Wednesday, August 13, 2014

புதிய புத்தகம் பேசுது - ராஜீவ்காந்தி சாலை

ஆகஸ்ட் மாத "புதிய புத்தகம் பேசுது" இதழில் வெளிவந்துள்ள "ராஜீவ்காந்தி சாலை" நாவல் விமர்சனம்.  

நன்றி:- சா.சுரேஷ்
 
 
 

Tuesday, August 5, 2014

தேவதைகளின் உலகம்

மலைகள்.காம் இதழில் "தேவதைகளின் உலகம்" என்ற சிறுகதை வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...

Sunday, July 27, 2014

சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை

நன்றி:- ந.முருகேச பாண்டியன்

தமிழ் இந்துவில் ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றிய ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...  


சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல.

பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாய முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப் பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது.

கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமை யாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன் றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற் றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணி யாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கிறது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடை பெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மன அமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம் பெண்கள், காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன் வாழ முயலுகின்றனர்.

பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப் பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார். சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும் அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள் பற்றிய விவரிப்பு ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும் பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும் மனிதர்கள் இப்படியெல்லாம் தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன் என யோசிக்க வைக்கிறது நாவல்.

வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டு புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

மனப் பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டி டதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாகத் தேடி அலையும் மனிதர்கள் மனப் பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கிறார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவிய லாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது.

நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்துகொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ் காந்தி சாலை நாவல் நீள்கிறது எனவும் வாசிக்கலாம்.

Sunday, June 8, 2014

ராஜீவ்காந்தி சாலை - நாவல் விமர்சனம்

இம்மாத உயிர்மையில் இமையம் அவர்கள் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு....

விமர்சனம் – இமையம்

எல்லாக் காலத்திலும், எல்லா மனிதர்களுக்கும் பெரும் சவாலாக, பெரும் அதிசயமாக, உண்மையான அதிசயமாக இருப்பது வாழ்க்கைதான். அந்த அதிசயத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முயல முடியும். அப்படியான ஒரு முயற்சிதான் விநாயக முருகனுடைய ராஜீவ் காந்தி சாலை நாவல்.

 தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம் என்பது அநேகமாக குடும்பத்தைப்பற்றி மட்டும்தான் அதிகம் பேசியிருக்கிறது. அதிகம் அழுதிருக்கிறது. பெரும் திரளான மக்கள் குறித்து, ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட காலத்தில் சமூகம் பெற்ற மாற்றங்கள் குறித்து, பொது சமூக வாழ்வு குறித்து அநேகமாக எழுதப்படவில்லை. தனி மனித இழப்பிற்கு, சோகத்திற்கு, கண்ணீருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் – பெரும் சமூக நிகழ்வுக்கு கொடுக்கப்படுவதில்லை, ஏன்?

 கடந்த இருபதாண்டுகளாக பெற்றோர்களுடைய ஒரே கனவாக இருந்தது தங்களுடைய குழந்தைகள் – ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கவேண்டும் என்பதுதான். அதே மாதிரி கடந்த இருபதாண்டுகளில் படித்த எல்லா மாணவர்களுடைய கனவும், ஆசையும், லட்சியமும் ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான். ஒரு தலைமுறையினரின் வாழ்வாக வரவேற்க்கப்பட்ட ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ் இலக்கியமோ, இந்திய இலக்கியமோ அதிகம் பேசியிருக்க வேண்டிய, விவாதித்திருக்க வேண்டிய வாழ்க்கை முறை இது. நிஜத்தில் அப்படி எதுவும் நிகழவில்லை. அந்த விசயத்தில் ராஜீவ் காந்தி சாலை – முக்கியமானது.
வாழ்வின் லட்சியமாகவும், பிறவியின் பயனாகவும் மதிக்கப்பட்ட வரவேற்கப்பட்ட ஐ.டி. கம்பனிகள் கொண்டு வந்தது என்ன? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது, எப்படி பார்க்கிறது, அதோடு ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோரின் மனநிலை, வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது குறித்து விநாயக முருகன் தெளிவாக எழுதியிருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பனி உருவாகிறது. ஐநூறு ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. உண்மைதான். ஐ.டி. கம்பனிகள் அமைகிற இடத்தில், சுற்றுப்புறச் சூழலில், அங்கு வசிக்கக்கூடிய மக்களின் வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்து இலக்கியப் படைப்புகள் வாயைத் திறப்பதில்லை. தனியார் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு அரசோ, தனியாரிடமிருந்தோ வழங்கப்படும் ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் நிலங்களை நம்பி வாழ்ந்த மக்கள் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை போதிய பதிவுகள் இல்லை. ஐ.டி. கம்பனிகள் மூலம் ஒரு பிரிவினர் வேலை பெறுகின்றனர். அதே நேரத்தில் ஒரு பிரிவினர் வேலை இழக்கின்றனர் என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. ஜேசிபி – என்கிற ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு ஆயிரம் மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை செய்து முடிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அநாவசியக் குப்பைகளைப்போல இருப்பிடத்திலிருந்து, உழைப்பிலிருந்து அகற்றப்படுகிறார்கள். தெருவோர வாசிகளாக மாற்றப்படுகிறார்கள். வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம், நாகரீகம் என்பது குறித்து நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் தவறானவை என்று விநாயக முருகன் சொல்கிறார். இதற்கு காரணம் நம்முடைய கல்வி. நாம் எதை கல்வியாக கற்க வேண்டுமோ அதற்கு நேர் எதிரானதையே கற்றிருக்கிறோம்.

 ராஜீவ் காந்தி சாலை – நாவல் சென்னை வாழ்வை பேசுகிறது. குறிப்பாக கடந்த இருபதாண்டுகால சென்னை வாழ்வு. நூறு இருநூறு ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை இருபதே ஆண்டுகளில் சென்னை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான சாலைகள், பிரம்மாண்டமான பாலங்கள், பிரம்மாண்டமான கட்டிடங்கள். இவற்றிற்கு போட்டி போடுவது மாதிரி மனிதர்களின் தேவைகளும், கனவுகளும, ஆசைகளும் பிரம்மாண்டமாகிவிட்டன. இந்த பிரம்மாண்டங்கள் யாருடைய வாழ்வை மேம்படுத்துகிறது, யாருடைய வாழ்வில் மண்ணை அள்ளிப்போடுகிறது என்ற கவலை நாவல் முழுவதும் இருக்கிறது.

 மெத்தப் படித்தவர்கள், அதி புத்திசாலிகள், நல்ல வேலை, நல்ல சம்பளம் வாங்குகிறவர்கள் ஏன் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்? முறையற்ற வகையில் உறவு கொள்கிறார்கள், காதலியோடு படுத்திருந்ததை படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள், ஓயாத பாலியல் தொல்லையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள், பைத்தியமாகிறார்கள், ஆண் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்கள், கார், பைக், பிளாஸ்மா டி.வி, ஐ.போன், சாம்சங் கேலக்ஸி எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையான வெறுமையையே கொண்டுவந்து சேர்க்கிறது. வெறுமையிலிருந்து, மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு தற்கொலைதான், பாலியல் விஷமங்கள்தான் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஐந்து மணிநேர பயணம், பனிரெண்டு மணிநேர வேலை என்கிற போது ஒருவன் இயல்பான நிலையில் இருக்க முடியுமா? அதோடு வேலை எப்போது பறிபோகும் என்ற கவலை, பிராஜக்ட் வருமா? வராதா? என்ற கவலை, பெஞ்ச் சிஸ்டம் குறித்த அச்சம், எல்லாவற்றுக்கும் மேலாக போலியான பேச்சு, சிரிப்பு, நட்பு, நடிப்பு என்றாகி கடைசியில் தனிமனித, குடும்ப, சமூக வாழ்க்கையிலும் போலி என்ற நிலையில் மனம் கொள்ளும வெறுமை – எப்படி ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் மனிதர்களிடையே நிலவுகிறது என்பதை இந்த நாவல் கூடுதல் அழுத்தத்துடன் பேசுகிறது.

ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கையை ஒரு பக்கம் விவரிக்கும் நாவல் மற்றொரு பக்கம் ஐ.டி. கம்பனிக்கு நிலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையையையும், நிலத்தோடு தொடர்புடைய, கிராமத்தோடு தொடர்புடைய மனிதர்களின் அவல வாழ்வையும் விவரிக்கிறது. ஐ.டி. கம்பனிகளில் வேலை பார்ப்பவர்களின் பெயர்கள், கௌசிக், ப்ரணாவ், ப்ரணிதா, சுஜா, ரேஷ்மா, பிரேம் குமார். இப்பெயர்கள் நமக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றை சொல்கிறது. பெயர் வைப்பதில் தமிழர்கள் பெரிய மாற்றம் பெற்றுள்ளனர்.

முன்பு நிலத்திற்கான மதிப்பு என்பது, செம்மண்ணா, கருமண்ணா, உவர் மண்ணா, வானம் பார்த்த பூமியா, கிணறு, ஏரிப் பாசனம் கொண்டதா – என்பதை வைத்து தீர்மானமாயிற்று. இன்று நிலத்திற்கான மதிப்பு என்பது, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, கோவில், கம்பனிகள் – சாலை வசதி – இவை எல்லாம்தான் தீர்மானிக்கிறது. காணாமல் போனது குளங்கள், ஏரிகள், ஓடைகள், தரிசு, புறம்போக்கு நிலங்கள் மட்டுமல்ல. பறவைகள், பனைமரங்களும்தான். அதோடு காணாமல் போனவர்கள் குறி சொல்பவர்கள், கைரேகை, கிளி ஜோசியக்காரர்கள், ஈயம் பூசுபவர்கள், சாணை பிடிப்பவர்கள், அம்மி கொத்துபவர்கள், பழனீ விற்பவர்கள், புடவை வியாபாரிகள் என்று எல்லோருக்காகவும் கவலைப்படுகிறார் விநாயக முருகன். 

