Monday, November 23, 2009

சும்மா ஒரு கவிதை

ஜ்யோவ்ராம் சுந்தரின் சும்மா இருத்தல் கவிதை படித்ததும் எனக்கும் சும்மா ஒரு கவிதை எழுத தோன்றியது.சும்மா படித்து பாருங்க


சும்மா ஒரு கவிதை
——————————————————

எப்படி இருக்க?
என்பதை தொடர்ந்து
என்ன செய்கிறாய்?
எ‌ன்று கேட்டேன்
நீண்டநாட்களுக்கு பிறகு சந்தித்த
நெருங்கிய நண்பனை

சும்மா இருப்பதாக
சொன்னான்
சும்மா எப்படி இருப்பது
எதார்த்தமாக கேட்டேன்
சும்மா இருப்பதின்
சுமைகள் பற்றி
அரைமணிநேரம் பேசினா‌‌‌ன்.

சும்மா இருந்த சங்கை
ஊதி கெடுத்த ஆண்டியை
பற்றி சொன்னான்

பால்வண்ணம் பிள்ளை
இறுதியில் சொன்ன
சும்மா கெட, சவமே
வரியை மேற்கோள் காட்டினான்

பாடல்பெற்ற தலமொன்றில்
சும்மா இருக்கும் சிவனை பற்றி
ஐந்து நிமிடம் பேசினா‌‌‌ன்

சற்று வேகமாக
ஊதி கெடுத்த
வருத்தத்துடன் திரும்பினேன்

Friday, November 20, 2009

இரண்டு கவிதைகள்

திணைமயக்கம்
—————————————
தேநீர் கடையில் நின்றிருந்தவர்
தமிழ் ஆர்வலராம்
கோபத்தோடு கத்தினார்
கலாச்சார கண்றாவி
கசக்கி வீசினார் செய்தித்தாளை

காசிமேடு அருகே
கள்ளக்காதல் எதிரொலியாம்
கணவன் வெட்டி கொலை
மனைவி கைது
திருச்சியை சேர்ந்த
வாலிபருக்கு வலைவீச்சு
செய்தித்தாளை எட்டிப் பார்த்தேன்

அட.…திணைமயக்கம்
குறிஞ்சி நெய்தல்
பெருந்திணை எ‌ன்று
ஒரு நிமிடம் ஓடியது

Tuesday, November 17, 2009

"இரண்டு கவிதைகள்" - நவீன விருட்சம்

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது இரண்டு கவிதைகள் வாசிக்கலாம்...

கண்ணீர் அஞ்சலி
-----------------

நான்கு நாட்கள் முன்பு
தெருமுனை மின்சார
கம்பத்தில் அவரை பார்த்தேன்

கண்ணீர் அஞ்சலி
எழுத்துகளுக்கு கீழே
இரண்டு கண்கள் படம்
யாருடையதென்று தெரியவில்லை
அழுதுக்கொண்டிருந்தன

கண்களுக்கு கீழே
சோகமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
புகைப்படத்திற்கு கீழே
வருந்துகிறோம்
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்
எ‌ன்று அச்சாகி இருந்தது.

இரண்டாவது நாள்
குடும்பத்தினரை காணவில்லை.
நண்பர்கள் மட்டும் உட‌ன் இருந்தனர்

மூன்றாவது நாள்
நண்பர்களை
மாடு நக்கி கொண்டிருந்தது.

நான்காவது நாள்
கிழிந்து தொங்கிக்கொண்டிருந்தார்
யாரோ ஒருத்தன்
சிறுநீர் அடித்துக்கொண்டிருந்தான்

இறுதி வரை அழுதுக்கொண்டிருந்தன
இரண்டு கண்கள்
யாருடையதென்று தெரியவில்லை

ஒருநாள்
அதுவும் மறைந்து விட்டது



விசாரித்தல்
-----------------
எங்கு பார்த்தாலும்
அன்புடன் விசாரிப்பார்
எனது நண்பர்

சினிமா தியேட்டரில் விசாரிப்பார்
என்ன படம் பார்க்க வந்தீங்களா?
மருத்துவமனையில் விசாரிப்பார்
என்ன டாக்டரை பார்க்க வந்தீங்களா?
துணிக்கடையில் விசாரிப்பார்
என்ன துணி எடுக்க வந்தீங்களா?
கோயிலில் விசாரிப்பார்
என்ன சாமி கும்பிட வந்தீங்களா?

