Thursday, February 17, 2011

நினைவெனும் கொடுஞ்சுமை



கடந்த வருடம் “என் பெயர் சிவப்பு” நாவலுக்கு என் வலைத்தளத்தில் ஒரு விமர்சனம் எழுதியிருந்தேன். அதைப் பார்த்துவிட்டு ஜி.குப்புசாமி அவர்கள் எனக்கு ஒரு நன்றி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவருக்கு மரியோ வர்கஸ் யோசா நாவல்களை மொழிபெயர்க்கும்படி வேண்டுகோளுடன் பதில் அனுப்பினேன். அவர் ஜான்பான்வில்லின் புக்கர் விருது நாவலை தற்பொழுது மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாக பதிலனுப்பினார். இந்த வருட புத்தககண்காட்சியில் வாங்கப்படவேண்டிய பட்டியலில் “கடல்” என்ற இந்த நாவலையும் குறித்துக்கொண்டேன்.

கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டு காரணம். ஒன்று ஜான்பான்வில். அவரது நாவல்களின் நடை கொஞ்சம் புரிந்துக் கொள்ள சிரமப்பட வைக்கும். இந்நூலின் முன்னுரையில் குறிப்பிடப்பட்டிருப்பதுபோல ஜான்பான்வில்லின் எழுத்துநடை மர்மமான வார்த்தைகள், அசந்தர்ப்பமான சமயங்களில் எதிர்பாராத விநோத உவமைகள் என்று உரைநடையை அசாத்திய தளத்திற்கு கொண்டு செல்லும். மொழிபெயர்ப்பு இருந்தால் இலகுவாக படிக்கலாம். கடல் நாவலை வாங்குவதற்கு இரண்டாவது காரணம். ஜி.குப்புசாமி. "என்பெயர் சிவப்பு" நாவல்,ஹாருகி முரகாமி எழுத்துக்களை அருமையாக மொழிபெயர்த்திருந்தார். சில மொழியாக்கம் கடமுடாவென்று பயமுறுத்தும். சில்வியா பிளாத்தின் கவிதைகளை அப்படியே ஆங்கிலத்தில் படித்தால் எளிமையாக புரிந்துக்கொள்ளலாம். நாகார்ச்சுனன் மொழிபெயர்ப்பில் கவிதைகளை படித்தால் அவ்வளவுதான். ஆனால் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்பு தமிழில் படிக்க சிரமப்படாமல் இருக்கும். அதேநேரம் மூலப்பிரதியின் கலையமைதி கெடாமல் இருக்கும். தமிழ் இலக்கிய உலகில் ஜி.குப்புசாமியின் மொழிபெயர்ப்புகள் விசேஷ கவனம் பெற்று பலரால் பாராட்டப்படுகிறது. இந்நாவலில் அவரது உழைப்பு தெரிகிறது. இந்ந்நாவலின் மொழிப்பெயர்ப்புக்காக அவர் அயர்லாந்து பயணம் செய்துள்ளார். இந்நாவலில் வரும் புற உலகின் சித்தரிப்புகள், கடல் அருகாமை நிலக்காட்சிகள் நுட்பமாக அமைய அவரது பயணம் உதவியுமுள்ளது.

