Saturday, October 31, 2009

படித்ததில் பிடித்தது - மிஸ்டர் மாறார்

மிஸ்டர் மாறார்
திண்ணை.காமில் வந்த இந்த வார நக்கலொன்று. அடிக்கடி சூர்யாங்கறது யாரு என்று தளபதி பட சாருஹாசன் போல கேள்வி வரும். கீற்று.காமில் இவரது சிறுகதைகள் எனக்கு அறிமுகமானது.

Tuesday, October 27, 2009

இயற்கை







இயற்கை
-----------
இயற்கை‌யென்ற தலைப்பில்
சிறுமியொருத்தி வரைந்த ஓவியத்துக்கு
ஆறுதல் பரிசு கூட தரவில்லையாம்.
அழுதபடியே சொன்னாள்.
வாங்கி பார்த்தேன்.
வெள்ளைத்தாளில் பெ‌‌ரிய அளவில்
இரண்டு முக்கோணங்களை
அருகருகே வரைந்திருந்தாள்.
ஒரு அரைவட்டத்தால்
முக்கோணங்களை இணைத்திருந்தாள்.
பிறைநிலவாம்.
மலைகளின் அடியில்
நெளி நெளியாக கிறுக்கியிருந்தவள்
ஆறு வரைந்தேன் என்றாள்.
ஆர்வமாக உற்றுப்பார்த்தேன்.
ஆற்றின் மேலே
ஆனந்தமாய் நீந்தும் மீன்கள்.
ஆற்றோரம் தென்னை மரங்கள் கூட.
ஓடமொன்றை காண்பித்தாள்.
மீன்களுக்கு அடிபடாமல் இருக்க
ஓடத்தின் பாதிமுனை மலை மேல் இருந்தது.
ஓடம் எப்படி மலையேறும்?
இதைச்சொல்லி நிராகரித்தார்களாம்.
சிரித்தபடியே அவளிடம் தந்தேன்.
ஓடமும் ஒருநாள் வண்டி ஏறும்போது
மலையேறினா‌‌‌ல் என்ன தப்பு?

இறைத்தூதுவன்

இறைத்தூதுவன்
——————————————
இரண்டு மாடிக்கடையில்
விற்பனை பிரதிநிதியென்று
அறிமுகப்படுத்திக் கொண்டவன்
இந்த புதுசெல்போனில்
பிரியமானவர்களின்
மனதின் குரலோடு
ரகசியமாக பேசலாமென்றான்.
பதிலேதும் சொல்லாமல்
புன்னகையோடு பார்த்தேன்.
என் மீது நம்பிக்கை வரவில்லை போலும்.
வரிசையாக சொல்ல ஆரம்பித்தான்.
பாட்டு கேட்கலாம்.
படம் பார்க்கலாம்.
படம் பிடிக்கலாம்.
குறிப்பெழுதலாம்.
கடிகாரம் உண்டு.
காலண்டர் பார்க்கலாம்.
விளையாடலாம்.
புத்தகம் படிக்கலாம்.
ஓவியம் வரையலாம்.
கணக்குகள் செய்யலாம்.
கடவுளையும் வரவழைக்கலாம்…….
திகைத்துப்போய் நிமிர்ந்தேன்.
அவன் தலைக்கு பின்னால்
சிறு ஒளி வட்டம் இருந்தது.

Saturday, October 24, 2009

பளிச் கவிதை - 1 --- "அறை"

எனக்கு பிடித்த கவிஞர்கள்/சமீபத்தில் ரசித்த கவிதைகளை இங்கு பதிவு செய்கின்றேன்.

