Showing posts with label social. Show all posts
Showing posts with label social. Show all posts

Sunday, October 12, 2014

ராஜீவ்காந்தி சாலை - இரண்டு விமர்சனங்கள்

ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றி  ஈழத்து எழுத்தாளர் வ.ந.கிரிதரன் விமர்சனம்

(நன்றி:-வ.ந.கிரிதரன்)

அண்மையில் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வாசிக்கும் சந்தர்ப்பமேற்பட்டது. உயிர்மை வெளியீடாக வெளிவந்துள்ள நாவல் அண்மைக்காலத்தில் வெளியான தமிழ் நாவல்களில் முக்கியமான, கவனிக்கப்பட வேண்டிய நாவல்களிலொன்று. மொழியில் எந்தவிதப் புதுமையுமில்லை. தமிழக வெகுசனப் பத்திரிகைகளை வாசிக்கும் வாசகர் ஒருவருக்கு நன்கு பழகிய மொழிதான். இந்த நாவல் முக்கியத்துவம் பெறுவது இது கூறும் பொருளினால்தான். அப்படி எதனைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது? சுருக்கமாகக் கூறப்போனால் உலகமயமாதலுக்குத் தன்னைத் திறந்து விடும் வளர்ந்து வரும், அபிவிருத்தி அடைந்து வரும் நாடொன்றில் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் எவ்வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை விமர்சிக்கும் நாவலிதுவென்று கூறலாம். இத்தருணத்தில் கறுப்பு 'ஜூலை' 1983யினைத் தொடர்ந்து, உலகின் நானா பக்கங்களையும் நோக்கி, அகதிகளாகக்ப் படையெடுத்த ஈழத்தமிழர்களைப் பற்றி சில விடயங்களை எண்ணிப்பார்ப்பது 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் கூறும் பொருளைப்பொறுத்தவரையில் முக்கியமானது; பயன்மிக்கது.

ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் அகதிகளாகப் புலம் பெயர்ந்துப் புகுந்த நாடுகள் செல்வச்செழிப்புள்ள, முதலாளித்துவச் சமுதாய அமைப்பைக்கொண்ட மேற்கு நாடுகள். இந்த நாடுகளில் நிலவும் சமூக, பொருளாதாரச் சூழல்களுக்கும், அதுவரை அவர்கள் வாழ்ந்த நாட்டின் சமூக, பொருளாதாரச் சூழலுக்கும் மலைக்கும், மடுவுக்குமிடையிலான வித்தியாசம். மேற்கு நாடுகளில் நிலவும் கடனட்டைக் கலாச்சாரம் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் புதியது. உலக மயமாதலின் விளைவுகளால சமூக, பொருளியல் சூழல்களில் மிகப்பெரிய மாற்றத்தை அடைந்த இந்திய மத்திய வர்க்கத்தினரின் நிலையும், மேற்கு நாடுகளின் பொருளியற் சூழல்களுக்குள் இறக்கி விடப்பட்ட ஈழத்தமிழ் அகதிகளின் நிலையும் இந்த வகையில் ஒரே மாதிரியானவை என்று கூறலாம். ஒரு வேலை இருந்தால் , தகுதிக்கு மீறிய கடன் தொகையுள்ள கடனட்டைகளைப் பெற்றபோது , ஆரம்பத்தில் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு அது இன்பமளிப்பதாகவேயிருந்தது. அதன் பின்னர் அவர்களது வாழ்க்கை கடன் கலாச்சாரத்துள் முற்றாகவே மூழ்கி விட்டது. கடனுக்குக் கார் வேண்டலாம்; கடனுக்கு வீடு வாங்கலாம்; வீட்டுப் பெறுமானத்தின் உபரி மதிப்பிற்குச் சமமாக கடன் எடுக்கும் வசதியினைப் பெறலாம். இவ்விதமாகப் பல 'கடன்' நன்மைகளைச் சுகிக்கலானார்கள் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள். இவ்விதமான சமூக, கலாச்சார மாற்றங்களுக்குள்ளாகியவர்கள் அகதிகளாகப் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் மட்டுமல்லர். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற பல காரணங்களுக்காக, மேற்கு நாடுகளை நோக்கிப் பல்வேறு நாடுகளிலிருந்தும் , வளர்முக, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளிலிலிருந்து சென்ற அனைவருக்கும் பொருந்தும். இவ்விதமாகக் கடனட்டை, கடன் போன்றவற்றின் ஆதிக்கத்தின் கீழ் மக்களைக் கொண்டுவரும் முதலாளித்துவ சமுதாய அமைப்பானது, அதன் பின் அம்மக்களை அதன் பிடிக்குள் கொண்டுவந்து, செக்குமாடுகளாக்கி விடும். உழைப்பது கடன்களைக் கட்டுவதற்கே என்று வாழ்க்கை மாறிவிடும். பெரும்பாலானவர்கள் உதாரணத்துக்கு வாங்கிய வீட்டின் விலையைப்போல் இரு மடங்கு வரையிலான விலையை 25 வருட காலத்து வீட்டுக் கடனுக்குக் கட்டி முடிக்கும்போது அவர்களது வாழ்வின் பெரும்பகுதி முடிந்து விட்டிருக்கும். இவ்விதமான வாழ்க்கையானது குடும்பங்களுக்குள் பல்வேறு வகையான சிக்கல்களை உருவாக்கிவிடுகின்றது.

இதே வகையானதொரு நிலையினைத்தான் இந்தியாவில் உலகமயமாக்கலின் விளைவாக உருவான 'பணம் புழங்கும்' நடுத்தர மக்களின் வாழ்க்கையிலும் காணலாம். மேற்கு நாட்டுசமூகக் கலாச்சாரச் சூழலை அப்படியே கொண்டு வந்து, வளர்ந்துவரும் இந்தியா போன்ற நாடொன்றில் நட்டுவிட்டால் எவ்வகையான விளைவுகள் உருவாகுமோ அவ்வகையான விளைவுகள் அனைத்தும் இங்கும் உருவாகும். அவைதான் 'ராஜீவ்காந்தி சாலை'யிலும் உருவாகின. பணம் புழங்கும் மத்தியதர மக்கள் மில்லின் கணக்கில் உருவானதும், மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்களுக்குப் புதியதொரு சந்தையினை இந்த மாற்றம் திறந்து விட்டது. குறைந்த அளவு ஊதியத்துடன் உழைப்பை வாங்குவதன் மூலம் இலாபத்தை அதிகரித்த மேற்கு நாடுகளின் மிகப்பெரிய நிறுவனங்கள், இந்த மாற்றத்தால் உருவான புதிய மத்தியதர வர்க்கத்தை மையமாக வைத்துத் தம் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்து மேலும் இலாபத்தைச் சம்பாதித்தன. ஒரு கல்லில் இரு மாங்காய்கள். 'கோல்கேற்' பற்பசை , கோர்ன் ஃபிளாக்௶ஸ் சீரியல்கள் தொடக்கம், ஃபோர்ட் வாகங்கள், ஜிஎம் வாகனங்கள் போன்ற வாகனங்கள் தொடக்கம், புதிய சந்தை நிலவும் நாட்டில் பேசப்படும் பன்மொழிகளில் திரைப்படங்களை மிகச்சிறப்பாக 'டப்பிங்' செய்வது தொடக்கம் இலாபத்தை அள்ளிக்குவித்தன மேற்கு நாட்டின் நிறுவனங்கள். 'மாஸ்டர் கார்ட்', 'விசா', 'அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்' என்று அத்தனை கடன் அட்டை நிறுவனங்களும் நுழைந்து விட்டன. பல்வேறு வகையான காப்புறுதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், 'மல்டி லெவல் மார்கட்டிங்' என்று அனைத்து நிறுவனங்களும் நுழைந்து விட்டன.

மேற்கு நாடுகளின் நிறுவனங்களின் பணியினைக் குறைந்த ஊதியத்தில் செய்வதற்காகப் பல தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் பூற்றீசல்களைப் போல் முளைத்தன. இவ்விதமான நிறுவனங்களில் மிகவும் உயர்ந்த ஊதியத்துடன் வேலை பார்க்கும் மக்களை மையமாக வைத்து வங்கிகள், நிதி நிறுவனங்கள் எல்லாம் வலையை விரித்தன. கையில் காசு புழங்கத்தொடங்கியதும் இவ்வகையான நிறுவனங்களில் பணி புரிவோரின் வாழ்க்கை மாறத்தொடங்கியது. மேற்குக் கலாச்சாரம் அவர்களைச் சுற்றிப் பின்னிப் பிணைந்து விட்டது. வாகனம் வாங்குவது, கார் வாங்குவது என்பவையே அவர்களது கனவுகளாகின. புதிய சூழல், புதிய வாழ்க்கை முறை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை மட்டுமல்ல மன அழுத்தத்தினையும் கூடவே கொண்டுவந்து விட்டது. சக்திக்கு மீறிய வகையில் கடன்களைப் பெறும் சூழல் உருவாகியது. கடன்களைப் பெற்று வீடுகள், வாகனங்கள் போன்றவற்றை வாங்கியவர்களுக்கு, வேலை சிறிது காலம் இல்லாமல் போனால் கூடத் தாங்க முடியாத நிலைதான். வாசலில் நின்று கடன்களை அவர்கள் மேல் திணித்த நிதி நிறுவனங்கள், வங்கிகள் இவ்விதமான இக்கட்டான நிலையில், உதவுவதில்லை. பணத்தைத் திருப்பிக் கட்டும்படி நெருக்குதல்களைக் கொடுக்கத் தொடங்கும் சூழலுருவாகும். விளைவு? குடும்பங்கள் பிளவுறுதல், தற்கொலைகள், கொலைகள் என்று பல்வேறு வகையான பக்க விளைவுகள் உருவாகும். இரவினில் தனித்துப் பெண்கள் வேலை செய்யும் சூழல்கள், அவர்களுடன் பணி புரியும் ஆண்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பினை ஏற்படுத்தும். வேலையிழத்தல் போன்ற சூழல்கள் உருவாக்கும் பொருளியற் சுமைகள் காரணமாக ஒருவருக்கொருவர் பண உதவிகள் பெறுவது, பின்னர் அதன் காரணமாக ஒருவருக்கொருவர் அநுசரித்து வாழ்வது என்று ஏற்படும் மாற்றங்கள் தம்பதியினரின் குடும்ப வாழ்வினைச் சீரழிக்கின்றன.