ராஜீவ் காந்தி சாலை மற்றொரு மிக முக்கியமான பிரச்சினையை பேசுகிறது. பாலியல் குறித்து அதிகம் பேச வேண்டும். அதிகம் எழுத வேண்டும். ரசிக்கும்படியாக. போற்றும்படியாக. அகப்பாடல்களைப் போன்று. உடலை துணியால் மூடிக்கொள்கிறோம். ஆனால் மனதை எதைக்கொண்டு மூட முடியும்? மனித மனத்தின் ஆசைகள், குரூரங்கள், வக்கிரங்கள், ஒவ்வொன்றும் நாம் புனிதர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. விமான நிலைய கழிப்பறையிலும், ரயிலின் ஏ.சி. கோச் கழிப்பறையிலும் ஆண் பெண் நிர்வாணப் படங்களை வரைந்து வைக்கும் மேல்தட்டு வர்க்க மனதின் செயலை நாம் எப்படி புரிந்துகொள்வது? எல்லா நிகழ்வுகளும் நம் கண்முன்னேதான் நிகழ்கிறது. அதை நாம் பார்ப்பதில்லை. விநாயக முருகன் பார்த்திருக்கிறார். எழுதியிருக்கிறார். மனித மனத்தின் விசித்திரங்களை, குரூரங்களை. சரியாகவும். சற்று மிகையாகவும்.

 இந்த நாவல் ஆபாசமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? காமம் – பணம் இதுதான் மனித வாழ்க்கை. மனிதனுடைய அத்துணை கீழ்மையான செயல்களுக்கும் இவைதான் காரணம். அதற்காக இந்த இரண்டையும் விட்டுவிட முடியுமா? முடியாது. காரணம் காமமும் பணமும்தான் வாழ்வின் அடிப்படை. தமிழக இந்தியக் குடும்ப அமைப்பு புனிதமானதுதானா? புனிதம் – புனிதமற்றது இதை எப்படி வரையறுப்பது? எப்படி விளக்குவது? தனிமனித வாழ்க்கையிலிருந்தா? சமூக வாழ்க்கையிலிருந்தா?

 நாம் நம்முடைய பெண்களை கன்னியாஸ்திரி மடத்தில் இருக்கும் பெண்களைப்போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதனால்தான் எல்லாக் குழப்பமும ஏற்படுகிறது. நாம் நமது பெண்கள் மீது ஏற்றி வைத்திருக்கும் புனிதங்கள் ஆபத்தானவை. அந்தப் புனிதங்கள் மிகையானது மட்டுமல்ல உண்மையானதுமல்ல.

இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு புது காதலனுடன் ஓடிப்போகும் பெண்கள், காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் பெண்கள், ஒரே ஆணுடன் படுக்கும் தாயும், மகளும், ஒரே ஆணுக்காக போட்டியிடும் மூன்று பெண்கள், ஒரே ஆணுடன் ரகசியமாக மாறிமாறி படுக்கப்போகும் தோழிகள் இப்படி பல விநோதங்கள். இந்த விநோதங்கள் இப்போதுதான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கூடுதலாக நடக்கிறது என்று சொல்ல முடியும். விநோதங்கள் கூடுதலாக நடப்பதற்கு இப்போது வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். காம செயல்பாடு என்பது முன்பு இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டதாக, இருட்டில் நடப்பதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. கேமராவால் படம் எடுக்கப்படுவதாக, காட்சிப்பொருளாக, வியாபாரப் பொருளாக, உலகத்திற்கே காட்சியாக்கப்படும் விசயமாக, காலத்திற்கும் அழியாத மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் காட்சியாக மாற்றப்படுகிறது. தொழிற்நுட்பம் மனிதர்களை ரகசியம் அற்றவர்களாக மட்டுமல்ல, அந்தரங்கம் அற்றவர்களாக மட்டுமல்ல, நிர்வாணமாக்கிவிட்டது.

நிஜம், நடந்தது என்ன, குற்றம், நீயா நானா, நித்திய தர்மம், உண்மையை பேசுவோம், பேச தயங்குவதை பேசுவோம், நில், கவனி, சொல் போன்ற நிகழ்ச்சிகளின் வழியே நம்முடைய வீர தமிழச்சிகள், காதலனுடன், கணவனுடன், அடுத்தவளின் கணவனோடு செய்த காம விளையாட்டுகளை சொல்ல மட்டுமல்ல – செய்தும் காட்டுகிறார்கள். அந்தரங்கத்தை காட்சிப்படுத்துகிறவர்களில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. இதைத்தான் வளர்ச்சி, முன்னேற்றம், தொழிற் நுட்ப புரட்சி என்று சொல்கிறோமா என்பதே விநாயக முருகனின் கேள்வி.
நவீன வாழ்வு, நவீன தொழிற்நுட்பம், அதிகப்படியான பணம், வசதிகள், விசித்திரம், வக்கிரம், மன அழுத்தம், விவசாய நிலத்தோடு தொடர்புடைய வாழ்க்கைப்போய் தொழிற்சாலைகள் உருவாகும்போது, ஏற்படும்போது – தனிமனித வாழ்வில், குடும்ப, சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எழுதியிருக்கிறார். அதிகப்படியாகவும் எழுதியிருக்கிறார்.

 படைப்புக்கான வெளி எது, படைப்புக்கான வெளியை எது உருவாக்குகிறது – எதார்த்தமா, கற்பனையா, அறிவா, அனுபவமா, படிப்பா என்றால் எல்லாம் சேர்ந்துதான் என்று ராஜீவ் காந்தி சாலை நாவல் சொல்கிறது.

நாவலில் மனிதர்கள் வருகிறார்கள். பெறுகிறார்கள். இழக்கிறார்கள். யாரிடத்திலும் காயம் இல்லை. புண், சீழ், வலி, கண்ணீர், ஓலம், அலறல், அழுகை, கதறல், ஒப்பாரி இல்லை. வெறும் தகவல்களாக – வெறும் வாக்கிய அமைப்புகளாகவே இருக்கிறது. ஒரு படைப்பின் அடிப்படை – சிரிப்பு – கண்ணீர். எல்லா தகவல்களையும் கொட்டி தீர்க்க வேண்டும் என்ற ஆவேசம் இருக்கிறது. கடந்த காலமும் வாழ்க்கையும் மேலானது, புனிதமானது என்ற எண்ணம் நாவலாசிரியரிடம் அழுத்தமாக இருக்கிறது. நேற்றைக்கு இன்று மோசம். இன்றைக்கு நாளை இன்னும் மோசம். தகவல்களையும் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவை. அந்த வகையில் ராஜீவ் காந்தி சாலை நாவல் கவனத்திற்குரியது. 

Saturday, June 7, 2014

மறைந்துப் போனவர்களின் நிழல்கள்


மலைகள்.காம் ஐம்பத்தொன்றாவது இதழில் "மறைந்துப் போனவர்களின் நிழல்கள்" என்ற சிறுகதை வெளியாகி உள்ளது. நண்பர்கள் பார்வைக்கு... 

Wednesday, May 21, 2014

ஒரு பீரோவின் வரலாறு

மலைகள்.காம் ஐம்பதாவது இதழில் எனது ஒரு பீரோவின் வரலாறு என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. மலைகள்.காமிற்கு நன்றி      

எங்கள் வீட்டில் ஒரு பழைய மரப்பீரோ இருந்தது. இப்போது அது எங்கள் வீட்டில் இல்லை. மதுரையில் இருக்கும் எனது பெரிய அண்ணனின் வீட்டுக்கு அதை தள்ளிவிட்டாச்சு. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் கடலூரில் வசிக்கும்போது கடிலம் ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாக எனது அம்மா அடிக்கடி சொல்வார்கள். இப்போது எனது அம்மாவின் வயது எழுபது. அப்படி வெள்ளப் பெருக்கு வந்த தினத்தன்று எனது தந்தையும், அவரது நண்பர்களும் தங்கள் அலுவலக ஜீப்பை எடுத்துக் கொண்டு கடலூரின் சுற்றுப்பக்க கிராமங்களுக்குச் சென்றார்களாம். எனது அப்பா தமிழ்நாடு அரசு பொது சுகாதாரத்துறையில் அலுவலகராக பணியாற்றியதால் இந்த காலரா மருந்து கொடுப்பது, மலேரியா தடுப்பு ஊசி, யானைக்கால் வியாதிகளுக்கு மாத்திரை கொடுப்பது போன்ற வேலைகள் அவருக்கு. வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களின் சேரிகளை பார்வையிட சென்றபோது கடிலம் ஆற்றில் பெரிய காட்டு தேக்கு மரம் வந்து ஒதுங்குவதை பார்த்துள்ளார்கள். அந்த காட்டு மரத்தை பற்றி எனது அம்மா, அந்த காலத்து ஆசாமிகள் எல்லாம் விவரிக்கும்போது காது கொடுத்து கேட்க முடியாது. அவதார் திரைப்படத்தில் வரும் நூற்றாண்டு பழமை வாய்ந்த அந்த பெரிய கல்மரம் அளவுக்கு இருக்கும். அவர்கள் சொல்லும் கதையை வைத்து அப்படியே ஒரு வரலாற்று ஆவணப்படம் எடுத்துவிடலாம். அவ்வளவு விவரணைகளோடும், ஏராளமான நுண்ணிய அடுக்குகளுடன் கூடிய தகவல்களுடன் அந்தக் கதை இருக்கும்.