அறை
------
கலவியில் முந்திய விந்துக்கு
நடிக்கத் தெரியாத மனைவியை
உப்புக் கரையாத தோசைக்கு
அறைவேன்

அழகாய் இருக்கும் மாணவியை
அடிக்கடி அழ வைக்க கையெழுத்து
நல்ல காரணம்

முதலையின் பற்கள் குறித்த கேள்விக்கு
அவளை நான் கடைசியாய் அறைந்தேன்
முத்தமிடும் வேட்கை மிக

முத்தமும் சிலுவையும் இணை பிரியாதவை
முத்தமிட்டு சிலுவையில் அறைந்தாலும்
சிலுவையிட்டு முத்தம் பறந்தாலும்

பேரறிவாளன் நான்
நாடகங்களில் நீண்ட வசனம் பேசும்
ஷைலக்கின் பாத்திரம் எனதே
கடைசி விருந்து நாடகத்திற்கு உங்களுக்கு
அனுமதி இலவசம் ஆண்டோனியோ

- நேசமித்ரன்

நன்றி: நேசமித்ரன் கவிதைகள்


காலங்காலமாக நமது குடும்ப அமைப்பின் மூடப்பட்ட அறைக்குள் நடக்கும் வக்கிரங்களை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் வரிகள்

Friday, October 23, 2009

வாழ்த்துரை

வாழ்த்துரை
——----——–
மணமக்களுக்கு வாழ்த்துச் சொல்ல
மேடயேறிய தலைவர்
மெல்ல செருமியபடியே ஆரம்பித்தார்.
எதிர்கட்சியை வசைபாடியவர்
ஒ‌ன்று சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்
எ‌ன்று நிறுத்தினா‌‌‌ர். நீண்ட பேச்சினூடே
மக்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேனென்று
வேறொன்றை சொன்னார்.
தொடர்ந்து பேசியவர்
இளைஞர்களுக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
சமுதாயத்துக்கு ஒ‌ன்று சொல்கிறேன்
பத்திரிகையாளர்களுக்கு ஒ‌ன்று
எ‌ன்று நீட்டிக்கொண்டே சென்றார்.
மணமக்களுக்கென்று எதுவும்
சொல்லாமலேயே கிளம்பினார்.
அந்தவொன்று என்னவெ‌ன்றும்
இறுதிவரை சொல்லவில்லை.

Friday, October 16, 2009

"நண்பனின் காதலி" - திண்ணை.காம் கவிதை

இந்த வார திண்ணை.காமில் வெளியான எனது "நண்பனின் காதலி" கவிதை வாசிக்க...

நண்பனின் காதலி
----------------
பெண்விடுதலை பற்றி
அதிகம் பேசும் நண்பனொருவன்
தொலைபேசியில் வந்தான்.
தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக
தயங்கியபடி சொன்னான்.
ஆச்சர்யத்துடன் விசாரித்தேன்.
அவளைப்பற்றி வர்ணிக்க ஆரம்பித்தான்.
புதுமைப்பெண் என்றான்.
நிமிர்ந்த நன்னடையாம்.
நேர்கொண்ட பார்வையாம்.
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளாம்.
திமிர்ந்த ஞானச்செருக்கு கொண்டவளென்றான்.
உனக்கேற்ற செம்மை மாதர்தான்
சிரித்தபடி வாழ்த்தினேன்.
அசப்புல பார்க்க
அவள் மாதிரியே இருப்பாளென்று
சினிமா நடிகையொருத்தியின்
பெயரை குறிப்பிட்டான்.
கடைசியில் சொன்னதை
மீண்டும் அழுத்திச் சொன்னான்.



-நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, October 13, 2009

கல் யானை & ராக்கெட் விளையாட்டு

கல் யானை
———————————
ஒற்றைக்கல் யானையருகே
கல்வி சுற்றுலாவுக்கு வந்த
குழந்தைகள் நின்றிருந்தனர்
வாய்பிளந்து பிரமித்தபடி.
துடுக்கு சிறுமியொருத்தி கேட்கிறாள்.
இது கரும்பு திங்குமா அங்கிள்?
புரியாமல் குழம்புகிறேன்.
யானையென்றால்
கரும்பு திங்க வேண்டுமென்பது
பொது விதியா?
கரும்புகூட திங்க தெரியாமல்
என்ன யானை இதுவென்று
நகர்கிறாள் திட்டியபடி.
மகேந்திரவர்ம காலத்து
மோசமான யானையொன்று
புராதன பெருமைகளை இழந்து
பரிதாபமாக பார்த்தது என்னை.