இனி நாவலைப்பற்றி:-

மேக்ஸ் மார்டன் என்னும் வரலாற்று ஓவியர் அவரது மனைவி அன்னா கேன்சரால் இறந்தபிறகு ஒரு கடற்கரை கிராமத்திற்கு செல்கிறார். மேக்ஸ் மார்டன் சிறுவயதில் கோடை விடுமுறையை கழிக்க அடிக்கடி அந்த கடற்கரைக்கு செல்வதுண்டு. அந்த கடற்கரை யிலிருந்தபடி தனது கடந்தகால நினைவுகளை மீட்டுருவாக்கம் செய்வதுதான் நாவலின் பின்புலம். சிறுவயதில் கடற்கரைக்கு ஒரு பணக்கார ஐரீஷ் குடும்பம் விடுமுறையை கழிக்க வந்துள்ளது. மேக்ஸ் மார்டன் அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பெண்மணியையும் அவளது மகளையும் சந்தி த்து பழகுகிறார்.. அந்த பெண்மணி மிசஸ் கிரேஸ். அவளது மகளின் பெயர் க்ளோயி. பதின்ம பருவத்தில் எல்லா சிறுவர்களுக்கும் வருவது போல மேக்ஸ் மார்டனுக்கு மிசஸ் கிரேஸ் மீது ஒருவித பால் கவர்ச்சி வருகிறது. சிலநாட்களிலேயே அது களைந்து அவள் மகள் க்ளோயி மீது காதல் ஏற்படுகிறது. மேக்ஸ் மார்டன் சிறுவயதில் சந்தித்த அந்த இரண்டு பெண்களையும் , பால்யகால அனுபவங்களையும், அந்த இரண்டு பெண்களையும், தன் மனைவி அன்னா, மகள் க்ளேர் பற்றிய நினைவுகளையும் மாற்றி,மாற்றி அசைபோடுகிறார். கிட்டத்தட்ட தமிழில் ஆதவன் நாவல்களில் வருவது போல மனதின் உள்அடுக்குகளிலேயே நாவலின் கதை பிரயாணப்படுகிறது. ஏழ்மையான பிண்ணனியிலிருந்து வரும் மேக்ஸ் மார்டன் பணக்கார ஐரீஷ் குடும்பத்துடன் பழகும்போது அவர்களுக்குள் சமூக அந்தஸ்துகள் எப்படிபட்ட முரணையும், உறவு சிக்கல்களையும் ஏற்படுத்துகிறது என்பதையும் நாவல் நுட்பமாக சொல்கிறது. பால்யகாலத்தில் க்ளோயிடம் காதலில் விழும்போதும் சரி. மனைவி அன்னாவிடம் குடும்பம் நடத்தும்போதும் சரி. மேக்ஸ் மார்டனுக்கு இந்த பொருளாதார சமூக அந்தஸ்தை தாண்டி இயல்பாக பழகுவது பெரிய பிரச்சினையாக இருக்கிறது. நாவலின் இரண்டாம் பகுதி முழுக்க இதை உணர முடியும். நாவலின் முற்பகுதியில் மிசஸ் க்ரேஸை ஒரு சராசரி பெண்மணியாக ஜான்பான்வில் காட்டுகிறார். இதை மாக்ஸ் மார்டன் அவரது நினைவுகளை சொல்வதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம். ஆனால் இரண்டாம் பகுதியில் மிஸ்டர் க்ரேஸுக்கும் ரோஸுக்கும் இடையில் இருக்கும் காதலை மிசஸ் க்ரேஸ் மிக இயல்பாக எடுத்துக்கொள்வது சற்று குழப்பமாக இருக்கிறது. மனிதன் வயதாக வயதாக அதிகமாக பால்யகால நினைவுகளை அசைபோடுகிறான். இறக்கும் தருவாயில் பால்யகால நினைவுகளை அசைபோடுவதன் மூலம் கடந்த காலத்துக்கு சென்று ஒளிந்துக்கொள்ள முயற்சி செய்கிறான். காலத்தை கயிறு கட்டி பின்னுக்கு இழுத்துச் செல்வதன் மூலம் வாழ்வை நீட்டிக்க முயற்சி செய்கிறான். ஆனால் நிகழ்கால நினைவுகள் அவ்வபொழுது வந்து கடந்தகால நினைவுகளை முன்னுக்கு தள்ளி அவனை சாவுக்கு பக்கமாக தள்ளிவிடுகிறது.இந்த நாவல் முழுக்க ஒரு மனிதனின் நினைவுகள்.நினைவுகள்.நினைவுகள் மட்டுமே. மேக்ஸ் மார்டனுக்கு நினைவுகள் சோகத்தை தருகின்றன. வலியை அதிகமாக்குகிறது. அவர் நினைவுகளை உதற முயற்சிக்கிறார். முடியவில்லை. மனிதன் இறக்கும்வரை அவனது நினைவுகள் இருந்துக்கொண்டே இருக்கும். நினைவெனும் கொடுஞ்சுமையை மனிதனால் ஒருபோதும் உதறித்தள்ள முடியாது. ஒருவேளை அவன் இறந்துப்போனாலும் அவன் வேறு யாராவது உயிரோடு இருக்கும் இன்னொரு மனிதனின் நினைவுகளை வந்து நிறைப்பான்.

