Monday, August 8, 2016

வலம் நாவல் -- இரா.முருகவேள்

வலம் நாவல் பற்றி எழுத்தாளர் இரா.முருகவேளின் விமர்சனம்.

வலம்
----------
----இரா.முருகவேள்

தன் மனதுக்கு மூளைக்கு வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது என்பதை அங்கீகரிக்கும் எழுத்துக்கள் எப்போதுமே முக்கியமானவை. அவைதான் காலத்தின் வரலாற்றுப் பதிவுகளாக உலகமெங்கும் கொண்டாடப்படுகின்றன. அதிலும் நூலாசிரியருக்கு தான் எடுத்துக் கொண்ட காலப் பகுதியின் மக்கள் வாழ்வைத் தேடிக் கண்டுகொள்ளும் பிடிவாதமும் ஆவலும் இருந்து அவர் அதற்காக உழைக்கவும் தயாராக இருந்து விட்டால் நிச்சயம் ஒரு நல்ல இலக்கியம் பிறந்து விடும்.

அந்த வகையில் விநாயக முருகனின் வலம் குறிப்பிடத்தக்க நாவலாக உருவாகியிருக்கிறது. சென்னை நகரின் உருவாக்கத்துக்குக் கொடுக்கப்பட்ட விலைதான் நாவலின் பின்னணி. நரிகளுக்கும் சென்னை கிராமப்புறங்களுக்கும் இருந்த உறவையும் அவை ஆங்கிலேயர்களால் அழிக்கப்பட்ட விதத்தையும் சுவாரஸ்யமாகப் பேசுகிறது வலம்.

தமிழக நாட்டுப்புறக் கதைகளில் நரிக்குத் தனி இடம் உண்டு என்று விமர்சகர் முருகேச பாண்டியன் குறிப்பிடுகிறார். நரி எப்போதும் மனிதனுடன் போட்டி போடும். நரியை வெற்றி கொள்வதுதான் மனிதனின் சாம்ர்த்தியம் என்று நாட்டுப்புறக் கதைகளில் திரும்பத்திரும்ப வலியுறுத்தப்படும். இயற்கையின் நுட்பமான வலைப் பின்னலில் நரி ஒரு தவிர்க்க முடியாத இணைப்பு. இப்போது தமிழக மலையோர கிராமங்களி நரிகளும் கீரிகளும் அழிந்ததால் மயில்களும் மற்ற பறவைகளூம் பெருகி விவசாயிகளுக்குப் பெரும் தொல்லையாக மாறிவருகின்றன. நரிகள் போதுமான எண்ணிக்கையில் இருந்திருந்தால் அவை பறவை முட்டைகளைக் குடித்து பறவைகளில் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தியிருக்கும்.

நுட்பமாகப் பார்த்தால் இந்த உறவை நமது நாட்டுப்புறக் கதைகள் வலியுறுத்துவதை உணர முடியும். ஆனால் வெள்ளையர்களின் பார்வை வித்தியாசமானது. தங்கள் நாடுகளில் பெரும் காடுகளை அழித்தும் தனியுடமையாக்கியும் பெற்ற அனுபவங்களோடு வெள்ளையர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் நமது மலைக்காடுகளை வெட்டிச் சாய்த்தனர். சதுப்பு நிலங்களை வடித்தனர். யானைகளையும் புலிகளையும் மான்களையும் மற்ற மிருகங்களையும் கொன்று குவித்தனர். பின்பு நடந்ததை துன்பக் கேணீயும் தமிழக மலையக எஸ்டேட் இலக்கியமும் பேசும். இவற்றின் தொடக்கம் சென்னையைச் சுற்றி ஆரம்பித்தது என்பதை வலத்தில் காண முடிகிறது.

கதை நரி மேட்டு சித்தரில் தொடங்குகிறது. நரிகளுக்கும் இயற்கைக்கும் சுற்றி வாழ்ந்த மக்களுக்குமான உறவைப் பேசி பதினெட்டாம் நூற்றாண்டுக்குத் தாவுகிறது. நரி மேடு தகர்க்கப்படுகிறது. நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. சென்னைப் பட்டணம் எழுகிறது. இதன் பிறகு பத்தொன்பதாம் நூற்றாண்டில் சென்னையில் வாழ்ந்த வெள்ளையர்களின் வாழ்வை ஒரு கொலை வழக்கு மற்றும் நரி வேட்டையின் பின்னணீயில் சொல்கிறார் விநாயக முருகன்.