ராக்கெட் விளையாட்டு
————————————————————

ஐந்தாம் வகுப்பு
வனஜா டீச்சர் மேல்
ராக்கெட் விட்டதாக
சிறுகதையொன்றின் வரிகளை
வாசிக்க நேரிட்டது.
சிறுவயது பள்ளி நிழலாடியது.
கூடவே உள்ளுக்குள் சிறு குழப்பம்.
வனஜாவா? தனுஜாவாவென்று தெரியவில்லை.
காலஇயந்திரம் குழம்பி நின்ற கணத்தில்
சிறுபேப்பர் ஒன்றை மடித்து
பறக்கவிட்டேன்.
வனஜாவா? தனுஜாவா?
அடுக்களையிலிருந்து வந்த மனைவி
வினோதமாக பார்த்தபடி கேட்டாள்.
இதென்ன சின்னப்புள்ளையாட்டம்!?

Monday, October 12, 2009

சூடான செய்தி

சூடான செய்தி
-------------
விபச்சார வழக்கொன்றில்
கைது செய்யப்பட்ட
நடிகையின் புகைப்படத்தோடு
நாளிதழ் செய்தி போட்டிருந்தார்கள்.
அவள் சொன்னதாக
அடிப்பட்டன மேலும் ‌சில பெயர்கள்.
ஒரு இரவிற்கு ஒரு லட்சம்
வாங்குவதாக கூடுதல் தகவலையும்
கண்டுப்பிடித்து சொல்லியிருந்தார்கள்.
ஒரு லட்சம் நாளிதழ்கள் கூடுதலாய்
விற்று தீர்ந்தனவாம் அன்று.

Saturday, October 10, 2009

"நான்கு கவிதைகள்" - அகநாழிகை இதழ்

நண்பர் வாசு அவர்கள் அமர்க்களமாய் ஆரம்பித்திருக்கும் அகநாழிகை முத‌ல் இதழ் இன்று கிடைக்கப்பெற்றேன். இதழ் முழுக்க ஓரே கவிதை மழை(முப்பது கவிஞர்கள்).
முத‌ல் இதழில் எனது நான்கு கவிதைகள் வந்தது பெருமையாக இருக்கின்றது.
வாழ்த்துக்கள் & நன்றி வாசு.



பூக்காரி
——––––
அதிகம் பேசப்படாத
மலைக்கோயிலொன்றிற்கு
நான் சென்றிருந்த நேரத்தில்
யாரையுமே காண முடியவில்லை.

கோயிலருகே ஒரேயொரு
பூக்கடை மட்டும் மேலே
ஏகாந்தமாய் நின்றிருந்தது.

நடுத்தர வயது பூக்காரியொருத்தி,
பக்கத்தில் வேடிக்கைப்பார்த்தபடி
ஆறுவயது சிறுவனொருவன்.
எங்களைத்தவிர யாருமில்லை.

சிரித்தபடியே கடந்துச்சென்றேன்.
கோயிலுக்குள்ளும் யாருமில்லை.
பூசை செய்யவும் ஆளில்லை.
ஏமாற்றமாய் திரும்பினேன்

என்ன விஷேசம் இந்தக்கோயிலில்
என்று விசாரித்தேன் பூக்காரியிடம்.
சண்டைப்போட்டு
சிவனைப்பிரிந்த பார்வதி கைக்குழந்தையுடன்
வந்தமர்ந்த மலையென்று
சலிப்பாக சொல்லியபடி
கோயிலுக்குள் நுழைந்தாள்.

என்ன சண்டையென்று
நான் கேட்கவுமில்லை.
அவள் சொல்லவுமில்லை.


தொலைந்தப் பறவை
——––––——––––——––––—
பெருநகரில் தொலைந்துப்போன
பறவையொன்றை
நான்கு வயது மகளுக்கு
விளக்க வேண்டியிருந்தது.