நாவலிலிருந்து எனக்கு பிடித்த சில சில வரிகள்:-

“இறந்தவர்களை நாம் இறக்கும்வரைதான் சுமக்கிறோம். அதன்பின் நாம் சிலகாலம் சுமக்கப்பட்டு வருவோம். பின் நம்மை சுபப்பவர்கள் அவர்களுக்கான நேரம் முடிந்து சாய்ந்தபிறகு என்னைப்பற்றிய ஞாபகத்தீற்றலே இல்லாத எண்ணத்தொலையாத தலைமுறைகள் தொடர்ந்து வரும். அன்னாவை நான் நினைவில் வைத்திருக்கிறேன். எங்கள் மகள் க்ளேர் அன்னாவை நினைவில் வைத்திருப்பாள். பிறகு க்ளேர் மறைந்துவிடுவாள். அப்போது அவளை நினைவில் வைத்திருப்பவர்கள்தான் இருப்பார்கள். எங்களை நினைவில் கொண்டிருப்பவர்கள் இருக்கபோவதில்லை. அதுதான் எங்களது இறுதி கரைவாக இருக்கும். எங்களுடையது ஏதாவது மிச்சம் இருக்கலாம். மங்கியிருக்கும் ஒரு புகைப்படம். ஒரு முடிக்கற்றை. சில விரல் ரேகைப் பதிவுகள், நாங்கள் இறுதி மூச்சைவிட்ட அறையில் சிதறியிருக்கும் சில அணுத்துகள்கள். ஆனால் நாங்கள் இருப்பதும் இருந்ததும் எப்போதுமே நாங்களாக இருக்க முடியாது. மரித்தவர்களின் மக்கிய புழுதிதான் கடைசியில்”


நாவல் ஆசிரியரைப் பற்றி:-

ஜான்பான்வில் ஐரீஷ் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர். கடல் நாவல் 2005 -ஆம் ஆண்டிற்கான புக்கர் விருது பெற்றது. இதுவரை பதிமூன்று நாவல்களை எழுதியுள்ளார். பலமுறை புக்கர் பரிசுக்கு இவரது நாவல்கள் கதவைத்தட்டி கடைசியில் கடல் நாவல் ஜெயித்துள்ளது. சக எழுத்தாளர்கள், விமர்சகர்களோடு ஒத்துபோகாத மனநிலையிலேயே இயங்கி வரும் ஜான்பான்வில்லை தான் அயர்லாந்து சென்றபொழுது சந்திக்கவே முடியவில்லையென்று நாவலின் முன்னுரையில் ஜி.குப்புசாமி குறிப்பிடுகிறார். அவர் சொல்வது போல ஜான்பான்வில் தொட்டாற்சிணுங்கியாகத்தான் இருக்க வேண்டும். அல்லது தனிமை விரும்பி. அல்லது ஒருவித தாழ்வு மனப்பான்மையில் சக மனிதர்களிடமிருந்து துண்டித்து கொள்ள விரும்புதல். இந்நாவலின் கதாநாயகன் மேக்ஸ் மார்டனின் பாத்திரப்படைப்பு அப்படித்தான் இருக்கிறது. எது எப்படியோ
புக்கர் விருது பரிசை வென்ற இந்த நாவலை அப்படியொன்றும் பிரமாதமான நாவலென்று கண்ணை மூடியபடி சொல்ல முடியாது. தமிழில் இதே கருவில் எழுதப்பட்ட சில நாவல்கள் கடலை விட அருமையாக அமைந்துள்ளது. வேற்றுமொழி இலக்கியத்தோடு ஒப்பிட்டால் நமக்குள் பொதிந்து கிடைக்கும் பொக்கிஷங்களின் அருமை தெரியவருகிறது. நகுலனின் ‘நினைவுப்பாதை’ லா.ச.ராவின் ‘அபிதா’ போன்ற நாவல்களை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தால் நோபல் பரிசு கூட கிடைக்கலாம்.

