Saturday, July 27, 2013

நந்தி ஒரு மானஸ்தன்

இண்டர்நெட் வந்தபிறகு திட்டுகளும்,வசவுகளும் அதிகமாகி விட்டன. நிஜ வாழ்க்கையில் இல்லாத தாக்கத்தை மனஉளைச்சலை இந்த இண்டர்நெட் வசவுகள் ஏற்படுத்துகின்றன.   

சாலையில் டூவீலரில் செல்கின்றோம். தெரியாத்தனமாக ஆட்டோவில் இடித்து விடுகின்றோம். உடனே ஆட்டோக்காரர் டே..பாடு என்கின்றார் கோபத்துடன். உடனே நாம் பாடுவதில்லை. சாரி சார். தெரியாமல் இடிச்சுட்டேன் என்று பயந்து வந்து விடுகின்றோம். ஆட்டோக்காரர் சிக்னலில் கோடு தாண்டி வந்து நிற்கின்றார். டிராபிக் போலீஸ் கழுவி கழுவி ஊற்ற, சாரி சார். இதோ எடுத்துறேன் சார் ஆட்டோவை என்று பம்முகின்றார் . டிராபிக் போலீசை அவரது மேலதிகாரி திட்டுகின்றார் . அந்த மேலதிகாரியை வார்டு கவுன்சிலர் அவரை அமைச்சர் அவரை எதிர்கட்சி அமைச்சர் இவர்களை பத்திரிக்கைகாரர்கள் இவர்கள் எல்லாரையும் பொதுமக்களாகிய நாம் திட்டுகின்றோம். பிறகு பொதுமக்கள் நாம் நமக்கு நாமே திட்டி க் கொள்வோம். இப்படிதான் ஒரு ஆரோக்யமான ஜனநாயக அமைப்பு இயங்குகின்றது.

நேற்று ஒரு முகம் தெரிந்த அலுவலக நண்பரிடம் (பேஸ்புக் வந்தபிறகு யாரை நண்பர்கள் என்று குறிப்பாக எழுத வேண்டியுள்ளது) சாட்டுக்கு வந்தார். அவரது பேஸ்புக்கில் இவர் ஏதோ அசிங்க அசிங்கமாக திட்டி ஒரு கமெண்ட் போட அவர் இவரை அசிங்க அசிங்கமாக திட்டி விட்டாராம். மிகவும் மனவேதனையாக உள்ளது என்றார்.  

"அந்த திட்டினவர் உங்களுக்கு ஸ்கூல் காலேஜ் நண்பரா?" என்றேன்.

"இல்லை" என்றார். 

"சரி.உங்களுக்கு தெரிந்தவரா?" என்றேன் 

"இல்லை" என்றார்.

"சரி.அவரை நேர்ல பார்த்து பேசி இருக்கீங்களா?" என்றேன்   

"இல்லங்க பேஸ்புக்கில்தான் பழக்கம்.அதான் ரொம்ப வருத்தமாயிருக்கு" என்றார்.

"வீட்ல உங்க பொண்டாட்டி,மேலதிகாரி,ரோட்டுல போறவன்,வர்றவன் எல்லாம் திட்டுறான். ஆனா அவங்க மேல வராத கோபம் உங்களுக்கு பேஸ்புக் FakeID திட்டுக்கள் மேல வருதா?" என்று கேட்டேன்.

"அதெப்படி எழுத்துல திட்டினா கோபம் வரக்கூடாதா? வள்ளுவர் கூட நாவினால் சுட்ட வடுன்னு சொன்னாரே" என்றார்.

"அது. விடுங்க அது அந்த காலத்துல பேஸ்புக் இருந்துச்சா? வள்ளுவரை யாராவது திட்டியிருப்பாங்க. அவர் பதிலுக்கு இப்படி ஒரு குறள் எழுதியிருப்பார்.எழுத்துல வாங்குறது, அடிச்சுக்கறது எல்லாம் அடியா?" கேட்டேன்.

"அப்படின்னா எழுத்தால மனவுளைச்சல் கொடுக்கறது உங்களுக்கு வலிக்காதா?படிக்கும்போது உங்களுக்கு வலிக்காதா?" என்னைப் பார்த்து கேட்டார்.            

"உண்மையான மனிதர்களின் திட்டு வலிக்கும். அவர்களின் எழுத்து வலிக்கும். ஆனால் பேஸ்புக்கில் அப்படி யாரும் இருப்பதாக தோன்றவில்லை. அறம் வைத்து பாடுவது எல்லாம் முடிந்து விட்டது" என்றேன்

"அது என்ன அறம் வைத்து பாடுவது?" என்றார் நண்பர்      

தமிழில் அறம் பாடுதல் என்று ஒன்று உண்டு. அதாவது யார் மேல் அறம் வைத்து பாடுகின்றார்களோ (பாட்டுடைத் தலைவன்) அதை கேட்ட உடன் அவர்கள் இறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை அந்த காலத்தில் இருந்தது.

நந்தி வர்மன் என்ற பல்லவ மன்னன் எட்டாம் நூற்றாண்டில் இருந்தான். போரில் நந்தி வர்மனை கொல்ல முடியாத எதிரிகள், நந்தியின் மேல் அறம் வைத்து பாட ஒரு புலவரை ஏற்பாடு செய்தார்கள். அந்த புலவரும் காசுக்கு ஆசைப்பட்டு முதலில் நந்திவர்மன் மேல் அறம் வைத்துப் பாடினான். ஆனால் பிறகு மனம் மாறி பாடல் எழுதமாட்டேன் என்று சொல்லி விட்டான். அந்தப் புலவருக்கு ஒரு பரத்தையிடம் தொடர்பு இருந்தது. அவளோடு தனித்து இருக்கும் போது அந்த புலவர் தனது நந்தி கலம்பகம் என்ற தொகுப்பிலிருந்து சில பாடல்களை பாடி காண்பித்துள்ளார்.

ஒருநாள் அந்த பரத்தை அரண்மனை வீதி வழியாக செல்லும்போது அவளுக்கு நினைவிலிருந்த சில நந்திக் கலம்பக பாடல்களை பாடிக் கொண்டே போனாளாம் .

அதை அரண்மனைமாடத்தில் நின்றுக் கொண்டிருந்த நந்திவர்மன் கேட்டுவிட்டான். அவனுக்கு அந்த பாடல்கள் மிகவும் பிடித்துபோக அவளை வரவழைத்து அந்தப் பாடல்களின் பிண்ணனி அறிந்துள்ளான். பிறகு அந்தப் புலவனை வரவழைத்தான்.

புலவனும் கண்ணீரோடு உண்மையை சொல்லி விட்டார்.

நந்திவர்மன் மகிழ்ச்சியோடு புலவனை கட்டிப்பிடித்து முழுப் பாடல்களையும் பாடும்படி கேட்டான்.

புலவர் சம்மதிக்கவில்லை . "அரசே , இந்தப் பாடல்களை முழுதும் நீங்கள் கேட்டால் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்று எவ்வளவோ எடுத்துச் சொன்னார்.

நந்திவர்மன் கேட்கவில்லை. இப்படி ஒரு அருமையான பாடல்களுக்காக உயிரையே கொடுக்கலாம் என்று சொல்லி அவரைப் பாடச் சொன்னான்.

புலவன் சொன்னார் "மன்னா, மொத்தம் நூறு பாடல்கள் உள்ளன. நூறு பந்தல்கள் அமையுங்கள். நான் ஒவ்வொரு பாடல் பாடும் போதும், நீங்கள் ஒவ்வொரு பந்தலில் இருந்து கேட்க வேண்டும். அப்படி நான் நூறாவது பாடல் பாடும் போது, நீங்கள் நூறாவது பந்தலில் இருந்து கேட்பீர்கள். நான் பாடி முடித்தவுடன், உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்" என்றார்.

மன்னனும், சம்மதித்து ஒவ்வொரு பாடாலாய் கேட்டு கொண்டு வந்தான். நூறாவது பாடல் கேட்ட பின், அந்த பந்தல் திடீரென்று தீப் பிடித்து எரிந்து மன்னனும் எரிந்து சாம்பலாய் போனான். இதுதான் நந்திவர்மன் கதை.

நந்திவர்மன்  எதிரிகள் பந்தலுக்கு தீ வைத்து கொளுத்தி விட்டார்கள் என்றும் ஒரு கதை உண்டு.

ஆனால் இந்த ஒரு வரி கதையில் அவ்வளவு சுவாரஸ்யம், திடுக்கிடும் சம்பவங்கள், புலவரின் கள்ளக்காதல் கிசுகிசு எல்லாம் இல்லாததால் அது உண்மையான வரலாறாக இருக்க முடியாது.               

இந்த கதையை சொன்னதும்

"அப்படியா? இது உண்மைதானா? " நண்பர் கேட்டார்.        

"அந்த காலத்துல உண்மை இருந்துச்சு. நேர்மை இருந்துச்சு. காசுக்கு ஆசைப்பட்டாலும் பிறகு மனம் மாறி புலவர் நல்லவரா மாறிட்டார். மன்னனிடம் உண்மையை சொல்லி விட்டான். கலைக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று நினைத்தான் நந்திவர்மன். ஒருவேளை அந்த புலவர் பாடிய நூறாவது பாடலில் பந்தல் தீப்பிடித்து எரியாமல் இருந்திருந்தால் கூட பந்தலுக்கு தானே நெருப்பு வைத்து செத்திருப்பான். ஏன்னா நந்தி ஒரு மானஸ்தன்" என்றேன்  

"அப்படின்னா இப்ப உள்ளவங்க மானங்கெட்டவங்களா?" என்றார் நண்பர் கோபத்துடன்.

அப்படி நான் சொல்லல. எனக்கு தெரிஞ்சு ஒருத்தர் வீட்டுல பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க மலை உச்சிக்கு போயிருக்கார். தற்கொலை செஞ்சிக்க போனவன் அங்கே பாறைக்கு பக்கத்தில ஏதோ ஒரு நாவல் கிடந்திருக்கு. சரி. சாவுறதுதான் சாவுறோம். அந்த நாவலை படிச்சுட்டு அரைமணி நேரம் கழிச்சு சாவலாம். இப்ப செத்து அவ்வளவு சீக்கிரம் எங்க போகபோறோமுன்னு நாவலை பிரிச்சுருக்கான். நாவல் படிக்க படிக்க அது அவனை வேறு ஏதோ ஒரு உலகத்திற்கு அழைச்சுட்டு போயிருக்கு. அது இதுவரை பார்க்காத உலகம். அவனுக்குள் என்ன என்னவோ தோன்றியிருக்கு. இந்த நாவலை எழுதின எழுத்தாளரை உடனே பார்க்கனுமுன்னு மலை உச்சியிலிருந்து விடுவிடுன்னு இறங்கி எழுத்தாளர் வீட்டிற்கு போய் நடந்த உண்மைகளை சொல்லியிருக்கான். எழுத்தாளருக்கு செம ஆச்சர்யம். அப்படியா என்னால நீங்க தற்கொலை செஞ்சுக்கற முடிவை கைவிட்டுட்டியா? கேட்க, அவன் சொன்னானாம். என் பொண்டாட்டி திட்டிட்டான்னு தற்கொலை செஞ்சுக்க போனேன். இவ்வளவு கேவலமா கதை எழுதற உன்னை எத்தனை பேரு கழுவி கழுவி ஊத்தியிருப்பாங்க. நீயே உயிரோட இருக்கும்போது நான் ஏன் உயிரோடு இருக்கக்கூடாது என்றானாம்

Thursday, July 25, 2013

ஒரு சிறுகதை இரண்டு சம்பவங்கள்

பாஸ் நீங்க உங்களோட கட்டுரைகளை அப்படியே சிறுகதையா எழுதலாமே என்று பேஸ்புக்கில் ஒருத்தர் கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

நான் சமீபத்தில் பார்த்த கேள்விப்பட்ட இரண்டு சம்பவங்களை இங்கு எழுதுகின்றேன்.

சம்பவம்-1
----------------
சேகரும் , நானும் ஒன்பதாம் வகுப்பில் ஒரே பிரிவில் படித்தோம். பத்தாம் வகுப்பு வந்தவுடன் அவன் வேறு பிரிவு சென்று விட்டான். சென்று விட்டான் என்பதை விட அனுப்பி வைத்தார்கள் என்று சொல்ல வேண்டும். எங்கள் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் ஒரு வித அரசியல் நடக்கும். ஒன்பதாம் வகுப்பில் நன்றாக படிக்கும் மாணவர்களை பத்தாம் வகுப்பில் ஒரு பிரிவுக்கு அனுப்புவார்கள். மோசமான மாணவர்களை இன்னொரு பிரிவுக்கு அனுப்புவார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை வடிகட்டி அனுப்பி அதன் மூலம் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்தி விடலாமென்பது அவர்கள் கணக்கு. சேகருக்கு வருகின்றேன்.

நடிகர் அரவிந்த்சாமி எட்டாம் வகுப்பு படிக்கும்போது எப்படி இருந்திருப்பார் என்று கற்பனை செய்துக்கொள்ளவும். அப்படியே இருப்பான் சேகர். அப்படியே அரவிந்தசாமிக்கு திருநீறு பட்டை போட்டுக்கொள்ளவும். பட்டை என்றால் திக்காகவும் இருக்கக்கூடாது. மெலிதாகவும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு விபூதி பட்டையை அவனது வீட்டில் எப்படி வைத்து விடுவார்கள் என்று இன்னமும் ஆச்சர்யமாக இருக்கும்.

இந்த பட்டையை உங்க வீட்டுல வச்சாங்களா இல்ல செஞ்சாங்களா என்று கிண்டல் செய்வோம். சிரித்து க்கொள்வான். சேகர் அப்படிதான். என்ன கிண்டல் செய்தாலும் அதிர்ந்து பேசமாட்டான். எவ்வளவு வம்பு இழுத்தாலும் நகர்ந்து சென்று விடுவான். ஆனால் படிப்பு என்று வந்துவிட்டால் அவன் குட்டி தாதா. கணக்கில் செண்டமும் மற்ற பாடங்களில் செண்டத்திற்கு ஒன்றிரண்டு மார்க்குகள் குறைவாகவும் எடுப்பான். .