நல்லவேளை நான் அப்போது பிறந்திருக்கவில்லை. பிறந்திருந்தால் அந்த அதீதக்கதைகளை எல்லாம் அப்போதே சுக்குநூறாக உடைத்திருப்பேன். சரி. அடிச்சு விடுறாங்கன்னு கதை கேட்பேன். அதெப்படி கோடாலியால் கூட பிளக்க முடியாத ரம்பத்தால் கூட அறுக்க முடியாத மரம் இருக்கும்? அதென்ன மரமா? அல்லது கருங்கல் பாறையா? மரத்தை வெட்ட வெட்ட கோடாலிகள் உடைந்துப் போனதுதான் மிச்சம் என்று எனது அம்மா சொல்வார். என் அம்மா சொல்லித்தான் மரங்களின் வயதை எப்படி கணக்கிடுவது என்று எனக்கு தெரிய வந்தது. மரங்களை குறுக்காக வெட்டினால் வளையங்கள் வருமல்லவா? அந்த வளையங்களின் எண்ணிக்கையை வைத்துதான் மரத்தின் வயதை கணிப்பார்களாம். மாமரம் என்றால் குறைந்த வளையங்களும், ஆலமரம் என்றால் அதிக எண்ணிக்கையிலான வளையங்களும் இருக்குமென்று எனது அம்மா சொல்வார். வளையங்களின் எண்ணிக்கை பெருக பெருக அந்த மரத்துக்கு காற்றுக்கும், புயலுக்கும் தாக்குக்கொடுக்கும் திறன் அதிகரிக்கும். தேக்கு மரம் நூறாண்டுகள் தாண்டியும் வளரும் என்று சொன்னார்கள். சில மரங்கள் ஒவ்வொரு பத்தாண்டுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும், சில மரங்கள் ஒவ்வொரு ஐம்பதாண்டுகளுக்கு ஒருமுறை வளையங்களை உருவாக்குமென்றும் சொன்னார். அப்படியென்றால் ஐநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் கூட இருக்குமல்லவா? கேட்டேன். இருக்கலாம். யார் கண்டது? இந்த பீரோ செய்ய எடுத்துட்டு வந்த மரமே நூறாண்டு பழமையானது என்று அம்மா சொன்னார். ஒவ்வொரு மரங்களும் ஒவ்வொருவித பொருட்கள் செய்ய உதவும். பனை மரமென்றால் உத்திரம் அமைக்கும் சட்டங்கள் செய்யவும், மாமரம் என்றால் சின்ன சின்ன நாற்காலி சட்டங்கள் செய்யவும், பலாமரமென்றால் இசைக்கருவிகள் செய்யவும் உதவும். இதெல்லாம் என் அம்மா சொல்லித்தான் தெரியும். ஒருமுறை நாங்கள் திருவண்ணாமலையில் குடியிருந்தபோது எங்கள் வீட்டு கொல்லைப்பக்கம் இருந்த பனைமரத்தில் இடி விழுந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள். மழையிலும் மரம் பற்றிக்கொண்டு எரிந்தது. ஆனால் மாந்தோப்பிலோ, தென்னந்தோப்புகளிலோ இடி விழவில்லை. அது ஏன் பனைமரத்தில் மட்டும் சரியாக இடிவிழுந்தது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. மற்ற மரங்களை விட பனை மரங்களுக்கு இடியை கடத்தும் தன்மை அதிகம். தென்னையை விட பனையின் வேரில் அதிகம் நீர் நிறைந்திருக்கும். அதனால் இடி வேகமாக இறங்குமென்று சொன்னார்கள். பனை மரம் மின்னலை கடத்தும் கடத்தி என்று பின்னாட்களில் கல்லூரியில் இயற்பியல் வகுப்பெடுத்த ஆசிரியரும் சொன்னார். சரி. அதெல்லாம் போகட்டும் கடிலம் ஆற்றில் கண்டெடுத்த மரத்தின் கதைக்கு வருகிறேன்.

அந்த மரத்தை ஐம்பது ஆட்கள் இரண்டு மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று நாட்கள் கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்தார்களாம். கயிற்றை நம்ப முடியாது. காட்டுக்கொடிகள் உறுதியானவை என்பதால் தடிமனான கயிறுகளோடு காட்டுக்கொடிகளையும் பிணைத்து வெள்ளத்திலிருந்து நாணல் புதர்கள் நிறைந்த கரைக்கு முதலில் இழுத்து வந்துள்ளார்கள். பிறகு கரையில் இருந்த பெரிய மரங்கள், பாறைகளோடு கயிற்றின் இன்னொரு நுனியை கட்டி வைத்துள்ளார்கள். மூன்றாம் நாள் ஆற்றில் வெள்ளம் குறைந்தபோது கூலிக்கு யானை கொடுக்கும் ஆட்களை தேடியுள்ளார்கள். ஆனால் மழைக்காலம் என்பதால் பெரும்பாலான யானைப்பாகன்கள் வரவில்லையாம். ஒருவழியாக எனது அப்பாவின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் கொசுமருந்து அடிக்கும் ஆட்கள் வழியாக அவர்கள் வசிக்கும் குப்பத்தில் இருந்து ஐம்பது பேர்களை திரட்டி ஆற்றங்கரைக்கு அழைத்து வந்து அந்த காட்டு மரத்தை கரையேற்றியுள்ளார்கள். பிறகு அந்த மரத்தை அரசு அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து வெட்டி ஆளாளுக்கு பங்கு போட்டுக் கொண்டார்களாம். பெரிய துண்டுகளை எல்லாம் மேலதிகாரிகளும், கிளைத்துண்டுகளையெல்லாம் கீழ்நிலை அதிகாரிகளும் பிரித்துக்கொண்டார்களாம். அப்படி பிரித்ததில் ஒரு பெரிய துண்டு எங்க வீட்டுக்கு வந்தது. அந்த மரத்துண்டை வந்து பார்த்த உள்ளூர் ஆசாரிங்க வியந்து போய் தங்களால் இந்த மரத்தை செதுக்கி பீரோ செய்ய முடியும். ஆனால் தங்களுக்கு வேலைப்பாடுகள் செய்ய அவ்வளவாக வராது என்று கைவிரித்துவிட்டார்கள். பிறகு அப்பாவின் நண்பருக்கு தெரிந்த இரண்டு ஆசாரிங்க சிதம்பரத்திலிருந்து வந்தார்களாம். மரத்துண்டை ஒரு லாரியில் ஏற்றி சிதம்பரம் கொண்டுச்சென்று அங்கு அவர்கள் தச்சுப்பட்டறையில் வைத்து பீரோவுக்கான வேலைப்பாடுகளை செய்தார்களாம். பீரோவின் தலைப்பகுதியில் இரண்டுப்பக்கங்களிலும் இருந்து இரண்டு அன்னப்பறவைகள் எதிரெதிரே இடமும்,வலமும் அமர்ந்து முத்தமிட்டுக்கொள்வது வடிவமைப்பு இருக்கும். மயில் தரையில் அமர்ந்திருக்கும்போது அதன் நீண்ட தோகை மண்ணில் படிந்திருப்பது போன்றதொரு வடிவமைப்பை பீரோவின் கால்பகுதியில் செதுக்கியிருந்தார்கள். எனக்கு கால்பகுதியை விட தலைப்பகுதியைத்தான் அதிகம் பிடிக்கும். அந்த அன்னப்பறவைகள் முத்தமிட்டுக்கொள்வது சற்று கிளர்ச்சியை தூண்டுவது போன்று கூட இருக்கும். இப்போதிருக்கும் இரும்பு பீரோக்கள் போல இரண்டு கதவுகள் இருக்காது. ஒரே கதவுதான். இரண்டு கதவுகள் இருந்தால் மரத்தின் உறுதி போய்விடுமென்று யாரோ அனுபவம் வாய்ந்த ஆசாரி தச்சுப்பட்டறையில் சொன்னாராம். கதவின் இடுக்கு வழியாக காற்றின் ஈரப்பதம் நுழைந்து நாளடைவில் கதவின் இரண்டு பக்கங்களிலும் தேய்மானம் பூச்சி அரிப்பு வந்துவிடுமென்று ஆலோசனை சொன்னாராம். அப்பா சரியென்று ஒரே கதவை வைக்க சொல்லிவிட்டார். திண்டுக்கல்லிலிருந்து வரவழைக்கப்பட்ட பித்தளைப்பூட்டை கதவின் முனையில் பொருத்தியிருந்தார்கள். நாங்கள் இதுவரை குடியிருந்த எத்தனையோ வீடுகளில் இந்த பிரச்சினையை சந்தித்துள்ளோம். மழைக்காலம் வந்துவிட்டால் மரக்கதவு, ஜன்னல்களில் ஈரம் இறங்கி உப்பி விடும். கதவுகளை, ஜன்னல்களை தாழிட சிரமமாக இருக்கும். சரியாக தாழ்ப்பாளில் பொருந்தாது. ஆனால் இந்த பீரோவின் கதவை மட்டும் எப்படி நாற்பது வருடங்களாக எந்த சிறுப்பிரச்சினையும் இல்லாமல் தாழிட முடிகிறது என்று வியப்பாக இருக்கும்.

அந்த பீரோ செய்துவிட்டு மிச்சமிருந்த துண்டில் ஒரு கட்டிலும் செய்தார்கள். கட்டில் கூட அவ்வளவு விசேஷம் இல்லை. அந்த பீரோதான் என்னை எப்போதும் கவர்ந்திழுக்கும். எட்டடி உயரமும் ஐந்தடி கொஞ்சம் குறைவான அகலமும் இருந்ததா என்று சரியாக நினைவில்லை. பள்ளிக்கூட நாட்களில் தீபாவளி நேரம் நெருங்க நெருங்க காசு சேர்த்து வாங்கும் வெடிகளை எல்லாம் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். சிறுவர்களாகிய எங்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசிய அறைகளை கொண்டது. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் கொடுக்கும் ரூபாய்த்தாள்களை நானும், எனது அண்ணன்களும் அந்த பீரோவில்தான் ஒளித்து வைப்போம். நான் வைப்பதை அவனாலும், அவன் வைப்பதை என்னாலும் ஒருபோதும் கண்டுபிடிக்க முடிந்ததில்லை. இந்த பீரோ மரமாக இருந்தபோது இதில் எத்தனை குருவிகள் கூடுக்கட்டியிருக்குமென்று ஒருநாள் நினைத்துக்கொண்டேன். எத்தனையோ பாம்புகளும், பல்லிகளும், சிறுத்தைகளும் இந்த மரத்தில்தானே ஊர்ந்துச்சென்றிருக்கும். அப்போதெல்லாம் இந்த மரத்தில் வசித்த பறவைகள் தங்கள் முட்டைகளை எதிரிகளிடமிருந்து பாதுகாக்க இப்படித்தானே ரகசிய பொந்துகளை உருவாக்கி அதில் மறைத்து வைத்திருக்குமென்று தோன்றியது. அப்பாவிற்கு அரசாங்க வேலை என்பதால் அடிக்கடி இடமாற்றம் செய்வார்கள். ஊர் ஊராக பெட்டியை கட்டிக் கொண்டு ஓடுவோம். நான் பிறந்த பிறகும் அப்படிதான். ஒவ்வொரு வாடகை வீடு மாறும்போதும் அந்த மரப்பீரோவை தூக்க ஐந்து பேர் வேண்டும். பொணக்கணம் என்பார்களே. அது இதுதான். இந்த பீரோவோ இந்தக்கணம் இருக்கே. அந்த பெருமரம் எப்படியிருந்திருக்கும் என்று யோசிக்கவே மலைப்பாக இருக்கும்.

