Friday, November 13, 2009

ரிக்‌ஷா

ரிக்‌ஷா
------


நேற்று இரவு அகநாழிகை வாசு அவர்களுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது என் இரண்டு வயது‌ மகள் அருகே வ‌ந்து என்னை பேசவிடாமல் சத்தமாக கத்தி தொந்தரவு செய்துக்கொண்டிருந்தாள்.

தொலைபேசியில் பேசும்போது மட்டும் என் மகளுக்கு என்ன தோன்றுமோ தெரியவில்லை.

எங்கள் வீட்டில் யார் தொலைபேசி பேசினாலும் அவள் காதில் ‌சில வினாடிகள் தொலைபேசியை வைக்க வேண்டும். எதிர்முனையில் இருப்பவர்கள் பேசுவது அவளுக்கு புரியுமோ புரியாதோ எனக்கு தெரியாது. அந்த பேச்சு சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை பார்ப்பதில் அவளுக்கு அப்படி ஒரு ஆர்வம். குழந்தைகள் நாம் பேசுவதை நமது முகம்,நாக்கு உடல் அசைவுகள் மூலம் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பிக்கின்றார்கள். இவை எதுவும் இல்லாமல் கையடக்க ஒரு மின்னணு கருவியில் இருந்து பேச்சு வந்தால் அவர்களுக்கு எப்படி வினோதமாக இருக்கும். இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகளுக்கு தொலைக்காட்சியில் வரும் குரல்கள் கூட அவ்வளவாக பிடிப்பதில்லை. தொலைக்காட்சியில் உருவங்கள் பேசுவதை பார்த்து பழகி இருக்கலாம். நிறைய குழந்தைகளை நுண்மையாக கவனித்துள்ளேன். தொலைபேசி/மொபைல் போன்கள் எப்போதும் அவர்களுக்கு ஒரு வசீகரமாகவே இருக்கின்றது. உருவமே இல்லாமல் யாருடா இது நம்ம அப்பா அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பது. ஒருவேளை சின்ன வயசுல நம்ம கனவுல வந்து சிரிக்க வைத்து பின்பு காணாமல் சென்று விட்ட கடவுளா என்று கூட நினைத்திருக்கலாம்


நானும் வாசுவும் பேசிக்கொண்டிருக்கையில் குழந்தைகளின் மொழித்திறன் பற்றி பேச்சு சென்றது. என் மகளின் ஆர்ப்பாட்டம் கேட்டு வாசு விசாரித்தார். கெளதம சித்தார்த்தனின் நீல ஊமத்தம் பூ படித்தீர்களா என்று கேட்டார். எனக்கு தர்மசங்கடமாகி விட்டது. நான் அகநாழிகையில் அஜயன்பாலா கட்டுரை பிறகு கவிதைகள் தவிர எதுவும் படிக்கவில்லை. சங்கடத்துடன் இல்லை என்றேன். பிறகு இரவு அந்த கதை படித்துப்பார்த்தேன். அருமையான கதை. நான் இங்கு சொல்ல வந்தது அந்த கதை பற்றி அல்ல. அந்த கதையை ஒட்டி நான் அறிந்த சில உண்மைகள்.


நாம் நினைப்பதுபோல குழந்தைகள் மொழியை கற்பதில் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் வினோதமான ஒலிகள், வித்தியாசமான முக அசைவுகள், சப்தங்களின் கலவைகள் இவற்றை மட்டுமே கூர்ந்து கவனிக்கின்றார்கள். மொழியின் அரசியல் அவர்களுக்கு பிடிப்பதில்லை. நாம்தான் களிமண்ணை அழகிய பானையாக்குகின்றோம் என்ற பெயரில் நமது மொழியை அவர்கள் மேல் திணிக்கின்றோம். உண்மையில் நாம் அழகிய பானையை உடைத்து களி மண்ணாக்குகின்றோம். மொழியின் அரசியலை அவர்களுக்கு சிறுவயதில் கற்று தந்து அதை தேர்வில் அப்படியே வாந்தி எடுக்க வைக்கின்றோம்.

குழந்தைகள் மொழியை விட ஒலிக்குறிப்புகள், சப்தங்களை மட்டுமே ரசிக்கின்றார்கள் என்பதை நான் குருட்டாம்போக்காக சொல்லவில்லை. ஏதாவது பறவைகள் அல்லது விலங்குகளின் சரணாலயத்துக்கு வரும் குழந்தைகளின் உற்சாகத்தை கவனித்து பாருங்கள். அதே நேரம் செயற்கையான உள்விளையாட்டரங்கு, ஷாப்பிங் மால், சினிமா தியேட்டர்களுக்கு அழைத்து வரும் குழந்தைகளை கவனித்து பாருங்கள். இரண்டு குழந்தைகளுக்குமிடையில் உள்ள உற்சாகம் புரியும். நமது ஆழ்மனதில் காடு எப்போதும் ஒரு படுகையாக படிந்து கிடக்கின்றது. இயற்கையான ஒலிகள் மூலமே ஆதிமனிதன் மொழியை கற்றான். எஸ்.ராவின் பதினெட்டாம் நூற்றாண்டு மழை சிறுகதைத்தொகுப்பில் "இந்த ஊரிலும் பறவைகள் இருக்கின்றன" எ‌ன்ற அருமையான ஒரு கதை உள்ளது. படித்து பார்க்கவும். வாய்பேச முடியாத தன் ஆறுவ்யது மகளை தோளில் சுமந்தபடி ஒவ்வொரு பறவையாக அது கூவும் குரலுக்காக தேடிச்செல்லும் தகப்பனின் தகப்பனின் அவலம் பற்றிய கதை. மொழியை அதன் இலக்கணங்களை மொழியின் அரசியலை நாம் திணிக்காதவரை குழந்தைமை அப்படியே இருக்கின்றது. மொழியின் அரசியல் புரிய ஆரம்பித்ததும் அவர்களிடம் ஒரு வித செயற்கை தன்மை வந்து அழகு போய்விடுகிறது..

