Friday, July 19, 2013

பூட்டுத்திருடன்

இன்று காலை ஹாங்காங்கில் இருக்கும் எனது அலுவலக நண்பர் கெளதம் போன் செய்திருந்தார். பேஸ்புக்கில் பெண் ஐடிக்களில் வருபவர்களை பற்றி நான் சமீபத்தில் எழுதியிருந்த ஒரு பதிவை படித்து விட்டு கருத்து சொன்னார். அப்போது எங்கள் உரையாடல் எதேச்சையாக மென்பொருள் பாதுகாப்பு பற்றியும்,Fake ஐடிக்கள் பற்றியும் , குறிப்பாக நிக்கி செள பற்றியும் திரும்பியது.

"நிக்கி செள இறந்து விட்டார் தெரியுமா?" என்றார் கெளதம். எனக்கு தூக்கி வாரி போட்டது.

"எப்போ என்றேன்?"

"தெரியல. ஒரு நண்பர் சொன்னார்."
"என்னாச்சு?"

"ஏதோ படகு விபத்தாம். கடல்ல மூழ்கி பாடி கூட கெடக்கல. அதுக்கு மேல  எனக்கும் ஒன்னு தெரியாது " என்றார்.
 
நிக்கி செள (Niki Chow) வை நான் முதன்முறையாக சந்தித்தபோது அது ஒரு கோடைக்காலம். தாஜ் ஹோட்டலில் டின்னர் இடைவெளியின்போது தயங்கி தயங்கி அவரிடம் என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். ஐந்தரை அடி உயரத்தில் சின்ன கண்களுடன் ஆனால் முதல் பார்வையிலேயே மனிதர்களை கவர்ந்து இழுக்கும்படியான சிரிப்புடன் வசீகரமாக இருந்தான். தனது சொந்தகிராமத்தில் நண்பர்கள் தன்னை பூட்டுத்திருடன் என்று பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள் என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தார்.


எங்கள் அலுவலகத்தில் வருடந்தோறும் ஏதாவதொரு தொழில்நுட்ப மாநாடு நடக்கும். உலகெங்கும் இருக்கும் தலைச்சிறந்த கணினி தொழில்நுட்ப ஆட்கள் ஒரு இடத்தில் ஒன்றாக கூடுவோம். அங்கு அவர்களது அனுபவங்களை புதிய தொழில்நுட்பங்களை விவாதிப்பார்கள். அந்த வருட மாநாடு ஏப்ரல் மாதத்தில் சென்னை தாஜ் ஹோட்டலில் நடந்தது. ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் பலர் வந்திருந்து ஐபிஎம் நிறுவன மென்பொருள் தயாரிப்புகளை சந்தைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் இரண்டாம் நாள் மாநாட்டில் நிக்கி செள வந்திருந்து மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனை (Software Security Testing) என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அன்று ஐந்து பேர் மாநாட்டில் பேசினார்கள். ஆனால் நிக்கி செளதான் அங்கு எல்லாருக்கும் ஹீரோ. அவரது பேச்சின்போது நாங்கள் அனைவரும் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அமர்ந்திருந்தோம்.நிக்கி செள ஒரு எத்திக்கல் ஹாக்கர். அதாவது மின்னஞ்சல்களை உடைப்பது,பாஸ்வேர்டு திருடுவது, எங்கெல்லாம் பாதுகாப்பு சரியில்லையோ அதை கண்டுபிடிப்பது , பின்பு அந்த பாதுகாப்பு குறைபாடுகளை அறிக்கை தயார் செய்து மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கொடுப்பது. மென்பொருள் நிறுவனங்கள் உடனே தங்களிடம் இருக்கும் ஓட்டை,உடைசல்களை சரிசெய்துக்கொள்வார்கள். நிழல் உலக தாதாக்கள் போல இருக்கும் இவர்களை போன்ற ஆட்களை பெரும்பாலும் நிறுவனங்கள் வெளியில் சொல்லாது. காரணம் அவர்கள் பாதுகாப்பின் குறைபாடுகள் வெளியில் தெரிந்துவிடும். போட்டி நிறுவங்கள் இது போன்ற ஆட்களை பணத்தை காட்டி வாங்கி விடுவார்கள்.

3 Iron. கொரிய மொழியில் வெளியான ஒரு திரைப்படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கிம்கிடக் இயக்கியது. .அதில் வரும் கதாநாயகன் பூட்டிய வீடுகளாக பார்த்து அங்கு செல்வான். பூட்டை உடைப்பான். வீட்டின் உரிமையாளர் அநேகமாக வெளியூர் சென்றிருப்பார். இவன் வீட்டுக்குள் செல்வான். உரிமையாளர் வரும்வரை அந்த வீடு இவனுடையது. அந்த வீட்டினுள் சமைத்து சாப்பிடுவான். டிவி பார்ப்பான். தூங்குவான். துணி துவைப்பான். வீட்டை பெருக்குவான். பழுதான பொருட்களை சரி செய்வான். அந்த வீட்டின் உரிமையாளர் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவான். ஆனால் ஒரு பொருளை கூட திருடிக்கொண்டு செல்ல மாட்டான். வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து பார்க்கும்போது அப்படி ஒரு நாள் அங்கு வந்து போனதற்கான அடையாளம் கூட இருக்காது.        

நிக்கி செளவின் நண்பர்கள் அந்த படத்தின் கதாநாயகனுக்கு பூட்டுத்திருடன் என்று செல்லமாக பெயர் வைத்து அழைப்பார்களாம். அதே பெயரையே நிக்கி செளவுக்கும் வைத்து விட்டார்கள். அது போன்றுதான் இந்த எதிக்கல் ஹாக்கர் என்று அழைக்கப்படுபவர்கள். நிக்கி செள உலகின் டாப் டென் ஹாக்கர்களில் ஒருத்தன். உண்மையில் அவன் ஐபிஎம்மில் வேலை செய்யவில்லை. அவன் ஒரு ப்ரீலான்சர். எந்த நிறுவனம் பணம் தருகின்றதோ அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் செர்வர்களின், இணைய தளங்களின் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்த்து வேறு யாரும் ரகசியங்களை திருடாமல் பாதுகாப்பு அம்சங்களை பலபடுத்தி தருவது அவன் வேலை

செமினார் முடித்த களைப்புடன் இருந்த நிக்கி செளவுடன் அன்று அதிகம் பேச முடியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரியையும் ,தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக்கொண்டார். மறுநாள் நேரம் இருந்தால் சந்திப்பதாக சொன்னார். மறுநாள் அவரே எனக்கு போன் செய்தார். அவரது பயணத்தில் ஒரு சின்ன மாறுதல் இருந்ததால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

மறுநாள் தாஜ் ஹோட்டலில் நாங்கள் சந்தித்தபோது நிறைய பேசினோம். அவருடன் உரையாடியதிலிருந்து அவர் கிழக்கு சைனாவில் ஏதோவொரு குக்கிராமத்தில் பிறந்தவர் என்றும் ஹாங்காங்கில் கணிப்பொறிப் படிப்பை முடித்தவர் என்றும் இரண்டு ஆண்டுகள் முன்பு அவர் காதலி அவரை விவாகரத்து செய்து விட்டு போய் விட்டார் என்பது வரைக்கும் தெரிந்தது. நிக்கி செளவுக்கு சின்ன வயதிலிருந்தே புதிர்களை விடுவிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாம். பள்ளிக்கூடங்களில் நடந்த பல புதிர் அவிழ்ப்பு போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசும் வாங்கியுள்ளாராம். கல்லூரி செஸ் விளையாட்டில் சாம்பியன்ஷிப்பாம். மனித மனம் அதன் விநோதம் பற்றி அறிந்துக்கொள்ளும் சைக்கியாரிஸ்ட்டாக ஆகவேண்டுமென்பது அவரது கனவாக இருந்துள்ளது. ஆனால் தவறி போய் எப்படியோ கணிப்பொறித் துறைக்கு வந்துவிட்டதாக சொன்னார். ஆனாலும் இந்த ஹாக்கர் வேலையை நான் மிகவும் நேசிக்கின்றேன். கிட்டத்தட்ட இதுவும் ஒரு சைக்கியாரிஸ்ட் வேலை போன்றுதான் என்றார் .

நான் ஆச்சர்யமாக அவரை பார்த்தேன்.

