Saturday, January 4, 2014

ஒரு கடிதம்

அன்புள்ள விமு

பேஸ்புக்கில் ஒருத்தர் ராஜீவ்காந்தி சாலை நாவலில் நிறைய ஒற்றுப்பிழைகளும், பல இடங்களில் முற்றுப்புள்ளி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். சில இடங்களில் இலக்கணப்பிழைகள் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியே போனால் தமிழ் இறந்து விடாதா? உதாரணத்திற்கு உங்கள் நாவலில் பக்கம் எண் 67-ல் "கொஞ்ச நேரம் முன்னாடி தான் அறிமுகம் ஆன பழனி எடுத்த எடுப்பிலேயே அப்படிச் சொன்னது பழனிக்குத் திகைப்பாகவும் சங்கோஜமாகவும் இருந்தது...."

இப்படியே சென்றால் தமிழ் இறந்து விடாதா?

அன்புடன்
மகேஷ்


வணக்கம் மகேஷ்.
ஒரு முறை நானும், அபிலாசும் பேசும்போது தமிழில் காப்பி எடிட்டர்கள் இல்லாத குறையை பற்றி விவாதித்தோம்.

இங்க்லீஷில் எழுதுபவர்களுக்கு பெரிய சிரமம் இருக்காது. அவர்களுக்கு ஒற்றுப்பிழை கவலை இல்லை. இலக்கணத்தை திருத்தி தர சில மென்பொருட்கள் உள்ளன. மைக்ரோசாப்ட் எம்ஸ்வேர்டு கூட போதும். ஆனால் தமிழில் அது போன்ற மென்பொருட்கள் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் தமிழ்கம்ப்யூட்டர் பத்திரிக்கையில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தேன். அப்போது சாப்ட்வியூ நிறுவனத்தில் வேலை பார்த்த ஆண்டோ பீட்டர் (இப்போது அவர் உயிருடன் இல்லை) எனக்கு அறிமுகம் ஆனார். தவிர சென்னைகவிகளில் இருந்த சில நண்பர்களும் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அப்போதுதான் அவர்கள் முதன்முதலில் தமிழில் கணிப்பொறிக்கான எழுத்துருக்களை கொண்டு வந்தார்கள். அதற்கு முன்பு டிடிபி இல்லை. லெட்டர் பிரஸ் முறையில் கம்பாசிடர்கள் அச்சு கோர்ப்பார்கள். லெட்டர் பிரஸ் என்றால் திருவல்லிக்கேணிக்கு சென்றால் அங்கு ஒரு கிலோ தமிழ் எழுத்துக்கள் கேட்டால் அவர்கள் ஈயத்தில் செய்யப்பட்ட பிளாக்குகள் தருவார்கள். இப்போது குழந்தைகளுக்கு பாடம் சொல்லிதர பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட அ, ஆ , ABCD எழுத்துகள் வாங்கி தருகிறோமே அது போல அந்த எழுத்துகள் இருக்கும். ஒரு கிலோ தமிழ் லெட்டர் பிரஸ் கேட்டால் அதில் இருபது அ ,முப்பது ஆ ,நாற்பது உ என்று ஈயத்தில் செய்யப்பட்ட ஈய பிளாக்குகள் தருவார்கள். இங்க்லீஷ் என்றால் அதில் பத்து A இருபது B முப்பது C என்று குத்துமதிப்பாக எழுத்துகளை எடையில் நிறுத்து தருவார்கள். அதை வாங்கிக் கொண்டு வந்து அதில் மை தடவி அதை பேப்பரில் எடுத்துதான் பிரிண்ட் செய்தார்கள். அப்படி இருந்த முறைதான் பின்பு கணிப்பொறி வந்தபிறகு டிடிபியாக மாறி இன்று உள்ள நிலையை அடைந்துள்ளோம். 

