குற்றுயிரும்,குலையுயிருமாக கிடக்கிறன. சில மான்கள் கடித்து குதறப்பட்டு பாதி உடல்கள் மட்டும் எஞ்சியுள்ளன. தங்கள் கால்கள் உறைந்த பனிக்கட்டிகளில் புதையுண்டு சில மான்கள் உயிருக்கு போராடுகின்றன. ஓநாய்கள் வேட்டையாடி விட்டு சில மான்களது உடல்களை இப்படி பனிக்குள் பாதுகாப்பாக்க சேமித்து வைத்து விட்டு சென்றுவிடும் என்று பில்ஜி சொல்கின்றார். ஜென்சென்னுக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. தவிர ஓநாய்களின் வேட்டை தந்திரங்களை பில்ஜி விளக்க ஆரம்பிக்கின்றார். எப்படி உயரமான சுற்றுச்சுவரை உடைய தங்களது ஒரு ஆட்டு மந்தையை ஓநாய் கூட்டமொன்று தாக்கியது என்று சொல்கின்றார். ஒரு தலைமை ஓநாய் சுவற்றில் இரண்டு கால்களை வைத்து நிற்க அதன் மீது ஒவ்வொரு ஓநாயாக ஏறி தப்பியது என்றும், அந்த கடைசி தலைமை நாய் இறந்துப்போன ஆட்டு உடல்களை குவியலாகப் போட்டு அந்த உடல்கள் மீது ஏறி தப்பித்தது என்றும் விளக்குகின்றார். எல்லா ஓநாய்களும் ஏற்கனவே சில ஆடுகளை கொன்று அவற்றின் உடலை குவியலாக போட்டு கடைசி தலைமை நாய்க்கு ஏற்கனவே உதவி செய்து விட்டு தப்பிப்போனதையும் சொல்கின்றார். ஜென்சென்னுக்கு பிரமிப்பாக இருக்கின்றது.                                                        

பனி ஏரியில் இறந்துக்கிடக்கும் சில மான்களை உணவுக்கு மட்டும் தங்கள் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் குழுவினர் உயிரோடு பனிச்சேற்றுக்குள் மாட்டிக்கொண்ட மான்களை விடுவித்து காட்டுக்கு அனுப்புகின்றார்கள். ஓநாய்களின் அந்த வெறிச்செயலை கண்டு கோபமடையும் ஓநாய்களை பலமாக நிந்திக்கின்றான். மான்கள் பாவம் என்கின்றான். பில்ஜிக்கு கோபம் வந்து விடுகின்றது. பில்ஜி ஓநாய்கள் தங்கள் குலச்சின்னம் என்கிறார். ஓநாய்களால் மட்டுமே மான்களின், கால்நடைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால் மேய்ச்சல் நிலங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றார். மேய்ச்சல் நிலங்களை சார்ந்தே எண்ணற்ற சிறு உயிர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன. சீனர்களாகிய நீங்கள் வெறும் புத்தகங்களை படித்து அதன் மூலம் அறிவை பெறுகின்றீர்கள். மங்கோலியர்கள் நாங்கள் படிப் பதில்லை. ஆனால் மேய்ச்சல் நில வாழ்க்கை, வேட்டைகள் மூலமே வாழ்வை பார்க்கின்றோம் என்கின்றார். படித்த சீனர்கள் நீங்கள் சொல்வதை எல்லாரும் நம்புகின்றார்கள். நீங்கள் எப்போதும் சிறிய உயிர்களை காப்பற்றும் முயற்சியில் பெரிய உயிர்களை அழித்து விடுகின்றீர்கள். மான்களின் மேல் இரக்கப்படும் நீங்கள் ஏன் புல்லும் ஒரு உயிர்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள். மான்களாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இயற்கை அந்த ஆற்றலையும் அபரிமித இனப்பெருக்க ஆற்றலையும் தந்துள்ளது. புற்களுக்கு அது இல்லை. ஒரு உயிரை சார்ந்தே இன்னொரு உயிர் இருக்கும் இந்த மேய்ச்சல் நிலங்களில் ஓநாய்களை பாதுகாப்பதன் மூலமே நாம் வாழ முடியும் என்கின்றார். தவிர ஓநாய்கள் மேய்ச்சல் நிலங்களில் வளைகளைத் தோண்டி அதில் வாழ்க்கையை நடத்தும் எலிகளையும், மர்மோட்டுகளையும் உண்கின்றன. ஓநாய்களின் எண்ணிக்கையால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றன. எலிகள், மர்மோட்டுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால் கொசுக்களின் எண்ணிக்கை குறைகின்றன என்றும் விளக்குகின்றார் இந்நாவலின் முக்கியமான பகுதியும் , மையக்கருத்தும் இந்த உரையாடலே. மங்கோலிய மேய்ப்பர்கள் இறந்தவர்களின் உடலை ஓநாய்களுக்கு விருந்தாக தந்து விடுகின்றார்கள். இதன் மூலம் அவர்களின் ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்புகின்றார்கள். 