“முதலில் விளையாட்டாக அடுத்தவர்களது மின்னஞ்சல் பாஸ்வேர்டை திருடுவதில் ஆரம்பித்தேன். பிறகு ஒருகட்டத்தில் அதில் நிபுணத்துவம் வந்து விட்டது. என்னால் சொடக்கு போடும் நேரத்தில் ஒரு மின்னஞ்சலை திருடி அவர்களது ரகசியங்களை பார்க்க முடியும். இதுவரை ஒரு லட்சம் மின்னஞ்சல்களை உடைத்திருப்பேன் என்றார்.எத்தனையோ பாதுகாப்பு பூட்டுகள் மிகுந்த இணைய தளங்களை ஒரு நிமிடத்தில் உடைத்துள்ளேன்” என்றார்.

“ஆனால் ஒருமுறை கூட நான் மற்றவர்களது ரகசியங்களை வெளிப்படுத்தியதில்லை. எதிக்கல் ஹேக்கர் இல்லையா?” என்று சொல்லி சிரித்தார்.

“இது வரை எது மாதிரியான தளங்களை உடைத்துள்ளீர்கள்?” என்றேன்.

ஒரு பிரபல வங்கியின் பெயரை சொன்னார். பிறகு ஒரு இராணுவ வெப்சைட்டின் பெயரை சொன்னார். ஒரு மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டார். ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை சொன்னார் அவர் அடுக்கிக்கொண்டே போக எனக்கு பிரமிப்பாக இருந்தது.

“தனிநபர்களது மின்னஞ்சல்களை உடைத்து பார்த்ததுண்டா?” என்று கேட்டேன்.


“நிறையவே. தனிநபர்கள் மின்னஞ்சல்களில் பெரும்பாலும் செக்ஸ் ஸ்காண்டல் வீடியோக்கள், பெண்கள் அவர்களது காதலர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நிர்வாண வீடியோக்கள், வங்கி நிதிநிலை அறிக்கைகள் என்று எதெல்லாம் அவர்கள் ரகசியமென்று நினைக்கின்றார்களோ அதெல்லாம் பார்த்துள்ளேன். பொது வாழ்க்கையில் உத்தமர்களாகவும், புனிதர்களாகவும் தங்களை காட்டிக்கொள்ளும் எத்தனையோ பிசினஸ் மேன்கள், அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் எல்லாருமே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு அழுக்குடன் நிர்வாணமாக நிற்கின்றார்கள் என்று தெரிந்துக்கொள்ள அவர்களது மின்னஞ்சலை உடைத்தால் போதும். உலகப் புகழ்பெற்ற ஒரு பிரபல மதகுருமாரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் அந்த மடத்தில் இருக்கும் பெண் சீடர் ஒருத்திக்கு காம ரசம் சொட்ட சொட்ட அனுப்பிய கடிதத்தை படித்துள்ளேன். ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவருக்கு க்யூபாவில் எத்தனை வங்கிகளில் கணக்கு உள்ளது என்ற விவரம் தெரிந்தது. இவ்வளவு ஏன் இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு அரசியல் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் தனது சொந்த நாட்டில் எப்படி இனக்கலவரத்தை தூண்டி விடுகின்றார் என்று தெரிந்தது. நான் தெரிந்துக்கொண்ட ரகசியங்களை வைத்து ஒரு போதும் நான் பிளாக் மெயிலோ பணம் பறித்ததோ இல்லை. எனது தொழில் மனிதர்களை பார்த்து ஏ அற்ப மனிதர்களே. இந்த உலகத்தில் ரகசியம் என்று எதுவும் இல்லை. நீங்கள் இந்த உலகத்தில் ரகசியமாக செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் யாரோ ஒருத்தர் கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றார் . எனவே ரகசியங்களை பாதுகாக்கவும் என்று அவர்களுக்கு வலியுறுத்துவதுதான்” என்றார்.

எனது தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்பியபடியே சொன்னார்.

"உன்னிடம் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. முதல் தேர்வில் ஒரு திறந்து கிடக்கும் அறை முழுவதும் தங்கம் இருக்கின்றது. அடுத்து பூட்டிய அறையொன்றில் என்ன இருக்கின்றது யாருக்கும் தெரியாது. நீ எதை தேர்வு செய்வாய்? எனது பதிலுக்கு காத்திராமல் அவரே சொன்னார். நான் பூட்டிய அறைகளையே தேர்வு செய்வேன். காரணம் நான் பூட்டுகளை திருடவே விரும்புகின்றேன் . எனக்கு தேவை மனிதர்களின் ரகசியங்கள் அல்ல. நான் அதை விரும்புவனும் இல்லை. எனக்கு தேவை பூட்டுகள்தான். பூட்டுகளின் மீதான வேட்கையே என்னை அதை திறந்து பார்க்க வைக்கின்றது."

தேநீர் குடித்தபடியே ,"Fake ஐடிகளிலிருந்து வரும் நபர்களை உங்களால் கண்டு பிடித்து அவர்களது ரகசியங்களை எடுக்க முடியுமா?" என்றேன். கேட்ட பிறகுதான் அப்படி ஒரு கேள்வியை கேட்டே இருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

“நானே எனது ஹேக்கிங் ஆய்விற்காக நூற்றுக்கணக்கான Fake ஐடிக்களை உருவாக்கி வைத்துள்ளேன்" என்றார்.

"இணையம் என்று வந்த பிறகு ஒரிஜினல் என்ன போலி என்ன. எல்லாத்தையும் உடைத்து பார்க்க முடியும். எத்தனையோ அரசியல்வாதிகள் ,எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வைத்துக்கொண்டு தங்களுக்கு தாங்களே பாராட்டி எழுதிக்கொள்வதை நான் கண்டுபிடித்துள்ளேன். ஒரே நபர் ஆண் பெயரிலும், பெண் பெயரிலும் வந்து தனக்குதானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்வதையும் பார்த்துள்ளேன் . அவர்களது பைத்தியக்காரதனத்தை நினைத்து எனக்குள் சிரித்துக் கொள்வேன் . நீங்கள் இணையத்தில் செய்யும் எல்லா செயல்களையும் யாரோ ஒருவர் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார். ஒருவேளை அவருக்கு உங்கள் தகவல்கள் தேவைப்பட்டிருக்காது. அதனால் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்கலாம். மற்றபடி ரகசியம் என்று எதுவும் இங்கு இல்லை” என்றார்.


சற்று நேரம் இருவரும் எதுவும் பேசாமல் எங்கள் சிகரெட்டுகளை மவுனமாக புகைத்து கொண்டிருந்தோம்.

"மனிதர்கள் விசித்திரமானவர்கள். கேவலம் ஒரு அக்றினை பொருளை நம்பி தங்கள் ரகசியங்களை ஒப்படைக்கின்றார்கள். ஆனால் சக மனிதர்களோடு உரையாட சிநேகம் கொள்ள நட்பு பாராட்ட தயங்குகின்றார்கள். பிம்பங்களோடு நாள் முழுவதும் கலவிக்கொண்டு திரிகின்றார்கள். எப்படி நேரில் பார்க்கும் ஒரு நடிகையோடு திரையில் தெரியும் நடிகை ஈர்க்கின்றாரோ அது போல சதா சர்வ காலமும் இணைய பிம்பங்களில் மூழ்கி திளைக்கின்றார்கள். எப்படி நார்சிஸஸ் அரசன் தண்ணீரில் விழுந்த தன் பிம்பத்தை பார்த்து தன்னைத்தானே காதலித்து கடைசியில் இறந்து போனானோ அது போல ஒரு நாள் இந்த மனிதர்களும் மடிந்து போவார்கள் பாருங்கள்" என்றார்.


நிக்கி செளவிடமிருந்து எங்களது மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனைகள் பிராஜக்ட் குறிப்புகள் சிலவற்றின் ஆலோசனைகளையும் சில விளக்க குறுந்தகடுகளையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்     
 
விடைபெறும்போது அவரிடம், "இணையத்தில் உங்களால உடைக்க முடியாத பூட்டே இல்லையா?" சிரித்தபடியே கேட்டேன்.      

"இந்த உலகத்தில ரகசியம் என்றும் எதுவுமில்லை. எல்லா ரகசியங்களும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். என்னால இன்னமும் திறக்க முடியாத பூட்டு எதுனாச்சும் இருக்குமென்றால் அது மனிதர்களின் இதயம்தான். ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் ஒளிஞ்சுக்கிட்டிருக்கு. என்னால ஒரு போதும் நிஜ வாழ்க்கையில வாழும் மனிதர்களின் இதய பூட்டை திறக்க முடியுமென்று தோன்றவில்லை."
 
இன்று காலையில் நிக்கி செள இறந்து விட்டார் என்ற தகவலை கேட்டதிலிருந்து மனதுக்குள் ஏனோ ஒரு இனம் புரியாத தவிப்பு. வழக்கமா இருபத்தி நாலு மணி நேரமும் இணையத்திலேயே செலவு செய்யும் என்னால் இன்று பேஸ்புக் பக்கம் கூட செல்ல முடியவில்லை .