எதற்கு எழுதுகிறேன் என்றால் நாங்கள் அப்போது கணிப்பொறி சொற்களை தமிழில் மொழிபெயர்த்து கொண்டிருந்தோம்

நாங்கள் என்றால் நான், எனது ஆசிரியர் மு.சிவலிங்கம் (இவர் வேற.. இலக்கியத்தில் இருக்கும் மு.சிவலிங்கம் அல்ல. பேராசிரியர். விஎஸ்என்னில் வேலை பார்த்து கொண்டு தமிழ் ஆராய்ச்சி செய்தவர்.சினேகலதா என்ற பெயரில் சி,சி++ தொடர்கள் தமிழ் கம்ப்யூட்டர் இதழில் எழுதியவர்) தவிர எழுத்தாளர் சுஜாதா போன்ற சிலர் ஒரு முறை சாரா அமைப்பாக இருந்தோம். மு.சிவலிங்கம் நிறைய தமிழ் சொற்களை அறிமுகம் செய்து கொண்டே இருப்பார். அவர் கண்டுபிடித்த சொல்தான் கணினி. சுஜாதாவுடன் விவாதிக்கும்போது அவருக்கு அந்த சொல் உவப்பாக இல்லை. கணிப்பொறி என்று வைக்கலாம் என்று சுஜாதா சொன்னார். உடனே மு.சிவலிங்கம் சிரிக்க நான் அது சோளப்பொறி போல் இருக்கு. எதுக்கு கணிப்பொறி என்று இரண்டு சொல் வைக்கவேண்டும் கணினி என்றே எழுதலாம் என்று வம்படியாக எழுத ஆரம்பித்தோம். நான் அப்போது தமிழ்கம்ப்யூட்டரில் உதவி ஆசிரியராக இருந்தேன். நவீனா என்ற பெயரில் நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தேன். தமிழில் இரண்டு அறிவியல் புத்தகங்களும் எழுதியுள்ளேன். அவை ஐந்தாயிரம் பிரதிகள் விற்ற பெருமையுண்டு. தமிழ்நாட்டில் திருச்சி, சேலம் போன்ற சிறுநகரங்களில் இருக்கும் பல மாணவர்கள் தமிழில் அறிவியல் படிக்க வைக்கும் நோக்கத்துடன் அப்போது சுஜாதா தமிழில் நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதி வந்தார். ஆனால் சுஜாதாவை விட பல மடங்கு உழைப்பை கொட்டியவர்கள் நாங்கள். நாங்கள் என்றால் தமிழ்கம்ப்யூட்டர் ஆசிரியர் ஜெயகிருஷ்ணன். எனது ஆசிரியர் மு.சிவலிங்கம் ஆண்டோ பீட்டர் , சென்னை கவிகள் இன்னும் பலர். ஜெயகிருஷ்ணனுக்கு அறிவியலை சுத்த தமிழில் எழுதுவதுதான் பிடிக்கும். நான் ஒரு கட்டுரையில் உதாரணம் என்று எழுதிக்கொண்டு சென்று அவரிடம் நீட்டினால் அந்த பேப்பரை கிழித்துப் போட்டு விடுவார். உதாரணம் என்று தமிழில் எழுதக்கூடாது. அது வடமொழி சொல். சான்று அல்லது எடுத்துக்காட்டு என்று எழுதவேண்டும் என்று சொல்வார். அப்படி ஒரு தமிழ்வெறி. Client Server என்பதை வாடிக்கையாளர் சேவையாளர் என்று எழுத சொல்வார். எனக்கு செம கடுப்பு வரும். சுஜாதா அவரது புத்தகத்தில் கிளையன்ட் செர்வர் என்றே எழுதுவார். நானும் அப்படியே பத்திரிக்கையில் எழுதுவேன். எனக்கும் ஜெயகிருஷ்ணனுக்கும் சண்டையே வரும். அப்படிதான் தமிழில் அறிவியல் புத்தகங்கள் வந்தன. அப்படிதான் சிறு நகரங்களில் வசித்த பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு தலைமுறை மாணவர்கள் அறிவியலை படித்து மேலே வந்தார்கள்.