ந‌ல்ல மனுசன்.நெஞ்சுவலியாம்.
ஒருநாள் இறந்தும்விட்டார்

ஒருநாள் போயிருந்தேன்
என்ன சமாதியாக வந்தீங்களா?
என்ன சொல்வதென்று தெரியவில்லை.


-நன்றி
என்.விநாயக முருகன்

Friday, November 13, 2009

குழந்தைகள் தின வாழ்த்துக்கள்

முந்தைய பதிவை போஸ்ட் செய்த பிறகே இன்று குழந்தைகள் தினம் எ‌ன்று தெரிய வந்தது. எங்கள் அலுவலக வலைப்பூவில் எழு‌திய ‌சில கவிதைகள்...


பங்கு
—————

முன்பொருநாள்
அண்ணன்களோடு
கடல் அலைகளில்
கால் நனைத்து
ரோலர் கோஸ்டரில்
குட்டிக்கரணமடித்து
குதிரைச் சவாரி பிறகு
மணலில் சிறிது
புரண்டு இளைப்பாறி
நீண்ட சாப்பாட்டு மேசையின்
இரண்டுபுறமும் அமர்ந்து
உற்சாகமாய் சாப்பிட்டது
நிழலாடுகிறது
அன்று
பேமிலி தோசையை
பங்கு பிரிக்காமல்
எப்படி சாப்பிட்டோமென்று
இன்றுவரை நினைவில்லை



திருடன் போலீஸ்
————————————————
நான் திருடன்
நீ போலீஸ் என்று
சொன்ன சிறுவன்
ஆட்டத்தின் சிறிய
இடைவெளியில்
நீ திருடன்
நான் போலீஸ் எ‌ன்று
உத்யோகம் மாறி
விளையாடுகிறான்
ஆட்டத்தின் இறுதியில்
உத்யோகம் பறிபோன
முன்னாள் போலீசும்
திருந்திய இந்நாள்
திருடனும்
ஒருவரையொருவர் பார்த்து
சிரித்தபடி செல்கிறார்கள்



தீபாவளி இரவன்று
————————————————
தீபாவளி இரவன்று
சாலையை கடந்துச்
செல்கையில்
மூடப்பட்ட கடைகளின்
ஷட்டர் முன்னால்
வெடிக்காத வெடிகளை
சேகரித்தபடி அமர்ந்திருந்திருந்தான்
பேப்பர் பொறுக்கும் சிறுவனொருவன்

அவன் சேகரித்த வெடிகளில்
ஏதாவது ஒன்றின் திரி
நமத்துப்போகாமல் இருக்க
கடவுளை பிரார்த்திக்கிறேன்



கவிதையெழுதி
——————————————

என்னருகே அமர்ந்த
கைக்குழந்தையொன்று
கொஞ்சமும் எதிர்பாராமல்
சட்டென கிழித்துவிட்டது.

பிரசுரமாகாத கவிதையின்
பல துண்டுகளோடு
சிரித்தது கடவுளொன்று
எதுவும் நடக்காததுபோல

இனி
கவிதையெழுதி என்ன கிழித்தாயென்று
கேட்பவர்களுக்கு சொல்லவும்
மிச்சமிருக்கிறது ஏதோவொன்று



பேய்க்கதைகள்
—————————————
குழந்தைகளை
கூட்டி வைத்துக்கொண்டு
பேய்க்கதைகள் சொன்னேன்.
வித ‌விதமாக கற்பனை செய்து
புது புது பேய்களை நானே
உருவாக்கினேன்.
இ‌து வரை கேட்டறியாத
ஒலிகளையெழுப்பி
கதைகளை நீடித்தேன்.
பிறகு வீட்டின்
அறையிலிருந்து வெளிவருகையில்
திடீரென என் முன்னால்
நான் கேட்டறியாத ஒலிகளுடன்
குதித்து பயமுறுத்தி ஓடுகையில்
கொஞ்சம் பயந்துத்தான் போனேன்
ஒருவேளை பேய் இருக்குமோ?