புத்தகத்தில் பறக்கும்
காட்டுப்பறவையை
விவரித்தேன்.

குரல் பதியப்பட்ட
ஒலிநாடா ஓடவிட்டேன்.

இந்த ஸ்பரிசம் போலென்று
கூண்டுக்கிளியை
தொட்டுக் காட்டினேன்.

மூன்றையும் ஒ‌ன்று சேர்த்து
காட்ட முடிந்ததேயில்லை.


தனிமையில் ஒரு நட்பு
——––––——––––——––––—
காலியாக வெறிச்சோடி
கிடந்த காலைப்பொழுதில்
ஒரு ரயில் நிலையத்தின்
தனித்து நின்ற
எடைபோடும் எந்திரத்தில்
ஏறி எடைப்போட்டேன்

வந்து விழுந்த அட்டையில்
எடையை பார்த்து
பின்புறம் திருப்ப
நண்பர்களிடம் பழகுமுன்
எடைபோடவும் என்று
அச்சாகியிருந்தது

சிநேகமாக சிரித்து
வைத்து நடந்தேன்


மீந்துப்போகும் சொற்கள்
——––––——––––——––––—
ஹைதராபாத் செல்லும்
ரயில் பயணமொன்றில்
என் சகபயணி கையில்
முப்பது நாளில் தெலுங்கு
கற்றுக்கொள்ளும் புத்தகம்
வைத்திருந்தார்.

பேச்சினூடாக தான்
ஐந்து நாட்கள் மட்டுமே
தங்கப்போவதாகவும் சொன்னார்.

விடைப்பெற்று இறங்கும்போது
மீந்துப்போகும் சொற்களை
என்ன செய்வார்
என்று யோசித்தேன்.


-நன்றி
என். விநாயக முருகன்

Friday, October 9, 2009

"இரண்டு கவிதைகள்" - "திண்ணை.காம்"

திண்ணை.காமில் வெளியான எனது இரண்டு கவிதைகளை வாசிக்க...

தொடரும்
---------
பல வருடங்களுக்கு
மேலாக ஓடிகொண்டிருக்கும்
மெகா சீரியலில்
இடையில் எத்தனையோ மாற்றங்கள்.
ஆரம்பத்தில் நடித்த ஒருத்திக்கு
கல்யாணம் ஆனது.
மற்றொரு நடிகைக்கு
இரண்டு முறை கர்ப்பமாகி
இரண்டு குழந்தைகள் பிறந்தன.
அவருக்கு பதில் இவர்
இவளுக்கு பதில் அவளென்று
நூறு முறை மாற்றிவிட்டார்கள் பாத்திரங்களை.
இடையில் மூன்று முறை
வேறு வீடு வேறு அலுவலகம் மாறியிருந்தேன்.
இது தவிர ஒரு முறை
இறந்து மீண்டும்
பிறந்தும் தொலைத்து விட்டேன்.



பாரி
----
பு‌திதாக வ‌ந்திருந்த
போக்குவரத்துக்காவலர் பெயர் பாரியாம்.
செம கறாராம்.
சிக்னலொன்றில் காத்திருக்கையில்
பக்கத்து பயணி சொன்னார்.
பாரி துரத்திக்கொண்டு ஓடும்
சிறுமியின் கைகளிலிருந்து
சிதறியோடுகிறது பூக்கூடை.
காவல் வாகனத்தை
கடந்து அடுத்த தெரு சந்துக்குள்
மறைகிறாள் எஞ்சிய பூக்களுடன்.
இயலாமையின் வெறுப்பில்
சிதறும் பழங்கள்,
கண்ணாடி வளையல்கள்,
சில விசும்பல்களை
தாண்டி திரும்பும்
பாரியின் வாகனம் மீது
படர்ந்து கிடந்தன முல்லைப் பூக்கள்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Wednesday, October 7, 2009

