Saturday, June 22, 2013

ஒரு மனோதத்துவ நிபுணரும் அவரது நவீனக்கவிதையும்

ஒரு மனோதத்துவ டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் மனோதத்துவ நிபுணர்களிடமும், சாமியார்களோடும் (குறிப்பாக கார்ப்பரேட் சாமியார்கள்) உரையாடுவதை தவிர்க்கவே விரும்புவேன். காரணம் அவர்களோடு உரையாடி ஜெயிக்கவே முடியாது. அவர்களிடம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலே நமது ஐடியாலஜியை அப்படியே நமது மண்டைக்குளிருந்து உருவி அவர்களது ஐடியாலஜியை பொருத்தி விடுவார்கள்.

விஷயத்துக்கு வருகின்றேன்.

இந்த பேஸ்புக்கில் கிறுக்கறது, லைக் போடுறது,கமெண்ட் போடுறது எல்லாம் கூட ஒருவகை மனோவியாதிதான் என்று சொன்னார் டாக்டர். ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன். 

இப்படித்தான் முன்பு இன்னொரு மனோதத்துவ நிபுணரிடம் உரையாடியபோது அவர் சொன்னார். "அடக்க முடியாத காமத்தின் வெளிப்பாடே கலைப்படைப்புகள். ஒருத்தன் செக்சில் திருப்தியடைந்து விட்டால் அவன் கதை,கவிதை மாட்டான்." என்றார். இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் பொதுவாக மனோதத்துவ நிபுணர்கள் கலை, இலக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது குறைந்தபட்சம் அட போங்கய்யா நீங்களும், உங்க கவிதையும் என்று சலித்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

"ஆடும் கூத்து" என்ற திரைப்படம். டிவி.சந்திரன் இயக்கியது. இந்தப் படத்தை பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். இந்த படத்தில் நவ்யாநாயர் ஹீரோயின். அவர் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் அவர் பெயர் மணிமேகலை. சுட்டித்தனமான பெண். அப்பா செல்லம். நல்ல படிப்பாளி. அசோகமித்திரன்,ஜெயகாந்தன் என்று தரமான புத்தகங்களை நூலகங்களில் தேடி தேடி எடுத்து படிப்பாள். திடீரென ஒருநாள் மணிமேகலைக்கு பூர்வஜென்ம நினைவுகள் வந்துவிடும். அவளது நடவடிக்கைகள் அடியோடு மாறிவிடும். அவள் சொல்லும் எதையும் யாரும் நம்ப மாட்டார்கள். அவள் எல்லா விஷயங்களையும் அவளது சொந்தக் கற்பனையிலிருந்து உருவாக்கி சொல்வதாக அனைவரும் நம்புவார்கள்.  

மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவளது தந்தை வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அழைத்து வருவார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்வார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க, அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்வார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா, அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருவார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுவார்.

மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைப்பார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்பாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்பாள்.
 
மனோதத்துவ நிபுணர்களுக்கு  ஏன் எழுத்தாளர்களை பார்த்தால் காண்டாகின்றது. நான் நினைக்கின்றேன். ஒருவிதத்தில் மனோதத்துவ நிபுணர்களும், எழுத்தாளர்களும் ஒரே வேலையை செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இருவருமே மனதின் சிக்கலான சூட்சுமங்களை ஆராய்ச்சி செய்கின்றார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளை நுட்பமாக கவனிக்கின்றார்கள். காமம் எங்கிருந்து உருவாகின்றது என்று உற்று கவனிக்கின்றார்கள். மனதின் விசித்திரமான செயல்பாடுகளை அணு அணுவாக பதிவு செய்கின்றார்கள். எழுத்தாளன் என்றால் அதை அவனது பாத்திரப்படைப்பிற்கு பயன்படுத்திக் கொள்கின்றான். மனோதத்துவ நிபுணர் அதை அவரது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றார். கேஸ் ஸ்டடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றார்       

சரி. எங்கள் உரையாடலுக்கு வருகின்றேன். 