கண்திருஷ்டி
———————————
அம்மாடியோவ் எவ்ளோ உசரமென்று
குதித்த குழந்தையொன்றை
வைத்தகண் வாங்காமல்
வியப்போடு பார்த்தார்
தெருமுனையில்
பு‌திதாக வந்திருந்த
நாற்பதடி கண்திருஷ்டி விநாயகர்.
வீட்டுக்கு போய் சுத்திப்போட
சொன்னார்கள் யாரோ.
சுத்திப்போட்ட ஆறாம்நாள்
கரைந்துப்போனது.

ரிக்‌ஷா

ரிக்‌ஷா
------


நேற்று இரவு அகநாழிகை வாசு அவர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என் இரண்டு வயது‌ மகள் அருகே வ‌ந்து என்னை பேசவிடாமல் சத்தமாக கத்தி தொந்தரவு செய்துக்கொண்டிருந்தாள்.

தொலைபேசியில் பேசும்போது மட்டும் என் மகளுக்கு என்ன தோன்றுமோ தெரியவில்லை.

எங்கள் வீட்டில் யார் தொலைபேசி பேசினாலும் அவள் காதில் ‌சில வினாடிகள் தொலைபேசியை வைக்க வேண்டும். எதிர்முனையில் இருப்பவர்கள் பேசுவது அவளுக்கு புரியுமோ புரியாதோ எனக்கு தெரியாது. அந்த பேச்சு சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்ப்பதில் அவளுக்கு அப்படி ஒரு ஆர்வம். குழந்தைகள் நாம் பேசுவதை நமது முகம்,நாக்கு உடல் அசைவுகள் மூலம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கின்றார்கள். இவை எதுவும் இல்லாமல் கையடக்க ஒரு மின்னணு கருவியில் இருந்து பேச்சு வந்தால் அவர்களுக்கு எப்படி வினோதமாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் வரும் குரல்கள் கூட அவ்வளவாக பிடிப்பதில்லை. தொலைக்காட்சியில் உருவங்கள் பேசுவதை பார்த்து பழகி இருக்கலாம். நிறைய குழந்தைகளை நுண்மையாக கவனித்துள்ளேன். தொலைபேசி/மொபைல் போன்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு வசீகரமாகவே இருக்கின்றது. உருவமே இல்லாமல் யாருடா இது நம்ம அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பது. ஒருவேளை சின்ன வயசுல நம்ம கனவுல வந்து சிரிக்க வைத்து பின்பு காணாமல் சென்று விட்ட கடவுளா என்று கூட நினைத்திருக்கலாம்


நானும் வாசுவும் பேசிக்கொண்டிருக்கையில் குழந்தைகளின் மொழித்திறன் பற்றி பேச்சு சென்றது. என் மகளின் ஆர்ப்பாட்டம் கேட்டு வாசு விசாரித்தார். கெளதம சித்தார்த்தனின் நீல ஊமத்தம் பூ படித்தீர்களா என்று கேட்டார். எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. நான் அகநாழிகையில் அஜயன்பாலா கட்டுரை பிறகு கவிதைகள் தவிர எதுவும் படிக்கவில்லை. சங்கடத்துடன் இல்லை என்றேன். பிறகு இரவு அந்த கதை படித்துப்பார்த்தேன். அருமையான கதை. நான் இங்கு சொல்ல வந்தது அந்த கதை பற்றி அல்ல. அந்த கதையை ஒட்டி நான் அறிந்த சில உண்மைகள்.


நாம் நினைப்பதுபோல குழந்தைகள் மொழியை கற்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் வினோதமான ஒலிகள், வித்தியாசமான முக அசைவுகள், சப்தங்களின் கலவைகள் இவற்றை மட்டுமே கூர்ந்து கவனிக்கின்றார்கள். மொழியின் அரசியல் அவர்களுக்கு பிடிப்பதில்லை. நாம்தான் களிமண்ணை அழகிய பானையாக்குகின்றோம் என்ற பெயரில் நமது மொழியை அவர்கள் மேல் திணிக்கின்றோம். உண்மையில் நாம் அழகிய பானையை உடைத்து களி மண்ணாக்குகின்றோம். மொழியின் அரசியலை அவர்களுக்கு சிறுவயதில் கற்று தந்து அதை தேர்வில் அப்படியே வாந்தி எடுக்க வைக்கின்றோம்.