"சாட்சி" - நவீன விருட்சம் கவிதை

நவீன விருட்சம் வலைப்பூவில் எனது சாட்சி என்ற கவிதை வாசிக்கலாம்

சாட்சி
------
விவாகரத்து
வழக்கொன்றிற்காக
சாட்சி சொல்ல
நீதிமன்ற வளாகத்தின்
வேப்பமரத்தடியில்
காத்திருந்தபோது பார்த்தது.
ஜில்லென்ற தூறல் காற்றில்
நனைந்த சிறகுகளை
ஒ‌ன்றுக்கொன்று ஆறுதலாய்
கோதிக்கொண்டிருந்தன
தவிட்டு குருவிகள் இரண்டு.


-நன்றி
என்.விநாயக முருகன்

Tuesday, October 6, 2009

முன் இருக்கையில்

முன் இருக்கையில்
------------------
முன் இருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை.
தலையில் இருந்து
உதிர்ந்தாலும்
தாங்க முடியும்.
கையிலிருந்து உதிர்கின்றன.
அரைகுறை இருட்டில்
வளையலோடு, சிரிப்பு சத்தமும்.
காலில் நசுங்குகின்றன
மல்லிகைப்பூ பாப்கார்ன்கள்.

Monday, October 5, 2009

"சின்னப்புள்ளத்தனமான கவிதைகள்" - வார்ப்பு.காம்

வார்ப்பு.காமில் முத‌ல் மூன்று கவிதைகளை வாசிக்கலாம்

ஆய பயன்
----------
வாழைமரத்தின் பயன் பற்றிய
கட்டுரையொன்றை
எழுதி வரச்சொன்னேன்
ஆறாம் வகுப்பு சிறுவனிடம்.
அவன் ஏதோ தப்பாக
புரிந்துக்கொண்டு
மாமரம் பற்றி
எழுதி எடுத்து வந்தான்.
திட்ட மனமில்லாமல்
மாம்பழமொன்றை பறித்து தின்று
மதிப்பெண் போட்டேன்.

ஒரு அதிசயம்
-------------
சற்றுமுன்பு
கேட்ட கேள்வியொன்றுக்கு
இம்மாம் பெருசு பூமியென்று
இரண்டு பிஞ்சு கைகளையும்
விரித்து பதில் சொன்னவள்
சென்றபிறகு
இம்மாம் பெருசு என்று
நானும் கைகளை விரித்தேன்
நான்கு அடி கூடுதலாக
பூமி விரிந்து சுற்றியது.


வாசிப்பு
-------
புதுப்புத்தகங்களை
வாங்கியவுடனேயே
வாசனைப் பிடித்து
எல்லா பக்கங்களின்
எழுத்துக்களையும்
எப்படியோ
உறிஞ்சி விடுகிறார்கள்.
குழந்தைகள் படிக்கவில்லையென
குறைச்சொல்ல
இனி என்ன இருக்கிறது?


ராட்சஸி
-------
இந்த குறும்புக்கார
சிறுமிக்கு
வாயெல்லாம் பொய்.
கொஞ்சம் அதிகம்தான்.
தன்னோடு விளையாட
வர மறுத்த நிலாவை
உடைத்துவிட்டதாக
வானத்தைக் காட்டினாள்.
சிரித்தபடி வீடு திரும்பி
ஜன்னல் வழியே
மேலே பார்த்தேன்.
ராட்சஸி கோபத்தில்
உடைத்தாலும் உடைத்திருப்பாள்.


தோழி
-----
நான் சென்ற
மழலையர் பள்ளியின்
மாறுவேட போட்டியொன்றில்
நேரு வேடமிட்ட
குழந்தையிடம்
இந்திராகாந்தி வேடமிட்ட
குழந்தையைக் காட்டி
யாரென கேட்டார்கள்
பரிசு வழங்கிய நடுவர்கள்.
ஒன்றாம் வகுப்புத்தோழி
ஆர்த்தியென்று சொல்ல
எல்லாரும் சிரித்தார்கள்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Friday, October 2, 2009

"நீங்கள் கேட்டவை" - திண்ணை.காம் கவிதை

திண்ணை.காமில் வெளியான எனது "நீங்கள் கேட்டவை" என்ற கவிதை வாசிக்க....