இன்னுமொரு விடயத்தையும் இந்நாவல் விமர்சிக்கின்றது. குழந்தைகள் மேல் புரியப்பட்டும் பாலியல் வன்முறைகள் எவ்விதம் அவர்களது வாழ்வினைச் சிதைத்து விடுகின்றன என்பதை நாவலில் வரும் கெளசிக் பாத்திரத்தினூடு ஆசிரியர் விமர்சனத்துக்குள்ளாக்குகின்றார். சிறுவயதில் ஆண் உல்லாசப்பிரயாணிகளினால், முதிய செல்வந்தப் பெண்களினால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படும் அவன் வளர்ந்ததும் இளம்பெண்களைப் பாலியல்ரீயில் வதைப்பதில் இன்பம் காணுமொரு வெறியனாக உருமாற்றமடைகின்றான். அதன் விளைவாகக் கொலையுண்டும் போகின்றான். சிறு வயதில் அவன் மிக அதிகமாகப் பாலியல் வன்முறைக்குள்ளாகியது ஆண் உல்லாசப்பிரயாணிகளால்தான். எனவே அவனது ஆத்திரம் அவ்விதமான ஆண்கள்மேல் ஏற்படாமல் எதற்காகப் பெண்கள் மேல் ஏற்பட வேண்டும் என்றொரு கேள்வி எழுவதையும் தடுக்க முடியவில்லை.

மொத்தத்தில் விநாயக முருகனின் ராஜீவ்காந்தி சாலை இவ்விதமாக உலகமயமாதலால் அடியோடு மாறுதலடைந்து, ராஜீவ்காந்தி சாலையாக மாறிய சென்னையின் மகாபலிபுரச்சாலையின் மாறுதல்களை விமர்சிக்கின்றது. உண்மையில் உலகமயமாதல் எவ்விதம் செல்வந்த நாடுகளின் இலாபத்திற்காக வளர்முக நாடுகளில் நிலவிடும் இயற்கைச் சூழலினை , விவசாயம் போன்ற தொழில்களை, சிறுவர்த்தகச் செயற்பாடுகளைச் சிதைத்து விடுகின்றது. எவ்விதம் நகர்ப்புறங்களில் செல்வச்செழிப்புள்ள பகுதிகளை உருவாக்கும் அதே சமயம், மிகவும் வறிய மக்களைக்கொண்ட சேரிகளையும் உருவாக்கி விடுகின்றது. எவ்விதம் பாலியல்ரீயிலான உளவியற் பிரச்சினைகளை உருவாக்கி, அவற்றின் தீய விளைவுகளை உருவாக்கி விடுகின்றது. இவற்றைப்பற்றியெல்லாம் விமர்சிக்கின்றது. அந்த வகையில் 'ராஜீவ்காந்தி சாலை' ஒரு குறியீடு. உலகமயமாதல் வளர்ந்துவரும், அபிவிருத்தியடைந்துவரும் நாடொன்றில் ஏற்படுத்தும் சமூக, பொருளியல், கலாச்சார மற்றும் சூழற் பாதிப்புகளை விமர்சிக்குமொரு குறியீட்டு நாவல் விநாயக முருகனின் 'ராஜீவ்காந்தி சாலை'.


டிசே தமிழனின் விமர்சனம்
(நன்றி :- டிசே தமிழன்)

அளவிற்கு அதிகமான பரபரப்புக்களும், விளம்பரங்களும் ஒரு படைப்பிற்கோ/படைப்பாளியிற்கோ எத்தகைய மேலதிக மதிப்பையும் வழங்கிவிடாது என்றும் நம்பும் ஒருவன் நான். 'ராஜீவ்காந்தி சாலை' நாவல் வெளிவந்தபோது, நாவலின் உள்ளடக்கம் குறித்து எதுவும் அதிகம் பேசாமலே அதற்கு வழங்கப்பட்ட 'வெளிச்சம்' , அந்நாவலை வாசித்துப் பார்ப்பதற்குத் தயக்கத்தைத் தந்திருந்ததால் -சில மாதங்களுக்கு முன்னும் விற்பனையிற்கு இருந்தபோதும்- அதை வாங்காமல் நகர்ந்திருக்கின்றேன்.

இப்போது அதை ஆறுதலாக வாசித்துப் பார்க்கையில், விநாயகமுருகனின் முதலாவது நாவல் என்றவகையில் கவனிக்கப்படவேண்டிய ஒரு நாவலாகவே தோன்றுகின்றது. நவீன காலத்தின் சிதறிய மனங்களை தகவல் தொழில்நுட்பப் பின்னணியில் வைத்து எழுதப்பட்டிருந்தாலும், அந்த 'வளர்ச்சி'யில் உள்ளும் புறமும் தொடர்புபட்ட மனிதர்களின் வாழ்வு பதியப்பட்டிருக்கின்றது.

இன்றைய தகவல் தொழில்நுட்பம் உலகையே உள்ளங்கையில் கொண்டுவந்திருக்கின்றது போன்ற பாவனையைத் தந்தாலும், மனித வாழ்வை இன்னுமின்னும் சிக்கலாக்கி, பல நூறு சில்லுகளாய் மனங்களை உடைத்து, ஒவ்வொருரையும் தனித்தனித் தீவுகளாகவே பெரும்பாலும் ஆக்கியிருக்கின்றது. இந்நாவலும் ஐரி(/டி) துறையில் உச்சத்திலிருப்பவர்களிலிருந்து, இதற்காய் நிலங்களை இழந்து சேரியில் வாழும் மனிதர்கள் வரை எல்லோரையும் ஊடுருவிப் பார்க்கின்றது.

பணத்திற்காகவும், அதன் நிமித்தம் வரும் வசதிகளுக்க்காகவும் பெரும்பான்மையான மனிதர்கள் இந்நாவலில் ஓடிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் விரும்பிய சிலவற்றை அடைந்தபின்னும் இன்னுமின்னும் ஆசைகள் பெருகப் பெருக எதெதெற்கோ தொடர்ந்தும் அலைந்துகொண்டேயிருக்கின்றார்கள். இலட்சங்களில் உழைத்தால் கூட, இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு எதையும்/எவரையும் திருப்திப்படுத்தமுடியாதென இன்னுமின்னும் தேடப்போய் தங்களைத் தொலைத்தும் கொள்கிறார்கள்.

மனிதர்கள் மனம் பிறழ்கிறார்கள், சுமூகமான உறவுகள் சிதைகின்றன, மாடிகளிலிருந்து குதித்து அடிக்கடி தற்கொலை செய்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்காய்ச் செய்யும் ஒவ்வொரு ப்ரஜெக்ட்டைப் போல, இவ்வாறாக இறந்துபோகும் மனிதர்களையும் எளிதில் மறந்துவிட்டு அடுத்து என்னவென அலைபாய்கின்றார்கள்.எந்த நேரத்திலும் சிதையும் மனோநிலையுள்ள மனிதர்களாய் தாங்களும் ஆகிவிடக்கூடும் என்ற நினைப்பை ஒத்திவைத்துவிட்டு வேலைக்குள் இன்னும் மூழ்குகிறார்கள்.

ஐரி நிறுவனங்கள் பற்றி அவ்வளவு பரிட்சயமில்லாதவர்களுக்கு இவ்வளவு இருட்டு நிறைந்த உலகமா அது என இந்நாவலை வாசிக்கும் ஒருவரை அச்சமூட்டக்கூடும். ஆனால் இன்றைய மெய்நிகர் உலகில் இந்நாவலில் குறிப்பிடுபவை எங்கேயும் எந்தச் சூழலிலும் நடைபெறுபவையே/நடைபெறக்கூடியவையே.

இந்நாவலிற்குள் இருக்கும் பெரும் பலவீனம் என்னவென்றால். நாவலின் எந்தக் கதாபாத்திரங்களுக்குள்ளும் ஆழமாய் இறங்கிச் செய்யவில்லை என்பதே. நாவல் முழுதும் தொடர்ந்து வரும் ப்ரணவ் செய்யும் தற்கொலை கூட ஏன் மனதை அவ்வளவாய்ப் பாதிக்கவில்லை என்று யோசிக்கவேண்டியிருக்கிறது. ஐரி துறையில் நீண்டகாலம் இருக்கும் பிரணவிற்கு ஆகக்குறைந்தது அது இயங்கும் சூழல் தெரியும் என நாவலில் தெளிவாகக் கூறப்படும்போது, சடுதியாக வேலையிழத்தலோ அல்லது மனைவியின் பிற ஆண் மீதான உறவோ , இவ்வாறான ஒரு முடிவை எடுக்க வழிவகுக்கச் செய்யுமா என்கின்ற சந்தேகம் வாசிப்பவருக்கு வரக்கூடும்.

அதுபோலவே தற்கொலை செய்யும் இரண்டு (காதல்?) சோடிகளின் தற்கொலைகளும் இருக்கின்றன. கணவன் இருக்கின்றபோதும், எல்லோருக்கும் பொதுவாய்த் தெரியக்கூடியதாய் வேலைத்தளத்தில் உள்ள ஆணோடு நெருங்கிப் பழகவும், அமெரிக்கா ஆன்சைட் போகின்றபோது அங்கு சந்திக்கும் கறுப்பின சக வேலையிட ஆணோடு உறவு கொள்கின்ற ஒரு பெண், எப்படி தற்கொலையை உடனே தேர்ந்தெடுப்பார் எனறும் கேள்விகள் வருகின்றன. ஏதோ ஒருவகையில் துணிச்சலும், எல்லாவற்றையும் சந்திக்கக்கூடிய தைரியமுள்ள ஒரு பெண் உடனே இப்படி தற்கொலையிற்கு முயல்வாரா என நாவலின் போக்கில் நின்று யோசித்துப் பார்த்தால், அவரின் முடிவில் பெரிதாய் பாதிப்பே வருவதில்லை. ஜெயமோகனோ (அல்லது யாரோ) முன்பு ஓரிடத்தில் எழுதியதுதான் நினைவிற்கு வருகின்றது, யதார்த்தத்தில் மரணம் தெருவில் வாகனம் அடித்துவிட்டாற்போல சடுதியாய் வரலாம். ஆனால் எழுத்தில் வைக்கும்போது அதற்கான காரணங்களை முன்வைத்தே எழுதவேண்டும். இல்லாவிட்டால் எத்தகைய பாதிப்பும் வாசிப்பவருக்கு வரப்போவதில்லை என்று. அவ்வாறே இந்நாவலில் பல பாத்திரங்களின் முடிவுகளும் எதையோ தவறவிட்டதாய் அந்தரத்தில் தொங்கி நிற்கின்றன.