எந்தளவு சேகரை நாங்கள் கிண்டல் செய்து வம்பு இழுக்கின்றோமோ அந்தளவு எங்களுக்கு திட்டும்,அடியும் விழும். சேகரிடமிருந்து இல்லை. வாத்தியார்களிடமிருந்து. கணக்குப்பாட விடைத்தாள் திருத்தப்பட்டு வரும். சேகரது விடைத்தாளில் மூன்று இலக்க மதிப்பெண் இருக்கும். எங்கள் விடைத்தாளில் அந்த மதிப்பெண்ணின் கடைசி இலக்கம் இருக்கும். சேகர் மூத்திரத்தை வாங்கி குடிங்கடா என்று வாத்தியார் கத்துவார். நல்லவேளை மூவாயிரம் பேர் படிக்கும் அந்த பள்ளிக்கூடத்தில் பொண்ணுங்களுக்கென்று தனி பிரிவு இருந்தது. இருபாலாரும் இணைந்து படிக்கும் பிரிவுகளும் உண்டு. ஆனால் எங்கள் பிரிவில் வெறும் பசங்க மட்டும்தான். எந்தளவு சேகரை வாத்தியார்கள் நேசித்தார்களோ அந்தளவு நாங்கள் அவனை எதிர்த்தோம். அவனை பெயில் மார்க் ஆக்க எவ்வளவோ முயன்றும் எதுவும் நடக்கவில்லை. தேர்வுக்கு முதல் நாள் அவனது புத்தகங்களை ஒளித்து வைத்தோம். வருடம் முழுவதும் படிக்கின்றவனுக்கு ஒருநாள் என்ன செய்யும்? அவனுக்கு சினிமா ஆசையை காட்டி சினிமாவுக்கு அழைத்துச் செல்வோம். ஆனால் எங்களுக்குத்தான் சினிமா பைத்தியம் பிடித்தது. இப்படி கல்லுளி மங்கன் போல படிப்பையே ஒரு தவம் போல செய்த சேகர் என்ற முனிவர் பத்தாவது வரும்போது அவனும்,நானும் வேறு வேறு பிரிவுகள் மாறி இருந்தோம். பத்தாவதில் நான் சுமாரான மதிப்பெண்களோடு பாஸ் செய்து வேறு பள்ளிக்கு சந்தோஷமாக சென்றேன். சேகர் ஸ்டேட் பர்ஸ்ட் வருவானென்று எல்லாரும் எதிர்பார்த்தோம். ஆனால் ஸ்டேட் பர்ஸ்ட் வரவில்லை. இரண்டு பாடங்களில் மட்டும் மாநில அளவில் மூன்றாவது. கணக்கில் வழக்கம் போல செண்டம். இதெல்லாம் இருபது வருட கதை.

இதெல்லாம் இருபது வருட கதை. கடைசியாக சேகரை எங்கு நான் பார்த்தேன். மறந்து விட்டது. நினைவுப்படுத்திச் சொல்கின்றேன. மேற்கொண்டு படிக்கவும்.

ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதுதான் எங்களுக்கு பலான புத்தகங்களும், சினிமாக்களும் அறி முகமானது. பள்ளியில் வெளியே யானையடி என்ற இடமிருக்கும். அந்தக்காலத்தில் யாரோ பெரிய யானை சிலையை அங்கு கட்டி வைத்து விட்டு சென்று விட்டான் போலிருக்கு. அதனால் அந்த பகுதிக்கு யானையடி. யானை கட்டி போராடித்த நெல்வயல்கள் கும்பகோணத்தில் இருந்ததால் யானையடி என்றும் வந்ததாக சொல்வார்கள். ராஜராஜ சோழன் கும்பகோணத்தில் (குடந்தை) இருந்து தஞ்சாவூர் செல்ல இந்த வழியைத்தான் தேர்வு செய்வானாம். சுவாமிமலை வழியாக தஞ்சாவூர் செல்லும். ஆனால் இப்போது யாரும் இந்தப் பாதையை பயன்படுத்துவதில்லை. இப்போது வேறு வழி இருக்கின்றது. அப்படி ராஜராஜனோ வந்தியத்தேவனோ,குந்தவை நாச்சியாரோ செல்லும்போது இங்கு யானையை கட்டிவைத்து ஓய்வு எடுப்பார்களாம். அதனால் யானையடி. நமக்கு எதுக்கு வரலாற்று புரட்டு எல்லாம். அந்த யானை சிலை பக்கத்தில் இருக்கும் பழைய பேப்பர் கடையில்தான் சரோஜாதேவி,பருவராகம்,மருதம் , இளமை ஜுஸ் போன்ற புத்தகங்கள் கிடைக்கும்.

யானையடியிலிருந்து ஐநூறு மீட்டர் தொலைவில் எங்கள் பள்ளிக்கூடம். புத்தகங்கள் வாங்குவதில் சிரமம் இருக்காது. என்ன அப்போதெல்லாம் காசுதான் பிரச்சினையாக இருக்கும். அதற்கும் ஒரு வழி வைத்தோம். மாணவர்கள் எல்லாரும் காசு போட்டு பாதி விலையில் புத்தகங்கள் வாங்கி படிப்போம். ஒவ்வொருத்தனும் ஒருநாள் புத்தகத்தை எடுத்துச் செல்வோம். ஒரு வாரம் கழித்து அதே புத்தகத்தை கால் விலைக்கு விற்று விடுவோம். பலானபடங்கள் பார்க்கதான் அதிக சிரமப்பட வேண்டியிருக்கும். எப்படியாவது டியூசன் பீஸ் அது,இதுவென்று தேத்தி விடுவோம். கும்பகோணத்தில் இருக்கும் ஆறு,ஏழு தியேட்டர்களில் எப்படியும் அவளோட ராவுகள், அவள், பூக்காரி ஏதாவது ஓடும். ஆனால் சேகர் மானஸ்தன். செத்தாலும் பலான படங்களுக்கோ,பலான புத்தகங்கள் பக்கமோ தலைவைத்தும் படுக்க மாட்டான். மற்றபடி கட் அடித்து நாங்கள் செல்லும் விஜயகாந்த் ,சத்யராஜ் படங்களுக்கு அவன் வருவான்

நினைவு வந்து விட்டது . சேகரை நான் மீண்டும் பார்த்தது. அரிசோனாவின் பீனிக்ஸ் ஏர்போர்ட்டில். கடந்த வருடம் ஜூலை மாதம். ஜூலை மாதம் பீனிக்ஸ் என்றால் வெயில் எப்படியிருக்குமென்று நினைத்துக் கொள்ளுங்கள். ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்த சில விநாடிகளுக்குள் முகம் பழுத்து விட்டது . அது சேகர்தானா என்று முதலில் சந்தேகமாக இருந்தது. பக்கத்தில் சேட்டு வீட்டுப்பெண் போல. அவள் பக்கத்தில் ஆறு ஏழு வயதிருக்கும். மகனா மகளா என்று தெரியவில்லை. அவனும் என்னை அடையாளம் கண்டுக்கொண்டான். பத்து வருடங்களாக யு.எஸ்.சில்தான் குப்பை கொட்டுவதாகவும் நியூயார்க் ,புளோரிடா, ரிச்மாண்ட், கலிபோர்னியா என்று யு.எஸ் முழுவதும் அலைந்து விட்டதாகவும் சொன்னான். இப்போது பீனிக்சிலிருந்து கும்பகோணத்திற்கு கிளம்புவதாகவும் ஒரு மாதம் லீவ் எடுத்து விட்டு சென்னைக்கு வந்து வேறு ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை செய்ய போவதாகவும் சொன்னான். அதிக நேரம் பேசவில்லை இருவரும். போன் நம்பர்கள் வாங்கிக்கொண்டோம். அவனுக்கு அடுத்து கனெக்டிங் பிளைட்டை பிடிக்கும் அவசரம். சேகரின் வேலை,சம்பளம் பற்றி விசாரித்தேன். அப்படி ஒன்றும் பிரமாதமாக இல்லை. நான் வாங்கும் அதே சம்பளம்தான்

பீனிக்ஸ் சென்ற பிறகு ஏகப்பட்ட வேலைகளுக்கிடையே நான் சேகரை மறந்தேப்போனேன். இரண்டு மாதங்கள் செய்ய வேண்டிய வேலை. ஒரு மாதத்தில் முடிந்து விட்டது. மீண்டும் சென்னைக்கு வந்து விட்டேன். கடந்த மாதம் எதேச்சையாக கும்பகோணம் சென்றபோதும் எனக்கு சேகர் நினைவுக்கு வரவில்லை. அந்த யானையடி யானை சிலையை எனது காரில் தாண்டியதும் ஆர்வமாகி பழைய புத்தகக்கடையை பார்த்தேன். கடை இல்லை. அங்கெ ஷாப்பிங் மால் போல ஏதோ ஒரு பில்டிங் இருந்தது. சேகர் நினைவுக்கு வந்தான். சேகரின் நம்பரை தேடினேன். அது எனது யு.எஸ் செல்போனில் சேமிக்கப்பட்ட நினைவு. அந்த செல்போன் சென்னையில் விட்டு வந்திருந்தேன். சரியென்று ஒரு பள்ளிக்கூட நண்பருக்கு போன் செய்து சேகரை பற்றி விசாரித்தேன். அவன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக சொன்னார். எனக்கு புரியவில்லை. தெளிவாக சொல்லு. அவன் சாமியாரா போய்ட்டாண்டா. தேட வேணாம்னு லெட்டர் எழுதி வைத்துவிட்டு போய்ட்டான். எங்க போனான்னு தெரியலை. தேடிகிட்டிருக்கோம் என்றான்.


சம்பவம்-2
-----------------
கடந்த வாரம் ஒரு சுவையான சம்பவம் நடந்தது. எனது அலுவலக நண்பர் தான் இதை சொன்னார்.

அவருக்கு தெரிந்த நண்பர் ஒருத்தர். அவரும் எங்கள் அலுவலகத்தில்தான் (கோயம்புத்தூர் கிளை) மாட்யூல் லீடாக வேலை செய்தார்) மாதம் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்குபவர். வீட்டிற்கு ஒரே பையன். வயது இருபத்தைந்து இருக்கும். கல்யாணம் ஆகவில்லை. நல்ல வசதியான குடும்பம் வேறு . அப்பா ஜின்னிங் பேக்டரி வைத்துள்ளார். இருந்தும் பையன் ஆசைப்படி கணிப்பொறி படிக்க வைத்துள்ளார் . அவர் திடீரென ஐந்து மாதங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்து விட்டார். அவர் எனது நண்பரிடம் அடிக்கடி சொல்வாராம். 

இந்த வாழ்க்கை நிலையற்றது. செல்வத்தை தேடி ஓடும் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை. விவேகானந்தர் போல ஏதாவது மனிதகுலத்துக்கு சேவை செய்துவிட்டு செத்துப்போகவேண்டுமென்று நண்பரும் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. ஒருநாள் திடீரென அலுவல வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி ஜக்கி ஆசிரமத்தில் சேர்ந்து விட்டாராம்.

இதுக்கு மேல் நடந்ததுதான் ஹைலைட். நேற்று நானும் எனது நண்பரும் டீக்கடையில் நின்று பேசிக்கொண்டிருந்தோம். எனது நண்பர் என்னிடம் ஒரு பயோடேட்டாவை கொடுத்து,

"இந்த நபருக்கு உங்கள்  டீமில்  ஏதாவது  வேகன்சி உள்ளதா?" என்று கேட்டார்.

"யார் உங்களுக்கு தெரிந்த நபரா?" என்றேன்.

"நான் சொல்லலை..அந்த கோயம்புத்தூர் ஆசிரம பார்ட்டி அவருதான் இவரு" என்று சொல்ல ஒருக்கணம் திகைத்துவிட்டேன்.

 "என்னாச்சு?" என்று கேட்க,

"அதை ஏன் கேட்கறீங்க? இவன் ஆசிரமத்திற்கு போயிருக்கான். அங்க செம வேலை. பெண்டு கழற்றியிருக்காங்கா. கிணத்துல தண்ணி இறைக்கறது. தோட்டத்துக்கு தண்ணி ஊத்தறது. சமையல் செய்யுறது. எச்சி தட்டு கழுவறது. கக்கூஸ் கழுவறது எல்லா வேலைகளையும் இவனை செய்ய சொல்லியிருக்காங்க. நண்பர் வசதியான குடும்பத்தில் பிறந்தவர் அல்லவா? பிஞ்சுக்கை வேற.. கையெல்லாம் கொப்புளம் வந்து உடம்பு முடியாமல் ஹாஸ்பிட்டலில் சேரும்படி ஆகிவிட்டதாம். ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் ஆசிரம சுவர் ஏறிக்குதித்து வீட்டுக்கு ஓடி வந்துட்டாராம். ஒரு மாசம் வேலை இல்லாமல் இருக்கவே தெரிந்த நண்பர்கள் சொந்தக்காரர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கிண்டல் தாங்க முடியாமல் இப்போது மீண்டும் வேலை தேடுகின்றாராம்" என்றார்.


முதல் சம்பவத்திற்கும் இரண்டாவது சம்பவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? அவர் பெயர் சேகர். இவர் பெயர் கூட எனக்கு நினைவில் இல்லை. அவர் யு.எஸ் முழுவதும் அலைந்து கும்பகோணத்தில் காணாமல் போயுள்ளார். இவர் கோயம்புத்தூரை கூட தாண்டாதவர். அவர் பெரிய பணக்காரர் எல்லாம் இல்லை. நடுத்தர வர்க்கம். இவருக்கு கோவையில் சொந்தமாக ஜின்னிங் பேக்டரி உள்ளது. ஒருவேளை அவரு சென்ற அதே ஆசிரமத்தில் இவரும் சேர்ந்திருக்கலாம். யார் கண்டது அந்த இரண்டு பேரும் சந்தித்து கூட பேசியிருக்கலாம். இப்படி ஏதாவது கற்பனை கலந்து அடித்து விட்டால் ஒருவேளை இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் அந்த ஒருத்தர் கேட்ட கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கக்கூடும்.

ஒரு ரயில் பயணத்தின்போது

ரயிலுக்கும், எனக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதோ இங்கு இருக்கும் கூடுவாஞ்சேரிக்கு ஏன் டவுன் பஸ்சிலோ , ஷேர் ஆட்டோவிலோ போகாமல் எலக்ட்ரிக் ட்ரெயினில் போக வேண்டும்?

சனிக்கிழமை அலுவலகம் போறதை விட சள்ளை பிடித்த வேலை எதுவும் இல்லை. ஆனால் சனிக்கிழமை என்றால் நிதானமாக எழுந்து சன் டிவியோ, புதிய தலைமுறை செய்திகளையோ பார்த்து பதினோரு மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். ஆமாம் சனிக்கிழமை அலுவலகம் போறதால கூடுதல் சம்பளம் வர போகுதா என்ன? பதினோரு மணிக்கு கிளம்பும் எண்ணத்தில்தான் கண்விழித்தேன். ஆனால் விழித்ததும் நண்பர் ஒருத்தர் போன் செய்து விட்டார். படப்பையில் நிலம் தேடிக்கொண்டிருந்தார் அவர்.

"நீங்க கூடுவாஞ்சேரி வந்தீங்கனா அரை மணி நேரத்துல லேண்ட் பார்த்துட்டு உங்க ஆபீஸ்க்கு போயிடலாம்" என்றார். மறுக்க முடியாது. நிறைய உதவிகள் செய்துள்ள நெருங்கிய நண்பர்.