அப்பா, அம்மாவின் சொந்த ஊர் கும்பகோணம். நான் பிறந்தது கூட கும்பகோணத்தில்தான். அப்பாவை கடலூரிலிருந்து கும்பகோணத்துக்கு பணி மாற்றம் செய்ததில் அம்மாவுக்குதான் சந்தோஷம். ஊர் ஊராக அலைந்துக்கொண்டிருக்காமல் கும்பகோணத்துக்கே வந்தாச்சே. வந்து இரண்டாவது வருடம் நான் பிறந்தேன். மருத்துவமனையிலிருந்து ரிக்சா பிடித்து வீட்டுக்கு வந்து தொட்டிக்கட்டி என்னை போடும்போது கண்டிப்பாக அந்த பீரோ இதேதுடா புதுவரவு வந்திருக்கு என்று என்னை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கும். நானும் அந்த பளபளவென்று மின்னும் பீரோவை பார்த்து சிரித்திருக்கலாம். இதென்ன எல்லாரும் நகர்கிறார்கள். இது மட்டும் நகராமல் இருக்கே என்னவென்று எனது பாஷையில் கேட்க எல்லாரும் குழப்பத்தோடு எனது தொட்டிலுக்கு மேலே கிலுகிலுப்பையை ஆட்டி எனக்கு விளையாட்டு காட்டியிருக்கலாம். நினைவில்லை. ஆனால் முதல்முதலில் என் கையில் கிடைத்த ஸ்டிக்கரை கொண்டு வந்து அந்த பீரோவில் ஒட்டியது இன்னமும் நினைவில் உள்ளது. ஒருநாள் பாய் கடையில் பபிள்கம் வாங்கும்போது பாய் இலவசமாக ஒரு ஸ்டிக்கர் கொடுத்தார். அந்த ஸ்டிக்கரில் இருந்த உருவத்தை பார்த்து எனது பள்ளிக்கூட நண்பன் பால்ராஜ் இதுதான் சூப்பர் ஸ்டார் ரஜினி என்றான். அப்போதெல்லாம் எங்கள் தெருவில் ஏன் எங்கள் ஊரிலேயே தொலைக்காட்சிகள் அவ்வளவாக இல்லை. சினிமா திரையரங்குதான் ஒரே பொழுதுபோக்கு. பிறகு நான் அம்மாவுடன் சினிமா செல்லும்போதெல்லாம் ரஜினி நடித்த திரைப்படத்துக்கு அழைத்துச்செல்ல அடம்பிடிக்க ஆரம்பித்தேன். பில்லா, பொல்லாதவன், முரட்டுக்காளை என்று நிறைய ரஜினி படங்கள் அடிக்கடி வந்து எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தின. பெட்டிக்கடைகளில் எல்லாம் மிட்டாய் வாங்கினால் ரஜினி ஸ்டிக்கர்கள் இலவசமாக கிடைக்கும். அல்லது பத்துகாசு கொடுத்தால் ஐந்து ஸ்டிக்கர்கள் விற்றார்கள். அதை எல்லாம் வாங்கி வந்து பீரோவில் ஒட்டுவேன். அதுக்காக பலமுறை வீட்டில் அடிவாங்கியுள்ளேன். ஸ்டிக்கரை கிழித்தெடுக்கும்போது பீரோவில் நகக்கீறல்கள் பட்டு தேய்வு ஏற்பட்டது. அதை தவிர்க்க ஸ்டிக்கரை கையால் கிழித்துவிட்டு ஈரத்துணியை வைத்து தேய்த்து அழுத்தினால் ஸ்டிக்கர் பிசிறுகள் மறைந்துவிடும். ஆனால் அந்த இடம் மட்டும் கரை படிந்தது போல அசிங்கமாக இருக்கும். ஒருநாள் போகிப்பண்டிகை என்று நினைக்கிறேன். ஒரு ஆசாரி வந்தார். பீரோவை நான்கைந்து பேர்கள் வீட்டுக்கு வெளியே தூக்கிச்சென்று வைத்தார்கள். அந்த ஆசாரி கையில் இருந்த உப்புத்தாளால் பீரோ எங்கும் தேய்த்தார். இப்போது பீரோவின் பளபளப்பு சுத்தமாக இல்லை. பிறகு நான் பள்ளிக்கூடம் சென்று வந்து பார்த்தபிறகு அந்த பீரோ பளபளவென்று முன்னைக்காட்டிலும் மின்னிக்கொண்டிருந்தது. அது பெயின்ட் இல்லை. வார்னிஷ் என்று பால்ராஜ் சொன்னான். அவங்க வீட்டு பீரோவில் கூட அப்படித்தான் நான்கைந்து வருடங்களுக்கு ஒருமுறை வார்னிஷ் அடிப்பார்களாம். ஆனால் எனக்கு விபரம் தெரிந்து இரண்டு முறை மட்டுமே பீரோவுக்கு வார்னிஷ் அடித்தோம். தேக்கு மரங்களுக்கு இயல்பிலேயே எண்ணெய் கசிந்து பளபளப்பு விடும் தன்மை உண்டு. அதனால்தான் பீரோ இப்படி பளபளப்பாக இருக்கிறது என்று அப்பா சொல்வார்.

எனது அப்பா இறந்தபிறகும் ஒவ்வொரு வீடாக அந்த பீரோவை தூக்கிக் கொண்டு சுற்றியலைந்தோம். கட்டிலை தூக்குவதில் எங்களுக்கு சிரமம் இருக்கவில்லை. கட்டில் சட்டங்களை கழற்றி மாட்டிவிடும் வசதி இருந்தது. நான்கு பெரிய நீண்ட எக்கு ஆணிகளை மட்டும் ஸ்பேனர் வைத்து கழற்றி விட்டால் போதும். நான்கு கால்களும் இரண்டிரண்டாக வந்துவிடும். நான்கு பெரிய நீள் பக்கவாட்டு சட்டங்களையும், குறுக்குவாட்டு சட்டங்களையும் இரண்டு ஆட்கள் தாராளமாக தூக்கி சுமந்து நடந்து செல்லலாம். ஆனால் அந்த பீரோதான் தொல்லை செய்யும். கட்டிலை எனக்கு பிடிக்காமல் போனதுக்கு இன்னொரு காரணமும் உள்ளது. எங்க பாட்டி மரணித்தபோது அந்த கட்டிலில்தான் படுத்திருந்தார். அப்பாவும் பக்கவாதம் வந்து ஆறுமாதங்கள் அந்த கட்டிலில்தான் கிடந்தார். படுக்கும் மெல்லிய அட்டை மூத்திரம் இறங்கி ஊறிப்போய் சொதசொதவென்று இருக்கும். அதெல்லாம் பலவருடங்கள் முன்பு நடந்த கதை.

அப்பா இறந்தபிறகு எனது கல்லூரி மேற்படிப்பும் முடிய நாங்கள் சென்னைக்கு வந்துவிட்டோம். இப்போது சென்னையில் வளசரவாக்கத்தில் குடியிருக்கின்றோம். இத்தனை வருடங்களில் அப்பாவின் சாம்பாத்தியத்தில் சொந்தமாக வீடு வாங்கியதில்லை. எல்லாமே வாடகை வீடுகள்தான். அப்பாவுக்கு தெரிந்த ஆட்கள் ஒருமுறை காட்டில் இருந்து மலைத்தேன் எடுத்து வந்து தந்தார்கள். பிறகு சந்தனக்கட்டை வந்தது. கோடைக்காலங்களில் அதைத்தான் வேர்க்குருவுக்கு அரைத்து தேய்ப்போம். பிறகு காட்டுப்பலாக்கள் வரும். அப்பா அரசு அதிகாரியாக இருந்ததால் இப்படி எத்தனையோ பொருட்கள் வந்துக்கொண்டே இருக்கும். ஆனா கடைசி வரை அவர் ஏன் சொந்த வீடு எதுவும் வாங்கியதில்லை என்று நினைத்தால் எனக்கு அவர் மீது கோபம்தான் வரும். நாங்கள் இதுவரை எத்தனையோ முறை வீடுகள் மாறியுள்ளோம். ஒவ்வொரு முறையும் வீடு மாறும்போதும் அந்த பீரோவை தூக்கிக்கொண்டு அலைந்தோம். முன்ன போல இப்ப யாருங்க மரப்பீரோ வச்சிருக்காங்க? இப்ப எல்லாம் ஸ்டீல் பீரோ வந்தாச்சு. தூக்கிப்போட்டு வேற வாங்குங்க என்று தெரிந்தவர்கள் சொன்னார்கள். அந்த பீரோவை பார்க்கும்போதெல்லாம் எனக்கும் எங்க அம்மாவுக்கும் பெரிய சண்டையே நடக்கும்.

“உனக்கு இதோட வரலாறு தெரியாது” என்பார்.

“என்ன பெரிய நெப்போலியன் வரலாறு? திருட்டுத்தனமா ஆத்துல இறங்கி கவர்மென்ட்டுக்கு தெரியாம காட்டுமரத்தை அமுக்கிட்டு வந்த ஆளுதானே?” என்று திட்டுவேன்.

வாடகைக்கு வீடு மாறுவது போன்ற கொடுமையான விஷயங்கள் எதுவும் இல்லை. சென்னைக்கு நான் வந்த புதிதில் இங்கு சேரிகளிலும், கூவம் கரையோரங்களிலும் வசிக்கும் சிலரை பார்த்துள்ளேன். அவர்களிடம் மரச்சாமான்கள் எதுவும் இருக்காது. மிஞ்சிப்போனால் ஐந்தாவது படிக்கும் பையன் கூட தூக்கி சுமக்குமளவுக்கு எடை கொண்ட சின்ன மர நாற்காலி இருக்கும். அவ்வளவுதான். அவர்களிடம் இருப்பதெல்லாம் பிளாஸ்டிக் குடங்கள், எளிதில் மடக்கக்கூடிய இரும்பு கட்டில்கள், தகர பீரோக்கள். சென்னையில் வசிக்கும் சேரி மக்கள் தவிர பெரும்பாலான நடுத்தர மக்கள் கூட இப்படி தங்களை சுற்றியுள்ள எல்லா விஷயங்களையும் எளிமையாகவே வைத்துள்ளார்கள் என்று நினைக்கும்போது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. தலைக்கு மேலே பறக்கும் போர் விமானங்கள் சத்தம் கேட்டதும் குடுகுடுவென்று கைக்கு கிடைத்த பொருட்களுடன் ஓடிச்சென்று பதுங்குகுழிக்குள் மறைந்துக்கொள்ளும் மனித எலிகள் போலவே சென்னை மக்கள் தெரிந்தார்கள். புதுவீடுகளுக்கு குடிமாறுபவர்களை சென்னையில் வீதிக்களில் பார்த்துள்ளேன். சேரிகளில் வசிப்பவர்கள் என்றால் அதிகபட்சம் ஒரு மீன்பாடி வண்டியோ, தள்ளுவண்டியோ போதும். நடுத்தர மக்கள் வீட்டை காலி செய்யும்போது மினிலாரி போதும். ஆனால் எங்கள் வீட்டுக்கு ஒரு லாரி தேவைப்படும். தேவையற்ற தட்டுமுட்டு சாமான்கள். குடைத்துணி இல்லாத வெறும் குடைக்காம்புகள், எப்போதோ நாங்கள் விளையாடிய மரப்பாச்சி பொம்மைகள். (அவையெல்லாம் எங்கள் குழந்தைகள் வைத்து விளையாட அம்மா பத்திரமாக எடுத்து வைத்திருந்தாள்) இதெல்லாம் போதவில்லை என்று அந்த பொணக்கனம் இருக்கும் பீரோ. உண்மையில் சவத்தை சுமப்பது போலவே நாங்கள் ஒவ்வொரு முறையும் அந்த பீரோவை சுமந்துக்கொண்டு அலைந்தோம். நகரத்தில் சுமை தூக்கும் கூலியாட்கள் கிடைப்பதே அபூர்வம். அதுவும் அவர்கள் என்ன கிராமத்து ஆட்கள் போல நல்ல ஆஜானுபாகுவாகவா உள்ளார்கள்?