 இதனிடையில் பில்ஜி குழுவில் இருக்கும் சிலர் ஓநாய்குட்டிகளை குகைகளிலிருந்து திருடி எடுத்து வருகின்றார்கள். ஓநாய் தோல் வாங்கும் ஆட்களிடம் ஓநாய்குட்டிகளை விற்று காசு பார்ப்பது அவர்கள் நோக்கம். பில்ஜி அவர்களை எச்சரிக்கை செய்கின்றார். ஓநாய்கள் பழிவாங்கும் குணம் கொண்டவை. குறிப்பாக தாய் ஓநாய்கள் நம்மை சும்மா விடாது என்று எச்சரிக்கை செய்கின்றார். ஆனால் எல்லாரும் பில்ஜியை பழமைவாதி என்று ஏளனம் செய்கின்றார்கள். யாரும் பில்ஜி பேச்சை பொருட்படுத்தாமல் குட்டிகளோடு திரும்புகின்றார்கள்.               

பட்டுவும் அவனது நண்பன் லாசுருங்கும் இராணுவத்திற்காக ஒரு பெரிய குதிரை மந்தையை வளர்த்து வருகின்றார்கள். இரவோடு இரவாக அந்த மந்தைக்குள் நுழையும் ஓநாய்க்கூட்டம் ஒரு குதிரையை கூட மிச்சம் வைக்காமல் தாக்கி அழிக்கின்றது. நாவலின் இன்னொரு முக்கியமான பகுதி இது. ஓநாய்கள் எவ்வளவு சாதுர்யத்துடனும், பழிவெறியுடனும், போர் நுட்பங்களோடும் வேட்டையாடுகின்றது என்று விவரமாக சொல்லப்படுகின்றது. சும்மாவா சொன்னார் பில்ஜி. ஓநாய்களிடமிருந்துதான் செங்கிஸ்கானே போர்க்கலையை கற்றுக்கொண்டான். மனித நாகரீகமே ஓநாய்களிடமிருந்துதான் பரிணாம வளர்ச்சிப் பெற்றதை ஜென்சென் அறிந்துகொள்கிறான். பில்ஜி பேச்சை யாரும் மதிக்கவில்லை. விளைவு ஒரு மந்தையே அழிந்து விட்டது.                        

விஷயம் கேள்விப்பட்டு அங்கு வருகின்றார்கள் இராணுவப் பிரதிநிதி பாவோ சுங்காய் மற்றும் மேய்ச்சல் நில இயக்குநர் உல்ஜீ. ஓநாய் கூட்டத்தின் வெறிச்செயலைக் கண்டு திகைக்கும் அவர்கள் ஓநாய்க் கூட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் போடுகின்றார்கள். பாவோ அரசாங்க பிரதிநிதி. அரசின் திட்டம் என்னவென்றால் அந்த மேய்ச்சல் நிலத்தை நவீனப்படுத்தி அங்கு விவசாய நிலங்கள் கூடவே செங்கல் கட்டப்பட்ட வீடுகள்,நெடுஞ்சாலைகள், திரையரங்குகள், கடைகள் அமைப்பது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஓநாய்களை அழிக்க ஆரம்பிக்கின்றார்கள்.  