"ஒரு எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் மனோதத்துவம் தெரிந்தவனாகவே இருக்க முடியும். அப்போதுதான் அவனால் எழுத முடியும். ஆனால் ஒரு மனோதத்துவ நிபுணரால் கலை இலக்கிய தளத்தில் செயல்பட முடியாது. வட்டிக்கடைக்காரனிடம் வெற்றுத்தாளை கொடுத்தால் அதில் அவன் எண்களை மட்டும்தான் கிறுக்குவான்" என்றேன்.

டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. 

"யார் சொன்னது? எங்களுக்கும் எழுத வரும்" - என்றார்.

டாக்டர் மேசை டிராயரை திறந்தார். ஸ்கிரிப்லிங் பேட்டை எடுத்து எதையோ யோசிக்க ஆரம்பித்தார். பின்பு வேகமாக எழுத ஆரம்பித்தார். எழுதி முடித்தவுடன் என்னிடம் அதைக் கொடுத்தார். வாங்கி பார்த்து விட்டு ஆடிப்போய் விட்டேன். பிரமாதமாய் இருந்தது கவிதை. கண்டிப்பாக இவர் ஏதாவது இலக்கியப்பத்திரிக்கையில் புனைப்பெயரில்எழுதுபவராகத்தான் இருக்க முடியும்.  

"ஆஹா ஆஹா பிரமாதம் பிரமாதம்" என்றேன்.
                 
ஸ்கிரிப்லிங் பேட்டில் அந்த நவீனக்கவிதை இருந்தது இப்படி.

வட்டம்               
-------------
வட்டம்
வட்டத்திற்குள் வட்டம்
வட்ட வட்டமாய் வட்டம்
வட்டமே வட்டமாய்
வட்டத்திற்குள் வட்டம்       

Thursday, January 24, 2013

முந்தி பிறந்தவன்

நான் இரண்டாயிரத்து பதிமூன்றில்
நின்றுக்கொண்டு
இரண்டாயிரத்து அறுபத்திமூன்றிற்கான
கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன்
நான் ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்திருக்க வேண்டும்

அல்லது
எனது கவிதைகள்
ஐம்பது வருடங்கள் முந்தி பிறந்து விட்டன
அல்லது
நீங்கள் ஒரு ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்தால்
வானத்திலிருந்து இறங்கி வந்த இரண்டு தேவதூதர்கள்
ஒய்எம்சிஏ திடலில் நின்றுக்கொண்டு
எனது கவிதைத்தொகுப்பை விமர்சிப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
பச்சைநிறக் கொம்புகள் கொண்ட இரண்டு ஏலியன்கள்
எனது கவிதையை படித்து
கழிவிரக்கம் கழிவிரக்கமென்று
தலையில் அடித்துக்கொண்டுச் செல்வதை பார்த்திருக்கலாம்

அல்லது
நீலக்கண்களும் பொன்னிற கூந்தலுங்கொண்ட
தேவேலோக சுந்தரிகள் (ஒட்டிப்பிறந்த சகோதரிகள்)
எனது கையெழுத்து வேண்டி புத்தகக்கடை வாசலில்
ஏக்கத்துடன் தவமிருப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
…….
…….
…….

நீங்கள்
ஒரு ஐம்பது வருடங்கள் முந்திப்பிறந்து விட்டீர்கள்
அதை விட குறிப்பாக
இந்தக்கவிதையை ஒரு ஐம்பது வருடங்கள் முந்தி
படித்துத் தொலைத்து விட்டீர்கள்



