Thursday, September 25, 2014

புலி விளையாட்டு

காட்டில் வேடிக்கை பார்க்கச்சென்றவனை
எதேச்சையாக கவனிக்கும்
புலியொன்று அடித்துக்கொல்கிறது


அதை கவனிக்கும்
இன்னொரு மனிதன்
தனது அலைபேசியில்
கவனமாக பதிவு செய்கிறான்

அடுத்த ஐந்து நிமிடங்களில்
அந்த பதிவு நகரமெங்கும் பரவுகிறது
இணையம், பத்திரிக்கை, தொலைக்காட்சி
என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது

கருணையற்ற வேட்டைக்கண்கள் முன்பு
தனது கைகளை கூப்பியபடி அமர்ந்திருக்கும்
மனிதனின் இறுதிக்கணத்தை பார்த்து
நகரத்தின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள்

காப்பாற்றாமல் படம் எடுத்தவனின்
பொறுப்பற்றத்தனத்தை
திட்டி தீர்க்கிறார்கள்

அப்படி செய்திருந்தால்
அவனையுமல்லவா புலி கொன்றிருக்குமென்று
சிலர் வாதாடுகிறார்கள்

புலி அடித்த மனிதனை பற்றிய
விதவிதமான ஊகங்கள் நகரெங்கும் பரவுகின்றது

அவன் தற்கொலை செய்ய
உத்தேசித்து காட்டுக்குச்சென்றவன்

என்னதான் இருந்தாலும்
புலி அப்படி செய்திருக்கக்கூடாது

புலி பயந்திருக்கும்

அந்த மனிதன் எதற்கு
புலியின் வீட்டுக்குள் செல்ல வேண்டும்

புலியை எல்லாம் கைது செய்ய முடியுமா?
என்னதான் இருந்தாலும் தப்பு அந்தாளு மேலதான்

எவ்வளவு நுட்பமாக பதிவு செய்திருக்கிறான்
கண்டிப்பாக கேனான் கேமராவேதான்

புலிக்கும் அவனுக்கும்
இடையே நடந்த இறுதி உரையாடல்
தெரிந்துக்கொள்ள நகரமக்கள் விழைகிறார்கள்

தனது வாழ்வின் இறுதியில்
ஏன் புலியை பார்த்து கும்பிட்டான்
படம் எடுத்தவனை பார்த்து கும்பிடவில்லை

புலி ஏன் பத்து நிமிடங்கள்
அமைதியாக காத்திருந்து பிறகு தாக்கியது

புலிக்கும் அவனுக்குமான
அந்தரங்கத்தை அறிந்துக்கொள்ள
முடியாமல் மீண்டும் மீண்டும் வீடியோவை
பார்த்து குழம்பி தவிக்கிறார்கள்

புலி அடித்த மனிதனுக்காக
ஒருக்கணம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்

இனி யாரும் புலியுடன் பேசக்கூடாது என்று
தங்கள் குழந்தைகளுக்கு போதனை செய்கிறார்கள்

இது எதுவும் தெரியாத புலி
நகரின் எல்லையில் இருக்கும் வனத்தில்
ஒரு ஜென்துறவி போல
தனிமையின் சூன்யத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதனிடம் எந்த தத்துவச்சிக்கல்களும் இல்லை
எந்த கேள்விகளும் இல்லை
எந்த குற்றவுணர்வும் இல்லை
எந்த பெருமிதமும் இல்லை
கனவுகள் இல்லை
அடுத்தவேளைக்கான
இரை பற்றிய கவலை கூட இருப்பதாக தெரியவில்லை
அடுத்து செய்யக்கூடிய திட்டம் எதுவுமில்லை
அது மனிதனல்ல
அது வெறும் புலி
அவ்வளவே

Saturday, September 20, 2014

எழுத்தால் இருளைக் கடந்தவன்

(இம்மாத 'உயிர் எழுத்து' இதழில் வெளியான எனது கட்டுரை) 

இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமியின் 'யுவபுரஸ்கார்' விருது 'கால்கள்' நாவல் எழுதிய எழுத்தாளர் அபிலாசுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து படைப்புலகில் இயங்கிவரும் தகுதியான இளம் எழுத்தாளருக்கு விருது கிடைத்துள்ளது. விருதுஅறிவிப்பின் இரண்டுநாட்களுக்கு முன்புதான் நாங்கள் அவரது அடுத்த நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். 