வடபழனியிலிருந்து கூடுவாஞ்சேரிக்கு டிக்கெட் எடுத்துவிட்டு வழக்கம் போல அலுவலகம் செல்லும் நினைப்பில் தாம்பரம் இறங்கி விட்டேன். எனது அலுவலகம் தாம்பரத்தில் இருந்தது. மணி ஒன்பதரை. பதினோரு மணிக்கு அலுவலகம் சென்றால் போதும். சரி கூடுவாஞ்சேரிக்கு இன்னொரு பேருந்து பிடிக்கலாமென்று நினைத்தபோதுதான் தோன்றியது. எலக்ட்ரிக் ரயிலில் போனால் என்ன என்ற ஆசை. ரயிலில் சென்று பல வருடங்கள் ஆகின்றது. தாம்பரத்தில் டிக்கெட் எடுத்து ரயில் பிடித்தேன். தாம்பரம் பெருங்களத்தூர் வண்டலூர் ஊரப்பாக்கம் அடுத்து கூடுவாஞ்சேரிதான். மின்சார ரயிலில் கூட்டம் அவ்வளவாக இல்லை. எனது எதிரே ஒரு பெரியவரும்,நடுத்தர வயதுக்காரரும் அமர்ந்து தினத்தந்தியை பகிர்ந்து படித்துகொண்டு வந்தார்கள்.

"ரயில்ல அடிப்பட்டான்னு சொல்றாங்க. அப்படி தெரியலையேப்பா" என்றார் பெரியவர்.

"ஆமா.உடம்ப பார்த்தா அப்படிதான் இருக்கு " என்றார் நடுத்தர வயதுக்காரர்.

அவர்கள் பேச்சிலிருந்து என்னவென்று யூகிக்க முடிந்தது .

கும்பகோணத்தில் நாங்கள் குடியிங்கியிருந்த பகுதியின் பெயர் மாதுளம்பேட்டை. பெயர்க்காரணம் எல்லாம் கேட்காதீர்கள். அது அப்படிதான். எங்கள் வீட்டின் பின்னால் கொல்லைப்புறத்தை தாண்டி (அரை ஏக்கரில் மா,தென்னை,புளியமரம்) தடுக்கி விழுந்தால் ரயில்வே கேட். இந்தப்பக்கம் தஞ்சாவூர், திருச்சி மார்க்கமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள். அந்தப்பக்கம் சென்னை சீர்காழி மயிலாடுதுறையில் இருந்து வரும் ரயில்கள். எனக்கு தெரிந்து ஒரு ரயிலும் சத்தம் போடாமல் சென்றதில்லை. காட்டு மனிதனுக்கு குயில்களின் சத்தத்தை வைத்து அந்த குயில் கர்ப்பமாக இருக்கின்றதா என்று கணிக்க தெரியுமாம். அது போல எங்களுக்கு ரயில்களின் சத்தத்தை வைத்தே அது தெற்கில் இருந்து வருதா,வடக்கு நோக்கி போகுதா என்று ஊகிக்க முடியும். சத்தத்தை வைத்தே அது ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸா அல்லது திருப்பதி நோக்கி போகுதா என்று தெரியும். அந்தளவு சத்தங்களும் நேரங்களும் பழகி விட்டிருந்தன.கடிகாரத்தை பார்க்காமல் ரயில்களின் சத்தத்தை வைத்தே மணி அஞ்சு அன்றோ ஒன்பது என்றோ சொல்லிவிடுவோம். அப்போதெல்லாம் ரயில்கள் ஓரளவுக்கு நேரம் தவறாமல் வந்துக் கொண்டிருக்கும் காலம். மழைக்காலம் ,புயல் சின்னம் ,மறியல் போன்ற சில விதிவிலக்குகள் தவிர.

முதன்முறையாக ரயிலில் அடிபட்ட மனிதனை பார்த்தபோது எனக்கு வயது ஏழு. இப்போது நினைத்தால் காட்சிகள் மங்கலாக இருக்கின்றன . மாதுளம்பேட்டையில் பழைய சாக்குத் துணிகளை ஏலத்தில் எடுத்து விற்கும் ஒரு நடுத்தர வயது மனிதர். குடும்பப்பிரச்சினை காரணமாக ரயில் முன்னே விழுந்து தற்கொலை செய்துக்கொண்டார். தண்டவாளம் பக்கத்தில் கூட்டமாக இருந்தது. வீட்டுக்கு தெரியாமல் வேடிக்கை பார்க்க சென்று திரும்பியபோது செம அடி விழுந்தது என் அம்மாவிடம். அன்று காய்ச்சல் வந்துவிட்டது. கூட்டத்தை விலக்கிக் கொண்டு பார்த்தபோது இரண்டு கால்கள் துண்டாக கிடந்தன. சற்று தள்ளி ரத்தம். சற்று தள்ளி குப்புற கிடந்தார் அந்த சாக்குத்துணி வியாபாரி. பக்கத்தில் அவர் மனைவி தலைவிரி கோலமாக சத்தம் போட்டு அழுதுக் கொண்டிருந்தார். எனக்கு காய்ச்சல் வந்ததற்கு காரணம் அந்த கால்களை பார்த்ததினால் இல்லை. அந்த பெண்மணியை பார்த்துதான். எப்படி சொல்வது. பார்ப்பதற்கு பத்ரகாளி போல அவ்வளவு ஆவேசத்துடன் உக்கிரமாக இரண்டு கைகளால் தலையில் அடித்துக் கொண்டு அழுதுக் கொண்டிருந்தார். ஏழு வயது பையனுக்கு அது போன்றதொரு காட்சி கொஞ்சம் அதிகம்தான்.

அதன் பிறகு ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை பார்க்கும்போது எனக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பித்திருந்தது. நான் ஆறாவது வகுப்பு சென்றிருந்தேன். நாங்கள் மாதுளம்பேட்டையிலிருந்து ரயிலடிக்கு குடி பெயர்ந்தோம். கும்பகோணம் ரயில் நிலையத்தின் எதிரே தண்டவாளத்திற்கு அந்தப்புறமாக இருக்கும் தெருவை ரயிலடி என்பார்கள். ரயில் அடியில் இருப்பதால் ரயிலடி. ரயிலில் அடிபட்டு இறப்பவர்கள் என்றும் அர்த்தம் கொள்ளலாம் அங்கு சென்ற பிறகுதான் மாதத்திற்கு ஒரு ரயில் சாவை பார்ப்பது வழக்கமாகிவிட்டது. மூன்று வருடங்கள் அங்கு குடி இருந்தோம். இருபது தற்கொலைகளை பார்த்திருப்பேன். ஆட்டுக்குட்டியை காப்பாற்ற வேண்டி ரயிலுக்கு முன்னே விழுந்து அடிப்பட்டு இறந்துப்போன சிறுவன். ஓடும் இரயிலிலிருந்து குதித்து எதிரே வந்த ரயில் முன்னே அடிப்பட்டு இறந்த பெண். கணவன் திட்டியதால் குழந்தையுடன் ரயில் முன்னே விழுந்து செத்த இரண்டு உடல்கள். பெண்ணுக்கு வளைக்காப்பிற்காக ஸ்வீட் பாக்கெட்டுகளுடன் வாங்கி வந்து திரும்பி தண்டவாளத்தில் கால் சிக்கி அடிப்பட்ட பெரியவர். ரயில் கிராஸிங்கிற்காக காத்திருக்கும்போது ரயிலில் இருந்து இறங்கி எதிரே இருக்கும் வெள்ளரித் தோட்டத்தில் வெள்ளரிப்பிஞ்சு பறிக்க சென்று எதிரே வரும் ரயிலில் அடிப்பட்ட சிறுமி. படிக்கட்டில் தொங்கியபடி சென்று எதிரே வந்த போஸ்ட் மரத்தில் அடித்து ரயில் பெட்டிகளுக்கு நடுவில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவன் . இன்னும் பலர்.சரியாக நினைவு இல்லை. ஆமாம் செத்த பிறகு எல்லாருடைய கைகளும், கால்களும் ஒரே மாதிரிதானே சிதறி கிடக்கும். நள்ளிரவில் ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்கள் ஆளில்லா பகுதிக்குள் இறப்பவர்களது நிலைமைதான் பரிதாபமாக இருக்கும். காட்டுக்குள் கை,கால்களை நாய்கள் இழுத்துக்கொண்டு வந்து எங்காவது கருவக்காட்டுக்குள் போட்டுவிடும். ஆடு மேய்க்கும் சிறுவர்கள் வந்து சொன்னால்தான் உண்டு. ஒருமுறை பக்கத்துக்கு வீட்டுப்பெண் அதிகாலையில் வாசல் தெளிக்க செல்லும்போது நாய் இழுத்து வந்த கையை பார்த்து தெருவே அமளியானது இன்னமும் நினைவில் உள்ளது.

எட்டாவது கோடை விடுமுறையில் நாங்கள் ரயிலடியை விட்டு வெகுதூரம் குடி பெயர்ந்திருந்தோம். எப்பவாவது ரயில் சாவுகளை கேள்விப்படுவதோடு சரி. நேரில் எதுவும் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை. ஆனால் சில வருடங்கள்தான் மீண்டும் ரயில் எனது வாழ்க்கையில் குறுக்கிட ஆரம்பித்தது. கும்பகோணத்தில் கணிப்பொறி படிப்புக்கென்று கல்லூரி இல்லாததால் தஞ்சாவூர் சென்று படிக்க வேண்டியதாகிவிட்டது. கும்பகோணத் திலிருந்து தஞ்சாவூர் ஒரு மணி நேர பயணம். தினமும் பேருந்தில் செல்ல முடியாது. கட்டணம் அதிகம். ரயில் என்றால் கல்லூரி மாணவர் என்று சொல்லி சலுகைவிலை பாஸ் வாங்க முடியும். கிட்டத்தட்ட மூன்று வருடம். ஆயிரம் நாட்கள் . போக வர நூறு கிலோமீட்டர்கள். ஒரு மனிதன் எத்தனை ரயில் சாவுகளை பார்த்திருப்பான். எத்தனை ரயில் சாவுகளை கேள்விப்பட்டிருப்பான். அவனுக்கு எத்தனை ரயில் டிரைவர்கள் ,டிடிஆர்க்கள் பழக்கமாகி இருப்பார்கள். எத்தனை புதிர்கதைகளை கேட்டிருப்பான். யூகித்து கொள்ளுங்கள்.

ஒரு நாள் மாலை தஞ்சாவூர் ரயில்வே காண்டீனில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது பக்கத்தில் இருந்த ரயில் டிரைவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் மறுநாள் வேலையை ராஜினாமா செய்யப் போவதாக சொன்னார். என்னவென்று விசாரித்தேன். அவர் செங்கொட்டை எக்ஸ்பிரஸ் டிரைவர். காலை அவர்தான் வண்டியை எடுத்துள்ளார். திட்டை பக்கத்தில் வரும்போது தண்டவாளத்தின் இடதுபுறமிருந்து ஒரு இளைஞன் ஓடிவந்துள்ளான். வலதுபுறமிருந்து ஒரு பெண் ஓடிவந்து இரண்டு பேரும் அப்படியே தண்டவாளம் நடுவே கட்டிப்பிடித்து நின்றுள்ளார்கள். இது என்ன டவுன் பஸ்ஸா? நினைத்தவுடன் பிரேக் போட. இரண்டு பேரையும் தூக்கி எறிந்து விட்டதாம். காதல் தோல்வின்னா வேறு எங்கேயாச்சும் போய் சாகவேண்டியதுதானே. எதுக்கு நம்ம முன்னாடி விழுந்து கஸ்டப்படுத்தறாங்க என்றார். அவர் கண்கள் கலங்கியிருந்தன. கண்டிப்பாக இறந்துப்போன அந்த பெண் வயதில் ஒரு மகளோ ஒரு மகனோ அவருக்கு இருந்திருக்கலாம். இரயிலில் அடிபட்டு சாகும் தருணங்களில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகுபவர்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் இறந்துப்போன மனிதர்களுக்கு நெருங்கியவர்களாக இருக்க மாட்டார்கள். அவர்கள் ரயில் ஓட்டுநர்களாகவே இருப்பார்கள். வாழ்நாள் முழுவதும் அவர்கள் கொலை குற்றவாளிகளை போல தங்களை உணர்கின்றார்கள் .                 

ஒரு நாள் மதியம் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்றுக்கொண்டிருந்தேன். ரயில் நிலையத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நடைமேடை பெஞ்சில் அமர்ந்து தேர்வுக்கு படித்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் ரயில் வந்துக் கொண்டிருந்தது. நான் எழுந்து நின்றேன். பின்னால் ஏதோ சத்தம் . திரும்பி பார்ப்பதற்குள் அந்த வயிறு பெருத்த ஆடு தண்டவாளத்தில் பாய்ந்தது. அதன் வயிற்றின் அளவை வைத்து பார்த்தால் அது எப்படியும் இரண்டுக் குட்டிகளை போடும். நிறைமாதம் என்று ஊகிக்க முடிந்தது. கணநேரத்தில் எதுவும் தோன்றவில்லை. நாங்கள் எல்லாரும் அந்த ஆட்டை விரட்ட அது குழப்பமடந்து தண்டவாளத்தை விட்டு விலகி ஓடாமல் ரயிலை நோக்கி ஓட ஆரம்பித்தது. நிலையம் பக்கத்தில் என்பதால் ரயிலும் மெதுவாகத்தான் வந்தது. தூரத்திலிருந்து இதை கவனித்து விட்ட ரயில் டிரைவரும் மிக சாமர்த்தியமாக பிரேக் போட்டு நிறுத்தினார். ஆனாலும் ரயில் மிக சரியாக வந்து ஒரு அடி. ஒரே அடிதான். ஆடு சற்று எம்பி விழுந்தது. பத்து விநாடிகளில் மெல்ல அப்படியே கண்ணை மூடி இறந்துவிட்டது. ஆச்சர்யமாக ஒரேயொரு கீறல் கூட ஆட்டின் மேல் இல்லை. எனக்கு பக்கத்தில் இருந்த பெரியவர் பார்த்துவிட்டு வந்து சொன்னார். அந்த ஆடு ரயிலில் அடிபடவில்லை. அதிர்ச்சியில் இறந்துருக்கும்.

இன்னொரு முறை ரயிலின் படிக்கட்டுகளில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடியே சென்றுக் கொண்டிருந்தேன். திடீரென பயங்கர சத்தம். ரயில் நிற்க பக்கத்துப்பெட்டிகளில் இருந்த எல்லாரும் கீழே குதித்து ஓடினார்கள். நானும் குழப்பத்துடன் ஓடி சென்று பார்த்தேன். ஸ்கூல் யூனிபார்ம் அணிந்திருந்த ஒரு மாணவன் உடல் கருவமரம் பக்கத்தில் கிடந்தது. தலையை மட்டும் காணவில்லை. தண்டவாளத்தில் ஒரு நசுங்கி போன டிபன் பாக்சிலி ருந்து சிதறிய தயிர்சாதம் கூட சிதறிப்போய் கிடந்த மூளை. அந்தக் காட்சியை பார்த்த இரண்டு மாதங்கள் என்னால் அசைவ உணவை கூட சாப்பிட முடியவில்லை.

ரயிலுக்கு வெளியே பார்த்தேன். கூடுவாஞ்சேரி போர்டு தெரிந்தது. இப்படி ரயிலில் அடிப்பட்டவர்களை பற்றிய செய்திகளை கேள்விப்படும் போதெல்லாம் பழைய நினைவுகள் வந்து மனதை என்னவோ செய்கின்றது.

