Friday, September 21, 2012

குஞ்சுண்ணியும், வேதாளமும்

எழுதி எழுதியே எழுத்தாய் போன
குஞ்சுண்ணியின் கதையிது

குஞ்சுண்ணிக்கு திடீரென
பேய்க்கதைகள் எழுதும் ஆசை வந்தது

நடுநிசியில் எழுந்த குஞ்சுண்ணி
ஊர்க்கோடி கல்லறை நோக்கி
தனியாக நடக்க ஆரம்பித்தார்

நூறாண்டு வயதான
முருங்கை மரத்தடியில்
பேப்பர் பேனாவுடன் அமர்ந்தார்

இரிசிக் காட்டேரி
இரத்தக் காட்டேரி
ஆலகால பேய்
ஆளை கொள்ளும் பிரம்ம ராட்சஷன்
கதாபாத்திரங்களை வரிசையாக எழுத ஆரம்பித்தார்

ஏதேதோ கிறுக்க ஆரம்பித்தார்
என்ன எழுதியும் குஞ்சுண்ணிக்கு
திருப்தி வரவில்லை
எல்லாமே ஏற்கனவே எழுதியாயிற்றே
இனி நடக்கப்போவதும் எழுதப்பட்டவையே

குஞ்சுண்ணி கண்மூடி வேண்டினார்
எண்டே பகவதி அம்மே அருள் பாவிக்கனும்
ஒரு வல்லிய கதையை தரணும்
கண்ணை திறந்தார்
எதிரே
வெளுத்த முடி வேதாளமொன்று
குறுநகையோடு நின்றது

நடுங்கி போனார் குஞ்சுண்ணி
எண்டே அம்மே அலறினார்

நோக்கா குஞ்சுண்ணியே அஞ்சற்க
உனக்கு ஞான் உதவி செய்யும்

நீ அறியா மரித்துப்போனவர்களின்
கதை சொல்கின்றேன். கேள்

நீ பிரான்ஸ் காப்கா அறியுமோ
அவன் தற்கொலை செய்த கதை சொல்கின்றேன்
கவனமாய் கேள்

குஞ்சுண்ணி சொன்னார்
காப்கா கதை தெரிந்ததுதானே
துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளுமுன்
அவன் என்னுடன்தான்
அரைமணிநேரம் கதைத்தான்
எனது நாவல் என்றால் அவனுக்கு உயிர்

வேதாளம் திகைத்தது

குஞ்சுண்ணியே கவனமாய் கேள்
உனக்கு பாரதியாரை தெரியுமா
அவரை மிதித்துக்கொன்ற யானையின் பெயர் .....

குஞ்சுண்ணி இடைமறித்தார்
நான் அப்ப திருவல்லிக்கேணியில்தானே இருந்தேன்
நாடி வைத்தியரை கூட நான்தான் அழைத்து வந்தேன்
தெரிந்த கதைதானே. வேறு சொல்

வேதாளம் சலிப்புடன் சொன்னது
குஞ்சுண்ணியே உனக்கு ஆத்மாநாம் தெரியுமா
கிணற்றில் விழுந்து இறந்த அவரை
இங்குதான் புதைத்தார்கள்

ஆத்மாநாம்..
அட நம்ம ஆதி
அவனுக்கு நான் என்றால் உயிர்
சாவதற்கு முன்னால்
அவனிடம் பேசிய ஒரே ஆள் நான்தான்

வேதாளம் எரிச்சலுடன் கேட்டது
உனக்கு கவிஞர் அய்யப்பனை தெரியுமோ?
குடித்து குடித்தே இரத்தம் கக்கி இறந்தவர்

அய்யப்பனோ...அறியாமலோ
அவன் என்னை பற்றி
ஆறு கவிதைகள் புகழ்ந்து எழுதியுள்ளானே
நீ படித்ததில்லையா?