இந்த உலகின் எத்தனையோ மனிதர்களின் ரகசியங்களை கண்டுபிடித்த மனிதன் சர்வசாதாரணமாக பெயர் தெரியாத தீவொன்றில் படகு விபத்தில் உயிரிழந்து அவன் உடல் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனதை வாழ்க்கையின் முரண் நகையென்று சொல்லாமல் என்ன சொல்வது? அவன் உயிர் இழந்தது அவனது முன்னால் காதலிக்கு தெரியுமா? கடைசியாக அவன் எந்த மனிதனது இதயப்பூட்டை உடைத்து பார்க்க முயன்றிருப்பான்? ஒருவேளை 3 Iron படத்தில் வரும் கதாநாயகன் போல விர்சுவல் உலகில் கரைந்து போயிருப்பானா? இங்கேயே சுற்றிக்கொண்டு நமக்கே நமக்கு மட்டும் தெரியுமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நமது Fake ஐடிக்களின் பாஸ்வேர்டுகளை உடைத்து நாம் ஒவ்வொருவரும் இணையவெளியில் நிகழ்த்தும் அபத்தங்களை,சண்டைகளை ,ஆபாசங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பானா? தெரியவில்லை. எதுவுமே பிடிபடவில்லை.

Thursday, July 18, 2013

காந்தம்

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் ஒரு டீக்கடையில் தம் அடித்துக் கொண்டிருந்தேன். எனது பக்கத்தில் ஒரு விநோதமான நபர் வந்து நின்றார். அழுக்கு சட்டை அழுக்கு கட்டம் போட்ட லுங்கி இடது கையில் ஒரு பெரிய துணிப்பை... இருந்தது. வலது கையில் ஒரு நீண்ட பிளாஸ்டிக் கம்பு இருந்தது. கம்பின் ஒரு முனையில் பெரிய சைஸ் கைமுறுக்கு போல ஒரு வஸ்து இருந்தது. அதில் சில ஆணிக்கள், ஸ்டீல் ஸ்க்ருக்கள், சின்ன சாவியொன்றும் கூட கொஞ்சம் இரும்புத்துகள்களும் ஒட்டிக்கொண்டிருந்தன.

அந்த பிளாஸ்டிக் குழாயை பார்க்க விசித்திரமாக இருந்தது. அவரிடம் என்னங்க அதுன்னு கேட்டேன். இது காந்தம்ங்க என்றார்.

"காந்தமா?'

"ஆமாங்க. இந்த கம்பை பிடிச்சிக்கிட்டு தரையில் காந்தத்தை வைத்து நடந்துக்கிட்டே இருந்தா மண்ணுல கிடக்குற ஊசி,ஆணி,இரும்பு சாமான்கள் எல்லாம் இதில் ஒட்டிக்கும்"

"இதை வச்சு என்ன செய்வீங்க?"

"இந்த மாதிரி இரும்புகளை சேகரிச்சு எடைக்கு போட்டா காசு கிடைக்கும்" என்றார்

"அப்படியா எவ்வளவு கிடைக்கும்?" என்றேன் ஆர்வமாக

"அது கிடைக்குங்க. எடைக்கு போட்டா ஒருநாளுக்கு ஐம்பதும் கிடைக்கும். பத்தும் கிடைக்கும். சில நேரம் ஒண்ணுமே கிடைக்காது. சில நேரம் இரும்பு சாமான்கள் எதுவும் கிடைக்காது. ஆனால் பணம் செயின் கூட எதுன்னா கீழே கிடக்கும்"

"அது சரி ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இந்த வேலையை செய்யுறீங்க?"

"காலையில ஆறு மணிக்கு போரூர் சிக்னலாண்ட நடப்பேன். அப்படியே விருகம்பாக்கம் நெசப்பாக்கம் ,கேகேநகர்ன்னு நடந்துக்கிட்டே இருப்பேன். சாயங்காலம் வரைக்கும் இந்த காந்தத்துல என்ன ஒட்டுதோ அதை இந்த பைக்குள்ள போட்டுக்குவேன். ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் இதுங்கள காயலான் கடையில போட்டுடுவேன்"

அவர் டீயை குடித்து விட்டு ஏற்கனவே பாதி குடித்து மிச்சமிருந்த ஒரு பீடித்துண்டை சட்டைப் பாக்கெட்டில் இருந்து பற்ற வைத்தார்

"உங்களுக்கு குடும்பம் இருக்கா?".கேட்டேன்

"சம்சாரம் இருக்குங்க" என்றார்.

"அவங்களும் இந்த வேலையைத்தான் செய்யுறாங்களா?" கேட்டேன்.

"இல்லீங்க. அவங்க வடபழனி சிக்னல்ல நோட்டு ,பென்சில் ,காது கொடயுற குச்சி, கார் தொடைக்கற துணியெல்லாம் விக்கறாங்க" என்றார்.

"உங்க வீடு போரூரா?" கேட்டேன்.

"வீடா தமாஷ் செய்யாதீங்க தம்பி. எங்களுக்கெல்லாம் வீடு இல்ல. நாங்க இப்படியே பகல் புல்லா ரோட்டுல சுத்திக்கிட்டு இருப்போம். நைட்டு பத்து பன்னிரண்டு ஆனா பிளாட்பாரம் ஓரமா துணியை விரிச்சு போட்டு படுத்துக்குவோம்" என்றார்

"எப்படிங்க பொண்டாட்டிய வச்சுக்கிட்டு ரோட்டுல குடும்பம் நடத்துறீங்க?"

"ஆமா நாங்க என்ன ஊர் மெச்ச கண்ணாலமா கட்டிக்கிட்டோம். அவ எந்த ஊர்ன்னே எனக்கு தெரியாது. சால்னா கடையில பார்த்தேன். கழுதைய புடிச்சிருந்துச்சு. சேர்த்துக்கிட்டேன்"

"பிளாட்பாரத்துல படுக்கறது கஷ்டமா இல்லீங்க?"

"என்ன செய்யுறது? பழகிடுச்சு. குளிக்கறது .மலம் கழிக்கறது. சம்சாராத்தோட படுக்கறது எல்லாமே ரோட்டுலதாங்க" என்றார். ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் டீயை குடித்தபடியே அவரை பார்த்தேன்.

"இவ்வளவு வெவரம் கேக்குறீங்களே. நீங்க பத்திரிக்கை ஆளா? போட்டோ புடிப்பீங்களா. எதுனா காசு தருவீங்களா ?"

"நான் பத்திரிக்கை ஆளு இல்லீங்க. பேஸ்புக்குல எழுதறவன்"

"ஓ புக்கு எழுதுறவரா?"

ஙே........

"நைட்டுல ரோட்டுல படுக்கறது சிரமமா இல்லீயா?". திரும்ப கேட்டேன்.

"நைட்டு வர்ற இந்த போலீஸ்காரங்கதாங்க தொல்லை செய்யுறாங்கா. கையில இருக்கற அஞ்சு பத்தை பிடுங்கிட்டு போயிடறாங்க." என்றார்.

"உங்ககிட்டேயுமா" என்றேன் சிரித்தபடியே.

"ஆமா. இந்த மாதிரி ரோடு ரோடா காந்தம் வச்சிக்கிட்டு இரும்பு சேகரிக்கறீங்களே. இந்த வேலையை எப்படி ஆரம்பிச்சீங்க?"

"முன்னாடி பிச்சைதான் தம்பி எடுத்துகிட்டிருந்தேன். என்னோட தோஸ்துதான் இப்படி ஒரு தொழிலை கத்து கொடுத்தான்" என்றார்

"அப்ப உங்கள போல நிறைய பேரு இந்த காந்தத்தால இரும்பு எடுக்கற தொழிலை செய்யுறாங்களா?" கேட்டேன்

"ஆமாங்க. சென்னையில எனக்கு தெரிஞ்சு அம்பது பேர் இந்த வேலையை செய்யுறாங்கன்னு நினைக்கின்றேன்"

சற்று நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

"முன்ன மாதிரிவீட்டுகாரங்க இல்லிங்க. நாங்க மெயின் ரோடாத்தான் போய் இரும்பு எடுக்கறோம். வீடு இருக்கற தெருவுக்குள்ள போனா இரும்பு திருடறோம்னு சொல்லி அடிச்சு தொரத்துறாங்க" என்றார்.