ரயிலில் அடிப்பட்டு இறந்த உடல்களை பார்க்கும்போதெல்லாம்,அது போன்ற செய்திகளை கேள்விப்படும்போதெல்லாம் ஏதோ ஒரு புதிரின் ரகசியங்களை அவிழ்ப்பது போல தோன்றும் எனக்கு. பேருந்தில் அடிப்பட்டு இறப்பவர்களுக்கும் ரயிலில் அடிப்பட்டு இறப்பவர்களுக்கும் சில வித்தியாசங்கள் உண்டு. அது என்னைப் போன்ற ரயில் சாவுகளை நிறைய பார்த்த ஆட்களுக்கு நன்றாக அடையாளம் கண்டுப்பிடிக்க முடியும். இதில் எல்லாம் பெருமையா என்று கேட்காதீர்கள். ஏதோ சொன்னேன். அவ்வளவுதான்.

பேருந்தில் அடிபட்டு இறக்கும் உடல்களை பார்த்தால் பேருந்து அவர்களை உள்ளே இழுத்து அரைத்து தள்ளியது போல இருக்கும். ஆனால் ரயில் அப்படி செய்யாது. அது மனிதர்களை என்னிடம் வராதே போ அந்தப்பக்கம் என்று கடுப்புடன் சிதறடித்து வீசி விடும். கை கால்கள் சிதறி தள்ளி போய் விழுவார்கள். பேருந்தில் அடிபடுவர்களை பார்த்தால் அநேகமாக குடல் வெளிவந்து விடும். ஆனால் ரயில் விபத்தில் அதற்கான வாய்ப்பு குறைவு. கையோ,காலோ,தலையோ உடல் உறுப்புகள் ஒன்றாவது பிய்ந்து தனியாக வீசி தூக்கி எறியப்படும். மிகச்சரியாக இரண்டு துண்டுகளாக பிய்த்தெறியப்பட்ட ஒரு உடலை பார்த்துள்ளேன். ரயிலடியில் வசிக்கும்போது வீட்டு ஓனரின் ஆட்டுக்குட்டியொன்று ரயிலின் முன்பு விழுந்து அடிபட்டு விட்டது. குட்ஸ் ஷெட்டின் பக்கமாக தண்டவாளம் ஓரமாக ஆட்டுக்குட்டிகளை மேய விட்டதால் ஆர்பிஎப் போலீசார் அபராதம் கட்டச்சொன்னார்கள். அப்போது ஆர்பிஎப் போலீசார் வைத்திருந்த ஆறடி நீள காக்கிநிற பைகளை பார்த்தேன். வித்தியாசமாக இருந்தது. அவர்களிடம் கேட்டபோது ரயிலில் அடிபட்டு சிதறி போகும் மனித உறுப்புகளை இதில்தான் பொட்டலம் கட்டி வைப்போம் என்றார். பிரேத பரிசோதனை முடிந்து உரியவர்களிடம் கொடுப்போம் என்றார். அப்படி ஒரு பையை பார்த்தது அபூர்வம். அதுவும் அடிப்பட்ட உடல்களை கட்டவென்றே பிரத்யேக பைகள் பைகள் செய்கின்றார்கள் என்பது வியப்பாக இருந்தது. தவிர ரயிலில் அடிப்பட்டால் உடல் ஒருவிதமாக கருத்து விடும். கிட்டத்தட்ட மின்சாரக்கம்பியை பிடித்தவர்கள் போல அட்டைக்கரியாக இல்லாவிட்டாலும் ஓரளவு கருப்பாக இருக்கும். உறைந்த ரத்தமும் கருத்துப் போய் இருக்கும். மற்ற எல்லாவற்றையும் விட ரயில் சாவு கொடுமையானது என்று நினைக்கின்றேன். நீ ரயில்ல அடிபட்டுத்தான் சாவ என்று சாபம் விடும் ஆட்கள் நிறைய பேரை பார்த்துள்ளேன். எழுதுவதற்கும்,பகிர்வதற்கும் நிறைய சாவுகள் உள்ளன.

வெளியே பார்த்தேன் . கூடுவாஞ்சேரி நிலையம் . ரயிலை விட்டு இறங்கினேன். முதுகுக்கு பின்னால் இருவரும் இப்போது ரயிலில் அடிப்பட்டு இறந்து போன வாலிபரை விட்டுவிட்டு விவசாயம், லோன் தள்ளுபடி பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள். இது விபத்துதானா? கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இறங்கி சாலையில் நடக்கும் வரை இளவரசனின் அந்த பிளவுண்ட முகமும் இது விபத்துதான் என்று மருத்துவர்கள் சொன்ன அறிக்கையுமே மனதில் அலை போல அடித்துக் கொண்டிருந்தது. சாலையில் இருந்த பெட்டிக்கடைகளில் எல்லாம் இளவரசன் படம் போட்ட செய்தித்தாள் போஸ்டர்கள் தொங்கின. லேசான காற்றோடு மழை வரும் போல மேகங்கள் திரண்டுக் கொண்டிருந்தன. மனது குழப்பமாக இருந்தது. தூரத்தில் ஒரு புள்ளிபோல எனது நண்பர் பைக்கோடு காத்திருந்தார்.

Wednesday, July 24, 2013

இந்த பொழப்புக்கு எருமை மாடு மேய்க்கலாம்

சனிக்கிழமை காலை ஏழு மணி. அம்மாவும், மனைவியும் எங்காவது வெளியில் போகலாம் என்று திடீரென சொல்ல எங்கு போவதென்று குழப்பம். வெளியே தாழ்வழுத்த காற்று மண்டலம். விட்டு,விட்டு பெய்துக்கொண்டிருந்தது. சென்னைக்கு பக்கத்திலேயே எங்காவது சென்று வரலாம் என்று தோன்றியது. எங்கு போவது? அப்போதுதான் சுருட்டுப்பள்ளி நினைவுக்கு வந்தது . சுருட்டுப்பள்ளியில் ஒரு சிவன் கோவில் இருக்கின்றது. அங்கு அழைத்துச் செல்லுங்கள் என்று வீட்டில் நச்சரிப்பு ஆரம்பித்தது. போதாதற்கு சரியாக அன்று சனிபிரதோஷம். டிரைவருக்கு போன் செய்தபோது காலை மணி எட்டு. எனக்கு சுமாராகவும் எனது மனைவிக்கு அசாத்திய திறமையுடனும் கார் ஓட்ட தெரியுமென்றாலும் மழையில் கார் ஓட்டுவது ரிஸ்காக தோன்றியது.    

டிரைவர் மெதுவாக வீட்டிற்கு வந்து சேர்ந்தபோது மணி எட்டரை. இதற்குள் எனது மகள் தண்ணி பாட்டில்கள் ,கேமரா எல்லாம் எடுத்து காருக்குள் காருக்குள் தயாராக வைத்து விட்டாள். அவளுக்கு லேசாக காய்ச்சல் வேறு. இருந்தாலும் வெளியில் செல்லும் குஷி அவளுக்கு. போரூர் சிக்னல் போக்குவரத்தை தாண்டி மதுரவயலை நோக்கி செல்லும் சென்னை பைபாஸில் ஏறும்போது மணி ஒன்பது.

எனது மனைவிதான் சுருட்டுப்பள்ளி செல்லும் வழியை டிரைவருக்கு சொல்லிக்கொண்டே வந்தாள். இரண்டு டோல்கேட்டுகளை தாண்டி கல்கத்தா செல்லும் அந்த மெகா பைபாஸில் கார் இறங்கும்போது மெதுவாக கேட்டேன். 

சுருட்டுப்பள்ளிதான் போறோமா?     

பேசாம வாங்க. உங்களுக்கு ஒன்னும் தெரியாது. நான் கூகிள் மேப்புல ஏற்கனவே வழி பார்த்துட்டேன். இப்படித்தான் போகனும். 

சுருட்டுப்பள்ளிக்கு பூந்தமல்லி ஸ்ரீ பெரும்புதூர் சாலை வழியாக திருவள்ளூர் சென்று பெரியபாளையம் பக்கம் போகுமென்று எப்போதோ கேள்விப்பட்ட நினைவு. டிரைவரிடம் கேட்டேன். அவரும் புதுசு. வழி தெரியாது என்று சொல்லிவிட்டார். எனது மனைவி டிரைவருக்கு வழி சொல்லிக்கொண்டே வந்தார். வழியெல்லாம் பாலங்களும்,பைபாஸ்களும்,பிளை ஓவர்களும் கட்டிக்கொண்டே இருந்தார்கள். இந்த உலகம் இன்றுதான் பிறந்தது போல எங்கு பார்த்தாலும் சாலைகளை புதுப்பித்துக்கொண்டே இருந்தார்கள். தடை காரணமாக நெடுஞ்சாலைகளில் இருந்து அகற்றபட்ட காலி டாஸ்மாக் கடைகள் ஆங்காங்கே பரிதாபமாக நின்றுக்கொண்டிருந்தன.           

கார் ஒரு மணி நேரம் சென்றிருக்கும். தடா பத்து கிலோமீட்டர் என்று அறிவிப்பு பலகை வந்தது. நான் பயந்து போய் காரை நிறுத்த சொன்னேன்.

எனது மனைவிக்கும் குழப்பம் வந்துவிட்டது. இந்நேரம் சுருட்டுப்பள்ளி வந்திருக்கனுமே. நான் கூகிள் மேப்ல பார்த்தேனே. இங்குதானே சுருட்டுப்பள்ளி இருக்குதுன்னு சொன்னாங்க என்றாள். டிரைவர் காரை விட்டு இறங்க, நான் கண்ணுக்கு எட்டுன தூரத்தில சுருட்டுப்பள்ளி இருக்குதான்னு பார்த்தேன். தெரியவில்லை. இங்கு இருந்த ஊர் எங்கு போயிருக்கும் என்று குழப்பம். ஒரு மினி லாரி நின்றுக் கொண்டிருந்தது. அவரிடம் கேட்டோம். என்னது சுருட்டுப்பள்ளியா? அதுக்கு எதுக்கு இந்த ரூட்டுல வந்தீங்க? நீங்க சென்னையில இருந்து வந்தா பெரியபாளையம் ரூட்டுல இல்ல போயிருக்கனும். ஊத்துக்கோட்டை வழியா போயிருக்கலாம் என்றார் .  

எங்கள் டிரைவர் என்னைப பார்த்து, ஊத்துக்கோட்டையா. இதை முன்னாலே சொல்லியிருக்கலாமே. நீங்க கல்கத்தா ரோடு, ஆந்திரா பார்டர்ன்னு சொன்னதும் நானும் இந்த பக்கம் வந்துட்டேன் என்றார்

நான் எனது மனைவியை பார்த்தேன். இல்ல கூகிள் மேப் ஒருவேளை தப்பா இருக்குமோ என்றாள். பெரிய மழை வரும் போல வானம் இருண்டுக்கொண்டு வந்தது. காரை திருப்பிக்கொண்டு வந்த வழியே போரூர் வரை செல்வது சள்ளை பிடித்த வேலை. அதுக்கு பேசாமல் வீட்டுக்கு சென்றுவிடலாம். மணி பத்து. யாரும் சாப்பிடவில்லை. காருக்குள்ளும் குடிதண்ணீரை தவிர வேறு எதுவும் சாப்பிட எடுத்து வைக்கவில்லை இதற்கிடையில் எனது மகளுக்கு லேசாக காய்ச்சல் வந்து காருக்குள் ஒருமுறை வாந்தி எடுத்து விட்டாள்.

வந்த வழியே போக முடியாது. வேறு ஏதாவது வழியிருக்கா என்று அவரிடம் கேட்டேன் . மினி லாரி டிரைவர் நெடுஞ்சாலையில் இருந்து கிளைபிரிந்த சின்ன சாலையை கைகாட்டினார். இப்படியே போனா வெள்ளவேடுன்னு ஒரு ஆந்திர கிராமம் வரும். அப்படியே வெள்ளவேடு கிராமத்தை தாண்டினா செக்போஸ்ட் வந்துடும் . அங்கிருந்து சுருட்டுப்பள்ளி பக்கம் என்றார். நான் எனது மனைவியை பார்த்தேன். அப்போது கூட அவள் கூகிள் மேப்தான் தப்பு என்று சொல்ல நான் எதுவும் பேசாமல் டிரைவரை வெள்ளவேடு போக சொன்னேன்.      

வெள்ளவேடு நோக்கி கார் செல்ல செல்லதான் எவ்வளவு பெரிய மடத்தனம் செய்துவிட்டோம் என்று. அது போன்ற ஒரு சாலையை இதுவரை பார்த்ததே இல்லை. அரைமணிநேரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இரண்டு பக்கமும் மாந்தோப்புகள். ஒருவேளை கார் ரிப்பேர் ஆகி நின்றால் கூட யாருக்காவது தகவல் தெரிவித்து அவர்கள் வருவதற்குள் அங்கு காத்திருக்க முடியாது. நல்லவேளை செல்போன் சிக்னல் இருந்தது. குண்டும் குழியுமான சகதி நிறைந்த சாலை முடிவற்று சென்று கொண்டே இருந்தது. ஒரு சின்ன கிராமம் வந்தது . எனது மகளுக்கு சாப்பிட ஏதாவது வாங்கி கொடுக்க கடையை தேடினால் அந்த கடையில் எதுவும் இல்லை. முறுக்கு,பிஸ்கட் மட்டும்தான் இருந்துச்சு. பயபுள்ள வேறு சிட்டியிலேயே வளர்ந்தாச்சுல்ல. பிஸ்கட் வேண்டாம். ஏதாவது கேக்,பப்ஸ் இருந்தா வாங்கி கொடுங்கன்னு சொல்ல, இந்த நடுக்காட்டில் கேக் கடைக்கு எங்கே போறது. சிப்ஸ் பாக்கெட் இருந்தது. சரி ஒரு பாக்கெட் கொடுங்க என்று வாங்கினால் லேயிஸ் சிப்ஸ் இல்லை. எனது மகளுக்கு லேயிஸ் சிப்ஸ்தான் பிடிக்கும்.

சரி எப்படியாவது வெள்ளவேடு போயிடலாமென்று டிரைவரை காரை வேகமாக விட சொன்னேன். எங்கிருந்து வேகமாக போறது. ஒத்தையடி சாலையின் இந்தப்பக்கம் பெரிய கண்மாய். கொஞ்ச நேரத்தில் தூரத்தில் மலைகள் தெரிய ஆரம்பித்தன. அநேகமாக அவை தடா பால்ஸ் ஏரியாவாக இருக்குமென்று நினைக்கின்றேன். பிறகு வந்தது அட்டகாசமான இயற்கை காட்சிகள். இரண்டு பக்கமும் பச்சை பசேலென்று நெல் வயல்கள். எருமை மாடுகள். கண்ணுக்கெட்டிய தூரம் ஆட்கள் இல்லை. எருமைகள் தனியாக மேய்ந்துக்கொண்டிருந்தன. பத்து நிமிடங்கள் மெய்மறந்து அந்த இயற்கை காட்சியை பார்த்துக்கொண்டே வந்தேன். எனது இடது பக்கமிருந்து ஒரு பெரிய வாத்துக்கூட்டம் சரேலென சாலையில் ஏறியது. எனது மகளுக்கு கான்பித்தேன். அந்த பசி மயக்கத்திலும் அவள் வாத்துக்கூட்டங்களை பார்த்து சிரித்தாள். கொஞ்ச நேரத்தில் ஒரு பெரிய சினைப்பன்றி குட்டிகளோடு சாலையில் நிதானமாக சென்று க்கொண்டிருந்தது. தூரத்தில் சிறுவர்கள் பம்ப்செட்டில் குளித்துக்கொண்டே எங்கள் காரை பார்த்து வேகமாக கைகாட்டினார்கள். கார் ஒரு சின்ன கிராமத்திற்குள் நுழைந்தது.