காமத்தை, அது 'வழிதவறிய' உறவாய் இருந்தால் கூட, அருமையாக விபரித்துச் சொல்லக்கூடிய இடங்களையெல்லாம், நாவல் போர்னோ வகையாய் விபரித்தபடி போகின்றது. 'தகாத' உறவாய் இருந்தால் கூட, அந்த குற்றவுணர்வை மீறிப் பொங்கும் காமத்தை, காமத்திற்காய் எல்லாவற்றையும் துறந்துவிடத் தயாராகும் மனித மனத்தின் விந்தைகளை எல்லாம் எழுத்தில் வைக்காமல் தவறவிடப்பட்டிருக்கின்றன. மேலும் காமம் என்பது காமத்தை அப்படியே என்ன நடந்திருக்கும் என்பதைச் சொல்வதுமல்ல. உதாரணத்திற்கு 'என் பெயர் சிவப்பில்' காமத்தை விபரிக்கும் பக்கங்களை விரல் விட்டு எண்ண்விடலாம் (ஒன்றிரண்டு இடங்கள் மட்டுமே). ஆனால் நாவல் முழுதுமே காமம் மெல்லிய நீரோடையாய் ததும்பியபடி இருப்பதை வாசிப்பவர்கள் உணரும்படி ஒரான் பாமுக் எழுதியிருப்பார். ஆகக்குறைந்தது விநாயமுருகன் இந்நாவலில் அப்படி எழுதமுடியாமல் விட்டால் கூட, எரோட்டிக்கா வகை எழுத்து நோக்கியாவது நகர்ந்திருக்கலாம்.

நாவல் முழுதும் ஆண் பாத்திரங்களே தொடர்ந்து பேசியபடியிருக்கின்றன. எல்லாப் பெண் பாத்திரங்களும் வரும் ஆண் பாத்திரங்களுக்கு ஊடாக அறிமுகப்படுத்தப்படுகின்றனவே தவிர, அவை தம் கதையை/வாழ்வை சொந்தக் குரலில் கூறும் சாத்தியங்களே இல்லாமற் செய்யப்பட்டிருக்கின்றது. மேலும் பிராமணர்கள்/மலையாளிகள் மீது பொதுப்படையாக வைக்கப்பட்டிருக்கும் கருத்துக்களைத் தவிர்த்திருக்கலாம் (கவனிக்க, விமர்சனம் வைப்பதைக் கூறவில்லை).

இவை, நாவலில் வரும் எதிர்மறையான விடயங்கள் என்றாலும், இவற்றை வைத்து நாவலை நிராகரிக்க வேண்டியதில்லை. விநாயமுருகனின் முதல் நாவல் என்றவகையில் இன்னும் நிறையப் பயணிக்கப் போகின்றவரின் முதலடியென இந்நாவலை வரவேற்கலாம்.

Tuesday, December 31, 2013

ஆக நீங்கள் ஒரு எழுத்தாளனாக வேண்டுமா?

-----சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எல்லாவற்றையும் மீறி உங்களிடமிருந்து
அது பீறிட்டு வெளிவராத வரை
அதை செய்யாதீர்கள்
உங்களை கேளாமல்
உங்கள் இதயத்திலிருந்தும்,
உங்கள் மனதிலிருந்தும்
உங்கள் வாயிலிருந்தும்
உங்கள் வயிற்றிலிருந்தும்
அது வரவில்லையெனின்
அதைச் செய்யாதீர்கள்.
மணிக்கணக்கில் அமர்ந்து
கணிப்பொறித் திரையை வெறித்தபடியோ
தட்டச்சு எந்திரத்துடன் குறுக்கி அமர்ந்திருந்தோ
வார்த்தைகளை தேடிக்கொண்டிருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

பணத்திற்காகவோ, புகழுக்காகவோ
நீங்கள் அதை
செய்வதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

உங்கள் படுக்கையில்
பெண்கள் வேண்டுமென்பதற்காக
நீங்கள் அதை
செய்வதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.
அங்கு அமர்ந்து
நீங்கள் அதை
மீண்டும் மீண்டும் எழுதுவதாக இருந்தால்
அதைச் செய்யாதீர்கள்.

அதைச் செய்வது பற்றி சிந்தித்திருப்பதென்பதே
கடும் உழைப்பாகுமானால்
அதைச் செய்யாதீர்கள்.
யாரோ ஒருவரைப் போல நீங்கள் எழுத முயல்வதாயிருந்தால்
அதை மறந்துவிடுங்கள்.

உங்களுக்குள்ளிருந்து அது கர்ஜித்து வெளியேற
நீங்கள் காத்திருக்க வேண்டியிருந்தால்
பொறுமையாக காத்திருங்கள்.
உங்களுக்குள்ளிருந்து அது கர்ஜித்து வெளியேறவே
இல்லையென்றால்
அதை
மறந்து விடுங்கள் 

முதலில் உங்கள் மனைவியிடமோ
அல்லது உங்கள் பெண் நண்பியிடமோ,
அல்லது உங்கள் ஆண் நண்பரிடமோ
அல்லது உங்கள் பெற்றோரிடமோ அல்லது வேறு யாரிடமோ
படித்துக்காட்டவேண்டியிருந்தால்
நீங்கள் தயாராக இல்லை

மற்ற அத்தனை எழுத்தாளர்கள் போலிருக்காதீர்கள்
தங்களை எழுத்தாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும்
பல்லாயிரம் மனிதர்களைப் போல் இருக்காதீர்கள்

உப்புச்சப்பற்று, சலிப்பாக,
பாசாங்கு மிகுந்து
சுயகாதலால் கபளீகரம் செய்யப்பட வேண்டாம்.

உலகின் நூலகங்கள்
உங்களைப் போன்றோரால்
கொட்டாவி விட்டுதூங்கிவிட்டன.

அதில் சேராதீர்கள்
அதை செய்யாதீர்கள்

உங்களின் ஆன்மாவிலிருந்து
ஒரு ராக்கெட்டினைப் போல
அது வெளிவந்தாலொழிய

சும்மாயிருப்பது உங்களைப் பைத்தியத்தில் ஆழ்த்திவிடும்,
அல்லது தற்கொலையில்
அல்லது கொலையில் என்றால் ஒழிய
அதைச்செய்யவேண்டாம்.

உங்களுக்குள் இருக்கும் சூரியன்
உங்கள் குடலை எரித்துக்கொண்டிருந்தால் ஒழிய
அதைச் செய்ய வேண்டாம்.

நிஜமாகவே அதற்கான நேரம் வந்து விட்டால்
நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால்
அது தானாகவே செய்துகொள்ளும்
அது தொடர்ந்து செய்துகொண்டேயிருக்கும்

நீங்கள் சாகும்வரை அல்லது
அது உங்களுக்குள் சாகும்வரை

வேறெந்த வழியுமில்லை
என்றுமே இருந்ததுமில்லை.


ஆங்கில மூலம்

--------Charles Bukowski

if it doesn't come bursting out of you
in spite of everything,
don't do it.
unless it comes unasked out of your
heart and your mind and your mouth
and your gut,
don't do it.
if you have to sit for hours
staring at your computer screen
or hunched over your
typewriter
searching for words,
don't do it.
if you're doing it for money or
fame,
don't do it.
if you're doing it because you want
women in your bed,
don't do it.
if you have to sit there and
rewrite it again and again,
don't do it.
if it's hard work just thinking about doing it,
don't do it.
if you're trying to write like somebody
else,
forget about it.


if you have to wait for it to roar out of
you,
then wait patiently.
if it never does roar out of you,
do something else.

if you first have to read it to your wife
or your girlfriend or your boyfriend
or your parents or to anybody at all,
you're not ready.

don't be like so many writers,
don't be like so many thousands of
people who call themselves writers,
don't be dull and boring and
pretentious, don't be consumed with self-
love.
the libraries of the world have
yawned themselves to
sleep
over your kind.
don't add to that.
don't do it.
unless it comes out of
your soul like a rocket,
unless being still would
drive you to madness or
suicide or murder,
don't do it.
unless the sun inside you is
burning your gut,
don't do it.

when it is truly time,
and if you have been chosen,
it will do it by
itself and it will keep on doing it
until you die or it dies in you.

there is no other way.

and there never was.



நன்றி
விநாயக முருகன் 

 

Thursday, December 5, 2013

பட்ட விரட்டி



காலித் ஹுசைனி எழுதிய நாவல் The Kite Runner. ஐந்து வருடங்களுக்கு முன்பு வெளிவந்து இரண்டு கோடி பிரதிகளுக்கு மேல் விற்ற இந்த புத்தகத்தை போன வாரம் ஒபாமா படிக்க வாங்கிச் சென்ற விஷயத்தை நியூயார்க் டைம்ஸில் படித்தேன். அவர் இன்னுமா அந்த புத்தகத்தை படிக்கவில்லை என்று ஆச்சர்யமாக இருந்தது. கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேல் நியூயார்க் டைம்ஸ் - இன் சிறந்த விற்பனையாகும் நூல்களின் வரிசையில் உள்ள, உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கபட்டு, 2 கோடிக்கும் மேல் விற்பனையான நூல் இது.

தமிழில் பட்ட விரட்டி என்ற தலைப்பில் எம்.யூசூப் ராஜா மொழிப்பெயர்த்துள்ளார். அபாரமான மொழிபெயர்ப்பு. எந்த சிரமும் இல்லாமல் சல்ப்படைய வைக்காமல் ஒரே அமர்வில் படிக்க வைக்கும் மொழிபெயர்ப்பு.