சென்னை வந்த இந்த பதினைந்து வருடங்களில் வளசரவாக்கத்திலேயே நாங்கள் ஐந்து முறை வீடு மாறிவிட்டோம். சென்னையில் இன்னொரு விநோதமான பழக்கம் உள்ளது. மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டின் உரிமையாளர் அங்கு குடியிருப்பவர்களுக்கு இல்லாத தொல்லைகள் கொடுப்பார். ஐந்து வருடங்களுக்கு மேல் ஒரே வீட்டில் குடியிருந்தால் அந்த வீட்டில் குடியிருப்பவரே வீட்டின் உரிமையாளர் ஆகி விடுவார் என்று பாழப்போன நம்பிக்கையை யாரோ தவறாக எப்போதோ எங்கோ சொல்லியிருந்தார்கள். அதை நம்பிக்கொண்டுதான் சென்னையில் இருக்கும் வாடகைக்கு வீடு விடும் மனிதர்கள் அப்படி நடந்துக்கொள்கின்றார்கள்.

ஒருமுறை மதுரையிலிருந்து எனது பெரிய அண்ணன் வந்திருந்தார். அவர் முப்பது வருடங்களுக்கு முன்பு மதுரையில் செட்டில் ஆனவர். மதுரையில் சொந்த வீடு வைத்துள்ளார். அவரிடம் எனது கஷ்டத்தை சொல்ல அவர் இந்த பீரோவை நான் எடுத்துட்டு போறேன் என்றார். அம்மாவுக்கு அந்த பீரோவை அண்ணனிடம் கொடுக்க விருப்பமில்லை. நான்தான் அவரை திட்டி சம்மதிக்க வைத்தேன் அப்படியே அதே மரத்துல செஞ்ச இந்த கட்டிலையும் தூக்கிட்டு போங்க என்று சொன்னேன். எனக்கு அந்த கட்டிலை பார்க்கும்போதெல்லாம் இறுதிவரை ஒரு சொந்த வீடு கூட வாங்க முடியாமல் கடைசிக்காலத்தில் பக்கவாதம் வந்து கட்டிலில் படுத்து இறந்துப்போன அப்பாவும், அவரது மேலுள்ள எனது வெறுப்பும் நினைவுக்கு வரும்.

போரூரில் அண்ணனுக்கு தெரிந்த லாரி சர்வீஸ் ஆட்கள் இருந்தார்கள். அவர்களிடம் சொன்னோம். போரூரில், வளசரவாக்கத்தில், கே.கே.நகரில் எங்குமே சுமை தூக்கும் ஆட்கள் இல்லை. ஒருவழியாக லாரி சர்வீஸ் ஆட்கள் எங்கேயோ அலைந்து தேடி மூன்று பேர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு வந்தவர்களிடம்

நான் எட்டு ஆட்கள் இல்ல கேட்டேன் என்று சொன்னேன்.

எட்டா? இந்த பீரோவை தூக்க மூன்று பேர் போதுமே. நீங்க வேடிக்கை மட்டும் பாருங்க என்று அலட்சியமாக சொன்னார்கள். நான் எதுவும் பேசாமல் சட்டையை அணிந்துக்கொண்டு தெருமுனையில் இருந்த கடைக்கு சென்று சிகரெட் பிடித்து வீட்டுக்கு திரும்பி வரும்போது அந்த ஆட்கள் மிகவும் சோர்ந்துபோய் வெயில் காலத்தில் நாக்கு வெளியே தள்ளி மூச்சு வாங்கும் நாய் போல தெரிந்தார்கள். எனக்கு சிரிப்பு வந்தது. அதென்ன மரமா? பாறையில் செய்த கல் பீரோ ஆச்சே. பிறகு எப்படியோ கூடுதலாக ஆட்களை அழைத்து வந்து பீரோவை லாரியில் ஏற்றி மதுரைக்கு அனுப்பி வைத்தோம். வீட்டுக்குள் நுழைந்தபோது பீரோ, கட்டில் இருந்த இடம் வெறுமையாக இருந்தது. நிம்மதியாக இருந்தாலும் மனதை ஏதோ செய்தது. பிறகு இரண்டு நாட்கள் கழித்து ஊரிலிருந்து எனது அண்ணி போன் செய்தார்கள். அம்மாவிடம் பேசிவிட்டு என்னிடம் பேசினார்கள்.

“என்ன அண்ணி. அந்த பீரோ நல்லபடியா வந்துச்சா? அதை வீட்டுக்குள்ள எடுத்துட்டு வர்றதுக்குள்ள உயிர் போயிருக்குமே?” என்று சிரித்தபடியே கேட்டேன்.

“நீங்க எல்லாம் சுத்த வேஸ்ட்டுடா. ஒரு மரப்பீரோவை தூக்க முடியுதா? ஒருத்தன் வந்தான். உங்க அண்ணனுக்கு தெரிந்த நண்பர் அவனை எங்கேயோ ஆவணிவீதியிலிருந்து அழைத்து வந்திருந்தார். அவன் அந்த பீரோவை அப்படியே முதுகில தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டு போயிட்டான்”

“என்னது? பீரோவை முதுகிலேயே தூக்கிட்டு வந்தானா?

“ஆமா. ஒரே ஆள். பார்க்க கடோத்கஜன் மாதிரி இருந்தான். அவன் தனியாத்தான் வந்தான். அவன்தான் தனியாவே பீரோவை முதுகில தூக்கிட்டு வந்தான்”

“சான்ஸே இல்லை அண்ணி. அதெப்படி அந்த பீரோவை ஒரு தனி ஆள் லாரியில இருந்து இறக்க முடியும்?”

“நான்கைந்து பேர்கள்தான் இறக்கினாங்க. ஆனா அவன் தனியாகத்தான் முதுகில தூக்கிட்டு வந்தான்”

“ஐயோ..கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. எனக்கு ஒண்ணும் புரியலை”

எனது அண்ணி சிரித்தபடியே, ‘அது பெரிய கதை. லாரி சர்வீஸ் ஆளுங்க பக்கத்துக்கு தெருவிலேயே பீரோவை இறக்கி வச்சுட்டாங்க. தெரு குறுகலா இருந்ததால வீட்டு வாசல் லாரிய எடுத்துட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. தெருமுனையிலேயே லாரியை நிறுத்திட்டாங்க. டிரைவரும், கிளீனரும் லாரியோட பின் கதவை திறந்து ஒரு பெரிய பலகையை தரைக்கும்,லாரியின் உடம்புக்கும் இடையே சரிவாக வச்சாங்க. அப்புறம் பீரோவோட அடிப்பாகத்துல கால்மிதிக்கற துணியை வச்சாங்க. லாரி மேல இருந்து மூன்று ஆட்கள் பீரோவை மெதுவா பலகையில சரிச்சுட்டே வர கீழேயிருந்து மூன்று பேர் பிடிச்சு கொஞ்ச கொஞ்சமா இறக்கி வச்சுட்டாங்க. எல்லாருக்கும் வேர்த்து விறுவிறுத்து போச்சு”

அவர் சொன்னதை கேட்டதும் எனக்கு காட்டு யானைகளை லாரியில் ஏற்றிச்சென்று சரணாலயங்களில் இறக்கி விடும் காட்சி நினைவுக்கு வந்தது.

“அப்புறம் என்ன நடந்தது?”

அந்த பீரோவை இறக்கி வச்சுட்டு லாரி சர்வீஸ் ஆளுங்க போயிட்டாங்க. அரைமணிநேரம் கழிச்சு அந்த கடோத்கஜன் ஆள் வந்தான். அவன் கையில் பெரிய தாம்புக்கயிறு வச்சிருந்தான். இன்னொரு கையில போர்வை மாதிரி பெரிய துணி இருந்துச்சு. அவன் சட்டையை கழற்றி வச்சுட்டு அந்த துணியை உடம்பில சுத்திக்கிட்டான். அப்புறம் அந்த தாம்புக்கயிற்றை இரண்டா மடிச்சு சுருக்கு மாதிரி செஞ்சான். அவன் சுருக்கு போட்ட விதமே விநோதமா இருந்துச்சு. ஒரு நொடியில சரசரன்னு கயித்தை இரண்டா மடிச்சு வளையம் போல பின்னி வச்சுட்டான். அது கொக்கி போல இருந்துச்சு. நெல் மூட்டை தூக்குறவங்க கையில வச்சிருக்கும் இரும்பு கொக்கி போலவே அந்த துணி சுருக்கு இருந்துச்சு. அப்புறம் பீரோவோட பின்பக்கம் போனான். அந்த கயித்தை அப்படியே பீரோ குறுக்கால வச்சு அந்தப்பக்க முனையை வலது கையிலேயும், இந்தப்பக்க முனையை இடது கையிலேயும் பிடிச்சுக்கிட்டான். அப்படியே முன்னால குனிஞ்சு கயித்தை இறுக்கி பீரோவை கொஞ்சம் கொஞ்சமாக முதுகுக்கு சாய்ச்சுக்கிட்டான். அப்படியே அலேக்காக உப்பு மூட்டை மாதிரி முதுகிலேயே தூக்கிட்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுட்டான்”

எனக்கு வயிற்றில் அமிலம் பெருகியது.

“விளையாடாதீங்க..ஒரே ஆளா? திரும்ப கேட்டேன்”

“நான் என்ன பொய்யா சொல்றேன். வேணா உங்க அண்ணன்கிட்ட கேளு” என்று சொல்லி போனை வைத்துவிட்டார்.