அங்கும் பப்ஸ் இல்லை. லேயீஸ் சிப்ஸ் இல்லை. பசி அதிகமானதால் வேறு வழியில்லாமல் லேபிள் எதுவும் ஒட்டாத பெயர் தெரியாத எண்ணையில் பொறித்த ஏதோவொரு வற்றல் பாக்கெட்டை எனது மனைவி வாங்கி கொண்டு வந்தாள்.  

வெள்ளவேடு செல்லுமுன்பு கடைசியாக ஒரு ஆந்திர கிராமம் வந்தது. வயதான மனிதர்கள் எல்லாம் தலையில் முண்டா துண்டுகளை கட்டிக்கொண்டு பீடி புகைத்தபடியும் , சிறுவர்கள் குளங்களில் கல் வீசி எறிந்துக் கொண்டும் விளையாடிக்கொண்டிருந்தார்கள். புறப்படுவதற்கு தயாராக இருந்த ஒரு மினி லாரியில் பெண்கள் உற்சாகமாக அமர்ந்திருந்தார்கள்.  

அந்த கிராமத்தை தாண்டியவுடன் செக்போஸ்ட் வந்தது. லாரி டிரைவர்களிடம் ஆந்திர போலீசார்கள் மாமூல் வாங்கும் லாவகம் பிரமிப்பாக இருந்தது. முன்பெல்லாம் டிரெயின் டிரைவர்கள் ரயிலை ஓட்டிக்கொண்டு வரும் வேகத்தில் ஸ்டேஷன் மாஸ்டர்களிடம் டோக்கன் மாற்றுவார்கள். அது போல டிரைவர்கள் வரும் வேகத்தில் செக்போஸ்ட் ஆட்களிடம் டக்கென கையில் இருக்கும் சுருட்டி இருக்கும் நூறு ரூபாய்த்தாளை தந்து விட்டு செல்கின்றார்கள். ஒருவழியாக செக்போஸ்ட் தாண்டியதும் ஒரளவு சிற்றூர் போல இருந்தது. அங்கே எல்லா கடைகளும் குறிப்பாக மெடிக்கல் ஷாப்பும் கிளினிக்குகளும் இருந்தன.  

உயிர் வந்தது போல இருந்தது. அப்போதுதான் ஒரு விஷயம் தெரிந்தது. என்னதான் கிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வளர்ந்தாலும் இப்போதெல்லாம் சென்னையை விட்டு ஓரடி நகர்ந்தாலே ஏன் பதற்றம் வந்து விடுகின்றது? நகரத்துல இந்த பொழைப்பு பொழைக்கறதுக்கு பதில் கிராமத்துல நாலு எருமைமாடுகள் மேய்க்கலாம் என்று பதிவுகள் எழுதுகின்றோம். ஆனால் நிஜ வாழ்க்கையில் நம்மால் ஒரு நாள் கூட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத கிராமத்தில் தங்க முடியாது என்பது உண்மை. நாம் தங்க விரும்பும் கிராமம் வேறு. அங்கு செல்போன் இருக்க வேண்டும். சேட்டிலைட் டிவி சேனல்கள் வர வேண்டும். மல்ட்டி பிளக்ஸ் இருக்க வேண்டும். கோவில் இருக்க வேண்டும். ஐடி நிறுவனங்கள் இருக்க வேண்டும். கேஎப்சிக்கள்,மெக்டிக்கள் இருக்க வேண்டும். டெர்பி,ஆலன் ஷோலி கடைகள் இருக்க வேண்டும். கூடவே நெல்வயல்கள், பம்ப்செட்டுகள், கூட எருமை மாடுகள் இருக்க வேண்டும்.

Friday, July 19, 2013

பூட்டுத்திருடன்

இன்று காலை ஹாங்காங்கில் இருக்கும் எனது அலுவலக நண்பர் கெளதம் போன் செய்திருந்தார். பேஸ்புக்கில் பெண் ஐடிக்களில் வருபவர்களை பற்றி நான் சமீபத்தில் எழுதியிருந்த ஒரு பதிவை படித்து விட்டு கருத்து சொன்னார். அப்போது எங்கள் உரையாடல் எதேச்சையாக மென்பொருள் பாதுகாப்பு பற்றியும்,Fake ஐடிக்கள் பற்றியும் , குறிப்பாக நிக்கி செள பற்றியும் திரும்பியது.

"நிக்கி செள இறந்து விட்டார் தெரியுமா?" என்றார் கெளதம். எனக்கு தூக்கி வாரி போட்டது.

"எப்போ என்றேன்?"

"தெரியல. ஒரு நண்பர் சொன்னார்."
"என்னாச்சு?"

"ஏதோ படகு விபத்தாம். கடல்ல மூழ்கி பாடி கூட கெடக்கல. அதுக்கு மேல  எனக்கும் ஒன்னு தெரியாது " என்றார்.
 
நிக்கி செள (Niki Chow) வை நான் முதன்முறையாக சந்தித்தபோது அது ஒரு கோடைக்காலம். தாஜ் ஹோட்டலில் டின்னர் இடைவெளியின்போது தயங்கி தயங்கி அவரிடம் என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். ஐந்தரை அடி உயரத்தில் சின்ன கண்களுடன் ஆனால் முதல் பார்வையிலேயே மனிதர்களை கவர்ந்து இழுக்கும்படியான சிரிப்புடன் வசீகரமாக இருந்தான். தனது சொந்தகிராமத்தில் நண்பர்கள் தன்னை பூட்டுத்திருடன் என்று பட்டப்பெயர் வைத்து அழைப்பார்கள் என்று உடைந்த ஆங்கிலத்தில் சொல்லி சிரித்தார்.


எங்கள் அலுவலகத்தில் வருடந்தோறும் ஏதாவதொரு தொழில்நுட்ப மாநாடு நடக்கும். உலகெங்கும் இருக்கும் தலைச்சிறந்த கணினி தொழில்நுட்ப ஆட்கள் ஒரு இடத்தில் ஒன்றாக கூடுவோம். அங்கு அவர்களது அனுபவங்களை புதிய தொழில்நுட்பங்களை விவாதிப்பார்கள். அந்த வருட மாநாடு ஏப்ரல் மாதத்தில் சென்னை தாஜ் ஹோட்டலில் நடந்தது. ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றும் பலர் வந்திருந்து ஐபிஎம் நிறுவன மென்பொருள் தயாரிப்புகளை சந்தைப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மூன்று நாட்கள் நடந்த மாநாட்டில் இரண்டாம் நாள் மாநாட்டில் நிக்கி செள வந்திருந்து மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனை (Software Security Testing) என்ற தலைப்பில் உரையாற்றினார். 

அன்று ஐந்து பேர் மாநாட்டில் பேசினார்கள். ஆனால் நிக்கி செளதான் அங்கு எல்லாருக்கும் ஹீரோ. அவரது பேச்சின்போது நாங்கள் அனைவரும் ஏதோ மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல அமர்ந்திருந்தோம்.நிக்கி செள ஒரு எத்திக்கல் ஹாக்கர். அதாவது மின்னஞ்சல்களை உடைப்பது,பாஸ்வேர்டு திருடுவது, எங்கெல்லாம் பாதுகாப்பு சரியில்லையோ அதை கண்டுபிடிப்பது , பின்பு அந்த பாதுகாப்பு குறைபாடுகளை அறிக்கை தயார் செய்து மென்பொருள் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கொடுப்பது. மென்பொருள் நிறுவனங்கள் உடனே தங்களிடம் இருக்கும் ஓட்டை,உடைசல்களை சரிசெய்துக்கொள்வார்கள். நிழல் உலக தாதாக்கள் போல இருக்கும் இவர்களை போன்ற ஆட்களை பெரும்பாலும் நிறுவனங்கள் வெளியில் சொல்லாது. காரணம் அவர்கள் பாதுகாப்பின் குறைபாடுகள் வெளியில் தெரிந்துவிடும். போட்டி நிறுவங்கள் இது போன்ற ஆட்களை பணத்தை காட்டி வாங்கி விடுவார்கள்.

3 Iron. கொரிய மொழியில் வெளியான ஒரு திரைப்படம் நீங்கள் பார்த்திருக்கலாம். கிம்கிடக் இயக்கியது. .அதில் வரும் கதாநாயகன் பூட்டிய வீடுகளாக பார்த்து அங்கு செல்வான். பூட்டை உடைப்பான். வீட்டின் உரிமையாளர் அநேகமாக வெளியூர் சென்றிருப்பார். இவன் வீட்டுக்குள் செல்வான். உரிமையாளர் வரும்வரை அந்த வீடு இவனுடையது. அந்த வீட்டினுள் சமைத்து சாப்பிடுவான். டிவி பார்ப்பான். தூங்குவான். துணி துவைப்பான். வீட்டை பெருக்குவான். பழுதான பொருட்களை சரி செய்வான். அந்த வீட்டின் உரிமையாளர் வருவதற்குள் வீட்டை விட்டு வெளியே சென்று விடுவான். ஆனால் ஒரு பொருளை கூட திருடிக்கொண்டு செல்ல மாட்டான். வீட்டின் உரிமையாளர் அங்கு வந்து பார்க்கும்போது அப்படி ஒரு நாள் அங்கு வந்து போனதற்கான அடையாளம் கூட இருக்காது.        

நிக்கி செளவின் நண்பர்கள் அந்த படத்தின் கதாநாயகனுக்கு பூட்டுத்திருடன் என்று செல்லமாக பெயர் வைத்து அழைப்பார்களாம். அதே பெயரையே நிக்கி செளவுக்கும் வைத்து விட்டார்கள். அது போன்றுதான் இந்த எதிக்கல் ஹாக்கர் என்று அழைக்கப்படுபவர்கள். நிக்கி செள உலகின் டாப் டென் ஹாக்கர்களில் ஒருத்தன். உண்மையில் அவன் ஐபிஎம்மில் வேலை செய்யவில்லை. அவன் ஒரு ப்ரீலான்சர். எந்த நிறுவனம் பணம் தருகின்றதோ அந்த நிறுவனத்தின் மின்னஞ்சல் செர்வர்களின், இணைய தளங்களின் பாதுகாப்பு அம்சங்களை சரிபார்த்து வேறு யாரும் ரகசியங்களை திருடாமல் பாதுகாப்பு அம்சங்களை பலபடுத்தி தருவது அவன் வேலை

செமினார் முடித்த களைப்புடன் இருந்த நிக்கி செளவுடன் அன்று அதிகம் பேச முடியவில்லை. எனது மின்னஞ்சல் முகவரியையும் ,தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக்கொண்டார். மறுநாள் நேரம் இருந்தால் சந்திப்பதாக சொன்னார். மறுநாள் அவரே எனக்கு போன் செய்தார். அவரது பயணத்தில் ஒரு சின்ன மாறுதல் இருந்ததால் என்னை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.

மறுநாள் தாஜ் ஹோட்டலில் நாங்கள் சந்தித்தபோது நிறைய பேசினோம். அவருடன் உரையாடியதிலிருந்து அவர் கிழக்கு சைனாவில் ஏதோவொரு குக்கிராமத்தில் பிறந்தவர் என்றும் ஹாங்காங்கில் கணிப்பொறிப் படிப்பை முடித்தவர் என்றும் இரண்டு ஆண்டுகள் முன்பு அவர் காதலி அவரை விவாகரத்து செய்து விட்டு போய் விட்டார் என்பது வரைக்கும் தெரிந்தது. நிக்கி செளவுக்கு சின்ன வயதிலிருந்தே புதிர்களை விடுவிப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்ததாம். பள்ளிக்கூடங்களில் நடந்த பல புதிர் அவிழ்ப்பு போட்டிகளில் கலந்துக்கொண்டு பரிசும் வாங்கியுள்ளாராம். கல்லூரி செஸ் விளையாட்டில் சாம்பியன்ஷிப்பாம். மனித மனம் அதன் விநோதம் பற்றி அறிந்துக்கொள்ளும் சைக்கியாரிஸ்ட்டாக ஆகவேண்டுமென்பது அவரது கனவாக இருந்துள்ளது. ஆனால் தவறி போய் எப்படியோ கணிப்பொறித் துறைக்கு வந்துவிட்டதாக சொன்னார். ஆனாலும் இந்த ஹாக்கர் வேலையை நான் மிகவும் நேசிக்கின்றேன். கிட்டத்தட்ட இதுவும் ஒரு சைக்கியாரிஸ்ட் வேலை போன்றுதான் என்றார் .

நான் ஆச்சர்யமாக அவரை பார்த்தேன்.

“முதலில் விளையாட்டாக அடுத்தவர்களது மின்னஞ்சல் பாஸ்வேர்டை திருடுவதில் ஆரம்பித்தேன். பிறகு ஒருகட்டத்தில் அதில் நிபுணத்துவம் வந்து விட்டது. என்னால் சொடக்கு போடும் நேரத்தில் ஒரு மின்னஞ்சலை திருடி அவர்களது ரகசியங்களை பார்க்க முடியும். இதுவரை ஒரு லட்சம் மின்னஞ்சல்களை உடைத்திருப்பேன் என்றார்.எத்தனையோ பாதுகாப்பு பூட்டுகள் மிகுந்த இணைய தளங்களை ஒரு நிமிடத்தில் உடைத்துள்ளேன்” என்றார்.

“ஆனால் ஒருமுறை கூட நான் மற்றவர்களது ரகசியங்களை வெளிப்படுத்தியதில்லை. எதிக்கல் ஹேக்கர் இல்லையா?” என்று சொல்லி சிரித்தார்.

“இது வரை எது மாதிரியான தளங்களை உடைத்துள்ளீர்கள்?” என்றேன்.

ஒரு பிரபல வங்கியின் பெயரை சொன்னார். பிறகு ஒரு இராணுவ வெப்சைட்டின் பெயரை சொன்னார். ஒரு மருத்துவமனையின் பெயரை குறிப்பிட்டார். ஒரு புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனத்தின் பெயரை சொன்னார் அவர் அடுக்கிக்கொண்டே போக எனக்கு பிரமிப்பாக இருந்தது.

“தனிநபர்களது மின்னஞ்சல்களை உடைத்து பார்த்ததுண்டா?” என்று கேட்டேன்.