கடல் (நவீன உலக கிளாசிக் வரிசை)
ஜான் பான்வில்; தமிழில்: ஜி. குப்புசாமி;
விலை:- ரூ. 125
காலச்சுவடு பதிப்பகம்
பக்கங்கள் 207

Monday, January 31, 2011

அதீதம் - கவிதை

அதீதம் இரண்டாவது இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை...அதீதம் குழுவினருக்கு எனது நன்றி.

தேன்மொழி
---------------
காலை வணக்கம் ஐயா
எங்கள் வங்கியிலிருந்து
தங்களுக்கு கடன் வழங்க
முடிவெடுத்துள்ளோம்
ஐம்பதாயிரம் ரூபாய்.. சம்மதமா?
மதுரத்தமிழில் கேட்டவள்
தன்பெயரைத் தேன்மொழி யென்றாள்

பிடிவாதமாக மறுத்தவனுக்கு
பத்து நிமிடம் கழித்து
மீண்டுமொரு அழைப்பு
காலை வணக்கம் ஐயா
எங்கள் வங்கியிலிருந்து
தங்களுக்கு கடன் வழங்க
முடிவெடுத்துள்ளோம்
ஒரு லட்சம் ரூபாய்..சம்மதமா?
இந்தமுறை குரல் மாறியிருந்தது
கனிமொழியோ கயல்விழியோ நினைவில்லை

மதிய இடைவேளையில்
மற்றுமொரு அழைப்பு
தேன்மொழியேதான் தெரிந்துவிட்டது
மதிய வணக்கம் ஐயா
எங்கள் வங்கியிலிருந்து
தங்களுக்கு கடன் வழங்க
முடிவெடுத்துள்ளோம்
இரண்டு லட்சம் ரூபாய்.சம்மதமா?
என்ன போட்டியோ?
என்ன பொறாமையோ? பாவம்
கனிமொழி அல்லது கயல்விழி மேல்.

கலங்கியது நெஞ்சம் தேன்மொழியிடம்
கடன்பட்டார் போல.




நன்றி
என்.விநாயக முருகன்

Friday, January 14, 2011

அதீதமாய் தொடங்கிய தமிழ் புத்தாண்டு



இப்படியொரு இணைய இதழ் தொடங்க இருப்பதாக இரண்டு வாரங்கள் முன்பே மீரா ப்ரியதர்ஷனி அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.இணைய இதழுக்கு கவிதை கிவிதை ஏதாவது எழுதி தாருங்கள் என்று கேட்டிருந்தார். சமீபகாலமாக நான் இணையத்தில் மேய்வதை வெகுவாக குறைத்துவிட்டேன். கணினியில் படிப்பது மிகுந்த ஆயாசத்தை தருகிறது. கணினித்திரை கண்களுக்கு எரிச்சலை தருகிறது. மேலும் புத்தகங்கள் போல தொடர்ச்சியான வாசிப்பனுபவத்தை இணையத்தில் பெற முடிவதில்லை.ஒரு தளத்தை படித்தால் கருத்துகளை முற்றாக கிரகிக்கும் முன்பே அங்கிருந்து இன்னொரு லிங்கை பிடித்து அடுத்த தளத்திற்கு மனம் சென்று விடுகிறது. ஒருவர் மிக கடினமாக உழைத்து அருமையாக பத்து பக்கத்திற்கு கட்டுரை எழுதியிருப்பார். அதை படித்து பார்க்காமலேயே கட்டுரை மொக்கை என்று ஒருவர் பின்னூட்டம் போட்டிருப்பார். அவருக்கு ஜால்ரா தட்டி நாற்பது பேர் கும்மியிருப்பார்கள்.மொக்கைகளும்.கும்மிகளும் நிறைந்த இணையத்தில் அத்தி பூத்தாற்போல எப்போதாவது சில நல்ல தளங்கள் தென்படும். தமிழர் திருநாளாம் பொங்கலான இன்று வெளிவந்துள்ள "அதீதம்" இதில் இரண்டாவது வகை.