அபிலாஷை நேரில் சந்தித்தது ஓர் இலக்கியக்கூட்டத்தில்தான். சென்னை மேற்கு கே.கே.நகரில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலசில் நடந்த விஜயமகேந்திரனின் நூல் விமர்சனக்கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் நல்ல மழை. பெரும்பாலானோர் கடைக்கு வெளியே மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள். மாடியில் அபிலாசும், நானும் இன்னும் சில நண்பர்களும் மட்டும் இருந்தோம். 'உயிரோசை'யில் கவிதைகள் எழுதியுள்ளேன் என்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். 

பேஸ்புக் வந்திராத காலம் அது. வலைப்பதிவர்கள் பலர் செறிவாக எழுதிக்கொண்டிருந்த காலம். இணையப்பத்திரிக்கைகள் செல்வாக்கு நிறைந்த காலம். மனுஷ்யபுத்திரன் நடத்திவந்த உயிரோசை என்ற இணையத்தளம் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி செறிவான கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுக்கொண்டிருந்த காலம். எங்கள் அலுவலக ஊழியர்கள் மட்டுமே படிக்கும் உள்வலைத்தளம் ஒன்றுள்ளது. பெரும்பாலும் அவரவர் மொழியில் எழுதும் சுதந்திரம் அங்குண்டு. அதில் எங்கள் அலுவல ஊழியர்கள் கவிதை, கட்டுரை,சிறுகதைகள் எழுதுவார்கள். அந்த வலைத்தளம் தவிர அலுவலகம் வெளியில் இயங்கும் இணையப்பத்திரிக்கைகளிலும் எழுதுவார்கள். அவர்களில் சிலர் அவ்வபோது கேண்டீனில் சந்தித்து தாங்கள் படித்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள். திண்ணை,கீற்று,உயிரோசை போன்ற இணையதளங்களில் வெளியாகும் தங்கள் கவிதை,கதைகளை பெருமையாக மற்றவர்களிடம் காட்டுவார்கள். அது போன்ற தருணமொன்றில்தான் அபிலாசின் எழுத்துக்கள் அறிமுகமானது. அலுவலக நண்பர் உயிரோசை இணையத்தளத்தில் வெளியான அபிலாசின் கட்டுரையை எனக்கு லிங்க் அனுப்பி வைத்தார். கட்டுரை படிக்க தனித்துவமான மொழியில் மிகசெறிவாக சுருக்கமாக இருந்தது. அன்றிலிருந்து உயிரோசையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். எனது முதல் கவிதையை உயிரோசைக்கு அனுப்பி வைக்க பிரசுரம் ஆனது. தொடர்ச்சியாக கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த வேளையில்தான் அபிலாஷை முதலில் சந்தித்து என்னை அறிமுகம் செய்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன். அபிலாஷை சந்திக்கும்வரை அவர் கட்டுரை, மொழிபெயர்ப்பு கவிதைகள் எழுதுபவர் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரை சந்தித்து பேசிய சில நிமிடங்களில் அவர் கதை, கவிதை, சிறுகதை, நாவல் என்று பலதுறைகளில் இயங்குபவர் என்று தெரியவந்தது. பிறகு அவர் உயிரோசையில் எழுதுவதையும், அவரது பிளாக்கில் எழுதுவதையும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அடிக்கடி போனிலும் எப்போதாவது அபூர்வமாக மட்டுமே நேரிலும் சந்தித்து பேச ஆரம்பித்தோம். 

கடந்த ஆண்டு நாவல் எழுதவேண்டும் என்று எனக்குள் ஏதோவோர் எண்ணமும், உந்துதலும் கொந்தளிப்பான தீவிர மனநிலையும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. அதற்குமுன்பு அப்படியெல்லாம் எந்தவித திட்டமிடலும் எனக்கு இல்லை. ஏதாவது தோன்றுவதை பிளாக்கில், பேஸ்புக்கில் எழுதுவது என்றுதான் நாட்கள் ஓடின. யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஒருநாள் அபிலாசுக்கு போன் செய்து நான் ஒரு நாவல் எழுத ஆரம்பித்துள்ளேன். அது சரியா வருமா என்று தெரியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பத்து பக்கங்கள் எழுதி பார்த்தேன். சரியாக வரவில்லை. கிழித்துப்போட்டாலும் உறக்கம் வரவில்லை. திரும்ப எழுத வேண்டும் போல ஏதோ துரத்துகிறது என்று சொன்னேன். அபிலாஷ் தனது கால்கள் நாவலை பற்றியும், அதை என்ன மாதிரியான மனநிலையில் எழுத ஆரம்பித்தார் என்பதை பற்றியும் நிறைய பேசினார். 

போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடல்கன்னி போல உட்கார்ந்திருக்கிறாள். அந்த காட்சிபடிமம் எனது மனதில் வந்ததும் ஏதோ ஓர் உத்வேகத்தில் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னார். எனக்கும் அதுவே நடந்தது. இரை விழுங்கிய மலைப்பாம்பு போல சாலை நீண்டு வளைந்து கிடந்த ஒரு காட்சிபடிமம் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அதைத்தான் எப்படி இன்னும் விரிவாக எழுதுவது என்று தவித்துக்கொண்டிருந்தேன். ஒரு சொல் அல்லது ஒரு காட்சிபடிமம் மெல்ல மெல்ல வளர்ந்து பிரமாண்டமான கதையாக உருவெடுக்கும் என்று அபிலாஷ் சொன்னார். எழுதுங்க. உங்களால் முடியும் என்று ஒருமணி நேரம் வரை பல ஆலோசனைகள் சொன்னார். சரிதான் நம்மை ஊக்கப்படுத்த சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த நாட்கள் அவராகவே போன் செய்து தொடர்ந்து நாவலை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். மெல்ல மெல்ல தயக்கமும், பயமும் மறைந்து எனக்கு வேறுவிதமான கவலை வர ஆரம்பித்தது. நாவல் எழுதுவது ஒரு நல்ல அனுபவம். ஆறுமாதங்களோ ஒரு வருடமோ ஒரு நாவல் எழுதுவீர்கள். அந்த காலக்கட்டத்தில் உங்கள் அன்றாட வேலைகளை செய்துக்கொண்டே இருப்பீர்கள். குளித்துமுடித்து சாப்பிட்டு பஸ் பிடித்து அலுவலகம் சென்று மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது. இது ஓர் உலகம். ஆனால் உங்களுக்குள் இன்னோர் உலகம் சுழன்றுக்கொண்டே இருக்கும். அங்கே உங்கள் நாவலில் வரும் மனிதர்கள் இருப்பார்கள். நாவலில் வரும் சம்பவங்கள் நடக்கும். அங்கேயும் நீங்கள்தான் இருப்பீர்கள். ஆனால் இங்கே இருப்பவர்களால் அங்கே இருக்கும் உங்களை பார்க்க முடியாது. மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் நீங்கள் உருவாக்கின உலகத்தில் நீங்கள் உருவாக்கின மனிதர்களோடு நடமாடிக்கொண்டிருப்பீர்கள். அது ஓர் அழகிய அனுபவம். அதை அனுபவித்தால் போதையாக இருக்குமென்று அபிலாஷ் சொன்னார். எனக்கு பயம் வந்துவிட்டது. நாவலை எப்படி எழுதுவது என்பதிலிருந்த கவலை மெல்ல மெல்ல திசைதிரும்பி நாவலை எப்படி முடிப்பது என்று மாற ஆரம்பித்தது. நான் எழுத எழுத அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். முழுக்கதையை சொல்லாவிட்டாலும் என்னமாதிரி எழுதுகிறேன் என்னமாதிரி கதாபாத்திர அமைப்புகள் வருகின்றன என்று சொல்வேன். அவர் உடனே வேறு ஏதாவது படித்த நாவலை பற்றி பேசுவார். அதைப்பற்றி விவாதிப்போம். மனச்சோர்வு இல்லாமல் இருந்தது. இப்படியாக நான்கைந்து மாதங்கள் ஓடின. 