“நிறையவே. தனிநபர்கள் மின்னஞ்சல்களில் பெரும்பாலும் செக்ஸ் ஸ்காண்டல் வீடியோக்கள், பெண்கள் அவர்களது காதலர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நிர்வாண வீடியோக்கள், வங்கி நிதிநிலை அறிக்கைகள் என்று எதெல்லாம் அவர்கள் ரகசியமென்று நினைக்கின்றார்களோ அதெல்லாம் பார்த்துள்ளேன். பொது வாழ்க்கையில் உத்தமர்களாகவும், புனிதர்களாகவும் தங்களை காட்டிக்கொள்ளும் எத்தனையோ பிசினஸ் மேன்கள், அரசியல் தலைவர்கள், மத குருமார்கள் எல்லாருமே தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் எவ்வளவு அழுக்குடன் நிர்வாணமாக நிற்கின்றார்கள் என்று தெரிந்துக்கொள்ள அவர்களது மின்னஞ்சலை உடைத்தால் போதும். உலகப் புகழ்பெற்ற ஒரு பிரபல மதகுருமாரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் அந்த மடத்தில் இருக்கும் பெண் சீடர் ஒருத்திக்கு காம ரசம் சொட்ட சொட்ட அனுப்பிய கடிதத்தை படித்துள்ளேன். ஒரு கம்யூனிஸ்ட் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவருக்கு க்யூபாவில் எத்தனை வங்கிகளில் கணக்கு உள்ளது என்ற விவரம் தெரிந்தது. இவ்வளவு ஏன் இந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு அரசியல் தலைவரின் மின்னஞ்சலை உடைத்துள்ளேன். அவர் தனது சொந்த நாட்டில் எப்படி இனக்கலவரத்தை தூண்டி விடுகின்றார் என்று தெரிந்தது. நான் தெரிந்துக்கொண்ட ரகசியங்களை வைத்து ஒரு போதும் நான் பிளாக் மெயிலோ பணம் பறித்ததோ இல்லை. எனது தொழில் மனிதர்களை பார்த்து ஏ அற்ப மனிதர்களே. இந்த உலகத்தில் ரகசியம் என்று எதுவும் இல்லை. நீங்கள் இந்த உலகத்தில் ரகசியமாக செய்யும் எந்த ஒரு விஷயத்தையும் யாரோ ஒருத்தர் கவனித்துக்கொண்டேதான் இருக்கின்றார் . எனவே ரகசியங்களை பாதுகாக்கவும் என்று அவர்களுக்கு வலியுறுத்துவதுதான்” என்றார்.

எனது தேநீர் கோப்பையில் தேநீரை நிரப்பியபடியே சொன்னார்.

"உன்னிடம் இரண்டு தேர்வுகள் இருக்கின்றன. முதல் தேர்வில் ஒரு திறந்து கிடக்கும் அறை முழுவதும் தங்கம் இருக்கின்றது. அடுத்து பூட்டிய அறையொன்றில் என்ன இருக்கின்றது யாருக்கும் தெரியாது. நீ எதை தேர்வு செய்வாய்? எனது பதிலுக்கு காத்திராமல் அவரே சொன்னார். நான் பூட்டிய அறைகளையே தேர்வு செய்வேன். காரணம் நான் பூட்டுகளை திருடவே விரும்புகின்றேன் . எனக்கு தேவை மனிதர்களின் ரகசியங்கள் அல்ல. நான் அதை விரும்புவனும் இல்லை. எனக்கு தேவை பூட்டுகள்தான். பூட்டுகளின் மீதான வேட்கையே என்னை அதை திறந்து பார்க்க வைக்கின்றது."

தேநீர் குடித்தபடியே ,"Fake ஐடிகளிலிருந்து வரும் நபர்களை உங்களால் கண்டு பிடித்து அவர்களது ரகசியங்களை எடுக்க முடியுமா?" என்றேன். கேட்ட பிறகுதான் அப்படி ஒரு கேள்வியை கேட்டே இருக்கக்கூடாதோ என்று தோன்றியது.

“நானே எனது ஹேக்கிங் ஆய்விற்காக நூற்றுக்கணக்கான Fake ஐடிக்களை உருவாக்கி வைத்துள்ளேன்" என்றார்.

"இணையம் என்று வந்த பிறகு ஒரிஜினல் என்ன போலி என்ன. எல்லாத்தையும் உடைத்து பார்க்க முடியும். எத்தனையோ அரசியல்வாதிகள் ,எழுத்தாளர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல்கள் வைத்துக்கொண்டு தங்களுக்கு தாங்களே பாராட்டி எழுதிக்கொள்வதை நான் கண்டுபிடித்துள்ளேன். ஒரே நபர் ஆண் பெயரிலும், பெண் பெயரிலும் வந்து தனக்குதானே மின்னஞ்சல் அனுப்பிக்கொள்வதையும் பார்த்துள்ளேன் . அவர்களது பைத்தியக்காரதனத்தை நினைத்து எனக்குள் சிரித்துக் கொள்வேன் . நீங்கள் இணையத்தில் செய்யும் எல்லா செயல்களையும் யாரோ ஒருவர் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றார். ஒருவேளை அவருக்கு உங்கள் தகவல்கள் தேவைப்பட்டிருக்காது. அதனால் உங்களை தொந்தரவு செய்யாமல் இருக்கலாம். மற்றபடி ரகசியம் என்று எதுவும் இங்கு இல்லை” என்றார்.


சற்று நேரம் இருவரும் எதுவும் பேசாமல் எங்கள் சிகரெட்டுகளை மவுனமாக புகைத்து கொண்டிருந்தோம்.

"மனிதர்கள் விசித்திரமானவர்கள். கேவலம் ஒரு அக்றினை பொருளை நம்பி தங்கள் ரகசியங்களை ஒப்படைக்கின்றார்கள். ஆனால் சக மனிதர்களோடு உரையாட சிநேகம் கொள்ள நட்பு பாராட்ட தயங்குகின்றார்கள். பிம்பங்களோடு நாள் முழுவதும் கலவிக்கொண்டு திரிகின்றார்கள். எப்படி நேரில் பார்க்கும் ஒரு நடிகையோடு திரையில் தெரியும் நடிகை ஈர்க்கின்றாரோ அது போல சதா சர்வ காலமும் இணைய பிம்பங்களில் மூழ்கி திளைக்கின்றார்கள். எப்படி நார்சிஸஸ் அரசன் தண்ணீரில் விழுந்த தன் பிம்பத்தை பார்த்து தன்னைத்தானே காதலித்து கடைசியில் இறந்து போனானோ அது போல ஒரு நாள் இந்த மனிதர்களும் மடிந்து போவார்கள் பாருங்கள்" என்றார்.


நிக்கி செளவிடமிருந்து எங்களது மென்பொருள் பாதுகாப்பு பரிசோதனைகள் பிராஜக்ட் குறிப்புகள் சிலவற்றின் ஆலோசனைகளையும் சில விளக்க குறுந்தகடுகளையும் பெற்றுக்கொண்டு விடைபெற்றேன்     
 
விடைபெறும்போது அவரிடம், "இணையத்தில் உங்களால உடைக்க முடியாத பூட்டே இல்லையா?" சிரித்தபடியே கேட்டேன்.      

"இந்த உலகத்தில ரகசியம் என்றும் எதுவுமில்லை. எல்லா ரகசியங்களும் ஒரு நாள் வெளிப்பட்டே தீரும். என்னால இன்னமும் திறக்க முடியாத பூட்டு எதுனாச்சும் இருக்குமென்றால் அது மனிதர்களின் இதயம்தான். ஒவ்வொரு இதயத்திற்குள்ளும் ஆயிரம் ஆயிரம் ரகசியங்கள் ஒளிஞ்சுக்கிட்டிருக்கு. என்னால ஒரு போதும் நிஜ வாழ்க்கையில வாழும் மனிதர்களின் இதய பூட்டை திறக்க முடியுமென்று தோன்றவில்லை."
 
இன்று காலையில் நிக்கி செள இறந்து விட்டார் என்ற தகவலை கேட்டதிலிருந்து மனதுக்குள் ஏனோ ஒரு இனம் புரியாத தவிப்பு. வழக்கமா இருபத்தி நாலு மணி நேரமும் இணையத்திலேயே செலவு செய்யும் என்னால் இன்று பேஸ்புக் பக்கம் கூட செல்ல முடியவில்லை .

இந்த உலகின் எத்தனையோ மனிதர்களின் ரகசியங்களை கண்டுபிடித்த மனிதன் சர்வசாதாரணமாக பெயர் தெரியாத தீவொன்றில் படகு விபத்தில் உயிரிழந்து அவன் உடல் கூட கண்டுபிடிக்க முடியாமல் போனதை வாழ்க்கையின் முரண் நகையென்று சொல்லாமல் என்ன சொல்வது? அவன் உயிர் இழந்தது அவனது முன்னால் காதலிக்கு தெரியுமா? கடைசியாக அவன் எந்த மனிதனது இதயப்பூட்டை உடைத்து பார்க்க முயன்றிருப்பான்? ஒருவேளை 3 Iron படத்தில் வரும் கதாநாயகன் போல விர்சுவல் உலகில் கரைந்து போயிருப்பானா? இங்கேயே சுற்றிக்கொண்டு நமக்கே நமக்கு மட்டும் தெரியுமென்று நாம் நினைத்துக் கொண்டிருக்கும் நமது Fake ஐடிக்களின் பாஸ்வேர்டுகளை உடைத்து நாம் ஒவ்வொருவரும் இணையவெளியில் நிகழ்த்தும் அபத்தங்களை,சண்டைகளை ,ஆபாசங்களை பார்த்து ரசித்துக் கொண்டிருப்பானா? தெரியவில்லை. எதுவுமே பிடிபடவில்லை.

Thursday, July 18, 2013

காந்தம்

வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கும் ஒரு டீக்கடையில் தம் அடித்துக் கொண்டிருந்தேன். எனது பக்கத்தில் ஒரு விநோதமான நபர் வந்து நின்றார். அழுக்கு சட்டை அழுக்கு கட்டம் போட்ட லுங்கி இடது கையில் ஒரு பெரிய துணிப்பை... இருந்தது. வலது கையில் ஒரு நீண்ட பிளாஸ்டிக் கம்பு இருந்தது. கம்பின் ஒரு முனையில் பெரிய சைஸ் கைமுறுக்கு போல ஒரு வஸ்து இருந்தது. அதில் சில ஆணிக்கள், ஸ்டீல் ஸ்க்ருக்கள், சின்ன சாவியொன்றும் கூட கொஞ்சம் இரும்புத்துகள்களும் ஒட்டிக்கொண்டிருந்தன.

அந்த பிளாஸ்டிக் குழாயை பார்க்க விசித்திரமாக இருந்தது. அவரிடம் என்னங்க அதுன்னு கேட்டேன். இது காந்தம்ங்க என்றார்.

"காந்தமா?'

"ஆமாங்க. இந்த கம்பை பிடிச்சிக்கிட்டு தரையில் காந்தத்தை வைத்து நடந்துக்கிட்டே இருந்தா மண்ணுல கிடக்குற ஊசி,ஆணி,இரும்பு சாமான்கள் எல்லாம் இதில் ஒட்டிக்கும்"

"இதை வச்சு என்ன செய்வீங்க?"

"இந்த மாதிரி இரும்புகளை சேகரிச்சு எடைக்கு போட்டா காசு கிடைக்கும்" என்றார்

"அப்படியா எவ்வளவு கிடைக்கும்?" என்றேன் ஆர்வமாக

"அது கிடைக்குங்க. எடைக்கு போட்டா ஒருநாளுக்கு ஐம்பதும் கிடைக்கும். பத்தும் கிடைக்கும். சில நேரம் ஒண்ணுமே கிடைக்காது. சில நேரம் இரும்பு சாமான்கள் எதுவும் கிடைக்காது. ஆனால் பணம் செயின் கூட எதுன்னா கீழே கிடக்கும்"

"அது சரி ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் இந்த வேலையை செய்யுறீங்க?"

"காலையில ஆறு மணிக்கு போரூர் சிக்னலாண்ட நடப்பேன். அப்படியே விருகம்பாக்கம் நெசப்பாக்கம் ,கேகேநகர்ன்னு நடந்துக்கிட்டே இருப்பேன். சாயங்காலம் வரைக்கும் இந்த காந்தத்துல என்ன ஒட்டுதோ அதை இந்த பைக்குள்ள போட்டுக்குவேன். ரெண்டு மூணு நாளைக்கு ஒருதரம் இதுங்கள காயலான் கடையில போட்டுடுவேன்"

அவர் டீயை குடித்து விட்டு ஏற்கனவே பாதி குடித்து மிச்சமிருந்த ஒரு பீடித்துண்டை சட்டைப் பாக்கெட்டில் இருந்து பற்ற வைத்தார்

"உங்களுக்கு குடும்பம் இருக்கா?".கேட்டேன்

"சம்சாரம் இருக்குங்க" என்றார்.

"அவங்களும் இந்த வேலையைத்தான் செய்யுறாங்களா?" கேட்டேன்.

"இல்லீங்க. அவங்க வடபழனி சிக்னல்ல நோட்டு ,பென்சில் ,காது கொடயுற குச்சி, கார் தொடைக்கற துணியெல்லாம் விக்கறாங்க" என்றார்.

"உங்க வீடு போரூரா?" கேட்டேன்.

"வீடா தமாஷ் செய்யாதீங்க தம்பி. எங்களுக்கெல்லாம் வீடு இல்ல. நாங்க இப்படியே பகல் புல்லா ரோட்டுல சுத்திக்கிட்டு இருப்போம். நைட்டு பத்து பன்னிரண்டு ஆனா பிளாட்பாரம் ஓரமா துணியை விரிச்சு போட்டு படுத்துக்குவோம்" என்றார்

"எப்படிங்க பொண்டாட்டிய வச்சுக்கிட்டு ரோட்டுல குடும்பம் நடத்துறீங்க?"

"ஆமா நாங்க என்ன ஊர் மெச்ச கண்ணாலமா கட்டிக்கிட்டோம். அவ எந்த ஊர்ன்னே எனக்கு தெரியாது. சால்னா கடையில பார்த்தேன். கழுதைய புடிச்சிருந்துச்சு. சேர்த்துக்கிட்டேன்"

"பிளாட்பாரத்துல படுக்கறது கஷ்டமா இல்லீங்க?"

"என்ன செய்யுறது? பழகிடுச்சு. குளிக்கறது .மலம் கழிக்கறது. சம்சாராத்தோட படுக்கறது எல்லாமே ரோட்டுலதாங்க" என்றார். ஒரு நிமிடம் எதுவும் பேசாமல் டீயை குடித்தபடியே அவரை பார்த்தேன்.

"இவ்வளவு வெவரம் கேக்குறீங்களே. நீங்க பத்திரிக்கை ஆளா? போட்டோ புடிப்பீங்களா. எதுனா காசு தருவீங்களா ?"

"நான் பத்திரிக்கை ஆளு இல்லீங்க. பேஸ்புக்குல எழுதறவன்"

"ஓ புக்கு எழுதுறவரா?"

ஙே........

"நைட்டுல ரோட்டுல படுக்கறது சிரமமா இல்லீயா?". திரும்ப கேட்டேன்.

"நைட்டு வர்ற இந்த போலீஸ்காரங்கதாங்க தொல்லை செய்யுறாங்கா. கையில இருக்கற அஞ்சு பத்தை பிடுங்கிட்டு போயிடறாங்க." என்றார்.

"உங்ககிட்டேயுமா" என்றேன் சிரித்தபடியே.