ஒருவித சோம்பலுடனும், அசுவாரசியத்துடனுமேயே இந்த தளத்தை இன்று மேய்ந்தேன். (இணையத்தில் பெரும்பாலும் படிக்க முடிவதில்லை. மேயத்தான் முடிகிறது.) மேய்ந்த ஓரிரு நிமிடத்திற்குள்ளே இந்த இணைய இதழ் சுவாரசியமாகவும், தனித்துவமாகவும் இருப்பது தெரிந்தது. நிதானமாக ஒவ்வொரு படைப்பாளிகளது பெயர்களையும் படித்தேன். நிலாரசிகன், தேனம்மை லக்ஷ்மணன், நண்பர் உழவன், லதாமகன் (இவர் எனது அலுவலகத்தில்தான் பணி செய்கிறார்) ,ரிஷான் ஷெரீஃப் குறிப்பாக அபிமான கவிஞர் அனுஜன்யா என்று ஒரே கொண்டாட்டமாக இருந்தது. அதீதம் தளத்தில் நான் ரசித்த அபிமான கவிஞர் அனுஜன்யாவின் கவிதை....

மோட்சப் பிரசாதம்
-------------------------
காலை கிடைத்தது
கடவுள் பிரசாத லட்டு.
ஒரு குழந்தை பிறந்ததினால்
மதியம் கரைந்த சாக்லேட்கள்
மேசைக்கடியில் குவிந்திருந்த
இனிப்புத் துகள்கள்
மாலையில் வசீகரமான
மஞ்சள் உருண்டைகளுடன்
வளையம் வந்த ஊழியனிடம்
எனக்கு இரண்டு கேட்டேன்
ஒன்றும் பேசாமல்
மேசைக்கடியில் உருண்டைகளைப்
போட்டு விட்டு அகர்ந்தான்
இரவுக் கனவில்
புதிதாக இறந்திருந்த
கரப்பானின் மென் மேசை
என் நாசியை உரசியபடி அலைந்தது.

"புத்தக அறிமுகம்" பகுதியில் ராமலக்ஷ்மி அவர்கள் "வெயில் தின்ற மழை" (நிலாரசிகன்) கவிதைத்தொகுப்பை பற்றி மிக அருமையான விமர்சனமொன்றை எழுதியுள்ளார். "அறிவியலும் அறிவில்லா இயலும்" கட்டுரையில் சந்தனமுல்லை அவர்கள் இப்படி கேட்கிறார். "மதமும், மூடநம்பிக்கைகளும் பெண்களை எப்படி அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன என்று உணர வேண்டும். (மனைவியின் ந‌ல‌னுக்காக‌ ஏதேனும் விர‌த‌ங்க‌ள் க‌ண‌வ‌னுக்கு இருக்கிற‌தா?)"

அதீதத்தில் பல்சுவை இணைய இதழ் எ‌ன்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனா‌‌‌ல் ஏதோ குறைவது போல தெரிகிறது. அதீதம் சுருக்கமாக இருக்கிறது. நிறைய கட்டுரைகளும், குறைந்தது இரண்டு அல்லது மூன்று சிறுகதைகள் இட‌ம்பெற்றிருந்தால் முழுமையான இணைய இதழ் தோற்றம் கிடைத்திருக்கும். முத‌ல் இதழுக்கு படைப்புகள் குறைவாகவே வந்திருக்கலாம். இனி வரும் இதழ்களில் அரசியல் கட்டுரைகளும், அதிக அளவிலான இலக்கிய படைப்புகளும் இடம்பெறும் எ‌ன்று நம்புகின்றேன். பின்னூட்டம் பகுதி இல்லாதது ஆறுதலாக இருக்கிறது. இருந்திருந்தால் தளம் சந்தைக்கடை போல மாறிவிட்டிருக்கும். ந‌ல்ல முயற்சி. அதீதத்துக்கு தமிழர்திருநாள் வாழ்த்துக்கள்!!!.

http://www.atheetham.com

சென்னை சங்கமம் - இரண்டு கவிதைகள்

கடந்தவாரம் சென்னை சங்கமம் கவிதைப்போட்டியில் கலந்துக்கொள்ளச் சொல்லி அழைப்பு வந்தது. ஹைதராபாத்தில் இருப்பதாலும் பணிச்சுமை காரணமாகவும் என்னால் கலந்துக்கொள்ள முடியவில்லை எ‌ன்று மறுத்துவிட்டேன்.. சென்னை சங்கமத்திற்காக வாசிக்க எடுத்த வைத்த இரண்டு கவிதைகளை இங்கு பதிவிடுகிறேன். இவை ஏற்கனவே ஆனந்தவிகடனில் பிரசுரமானவை.