"போன வாரம் கூட ஒரு தெருல இந்த குச்சிய வச்சுக்கிட்டு நடந்து போய்கிட்டிருந்தேன். இந்த காந்தம் அவங்க வீட்டு இரும்பு கேட்டுல ஒட்டிக்கிச்சு. அந்த வீட்டமா என்னை திருடன்னு நெனைச்சு தெரு ஆளுங்க என்னை பிடிச்சு போலீஸ்ல கொடுத்துட்டாங்க. கால்ல ரொம்ப அடிச்சுட்டாங்க. அதான் தாங்கி தாங்கி நடக்குறேன்" என்றார்

டீக்கடையிலிருந்து கிளம்புபோது கவனித்தேன். அவர் கையில் இருந்த காந்தக்குச்சியில் என்னனவோ விநோதமான இரும்பு சாமான்கள் எல்லாம் ஒட்டியிருந்தன. அவரது காந்தம் கேட்டில் மாட்டிக்கொண்டபோது அந்த வீட்டம்மா ஓடிவந்ததை கற்பனை செய்து பார்த்தேன். மனித இதயம் இரும்பால் ஆனதுன்னு சொல்றாங்களே. ஒருவேளை அது அவர் கையில் இருக்கும் காந்தக்குச்சியில் ஒட்டியிருக்குமா என்று கவனித்தேன். அது தெரிந்துதான் அந்தம்மா பயந்து போய் ஓடிவந்து போலீசில் சொல்லியிருக்குமோ?

சிரிப்பாக இருந்தது.

Friday, July 5, 2013

சண்டை போடாதீங்க ஏட்டையா

சொல்வனம் மின்னிதழில் வண்ணநிலவனுடைய நேர்காணல் படித்தேன்.


நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கின்றேன். அப்போது சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடர் ஒளிபரப்புவார்கள். எனது அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொடர். அது வண்ணநிலவனுடைய கடல்புரத்தில் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்ட தொடர்.அந்த தொடர் அப்போது மிகவும் பேமஸ். அந்த தொலைக்காட்சித் தொடர் வழியாகத்தான் எனக்கு வண்ணநிலவனுடைய எழுத்துகள் அறிமுகமானது. வீட்டு பக்கத்திலிருந்த லைப்ரரியிலிருந்து கடல்புரத்தில் நாவலை எடுத்து வந்து படித்தேன். அதன் பிறகு நான் ராஜேஷ்குமார் , சுபா, சுஜாதாவிலிருந்து மாறி வேறு பக்கம் போக ஆரம்பித்தேன். விபரம் தெரிந்து முதலில் தொட்ட இலக்கிய நாவல் அல்லது இலக்கிய டிவி சீரியல்(?) கடல்புரத்தில் என்று நினைக்கின்றேன்.

சொல்வனம் நேர்காணல் முதல் வரி படிக்க ஆரம்பித்ததும் கிளர்ந்த மலரும் நினைவுகளை அடக்கி விட்டு மேலே படித்தேன். படிக்க படிக்க கோவில் மண்டபத்தில் யானை கட்டி கிடந்த இடத்தில் இருக்கும் ஒரு வெறுமையை பார்ப்பது போல உணர்ந்தேன். மூத்த எழுத்தாளர்கள் பலரும் இப்போது தங்களை அப்டேட் செய்துக் கொள்வதில்லையோ என்று தோன்றியது

குறிப்பாக நேர்காணலின் இந்த பகுதி நிறைய யோசிக்க வைத்தது

சுகா: இணையத்தில எழுதறதெல்லாம் வாசிக்கிறீங்களா?

வண்ணநிலவன்: அய்யய்யய்யய்யே! அது வாந்தி பேதியாயில்லா இருக்கு! காலரா வந்த மாதிரி. அது என்ன எளுதுதாங்க எல்லாரும்… நமக்கு இருக்கறதும் போயி, எளுத முடியாமப் போயிரும்னு பயம் வந்துட்டுது, அதனால படிக்கறதில்ல.

வண்ணநிலவன் என்றில்லை நான் கவனிக்கும் நிறைய மூத்த எழுத்தாளர்களது பார்வையில் இணையம் குப்பை என்றும், இணைய எழுத்துகள் தரமற்றவை என்றுமே ஒரு பொதுக்கருத்து நிலவுவதை கவனிக்க முடிகின்றது . இதுக்கு ஜெனரேசன் கேப்பை காரணம் காட்டினாலும் இணையத்தில் நடக்கும் ஒரு சில ஆபாச மயிர்ப்பிடிச் சண்டைகளையும், வசவு கட்டுரைகளையும், தனிநபர் தாக்குதல்களையும், சொறிந்து விடும் எழுத்துகளையும் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் இவை மட்டுமே இணையம் இல்லை. இணையம் என்பது கடல். சமீப காலங்களில் இங்கு இருந்துதான் இலக்கிய வாசிப்பு அதிகமாகியுள்ளது. எப்படி நான் சென்னைத் தொலைக்காட்சியில் வண்ணநிலவனை கண்டெடுத்தேனோ அப்படித்தான் இன்று இணையத்தில் ஒரு தலைமுறையினர் அசோகமித்திரனை கண்டெடுக்கின்றார்கள். வாசிப்பு பழக்கம் இணையம் வந்த பிறகு அதிகமாகி இருக்கின்றது என்றுதான் சொல்வேன். இன்று இணையம் தவிர்த்து வேறு எந்த ஊடகங்களாவது இலக்கிய செயல்பாட்டையும் மூத்த எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் பேசுகின்றனவா என்று பாருங்கள். இணைய எழுத்தாளர்களை பொறுக்கி என்று சொல்பவர்கள் கூட இணையத்தில்தான் எழுதுகின்றார்கள். இணையத்தில்தான் தங்களை விளம்பரம் செய்துக்கொள்கின்றார்கள். இணையம் என்றாலே ஏதோ தினம் தினம் கட்டிப்பிடித்து சண்டைப்போட்டு உருள்வதை போல ஒரு பொதுப்புத்தி இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதே ஊரில்தான் அ.முத்துலிங்கம் கடை போட்டுள்ளார். அழியாச்சுடர்கள் கடை இருக்கின்றது. எஸ்.ரா இருக்கின்றார். இது ஒரு கடல். வேறு வழியில்லை. முத்து குளிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் கண்டிப்பாக நிறைய கிடைக்கும். இணையம் என்ற பெயரைச் சொன்னாலே ஏன் பேயை பார்த்து போல ஓடுகின்றார்கள் என்றுதான் தெரியவில்லை. ஒரு சில பொறுக்கிகளின் நடவடிக்கைகளை மேலோட்டமாக பார்த்து விட்டு இப்படித்தான் என்று தீர்மானித்தால் எப்படி? இணையத்தில் யாருக்கும் எழுத தெரியாது அல்லது எழுத வராது. இணையத்தில் இயங்கும் சில எழுத்தாளர்களே தொடர்ந்து இதுபோன்ற பிம்பங்களை கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஒருபக்கம் இப்படி செய்துக்கொண்டே மறுபக்கம் அவர்கள் நாவல்களை இணையத்தில் விளம்பரம் செய்துக் கொள்கின்றார்கள் . பிறகு அவர்களே இணையத்தில் எழுதுபவர்களை சொறிந்து விடுவதும் இங்கே நடப்பதுண்டு. வட்டங்களையும்,குழுமங்களையும் இங்கேயே உருவாக்குகின்றார்கள்           

இப்படித்தான் தேநீர்கடையொன்றில் நான் மிகவும் மதிக்கும் ஒரு எழுத்தாளரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு பேஸ்புக் ,ட்விட்டர் ,பிளாக் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவர் இன்டர்நெட்டிற்கு ஒரு முறை வந்துள்ளார். வந்தவுடனேயே ஓடி விட்டார். இண்டர்நெட்டில் எல்லாரும் மயிரைப் பிடித்து (அவரு இப்படிதான் சொன்னார்) இழுத்து சண்டை போடுறாங்க. எங்க பார்த்தாலும் ஒரே குப்பை என்றார்.
 
"நான் அவரிடம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இலக்கிய கூட்டங்களில் நீங்க போடாத சண்டையா? உங்களுக்கு நினைவு இருக்குதோ இல்லையோ? நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன் . ஒரு மூத்த கவிஞர் குடித்து விட்டு வந்து உங்க மடியில வாந்தி எடுத்தார் நினைவுக்கு இருக்குதா?" என்றேன் சிரித்தபடியே.

"ஆமா...ஆமா...நீங்க அப்ப சின்ன மீசை வச்சுகிட்டு வெடவெடன்னு கதவு ஓரமா பயந்து போய் எங்க சண்டையை வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுக்கிட்டிருந்தீங்க" என்றார் என்னைப் பார்த்து.

கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. திடீரென கோபத்துடன், "அந்த புடுங்கி அவன் பேரு என்ன ...இப்ப கூட இண்டர்நெட்டுல எழுதறானே....தா..பெரிய பருப்பாட்டம் என்னோட சிறுகதைத்தொகுப்பை புடுங்கி கிழிச்சுட்டான். அன்னைக்கு அவனை வேட்டியை உருவி துரத்தி துரத்தி அடிச்சில்ல பல்லை ஒடச்சேன்" என்றார்.

கொஞ்ச நேரம் இருவரும் தேநீர் அருந்தியபடியே தொண்ணூறுகளின் மலரும் நினைவுகளில் மூழ்கினோம். 

Monday, July 1, 2013

ஓநாய் குலச்சின்னம்


ஓலோன்புலாக் என்ற பகுதி மங்கோலியாவின் சிறந்த மேய்ச்சல் புல்வெளி பிரதேசம். மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஏரிகளும் நிறைந்த பகுதி. அங்கு ஆடு,மாடுகளை பேணி வளர்க்கும் மந்தைக்கு சொந்தக்காரர் பில்ஜி என்ற மேய்ப்பர் அவரது மகன் பட்டு, மருமகள் கஸ்மாய் தவிர அவர்களின் ஒன்பது வயதுச் சிறுவன் பாயர் வசித்து வருகின்றார்கள். பில்ஜி சிறந்த வேட்டைக்காரரும் கூட. அவர்களுடன் திறமை மிக்க ஒரு மேய்ப்பர்குழு இருக்கின்றது. 

இவர்களுடன் ஜென்சென் என்னும் மாணவரும் அவரது சக மாணவ நண்பர்களும் இரண்டாண்டுகளாக தங்கியுள்ளார்கள். ஜென்சென் மற்றும் அவரது சக மாணவர்கள் பீஜிங்கிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஓலோன்புலாக் பூர்வீகம் கிடையாது. ஆடு மேய்ப்பது பற்றியும் , ஓநாய்களைப் பற்றியும், மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலங்களை ஆராய்ச்சி செய்யவும் ஜென்சென்னும்,அவரது நண்பர்களும் இரண்டாண்டுகளாக ஓலோன்புலாக்கில் தங்கியுள்ளார்கள்.  

மங்கோலியர்களுக்கும், சீனர்களுக்கும் கலாச்சார சிந்தனை வித்தியாசங்கள் உள்ளன. சீனர்கள் ஓநாய்களை துரதிர்ஷ்டமாக வெறுக்கத்தக்க விலங்காக பார்க்கின்றார்கள்.ஆனால் நாய்களை அப்படி கருதுவதில்லை. மங்கோலியர்கள் ஓநாய்களை கடவுளாக பார்க்கின்றார்கள். மங்கோலியர்களை  பொறுத்தவரையில் நாய்கள் என்பது ஒரு அடிமை விலங்கு.  என்னதான் நாய்கள் ஓநாய்களிலிருந்து வந்த வம்சமாக இருந்தாலும் நாய்கள் மங்கோலிய மனிதர்களுக்கு ஒரு சேவகன் மட்டுமே. அது வேட்டையாடும் அவ்வளவே. ஆனால் ஓநாய்கள் அப்படி அல்ல. அவை மனிதர்களை காட்டிலும் புத்திக்கூர்மை உடையவை. மனித நாகரீகமே ஓநாய்கள் நாகரீகம்தான். இவ்வளவு ஏன் ஒருக்காலத்தில் உலகின் பாதி நிலப்பரப்பை வெற்றிக்கொண்ட செங்கிஸ்கான் கூட ஓநாய் வளர்த்த பிள்ளைதான் என்று ஒரு மித் மங்கோலியர்களுக்கு உண்டு. மங்கோலிய குலச்சின்னமாக ஓநாய்கள் கருதப்படுகின்றன.

ஒருநாள் பில்ஜியும், ஜென்சென்னும் ஓநாய் கூட்டமொன்று மான்களை வேட்டையாடுவதை பார்க்கின்றார்கள். பிறகு அவர்கள் தங்கள் இடத்துக்கு வந்து விடுகின்றார்கள். மறுநாள் ஜென்சென்னை பில்ஜி அந்த வேட்டை பனி ஏரிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே பனி ஏரியில் இறந்து போன மான்களின் உடல் குவியல் குவியலாக இருக்கின்றன. சில மான்கள் குற்றுயிரும்,குலையுயிருமாக கிடக்கிறன. சில மான்கள் கடித்து குதறப்பட்டு பாதி உடல்கள் மட்டும் எஞ்சியுள்ளன. தங்கள் கால்கள் உறைந்த பனிக்கட்டிகளில் புதையுண்டு சில மான்கள் உயிருக்கு போராடுகின்றன. ஓநாய்கள் வேட்டையாடி விட்டு சில மான்களது உடல்களை இப்படி பனிக்குள் பாதுகாப்பாக்க சேமித்து வைத்து விட்டு சென்றுவிடும் என்று பில்ஜி சொல்கின்றார். ஜென்சென்னுக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. தவிர ஓநாய்களின் வேட்டை தந்திரங்களை பில்ஜி விளக்க ஆரம்பிக்கின்றார். எப்படி உயரமான சுற்றுச்சுவரை உடைய தங்களது ஒரு ஆட்டு மந்தையை ஓநாய் கூட்டமொன்று தாக்கியது என்று சொல்கின்றார். ஒரு தலைமை ஓநாய் சுவற்றில் இரண்டு கால்களை வைத்து நிற்க அதன் மீது ஒவ்வொரு ஓநாயாக ஏறி தப்பியது என்றும், அந்த கடைசி தலைமை நாய் இறந்துப்போன ஆட்டு உடல்களை குவியலாகப் போட்டு அந்த உடல்கள் மீது ஏறி தப்பித்தது என்றும் விளக்குகின்றார். எல்லா ஓநாய்களும் ஏற்கனவே சில ஆடுகளை கொன்று அவற்றின் உடலை குவியலாக போட்டு கடைசி தலைமை நாய்க்கு ஏற்கனவே உதவி செய்து விட்டு தப்பிப்போனதையும் சொல்கின்றார். ஜென்சென்னுக்கு பிரமிப்பாக இருக்கின்றது.                                                        

பனி ஏரியில் இறந்துக்கிடக்கும் சில மான்களை உணவுக்கு மட்டும் தங்கள் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் குழுவினர் உயிரோடு பனிச்சேற்றுக்குள் மாட்டிக்கொண்ட மான்களை விடுவித்து காட்டுக்கு அனுப்புகின்றார்கள். ஓநாய்களின் அந்த வெறிச்செயலை கண்டு கோபமடையும் ஓநாய்களை பலமாக நிந்திக்கின்றான். மான்கள் பாவம் என்கின்றான். பில்ஜிக்கு கோபம் வந்து விடுகின்றது. பில்ஜி ஓநாய்கள் தங்கள் குலச்சின்னம் என்கிறார். ஓநாய்களால் மட்டுமே மான்களின், கால்நடைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால் மேய்ச்சல் நிலங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றார். மேய்ச்சல் நிலங்களை சார்ந்தே எண்ணற்ற சிறு உயிர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன. சீனர்களாகிய நீங்கள் வெறும் புத்தகங்களை படித்து அதன் மூலம் அறிவை பெறுகின்றீர்கள். மங்கோலியர்கள் நாங்கள் படிப் பதில்லை. ஆனால் மேய்ச்சல் நில வாழ்க்கை, வேட்டைகள் மூலமே வாழ்வை பார்க்கின்றோம் என்கின்றார். படித்த சீனர்கள் நீங்கள் சொல்வதை எல்லாரும் நம்புகின்றார்கள். நீங்கள் எப்போதும் சிறிய உயிர்களை காப்பற்றும் முயற்சியில் பெரிய உயிர்களை அழித்து விடுகின்றீர்கள். மான்களின் மேல் இரக்கப்படும் நீங்கள் ஏன் புல்லும் ஒரு உயிர்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள். மான்களாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இயற்கை அந்த ஆற்றலையும் அபரிமித இனப்பெருக்க ஆற்றலையும் தந்துள்ளது. புற்களுக்கு அது இல்லை. ஒரு உயிரை சார்ந்தே இன்னொரு உயிர் இருக்கும் இந்த மேய்ச்சல் நிலங்களில் ஓநாய்களை பாதுகாப்பதன் மூலமே நாம் வாழ முடியும் என்கின்றார். தவிர ஓநாய்கள் மேய்ச்சல் நிலங்களில் வளைகளைத் தோண்டி அதில் வாழ்க்கையை நடத்தும் எலிகளையும், மர்மோட்டுகளையும் உண்கின்றன. ஓநாய்களின் எண்ணிக்கையால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றன. எலிகள், மர்மோட்டுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால் கொசுக்களின் எண்ணிக்கை குறைகின்றன என்றும் விளக்குகின்றார் இந்நாவலின் முக்கியமான பகுதியும் , மையக்கருத்தும் இந்த உரையாடலே. மங்கோலிய மேய்ப்பர்கள் இறந்தவர்களின் உடலை ஓநாய்களுக்கு விருந்தாக தந்து விடுகின்றார்கள். இதன் மூலம் அவர்களின் ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்புகின்றார்கள். 