உயிரோசையில் இந்த கவிதையை வாசிக்கலாம்.

நீங்கள் கேட்டவை
----------------
கடற்கரைக்கு வந்திருந்த
புதுமண தம்பதிகளிடம்
தொலைக்காட்சி தொகுப்பாளினி
பிடித்தமானவற்றை கேட்டுக்கொண்டிருந்தாள்.
கடைசியாக பார்த்த படம் கேட்டாள்.
கணவருக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
மனைவிக்கு பிடித்த பாடல் கேட்டாள்.
கணவரிடம் பிடித்த நடிகையை கேட்டாள்.
மனைவியிடம் பிடித்த நடிகரை கேட்டாள்.
கணவருக்கும் , மனைவிக்கும்
ஒருவரையொருவர் பிடித்திருக்கிறதாவென்று
கேட்கவேயில்லை இறுதிவரைக்கும்.


-நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, October 1, 2009

மூன்று கவிதைகள்

மூன்று கவிதைகள்
-----------------



மாடு
—–––

சைக்கிளில் வ‌ந்த
மகன் கன்றுக்குட்டியை
இடித்துவிட்டதாக சொன்னபோது
கொஞ்சம் பதறித்தான் போனது.
அழைப்புமணியை கழற்றி
சற்று உயரத்தில் மாட்டலாமென்று
வாசல் வரும்போதுதான் கவனித்தேன்.
பெரியமாடு போஸ்டர் நக்கி கொண்டிருந்தது.



நாய் கண்காட்சி
——————————————

நாய் கண்காட்சியொன்றில்
வித விதமான நாய்களின்
அணிவகுப்பை பார்த்தேன்.
எட்டங்குல நாய் முதல்
எண்பது கிலோ நாய் வரை
வரிசையாக நின்றன.
ஒவ்வொரு நாயும்
விநோதமான ஆடைகளை
அணிந்திருந்தன.
சில நாய்கள் நகைகளும்
அணிந்து வாலாட்டின.
கறுப்பு கண்ணாடி
காலுறைகள் கூட போட்டிருந்தன.
என் நாய் நெருப்புத்தாண்டும்.
என் நாய் கடைக்குப்போகும்.
என் நாய் வேட்டையாடும்.
என் நாய் ஷேக்ஹேண்ட் தரும்.
பல பல குரல்களில்
அறிமுகம் செய்தார்கள்.
கண்காட்சி முழுவதும்
சுற்றிப் பார்த்துவிட்டேன்.
எந்த நாயும் நாய்போல
தெரியவில்லை.


யோகா டீச்சர்
————————————

பு‌திதாக சென்றிருந்த
யோகா வகுப்பொன்றில்
என் முன் அமர்ந்திருந்த
இளம்பெண் ஒருத்தி
மூச்சை நன்றாக
உள்ளிழுத்து வெளியே
விடும்படி சொன்னாள்.
செய்தும் காட்டினாள்.
அவள் செய்யும்போது
எனக்கு மூச்சே
நின்றுவிடும் போலிருந்தது.
மூச்சை இழுத்து சற்று
அப்படியே வைத்திருக்க சொன்னாள்.
சொல்லும்போது விட்டால் போதுமென்றாள்.
திடீரென செல்போன் ஒலிக்க
எழுந்து சென்றாள் பாதியில்.
அவள் செல்வதை பார்க்கையில்
மூச்சில் ஏதோ மாற்றம்.
தலை மறைந்ததும்
திணற ஆரம்பித்தேன்
கொஞ்சம் கொஞ்சமாய்.
மரணத்துக்கு சற்று முன்பு
திரும்பிவிட்டாள்.
ந‌ல்லவேளை…
போன மூச்சு வந்தது.