Thursday, December 5, 2013

பட்ட விரட்டிகாலித் ஹுசைனி எழுதிய நாவல் The Kite Runner. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்ற இந்த புத்தகத்தை போன வாரம் ஒபாமா படிக்க வாங்கிச் சென்ற விஷயத்தை நியூயார்க் டைம்ஸில் படித்தேன். அவர் இன்னுமா அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான நூல் இது.

தமிழில் பட்ட விரட்டி என்ற தலைப்பில் எம்.யூசூப் ராஜா மொழிப்பெயர்த்துள்ளார். அபாரமான மொழிபெயர்ப்பு. எந்த சிரமும் இல்லாமல் சல்ப்படைய வைக்காமல் ஒரே அமர்வில் படிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.

கதை ஆப்கானின் காபூல் நகரில் நடக்கிறது. ஹசனின் அப்பா அலி. அலியின் மனைவி சனோபர். அவர்கள் அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். ஹசன் பிறந்த ஐந்தாம் நாள் சனோபர் ஒரு நாடோடி கும்பலுடன் ஓடி விடுகிறாள். ஹசனின் அப்பாதான் குழந்தையை வளர்க்கிறார்.

அலி வேலை செய்யும் எஜமான் பெயர் ஆகா. ஆகா செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் அமீர் (இந்த நாவலின் ஆசிரியர்). அவர்கள் பஸ்டூன் இனத்தை சேர்ந்தவர்கள்.

ஹசனும்,அமீரும் சிறுவயது முதல் எந்த வர்க்க பாகுபாடுகளுமின்றி ஒன்றாக பழகி ஒன்றாக விளையாடுகிறார்கள். பட்டம் விடுவதில் இருவரும் வல்லவர்கள். ஒருநாள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து பட்டம் விடுவது சண்டை நடக்கிறது. அந்தச் சண்டையில் ஆஸிப் என்னும் பஸ்டூன் இனச் சிறுவன் ஹசனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகிறான். அதை அமீரால் தடுக்க முடியவில்லை. பிறகு அது குறித்து அமீர் அடிக்கடி குற்ற உணர்ச்சிக் கொள்கிறான். சிறுவர்கள் அமீருக்கும்,ஹசனுக்கும் இடையே இருக்கும் நட்பில் விரிசல் விழுகிறது. பிறகு ஹசன் மீது அவன் வேலை செய்யும் வீட்டில் ஒரு திருட்டுப்பழி விழ அவனும் அவனது தந்தை அலியும் அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.

இதனிடையே ஆப்கானில் சோவியத் ரஷ்யாவின் இராணுவ வீர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். பலர் அகதிகளாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். ஆகாவும்,அமீரும் வீடு சொத்தையெல்லாம் போட்டுவிட்டு அகதியாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்கா ஓடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் தங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். அமீர் இலக்கியம் படிக்கிறான். எழுத்தாளன் ஆகிறான். நாவல்கள் எழுதுகிறான். திருமணம் நடக்கிறது. அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். பிறகு அமீரின் தந்தை புற்றுநோயால் மரணமடைகிறார்

இடையே ஆப்கானில் இருக்கும் ரஷ்ய படைகள் அங்கிருந்து ஓடுகிறார்கள். தாலிபான்கள் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். தாலிபான்கள் அட்டகாசம் செய்யும் அந்த கொடுமையான காலக்கட்டத்தில் (19 98) அமெரிக்காவிலிருந்து ஆப்கான் செல்கிறான் அமீர். அவன் ஏன் அங்கு செல்கிறான்? அங்கு தாலிபான்கள் அவனை என்ன செய்தார்கள்? ஹசன் என்ன ஆனான்? என்றெல்லாம் நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரான் பாமுக் எப்படி துருக்கியின் ஆன்மாவை எழுத்துக்குள் இழுத்துக் கொண்டு வருகிறாரோ அது போல இவர் ஆப்கானின் ஆன்மாவை இழுத்துக் கொண்டு வந்துள்ளார். இரண்டு வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் பிளவுகள். ஒரே மதத்தின் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பூசல்கள். மதமும், தீவிரவாதமும் எந்த புள்ளியில் இணைகிறது என்றும், ஆப்கானும்,பாகிஸ்தானும் நட்புநாடுகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்றும் அருமையாக புனைவில் கொண்டுவந்துள்ளார்.

எனது ஒரு வருத்தம் என்னவென்றால் தாலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்காதான். அந்த அரசியலையும்,அயோக்கியத்தனத்தையும் அவர் நாவலில் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் இந்த நாவல் இரண்டு கோடி எண்ணிக்கையில் விற்றிருக்காது. ஒபாமாவும் வாங்கியிருக்க மாட்டார்.

பட்ட விரட்டி
காலித் ஹூசைனி
தமிழில் எம்.யூசூப் ராஜா
எதிர் வெளியீடு

4 comments:

 1. appadiyaa..!?

  pakirvukku nantri .

  ReplyDelete
 2. ஒபாமா போல (!!) நானும் இந்நூலை இன்னும் படிக்கவில்லை... இதன் பெருமையை கேள்விப்பட்டதோட சரி... தமிழில் இருப்பதால் கண்டிப்பாக இன்னும் இலகுவாக என்னால் படிக்க முடியும்... மொழிபெயர்ப்பும் நன்றாக இருப்பதாக எழுதியிருக்கிறீர்கள்... வாங்கி படித்துப் பார்க்கிறேன்...

  ReplyDelete
 3. இந்த நாவல் “THE KITE RUNNER" என்ற பெயரிலேயே திரைப்படமாகவும் வந்திருக்கிறது.

  ReplyDelete
 4. நூலின் உள்ளுறை, அமெரிக்காவின் செழுமையையும் சுதந்திரத்தையும் பறைசாற்றுவதே. அமெரிக்காவைச் சார்ந்துநின்றால் மட்டுமே இஸ்லாமிய நாடுகளுக்கு விடியல் கிடைக்கும் என்பதையே ஆசிரியர் காட்டுகிறார். திரைப்படத்திலும் இதைத் தெளிவாகப் பார்க்கலாம். தவிர்க்கமுடியாத பின்னணியாக தாலிபான்களின் அட்டகாசம் கதையில் வருகிறது. அவ்வளவே.

  ReplyDelete