ஓர் ஓவியம் வரையும் போது அதையொட்டிய காட்சிகள் அதனதன் இடத்தில் இயல்பாக உட்கார்ந்து விடுவது போல புதிய சென்னை நகரத்தில் நீக்கமற நிறைந்து கிடக்கும் சாதி, அயோத்திதாசப் பண்டிதரின் தலைமையில் முதல் தலித் இயக்கம் துளிர்விடுவது, பஞ்சம், பாலியல் தொழிலாளர்களீன் நிலை, என்று அனைத்தையும் நம் முன்னர் விரித்து வைக்கிறது வலம். அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து விலகிச் செல்வதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கோஹன் சென்னையின் காவல்துறை அதிகாரி. பிரபு குடும்பத்தில் வந்தவன். சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையைக் கட்டிய கோஹனின் பெயர் தனக்கு வைக்கப்பட்டிருப்பதை பெருமையாக உணர்பவன். மொத்தத்தில் எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன்.

புளியந்தோப்புப் பகுதியில் இரண்டு சிறுவர்கள் நரிகளால் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து விசாரிக்கச் செல்கிறான். அங்கு வாழும் ஆதிதிராவிட மக்கள் தங்கள் குழந்தைகள் நரிகளால் கொல்லப்பட்டன என்பதை நம்ப மறுக்கின்றனர். அங்குதான் கோஹன் உள்ளூரில் வாழும் ஆங்கிலம் தெர்ந்த தலித் மக்களின் தலைவனான ரத்தினத்தைத் சந்திக்கிறான். உடல்களை உயர்சாதி அதிகாரியின் வண்டியில் ஏற்றச் சொல்லும் போது அவர் மறுக்கிறார். சென்னையின் சாதி பற்றிய ஆரம்ப அறிவு அவனுக்குக் கிடைக்கிறது.

பேட்டர்ஸன் அய்ர்லாந்தைச் சேர்ந்த படைவீரன். அவனது அப்பா அயர்லாந்தில் பண்ணையில் வேலையாளாக இருந்தார். குலப்பெருமை அற்றவனாகவும் பணமில்லாதவனாக இருப்பதையும் உணர்ந்த தாழ்வு மனப்பான்மை அவனை உறுத்திக் கொண்டே இருக்கிறது. மனதுக்குள் குமைந்து கொண்டிருக்கும் கோபம் அதி தீவிரத்துடன் அவனை நரி வேட்டையில் ஈடுபடச் செய்கிறது. அவன் வெறி பிடித்தவனாக சென்னையைச் சுற்றி நரிகளைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறான்.

சென்னையில் வேட்டைக்காரர்களுக்காக ஒரு கிளப் இயங்குகிறது. அதன் உரிமையாளர் மெக்கன்ஸி உயர்ரக நாய்களையும் குதிரைகளையும் நரிவேட்டையாடுபவர்களுக்கு அளிக்கிறார். கவர்னர் (கன்னிமாரா?) பெரும் குடிகாரராகவும் பெண் பித்தராகவும் இருக்கிறார். சென்னையை விரிவுபடுத்த திட்டங்கள் தீட்டுகிறார். அவரது இனிமையான குணமுடைய ஓவியரான மனைவி சூஸன் கவர்னரின் குணத்தால் வெறுப்படைந்திருக்கிறார். இந்தப் பின்னணியில் சென்னையின் அக்கால வாழ்க்கை குறிப்பாக வெள்ளையர் வாழ்க்கை நம் கண் முன் விரிகிறது.

பஞ்சப் பிரதேசங்களில் இருந்து மக்கள் நிழல்கள் போல நகரினுள் நுழைந்து கொண்டே இருக்கிறார்கள். உணவின்றிக் குழந்தைகள் உயிர்விடுகின்றன. நெல் ஏற்றிச் செல்லும் வண்டிகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. ஆனால் அரசு சென்னைக்கு ரயில் பாதை அமைக்கவும் நகரை இன்னும் விரிவுபடுத்தவும் திட்டங்கள் தீட்டுகிறது.

வலம் முழுமையும் தலித்துகளைப் பற்றிய நாவல் அல்ல என்றாலும் பெரும்பாலும் எதிர்த்துத் தாக்காத நரிகள், தாக்க வழியில்லாத தலித்துகள், பிரிட்டிஷ் அரசு என்று ஒரு முக்கோண பிணைப்பு நாவலில் இருக்கத்தான் செய்கிறது.

சதுப்பு நிலங்களும் ஓடைகளும் ஆறுகளும் ஏரிகளும் நிரம்பிய ஒரு மென்மையான நிலப்பரப்பின் ஒரு மூர்க்கமான, பஞ்சங்களுக்கும் கொள்ளை நோய்களுக்கும் இருப்பிடமான நகரத்தைக் கட்டியமைக்கிறது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். நரிகள் கொன்று குவிக்கப்படுகின்றன. விரட்டியடிக்கப்படுகின்றன.