கதை ஆப்கானின் காபூல் நகரில் நடக்கிறது. ஹசனின் அப்பா அலி. அலியின் மனைவி சனோபர். அவர்கள் அவர்கள் ஷியா பிரிவை சேர்ந்தவர்கள். ஹசன் பிறந்த ஐந்தாம் நாள் சனோபர் ஒரு நாடோடி கும்பலுடன் ஓடி விடுகிறாள். ஹசனின் அப்பாதான் குழந்தையை வளர்க்கிறார்.

அலி வேலை செய்யும் எஜமான் பெயர் ஆகா. ஆகா செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் மனைவியை இழந்தவர். அவருக்கு ஒரு மகன். பெயர் அமீர் (இந்த நாவலின் ஆசிரியர்). அவர்கள் பஸ்டூன் இனத்தை சேர்ந்தவர்கள்.

ஹசனும்,அமீரும் சிறுவயது முதல் எந்த வர்க்க பாகுபாடுகளுமின்றி ஒன்றாக பழகி ஒன்றாக விளையாடுகிறார்கள். பட்டம் விடுவதில் இருவரும் வல்லவர்கள். ஒருநாள் சிறுவர்கள் எல்லாம் சேர்ந்து பட்டம் விடுவது சண்டை நடக்கிறது. அந்தச் சண்டையில் ஆஸிப் என்னும் பஸ்டூன் இனச் சிறுவன் ஹசனை அடித்து வன்புணர்ச்சி செய்து விடுகிறான். அதை அமீரால் தடுக்க முடியவில்லை. பிறகு அது குறித்து அமீர் அடிக்கடி குற்ற உணர்ச்சிக் கொள்கிறான். சிறுவர்கள் அமீருக்கும்,ஹசனுக்கும் இடையே இருக்கும் நட்பில் விரிசல் விழுகிறது. பிறகு ஹசன் மீது அவன் வேலை செய்யும் வீட்டில் ஒரு திருட்டுப்பழி விழ அவனும் அவனது தந்தை அலியும் அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறார்கள்.

இதனிடையே ஆப்கானில் சோவியத் ரஷ்யாவின் இராணுவ வீர்கள் அட்டகாசம் செய்கிறார்கள். பலர் அகதிகளாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். ஆகாவும்,அமீரும் வீடு சொத்தையெல்லாம் போட்டுவிட்டு அகதியாக பாகிஸ்தான் ஓடுகிறார்கள். பிறகு அங்கிருந்து அமெரிக்கா ஓடுகிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் தங்கி காலத்தை ஓட்டுகிறார்கள். அமீர் இலக்கியம் படிக்கிறான். எழுத்தாளன் ஆகிறான். நாவல்கள் எழுதுகிறான். திருமணம் நடக்கிறது. அமெரிக்காவில் வந்து குடியேறிய காபூலில் ராணுவ ஜெனரலாக இருந்த தஹாரியின் மகள் சுரையா ஜானை காதலித்து மணம் முடிக்கிறான் அமீர்ஜான். பிறகு அமீரின் தந்தை புற்றுநோயால் மரணமடைகிறார்

இடையே ஆப்கானில் இருக்கும் ரஷ்ய படைகள் அங்கிருந்து ஓடுகிறார்கள். தாலிபான்கள் வந்து அட்டகாசம் செய்கிறார்கள். தாலிபான்கள் அட்டகாசம் செய்யும் அந்த கொடுமையான காலக்கட்டத்தில் (19 98) அமெரிக்காவிலிருந்து ஆப்கான் செல்கிறான் அமீர். அவன் ஏன் அங்கு செல்கிறான்? அங்கு தாலிபான்கள் அவனை என்ன செய்தார்கள்? ஹசன் என்ன ஆனான்? என்றெல்லாம் நாவலை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

ஒரான் பாமுக் எப்படி துருக்கியின் ஆன்மாவை எழுத்துக்குள் இழுத்துக் கொண்டு வருகிறாரோ அது போல இவர் ஆப்கானின் ஆன்மாவை இழுத்துக் கொண்டு வந்துள்ளார். இரண்டு வர்க்கங்களுக்கு இடையே இருக்கும் பிளவுகள். ஒரே மதத்தின் இரண்டு உட்பிரிவுகளுக்கு இடையே இருக்கும் பூசல்கள். மதமும், தீவிரவாதமும் எந்த புள்ளியில் இணைகிறது என்றும், ஆப்கானும்,பாகிஸ்தானும் நட்புநாடுகளாக இருந்தாலும் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சினை என்றும் அருமையாக புனைவில் கொண்டுவந்துள்ளார்.

எனது ஒரு வருத்தம் என்னவென்றால் தாலிபான்களை வளர்த்து விட்டதே அமெரிக்காதான். அந்த அரசியலையும்,அயோக்கியத்தனத்தையும் அவர் நாவலில் சொல்லியிருக்கலாம். அப்படி சொல்லியிருந்தால் இந்த நாவல் இரண்டு கோடி எண்ணிக்கையில் விற்றிருக்காது. ஒபாமாவும் வாங்கியிருக்க மாட்டார்.

பட்ட விரட்டி
காலித் ஹூசைனி
தமிழில் எம்.யூசூப் ராஜா
எதிர் வெளியீடு

Friday, July 19, 2013

பூட்டுத்திருடன்

இன்று காலை ஹாங்காங்கில் இருக்கும் எனது அலுவலக நண்பர் கெளதம் போன் செய்திருந்தார். பேஸ்புக்கில் பெண் ஐடிக்களில் வருபவர்களை பற்றி நான் சமீபத்தில் எழுதியிருந்த ஒரு பதிவை படித்து விட்டு கருத்து சொன்னார். அப்போது எங்கள் உரையாடல் எதேச்சையாக மென்பொருள் பாதுகாப்பு பற்றியும்,Fake ஐடிக்கள் பற்றியும் , குறிப்பாக நிக்கி செள பற்றியும் திரும்பியது.

"நிக்கி செள இறந்து விட்டார் தெரியுமா?" என்றார் கெளதம். எனக்கு தூக்கி வாரி போட்டது.

"எப்போ என்றேன்?"

"தெரியல. ஒரு நண்பர் சொன்னார்."
"என்னாச்சு?"

"ஏதோ படகு விபத்தாம். கடல்ல மூழ்கி பாடி கூட கெடக்கல. அதுக்கு மேல  எனக்கும் ஒன்னு தெரியாது " என்றார்.
 
நிக்கி செள (Niki Chow) வை நான் முதன்முறையாக சந்தித்தபோது அது ஒரு கோடைக்காலம். தாஜ் ஹோட்டலில் டின்னர் இடைவெளியின்போது தயங்கி தயங்கி அவரிடம் என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். ஐந்தரை அடி உயரத்தில் சின்ன கண்களுடன் ஆனால் முதல் பார்வையிலேயே மனிதர்களை கவர்ந்து இழுக்கும்படியான சிரிப்புடன் வசீகரமாக இருந்தான். தனது சொந்தகிராமத்தில் நண்பர்கள் தன்னை பூட்டுத்திருடன் என்று பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள் என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தார்.


எங்கள் அலுவலகத்தில் வருடந்தோறும் ஏதாவதொரு தொழில்நுட்ப மாநாடு நடக்கும். உலகெங்கும் இருக்கும் தலைச்சிறந்த கணினி தொழில்நுட்ப ஆட்கள் ஒரு இடத்தில் ஒன்றாக கூடுவோம். அங்கு அவர்களது அனுபவங்களை புதிய தொழில்நுட்பங்களை விவாதிப்பார்கள். அந்த வருட மாநாடு ஏப்ரல் மாதத்தில் சென்னை தாஜ் ஹோட்டலில் நடந்தது. ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் பலர் வந்திருந்து ஐபிஎம் நிறுவன மென்பொருள் தயாரிப்புகளை சந்தைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் இரண்டாம் நாள் மாநாட்டில் நிக்கி செள வந்திருந்து மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனை (Software Security Testing) என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அன்று ஐந்து பேர் மாநாட்டில் பேசினார்கள். ஆனால் நிக்கி செளதான் அங்கு எல்லாருக்கும் ஹீரோ. அவரது பேச்சின்போது நாங்கள் அனைவரும் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அமர்ந்திருந்தோம்.நிக்கி செள ஒரு எத்திக்கல் ஹாக்கர். அதாவது மின்னஞ்சல்களை உடைப்பது,பாஸ்வேர்டு திருடுவது, எங்கெல்லாம் பாதுகாப்பு சரியில்லையோ அதை கண்டுபிடிப்பது , பின்பு அந்த பாதுகாப்பு குறைபாடுகளை அறிக்கை தயார் செய்து மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கொடுப்பது. மென்பொருள் நிறுவனங்கள் உடனே தங்களிடம் இருக்கும் ஓட்டை,உடைசல்களை சரிசெய்துக்கொள்வார்கள். நிழல் உலக தாதாக்கள் போல இருக்கும் இவர்களை போன்ற ஆட்களை பெரும்பாலும் நிறுவனங்கள் வெளியில் சொல்லாது. காரணம் அவர்கள் பாதுகாப்பின் குறைபாடுகள் வெளியில் தெரிந்துவிடும். போட்டி நிறுவங்கள் இது போன்ற ஆட்களை பணத்தை காட்டி வாங்கி விடுவார்கள்.

3 Iron. கொரிய மொழியில் வெளியான ஒரு திரைப்படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கிம்கிடக் இயக்கியது. .அதில் வரும் கதாநாயகன் பூட்டிய வீடுகளாக பார்த்து அங்கு செல்வான். பூட்டை உடைப்பான். வீட்டின் உரிமையாளர் அநேகமாக வெளியூர் சென்றிருப்பார். இவன் வீட்டுக்குள் செல்வான். உரிமையாளர் வரும்வரை அந்த வீடு இவனுடையது. அந்த வீட்டினுள் சமைத்து சாப்பிடுவான். டிவி பார்ப்பான். தூங்குவான். துணி துவைப்பான். வீட்டை பெருக்குவான். பழுதான பொருட்களை சரி செய்வான். அந்த வீட்டின் உரிமையாளர் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவான். ஆனால் ஒரு பொருளை கூட திருடிக்கொண்டு செல்ல மாட்டான். வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து பார்க்கும்போது அப்படி ஒரு நாள் அங்கு வந்து போனதற்கான அடையாளம் கூட இருக்காது.        