என்னால் நம்ப முடியவில்லை. ஒரே ஆள் எப்படி அந்த பீரோவை தூக்கினான். எனது அம்மாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. ஒரு ஆள் கண்டிப்பாக தூக்க முடியாது. அது எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும். ஏன்னா இருபத்தைந்து வருடமாக அந்த பீரோவை எனக்கு தெரியும். அம்மாவுக்கு ஐம்பது வருடங்களாக பீரோவை தெரியும். சரி அண்ணி ஏதோ விளையாட்டு காட்டுறாங்க என்று அண்ணனிடம் கேட்க அவரும் அதையேத்தான் போனில் சொன்னார். ஒரு ஆள்தான். எப்படி தூக்கினான்னு எனக்கும் தெரியல. முதுகில தூக்கிட்டு வந்துட்டான் என்றார். நான் அந்த ஆளை ஆறடி உயரம். கருப்பு நிறம். அர்னால்டு போல கற்பனை செய்துக் கொண்டேன். ஆனால் அந்த கற்பனை எதுவும் பொருந்தவில்லை. எனக்கு இப்போது கடிலம் ஆறு, ஆற்றில் மிதந்து வந்த காட்டு மரம், மன்னர்களுக்கு மர சிற்பங்கள் செய்த தச்சு ஆசாரிங்க கதைகள், எனது பால்யகால கதைகள் எல்லாமே பின்னுக்கு சென்றுவிட்டன. எங்கு திரும்பினாலும் பீரோவை தூக்கிய அந்த மாவீரனே கண்ணுக்குள் நின்றான். அந்த சம்பவம் நடந்து இன்றோடு பத்து வருடங்கள் ஆகின்றன. அன்றிலிருந்து அந்த பேய் பீரோவை தூக்கின அந்த காட்டு மனுசனை சந்திக்க வேண்டும். அவன் யார் என்று தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று அடிக்கடி ஆர்வம் தோன்றும். ஆனால் எங்கே மதுரைக்கு செல்வது? ஓயாத வேலை. நிமிர்ந்து பார்ப்பதற்குள் பத்து வருடங்கள் ஓடிவிட்டன. இந்த பத்து வருடங்களில் சென்னையில் சொந்தமாக அடுக்குமாடி வீடும், காரும் வாங்கியிருந்தேன். அம்மாவுக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது. அம்மாவுக்கு ஒருவகையில் நிம்மதி. அந்த மரப்பீரோவை யாரோ முகம் தெரியாத ஆளிடம் விற்காமல் அண்ணன் வீட்டில் பத்திரமாக உள்ளதை நினைத்து.

இன்று காலை ஏதோ ஒரு விஷயமாக நான் மதுரையில் வசிக்கும் அண்ணனின் நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “இப்ப எல்லாம் கூலிக்கு ஆளுங்க கிடைக்கவே சிரமமா இருக்கு. வீட்டுல கொஞ்சம் வேலை இருக்கு. ஆளுங்க தேடினா கிடைக்க மாட்டேங்குறாங்க” என்று சொன்னார். அப்போது நான் பலவருடங்கள் முன்பு பீரோவை ஒத்தையாக தூக்கின ஆளை பற்றி விசாரித்தேன்.

“அந்த ஆள் செத்துப்போய் ஒரு வருடம் ஆச்சு. தல்லாக்குளம் டாஸ்மாக் கடை வாசலில் ரத்த வாந்தி எடுத்தே செத்து போனான். அளவுக்கு மீறிய குடி”

மனதுக்கு சங்கடமாக இருந்தது. இனி என்னால் அவனை சந்திக்க முடியாது. இப்போது நினைத்தால் கூட நான் ரயிலையோ, விமானத்தையோ பிடித்து மதுரை சென்று அண்ணனின் வீட்டில் இருக்கும் அந்த பீரோவை பார்த்துவிட்டு வந்துவிடலாம். ஆனால் என்னால் ஒருபோதும் மனதில் இருக்கும் அந்த மாவீர பிம்பத்தை நேரில் பார்க்கவே முடியாது. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு ஏதோவொரு பறவை அடர்ந்த காட்டின் ஊடாக பறந்துச்சென்றிருக்கும். அப்படி பறக்கும்போது அதன் எச்சம் அந்த காட்டில் விழுந்து அதிலிருந்து விருட்சமொன்று முளைத்திருக்கலாம். அது எத்தனையோ மழை,புயல், இடி,வெள்ளப்பெருக்கை பார்த்திருக்கலாம். நூற்றாண்டுகள் பழமைமிக்க அந்த விருட்சத்திலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட துண்டுகள் வேறு வேறு ஊர்களில் வேறு வேறு கதைகளை சுமந்துக்கொண்டு திரிய போகிறதென்று அந்த பறவைக்கு அப்போது தெரிந்திருக்குமா? தெரியவில்லை. எல்லாமே வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்றுக்கதைகளையும், எல்லா வணக்கத்துக்குரிய பிம்பங்களையும் கால் அடி உயரம் கூட இருக்காத இந்த டாஸ்மாக் பாட்டில் அடித்து விட்டதே என்று நினைக்கும்போது வியப்பிலும் வியப்பாக இருந்தது. எல்லா வரலாற்று கதாநாயகர்களும் சாதாரணத்திலும், சாதாரணமாக செத்துப்போனதை போல.

Tuesday, May 6, 2014

வேட்டை


மலைகள்.காம் இணைய இதழின் மூன்றாம் ஆண்டு சிறப்பிதழில் எனது “வேட்டை” என்ற சிறுகதை வெளியாகியுள்ளது. மலைகள்.காமிற்கு நன்றி.அடி கிழித்திருந்தார்கள் என்று பார்க்கும்போதே தெரிந்தது. என்ன இருபத்தைந்து வயது இருக்குமா? தரையில் அமர்ந்திருந்ததால் உயரம் தெரியவில்லை . ஐஸ்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலைகளில் இருந்து ஐஸ்கட்டிகளை இழுத்து வந்து போடுவது போல சற்று முன்னர்தான் லாக்கப்பிற்குள்ளிருந்து வெளியே கொண்டுவந்து போட்டிருக்க வேண்டும். உள்ளே இருந்து இழுத்து வந்த அடையாளம் தரையில் தெரிந்தது. லாக்கப் கதவு திறந்து கிடந்தது. உள்ளே இருட்டை தவிர வேறெதுவும் தெரியவில்லை. ஆள் பார்க்க ஜிம்முக்கு எல்லாம் போய் உடம்பை கட்டுமஸ்தாக வைத்திருந்தது தெரிந்தாலும் சோர்வாக தெரிந்தான். ஜட்டியோடு அமர்ந்திருந்ததை கூச்சமாக உணர்கின்றானா என்பதை அவன் முகத்திலிருந்து கண்டுப்பிடிக்க முடியவில்லை. உடம்பெல்லாம் வரி வரியாக சிவப்புப்பட்டைகள் தெரிந்தன. கன்ணிமைகள் புடைத்து முகம் வீங்கி உதடு லேசாக கிழிந்து தொங்கியது. வலது கையை தூக்கும்போது இரண்டு மூன்று விரல்களில் நகங்கள் பிய்த்தெறிப்பட்டு கொழகொழவென்று குங்குமம் அப்பியது போல இருந்தது. இடது கையிலும் நகங்கள் பிய்த்தெறிப்பட்டு இருந்தன. ஆனால் அது ஏற்கனவே பிடுங்கியெறிப்பட்டு பல மணி நேரங்கள் ஆனதை அந்த விரல்களில் இருந்த உறைந்த கரும் ரத்தம் சொல்லியது. அவன் முகத்திலிருந்து எந்த உணர்ச்சியையும் என்னால் கண்டுப்பிடிக்க முடியாவிட்டாலும் எனக்கென்னவோ அவன் முகத்தில் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக உட்கார்ந்திருப்பது போலவே தோன்றியது.

எனக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் தினத்தந்தி படித்துக்கொண்டிருந்தார் சபரிமலைக்கு மாலைப் போட்டிருந்தார். தினத்தந்தியின் அடுத்தப்பக்கத்‌தை புரட்டும்போது கிடைத்த அந்த சிறு இடைவெளியில் அவன் முகத்தை கவனித்தார். தாயோளி என்று கோபமாக எழுந்து போய் வலது பூட்ஸ் காலால் அவனது முகத்தில் ஓங்கி மிதித்தார். மூக்கில் ஏற்கனவே உறைந்து கட்டியாக தெரிந்த ரத்தம் இப்போது மீண்டும் புதுச்சிவப்பின் உருக்கொண்டு வழிய ஆரம்பித்தது. தாயோளி என்று இன்னொரு முறை சொல்லிவிட்டு மீண்டும் வந்து சேரில்அமர எனக்கு சொரேலென்றது.வயிற்றை கலக்கியது. அப்படியே வீட்டுக்கு ஓடிவிடலாமா என்று கூட தோன்றியது. அவன் அமைதியாக நான் காலில் அணிந்திருந்த இட்டாலியன் ஷூவை பார்த்தபடி அமர்ந்திருந்தான். அழுத்தக்காரன்தான் என்று தோன்றியது. இவ்வளவு அடிக்கும் ஒரு சொட்டு ஒரு சொட்டு தண்ணீராவது வந்திருக்க வேண்டுமே. ம்ஹூம். இறுகிப்போன முகத்தோடு அமர்ந்திருந்தான். நான் அவனது கண்களை பார்ப்பது தெரிந்ததும் அவன் என்னை பார்ப்பதை தவிர்த்து தலையை தாழ்த்திக்கொண்டான். ஆர்-எயிட் காலிங் ஆர்-எயிட் காலிங் என்று காக்கை பிளேடுத் துண்டை விழுங்கியது போல கொரகொர சத்தம் கேட்டது. இப்போது அந்த ஏட்டுச்சாமி வயர்லெஸ் ரேடியோவை கையில் எடுத்துக்கொண்டு பின்பக்க வாசலுக்கு நகர்ந்தார். இங்கிருந்து பார்க்கும்போது அவர் காவல்நிலையத்திற்கு பின்பக்கம் இருந்த கழிவறைக்குள் கையில் ரேடியோவுடன் நுழைவதை பார்க்க முடிந்தது. பின்பக்க ஜன்னல் வழியாக காட்சிகள் தெரிந்தன. முன்பக்க வாசலில் ஒரு இன்னோவா கார் நின்றுக்கொண்டிருந்தது. ஐந்து நிமிடங்கள் கழித்து அவர் கழிவறையிலிருந்து திரும்பினார்.