பூஜ்யங்கள்
--------------
ஆறாவது வகுப்பு
ஈ பிரிவில் மறக்கமுடியாதவன்
வே. அரங்கநாயகம்
வருடத்துக்கு நாலு முறை
கணக்குப் பாடத்தில்
முட்டை எடுப்பான்


ஒரு தேர்வில்
பத்தோடு பத்தை பெருக்கி
பத்துக்கு பிறகு
பத்து பூஜ்யங்களை போட்டது
உலக பிரசித்தம்
வாத்தியார் வெங்கடரமணி
அதை சுழித்து
பத்து முட்டைகள் போட்டது
கூடுதல் சுவாரஸ்யம்


கோழிப்பண்ணை வைக்கலாம்டா
கிண்டலடித்தலும் வையமாட்டான்
பூஜ்யங்களுக்கு மதிப்புள்ளன
புன்னகையோடு சொல்வான் முரடன்


பத்தாம் வகுப்பில்
பாதியை தாண்டாத
அரங்கநாயம் போட்டோவை
வெகுநாட்களுக்கு பிறகு
செய்தித்தாள்களில் பார்க்க நேரிட்டது
மத்திய அமைச்சராம்
ஆயிரம் கோடி ஊழலாம்
சட்டென எண்ண வரவில்லை
எத்தனை பூஜ்யங்கள்?


சில்லறை
———————
நான் அவனுடன்
சுற்றியலைந்த நாட்களில்
கோனா‌‌‌ர் மாந்தோப்பில்
மாங்காய் திருடி உதை வாங்கியுள்ளான்

பெண்கள் படித்துறைப்பக்கம்
மறைந்திருந்து பார்த்ததில்
பஞ்சாயத்தில் செருப்படி விழுந்திருக்கிறது

ஊருக்கு வெளியே ஓடும்
பலான படத்தை பார்க்க
அழைத்துச் சென்றதே அவன்தான்

இந்த முறை
ஊருக்கு சென்ற போது
சந்திக்க நேரிட்டது
தொப்பையும் சங்கிலியும் மின்ன
ஆள் பருத்திருந்தான்
எம்.எல்.ஏவாகி விட்டான்
என் பால்ய சிநேகிதன்

இன்னுமொன்றும்
சொல்லியாக வேண்டும்

ஒருமுறை
கோயில் உண்டியலை
உடைத்து திருடியிருக்கிறான்

சட்டென நிழலாட நினைவூட்டினேன்
சிரித்தபடியே என்னிடம் சொன்னான்

இப்போதெல்லாம்
அது போன்ற
சில்லறைத்தனங்களை செய்வதில்லையாம்

நன்றி (ஆனந்தவிகடன்)
என்.விநாயக முருகன்

Friday, December 31, 2010

34வது சென்னை புத்தகக் காட்சி



தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த வருட புத்தகக் காட்சி (34வது புத்தகக் கண்காட்சி) இன்னும் இரண்டு தினங்களில் தொடங்க இருக்கின்றது.

இடம்:-பூந்தமல்லி நெடுஞ்சாலை புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி (பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே) சென்னை

தொடக்கநாள்:-ஜனவரி 4, 2011.

இம்முறை வழக்கம் போல் 12 தினங்கள் அல்லாமல் 14 தினங்க‌ள் காட்சி நடக்க உள்ளது. காட்சி இறு‌தி‌ நாள் ஜனவரி 17, 2011. காட்சியில் அகநாழிகை பதிப்பகத்தின் வெளியீடுகள் அனைத்தும் நிவேதிதா புத்தகப் பூங்கா ஸ்டாலில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிவேதிதா புத்தகப் பூங்காவின் அரங்கு எண் - 274. காட்சியில் சந்திக்கலாம்.