அந்த கட்டத்தில்தான் தமிழில் இணையத்தை கொண்டு வருவது பற்றி பரவலாக பேச்சு வந்தது. தமிழ்நெட் மாநாடு நடந்தது. நான் அதில் ஒயிட் பேப்பர் செய்ய நினைத்தேன். ஆனால் சிங்கப்பூர் சொல்ல முடியவில்லை. கையிலும் காசில்லை. வேலையும் நிரந்தரமில்லை. நான் பகுதி நேரமாக எம்சிஏ படித்துக்கொண்டிருந்தேன். அப்போதே தமிழில் இலக்கண முறைப்படி எழுதும் மென்பொருள் தயாரிப்பது பற்றி எனக்கு பெரும்கனவு இருந்தது. அப்போது என்னிடம் வசதியில்லை. ஒரு சின்ன அறை. இரண்டு கணிப்பொறிகள். நான்கு நண்பர்கள் கிடைத்திருந்தால் கூட போதும். ஆறு மாதம் யாராவது எங்களுக்கு பண உதவி செய்திருந்தால் எம்எஸ் வேர்டு போல தரமான ஒரு தமிழ் டிடிபி மென்பொருளை உருவாக்கியிருப்போம். ஆயிரம் ரூபாய் சம்பளம் வேறு. இதெல்லாம் 1994 ஆம் வருடத்திலிருந்து 1997 வரை நடந்த கதை. போகட்டும் அதெல்லாம் பழைய கதை. இப்போது எல்லாரும் இணையத்தில் எழுதுகிறார்கள். வரும் காலங்களில் இது இன்னும் அதிகரிக்கும். யாராவது வசதி உள்ளவர்கள் இலக்கண பிழையை சரிசெய்ய நல்ல தமிழ் மென்பொருளை தயாரிக்கலாம். 

அபிலாஷ் விசயத்துக்கு வருவோம். தமிழில் எழுதுபவர்களுக்கு முக்கிய சிக்கலாக நான் நினைப்பது ஒன் மேன் ஷோவாக எல்லா வேலையையும் ஒரே ஆளே செய்வது. கவிதை அல்லது கட்டுரை அல்லது சிறுகதை என்றால் அந்த எழுத்தாளரே திருத்தி விடலாம். ஆனால் நாவல் என்றால் அதை எழுதி பார்த்தால்தான் தெரியும் மெய்ப்பு பார்ப்பது எவ்வளவு சிக்கல் என்று. நான் பெரும்பாலும் கதாபாத்திரம் ஒத்திசைவு (Character Synchronization) இருக்க வேண்டும் என்று பார்ப்பேன். முதல் பக்கத்தில் அப்புக்குட்டியின் மனைவி பாக்கியம் என்றால் எழுதிக்கொண்டு போகும் வேகத்தில் நூறாவது பக்கத்தில் அப்புக்குட்டியின் மனைவி ஓமனக்குட்டி என்று தவறாக வந்துவிடும். தகவல் (Detailing) சரியாக உள்ளதா என்று பார்ப்பேன். கிண்டியிலிருந்து போகும்போது தாம்பரம் தாண்டி பல்லாவரம் என்று எழுத முடியாது. ஒரு இடத்தில் ஒரு ஆளின் சம்பளம் மூவாயிரம் என்று எழுதினால் இன்னொரு இடத்தில் அதே மூவாயிரம் என்றுதான் இருக்க வேண்டும். அது போல கதாபாத்திரங்கள் பேசும் மொழி. அசோகமித்திரன் நாவலில் வரும் ஆட்டோ டிரைவர் கூட பிராமண பாஷை பேசுவார். இதெல்லாம் கவனமாக பார்த்து பார்த்து ஒரே ஆள் செய்யும்போது என்னால் சில ஒற்றுப்பிழைகளையும், இலக்கணப்பிழைகளையும் தவிர்க்க முடியாமல் போகிறது. அதை சரி செய்து கொள்கிறேன். இனிமேல் இந்த விஷயத்தில் கவனமாக இருப்பேன். 