டீ சாப்பிடுறீயாடா என்று அதட்ட அவன் பதிலேதும் சொல்லவில்லை. பிறகு ஏதோ நினைத்துக்கொண்டு வெளியே போனார். இனோவா காருக்கு அந்தப்பக்கம் சென்றார். கார் கருப்புநிற கண்ணாடி வழியாக உள்ளே இருந்த மனிதரை பார்க்க முடியவில்லை. டீக்கடை பையன் கையிலிருந்த இரும்பு தூக்குக் கொக்கியில் நான்கு கண்ணாடி கிளாஸ்கள் தொங்கிக்கொண்டிருந்தன. இன்னோவா அந்தப் பக்கம் நின்றிருந்த ஏட்டையாவை முழுவதும் பார்க்க முடியவில்லை. தொப்பி தெரிந்தது. குரல் மட்டும் கேட்டது. அதோ உள்ள ஒன்னு உட்கார்ந்திருக்கு. அதுக்கு ஒன்னு கொடு.

“சரிங்க சார்”

இதுவரை அமைதியாக எதையோ எழுதிக்கொண்டிருந்த ரைட்டர் இப்போதுதான் நிமிர்ந்தார். அப்படி வை என்றார். இதோ இதுக்கு ஒன்னு கொடு.. என்று அவருக்கு வலதுப்பக்கம் சற்றுத்தள்ளி அமர்ந்திருந்த அவனை கைகாட்டினார். என்னிடம் நீங்க சாப்பிடுறீங்களா? என்று கேட்டார். ஏற்கனவே அடிவயிற்றைக் கலக்கும் உணர்வு.

 “இல்ல வேண்டாம்”

“பரவாயில்ல..சாப்பிடுங்க”

“இல்ல..நான் டீ சாப்பிடுறது இல்ல”

அவர் தேநீரை குடித்துக்கொண்டே பக்கத்தில் பார்த்தார். அவன் பக்கத்தில் வைத்துவிட்டுச்சென்ற டீ கிளாசை பார்த்து ஏதோ முணுமுணுத்தது சரியாக காதில் விழவில்லை. ரைட்டருக்கு கோபம் வந்துவிட்டது. குடித்துக்கொண்டிருந்த பாதி தேநீர் கிளாசை மேசையின் மீது வைத்துவிட்டு எழுந்தார். கீழே கிடந்த லத்தியை எடுத்து இஷ்டத்திற்கு விளாசினார். வாசலில் இன்னோவா கார் புறப்பட உள்ளே நுழைந்த ஏட்டு சாமி சரணம் என்றார்.

“போனாப்போகுதுன்னு டீ வாங்கிக் கொடுத்த திட்டுறான் ஏட்டையா”

ஏட்டையாவும் இப்போது ஜோதியில் சேர வெளுத்துக்கட்டினார்கள். ஒரு வெளியாள் நான் பார்க்கும்போதே இப்படி அடிக்கிறார்களே. நான் வருவதற்கு முன்பு எப்படி அடித்திருப்பார்கள். ஏட்டையாஅடித்து ஓய்ந்த பிறகு தங்கள் இருக்கைகளுக்கு திரும்பினார். ரைட்டர் இன்னமும் அடித்துக்கொண்டிருந்தார். அவன் ஒரு சின்ன கேவல் சத்தம் கூட எழுப்பவில்லை

“நீங்க வேணா போயிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாருங்க” என்று ரைட்டர் என்னைப்பார்த்து
சொன்னார்.

“என்னோட ஆபீஸ் வேளச்சேரில இருக்கு. நான் வேணா சாயங்கலாம் வர்றேன்”

“சரி..வாங்க”

விட்டால் போதுமென்று காவல்நிலையத்தை விட்டு வெளியே ஓடிவந்தேன். நான் சாலைக்கு வந்து பார்க்கும்போது போக்குவரத்து நெரிசலில் அதுவரை நின்றிருந்த இன்னோவா கார் பிறகு வலதுப்பக்கம் திரும்பி மறைந்தது. நான் வேளச்சேரி செல்ல வேண்டும். மனம் அழுத்தமாக இருந்தது. பக்கத்து தேநீர்க்கடைக்கு சிகரெட் பிடிக்கலாமென்று சென்றேன். அங்கு காவல் நிலையத்துக்கு டீக்கொண்டு வந்த சிறுவன் பயந்தபடி நின்றிருந்தான். டீக்கடைநாயரும், டீமாஸ்டரும் சிரித்தார்கள். சின்ன பையன் இல்ல பயந்துட்டான் என்று மாஸ்டர் சிரித்தார். கடைக்கு பின்பக்கம் நடந்துப்போனால் ஐந்து நிமிடங்களில் எனது வீடு வந்துவிடும்.

“நீங்க எங்க ஸ்டேஷன்க்குள்ள இருந்து வர்றீங்க?” மாஸ்டர் கேட்டார்.

“பாஸ்போர்ட் என்கொயரி வரச்சொல்லியிருக்காங்க ..அதான் வந்தேன்”

இரண்டு வாரங்கள் முன்பு பாஸ்போர்ட்டில் எனது மனைவியின் பெயரை இணைக்கக் கோரி விண்ணப்பித்திருந்தேன். விசாரணைக்கு வீட்டுக்கு வரும்போது வீடு பூட்டியிருக்க எனது அலைபேசிக்கு தொடர்பு கொண்டு விஷயத்தைச் சொன்னார்கள். ஆனால் நான் இன்று வரும்போது அந்த கடவுச்சீட்டு விசாரணைப்பிரிவில் பணியாற்றும் அதிகாரி அங்கு இல்லை. எங்கோ வெளியில் சென்றிருந்தார்.
கடைப்பையன் பக்கத்தில் இருந்த எக்ஸ்போர்ட் கம்பெனிக்கு டீ எடுத்துக்கொண்டு போனான். மாஸ்டர் எனக்கு டீ போடும்போது நாயரிடம் விசாரித்தேன்.

“என்ன ஸ்டேஷன்ல ஒருத்தனை அடிச்சு உட்கார வச்சிருக்காங்க”

“பார்த்தீங்களா.. அடி பின்னிட்டாங்க.. நேத்து நைட்டு எல்லாம் தலைக்கீழா கட்டி லாடம் அடிச்சாங்க. இங்க வரைக்கும் சத்தம் கேட்டுச்சு.”

அவனை பார்த்துட்டுத்தான் கடைப்பையன் தேநீர் கிளாசை காவல்நிலையத்தில் வைத்துவிட்டு பயந்து ஓடிவந்த விஷயம் விளங்கியது.

“எதுக்கு அந்த சின்னப்பையனை போட்டு இப்படி அடிக்கறாங்க?”

“பின்ன மூர்த்தி பொண்ணு மேல கையை வச்சா சும்மா விடுவாங்களா?”

“எந்த மூர்த்தி?”

“அதான். உங்க பக்கத்துத் தெருவுல இருக்க கல்யாணமண்டபம் ஓனர். இந்த மெயின் ரோட்டுல ஜவுளிக் கடைக் கூட இருக்கே.

“அட ஆமாம். ரியல் எஸ்டேட் கூட இருக்கே. அவரு காரா இப்ப போச்சு?”

“ஆமாம். புதுசு. இப்பத்தான் எடுத்திருக்காரு போலிருக்கு”

“நீங்க பார்த்த அந்த பையன் வேற யாருமில்ல. மூர்த்திகிட்ட டிரைவரா வேலை செய்றான்”

மாஸ்டர் கொடுத்த தேநீரை வாங்கிக்கொண்டு சிகரெட்டை பற்ற வைத்தேன். மூர்த்திக்கிட்ட வேலை பார்த்தானா? நான் இவனை இதுவரை பார்த்ததே இல்லையே. அது சரி. அந்தாளு என்ன ஒன்னு இரண்டு காரா வச்சிருக்கான்? வீடே இரண்டு இருக்குன்னு கேள்விப்பட்டேன். பத்து ஆபீஸ் இருக்கு. இவன் எங்க வேலை பார்த்தானோ?

“இரண்டு வாரம் முன்னாடி மூர்த்தி பொண்ணும், இவனும் திருப்பதி ஓடிப்போயி கல்யாணம் செஞ்சுகிட்டாங்க. எப்படியோ ஆந்திரா போலீஸ் வழியா ஆளுங்களைப் பிடிச்சு இங்க இழுத்துட்டு வந்துட்டாங்க”

“அது சரி.. அதுக்கு எதுக்கு போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு அடிக்கறாங்க?” கேட்டேன்

“அட நீங்‌க என்னங்க? பத்தாங்கிளாஸ் படிக்கற பொண்ணு. அதை இல்ல கூட்டிட்டு ஓடிப்போயிருக்கான்” என்று மாஸ்டர் சொன்னார்.

“பத்தாங்கிளாஸ் படிச்சாலும் பொண்ணுதானே. புது வண்டி. பையன் இரண்டு வாரம் வச்சிருந்து ஓட்டியிருப்பான். இப்ப எல்லாம் பத்தாங்கிளாஸ் படிக்கறது கூட காலேஜ் போற பொண்ணுங்க மாதிரியில்ல திமிறிக்கிட்டு நிக்கிறாளுங்‌க. இவனுங்களும் என்ன செய்வானுங்க பாவம்?” நாயர் சொல்ல

“சரிதான் மைனர் பொண்ணை கூட்டிட்டு போனா அடிக்காம கொஞ்சுவாங்களா?” மாஸ்டர் கேட்டார்

“யார் பத்தாங்கிளாஸ்? நீ மூர்த்தி பொண்ணை பார்த்தது இல்லையே? அது காலேஜ் முடிச்ச பொண்ணுப்பா” எனக்கு பக்கத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த பெரியவர் யாரென்று தெரியவில்லை. டீக்கடை நாயருக்கு வேண்டப்பட்டவராக இருந்திருக்கலாம். அவர் சொன்னார்.

“அப்படியா நெசம்தானா?”
"பணம் தம்பி பணம். நாயை நரியாக்கும். நரியை பெருமாளாக்கும்.. பணம் இருந்தா எதையும் மாத்தி எழுதலாம்” பெரியவர் டீயைக் குடிச்சுட்டு சிறிது இடைவெளி விட்டு சொன்னார்

 “ஊசி இடம் கொடுக்காம நூல் நுழையுமா?”

“என்னதான் இருந்தாலும் திருப்பதி போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்க. சாட்சி எல்லாம் இருக்கு. அந்த பையனுக்கு யாரும் எதுவும் உதவி செய்யவில்லையா என்ன?”