நன்றி
என்.விநாயக முருகன் 

Friday, September 21, 2012

குஞ்சுண்ணியும், வேதாளமும்

எழுதி எழுதியே எழுத்தாய் போன
குஞ்சுண்ணியின் கதையிது

குஞ்சுண்ணிக்கு திடீரென
பேய்க்கதைகள் எழுதும் ஆசை வந்தது

நடுநிசியில் எழுந்த குஞ்சுண்ணி
ஊர்க்கோடி கல்லறை நோக்கி
தனியாக நடக்க ஆரம்பித்தார்

நூறாண்டு வயதான
முருங்கை மரத்தடியில்
பேப்பர் பேனாவுடன் அமர்ந்தார்

இரிசிக் காட்டேரி
இரத்தக் காட்டேரி
ஆலகால பேய்
ஆளை கொள்ளும் பிரம்ம ராட்சஷன்
கதாபாத்திரங்களை வரிசையாக எழுத ஆரம்பித்தார்

ஏதேதோ கிறுக்க ஆரம்பித்தார்
என்ன எழுதியும் குஞ்சுண்ணிக்கு
திருப்தி வரவில்லை
எல்லாமே ஏற்கனவே எழுதியாயிற்றே
இனி நடக்கப்போவதும் எழுதப்பட்டவையே

குஞ்சுண்ணி கண்மூடி வேண்டினார்
எண்டே பகவதி அம்மே அருள் பாவிக்கனும்
ஒரு வல்லிய கதையை தரணும்
கண்ணை திறந்தார்
எதிரே
வெளுத்த முடி வேதாளமொன்று
குறுநகையோடு நின்றது

நடுங்கி போனார் குஞ்சுண்ணி
எண்டே அம்மே அலறினார்

நோக்கா குஞ்சுண்ணியே அஞ்சற்க
உனக்கு ஞான் உதவி செய்யும்

நீ அறியா மரித்துப்போனவர்களின்
கதை சொல்கின்றேன். கேள்

நீ பிரான்ஸ் காப்கா அறியுமோ
அவன் தற்கொலை செய்த கதை சொல்கின்றேன்
கவனமாய் கேள்

குஞ்சுண்ணி சொன்னார்
காப்கா கதை தெரிந்ததுதானே
துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளுமுன்
அவன் என்னுடன்தான்
அரைமணிநேரம் கதைத்தான்
எனது நாவல் என்றால் அவனுக்கு உயிர்

வேதாளம் திகைத்தது

குஞ்சுண்ணியே கவனமாய் கேள்
உனக்கு பாரதியாரை தெரியுமா
அவரை மிதித்துக்கொன்ற யானையின் பெயர் .....

குஞ்சுண்ணி இடைமறித்தார்
நான் அப்ப திருவல்லிக்கேணியில்தானே இருந்தேன்
நாடி வைத்தியரை கூட நான்தான் அழைத்து வந்தேன்
தெரிந்த கதைதானே. வேறு சொல்

வேதாளம் சலிப்புடன் சொன்னது
குஞ்சுண்ணியே உனக்கு ஆத்மாநாம் தெரியுமா
கிணற்றில் விழுந்து இறந்த அவரை
இங்குதான் புதைத்தார்கள்

ஆத்மாநாம்..
அட நம்ம ஆதி
அவனுக்கு நான் என்றால் உயிர்
சாவதற்கு முன்னால்
அவனிடம் பேசிய ஒரே ஆள் நான்தான்

வேதாளம் எரிச்சலுடன் கேட்டது
உனக்கு கவிஞர் அய்யப்பனை தெரியுமோ?
குடித்து குடித்தே இரத்தம் கக்கி இறந்தவர்

அய்யப்பனோ...அறியாமலோ
அவன் என்னை பற்றி
ஆறு கவிதைகள் புகழ்ந்து எழுதியுள்ளானே
நீ படித்ததில்லையா?