அபிலாஷ் சொன்னார். தமிழில் காப்பி எடிட்டர்களே இல்லை. ஆம். நூறு பிரதிகள் விற்கும் மொழி பேசும் சமூகத்தில் என்ன செய்யுறது? ஒரே ஆள்தான் எல்லாத்தையும் செய்ய வேண்டும். நான் உதவி ஆசிரியராக சேரும்போது எனக்கு மெய்ப்பு சரிபார்க்கும் பணிதான் முதலில் கொடுத்தார்கள். மனிதனுக்கு எப்போதுமே ஒரு உளவியல் பிரச்சினை இருக்கும். மற்றவர்கள் தவறு தெரியும். தனது தவறு தெரியாது.

உதாரணத்திற்கு (இது வடமொழிச்சொல்) 

வெள்ளையானை நாவலில் 281 ஆம் பக்கத்தில் முதல் பாராவை பாருங்கள். "என்றான் ஏய்டன்" என்று முடியும். உண்மையில் அது "என்றான் காத்தவராயன்" என்று முடியவேண்டும். அந்த நாவலை படிக்கும்போதே அந்த பிழை எனது கண்ணில் பட்டது. ஆனால் அதை சுட்டிக்காட்டியா ஒரு நாவலை விமர்சனம் செய்ய முடியும்? அது மடத்தனமாக இருக்காது? அதுதான் அந்த நாவலுக்கு செய்யும் மரியாதையா? ஒரு நாவலின் அரசியலையொட்டி அந்த நாவலின் சொல்லப்பட்ட பிரச்சினைகளையொட்டியே விவாதம் இருக்க வேண்டும். ப்ரூப் ரீடிங், மற்ற இலக்கண பிழைகளை இரண்டாம் பதிப்பில் (முதலில் அது இரண்டாம் பதிப்பு போனா பார்த்துக்கலாம் என்று சொல்றது கேட்கிறது) திருத்தி எழுத முடியும்.. ஆனால் நாவலில் சொல்லப்பட்ட மைய கருத்தை இரண்டாவது பதிப்பில் மாற்றி எழுத முடியுமா?உப்புநாய்கள் நாவல் பற்றி ஒரு பிளாக்கில் விமர்சனம் படித்தேன். நிறைய இடங்களில் ஒரு என்ற வார்த்தை வருகின்றது. ஒற்று பிழைகள் உள்ளன என்று விமர்சனம் எழுதியிருந்தார். வெளங்கிடும். அந்த நாவல் என்ன ஒரு என்ற வார்த்தையின் பிரச்சினையை பற்றி எழுதப்பட்ட நாவலா என்ன? அந்த நாவல் சொல்லும் விளம்புநிலை மனிதர்களின் பிரச்சினையை பற்றி விமர்சனம் எழுப்புங்கள். என்னால் இங்கு ஆயிரம் நாவல்களை அதன் சின்ன சின்ன ஒற்றுப்பிழைகளை,இலக்கணப்பிழைகளை குறிப்பிட்டு இங்கு எழுதமுடியும். அது என் வேலை இல்லை. தமிழ் இலக்கணத்தில் முற்றுப்புள்ளி, காற்புள்ளி, ஆச்சர்யக்குறி வைக்கும் பழக்கமே இல்லை. நாவல்கள் என்பதே தமிழ் மரபு இல்லை. தமிழின் ஒரே வடிவம் கவிதை மட்டுமே. நாவல்கள் என்பது ஐரோப்பியர்கள் தமிழுக்கு கொடுத்த கொடை. நாவல்கள் வந்த பிறகே இவ்வளவு சிக்கல்களும் வந்தன.நாவல்கள் என்றுமே மொழியை அப்படியே தக்க வைத்துக்கொண்டு போகாது . நாவல்களின் நோக்கமும் அதுவல்ல. மொழி தன்னை காலந்தோறும் திரித்துக் கொண்டே செல்லும். பிரதாப முதலியார் சரித்திரமும், ராஸ லீலாவும் தமிழில் எழுதப்பட்ட படைப்புகள் என்றாலும் இரண்டும் ஒரே தமிழா? ஒருமுறை எழுத்தாளர் பாலகுமாரனிடம் யாரோ இப்படி கேள்வி கேட்டு வாங்கி கட்டிக் கொண்டார். உங்கள் நாவல்களில் ஏன் ஐ விகுதி வரமாட்டேங்குது. அதாவது அவன் நெற்றியை தடவினான் என்றால் அவன் நெற்றி தடவினான் என்று எழுதறீங்க என்று கேட்டதற்கு பாலகுமாரன் விளக்கம் கொடுத்தார்.