Monday, December 6, 2010

கேட்டதில் ரசித்தது

தமிழ் ஸ்டுடியோ மின்னிதழில் 'கதை சொல்லி' எ‌ன்றொரு அற்புதமான பகுதி இருக்கிறது. அதில் தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமைகளின் படைப்புகளை யாராவது ஒரு படைப்பாளியை விட்டு விமர்சனம் செய்ய சொல்கிறார்கள். ஆடியோ ஃபார்மெட்டில் கேட்க அருமையாக இருக்கிறது.


எ.ஸ்.ராமகிருஷ்ணின் "மிருகத்தனம்" எ‌ன்ற சிறுகதையை மனுஷ்யபுத்திரனின் உணர்ச்சிகர குரலில் கேட்க முடிந்தது. மிருகத்தனம் சிறுகதையை மனுஷ்யபுத்திரன் விவரித்த விதம் அருமை. குறிப்பாக சுஜாதாவின் "வெள்ளைக்கப்பல்" சிறுகதையை மனுஷ்யபுத்திரன் விவரித்து விமர்சனம் செய்திருந்த பகுதியை ரசித்து கேட்டேன். சுஜாதாவின் சிறுகதைகளை பற்றி எனக்கு சில கருத்துகள் உண்டு. பொதுவாக சிறுகதைகள் எழுதும்போது கதாபாத்திரங்கள் மனஓட்டங்கள், புறச்சூழல் வழியாக கதையை நகர்த்த வேண்டும். ஆனா‌‌‌ல் சுஜாதாவின் கதைகளில் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக அவர்கள் பேசும் வசனம் மூலமாக கதையின் மைய ஓட்டம் கட்டமைக்கப்பட்டிருக்கும். சுஜாதா கதைகளில் கதாபாத்திரங்கள் அதிபுத்திசாலியாக பேசுவார்கள். சுஜாதா வசனம் எழுதிய திரைப்படங்களிலும் இதே போக்கை காணலாம். எ‌னவேதான் பெரும்பாலும் சுஜாதா கதைகள் நாடகம் எ‌ன்ற கலைவடிவத்துக்கு (சினிமாவுக்கு கூட) நெருக்கமாக இருந்தது. வெள்ளைக்கப்பல் சிறு கதையை மனுஷ்யபுத்திரன் விமர்சனம் செய்த மனுஷ்யபுத்திரனும் இதே கருத்துகளை சொல்லி சொல்லி முடித்திருந்தார். எனக்கென்னவோ சுஜாதா சிறுகதைகளை ‌விட எஸ்.ரா கதைகள் பிடித்துள்ளது. எஸ்.ராவை தமிழின் இந்த நூற்றாண்டில் பிறந்த மாபெரும் கதை சொல்லி எ‌ன்று கூறலாம். முன்பு சொன்னபடி கதாபாத்திரங்கள் மனஓட்டங்கள், புறச்சூழல் வழியாக கதையை நகர்த்த வேண்டும். எஸ்.ராவை மாபெரும் கதை சொல்லி எ‌ன்று கூற நான் தேர்வு செய்வது இந்த இரண்டு காரணிகளை வைத்துதான். "வெள்ளைக்கப்பல்" சிறுகதையை விட, எஸ்.ராவின் "மிருகத்தனம்" சிறுகதையை மனுஷ்யபுத்திரனா‌‌‌ல் ரசித்து உணர்ச்சிகரமாக கூறமுடிந்தது. ‌மிக நுட்பமாக விவரிக்க முடிந்தது. அவரது குரலை கேட்டு பாருங்கள்.கூடு இதழில் வெளிவரும் இந்த கதைசொல்லி பகுதி புதுமையாக இருக்கின்றது. ஆர்வமாக தொடர்ந்து கேட்க ஆரம்பித்துள்ளேன். ஆதவன்,லா.ச.ரா குறிப்பாக எனது ஆல்டைம் ஃபேவரைட் அசோகமித்திரன் சிறுகதைகளை கேட்க ஆர்வமாக இருக்கிறது.