குழந்தைகள் மொழியை விட ஒலிக்குறிப்புகள், சப்தங்களை மட்டுமே ரசிக்கின்றார்கள் என்பதை நான் குருட்டாம்போக்காக சொல்லவில்லை. ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளின் சரணாலயத்துக்கு வரும் குழந்தைகளின் உற்சாகத்தை கவனித்து பாருங்கள். அதே நேரம் செயற்கையான உள்விளையாட்டரங்கு, ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களுக்கு அழைத்து வரும் குழந்தைகளை கவனித்து பாருங்கள். இரண்டு குழந்தைகளுக்குமிடையில் உள்ள உற்சாகம் புரியும். நமது ஆழ்மனதில் காடு எப்போதும் ஒரு படுகையாக படிந்து கிடக்கின்றது. இயற்கையான ஒலிகள் மூலமே ஆதிமனிதன் மொழியை கற்றான். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டு மழை சிறுகதைத்தொகுப்பில் "இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன" எ‌ன்ற அருமையான ஒரு கதை உள்ளது. படித்து பார்க்கவும். வாய்பேச முடியாத தன் ஆறுவ்யது மகளை தோளில் சுமந்தபடி ஒவ்வொரு பறவையாக அது கூவும் குரலுக்காக தேடிச்செல்லும் தகப்பனின் தகப்பனின் அவலம் பற்றிய கதை. மொழியை அதன் இலக்கணங்களை மொழியின் அரசியலை நாம் திணிக்காதவரை குழந்தைமை அப்படியே இருக்கின்றது. மொழியின் அரசியல் புரிய ஆரம்பித்ததும் அவர்களிடம் ஒரு வித செயற்கை தன்மை வந்து அழகு போய்விடுகிறது..

ஐந்து வயதிலேயே திருஞானசம்பந்தர் பாடல்கள் எழுத ஆரம்பித்தது எனக்கு அதிகப்பிரசிங்கித்தனமாக படுகிறது. (எனக்கு பத்து வயது வரை சரியாக பேச வராது. அந்த பொறமை கூட கரணம் என்பது வேறு விசயம்) குழந்தைகள் இயற்கையான சப்தங்கள் ஒலிக்குறிப்புகளை வைத்து தாங்களாகவ்ய ஒரு சிம்பொனியை தயார் செய்கின்றார்கள். அந்த சிம்பொனி பெரியவர்களுக்கு புரிவதே இல்லை. நாம் சொல்லும் இலக்கணம் நாம் வரையறுத்த விதிமுறைகளில் இது அடங்குவதில்லை. அசோகமித்திரனின் அருமையான ஒரு பக்க சிறுகதை. இதை படித்து பாருங்கள்.


ரிக்ஷா
——————
அப்பா அப்பா ரிஷ்கா ரிஷ்கா என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்‌ஷா ஒன்று போய்க்கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை.

“ரிஷ்கா இல்லை. ரிக்‌ஷா ”

ரவி அருகே வந்தான்.

“எங்கே சொல்லு - ரிக்‌ஷா”

“ரிஷ்கா”

“ரிக்-ஷா”

“ரிஷ்கா”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

“அப்படி இல்லை, இதோ பார், ரிக்,”

“ரிக்.”

“ஷா”

“ஷா”.

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

ஊம்கூம், மறுபடியும் சொல்லு,ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ஷா.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

சிறிது நேரம் மௌனம் நிலவியது.

“பார் ரவி, என்னைப் பார்த்துச் சொல்லு. ரீ.”

“ரீ.”

“இக்.”

“இக்.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா .”

“ரிஷ்கா.”

“ரிக்‌ஷா.”

“ரிஷ்கா.”

உலகம் ஷணகலம் அசைவற்று இருந்தது.

“ரவி.”

“அப்பா.”

“சரியாச் சொல்லு. ரிக் ரிக் ரிக்.”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ரிக்ஷா,ரிக்ஷா”

“ரிஷ்கா,ரிஷ்கா”

“ரிக்‌ஷா ,”

“ரிஷ்கா,ரிஷ்கா”

காய்கறி வாங்கப் போன மனைவி திரும்பி வந்துவிட்டாள். வந்த பிறகுதான் அவள் குடையை மறந்துவிட்டு வந்தது தெரிந்தது.

“ஐயோ அவ்வளவு தூரம் மறுபடியும் போக வேண்டுமே!” என்றாள்.

“ரிக்‌ஷாவில் போய்விட்டு வந்துவிடேன்” என்றேன்.

மனைவி என்னை ஏதோ மாதிரி பார்த்தாள்.