 இதனிடையில் பில்ஜி குழுவில் இருக்கும் சிலர் ஓநாய்குட்டிகளை குகைகளிலிருந்து திருடி எடுத்து வருகின்றார்கள். ஓநாய் தோல் வாங்கும் ஆட்களிடம் ஓநாய்குட்டிகளை விற்று காசு பார்ப்பது அவர்கள் நோக்கம். பில்ஜி அவர்களை எச்சரிக்கை செய்கின்றார். ஓநாய்கள் பழிவாங்கும் குணம் கொண்டவை. குறிப்பாக தாய் ஓநாய்கள் நம்மை சும்மா விடாது என்று எச்சரிக்கை செய்கின்றார். ஆனால் எல்லாரும் பில்ஜியை பழமைவாதி என்று ஏளனம் செய்கின்றார்கள். யாரும் பில்ஜி பேச்சை பொருட்படுத்தாமல் குட்டிகளோடு திரும்புகின்றார்கள்.               

பட்டுவும் அவனது நண்பன் லாசுருங்கும் இராணுவத்திற்காக ஒரு பெரிய குதிரை மந்தையை வளர்த்து வருகின்றார்கள். இரவோடு இரவாக அந்த மந்தைக்குள் நுழையும் ஓநாய்க்கூட்டம் ஒரு குதிரையை கூட மிச்சம் வைக்காமல் தாக்கி அழிக்கின்றது. நாவலின் இன்னொரு முக்கியமான பகுதி இது. ஓநாய்கள் எவ்வளவு சாதுர்யத்துடனும், பழிவெறியுடனும், போர் நுட்பங்களோடும் வேட்டையாடுகின்றது என்று விவரமாக சொல்லப்படுகின்றது. சும்மாவா சொன்னார் பில்ஜி. ஓநாய்களிடமிருந்துதான் செங்கிஸ்கானே போர்க்கலையை கற்றுக்கொண்டான். மனித நாகரீகமே ஓநாய்களிடமிருந்துதான் பரிணாம வளர்ச்சிப் பெற்றதை ஜென்சென் அறிந்துகொள்கிறான். பில்ஜி பேச்சை யாரும் மதிக்கவில்லை. விளைவு ஒரு மந்தையே அழிந்து விட்டது.                        

விஷயம் கேள்விப்பட்டு அங்கு வருகின்றார்கள் இராணுவப் பிரதிநிதி பாவோ சுங்காய் மற்றும் மேய்ச்சல் நில இயக்குநர் உல்ஜீ. ஓநாய் கூட்டத்தின் வெறிச்செயலைக் கண்டு திகைக்கும் அவர்கள் ஓநாய்க் கூட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் போடுகின்றார்கள். பாவோ அரசாங்க பிரதிநிதி. அரசின் திட்டம் என்னவென்றால் அந்த மேய்ச்சல் நிலத்தை நவீனப்படுத்தி அங்கு விவசாய நிலங்கள் கூடவே செங்கல் கட்டப்பட்ட வீடுகள்,நெடுஞ்சாலைகள், திரையரங்குகள், கடைகள் அமைப்பது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஓநாய்களை அழிக்க ஆரம்பிக்கின்றார்கள்.  

ஜென்சென் ஒரு ஓநாய்க் குட்டிகளை எடுத்து வந்து வளர்க்கின்றான். இதற்கு காரணம் ஜென்சென்னுக்கு ஓநாய்களின் மீது இருந்த காதலோடு, ஓநாய்களை நாய்களோடு கலக்க வைத்து ஒரு திறமையான வேட்டை நாயை உருவாக்குவதும். இதை மிக கடுமையாக எதிர்க்கின்றார் பில்ஜி. ஆனால் பாவோ எதிரியை வெல்ல எதிரியை பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம் என்று சொல்லி ஓநாய் வளர்க்க அனுமதி தருகின்றார். ஜென்சென் ஓநாய்க்குட்டியை வளர்ப்பதன் மூலம் ஓநாய்களின் தந்திரங்களை வாழ்க்கை முறைகளை மிக நுட்பமாக கற்றுக்கொள்கின்றான்.                   

பாவோவின் இராணுவ வீரர்கள் மர்மோட்டுகளை அழிக்கின்றார்கள். மர்மோட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் ஓநாய்கள் உணவு இல்லாமல் அழிந்து விடுமென்று நம்புகின்றார்கள். மர்மோட்டுகளை குவியல் குவியலாக வேட்டையாடி கொல்கின்றார்கள். இடையே அந்த பகுதிக்கு வரும் வெளியாட்கள் அன்னப்பறவைகளை, வாத்துகளை வேட்டையாடி கொல்கின்றார்கள். அதி நவீன துப்பாக்கி மூலம் நரிகளை,ஓநாய்களை வேட்டையாடி கொல்கின்றார்கள். மிக மோசமான இனப்படுகொலைகளை இராணுவ வீரர்கள் செய்கின்றார்கள். தடுக்க வரும் முதியவர் பில்ஜியை அவமதிக்கின்றார்கள். இப்படியே வேட்டை தொடங்கி சில மாதங்களில் அந்த இடமே நிர்மூலமாகின்றது. ஒரு சில ஓநாய்களே எஞ்சுகின்றன. அவையும் மங்கோலியாவின் வெளிப்பகுதிக்கு ஓடி விடுகின்றன. ஓலோன்புலாக்கில் ஓநாய் இனமே அழிகின்றது. ஓநாய்கள் அதிகளவில் இல்லாததால் குதிரைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றது. ஆடு மாடு கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அவற்றுக்கு புல் தட்டுப்பாடு வருகின்றது. வேறு வழியில்லாமல் குதிரைகளை கொல்கின்றார்கள். ஆடு, மாடுகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றார்கள். இயற்கை சங்கிலியிலிருந்து ஒரு கண்ணியை வெட்டியெடுக்க இயற்கை ஸ்தம்பித்து மழை வரத்து நின்று ஊரே சீரழிகின்றது. ஜென்சென் இயற்கைக்கு புறம்பாக கட்டிப் போட்டு வளர்த்த ஓநாய் குட்டியும் சூழலுக்கு ஏற்ப மாறாததால் விரைவில் நோய்வாய்ப்படுகின்றது. வேறு வழியில்லாமல் குழந்தையைப் போல வளர்த்த அந்த நோயில் துடிக்கும் ஓநாயை அவனே மண்வெட்டியால் தலையில் அடித்து கருணைக்கொலை செய்கின்றான். பில்ஜி இறந்து விடுகின்றார். அவரது கடைசி ஆசையின்படி அவரது எஞ்சிய உடலை காட்டுக்குள் கொண்டுச்சென்று போடுகின்றார்கள். ஓலோன்புலாக்கில் ஓநாய்க் கூட்டம் உண்ணும் கடைசி உடலாக பில்ஜியின் உடல் இருக்கின்றது.

ஊரை விட்டு பீஜிங் செல்லும் ஜென்சென் மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து ஓலோன்புலாக் திரும்புகின்றான். ஊர் நவீனமாக மாறியுள்ளது. ஒரு ஓநாய் கூட இல்லை. வெறுமை படர்ந்த முன்னொரு காலத்தில் தான் வளர்த்த ஓநாய்க்குட்டியை கண்டெடுத்த அதன் குகை வாசலில் தனது புதிய நாவலின் சில பக்கங்களை கொளுத்திப் போட்டு ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்கின்றான். ஜென்சென்தான் இந்த நாவலின் ஆசிரியர் என்று நமக்கு தெரிகின்றது.


நாவல் முழுக்க ஓலோன்புலாக்கில் எலிகளோடும், மர்மோட்டுகளோடும், குதிரைகளோடும் , ஆடு ,மாடுகளோடும் ஒரு ஓநாய் அரசன் போல கம்பீரமாக உலாவிய மனதுக்குள் வெறுமை வந்து குடிக்கொள்கின்றது. இந்த உலகத்திலேயே ஆபாசமான விலங்கு மனிதன் என்று தெரிகின்றது. அதே நேரம் சர்வைவல் என்ற தியரிபடி மனிதனை விட எதுவும் வல்லமை இல்லை என்றும் தெரிகின்றது. ஆனால் மனிதனையும் விட மகத்தான சக்தி ஒன்று உள்ளது. அது இயற்கை. அதன் விளைவே இன்று நாம் சந்திக்கும் இயற்கை பேரழிவுகள்.