"ஆமா. இந்த மாதிரி ரோடு ரோடா காந்தம் வச்சிக்கிட்டு இரும்பு சேகரிக்கறீங்களே. இந்த வேலையை எப்படி ஆரம்பிச்சீங்க?"

"முன்னாடி பிச்சைதான் தம்பி எடுத்துகிட்டிருந்தேன். என்னோட தோஸ்துதான் இப்படி ஒரு தொழிலை கத்து கொடுத்தான்" என்றார்

"அப்ப உங்கள போல நிறைய பேரு இந்த காந்தத்தால இரும்பு எடுக்கற தொழிலை செய்யுறாங்களா?" கேட்டேன்

"ஆமாங்க. சென்னையில எனக்கு தெரிஞ்சு அம்பது பேர் இந்த வேலையை செய்யுறாங்கன்னு நினைக்கின்றேன்"

சற்று நேரம் நாங்கள் எதுவும் பேசவில்லை.

"முன்ன மாதிரிவீட்டுகாரங்க இல்லிங்க. நாங்க மெயின் ரோடாத்தான் போய் இரும்பு எடுக்கறோம். வீடு இருக்கற தெருவுக்குள்ள போனா இரும்பு திருடறோம்னு சொல்லி அடிச்சு தொரத்துறாங்க" என்றார்.

"போன வாரம் கூட ஒரு தெருல இந்த குச்சிய வச்சுக்கிட்டு நடந்து போய்கிட்டிருந்தேன். இந்த காந்தம் அவங்க வீட்டு இரும்பு கேட்டுல ஒட்டிக்கிச்சு. அந்த வீட்டமா என்னை திருடன்னு நெனைச்சு தெரு ஆளுங்க என்னை பிடிச்சு போலீஸ்ல கொடுத்துட்டாங்க. கால்ல ரொம்ப அடிச்சுட்டாங்க. அதான் தாங்கி தாங்கி நடக்குறேன்" என்றார்

டீக்கடையிலிருந்து கிளம்புபோது கவனித்தேன். அவர் கையில் இருந்த காந்தக்குச்சியில் என்னனவோ விநோதமான இரும்பு சாமான்கள் எல்லாம் ஒட்டியிருந்தன. அவரது காந்தம் கேட்டில் மாட்டிக்கொண்டபோது அந்த வீட்டம்மா ஓடிவந்ததை கற்பனை செய்து பார்த்தேன். மனித இதயம் இரும்பால் ஆனதுன்னு சொல்றாங்களே. ஒருவேளை அது அவர் கையில் இருக்கும் காந்தக்குச்சியில் ஒட்டியிருக்குமா என்று கவனித்தேன். அது தெரிந்துதான் அந்தம்மா பயந்து போய் ஓடிவந்து போலீசில் சொல்லியிருக்குமோ?

சிரிப்பாக இருந்தது.

Friday, July 5, 2013

சண்டை போடாதீங்க ஏட்டையா

சொல்வனம் மின்னிதழில் வண்ணநிலவனுடைய நேர்காணல் படித்தேன்.


நான் எட்டாவது படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கின்றேன். அப்போது சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடர் ஒளிபரப்புவார்கள். எனது அம்மாவுக்கு மிகவும் பிடித்த தொடர். அது வண்ணநிலவனுடைய கடல்புரத்தில் என்ற நாவலிலிருந்து எடுக்கப்பட்ட தொடர்.அந்த தொடர் அப்போது மிகவும் பேமஸ். அந்த தொலைக்காட்சித் தொடர் வழியாகத்தான் எனக்கு வண்ணநிலவனுடைய எழுத்துகள் அறிமுகமானது. வீட்டு பக்கத்திலிருந்த லைப்ரரியிலிருந்து கடல்புரத்தில் நாவலை எடுத்து வந்து படித்தேன். அதன் பிறகு நான் ராஜேஷ்குமார் , சுபா, சுஜாதாவிலிருந்து மாறி வேறு பக்கம் போக ஆரம்பித்தேன். விபரம் தெரிந்து முதலில் தொட்ட இலக்கிய நாவல் அல்லது இலக்கிய டிவி சீரியல்(?) கடல்புரத்தில் என்று நினைக்கின்றேன்.

சொல்வனம் நேர்காணல் முதல் வரி படிக்க ஆரம்பித்ததும் கிளர்ந்த மலரும் நினைவுகளை அடக்கி விட்டு மேலே படித்தேன். படிக்க படிக்க கோவில் மண்டபத்தில் யானை கட்டி கிடந்த இடத்தில் இருக்கும் ஒரு வெறுமையை பார்ப்பது போல உணர்ந்தேன். மூத்த எழுத்தாளர்கள் பலரும் இப்போது தங்களை அப்டேட் செய்துக் கொள்வதில்லையோ என்று தோன்றியது

குறிப்பாக நேர்காணலின் இந்த பகுதி நிறைய யோசிக்க வைத்தது

சுகா: இணையத்தில எழுதறதெல்லாம் வாசிக்கிறீங்களா?

வண்ணநிலவன்: அய்யய்யய்யய்யே! அது வாந்தி பேதியாயில்லா இருக்கு! காலரா வந்த மாதிரி. அது என்ன எளுதுதாங்க எல்லாரும்… நமக்கு இருக்கறதும் போயி, எளுத முடியாமப் போயிரும்னு பயம் வந்துட்டுது, அதனால படிக்கறதில்ல.

வண்ணநிலவன் என்றில்லை நான் கவனிக்கும் நிறைய மூத்த எழுத்தாளர்களது பார்வையில் இணையம் குப்பை என்றும், இணைய எழுத்துகள் தரமற்றவை என்றுமே ஒரு பொதுக்கருத்து நிலவுவதை கவனிக்க முடிகின்றது . இதுக்கு ஜெனரேசன் கேப்பை காரணம் காட்டினாலும் இணையத்தில் நடக்கும் ஒரு சில ஆபாச மயிர்ப்பிடிச் சண்டைகளையும், வசவு கட்டுரைகளையும், தனிநபர் தாக்குதல்களையும், சொறிந்து விடும் எழுத்துகளையும் சுட்டிக் காட்ட முடியும். ஆனால் இவை மட்டுமே இணையம் இல்லை. இணையம் என்பது கடல். சமீப காலங்களில் இங்கு இருந்துதான் இலக்கிய வாசிப்பு அதிகமாகியுள்ளது. எப்படி நான் சென்னைத் தொலைக்காட்சியில் வண்ணநிலவனை கண்டெடுத்தேனோ அப்படித்தான் இன்று இணையத்தில் ஒரு தலைமுறையினர் அசோகமித்திரனை கண்டெடுக்கின்றார்கள். வாசிப்பு பழக்கம் இணையம் வந்த பிறகு அதிகமாகி இருக்கின்றது என்றுதான் சொல்வேன். இன்று இணையம் தவிர்த்து வேறு எந்த ஊடகங்களாவது இலக்கிய செயல்பாட்டையும் மூத்த எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் பேசுகின்றனவா என்று பாருங்கள். இணைய எழுத்தாளர்களை பொறுக்கி என்று சொல்பவர்கள் கூட இணையத்தில்தான் எழுதுகின்றார்கள். இணையத்தில்தான் தங்களை விளம்பரம் செய்துக்கொள்கின்றார்கள். இணையம் என்றாலே ஏதோ தினம் தினம் கட்டிப்பிடித்து சண்டைப்போட்டு உருள்வதை போல ஒரு பொதுப்புத்தி இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. இதே ஊரில்தான் அ.முத்துலிங்கம் கடை போட்டுள்ளார். அழியாச்சுடர்கள் கடை இருக்கின்றது. எஸ்.ரா இருக்கின்றார். இது ஒரு கடல். வேறு வழியில்லை. முத்து குளிக்க கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் கண்டிப்பாக நிறைய கிடைக்கும். இணையம் என்ற பெயரைச் சொன்னாலே ஏன் பேயை பார்த்து போல ஓடுகின்றார்கள் என்றுதான் தெரியவில்லை. ஒரு சில பொறுக்கிகளின் நடவடிக்கைகளை மேலோட்டமாக பார்த்து விட்டு இப்படித்தான் என்று தீர்மானித்தால் எப்படி? இணையத்தில் யாருக்கும் எழுத தெரியாது அல்லது எழுத வராது. இணையத்தில் இயங்கும் சில எழுத்தாளர்களே தொடர்ந்து இதுபோன்ற பிம்பங்களை கட்டமைத்துக் கொண்டே இருக்கின்றார்கள். ஒருபக்கம் இப்படி செய்துக்கொண்டே மறுபக்கம் அவர்கள் நாவல்களை இணையத்தில் விளம்பரம் செய்துக் கொள்கின்றார்கள் . பிறகு அவர்களே இணையத்தில் எழுதுபவர்களை சொறிந்து விடுவதும் இங்கே நடப்பதுண்டு. வட்டங்களையும்,குழுமங்களையும் இங்கேயே உருவாக்குகின்றார்கள்           

இப்படித்தான் தேநீர்கடையொன்றில் நான் மிகவும் மதிக்கும் ஒரு எழுத்தாளரோடு பேசிக்கொண்டிருந்தேன்.

அவருக்கு பேஸ்புக் ,ட்விட்டர் ,பிளாக் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அவர் இன்டர்நெட்டிற்கு ஒரு முறை வந்துள்ளார். வந்தவுடனேயே ஓடி விட்டார். இண்டர்நெட்டில் எல்லாரும் மயிரைப் பிடித்து (அவரு இப்படிதான் சொன்னார்) இழுத்து சண்டை போடுறாங்க. எங்க பார்த்தாலும் ஒரே குப்பை என்றார்.
 
"நான் அவரிடம் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இலக்கிய கூட்டங்களில் நீங்க போடாத சண்டையா? உங்களுக்கு நினைவு இருக்குதோ இல்லையோ? நான் கல்லூரி படித்துக் கொண்டிருந்தேன் . ஒரு மூத்த கவிஞர் குடித்து விட்டு வந்து உங்க மடியில வாந்தி எடுத்தார் நினைவுக்கு இருக்குதா?" என்றேன் சிரித்தபடியே.

"ஆமா...ஆமா...நீங்க அப்ப சின்ன மீசை வச்சுகிட்டு வெடவெடன்னு கதவு ஓரமா பயந்து போய் எங்க சண்டையை வேடிக்கைப் பார்த்துட்டு நின்னுக்கிட்டிருந்தீங்க" என்றார் என்னைப் பார்த்து.

கொஞ்ச நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. திடீரென கோபத்துடன், "அந்த புடுங்கி அவன் பேரு என்ன ...இப்ப கூட இண்டர்நெட்டுல எழுதறானே....தா..பெரிய பருப்பாட்டம் என்னோட சிறுகதைத்தொகுப்பை புடுங்கி கிழிச்சுட்டான். அன்னைக்கு அவனை வேட்டியை உருவி துரத்தி துரத்தி அடிச்சில்ல பல்லை ஒடச்சேன்" என்றார்.

கொஞ்ச நேரம் இருவரும் தேநீர் அருந்தியபடியே தொண்ணூறுகளின் மலரும் நினைவுகளில் மூழ்கினோம். 

Monday, July 1, 2013

ஓநாய் குலச்சின்னம்


ஓலோன்புலாக் என்ற பகுதி மங்கோலியாவின் சிறந்த மேய்ச்சல் புல்வெளி பிரதேசம். மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஏரிகளும் நிறைந்த பகுதி. அங்கு ஆடு,மாடுகளை பேணி வளர்க்கும் மந்தைக்கு சொந்தக்காரர் பில்ஜி என்ற மேய்ப்பர் அவரது மகன் பட்டு, மருமகள் கஸ்மாய் தவிர அவர்களின் ஒன்பது வயதுச் சிறுவன் பாயர் வசித்து வருகின்றார்கள். பில்ஜி சிறந்த வேட்டைக்காரரும் கூட. அவர்களுடன் திறமை மிக்க ஒரு மேய்ப்பர்குழு இருக்கின்றது. 

இவர்களுடன் ஜென்சென் என்னும் மாணவரும் அவரது சக மாணவ நண்பர்களும் இரண்டாண்டுகளாக தங்கியுள்ளார்கள். ஜென்சென் மற்றும் அவரது சக மாணவர்கள் பீஜிங்கிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஓலோன்புலாக் பூர்வீகம் கிடையாது. ஆடு மேய்ப்பது பற்றியும் , ஓநாய்களைப் பற்றியும், மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலங்களை ஆராய்ச்சி செய்யவும் ஜென்சென்னும்,அவரது நண்பர்களும் இரண்டாண்டுகளாக ஓலோன்புலாக்கில் தங்கியுள்ளார்கள்.  

மங்கோலியர்களுக்கும், சீனர்களுக்கும் கலாச்சார சிந்தனை வித்தியாசங்கள் உள்ளன. சீனர்கள் ஓநாய்களை துரதிர்ஷ்டமாக வெறுக்கத்தக்க விலங்காக பார்க்கின்றார்கள்.ஆனால் நாய்களை அப்படி கருதுவதில்லை. மங்கோலியர்கள் ஓநாய்களை கடவுளாக பார்க்கின்றார்கள். மங்கோலியர்களை  பொறுத்தவரையில் நாய்கள் என்பது ஒரு அடிமை விலங்கு.  என்னதான் நாய்கள் ஓநாய்களிலிருந்து வந்த வம்சமாக இருந்தாலும் நாய்கள் மங்கோலிய மனிதர்களுக்கு ஒரு சேவகன் மட்டுமே. அது வேட்டையாடும் அவ்வளவே. ஆனால் ஓநாய்கள் அப்படி அல்ல. அவை மனிதர்களை காட்டிலும் புத்திக்கூர்மை உடையவை. மனித நாகரீகமே ஓநாய்கள் நாகரீகம்தான். இவ்வளவு ஏன் ஒருக்காலத்தில் உலகின் பாதி நிலப்பரப்பை வெற்றிக்கொண்ட செங்கிஸ்கான் கூட ஓநாய் வளர்த்த பிள்ளைதான் என்று ஒரு மித் மங்கோலியர்களுக்கு உண்டு. மங்கோலிய குலச்சின்னமாக ஓநாய்கள் கருதப்படுகின்றன.