“என்ன?” என்றேன்.

“இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“ரிக்‌ஷாவில் போய் விட்டுவா என்றேன்.”

“ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி விழுந்தது” என்றாள்.

நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருந்தான்.


குழந்தைகள் , மொழி ,பாடம் ,பரீட்சை எ‌ன்ற பேச்சு வரும்போதெல்லாம் அசோகமித்திரனின் இந்த சிறுகதையை நினைத்துக் கொள்வேன்.

நகல் செய்தல்

ஜ்யோவ்ராம் சுந்தர் தளத்தில் ஒரு கவிதை படித்தேன். சிலநாட்கள் முன்பு இதேபோல ஒரு கவிதை எழுதி உயிரோசைக்கு அனுப்பி வைத்தேன். ஏனோ அவர்களுக்கு பிடிக்கவில்லை போலும். எனக்கும் அவ்வளவாக திருப்தி இ‌ல்லை. பெட்டிக்குள் இருந்து மீண்டும் எடுத்து படித்தேன். இதே போன்ற ஒரு பார்வை சுந்தருக்கும் இருந்தது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. தொலைக்காட்சி அபத்தங்களை கொஞ்சம் அவதானித்தால் போதும். இத‌ன் வக்கிரம் பிடிபடும்


நகல் செய்தல்
---------------
மனைவியுடன் கூடும்போதும்
பாடாய்படுத்துகிறது
சற்றுமுன் டி.வி யில்
பார்த்த நடன பெண்களின்
மார்புகளும் இடுப்புகளும்
எந்த நடிகரின் அல்லது
எந்த நடிகையின் ஜாடையில்
பிறந்து தொலைக்கப்போகிறதோ
இன்று நிகழும்
ஜனன முயற்சியின் முடிவில்

Thursday, November 12, 2009

நான்கு கவிதைகள்

நான்கு கவிதைகள்
—————————————————





ஜி-8
————
ஜி-8 மாநாட்டை சீர்குலைக்க
வ‌ந்த தீவிரவாதிகளை
நீண்ட புலனாய்வுக்கு பிறகு
கண்டுபிடித்தார்களாம்.

உயர்பாதுகாப்பு அதிகாரி
செய்தியாளர்களிடம் சொன்னார்.
பிடிபட்டது மூன்று பேராம்.
நீண்ட கூரான ஆயுதங்கள்
மொத்தம் ஆறு வைத்திருந்தார்களாம்.
கண்டனம் தெரிவிக்க
கருப்புநிற ஆடைகள் அணிந்திருந்தனராம்.
குறிப்பாக தாடி வைத்திருந்தார்களாம்.
சந்தேகமே இல்லை. அவர்களேதான்.

மென்மையான விசாரிப்புக்கு பிறகு
இரண்டுபேர் குற்றங்களை
ஒப்புக்கொண்டார்களாம்.

ஒன்று மட்டும்
இன்னமும் பிடிவாதமாக
மே..மே…மே… எ‌ன்று கத்திக்கொண்டிருக்கிறதாம்.


ஓடிப்போனவன்
——————————————–

ஓடிப்போன நண்பன்
நாலு நாள் கழித்து
வீடு திரும்பினா‌‌‌ன்.

விம்மியபடி வாசல் வந்து
கட்டிக்கொண்டாள் அவனின் மனைவி.
ஐந்துவயது மகனுக்கு
கால்கள் தரையில் இல்லை
கொள்ளிப்போட வந்த
சந்தோசத்தில் அப்பா.
அப்பாடாவென்று
ஆனந்தப்பட்டார்கள் நண்பர்கள்.
பாவம்
என்ன கஷ்டமோ?
என்ன ஞானமோ?
பாதியில் வந்துவிட்டான்.

நிதானமாக விசாரிக்க வேண்டும்
பாதி புத்தனை.



மழை- ஒரு உண்மை
————————————————————
மழை எனக்கு பிடிக்கும்.
அதிலும் குறிப்பாக
மழைப்பற்றி கவிதையெழுதுவது
இன்னும் பிடிக்கும்.
இன்னும் குறிப்பாக
ஜன்னலுக்கு வெளியே
பெய்யும் மழையை எழுத பிடிக்கும்.
இறுதி குறிப்பாக
ஜன்னலுக்குள்ளிருந்து எழுத பிடிக்கும்.