Tuesday, June 2, 2009

"வைகுண்டம்" மற்றும் "பறவை அமர்ந்த பாறை" - உயிரோசை கவிதை

உயிரோசை இதழில் வெளியான எனது "வைகுண்டம்" மற்றும் "பறவை அமர்ந்த பாறை" கவிதையை வாசிக்க...

வைகுண்டம்
ஒரு டிக்கட்டில்
மூன்று படம் பார்க்கும்
முனுசாமியும், ராமசாமி மனைவியும்
சென்செக்ஸ் பாம்பும்
நிப்டி பாம்பும்
மாறி மாறி கொத்தியதில்
தூக்கம் தொலைத்த
பைத்தியக்காரன்.
சாவதானமாக
தாயம் உருட்டுகிறார்கள்
ராமசாமியும்,முனுசாமி மனைவியும்.
வானத்தை
வெறித்தபடி
பிளாட்பாரத்தில் கிடக்கிறது
பிச்சைக்காரக் கூட்டமொன்று.
துணைதேடி ஒதுங்குகிறது
பாற்கடல் பாம்பொன்று.
விஷ்ணுபுரத்தில்
புரண்டு படுக்கிறார்
புன்னகைக்கும் நபரொருவர்.

பறவை அமர்ந்த பாறை
ஆளில்லாத தனிமையில்
பாறையொன்றின் மேலே
பறவையொன்று அமர்ந்திருந்தது.
பயந்துப்போன பறவையொன்று
பறக்கிறது
ஏதோ ‌சில
சிறுவர்கள்
வீசிய கற்களில்.
பறந்துப்போன பறவையொன்று
இனி எந்நேரமும்
அ‌ங்கு பறந்துகொண்டிருக்கும்
பறவை அமர்ந்த பாறையென்று
பெயர்க்காரணம் வந்ததிலிருந்து.
பறவை அமர்ந்த பாறையென்று
கட்டணம் கட்டிப் பார்த்தவர்கள்
திரும்பிக்கொண்டிருந்தார்கள்
கூடுகளுக்கு
பாறைகளைச் சுமந்தபடி.



நன்றி...!
-என்.விநாயக முருகன்

No comments:

Post a Comment