நிக்கி செளவின் நண்பர்கள் அந்த படத்தின் கதாநாயகனுக்கு பூட்டுத்திருடன் என்று செல்லமாக பெயர் வைத்து அழைப்பார்களாம். அதே பெயரையே நிக்கி செளவுக்கும் வைத்து விட்டார்கள். அது போன்றுதான் இந்த எதிக்கல் ஹாக்கர் என்று அழைக்கப்படுபவர்கள். நிக்கி செள உலகின் டாப் டென் ஹாக்கர்களில் ஒருத்தன். உண்மையில் அவன் ஐபிஎம்மில் வேலை செய்யவில்லை. அவன் ஒரு ப்ரீலான்சர். எந்த நிறுவனம் பணம் தருகின்றதோ அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் செர்வர்களின், இணைய தளங்களின் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்த்து வேறு யாரும் ரகசியங்களை திருடாமல் பாதுகாப்பு அம்சங்களை பலபடுத்தி தருவது அவன் வேலை

செமினார் முடித்த களைப்புடன் இருந்த நிக்கி செளவுடன் அன்று அதிகம் பேச முடியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரியையும் ,தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக்கொண்டார். மறுநாள் நேரம் இருந்தால் சந்திப்பதாக சொன்னார். மறுநாள் அவரே எனக்கு போன் செய்தார். அவரது பயணத்தில் ஒரு சின்ன மாறுதல் இருந்ததால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

மறுநாள் தாஜ் ஹோட்டலில் நாங்கள் சந்தித்தபோது நிறைய பேசினோம். அவருடன் உரையாடியதிலிருந்து அவர் கிழக்கு சைனாவில் ஏதோவொரு குக்கிராமத்தில் பிறந்தவர் என்றும் ஹாங்காங்கில் கணிப்பொறிப் படிப்பை முடித்தவர் என்றும் இரண்டு ஆண்டுகள் முன்பு அவர் காதலி அவரை விவாகரத்து செய்து விட்டு போய் விட்டார் என்பது வரைக்கும் தெரிந்தது. நிக்கி செளவுக்கு சின்ன வயதிலிருந்தே புதிர்களை விடுவிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாம். பள்ளிக்கூடங்களில் நடந்த பல புதிர் அவிழ்ப்பு போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசும் வாங்கியுள்ளாராம். கல்லூரி செஸ் விளையாட்டில் சாம்பியன்ஷிப்பாம். மனித மனம் அதன் விநோதம் பற்றி அறிந்துக்கொள்ளும் சைக்கியாரிஸ்ட்டாக ஆகவேண்டுமென்பது அவரது கனவாக இருந்துள்ளது. ஆனால் தவறி போய் எப்படியோ கணிப்பொறித் துறைக்கு வந்துவிட்டதாக சொன்னார். ஆனாலும் இந்த ஹாக்கர் வேலையை நான் மிகவும் நேசிக்கின்றேன். கிட்டத்தட்ட இதுவும் ஒரு சைக்கியாரிஸ்ட் வேலை போன்றுதான் என்றார் .

நான் ஆச்சர்யமாக அவரை பார்த்தேன்.

“முதலில் விளையாட்டாக அடுத்தவர்களது மின்னஞ்சல் பாஸ்வேர்டை திருடுவதில் ஆரம்பித்தேன். பிறகு ஒருகட்டத்தில் அதில் நிபுணத்துவம் வந்து விட்டது. என்னால் சொடக்கு போடும் நேரத்தில் ஒரு மின்னஞ்சலை திருடி அவர்களது ரகசியங்களை பார்க்க முடியும். இதுவரை ஒரு லட்சம் மின்னஞ்சல்களை உடைத்திருப்பேன் என்றார்.எத்தனையோ பாதுகாப்பு பூட்டுகள் மிகுந்த இணைய தளங்களை ஒரு நிமிடத்தில் உடைத்துள்ளேன்” என்றார்.

“ஆனால் ஒருமுறை கூட நான் மற்றவர்களது ரகசியங்களை வெளிப்படுத்தியதில்லை. எதிக்கல் ஹேக்கர் இல்லையா?” என்று சொல்லி சிரித்தார்.

“இது வரை எது மாதிரியான தளங்களை உடைத்துள்ளீர்கள்?” என்றேன்.

ஒரு பிரபல வங்கியின் பெயரை சொன்னார். பிறகு ஒரு இராணுவ வெப்சைட்டின் பெயரை சொன்னார். ஒரு மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டார். ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை சொன்னார் அவர் அடுக்கிக்கொண்டே போக எனக்கு பிரமிப்பாக இருந்தது.

“தனிநபர்களது மின்னஞ்சல்களை உடைத்து பார்த்ததுண்டா?” என்று கேட்டேன்.


“நிறையவே. தனிநபர்கள் மின்னஞ்சல்களில் பெரும்பாலும் செக்ஸ் ஸ்காண்டல் வீடியோக்கள், பெண்கள் அவர்களது காதலர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நிர்வாண வீடியோக்கள், வங்கி நிதிநிலை அறிக்கைகள் என்று எதெல்லாம் அவர்கள் ரகசியமென்று நினைக்கின்றார்களோ அதெல்லாம் பார்த்துள்ளேன். பொது வாழ்க்கையில் உத்தமர்களாகவும், புனிதர்களாகவும் தங்களை காட்டிக்கொள்ளும் எத்தனையோ பிசினஸ் மேன்கள், அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் எல்லாருமே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு அழுக்குடன் நிர்வாணமாக நிற்கின்றார்கள் என்று தெரிந்துக்கொள்ள அவர்களது மின்னஞ்சலை உடைத்தால் போதும். உலகப் புகழ்பெற்ற ஒரு பிரபல மதகுருமாரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் அந்த மடத்தில் இருக்கும் பெண் சீடர் ஒருத்திக்கு காம ரசம் சொட்ட சொட்ட அனுப்பிய கடிதத்தை படித்துள்ளேன். ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவருக்கு க்யூபாவில் எத்தனை வங்கிகளில் கணக்கு உள்ளது என்ற விவரம் தெரிந்தது. இவ்வளவு ஏன் இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு அரசியல் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் தனது சொந்த நாட்டில் எப்படி இனக்கலவரத்தை தூண்டி விடுகின்றார் என்று தெரிந்தது. நான் தெரிந்துக்கொண்ட ரகசியங்களை வைத்து ஒரு போதும் நான் பிளாக் மெயிலோ பணம் பறித்ததோ இல்லை. எனது தொழில் மனிதர்களை பார்த்து ஏ அற்ப மனிதர்களே. இந்த உலகத்தில் ரகசியம் என்று எதுவும் இல்லை. நீங்கள் இந்த உலகத்தில் ரகசியமாக செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் யாரோ ஒருத்தர் கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றார் . எனவே ரகசியங்களை பாதுகாக்கவும் என்று அவர்களுக்கு வலியுறுத்துவதுதான்” என்றார்.

எனது தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்பியபடியே சொன்னார்.

"உன்னிடம் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. முதல் தேர்வில் ஒரு திறந்து கிடக்கும் அறை முழுவதும் தங்கம் இருக்கின்றது. அடுத்து பூட்டிய அறையொன்றில் என்ன இருக்கின்றது யாருக்கும் தெரியாது. நீ எதை தேர்வு செய்வாய்? எனது பதிலுக்கு காத்திராமல் அவரே சொன்னார். நான் பூட்டிய அறைகளையே தேர்வு செய்வேன். காரணம் நான் பூட்டுகளை திருடவே விரும்புகின்றேன் . எனக்கு தேவை மனிதர்களின் ரகசியங்கள் அல்ல. நான் அதை விரும்புவனும் இல்லை. எனக்கு தேவை பூட்டுகள்தான். பூட்டுகளின் மீதான வேட்கையே என்னை அதை திறந்து பார்க்க வைக்கின்றது."

தேநீர் குடித்தபடியே ,"Fake ஐடிகளிலிருந்து வரும் நபர்களை உங்களால் கண்டு பிடித்து அவர்களது ரகசியங்களை எடுக்க முடியுமா?" என்றேன். கேட்ட பிறகுதான் அப்படி ஒரு கேள்வியை கேட்டே இருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

“நானே எனது ஹேக்கிங் ஆய்விற்காக நூற்றுக்கணக்கான Fake ஐடிக்களை உருவாக்கி வைத்துள்ளேன்" என்றார்.

"இணையம் என்று வந்த பிறகு ஒரிஜினல் என்ன போலி என்ன. எல்லாத்தையும் உடைத்து பார்க்க முடியும். எத்தனையோ அரசியல்வாதிகள் ,எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வைத்துக்கொண்டு தங்களுக்கு தாங்களே பாராட்டி எழுதிக்கொள்வதை நான் கண்டுபிடித்துள்ளேன். ஒரே நபர் ஆண் பெயரிலும், பெண் பெயரிலும் வந்து தனக்குதானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்வதையும் பார்த்துள்ளேன் . அவர்களது பைத்தியக்காரதனத்தை நினைத்து எனக்குள் சிரித்துக் கொள்வேன் . நீங்கள் இணையத்தில் செய்யும் எல்லா செயல்களையும் யாரோ ஒருவர் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார். ஒருவேளை அவருக்கு உங்கள் தகவல்கள் தேவைப்பட்டிருக்காது. அதனால் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்கலாம். மற்றபடி ரகசியம் என்று எதுவும் இங்கு இல்லை” என்றார்.


சற்று நேரம் இருவரும் எதுவும் பேசாமல் எங்கள் சிகரெட்டுகளை மவுனமாக புகைத்து கொண்டிருந்தோம்.