ஐந்து வயதிலேயே திருஞானசம்பந்தர் பாடல்கள் எழுத ஆரம்பித்தது எனக்கு அதிகப்பிரசிங்கித்தனமாக படுகிறது. (எனக்கு பத்து வயது வரை சரியாக பேச வராது. அந்த பொறமை கூட கரணம் என்பது வேறு விசயம்) குழந்தைகள் இயற்கையான சப்தங்கள் ஒலிக்குறிப்புகளை வைத்து தாங்களாகவ்ய ஒரு சிம்பொனியை தயார் செய்கின்றார்கள். அந்த சிம்பொனி பெரியவர்களுக்கு புரிவதே இல்லை. நாம் சொல்லும் இலக்கணம் நாம் வரையறுத்த விதிமுறைகளில் இது அடங்குவதில்லை. அசோகமித்திரனின் அருமையான ஒரு பக்க சிறுகதை. இதை படித்து பாருங்கள்.


ரிக்ஷா
——————
அப்பா அப்பா ரிஷ்கா ரிஷ்கா என்று ரவி உள்ளே என்னிடம் ஓடி வந்தான். ரவிக்கு மூன்று வயது. வாசலில் ரிக்‌ஷா ஒன்று போய்க்கொண்டிருந்தது. வீட்டில் வேறு யாரும் இல்லை.

“ரிஷ்கா இல்லை. ரிக்‌ஷா ”

ரவி அருகே வந்தான்.

“எங்கே சொல்லு - ரிக்‌ஷா”

“ரிஷ்கா”

“ரிக்-ஷா”

“ரிஷ்கா”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

“அப்படி இல்லை, இதோ பார், ரிக்,”

“ரிக்.”

“ஷா”

“ஷா”.

“ரிக்ஷா”

“ரிஷ்கா”

ஊம்கூம், மறுபடியும் சொல்லு,ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ரிக்.”

“ஷா.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா ”

“ரிஷ்கா”

சிறிது நேரம் மௌனம் நிலவியது.

“பார் ரவி, என்னைப் பார்த்துச் சொல்லு. ரீ.”

“ரீ.”

“இக்.”

“இக்.”

“ஷா.”

“ஷா.”

“ரிக்‌ஷா .”

“ரிஷ்கா.”

“ரிக்‌ஷா.”

“ரிஷ்கா.”

உலகம் ஷணகலம் அசைவற்று இருந்தது.

“ரவி.”

“அப்பா.”

“சரியாச் சொல்லு. ரிக் ரிக் ரிக்.”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ரிக் ரிக் ரிக் ரிக்”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ஷா ஷா ஷா”

“ரிக்ஷா,ரிக்ஷா”

“ரிஷ்கா,ரிஷ்கா”

“ரிக்‌ஷா ,”

“ரிஷ்கா,ரிஷ்கா”

காய்கறி வாங்கப் போன மனைவி திரும்பி வந்துவிட்டாள். வந்த பிறகுதான் அவள் குடையை மறந்துவிட்டு வந்தது தெரிந்தது.

“ஐயோ அவ்வளவு தூரம் மறுபடியும் போக வேண்டுமே!” என்றாள்.

“ரிக்‌ஷாவில் போய்விட்டு வந்துவிடேன்” என்றேன்.

மனைவி என்னை ஏதோ மாதிரி பார்த்தாள்.

“என்ன?” என்றேன்.

“இப்போது நீங்கள் என்ன சொன்னீர்கள்?”

“ரிக்‌ஷாவில் போய் விட்டுவா என்றேன்.”

“ஏதோ ரிஷ்கா என்கிற மாதிரி விழுந்தது” என்றாள்.

நான் ரவியைப் பார்த்தேன். ரவி விளையாடிக் கொண்டிருந்தான்.


குழந்தைகள் , மொழி ,பாடம் ,பரீட்சை எ‌ன்ற பேச்சு வரும்போதெல்லாம் அசோகமித்திரனின் இந்த சிறுகதையை நினைத்துக் கொள்வேன்.

1 comment:

  1. எஸ்ராவின் கதை மிகவும் அருமையா ஒன்று.. உங்களுடைய கவிதையை அகநாழிகையில் படித்த போது எனக்கு அந்தக் கதைதான் ஞாபகத்துக்கு வந்தது..;-)))

    ReplyDelete