வேதாளத்திற்கு வியர்க்க ஆரம்பித்தது
குஞ்சுண்ணியே இதுதான் இறுதி கதை
முன்னொரு சமயம்
இரத்தினபுரி தேசத்தில்
ரங்கராஜனென்று ஒருத்தன் இருந்தான்

அவன் எழுதாத விஷயமே இல்லை
திடீரென ஒருநாள்
அவன் இறந்தும் போனான்
அவன் கதை அறிவாயோ?
வேதாளம் கேட்டது

குஞ்சுண்ணி சொன்னார்
நம்ம ரங்குதானே
நானும் அவனும்
கோனார் தோப்பில்
மாங்காய் திருடி சாப்பிட்டுள்ளோம்
எனது எழுத்தை கண்ணில் ஒற்றிக்கொள்ளுவான்

வேதாளம் தலை கிறுகிறுக்க
முருங்கை மரத்திற்கு தாவியது

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத
குஞ்சுண்ணி
வேதாளத்தை தோளில் சுமந்தபடி திரும்பினார்


நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, June 21, 2012

ஆடுகளம்
-----------------
ஒரு மாலை வேளையில்
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு மெல்லிய தலையசைப்பு

ஒரு புன்சிரிப்பிற்கு பிறகு
ஒரு அன்பான கைகுலுக்கல்
ஒரு நலம் விசாரிப்பில்

இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு நிதானமான
தேநீர் பருகலுக்கு பிறகு
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது

நமக்கான இடத்தை தேர்வு செய்து
கறுப்பும் வெண்மையும்
கலந்த கட்டங்களின் முன்பாக
நேருக்கு நேர் அமர்கின்றோம்

கட்டங்களின் நிற வேறுபாடுகளை
எதேச்சையாக கவனிக்கும் நாம்

திடீரென நமது முகங்கள்
எதிரெதிர் சந்தித்துக்கொள்வதின்
தர்மசங்கடத்தை உணர தொடங்குகிறோம்

நாம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்
சதுரங்க காய்களை அடுக்குகின்றோம்
களத்திற்கு செல்லும் சாமுராய்

தனது கொலைவாளை
மிருதுவான எண்ணெய் துணியால்
துடைப்பதை போன்று
அவ்வளவு நேர்த்தியாக

ஆட்டத்தை முதலில் ஆரம்பிக்கும் நீ
உனது படைவீரனை களம் இறக்குகின்றாய்

குதிரையிலிருந்தபடி அவனை வீழ்த்தும்
என் ஆவேசம் கண்டு
நீ அரண்டு போகிறாய்
உனது பயம் ரசிக்க வைக்கின்றது

ஒரு வளைவில் திரும்பும்போது
உனது யானை படைகள்
என்னை வழிமறித்து தாக்குகின்றன
தடுமாறி விழுபவனை பார்த்து
மதகுருமார்களும் படைவீரர்களும்
கைகொட்டி சிரிக்கின்றார்கள்

ஆட்டம் மெல்ல மெல்ல
கட்டுப்பாட்டை மீறி போகின்றது
ரெளத்திரம் கொள்ளும்
எனது படைவீரர்கள்
ஆவேசத்துடன் பாய்கின்றனர்

வஞ்சகமும் வெறியும் கலந்த
நமது மதகுருமார்களின் போதனைகள்
கொலைக்களமெங்கும் எதிரொலிக்கின்றன

இதுநாள் வரை ஆடுகளத்திற்கென்று
வரையறுக்கப்பட நியதிகள் உடைபடுகின்றன

நாம் அமர்ந்திருக்கும்
அறையெங்கும் குருதி வாசனை
கவிழ தொடங்குகிறது

நம்மிடம் இன்னும்
ஐந்து போர்வீரர்கள் மட்டும்
எஞ்சியுள்ளார்கள்
யார் யாரை கொல்வார்கள்
என்று தீர்மானிப்பது கடினமாயுள்ளது

ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொருட்டு
எழுந்து வெளியில் செல்லும் நான்
நடுங்கும் கைகளுடன்
ஒரு சிகரெட் பற்றவைத்து
களத்திற்கு திரும்பி வருகின்றேன்
பதற்றமாக சதுரங்க களத்தை
பார்வையிடுகின்றேன்

நான் இல்லாத நேரத்தில்
எனது சதுரங்க காய்களை
யாரும் நகர்த்தி வைக்கவில்லையென்று
உறுதி செய்கின்றேன்
முதுகில் குத்தி கொலை
செய்யப்படவில்லையென்று
ஆசுவாசமடைகின்றேன்