"மனிதர்கள் விசித்திரமானவர்கள். கேவலம் ஒரு அக்றினை பொருளை நம்பி தங்கள் ரகசியங்களை ஒப்படைக்கின்றார்கள். ஆனால் சக மனிதர்களோடு உரையாட சிநேகம் கொள்ள நட்பு பாராட்ட தயங்குகின்றார்கள். பிம்பங்களோடு நாள் முழுவதும் கலவிக்கொண்டு திரிகின்றார்கள். எப்படி நேரில் பார்க்கும் ஒரு நடிகையோடு திரையில் தெரியும் நடிகை ஈர்க்கின்றாரோ அது போல சதா சர்வ காலமும் இணைய பிம்பங்களில் மூழ்கி திளைக்கின்றார்கள். எப்படி நார்சிஸஸ் அரசன் தண்ணீரில் விழுந்த தன் பிம்பத்தை பார்த்து தன்னைத்தானே காதலித்து கடைசியில் இறந்து போனானோ அது போல ஒரு நாள் இந்த மனிதர்களும் மடிந்து போவார்கள் பாருங்கள்" என்றார்.


நிக்கி செளவிடமிருந்து எங்களது மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனைகள் பிராஜக்ட் குறிப்புகள் சிலவற்றின் ஆலோசனைகளையும் சில விளக்க குறுந்தகடுகளையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்     
 
விடைபெறும்போது அவரிடம், "இணையத்தில் உங்களால உடைக்க முடியாத பூட்டே இல்லையா?" சிரித்தபடியே கேட்டேன்.      

"இந்த உலகத்தில ரகசியம் என்றும் எதுவுமில்லை. எல்லா ரகசியங்களும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். என்னால இன்னமும் திறக்க முடியாத பூட்டு எதுனாச்சும் இருக்குமென்றால் அது மனிதர்களின் இதயம்தான். ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் ஒளிஞ்சுக்கிட்டிருக்கு. என்னால ஒரு போதும் நிஜ வாழ்க்கையில வாழும் மனிதர்களின் இதய பூட்டை திறக்க முடியுமென்று தோன்றவில்லை."
 
இன்று காலையில் நிக்கி செள இறந்து விட்டார் என்ற தகவலை கேட்டதிலிருந்து மனதுக்குள் ஏனோ ஒரு இனம் புரியாத தவிப்பு. வழக்கமா இருபத்தி நாலு மணி நேரமும் இணையத்திலேயே செலவு செய்யும் என்னால் இன்று பேஸ்புக் பக்கம் கூட செல்ல முடியவில்லை .

இந்த உலகின் எத்தனையோ மனிதர்களின் ரகசியங்களை கண்டுபிடித்த மனிதன் சர்வசாதாரணமாக பெயர் தெரியாத தீவொன்றில் படகு விபத்தில் உயிரிழந்து அவன் உடல் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனதை வாழ்க்கையின் முரண் நகையென்று சொல்லாமல் என்ன சொல்வது? அவன் உயிர் இழந்தது அவனது முன்னால் காதலிக்கு தெரியுமா? கடைசியாக அவன் எந்த மனிதனது இதயப்பூட்டை உடைத்து பார்க்க முயன்றிருப்பான்? ஒருவேளை 3 Iron படத்தில் வரும் கதாநாயகன் போல விர்சுவல் உலகில் கரைந்து போயிருப்பானா? இங்கேயே சுற்றிக்கொண்டு நமக்கே நமக்கு மட்டும் தெரியுமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நமது Fake ஐடிக்களின் பாஸ்வேர்டுகளை உடைத்து நாம் ஒவ்வொருவரும் இணையவெளியில் நிகழ்த்தும் அபத்தங்களை,சண்டைகளை ,ஆபாசங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பானா? தெரியவில்லை. எதுவுமே பிடிபடவில்லை.

Thursday, July 18, 2013

காந்தம்

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் ஒரு டீக்கடையில் தம் அடித்துக் கொண்டிருந்தேன். எனது பக்கத்தில் ஒரு விநோதமான நபர் வந்து நின்றார். அழுக்கு சட்டை அழுக்கு கட்டம் போட்ட லுங்கி இடது கையில் ஒரு பெரிய துணிப்பை... இருந்தது. வலது கையில் ஒரு நீண்ட பிளாஸ்டிக் கம்பு இருந்தது. கம்பின் ஒரு முனையில் பெரிய சைஸ் கைமுறுக்கு போல ஒரு வஸ்து இருந்தது. அதில் சில ஆணிக்கள், ஸ்டீல் ஸ்க்ருக்கள், சின்ன சாவியொன்றும் கூட கொஞ்சம் இரும்புத்துகள்களும் ஒட்டிக்கொண்டிருந்தன.

அந்த பிளாஸ்டிக் குழாயை பார்க்க விசித்திரமாக இருந்தது. அவரிடம் என்னங்க அதுன்னு கேட்டேன். இது காந்தம்ங்க என்றார்.

"காந்தமா?'

"ஆமாங்க. இந்த கம்பை பிடிச்சிக்கிட்டு தரையில் காந்தத்தை வைத்து நடந்துக்கிட்டே இருந்தா மண்ணுல கிடக்குற ஊசி,ஆணி,இரும்பு சாமான்கள் எல்லாம் இதில் ஒட்டிக்கும்"

"இதை வச்சு என்ன செய்வீங்க?"

"இந்த மாதிரி இரும்புகளை சேகரிச்சு எடைக்கு போட்டா காசு கிடைக்கும்" என்றார்

"அப்படியா எவ்வளவு கிடைக்கும்?" என்றேன் ஆர்வமாக

"அது கிடைக்குங்க. எடைக்கு போட்டா ஒருநாளுக்கு ஐம்பதும் கிடைக்கும். பத்தும் கிடைக்கும். சில நேரம் ஒண்ணுமே கிடைக்காது. சில நேரம் இரும்பு சாமான்கள் எதுவும் கிடைக்காது. ஆனால் பணம் செயின் கூட எதுன்னா கீழே கிடக்கும்"

"அது சரி ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இந்த வேலையை செய்யுறீங்க?"

"காலையில ஆறு மணிக்கு போரூர் சிக்னலாண்ட நடப்பேன். அப்படியே விருகம்பாக்கம் நெசப்பாக்கம் ,கேகேநகர்ன்னு நடந்துக்கிட்டே இருப்பேன். சாயங்காலம் வரைக்கும் இந்த காந்தத்துல என்ன ஒட்டுதோ அதை இந்த பைக்குள்ள போட்டுக்குவேன். ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் இதுங்கள காயலான் கடையில போட்டுடுவேன்"

அவர் டீயை குடித்து விட்டு ஏற்கனவே பாதி குடித்து மிச்சமிருந்த ஒரு பீடித்துண்டை சட்டைப் பாக்கெட்டில் இருந்து பற்ற வைத்தார்

"உங்களுக்கு குடும்பம் இருக்கா?".கேட்டேன்

"சம்சாரம் இருக்குங்க" என்றார்.

"அவங்களும் இந்த வேலையைத்தான் செய்யுறாங்களா?" கேட்டேன்.

"இல்லீங்க. அவங்க வடபழனி சிக்னல்ல நோட்டு ,பென்சில் ,காது கொடயுற குச்சி, கார் தொடைக்கற துணியெல்லாம் விக்கறாங்க" என்றார்.

"உங்க வீடு போரூரா?" கேட்டேன்.

"வீடா தமாஷ் செய்யாதீங்க தம்பி. எங்களுக்கெல்லாம் வீடு இல்ல. நாங்க இப்படியே பகல் புல்லா ரோட்டுல சுத்திக்கிட்டு இருப்போம். நைட்டு பத்து பன்னிரண்டு ஆனா பிளாட்பாரம் ஓரமா துணியை விரிச்சு போட்டு படுத்துக்குவோம்" என்றார்

"எப்படிங்க பொண்டாட்டிய வச்சுக்கிட்டு ரோட்டுல குடும்பம் நடத்துறீங்க?"

"ஆமா நாங்க என்ன ஊர் மெச்ச கண்ணாலமா கட்டிக்கிட்டோம். அவ எந்த ஊர்ன்னே எனக்கு தெரியாது. சால்னா கடையில பார்த்தேன். கழுதைய புடிச்சிருந்துச்சு. சேர்த்துக்கிட்டேன்"

"பிளாட்பாரத்துல படுக்கறது கஷ்டமா இல்லீங்க?"

"என்ன செய்யுறது? பழகிடுச்சு. குளிக்கறது .மலம் கழிக்கறது. சம்சாராத்தோட படுக்கறது எல்லாமே ரோட்டுலதாங்க" என்றார். ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் டீயை குடித்தபடியே அவரை பார்த்தேன்.

"இவ்வளவு வெவரம் கேக்குறீங்களே. நீங்க பத்திரிக்கை ஆளா? போட்டோ புடிப்பீங்களா. எதுனா காசு தருவீங்களா ?"

"நான் பத்திரிக்கை ஆளு இல்லீங்க. பேஸ்புக்குல எழுதறவன்"

"ஓ புக்கு எழுதுறவரா?"

ஙே........

"நைட்டுல ரோட்டுல படுக்கறது சிரமமா இல்லீயா?". திரும்ப கேட்டேன்.

"நைட்டு வர்ற இந்த போலீஸ்காரங்கதாங்க தொல்லை செய்யுறாங்கா. கையில இருக்கற அஞ்சு பத்தை பிடுங்கிட்டு போயிடறாங்க." என்றார்.

"உங்ககிட்டேயுமா" என்றேன் சிரித்தபடியே.

"ஆமா. இந்த மாதிரி ரோடு ரோடா காந்தம் வச்சிக்கிட்டு இரும்பு சேகரிக்கறீங்களே. இந்த வேலையை எப்படி ஆரம்பிச்சீங்க?"

"முன்னாடி பிச்சைதான் தம்பி எடுத்துகிட்டிருந்தேன். என்னோட தோஸ்துதான் இப்படி ஒரு தொழிலை கத்து கொடுத்தான்" என்றார்

"அப்ப உங்கள போல நிறைய பேரு இந்த காந்தத்தால இரும்பு எடுக்கற தொழிலை செய்யுறாங்களா?" கேட்டேன்

"ஆமாங்க. சென்னையில எனக்கு தெரிஞ்சு அம்பது பேர் இந்த வேலையை செய்யுறாங்கன்னு நினைக்கின்றேன்"

சற்று நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

"முன்ன மாதிரிவீட்டுகாரங்க இல்லிங்க. நாங்க மெயின் ரோடாத்தான் போய் இரும்பு எடுக்கறோம். வீடு இருக்கற தெருவுக்குள்ள போனா இரும்பு திருடறோம்னு சொல்லி அடிச்சு தொரத்துறாங்க" என்றார்.