ஜென்சென் ஒரு ஓநாய்க் குட்டிகளை எடுத்து வந்து வளர்க்கின்றான். இதற்கு காரணம் ஜென்சென்னுக்கு ஓநாய்களின் மீது இருந்த காதலோடு, ஓநாய்களை நாய்களோடு கலக்க வைத்து ஒரு திறமையான வேட்டை நாயை உருவாக்குவதும். இதை மிக கடுமையாக எதிர்க்கின்றார் பில்ஜி. ஆனால் பாவோ எதிரியை வெல்ல எதிரியை பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம் என்று சொல்லி ஓநாய் வளர்க்க அனுமதி தருகின்றார். ஜென்சென் ஓநாய்க்குட்டியை வளர்ப்பதன் மூலம் ஓநாய்களின் தந்திரங்களை வாழ்க்கை முறைகளை மிக நுட்பமாக கற்றுக்கொள்கின்றான்.                   

பாவோவின் இராணுவ வீரர்கள் மர்மோட்டுகளை அழிக்கின்றார்கள். மர்மோட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் ஓநாய்கள் உணவு இல்லாமல் அழிந்து விடுமென்று நம்புகின்றார்கள். மர்மோட்டுகளை குவியல் குவியலாக வேட்டையாடி கொல்கின்றார்கள். இடையே அந்த பகுதிக்கு வரும் வெளியாட்கள் அன்னப்பறவைகளை, வாத்துகளை வேட்டையாடி கொல்கின்றார்கள். அதி நவீன துப்பாக்கி மூலம் நரிகளை,ஓநாய்களை வேட்டையாடி கொல்கின்றார்கள். மிக மோசமான இனப்படுகொலைகளை இராணுவ வீரர்கள் செய்கின்றார்கள். தடுக்க வரும் முதியவர் பில்ஜியை அவமதிக்கின்றார்கள். இப்படியே வேட்டை தொடங்கி சில மாதங்களில் அந்த இடமே நிர்மூலமாகின்றது. ஒரு சில ஓநாய்களே எஞ்சுகின்றன. அவையும் மங்கோலியாவின் வெளிப்பகுதிக்கு ஓடி விடுகின்றன. ஓலோன்புலாக்கில் ஓநாய் இனமே அழிகின்றது. ஓநாய்கள் அதிகளவில் இல்லாததால் குதிரைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றது. ஆடு மாடு கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அவற்றுக்கு புல் தட்டுப்பாடு வருகின்றது. வேறு வழியில்லாமல் குதிரைகளை கொல்கின்றார்கள். ஆடு, மாடுகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றார்கள். இயற்கை சங்கிலியிலிருந்து ஒரு கண்ணியை வெட்டியெடுக்க இயற்கை ஸ்தம்பித்து மழை வரத்து நின்று ஊரே சீரழிகின்றது. ஜென்சென் இயற்கைக்கு புறம்பாக கட்டிப் போட்டு வளர்த்த ஓநாய் குட்டியும் சூழலுக்கு ஏற்ப மாறாததால் விரைவில் நோய்வாய்ப்படுகின்றது. வேறு வழியில்லாமல் குழந்தையைப் போல வளர்த்த அந்த நோயில் துடிக்கும் ஓநாயை அவனே மண்வெட்டியால் தலையில் அடித்து கருணைக்கொலை செய்கின்றான். பில்ஜி இறந்து விடுகின்றார். அவரது கடைசி ஆசையின்படி அவரது எஞ்சிய உடலை காட்டுக்குள் கொண்டுச்சென்று போடுகின்றார்கள். ஓலோன்புலாக்கில் ஓநாய்க் கூட்டம் உண்ணும் கடைசி உடலாக பில்ஜியின் உடல் இருக்கின்றது.

