Monday, April 16, 2012

மகாகவி

ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

நன்றி
என்.விநாயக முருகன்