இந்நூலின் ஆசிரியரை பற்றி:-

ஜியாங் ரோங் 1946-ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957-ல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966-ல் சென்ட்ரல் அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்டில் ஜியாங் கல்வி மேற்கொண்டார். கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைபட்டது. அவருடைய இருபத்தோராவது வயதில், 1967-ல், உள் மங்கோலியாவின் 'கிழக்கு உஜிம்கியூன் பேனர்' இல் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு செல்லும்போது தன்னோடு இரண்டு பெட்டிகள் நிறைய மேற்கத்திய செவ்வியல் படைப்புகளைக் கொண்டு சென்றார் மேலும் அங்கிருந்த பதினோரு ஆண்டுகளில் மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றை தீர்க்கமாக அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். ஒய்வு நேரங்களில் அவை பற்றிய கதைகளைக் கேட்டறிந்ததோடு மேய்ச்சல் நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார்.
 

1978-ல் பீஜிங் திரும்பி 'சமூக அறிவியல்களுக்கான சீன அகாதெமி'யில் தன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் தன் வாழ்வைக் கல்வி துறையாளராக அமைத்துக் கொண்டு 2006 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

2004-ல் வெளியான இந்நாவல் ,அடுத்த இரண்டாண்டுக்குள் நாற்பது லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையானது. 'மேன் ஆசியன் விருது' தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2007-ல் இந்நாவல் அவ்விருதைப் பெற்றது. நாவல் வெளியாகி சில ஆண்டுகள் வரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்த ஜியாங், இப்புத்தகத்தின் எந்தவொரு நிகழ்விலும் விருது வழங்கும் விழாக்களிலும் கலந்துக் கொண்டதில்லை. 'மேன் ஆசியன் விருது' வின் தேர்வுக்குழுவுக்கு இவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு மூலமே இவர் வெளி உலகுக்கு அறியப்பட்டார். எனினும் அந்த விருதையும் அவர் சென்று பெறவில்லை. ஜியாங்கின்இயற்பெயர்: லூஜியாமின்.


சி.மோகனின் மொழிப்பெயர்ப்பை உழைப்பை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. அபாரமென்று சொல்வதை விட வேறு எதுவும் எனக்கு எழுத தோன்றவில்லை.



ஓநாய் குலச்சின்னம்,
ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன்,
அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர்,
விருகம்பாக்கம், சென்னை 93,
பக்கங்கள் 672, விலை 500ரூ.              

Saturday, June 29, 2013

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் நாவல்களை படிக்க வேண்டும்? நான் ஏன் கதை,கவிதை, கட்டுரைகளை வாசிக்க வேண்டும்? நான் ஏன் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவருக்கு என்ன பதிலளித்தேன் என்று பிறகு சொல்கின்றேன்.

புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா என்று என்னைக் கேட்டால் கண்டிப்பாக இருக்க முடியும் என்றே பதில் சொல்வேன். பல்லே விளக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? குளிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? மலம் போய்விட்டு கழுவாமல் வர முடியாதா என்ன? கண்டிப்பாக சாத்தியம்தான். இதெல்லாம் சாத்தியம் என்னும்போது புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாதா என்ன? மேலே சொன்னவை எதுவும் ஒரு உயிர் வாழ்தலின் அத்தியாவசிய செயல்களில் இல்லை.

இங்குதான் உயிர் வாழ்வதற்கும்,உயிர் பிழைப்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டியது உள்ளது. உயிரின் அடிப்படை உணவு உண்பதும் (வேட்டை) , இன்னொரு உயிரை உற்பத்தி செய்வதும்(கலவி). உயிர் பிழைக்க இந்த இரண்டை செய்தால் போதும். இதைத்தான் விலங்குகள் இன்னமும் செய்து வருகின்றன. இதிலிருந்து படிப்படியாக முன்னேறி வந்ததே மனித நாகரீகம். மனிதனின் அடிப்படை குறிக்கோளும் உயிர் பிழைப்பதே. இருந்தாலும் இந்த உயிர் வாழும் வரை அவனுக்கு மேலும் சில சொகுசு வசதிகளும் , என்டர்டெயின்மெண்ட்களும் தேவைப்பட்டன. தலைக்கு கையை மடித்து வைத்துக் கூட அப்படியே உறங்கி விடலாம். ஆனால் மனிதன் தலையணையை கண்டுபிடித்தான். வாழ்க்கையை ருசியாக்கி கொள்ள என்டர்டெயின்மெண்ட்களை கண்டுபிடித்தான். தனது வேட்டைக் களைப்பை போக்கி மறுநாள் வேட்டைக்கு புத்துணர்வோடு கிளம்ப முதல் நாள் இரவு குடித்து விட்டு உறங்கினான். குடிக்கும்போது நடனம் ஆடினான். நடனம் ஆட முடியாதவர்கள் கூட இசைக்கருவிகளை இசைத்தார்கள். வேட்டைக்கு போன கதையை சிறுவர்களுக்கு சொன்னார்கள். தங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு சொன்னார்கள். பிறகு இவை கலை, இலக்கியமாக, நாடகமாக , கவிதையாக ,பாடல்களாக மாறி மாறி இன்று டிவி, சினிமா என்று வந்து நிற்கின்றது. எல்லாமே ஒரு மனிதனால் இன்னொரு மனிதனின் கதையை சொல்லுறதுதான். புத்தகங்கள் படிக்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழும் பலருக்கு ஏன் சினிமா பார்க்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழமாட்டேங்குது என்று தெரியவில்லை. சினிமா பார்க்காமல் கூட இருக்க முடியும்தானே? 

ஆனால் புத்தகங்கள் படிப்பதாலேயே ஒருவருக்கு எல்லாம் தெரிந்துவிடுமா என்றால் அதுவும் யோசிக்க வைக்கும் கேள்விதான். வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாமே தெரிந்து விடாது. நமக்கு தெரியாத விஷயங்களை மற்றவர்களது வாழ்க்கை அனுபவங்கள் ஊடாக தெரிந்துக் கொள்ளலாம். அது எந்த பார்மேட்டில் கிடைத்தாலும் சரிதான். சினிமா பார்மேட்டை விட புத்தகங்கள் வழியாக கொஞ்சம் அதிகப்படியான வாழ்பனுபவம் கிடைக்கும். அதை விட நேரடியாக வாழ்க்கையை வாழ்ந்தே பார்த்து விட்டால் இன்னும் உத்தமம். புத்தகங்களே படிக்காத எத்தனையோ விஷயம் தெரிந்த ஆட்களை எங்கள் ஊரில் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாருமே வாழ்க்கையிலிருந்து விஷயத்தைக் கற்றுக் கொண்டவர்கள். நீங்கள் அப்படிப்பட்ட மேதைகள் என்றால் உங்களுக்கு புத்தகங்கள் தேவைப்படாது.


ஒரு பொடியன் பள்ளிக்கூடம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தரையை பார்த்துக்கொண்டே நடந்து வந்தவன் கண்ணில் ஒரு கசங்கிய பழைய பத்து ரூபாய்த் தாள் தட்டுப்பட்டது. சிறுவன் சந்தோஷமாக அந்தப் பத்து ரூபாயை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அன்றிலிருந்து அந்தப்பையன் எப்போது சாலையில் நடந்தாலும் தரையைப் பார்த்துக் கொண்டே நடக்க ஆரமபித்தான். இப்படியே நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப்பையன் வளர்ந்து முதியவர் ஆகி இறந்தும் விட்டான். இந்த நாற்பது வருடங்களில் அந்தப்பையன் தரையைப் பார்த்துக்கொண்டே நடந்ததில் பத்து நூறு ரூபாய் தாள்கள் , பத்து ஐம்பது ரூபாய் தாள்கள் , இரண்டு ஐநூறு ரூபாய் தாள்கள், பிறகு கொஞ்சம் சில்லறை காசுகள் , ஒரு தங்க மோதிரம், ஒரு வெள்ளி செயின் என்று மொத்தமாக ஒரு பத்தாயிரம் மதிப்புள்ள சொத்து அவனுக்கு கிடைத்ததாம். ஆனால் இந்த நாற்பது வருடங்களில் அவன் வானத்தை ஒருநாள் கூட பார்த்ததில்லை. இந்த நாற்பது வருடங்களில் அவன் இழந்தது கிட்டத்தட்ட ஆயிரம் முழுநிலவுகள், பதினைந்தாயிரம் சூரிய உதயம், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். இரவில் வானம் என்ன நிறமென்று கூட அவனுக்கு மறந்துப்போனது. இலையுதிர் கால மரங்கள் எப்படி இருக்குமென்று மறந்துப்போனான். அணில்கள் எப்படி கிளைகளில் தாவுகின்றன என்று தெரியாது. கிளியின் நிறம் என்னவென்று தெரியாது. பனித்துளிகள் வானில் இருந்து இறங்குவதை கவனிக்க தவறிவிட்டான். இந்த நாற்பது வருட வாழ்க்கையில் ஒவ்வொரு பருவகாலத்திலும் மரங்களில் என்ன நிறப்பூக்கள் பூக்கின்றன என்று அவனுக்கு தெரியாமலேயே போனது.