வேதாளத்திற்கு வியர்க்க ஆரம்பித்தது
குஞ்சுண்ணியே இதுதான் இறுதி கதை
முன்னொரு சமயம்
இரத்தினபுரி தேசத்தில்
ரங்கராஜனென்று ஒருத்தன் இருந்தான்

அவன் எழுதாத விஷயமே இல்லை
திடீரென ஒருநாள்
அவன் இறந்தும் போனான்
அவன் கதை அறிவாயோ?
வேதாளம் கேட்டது

குஞ்சுண்ணி சொன்னார்
நம்ம ரங்குதானே
நானும் அவனும்
கோனார் தோப்பில்
மாங்காய் திருடி சாப்பிட்டுள்ளோம்
எனது எழுத்தை கண்ணில் ஒற்றிக்கொள்ளுவான்

வேதாளம் தலை கிறுகிறுக்க
முருங்கை மரத்திற்கு தாவியது

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத
குஞ்சுண்ணி
வேதாளத்தை தோளில் சுமந்தபடி திரும்பினார்


நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, June 21, 2012

ஆடுகளம்
-----------------
ஒரு மாலை வேளையில்
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு மெல்லிய தலையசைப்பு

ஒரு புன்சிரிப்பிற்கு பிறகு
ஒரு அன்பான கைகுலுக்கல்
ஒரு நலம் விசாரிப்பில்

இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு நிதானமான
தேநீர் பருகலுக்கு பிறகு
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது

நமக்கான இடத்தை தேர்வு செய்து
கறுப்பும் வெண்மையும்
கலந்த கட்டங்களின் முன்பாக
நேருக்கு நேர் அமர்கின்றோம்

கட்டங்களின் நிற வேறுபாடுகளை
எதேச்சையாக கவனிக்கும் நாம்

திடீரென நமது முகங்கள்
எதிரெதிர் சந்தித்துக்கொள்வதின்
தர்மசங்கடத்தை உணர தொடங்குகிறோம்

நாம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்
சதுரங்க காய்களை அடுக்குகின்றோம்
களத்திற்கு செல்லும் சாமுராய்

தனது கொலைவாளை
மிருதுவான எண்ணெய் துணியால்
துடைப்பதை போன்று
அவ்வளவு நேர்த்தியாக

ஆட்டத்தை முதலில் ஆரம்பிக்கும் நீ
உனது படைவீரனை களம் இறக்குகின்றாய்

குதிரையிலிருந்தபடி அவனை வீழ்த்தும்
என் ஆவேசம் கண்டு
நீ அரண்டு போகிறாய்
உனது பயம் ரசிக்க வைக்கின்றது

ஒரு வளைவில் திரும்பும்போது
உனது யானை படைகள்
என்னை வழிமறித்து தாக்குகின்றன
தடுமாறி விழுபவனை பார்த்து
மதகுருமார்களும் படைவீரர்களும்
கைகொட்டி சிரிக்கின்றார்கள்

ஆட்டம் மெல்ல மெல்ல
கட்டுப்பாட்டை மீறி போகின்றது
ரெளத்திரம் கொள்ளும்
எனது படைவீரர்கள்
ஆவேசத்துடன் பாய்கின்றனர்

வஞ்சகமும் வெறியும் கலந்த
நமது மதகுருமார்களின் போதனைகள்
கொலைக்களமெங்கும் எதிரொலிக்கின்றன

இதுநாள் வரை ஆடுகளத்திற்கென்று
வரையறுக்கப்பட நியதிகள் உடைபடுகின்றன

நாம் அமர்ந்திருக்கும்
அறையெங்கும் குருதி வாசனை
கவிழ தொடங்குகிறது

நம்மிடம் இன்னும்
ஐந்து போர்வீரர்கள் மட்டும்
எஞ்சியுள்ளார்கள்
யார் யாரை கொல்வார்கள்
என்று தீர்மானிப்பது கடினமாயுள்ளது

ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொருட்டு
எழுந்து வெளியில் செல்லும் நான்
நடுங்கும் கைகளுடன்
ஒரு சிகரெட் பற்றவைத்து
களத்திற்கு திரும்பி வருகின்றேன்
பதற்றமாக சதுரங்க களத்தை
பார்வையிடுகின்றேன்

நான் இல்லாத நேரத்தில்
எனது சதுரங்க காய்களை
யாரும் நகர்த்தி வைக்கவில்லையென்று
உறுதி செய்கின்றேன்
முதுகில் குத்தி கொலை
செய்யப்படவில்லையென்று
ஆசுவாசமடைகின்றேன்

ஆட்டத்தை தொடங்கும்போது
இருந்த நமது முகங்கள்
இப்போது இங்கு இல்லை
அவை வேறொருவடையதாய் மாறியிருக்கின்றன