ஊரை விட்டு பீஜிங் செல்லும் ஜென்சென் மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து ஓலோன்புலாக் திரும்புகின்றான். ஊர் நவீனமாக மாறியுள்ளது. ஒரு ஓநாய் கூட இல்லை. வெறுமை படர்ந்த முன்னொரு காலத்தில் தான் வளர்த்த ஓநாய்க்குட்டியை கண்டெடுத்த அதன் குகை வாசலில் தனது புதிய நாவலின் சில பக்கங்களை கொளுத்திப் போட்டு ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்கின்றான். ஜென்சென்தான் இந்த நாவலின் ஆசிரியர் என்று நமக்கு தெரிகின்றது.


நாவல் முழுக்க ஓலோன்புலாக்கில் எலிகளோடும், மர்மோட்டுகளோடும், குதிரைகளோடும் , ஆடு ,மாடுகளோடும் ஒரு ஓநாய் அரசன் போல கம்பீரமாக உலாவிய மனதுக்குள் வெறுமை வந்து குடிக்கொள்கின்றது. இந்த உலகத்திலேயே ஆபாசமான விலங்கு மனிதன் என்று தெரிகின்றது. அதே நேரம் சர்வைவல் என்ற தியரிபடி மனிதனை விட எதுவும் வல்லமை இல்லை என்றும் தெரிகின்றது. ஆனால் மனிதனையும் விட மகத்தான சக்தி ஒன்று உள்ளது. அது இயற்கை. அதன் விளைவே இன்று நாம் சந்திக்கும் இயற்கை பேரழிவுகள்.





இந்நூலின் ஆசிரியரை பற்றி:-

ஜியாங் ரோங் 1946-ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957-ல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966-ல் சென்ட்ரல் அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்டில் ஜியாங் கல்வி மேற்கொண்டார். கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைபட்டது. அவருடைய இருபத்தோராவது வயதில், 1967-ல், உள் மங்கோலியாவின் 'கிழக்கு உஜிம்கியூன் பேனர்' இல் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு செல்லும்போது தன்னோடு இரண்டு பெட்டிகள் நிறைய மேற்கத்திய செவ்வியல் படைப்புகளைக் கொண்டு சென்றார் மேலும் அங்கிருந்த பதினோரு ஆண்டுகளில் மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றை தீர்க்கமாக அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். ஒய்வு நேரங்களில் அவை பற்றிய கதைகளைக் கேட்டறிந்ததோடு மேய்ச்சல் நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார்.
 

1978-ல் பீஜிங் திரும்பி 'சமூக அறிவியல்களுக்கான சீன அகாதெமி'யில் தன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் தன் வாழ்வைக் கல்வி துறையாளராக அமைத்துக் கொண்டு 2006 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

2004-ல் வெளியான இந்நாவல் ,அடுத்த இரண்டாண்டுக்குள் நாற்பது லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையானது. 'மேன் ஆசியன் விருது' தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2007-ல் இந்நாவல் அவ்விருதைப் பெற்றது. நாவல் வெளியாகி சில ஆண்டுகள் வரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்த ஜியாங், இப்புத்தகத்தின் எந்தவொரு நிகழ்விலும் விருது வழங்கும் விழாக்களிலும் கலந்துக் கொண்டதில்லை. 'மேன் ஆசியன் விருது' வின் தேர்வுக்குழுவுக்கு இவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு மூலமே இவர் வெளி உலகுக்கு அறியப்பட்டார். எனினும் அந்த விருதையும் அவர் சென்று பெறவில்லை. ஜியாங்கின்இயற்பெயர்: லூஜியாமின்.


சி.மோகனின் மொழிப்பெயர்ப்பை உழைப்பை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. அபாரமென்று சொல்வதை விட வேறு எதுவும் எனக்கு எழுத தோன்றவில்லை.



ஓநாய் குலச்சின்னம்,
ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன்,
அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர்,
விருகம்பாக்கம், சென்னை 93,
பக்கங்கள் 672, விலை 500ரூ.