நான் அன்றாடம் வேலைக்கு செல்கின்றேன். நிறைய பணம் சம்பாதிக்கின்றேன். எனது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன் நான் ஏன் நாவல்கள்,இலக்கியம் படிக்க வேண்டும்? நான் ஏன் சக மனிதர்களின் வாழ்க்கையை கவனிக்க வேண்டுமென்று ஒரு நண்பர் கேட்டாரல்லவா? அவருக்கு நான் சொன்ன கதைதான் இது

Saturday, June 22, 2013

ஒரு மனோதத்துவ நிபுணரும் அவரது நவீனக்கவிதையும்

ஒரு மனோதத்துவ டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் மனோதத்துவ நிபுணர்களிடமும், சாமியார்களோடும் (குறிப்பாக கார்ப்பரேட் சாமியார்கள்) உரையாடுவதை தவிர்க்கவே விரும்புவேன். காரணம் அவர்களோடு உரையாடி ஜெயிக்கவே முடியாது. அவர்களிடம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலே நமது ஐடியாலஜியை அப்படியே நமது மண்டைக்குளிருந்து உருவி அவர்களது ஐடியாலஜியை பொருத்தி விடுவார்கள்.

விஷயத்துக்கு வருகின்றேன்.

இந்த பேஸ்புக்கில் கிறுக்கறது, லைக் போடுறது,கமெண்ட் போடுறது எல்லாம் கூட ஒருவகை மனோவியாதிதான் என்று சொன்னார் டாக்டர். ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன். 

இப்படித்தான் முன்பு இன்னொரு மனோதத்துவ நிபுணரிடம் உரையாடியபோது அவர் சொன்னார். "அடக்க முடியாத காமத்தின் வெளிப்பாடே கலைப்படைப்புகள். ஒருத்தன் செக்சில் திருப்தியடைந்து விட்டால் அவன் கதை,கவிதை மாட்டான்." என்றார். இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் பொதுவாக மனோதத்துவ நிபுணர்கள் கலை, இலக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது குறைந்தபட்சம் அட போங்கய்யா நீங்களும், உங்க கவிதையும் என்று சலித்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

"ஆடும் கூத்து" என்ற திரைப்படம். டிவி.சந்திரன் இயக்கியது. இந்தப் படத்தை பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். இந்த படத்தில் நவ்யாநாயர் ஹீரோயின். அவர் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் அவர் பெயர் மணிமேகலை. சுட்டித்தனமான பெண். அப்பா செல்லம். நல்ல படிப்பாளி. அசோகமித்திரன்,ஜெயகாந்தன் என்று தரமான புத்தகங்களை நூலகங்களில் தேடி தேடி எடுத்து படிப்பாள். திடீரென ஒருநாள் மணிமேகலைக்கு பூர்வஜென்ம நினைவுகள் வந்துவிடும். அவளது நடவடிக்கைகள் அடியோடு மாறிவிடும். அவள் சொல்லும் எதையும் யாரும் நம்ப மாட்டார்கள். அவள் எல்லா விஷயங்களையும் அவளது சொந்தக் கற்பனையிலிருந்து உருவாக்கி சொல்வதாக அனைவரும் நம்புவார்கள்.  

மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவளது தந்தை வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அழைத்து வருவார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்வார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க, அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்வார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா, அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருவார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுவார்.

மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைப்பார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்பாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்பாள்.
 
மனோதத்துவ நிபுணர்களுக்கு  ஏன் எழுத்தாளர்களை பார்த்தால் காண்டாகின்றது. நான் நினைக்கின்றேன். ஒருவிதத்தில் மனோதத்துவ நிபுணர்களும், எழுத்தாளர்களும் ஒரே வேலையை செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இருவருமே மனதின் சிக்கலான சூட்சுமங்களை ஆராய்ச்சி செய்கின்றார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளை நுட்பமாக கவனிக்கின்றார்கள். காமம் எங்கிருந்து உருவாகின்றது என்று உற்று கவனிக்கின்றார்கள். மனதின் விசித்திரமான செயல்பாடுகளை அணு அணுவாக பதிவு செய்கின்றார்கள். எழுத்தாளன் என்றால் அதை அவனது பாத்திரப்படைப்பிற்கு பயன்படுத்திக் கொள்கின்றான். மனோதத்துவ நிபுணர் அதை அவரது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றார். கேஸ் ஸ்டடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றார்       

சரி. எங்கள் உரையாடலுக்கு வருகின்றேன். 

"ஒரு எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் மனோதத்துவம் தெரிந்தவனாகவே இருக்க முடியும். அப்போதுதான் அவனால் எழுத முடியும். ஆனால் ஒரு மனோதத்துவ நிபுணரால் கலை இலக்கிய தளத்தில் செயல்பட முடியாது. வட்டிக்கடைக்காரனிடம் வெற்றுத்தாளை கொடுத்தால் அதில் அவன் எண்களை மட்டும்தான் கிறுக்குவான்" என்றேன்.

டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. 

"யார் சொன்னது? எங்களுக்கும் எழுத வரும்" - என்றார்.

டாக்டர் மேசை டிராயரை திறந்தார். ஸ்கிரிப்லிங் பேட்டை எடுத்து எதையோ யோசிக்க ஆரம்பித்தார். பின்பு வேகமாக எழுத ஆரம்பித்தார். எழுதி முடித்தவுடன் என்னிடம் அதைக் கொடுத்தார். வாங்கி பார்த்து விட்டு ஆடிப்போய் விட்டேன். பிரமாதமாய் இருந்தது கவிதை. கண்டிப்பாக இவர் ஏதாவது இலக்கியப்பத்திரிக்கையில் புனைப்பெயரில்எழுதுபவராகத்தான் இருக்க முடியும்.  

"ஆஹா ஆஹா பிரமாதம் பிரமாதம்" என்றேன்.
                 
ஸ்கிரிப்லிங் பேட்டில் அந்த நவீனக்கவிதை இருந்தது இப்படி.

வட்டம்               
-------------
வட்டம்
வட்டத்திற்குள் வட்டம்
வட்ட வட்டமாய் வட்டம்
வட்டமே வட்டமாய்
வட்டத்திற்குள் வட்டம்       

Thursday, January 24, 2013

முந்தி பிறந்தவன்

நான் இரண்டாயிரத்து பதிமூன்றில்
நின்றுக்கொண்டு
இரண்டாயிரத்து அறுபத்திமூன்றிற்கான
கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன்
நான் ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்திருக்க வேண்டும்

அல்லது
எனது கவிதைகள்
ஐம்பது வருடங்கள் முந்தி பிறந்து விட்டன
அல்லது
நீங்கள் ஒரு ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்தால்
வானத்திலிருந்து இறங்கி வந்த இரண்டு தேவதூதர்கள்
ஒய்எம்சிஏ திடலில் நின்றுக்கொண்டு
எனது கவிதைத்தொகுப்பை விமர்சிப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
பச்சைநிறக் கொம்புகள் கொண்ட இரண்டு ஏலியன்கள்
எனது கவிதையை படித்து
கழிவிரக்கம் கழிவிரக்கமென்று
தலையில் அடித்துக்கொண்டுச் செல்வதை பார்த்திருக்கலாம்

அல்லது
நீலக்கண்களும் பொன்னிற கூந்தலுங்கொண்ட
தேவேலோக சுந்தரிகள் (ஒட்டிப்பிறந்த சகோதரிகள்)
எனது கையெழுத்து வேண்டி புத்தகக்கடை வாசலில்
ஏக்கத்துடன் தவமிருப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
…….
…….
…….

நீங்கள்
ஒரு ஐம்பது வருடங்கள் முந்திப்பிறந்து விட்டீர்கள்
அதை விட குறிப்பாக
இந்தக்கவிதையை ஒரு ஐம்பது வருடங்கள் முந்தி
படித்துத் தொலைத்து விட்டீர்கள்



நன்றி
என்.விநாயக முருகன்