"போன வாரம் கூட ஒரு தெருல இந்த குச்சிய வச்சுக்கிட்டு நடந்து போய்கிட்டிருந்தேன். இந்த காந்தம் அவங்க வீட்டு இரும்பு கேட்டுல ஒட்டிக்கிச்சு. அந்த வீட்டமா என்னை திருடன்னு நெனைச்சு தெரு ஆளுங்க என்னை பிடிச்சு போலீஸ்ல கொடுத்துட்டாங்க. கால்ல ரொம்ப அடிச்சுட்டாங்க. அதான் தாங்கி தாங்கி நடக்குறேன்" என்றார்

டீக்கடையிலிருந்து கிளம்புபோது கவனித்தேன். அவர் கையில் இருந்த காந்தக்குச்சியில் என்னனவோ விநோதமான இரும்பு சாமான்கள் எல்லாம் ஒட்டியிருந்தன. அவரது காந்தம் கேட்டில் மாட்டிக்கொண்டபோது அந்த வீட்டம்மா ஓடிவந்ததை கற்பனை செய்து பார்த்தேன். மனித இதயம் இரும்பால் ஆனதுன்னு சொல்றாங்களே. ஒருவேளை அது அவர் கையில் இருக்கும் காந்தக்குச்சியில் ஒட்டியிருக்குமா என்று கவனித்தேன். அது தெரிந்துதான் அந்தம்மா பயந்து போய் ஓடிவந்து போலீசில் சொல்லியிருக்குமோ?

சிரிப்பாக இருந்தது.

Saturday, June 29, 2013

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் நாவல்களை படிக்க வேண்டும்? நான் ஏன் கதை,கவிதை, கட்டுரைகளை வாசிக்க வேண்டும்? நான் ஏன் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவருக்கு என்ன பதிலளித்தேன் என்று பிறகு சொல்கின்றேன்.

புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா என்று என்னைக் கேட்டால் கண்டிப்பாக இருக்க முடியும் என்றே பதில் சொல்வேன். பல்லே விளக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? குளிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? மலம் போய்விட்டு கழுவாமல் வர முடியாதா என்ன? கண்டிப்பாக சாத்தியம்தான். இதெல்லாம் சாத்தியம் என்னும்போது புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாதா என்ன? மேலே சொன்னவை எதுவும் ஒரு உயிர் வாழ்தலின் அத்தியாவசிய செயல்களில் இல்லை.

இங்குதான் உயிர் வாழ்வதற்கும்,உயிர் பிழைப்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டியது உள்ளது. உயிரின் அடிப்படை உணவு உண்பதும் (வேட்டை) , இன்னொரு உயிரை உற்பத்தி செய்வதும்(கலவி). உயிர் பிழைக்க இந்த இரண்டை செய்தால் போதும். இதைத்தான் விலங்குகள் இன்னமும் செய்து வருகின்றன. இதிலிருந்து படிப்படியாக முன்னேறி வந்ததே மனித நாகரீகம். மனிதனின் அடிப்படை குறிக்கோளும் உயிர் பிழைப்பதே. இருந்தாலும் இந்த உயிர் வாழும் வரை அவனுக்கு மேலும் சில சொகுசு வசதிகளும் , என்டர்டெயின்மெண்ட்களும் தேவைப்பட்டன. தலைக்கு கையை மடித்து வைத்துக் கூட அப்படியே உறங்கி விடலாம். ஆனால் மனிதன் தலையணையை கண்டுபிடித்தான். வாழ்க்கையை ருசியாக்கி கொள்ள என்டர்டெயின்மெண்ட்களை கண்டுபிடித்தான். தனது வேட்டைக் களைப்பை போக்கி மறுநாள் வேட்டைக்கு புத்துணர்வோடு கிளம்ப முதல் நாள் இரவு குடித்து விட்டு உறங்கினான். குடிக்கும்போது நடனம் ஆடினான். நடனம் ஆட முடியாதவர்கள் கூட இசைக்கருவிகளை இசைத்தார்கள். வேட்டைக்கு போன கதையை சிறுவர்களுக்கு சொன்னார்கள். தங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு சொன்னார்கள். பிறகு இவை கலை, இலக்கியமாக, நாடகமாக , கவிதையாக ,பாடல்களாக மாறி மாறி இன்று டிவி, சினிமா என்று வந்து நிற்கின்றது. எல்லாமே ஒரு மனிதனால் இன்னொரு மனிதனின் கதையை சொல்லுறதுதான். புத்தகங்கள் படிக்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழும் பலருக்கு ஏன் சினிமா பார்க்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழமாட்டேங்குது என்று தெரியவில்லை. சினிமா பார்க்காமல் கூட இருக்க முடியும்தானே? 

ஆனால் புத்தகங்கள் படிப்பதாலேயே ஒருவருக்கு எல்லாம் தெரிந்துவிடுமா என்றால் அதுவும் யோசிக்க வைக்கும் கேள்விதான். வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாமே தெரிந்து விடாது. நமக்கு தெரியாத விஷயங்களை மற்றவர்களது வாழ்க்கை அனுபவங்கள் ஊடாக தெரிந்துக் கொள்ளலாம். அது எந்த பார்மேட்டில் கிடைத்தாலும் சரிதான். சினிமா பார்மேட்டை விட புத்தகங்கள் வழியாக கொஞ்சம் அதிகப்படியான வாழ்பனுபவம் கிடைக்கும். அதை விட நேரடியாக வாழ்க்கையை வாழ்ந்தே பார்த்து விட்டால் இன்னும் உத்தமம். புத்தகங்களே படிக்காத எத்தனையோ விஷயம் தெரிந்த ஆட்களை எங்கள் ஊரில் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாருமே வாழ்க்கையிலிருந்து விஷயத்தைக் கற்றுக் கொண்டவர்கள். நீங்கள் அப்படிப்பட்ட மேதைகள் என்றால் உங்களுக்கு புத்தகங்கள் தேவைப்படாது.


ஒரு பொடியன் பள்ளிக்கூடம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தரையை பார்த்துக்கொண்டே நடந்து வந்தவன் கண்ணில் ஒரு கசங்கிய பழைய பத்து ரூபாய்த் தாள் தட்டுப்பட்டது. சிறுவன் சந்தோஷமாக அந்தப் பத்து ரூபாயை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அன்றிலிருந்து அந்தப்பையன் எப்போது சாலையில் நடந்தாலும் தரையைப் பார்த்துக் கொண்டே நடக்க ஆரமபித்தான். இப்படியே நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப்பையன் வளர்ந்து முதியவர் ஆகி இறந்தும் விட்டான். இந்த நாற்பது வருடங்களில் அந்தப்பையன் தரையைப் பார்த்துக்கொண்டே நடந்ததில் பத்து நூறு ரூபாய் தாள்கள் , பத்து ஐம்பது ரூபாய் தாள்கள் , இரண்டு ஐநூறு ரூபாய் தாள்கள், பிறகு கொஞ்சம் சில்லறை காசுகள் , ஒரு தங்க மோதிரம், ஒரு வெள்ளி செயின் என்று மொத்தமாக ஒரு பத்தாயிரம் மதிப்புள்ள சொத்து அவனுக்கு கிடைத்ததாம். ஆனால் இந்த நாற்பது வருடங்களில் அவன் வானத்தை ஒருநாள் கூட பார்த்ததில்லை. இந்த நாற்பது வருடங்களில் அவன் இழந்தது கிட்டத்தட்ட ஆயிரம் முழுநிலவுகள், பதினைந்தாயிரம் சூரிய உதயம், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். இரவில் வானம் என்ன நிறமென்று கூட அவனுக்கு மறந்துப்போனது. இலையுதிர் கால மரங்கள் எப்படி இருக்குமென்று மறந்துப்போனான். அணில்கள் எப்படி கிளைகளில் தாவுகின்றன என்று தெரியாது. கிளியின் நிறம் என்னவென்று தெரியாது. பனித்துளிகள் வானில் இருந்து இறங்குவதை கவனிக்க தவறிவிட்டான். இந்த நாற்பது வருட வாழ்க்கையில் ஒவ்வொரு பருவகாலத்திலும் மரங்களில் என்ன நிறப்பூக்கள் பூக்கின்றன என்று அவனுக்கு தெரியாமலேயே போனது.

நான் அன்றாடம் வேலைக்கு செல்கின்றேன். நிறைய பணம் சம்பாதிக்கின்றேன். எனது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன் நான் ஏன் நாவல்கள்,இலக்கியம் படிக்க வேண்டும்? நான் ஏன் சக மனிதர்களின் வாழ்க்கையை கவனிக்க வேண்டுமென்று ஒரு நண்பர் கேட்டாரல்லவா? அவருக்கு நான் சொன்ன கதைதான் இது

Thursday, February 17, 2011

நினைவெனும் கொடுஞ்சுமை



கடந்த வருடம் “என் பெயர் சிவப்பு” நாவலுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஜி.குப்புசாமி அவர்கள் எனக்கு ஒரு நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு மரியோ வர்கஸ் யோசா நாவல்களை மொழிபெயர்க்கும்படி வேண்டுகோளுடன் பதில் அனுப்பினேன். அவர் ஜான்பான்வில்லின் புக்கர் விருது நாவலை தற்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாக பதிலனுப்பினார். இந்த வருட புத்தககண்காட்சியில் வாங்கப்படவேண்டிய பட்டியலில் “கடல்” என்ற இந்த நாவலையும் குறித்துக்கொண்டேன்.

கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டு காரணம். ஒன்று ஜான்பான்வில். அவரது நாவல்களின் நடை கொஞ்சம் புரிந்துக் கொள்ள சிரமப்பட வைக்கும். இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல ஜான்பான்வில்லின் எழுத்துநடை மர்மமான வார்த்தைகள், அசந்தர்ப்பமான சமயங்களில் எதிர்பாராத விநோத உவமைகள் என்று உரைநடையை அசாத்திய தளத்திற்கு கொண்டு செல்லும். மொழிபெயர்ப்பு இருந்தால் இலகுவாக படிக்கலாம். கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டாவது காரணம். ஜி.குப்புசாமி. "என்பெயர் சிவப்பு" நாவல்,ஹாருகி முரகாமி எழுத்துக்களை அருமையாக மொழிபெயர்த்திருந்தார். சில மொழியாக்கம் கடமுடாவென்று பயமுறுத்தும். சில்வியா பிளாத்தின் கவிதைகளை அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் எளிமையாக புரிந்துக்கொள்ளலாம். நாகார்ச்சுனன் மொழிபெயர்ப்பில் கவிதைகளை படித்தால் அவ்வளவுதான். ஆனால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு தமிழில் படிக்க சிரமப்படாமல் இருக்கும். அதேநேரம் மூலப்பிரதியின் கலையமைதி கெடாமல் இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விசேஷ கவனம் பெற்று பலரால் பாராட்டப்படுகிறது. இந்நாவலில் அவரது உழைப்பு தெரிகிறது. இந்ந்நாவலின் மொழிப்பெயர்ப்புக்காக அவர் அயர்லாந்து பயணம் செய்துள்ளார். இந்நாவலில் வரும் புற உலகின் சித்தரிப்புகள், கடல் அருகாமை நிலக்காட்சிகள் நுட்பமாக அமைய அவரது பயணம் உதவியுமுள்ளது.

இனி நாவலைப்பற்றி:-

மேக்ஸ் மார்டன் என்னும் வரலாற்று ஓவியர் அவரது மனைவி அன்னா கேன்சரால் இறந்தபிறகு ஒரு கடற்கரை கிராமத்திற்கு செல்கிறார். மேக்ஸ் மார்டன் சிறுவயதில் கோடை விடுமுறையை கழிக்க அடிக்கடி அந்த கடற்கரைக்கு செல்வதுண்டு. அந்த கடற்கரை யிலிருந்தபடி தனது கடந்தகால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வதுதான் நாவலின் பின்புலம். சிறுவயதில் கடற்கரைக்கு ஒரு பணக்கார ஐரீஷ் குடும்பம் விடுமுறையை கழிக்க வந்துள்ளது. மேக்ஸ் மார்டன் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்மணியையும் அவளது மகளையும் சந்தி த்து பழகுகிறார்.. அந்த பெண்மணி மிசஸ் கிரேஸ். அவளது மகளின் பெயர் க்ளோயி. பதின்ம பருவத்தில் எல்லா சிறுவர்களுக்கும் வருவது போல மேக்ஸ் மார்டனுக்கு மிசஸ் கிரேஸ் மீது ஒருவித பால் கவர்ச்சி வருகிறது. சிலநாட்களிலேயே அது களைந்து அவள் மகள் க்ளோயி மீது காதல் ஏற்படுகிறது. மேக்ஸ் மார்டன் சிறுவயதில் சந்தித்த அந்த இரண்டு பெண்களையும் , பால்யகால அனுபவங்களையும், அந்த இரண்டு பெண்களையும், தன் மனைவி அன்னா, மகள் க்ளேர் பற்றிய நினைவுகளையும் மாற்றி,மாற்றி அசைபோடுகிறார். கிட்டத்தட்ட தமிழில் ஆதவன் நாவல்களில் வருவது போல மனதின் உள்அடுக்குகளிலேயே நாவலின் கதை பிரயாணப்படுகிறது. ஏழ்மையான பிண்ணனியிலிருந்து வரும் மேக்ஸ் மார்டன் பணக்கார ஐரீஷ் குடும்பத்துடன் பழகும்போது அவர்களுக்குள் சமூக அந்தஸ்துகள் எப்படிபட்ட முரணையும், உறவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதையும் நாவல் நுட்பமாக சொல்கிறது. பால்யகாலத்தில் க்ளோயிடம் காதலில் விழும்போதும் சரி. மனைவி அன்னாவிடம் குடும்பம் நடத்தும்போதும் சரி. மேக்ஸ் மார்டனுக்கு இந்த பொருளாதார சமூக அந்தஸ்தை தாண்டி இயல்பாக பழகுவது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதி முழுக்க இதை உணர முடியும். நாவலின் முற்பகுதியில் மிசஸ் க்ரேஸை ஒரு சராசரி பெண்மணியாக ஜான்பான்வில் காட்டுகிறார். இதை மாக்ஸ் மார்டன் அவரது நினைவுகளை சொல்வதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டாம் பகுதியில் மிஸ்டர் க்ரேஸுக்கும் ரோஸுக்கும் இடையில் இருக்கும் காதலை மிசஸ் க்ரேஸ் மிக இயல்பாக எடுத்துக்கொள்வது சற்று குழப்பமாக இருக்கிறது. மனிதன் வயதாக வயதாக அதிகமாக பால்யகால நினைவுகளை அசைபோடுகிறான். இறக்கும் தருவாயில் பால்யகால நினைவுகளை அசைபோடுவதன் மூலம் கடந்த காலத்துக்கு சென்று ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்கிறான். காலத்தை கயிறு கட்டி பின்னுக்கு இழுத்துச் செல்வதன் மூலம் வாழ்வை நீட்டிக்க முயற்சி செய்கிறான். ஆனால் நிகழ்கால நினைவுகள் அவ்வபொழுது வந்து கடந்தகால நினைவுகளை முன்னுக்கு தள்ளி அவனை சாவுக்கு பக்கமாக தள்ளிவிடுகிறது.இந்த நாவல் முழுக்க ஒரு மனிதனின் நினைவுகள்.நினைவுகள்.நினைவுகள் மட்டுமே. மேக்ஸ் மார்டனுக்கு நினைவுகள் சோகத்தை தருகின்றன. வலியை அதிகமாக்குகிறது. அவர் நினைவுகளை உதற முயற்சிக்கிறார். முடியவில்லை. மனிதன் இறக்கும்வரை அவனது நினைவுகள் இருந்துக்கொண்டே இருக்கும். நினைவெனும் கொடுஞ்சுமையை மனிதனால் ஒருபோதும் உதறித்தள்ள முடியாது. ஒருவேளை அவன் இறந்துப்போனாலும் அவன் வேறு யாராவது உயிரோடு இருக்கும் இன்னொரு மனிதனின் நினைவுகளை வந்து நிறைப்பான்.

நாவலிலிருந்து எனக்கு பிடித்த சில சில வரிகள்:-

“இறந்தவர்களை நாம் இறக்கும்வரைதான் சுமக்கிறோம். அதன்பின் நாம் சிலகாலம் சுமக்கப்பட்டு வருவோம். பின் நம்மை சுபப்பவர்கள் அவர்களுக்கான நேரம் முடிந்து சாய்ந்தபிறகு என்னைப்பற்றிய ஞாபகத்தீற்றலே இல்லாத எண்ணத்தொலையாத தலைமுறைகள் தொடர்ந்து வரும். அன்னாவை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எங்கள் மகள் க்ளேர் அன்னாவை நினைவில் வைத்திருப்பாள். பிறகு க்ளேர் மறைந்துவிடுவாள். அப்போது அவளை நினைவில் வைத்திருப்பவர்கள்தான் இருப்பார்கள். எங்களை நினைவில் கொண்டிருப்பவர்கள் இருக்கபோவதில்லை. அதுதான் எங்களது இறுதி கரைவாக இருக்கும். எங்களுடையது ஏதாவது மிச்சம் இருக்கலாம். மங்கியிருக்கும் ஒரு புகைப்படம். ஒரு முடிக்கற்றை. சில விரல் ரேகைப் பதிவுகள், நாங்கள் இறுதி மூச்சைவிட்ட அறையில் சிதறியிருக்கும் சில அணுத்துகள்கள். ஆனால் நாங்கள் இருப்பதும் இருந்ததும் எப்போதுமே நாங்களாக இருக்க முடியாது. மரித்தவர்களின் மக்கிய புழுதிதான் கடைசியில்”


நாவல் ஆசிரியரைப் பற்றி:-

ஜான்பான்வில் ஐரீஷ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கடல் நாவல் 2005 -ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்றது. இதுவரை பதிமூன்று நாவல்களை எழுதியுள்ளார். பலமுறை புக்கர் பரிசுக்கு இவரது நாவல்கள் கதவைத்தட்டி கடைசியில் கடல் நாவல் ஜெயித்துள்ளது. சக எழுத்தாளர்கள், விமர்சகர்களோடு ஒத்துபோகாத மனநிலையிலேயே இயங்கி வரும் ஜான்பான்வில்லை தான் அயர்லாந்து சென்றபொழுது சந்திக்கவே முடியவில்லையென்று நாவலின் முன்னுரையில் ஜி.குப்புசாமி குறிப்பிடுகிறார். அவர் சொல்வது போல ஜான்பான்வில் தொட்டாற்சிணுங்கியாகத்தான் இருக்க வேண்டும். அல்லது தனிமை விரும்பி. அல்லது ஒருவித தாழ்வு மனப்பான்மையில் சக மனிதர்களிடமிருந்து துண்டித்து கொள்ள விரும்புதல். இந்நாவலின் கதாநாயகன் மேக்ஸ் மார்டனின் பாத்திரப்படைப்பு அப்படித்தான் இருக்கிறது. எது எப்படியோ
புக்கர் விருது பரிசை வென்ற இந்த நாவலை அப்படியொன்றும் பிரமாதமான நாவலென்று கண்ணை மூடியபடி சொல்ல முடியாது. தமிழில் இதே கருவில் எழுதப்பட்ட சில நாவல்கள் கடலை விட அருமையாக அமைந்துள்ளது. வேற்றுமொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டால் நமக்குள் பொதிந்து கிடைக்கும் பொக்கிஷங்களின் அருமை தெரியவருகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ லா.ச.ராவின் ‘அபிதா’ போன்ற நாவல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நோபல் பரிசு கூட கிடைக்கலாம்.

கடல் (நவீன உலக கிளாசிக் வரிசை)
ஜான் பான்வில்; தமிழில்: ஜி. குப்புசாமி;
விலை:- ரூ. 125
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் 207

Saturday, October 30, 2010

இவருக்கு ஓட்டு போடுங்க

நண்பர்களுக்கு...

நவம்பர்-14 க்குள் இவருக்கு ஓட்டு போடுங்க




இவரைப்பற்றி
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/




நன்றி
என்.விநாயக முருகன்