நரிகளைப் போலவே கோட்டை இருக்கும் கடலோரப் பகுதியில் வாழ்ந்த மீனவர்களும் விரட்டியடிக்கப்படுகிறார்கள். அவர்கள் வாழ்விடங்கள் ஆகிரமிக்கபட்டு அங்கே எழுகிறது ஒரு வலிமை வாய்ந்த கோட்டை. தலித்துகளுக்கு பல புதிய வாயில்கள் திறக்கின்றன. ஆனால் அவற்றையும் அரசே அடைக்கிறது. ஒரு புதிய வகையிலான அடிமைத்தனம் உழைக்கும் மக்கள் மீது திணிக்கப்படுகிறது.

இக்கதை நடக்கும் காலத்துக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தென் தமிழகத்தில் மருது பாண்டியர், பூலித்தேவன், கட்டபொம்மன், எல்லோருக்கும் மேலாக ஊமைத்துரை தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக கடும் போர்கள் நிகழ்ந்தன. அப்போது ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த பலர் எல்லா பாளையக்காரர்களின் படைகளீலும் தளபதிகளாகவும், வீரர்களாகவும் பணீபுரிந்தனர். அதற்கான தேவை இருந்தது. இது தொடர்ந்திருந்தால் சாதியக் கட்டுமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் பிரிட்டிஷ் அரசு தனது அதிகாரத்தை நிலைநாட்டிய பின்பு சாதிய அமைப்புமுறையைக் குலைக்காத ஒரு நுட்பமான பாதையைப் பின்பற்றியது. ராணுவத்துக்கும், ஆலைகளுக்கும் தேவைப்பட்ட அளவுக்கே தலித்துகள் அரசு அமைப்புகளில் அனுமதிக்கப்பட்டனர். மற்றபடி சாலைகளீலும், நிறுவனங்களிலும் ப்ரந்து விரிந்த கிராமப் பகுதிகளீலும் சாதிய முறை தடையின்றித் தொடர அனுமதிக்கப்பட்டது.

இதைத்தான் வலத்திலும் காண்கிறோம். பின்னி மில்லில் பாதிப்பேர் தலித்துகள். அவர்கள் தங்களுக்கென்று பள்ளிகள் வைத்து ஆங்கிலம் படிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் காயம் பட்ட ஒருவனை தன் வண்டியில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்று சொல்லும் உரிமை உயர்சாதிக்காரனுக்கு அனுமதிக்கப்பட்டது. சாதியக் கட்டுமானத்தைத் தாங்கி நிற்கும் மேல்சாதிக்காரர்களின் பொருளாதார பலத்தைத் தகர்க்காமல் சாதிய அமைப்பில் பலவீனத்தை ஏற்படுத்துவது சாத்தியமில்லை என்பதை அயோத்திதாசரின் அனுபவத்திலிருந்து இன்று வரையிலான அனுபவங்கள் காட்டுகின்றன. தலித்துகள் படிக்கவும், மில்களில் வேலை செய்யவும் அனுமதிக்கப்படுகின்றனர். அதே நேரம் சாதி ஆதிக்க வாதிகள் சாதியைக் காப்பாற்றும் பொருளாதார மேல்நிலையை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கபப்டுகின்றனர். இந்த நீண்ட நெடிய போராட்டத்தின் தொடக்கம் வலத்தில் கோடிட்டுக் காட்டப்படுகிறது.

இவையனைத்தையும் விட நாவலில் வரும் வெள்ளைக்காரர்களின் பத்திரங்களின் உருவாக்கத்தில்தான் விநாயக முருகனின் நேர்த்தி தெரிகிறது. குறிப்பாக பாட்டர்ஸனின் பாத்திரம். ஒரு விளையாட்டாகத் தொடங்கி நரி வேட்டையில் அவன் கொள்ளும் தீவிரம், மூர்க்கம், எதிர்ப்புக் காட்டாமல் தப்பி ஓட மட்டுமே முயலும் பலவீனமான உயிரிகள் மீது வரும் கண்மூடித்தனமான வெறுப்பு உலகத்தில் தான் வெறுக்கும் அனைத்தின் மொத்த உருவமாக நரிகளை அவன் உருவகப்படுத்திக் கொள்வது அற்புதமாக எழுதப்பட்டிருக்கிறது. பேட்டர்ஸனின் நாயான புல்லட்டின் விசுவாசம் சக்திக்கு மீறிய உழைப்பால் தளர்ந்து வரும் அதன் உடல்நிலை . . . விநாயக முருகனின் எழுத்துத் திறன் தனிச்சிறப்புடன் வெளிப்படுகிறது. அவர் வருணிக்கும் நரிவேடையின் நுணுக்கங்கள் இந்தப் பகுதியை நாவலில் மிகவும் முக்கியமானதாக மாற்றுகிறது.