ஒருநாள் பில்ஜியும், ஜென்சென்னும் ஓநாய் கூட்டமொன்று மான்களை வேட்டையாடுவதை பார்க்கின்றார்கள். பிறகு அவர்கள் தங்கள் இடத்துக்கு வந்து விடுகின்றார்கள். மறுநாள் ஜென்சென்னை பில்ஜி அந்த வேட்டை பனி ஏரிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே பனி ஏரியில் இறந்து போன மான்களின் உடல் குவியல் குவியலாக இருக்கின்றன. சில மான்கள் குற்றுயிரும்,குலையுயிருமாக கிடக்கிறன. சில மான்கள் கடித்து குதறப்பட்டு பாதி உடல்கள் மட்டும் எஞ்சியுள்ளன. தங்கள் கால்கள் உறைந்த பனிக்கட்டிகளில் புதையுண்டு சில மான்கள் உயிருக்கு போராடுகின்றன. ஓநாய்கள் வேட்டையாடி விட்டு சில மான்களது உடல்களை இப்படி பனிக்குள் பாதுகாப்பாக்க சேமித்து வைத்து விட்டு சென்றுவிடும் என்று பில்ஜி சொல்கின்றார். ஜென்சென்னுக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. தவிர ஓநாய்களின் வேட்டை தந்திரங்களை பில்ஜி விளக்க ஆரம்பிக்கின்றார். எப்படி உயரமான சுற்றுச்சுவரை உடைய தங்களது ஒரு ஆட்டு மந்தையை ஓநாய் கூட்டமொன்று தாக்கியது என்று சொல்கின்றார். ஒரு தலைமை ஓநாய் சுவற்றில் இரண்டு கால்களை வைத்து நிற்க அதன் மீது ஒவ்வொரு ஓநாயாக ஏறி தப்பியது என்றும், அந்த கடைசி தலைமை நாய் இறந்துப்போன ஆட்டு உடல்களை குவியலாகப் போட்டு அந்த உடல்கள் மீது ஏறி தப்பித்தது என்றும் விளக்குகின்றார். எல்லா ஓநாய்களும் ஏற்கனவே சில ஆடுகளை கொன்று அவற்றின் உடலை குவியலாக போட்டு கடைசி தலைமை நாய்க்கு ஏற்கனவே உதவி செய்து விட்டு தப்பிப்போனதையும் சொல்கின்றார். ஜென்சென்னுக்கு பிரமிப்பாக இருக்கின்றது.                                                        

பனி ஏரியில் இறந்துக்கிடக்கும் சில மான்களை உணவுக்கு மட்டும் தங்கள் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் குழுவினர் உயிரோடு பனிச்சேற்றுக்குள் மாட்டிக்கொண்ட மான்களை விடுவித்து காட்டுக்கு அனுப்புகின்றார்கள். ஓநாய்களின் அந்த வெறிச்செயலை கண்டு கோபமடையும் ஓநாய்களை பலமாக நிந்திக்கின்றான். மான்கள் பாவம் என்கின்றான். பில்ஜிக்கு கோபம் வந்து விடுகின்றது. பில்ஜி ஓநாய்கள் தங்கள் குலச்சின்னம் என்கிறார். ஓநாய்களால் மட்டுமே மான்களின், கால்நடைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால் மேய்ச்சல் நிலங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றார். மேய்ச்சல் நிலங்களை சார்ந்தே எண்ணற்ற சிறு உயிர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன. சீனர்களாகிய நீங்கள் வெறும் புத்தகங்களை படித்து அதன் மூலம் அறிவை பெறுகின்றீர்கள். மங்கோலியர்கள் நாங்கள் படிப் பதில்லை. ஆனால் மேய்ச்சல் நில வாழ்க்கை, வேட்டைகள் மூலமே வாழ்வை பார்க்கின்றோம் என்கின்றார். படித்த சீனர்கள் நீங்கள் சொல்வதை எல்லாரும் நம்புகின்றார்கள். நீங்கள் எப்போதும் சிறிய உயிர்களை காப்பற்றும் முயற்சியில் பெரிய உயிர்களை அழித்து விடுகின்றீர்கள். மான்களின் மேல் இரக்கப்படும் நீங்கள் ஏன் புல்லும் ஒரு உயிர்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள். மான்களாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இயற்கை அந்த ஆற்றலையும் அபரிமித இனப்பெருக்க ஆற்றலையும் தந்துள்ளது. புற்களுக்கு அது இல்லை. ஒரு உயிரை சார்ந்தே இன்னொரு உயிர் இருக்கும் இந்த மேய்ச்சல் நிலங்களில் ஓநாய்களை பாதுகாப்பதன் மூலமே நாம் வாழ முடியும் என்கின்றார். தவிர ஓநாய்கள் மேய்ச்சல் நிலங்களில் வளைகளைத் தோண்டி அதில் வாழ்க்கையை நடத்தும் எலிகளையும், மர்மோட்டுகளையும் உண்கின்றன. ஓநாய்களின் எண்ணிக்கையால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றன. எலிகள், மர்மோட்டுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால் கொசுக்களின் எண்ணிக்கை குறைகின்றன என்றும் விளக்குகின்றார் இந்நாவலின் முக்கியமான பகுதியும் , மையக்கருத்தும் இந்த உரையாடலே. மங்கோலிய மேய்ப்பர்கள் இறந்தவர்களின் உடலை ஓநாய்களுக்கு விருந்தாக தந்து விடுகின்றார்கள். இதன் மூலம் அவர்களின் ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்புகின்றார்கள். 

 இதனிடையில் பில்ஜி குழுவில் இருக்கும் சிலர் ஓநாய்குட்டிகளை குகைகளிலிருந்து திருடி எடுத்து வருகின்றார்கள். ஓநாய் தோல் வாங்கும் ஆட்களிடம் ஓநாய்குட்டிகளை விற்று காசு பார்ப்பது அவர்கள் நோக்கம். பில்ஜி அவர்களை எச்சரிக்கை செய்கின்றார். ஓநாய்கள் பழிவாங்கும் குணம் கொண்டவை. குறிப்பாக தாய் ஓநாய்கள் நம்மை சும்மா விடாது என்று எச்சரிக்கை செய்கின்றார். ஆனால் எல்லாரும் பில்ஜியை பழமைவாதி என்று ஏளனம் செய்கின்றார்கள். யாரும் பில்ஜி பேச்சை பொருட்படுத்தாமல் குட்டிகளோடு திரும்புகின்றார்கள்.               

பட்டுவும் அவனது நண்பன் லாசுருங்கும் இராணுவத்திற்காக ஒரு பெரிய குதிரை மந்தையை வளர்த்து வருகின்றார்கள். இரவோடு இரவாக அந்த மந்தைக்குள் நுழையும் ஓநாய்க்கூட்டம் ஒரு குதிரையை கூட மிச்சம் வைக்காமல் தாக்கி அழிக்கின்றது. நாவலின் இன்னொரு முக்கியமான பகுதி இது. ஓநாய்கள் எவ்வளவு சாதுர்யத்துடனும், பழிவெறியுடனும், போர் நுட்பங்களோடும் வேட்டையாடுகின்றது என்று விவரமாக சொல்லப்படுகின்றது. சும்மாவா சொன்னார் பில்ஜி. ஓநாய்களிடமிருந்துதான் செங்கிஸ்கானே போர்க்கலையை கற்றுக்கொண்டான். மனித நாகரீகமே ஓநாய்களிடமிருந்துதான் பரிணாம வளர்ச்சிப் பெற்றதை ஜென்சென் அறிந்துகொள்கிறான். பில்ஜி பேச்சை யாரும் மதிக்கவில்லை. விளைவு ஒரு மந்தையே அழிந்து விட்டது.                        

விஷயம் கேள்விப்பட்டு அங்கு வருகின்றார்கள் இராணுவப் பிரதிநிதி பாவோ சுங்காய் மற்றும் மேய்ச்சல் நில இயக்குநர் உல்ஜீ. ஓநாய் கூட்டத்தின் வெறிச்செயலைக் கண்டு திகைக்கும் அவர்கள் ஓநாய்க் கூட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் போடுகின்றார்கள். பாவோ அரசாங்க பிரதிநிதி. அரசின் திட்டம் என்னவென்றால் அந்த மேய்ச்சல் நிலத்தை நவீனப்படுத்தி அங்கு விவசாய நிலங்கள் கூடவே செங்கல் கட்டப்பட்ட வீடுகள்,நெடுஞ்சாலைகள், திரையரங்குகள், கடைகள் அமைப்பது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஓநாய்களை அழிக்க ஆரம்பிக்கின்றார்கள்.  

ஜென்சென் ஒரு ஓநாய்க் குட்டிகளை எடுத்து வந்து வளர்க்கின்றான். இதற்கு காரணம் ஜென்சென்னுக்கு ஓநாய்களின் மீது இருந்த காதலோடு, ஓநாய்களை நாய்களோடு கலக்க வைத்து ஒரு திறமையான வேட்டை நாயை உருவாக்குவதும். இதை மிக கடுமையாக எதிர்க்கின்றார் பில்ஜி. ஆனால் பாவோ எதிரியை வெல்ல எதிரியை பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம் என்று சொல்லி ஓநாய் வளர்க்க அனுமதி தருகின்றார். ஜென்சென் ஓநாய்க்குட்டியை வளர்ப்பதன் மூலம் ஓநாய்களின் தந்திரங்களை வாழ்க்கை முறைகளை மிக நுட்பமாக கற்றுக்கொள்கின்றான்.                   

பாவோவின் இராணுவ வீரர்கள் மர்மோட்டுகளை அழிக்கின்றார்கள். மர்மோட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் ஓநாய்கள் உணவு இல்லாமல் அழிந்து விடுமென்று நம்புகின்றார்கள். மர்மோட்டுகளை குவியல் குவியலாக வேட்டையாடி கொல்கின்றார்கள். இடையே அந்த பகுதிக்கு வரும் வெளியாட்கள் அன்னப்பறவைகளை, வாத்துகளை வேட்டையாடி கொல்கின்றார்கள். அதி நவீன துப்பாக்கி மூலம் நரிகளை,ஓநாய்களை வேட்டையாடி கொல்கின்றார்கள். மிக மோசமான இனப்படுகொலைகளை இராணுவ வீரர்கள் செய்கின்றார்கள். தடுக்க வரும் முதியவர் பில்ஜியை அவமதிக்கின்றார்கள். இப்படியே வேட்டை தொடங்கி சில மாதங்களில் அந்த இடமே நிர்மூலமாகின்றது. ஒரு சில ஓநாய்களே எஞ்சுகின்றன. அவையும் மங்கோலியாவின் வெளிப்பகுதிக்கு ஓடி விடுகின்றன. ஓலோன்புலாக்கில் ஓநாய் இனமே அழிகின்றது. ஓநாய்கள் அதிகளவில் இல்லாததால் குதிரைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றது. ஆடு மாடு கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அவற்றுக்கு புல் தட்டுப்பாடு வருகின்றது. வேறு வழியில்லாமல் குதிரைகளை கொல்கின்றார்கள். ஆடு, மாடுகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றார்கள். இயற்கை சங்கிலியிலிருந்து ஒரு கண்ணியை வெட்டியெடுக்க இயற்கை ஸ்தம்பித்து மழை வரத்து நின்று ஊரே சீரழிகின்றது. ஜென்சென் இயற்கைக்கு புறம்பாக கட்டிப் போட்டு வளர்த்த ஓநாய் குட்டியும் சூழலுக்கு ஏற்ப மாறாததால் விரைவில் நோய்வாய்ப்படுகின்றது. வேறு வழியில்லாமல் குழந்தையைப் போல வளர்த்த அந்த நோயில் துடிக்கும் ஓநாயை அவனே மண்வெட்டியால் தலையில் அடித்து கருணைக்கொலை செய்கின்றான். பில்ஜி இறந்து விடுகின்றார். அவரது கடைசி ஆசையின்படி அவரது எஞ்சிய உடலை காட்டுக்குள் கொண்டுச்சென்று போடுகின்றார்கள். ஓலோன்புலாக்கில் ஓநாய்க் கூட்டம் உண்ணும் கடைசி உடலாக பில்ஜியின் உடல் இருக்கின்றது.

ஊரை விட்டு பீஜிங் செல்லும் ஜென்சென் மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து ஓலோன்புலாக் திரும்புகின்றான். ஊர் நவீனமாக மாறியுள்ளது. ஒரு ஓநாய் கூட இல்லை. வெறுமை படர்ந்த முன்னொரு காலத்தில் தான் வளர்த்த ஓநாய்க்குட்டியை கண்டெடுத்த அதன் குகை வாசலில் தனது புதிய நாவலின் சில பக்கங்களை கொளுத்திப் போட்டு ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்கின்றான். ஜென்சென்தான் இந்த நாவலின் ஆசிரியர் என்று நமக்கு தெரிகின்றது.


நாவல் முழுக்க ஓலோன்புலாக்கில் எலிகளோடும், மர்மோட்டுகளோடும், குதிரைகளோடும் , ஆடு ,மாடுகளோடும் ஒரு ஓநாய் அரசன் போல கம்பீரமாக உலாவிய மனதுக்குள் வெறுமை வந்து குடிக்கொள்கின்றது. இந்த உலகத்திலேயே ஆபாசமான விலங்கு மனிதன் என்று தெரிகின்றது. அதே நேரம் சர்வைவல் என்ற தியரிபடி மனிதனை விட எதுவும் வல்லமை இல்லை என்றும் தெரிகின்றது. ஆனால் மனிதனையும் விட மகத்தான சக்தி ஒன்று உள்ளது. அது இயற்கை. அதன் விளைவே இன்று நாம் சந்திக்கும் இயற்கை பேரழிவுகள்.





இந்நூலின் ஆசிரியரை பற்றி:-

ஜியாங் ரோங் 1946-ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957-ல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966-ல் சென்ட்ரல் அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்டில் ஜியாங் கல்வி மேற்கொண்டார். கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைபட்டது. அவருடைய இருபத்தோராவது வயதில், 1967-ல், உள் மங்கோலியாவின் 'கிழக்கு உஜிம்கியூன் பேனர்' இல் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு செல்லும்போது தன்னோடு இரண்டு பெட்டிகள் நிறைய மேற்கத்திய செவ்வியல் படைப்புகளைக் கொண்டு சென்றார் மேலும் அங்கிருந்த பதினோரு ஆண்டுகளில் மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றை தீர்க்கமாக அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். ஒய்வு நேரங்களில் அவை பற்றிய கதைகளைக் கேட்டறிந்ததோடு மேய்ச்சல் நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார்.
 

1978-ல் பீஜிங் திரும்பி 'சமூக அறிவியல்களுக்கான சீன அகாதெமி'யில் தன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் தன் வாழ்வைக் கல்வி துறையாளராக அமைத்துக் கொண்டு 2006 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

2004-ல் வெளியான இந்நாவல் ,அடுத்த இரண்டாண்டுக்குள் நாற்பது லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையானது. 'மேன் ஆசியன் விருது' தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2007-ல் இந்நாவல் அவ்விருதைப் பெற்றது. நாவல் வெளியாகி சில ஆண்டுகள் வரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்த ஜியாங், இப்புத்தகத்தின் எந்தவொரு நிகழ்விலும் விருது வழங்கும் விழாக்களிலும் கலந்துக் கொண்டதில்லை. 'மேன் ஆசியன் விருது' வின் தேர்வுக்குழுவுக்கு இவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு மூலமே இவர் வெளி உலகுக்கு அறியப்பட்டார். எனினும் அந்த விருதையும் அவர் சென்று பெறவில்லை. ஜியாங்கின்இயற்பெயர்: லூஜியாமின்.


சி.மோகனின் மொழிப்பெயர்ப்பை உழைப்பை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. அபாரமென்று சொல்வதை விட வேறு எதுவும் எனக்கு எழுத தோன்றவில்லை.



ஓநாய் குலச்சின்னம்,
ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன்,
அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர்,
விருகம்பாக்கம், சென்னை 93,
பக்கங்கள் 672, விலை 500ரூ.