கூடுமானவரை
நானும் நீயும்
இந்த ஆட்டத்தை
தள்ளி போடவே விரும்புகின்றோம்

இந்த 64 கட்டங்களில்
எங்கோ ஒளிந்துள்ளது
மரணமும்
மரணத்தை தள்ளிபோடும்
இந்த விளையாட்டும்

இன்னும் சில நிமிடங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில மணித்துளிகளில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில யுகங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்

கருணையற்ற இந்த இரவு
நீண்டுக்கொண்டே செல்கின்றது



நன்றி

என்.விநாயக முருகன்

Monday, April 16, 2012

மகாகவி

ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

நன்றி
என்.விநாயக முருகன்

Monday, March 26, 2012

பண்புடன் ஒரு கடிதம்

அன்புள்ள அஞ்சலாவுக்கு
ஒரு கடிதம் எழுத அமர்ந்தேன்
எனது கணிப்பொறியில்
என்ன சிக்கலோ
'அ' தட்டச்சு செய்வதில் பிரச்சினை
மிகுந்த யோசனைக்கு பிறகு
'ஏ' என்று தட்டச்சு செய்தேன்
ஏஞ்சலாவாக மாறிய முன்னாள் அஞ்சலாவிடம்
கொஞ்சம் மன்னிப்பும் கேட்டேன்
கண்ணே ஏஞ்சலா என்னும் போதெல்லாம்
வெளியூர் வேலைக்குச் சென்ற
பக்கத்து வீட்டுக்காரனின் மனைவியை
கொஞ்சும் ராஜ்மோகன் போலிருந்தது
'அ'ன்புடன் என்று முடியும் இடத்தில்
என்ன செய்வதென்று குழம்பி பின்னர்
பண்புடன் என்று முடித்துக் கொண்டேன்


நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, January 22, 2012

இன்று

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு திருவள்ளுவரை சந்தித்தேன்
தனது கவிதை தொகுப்பிற்கு
ராயல்டி கிடைக்கவில்லையென்று விசனப்பட்டார்
தவிர
தான் எப்போதும்
கிரவுன் சைசில் எழுதுவதால்
பதிப்பகம் கிடைக்கவில்லையென்று புலம்பினார்
பேசாமல் தொல்காப்பியர் என்ன புடுங்கியாவென்று
பிளாக்கிலோ பேஸ்புக்கிலே எழுதலாம்
பொழுதாவது போகுமென்றார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு பாரதியை சந்தித்தேன்
என்ன கவிஞரே சுகமாவென்று கேட்டேன்
யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால்
எல்லாம் சுகமென்றார்
இது கண்ணதாசன் சொன்னதாயிற்றே
குழம்பியபடி பார்த்தேன்
என்ன இவ்வளவு விரக்தியென்று கேட்டேன்
சாகித்ய அகாடமி விருதை எதிர்பார்த்து
தலை நரைக்கிறதென்று சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு அவ்வையாரை சந்தித்தேன்
எல்லாம் ஆணாதிக்கம் ஆணாதிக்கம்
என்று தலையில் அடித்து கொண்டார்
அதியமானிடம் வாங்கிய நெல்லிக்கனியை
திரும்ப கொடுக்கப் போவதாக
ஆவேசத்துடன் சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு கம்பரை சந்தித்தேன்
அவரது கதையை
ஒரு மெகா சீரியல் இயக்குனர்
திருடிகொண்டதாக புகார் சொன்னார்
அடுத்து கண்காட்சிக்கு
ஒரு ஐயாயிரம் பக்க நாவல் எழுதும்
உத்தேசமிருப்பதாக சொன்னார்

இன்று புத்தக கண்காட்சியில்
ஒரு மோசிகீரனாரை சந்தித்தேன்
பாவம் இளைத்து களைத்து போயிருந்தார்
தனியாக நாற்காலில் அமர்ந்தபடி
தனது கவிதைப்புத்தகத்தை கையிலெடுத்து
தனக்கு தானே விசிறி கொண்டிருந்தார்
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
எங்கேவென்று கேட்டேன்
தனக்கு
டீ வாங்கி வர போனதாக
சொல்லி சிரித்தார்


நன்றி
என்.விநாயக முருகன்