நரி வேட்டை ராயல் விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அதாவது நரியைக் கொல்வது வேட்டை அல்ல, விளையாட்டு என்று பிரிட்டிஷாரால் கருதப்பட்டது. குதிரையில் செல்லும் வேட்டைக்காரன் நரியைச் சுடுவது கௌரவக் குறைச்சல் என்று கருதப்பட்டது. எல் போன்ற இரும்புத் தடியால் நரியின் மண்டையை அடித்துப் பிளப்பதே சிறந்த விளையாட்டு வீரனுக்கு அடையாளமாகும் .எதிர்ப்புக்காட்டாத மனித குலத்தின் ஒரு பகுதியை அடக்கி ஒடுக்குவதிலும் அதை அதன் அற்பமான வாழ்விடங்களில் இருந்து ஓரப்பகுதிகளுக்கு விரட்டியடிப்பதிலும் மற்ற பகுதி காட்டும் முனைப்பை இதனுடன் இணைத்துப் புரிந்து கொள்ளலாம். பழைய கொண்டாட்டமான தமிழக கிராமப்புற வேட்டைக்கும், ஆங்கிலேயர்களின் இது போன்ற கேளிக்கை அல்லது உள்ளே குமையும் மூர்க்கத்திற்கு வடிகாலான வேட்டைக்கும் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. வளர்ந்து வரும் நகரம் நரிகள் வாழத் தகுதியில்லாததாக மாறிப் போகிறது. நரிகள் எங்கோ தொலை தூரங்களில் சென்று மறைகின்றன. பஞ்சமும், பசியும் நோய்களும் அவை விட்டுச் சென்ற இடங்களில் நிரந்தரமாகக் குடியேறுகின்றன.

நாவல் முழுக்க விநாயக முருகனின் பிடிவாதமான உழைப்பு தெரிகிறது. நாவலில் சொல்லப்படும் எதைக் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டாலும் துல்லியமாக ஆதாரங்களுடன் அவர் விடையளிப்பதை முக நூலில் பார்த்திருக்கிறேன். சென்னை செங்கற்களால் ஆன நகரம் மட்டுமல்ல. ஓடைகளையும், பசும்புல் வெளிகளையும், வயல்களையும் சின்னஞ்சிறு அழகிய கிராமங்களையும் புதைத்துக் கட்டிய மாபெரும் புதைகுழியும்கூட என்பதை வலம் உணரவைக்கிறது.

ஓர் இடத்தில் மட்டும் எனக்கு சந்தேகம் இருக்கிறது. தோடர் பழங்குடியின கரோலின் பாத்திரம் அது. வெள்ளைக்காரன் தொடர்பால் அவளது அம்மா தற்கொலை செய்து கொள்கிறாள். கரோலின் கோஹனைக் காதலிக்கிறாள். கவர்னரின் வேட்கைக்கு இரையாகிறாள். குற்ற உணர்வால் உந்தப்பட்டு கோஹனின் காதலை ஏற்றுக் கொள்ளாமல் கன்னியாஸ்திரியாவதாக நாவல் முடிகிறது. பழங்குடியினங்களில் குழந்தைகள் ஒருபோதும் அனாதைகளாக விடப்படுவதில்லை. அவர்களது பாலியல் சார்ந்த பார்வையும் நமது மத்திய தரவர்க்கப் பார்வையிலிருந்து வித்தியாசமானது. விநாயக முருகன் கட்டாயம் ஏதோ ஒரு வரலாற்று ஆவண்த்திலிருந்துதான் இந்த பாத்திரத்திற்கான தாக்கத்தைப் பெற்றிருப்பார் என்று உணரமுடிகிறது. அந்த சூழலை சற்று விரிவாக சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சென்னையின் ஆரம்ப நாட்களையும் அங்கு வாழ்ந்த மக்களின் வாழ்வையும் இயற்கையின் நுட்பமான வலைப்பின்னலின் பின்னணியில் சுவாரஸ்யமான நாவலாக்கிய விநாயக முருகன் பாராட்டத்தக்கவர்.

நன்றி:- இரா.முருகவேள்

No comments:

Post a Comment