அவன் சொந்த ஊவார் எங்கேயோ திருநெல்வேலி பக்கம் போலிருக்கு தம்பி. ஆள் பார்க்க நல்ல வாட்டசாட்டமா இருப்பான். அதான் நீ ஸ்டேஷன்க்குள்ள பார்த்திருப்பியே.. பெருசா வசதி எல்லாம் இல்லை. அப்பா இல்லை.. சித்தி எவன் கூடயோ ஓடிப்போயிட்டா. இவன் இங்கே வந்து மூர்த்தி வீட்லேயே தங்கி வீட்டு வேலையோட டிரைவர் வேலையும் சேர்ந்து செஞ்சுக்கிட்டு இருந்தான். எப்படியோ அந்தப்பொண்ணு இவனை பலவந்தப்படுத்தி மயக்கி விழ வச்சுடுச்சி..திருப்பதில கூட அவங்க கல்யாணம் செஞ்சுக்கல…இரண்டு பேரும் ரூம் எடுத்து தங்கி இருந்திருக்காங்க. அந்தப்பையன் கல்யாணம் கல்யாணம்ன்னு நச்சரிக்க அவ அவளோட பிரண்ட்சை விட்டு அப்பனுக்கு போன் செஞ்சு அவங்க திருப்பதியில இருக்கற விசயத்தை லீக் செஞ்சிருக்கா. மூர்த்தி லோக்கல் போலீசோட போய் பொண்ணை நாலு அப்பு அப்பி தூக்கிட்டு வந்திருக்கான். இதுவும் அழுதுக்கிட்டே நடிச்சு அவங்களோட இங்க சென்னைக்கு வந்துடுச்சு. மைனர் பொண்ணை கடத்திட்டான்னு புகார் தந்திருக்காங்க”

“உங்களுக்கு எப்படி இவ்வளவு விபரம் தெரியும்?” கேட்டேன்.

“அந்த பையனோட தோஸ்த் இங்க தெருமுக்கில சலூன் வச்சிருக்கான். நமக்கு தெரிஞ்சப்பையன்தான். அவன்தான் சொன்னான். பையன் மேல மிஸ்டேக் இல்லை.. எல்லாம் பொண்ணு மேலத்தானாம். திருப்பதியில அவங்க ரூம் எடுத்து தங்கினப்ப இவன்தான் அவனுக்கு ஐடியா கொடுத்து எதுக்கும் இருக்கட்டுமுன்னு அவங்க ரூம்ல பேசினது அங்க நடந்த அந்தரங்க சமாச்சாரம்எல்லாத்தையும் செல்போன்ல எடுத்து வச்சிருந்துக்கான். அதுவும் எப்படியோ போலீசுக்கு தெரிஞ்சு போய் அவங்களுக்கு குஷியா போச்சு. என்ன மூர்த்திக்குத்தான் கொஞ்சம் செலவு அதிகம். ஆனா அவனுக்கு இதெல்லாம் அவன் வீட்டு நாய்களுக்கு கறி வாங்கி போடுற காசு இல்ல?”

“நீங்க நேத்து நைட்டு அவன் கத்தினதை கேட்டிருக்கனும். மிருகத்தை கொன்று கிழிக்கறப்ப அது கத்துமே. அப்படி ஒரு சத்தம். நைட்டெல்லாம் தூக்கமே வரலை. அப்புறம் இரண்டு மணிக்கு அப்படியே நடந்து போய் நம்ம பாய் பிரியாணிக்கடையில தூங்கினேன். அப்பவும் தூக்கம் வரலை. பாய் கொஞ்சம் சரக்கு வச்சிருந்தார். அதை போட்டபிறகுதான் கொஞ்சம் தூக்கம் வந்துச்சு. நம்ம கடைப்பையன் வந்து சொன்னான். அம்மணமா மாட்டை உரிச்சு தொங்க விடுற மாதிரி தலைக்கீழா மாட்டி வச்சிருந்தாங்களாம்” நாயர் சொன்னார்.

 “வாஸ்தவம்தான் நீ மூர்த்தி பொண்ணை பார்த்தது இல்லையே?“ பெரியவர் கேட்டார். மாஸ்டர் உதட்டை பிதுக்கினார். நாயர் அவருக்கு அவளை தெரியுமென்று சொன்னார். பார்க்க அழகாக புதுமுக சினிமா நடிகை போல இருப்பாள் என்று சொன்னார்.

அவங்க அடிச்சே கொன்னுடுவாங்க போலிருக்கே. அவனை என்ன செய்வாங்க? என்று தோன்றியது.

 “ஏதாவது திருட்டு கேஸை போட்டு உள்ளே தூக்கி வச்சுடுவாங்க” என்று நாயர் சொன்னார்.

 “அப்படியெல்லாம் நடக்காதுப்பா…அந்த செல்போன் போலீஸ் கைக்கு வந்தாச்சு. இன்னும் இரண்டு நாள் வச்சிருந்து அடிச்சுட்டு அப்புறம் விட்டுடுவாங்க” என்று பெரியவர் சொன்னார்.

“எப்படி உறுதியா சொல்றீங்க?”

“இந்த மாதிரி கேஸ்ல எல்லாம் பையன் ஜெயிலுக்கு போயிட்டு வெளியே வந்தா கூட எப்படியாவது பொண்ணு வீட்டுக்கு திரும்பி வந்து தொல்லை தருவானுங்க. ஜெயில்ல போட்டா பழி வாங்குற வெறி வரும். ஆனா காதல் தோல்வி அப்படி இல்ல பாரு. கொஞ்ச நாள்ல தாடிய மழிச்சுட்டு இன்னொரு பொண்ணை பார்த்துட்டு போயிடுவானுங்க”

 அது சரி. பெரியவர் அவர் அனுபவத்தில் எவ்வளவு பார்த்திருப்பார்? எவ்வளவு கேட்டிருப்பார் என்று எனக்குத் தோன்றியது.

 “நீ வேணா பாரு. சாயங்காலம் அவனுக்கு மருந்துப்போட்டு கட்டுக்கட்டி அனுப்பி வச்சுடுவாங்க” என்று பெரியவர் சொன்னார். அது சரி. நாம் பொழைப்பை பார்க்கலாம் என்று டீக்கு காசு கொடுத்துவிட்டு அலுவலகம் வந்துவிட்டேன். அலுவலகத்தில் வேலையேதும் ஓடவில்லை. எங்கு திரும்பினாலும் அவன் முகமே வந்தது. இப்படியா போட்டு அடிப்பார்கள். மனிதன் என்றாலும் எங்காவது ஒரு ஓரத்தில் கருணை இருக்குமல்லவா? மனதின் ஓரத்திலாவது ஈரம் இருக்குமல்லவா? இப்படி அடித்தும் எப்படி ஒரு மனிதனால் அவ்வளவு அடியை தாங்க முடிகிறது? நான் யாரையாவது இதுவரை அடித்துள்ளேனா? பள்ளிக்கூடத்தில் சில முறை சண்டைப் போட்டுள்ளேன். கல்லூரியில் ஒருமுறை. பிறகு நினைவு தெரிந்து எதுவும் இல்லை. மனைவியை அடித்தது இல்லை. மகளை இரண்டொரு முறை அடித்துள்ளேன். அதுவும் காலையில் அடித்தால் மாலை தூக்கி கொஞ்ச ஆரம்பித்துவிடுவேன். என்னை யாராவது அடித்துள்ளார்களா? வாத்தியார்கள் அடித்த நினைவு வந்தது. அதிகபட்சம் நான் எவ்வளவு வலியை தாங்கியுள்ளேன். இரண்டு மூன்று பேர் இரண்டு நாட்கள் தொடர்ந்து என்னை அடித்தால் என்னால் வலியை தாங்க முடியுமா? இரண்டு மூன்று பேர் என்றால் கூட பரவாயில்லை. போற வர்றவன் எல்லாம் நினைத்த நேரத்தில் அடித்தால்?யோசிக்க யோசிக்க குழப்பமாக இருந்தது. தான் அடிப்பது மனிதன் என்ற உணர்வு சிறிதும் இன்றி இப்படி அடிக்க முடியுமா? காலை நான் காவல் நிலையத்தில் பார்த்த அத்தனைப்பேரும் அவனை அது என்றே சொன்னார்கள். அதை அடி. அதுக்கு டீ கொடு. அதுக்கு தண்ணீர் கொடு. அது மயங்குது பாரு. லாக்கப் வெளியே அதை தூக்கிட்டு போங்க. அதுக்கு காத்‌து வரட்டும். கொஞ்சம் நேரம் கழித்து அதை அடிக்கலாம்.

மாலை அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் கிளம்பி விட்டேன். வீட்டுக்கு கூட செல்லாமல் நேராக காவல் நிலையம் சென்றேன் இருந்தாலும் எங்கள் பகுதிக்கு வருவதற்குள் இருட்டி விட்டது. வழியெங்கும் கடும் போக்குவரத்து. தெரு முனையில் நடந்து வரும்போது சலூன் பூட்டி இருப்பதை பார்த்தேன். வழக்கத்துக்கு மாறாக தேநீர்க்கடையும் மூடிக்கிடந்தது. காவல்நிலையம் வாசலில் எப்போதும் நின்றிருக்கும் காவல் வாகனத்தை காணவில்லை. மஞ்சள் நிற வெளிச்சத்தில் காவல் நிலையம் மந்தமாக இருந்தது. காலையில் பார்த்தது போலில்லை கரகரவென்று தெளிவற்ற வயர்லெஸ் சத்தம் இரைச்சலாக கேட்டது. உள்ளே நுழைந்து ஏட்டை பார்த்தேன். வந்துட்டார். அவர்தான் என்று கைக்காட்டினார். அவர் காக்கி உடை எதுவும் அணிந்திருக்கவில்லை. மப்டியில் தெரிந்தார். அவர் இருந்த இடம் நோக்கி செல்லும்போது தரையை பார்த்தேன். சுத்தமாக கழுவி துடைக்கப்பட்டிருந்தது. லாக்கப்பில் யாரும் இல்லை. காலையில் பெரியவர் சொன்னது நினைவுக்கு வந்தது. நாலு நல்ல புத்தி சொல்லி அனுப்பி வச்சுட்டாங்களா?

 “நீங்கதானான்னு செக் பண்ண கூப்பிட்டோம். ரேஷன் கார்டு ஜெராக்ஸ் காட்டுங்க தம்பி” . ஜெராக்ஸை சரிபார்த்துவிட்டு “சரி தம்பி.. நீங்க கிளம்புங்க. ஒன்னும் பிரச்சினை இல்லை” என்றார். நான் எதுவும் பேசாமல் அவர் கையில் நூறு ரூபாயை கொடுத்துவிட்டு காவல் நிலையத்திலிருந்து வெளியேறி வீட்டை நோக்கி வேகமாக நடக்க முதுகுக்கு பின்னால் எஸ்ஐ பேசுவது கேட்டது.

“ஏட்டையா அது என்னாச்சு?”

“அது அப்பவே போயிடுச்சு”