ஆட்டத்தை தொடங்கும்போது
இருந்த நமது முகங்கள்
இப்போது இங்கு இல்லை
அவை வேறொருவடையதாய் மாறியிருக்கின்றன

கூடுமானவரை
நானும் நீயும்
இந்த ஆட்டத்தை
தள்ளி போடவே விரும்புகின்றோம்

இந்த 64 கட்டங்களில்
எங்கோ ஒளிந்துள்ளது
மரணமும்
மரணத்தை தள்ளிபோடும்
இந்த விளையாட்டும்

இன்னும் சில நிமிடங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில மணித்துளிகளில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில யுகங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்

கருணையற்ற இந்த இரவு
நீண்டுக்கொண்டே செல்கின்றது



நன்றி

என்.விநாயக முருகன்

Monday, April 16, 2012

மகாகவி

ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

நன்றி
என்.விநாயக முருகன்

Monday, March 26, 2012

பண்புடன் ஒரு கடிதம்

அன்புள்ள அஞ்சலாவுக்கு
ஒரு கடிதம் எழுத அமர்ந்தேன்
எனது கணிப்பொறியில்
என்ன சிக்கலோ
'அ' தட்டச்சு செய்வதில் பிரச்சினை
மிகுந்த யோசனைக்கு பிறகு
'ஏ' என்று தட்டச்சு செய்தேன்
ஏஞ்சலாவாக மாறிய முன்னாள் அஞ்சலாவிடம்
கொஞ்சம் மன்னிப்பும் கேட்டேன்
கண்ணே ஏஞ்சலா என்னும் போதெல்லாம்
வெளியூர் வேலைக்குச் சென்ற
பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியை
கொஞ்சும் ராஜ்மோகன் போலிருந்தது
'அ'ன்புடன் என்று முடியும் இடத்தில்
என்ன செய்வதென்று குழம்பி பின்னர்
பண்புடன் என்று முடித்துக் கொண்டேன்


நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, January 22, 2012

இன்று

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு திருவள்ளுவரை சந்தித்தேன்
தனது கவிதை தொகுப்பிற்கு
ராயல்டி கிடைக்கவில்லையென்று விசனப்பட்டார்
தவிர
தான் எப்போதும்
கிரவுன் சைசில் எழுதுவதால்
பதிப்பகம் கிடைக்கவில்லையென்று புலம்பினார்
பேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று
பிளாக்கிலோ பேஸ்புக்கிலே எழுதலாம்
பொழுதாவது போகுமென்றார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு பாரதியை சந்தித்தேன்
என்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லாம் சுகமென்றார்
இது கண்ணதாசன் சொன்னதாயிற்றே
குழம்பியபடி பார்த்தேன்
என்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்
சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து
தலை நரைக்கிறதென்று சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு அவ்வையாரை சந்தித்தேன்
எல்லாம் ஆணாதிக்கம் ஆணாதிக்கம்
என்று தலையில் அடித்து கொண்டார்
அதியமானிடம் வாங்கிய நெல்லிக்கனியை
திரும்ப கொடுக்கப் போவதாக
ஆவேசத்துடன் சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு கம்பரை சந்தித்தேன்
அவரது கதையை
ஒரு மெகா சீரியல் இயக்குனர்
திருடிகொண்டதாக புகார் சொன்னார்
அடுத்து கண்காட்சிக்கு
ஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்
உத்தேசமிருப்பதாக சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு மோசிகீரனாரை சந்தித்தேன்
பாவம் இளைத்து களைத்து போயிருந்தார்
தனியாக நாற்காலில் அமர்ந்தபடி
தனது கவிதைப்புத்தகத்தை கையிலெடுத்து
தனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
எங்கேவென்று கேட்டேன்
தனக்கு
டீ வாங்கி வர போனதாக
சொல்லி சிரித்தார்


நன்றி
என்.விநாயக முருகன்