பேஸ்புக்கில் ஒருத்தர் வந்து கார்த்திக்குக்கு போன் செய்தேன் என்று எழுதுவது சரியா? கார்த்திக்கிற்கு போன் செய்தேன் எழுதுவது சரியா? என்று ஒருத்தர் கேட்டார். கார்த்திக் என்று பேர் வச்சதே தப்பு என்றேன். இங்கு தமிழர்கள் இறந்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அதை பற்றியெல்லாம் கவலை இல்லை. தமிழ் இறந்து விடாதா இல்லையா என்று ஆராய்ச்சி நடத்துகிறீர்கள். பேருந்து நிலையத்தில் பிச்சை எடுக்கும் பெண்ணை பார்த்திருக்கலாம். அம்மா தாயே என்று சொல்வாள். தமிழ் மரபில் ஒரே வார்த்தையில் இரண்டு சொற்கள். கூறியது கூறல் குற்றமென்று அவளிடம் வகுப்பெடுப்பீர்களா?தமிழ் மென்பொருள் தயாரிக்கும் மாணவர்களுக்கு உதவுவதும், பழங்கால ஓலைச்சுவடிகளில், கல்வெட்டுகளில் என்ன உள்ளது என்று ஆராய்ச்சி செய்வதும்,சங்க இலக்கியங்களை எளிமையாக விளக்கி சொல்வதும் மட்டும்தான் உண்மையான தமிழ் ஆர்வலர்கள் செய்ய வேண்டிய இல்லை. நாவல்கள் வழியாக நான் தமிழை வளர்க்கிறேன் என்று சொல்வது மிகப்பெரிய காமெடிக்கூத்து. அப்படி யார் சொன்னாலும் மிக கடுமையாக நான் எதிர்ப்பேன்.கெரில்லா தாக்குதல் பற்றி முன்பு ஒருமுறை பேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஒரு மனிதனை வீக்கான இடத்தில் அடிக்க வேண்டும். கெரில்லா தாக்குதலில் இன்னொரு உத்தியும் உள்ளது. அது...தாக்க வருபவர்களிடமிருந்தே தாக்குதலை கற்றுக்கொள்வது.

சாரு ஒரு இங்க்லீஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடந்த விவாதமொன்றில் தப்பு தப்பாக இங்க்லீஷ் பேசிவிட்டார். அப்போது ஒரு பெண் சாருவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் எழுதினார்.

சாரு இப்படி சொன்னார்.

"அந்த நிகழ்ச்சியில் நான் என்ன சொல்ல வந்தேன் என்று பாருங்க. நான் ஜட்டி போட்டேனா. என் புடுக்கு தெரியுதா என்று பார்க்காதீங்க.."


அன்புடன்
விநாயக முருகன்

2 comments:

  1. Very fine & useful replay Vi.Mu. Utharanam its not a Tamil word. Good. Thanks for your information :-)

    ReplyDelete
  2. Very fine & useful replay Vi.Mu. Utharanam its not a Tamil word. Good. Thanks for your information :-)

    ReplyDelete