நாவலை எழுதி முடித்ததும் மென்பிரதியை அவருக்கு அனுப்பி இதை படித்துபார்த்து உங்கள் ஆலோசனை சொல்லமுடியுமா என்று கேட்டிருந்தேன். அப்போது அவர் கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியிடுவதற்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தார் என்று தெரியவந்தது. சரி. தொந்தரவு செய்ய வேண்டாமென்று அதிகம் வற்புறுத்தவில்லை. டிசம்பர் மாதம் நாவல் வெளியீட்டுவிழா என்று போன் செய்து தேதியை சொன்னேன். எனது கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவும் அன்றுதான் என்றார். எங்கள் இருவரின் புத்தகங்களும் ஒரே பதிப்பகம் என்பதாலும் ஒரே நாள் என்பதாலும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஒரே மேடையில் அமர்ந்திருந்ததும் சந்தோஷமாக இருந்தது. 

பிறகு ஜனவரி மாதம் பேஸ்புக்கில் சிலர் என்னை தொடர்ந்து மோசமாக தாக்கி எழுத ஆரம்பித்தார்கள். ஏன் தாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட என்னையும் எனது குடும்பத்தினரையும் திட்டி ஆபாசமாக விமர்சனம் என்ற பெயரில் பதிவுகள் எழுதினார்கள். பேஸ்புக் கணக்கை கூட மூடிவைத்துவிடலாமா என்று தோன்றியது. அப்போதுதான் அபிலாஷ் எனக்கு போன் செய்து "ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் நாவலை பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததால்தான் இப்படி நடக்கிறது. நீங்கள் ஒருவேளை பேஸ்புக்கில் இல்லாமல் போயிருந்தால் அல்லது விளம்பரம் செய்யாமல் அப்படியே புத்தகத்தை வெளியிட்டிருந்தால் எதுவும் நடந்திருக்காது" என்று சொன்னார். அடுத்தநாள் அவரது வலைதளத்தில் எனது நாவலை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை வெளியிட்டார். அபிலாஷ் எழுதிய கட்டுரைதான் எனது நாவலுக்கு வந்த முதல் விமர்சனம். கறாராக விமர்சனம் செய்திருந்தார். அதன்பிறகு பேஸ்புக் புழுக்களின் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது.அபிலாஷ் என்னிடம் அடிக்கடி சொல்வார். உடனடியாக எந்தவித எதிர்வினையும் செய்யாதீர்கள். ஒரு நாவலை எழுதிமுடித்தால் அடுத்த படைப்பு பற்றி யோசித்து அதை நோக்கி நகர்ந்துச்செல்வதே நல்லது. நல்ல புத்தகம் என்றால் அது சில வருடங்கள் கழித்து கண்டிப்பாக பேசப்படும் என்றார். அது உண்மைதான் என்று தோன்றுகின்றது. உடனடி எதிர்வினை ஆரோக்கியக்குறைவை உண்டுசெய்து நம்மை நோயில் தள்ளிவிடும். 

பிப்ரவரி மாதம் ஊட்டியில் வசிக்கும் மலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம் அமைப்பின் நிறுவனர் பாலநந்தகுமார் எனக்கு போன் செய்து உங்கள் நாவலை இந்த வருடத்தின் விருது நாவலாக அறிவித்துள்ளோம். சென்னையில் இருந்து உங்கள் நண்பர்கள் யாரையாவது பேச அழைத்து வாங்க என்று சொன்னார். எனக்கு சென்னையில் நண்பர்கள் அவ்வளவாக இல்லை. அப்படியே இருந்தாலும் நேரில் அழைத்தால் முகத்தை திருப்பிக்கொண்டு போகின்றவர்கள்தான் அதிகம். நண்பர்கள் அதுவும் புத்தகத்தை பற்றி பேச யாரை அழைப்பது என்று தெரியவில்லை. அபிலாஷிடம் தயக்கத்துடன் கேட்டேன். அவர் உடனே வர சம்மதம் சொல்லிவிட்டார். அதுவரை அபிலாஷிடம் போனில்தான் பேசியிருக்கிறேன். அபூர்வமாக ஒன்றிரண்டு முறை நேரில் சந்தித்துக்கொண்டதோடு சரி. ஊட்டியில் அபிலாசுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தது மறக்க முடியாத அனுபவம். 

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் ரயிலில் சென்றோம். நள்ளிரவு ஆகிவிட்டது. பாலநந்தகுமார் மேட்டுப்பாளையத்தில் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு இரவை கழித்துவிட்டு மறுநாள் காலை பத்துமணிக்கு மேல் காரில் மெதுவாக மலை ஏற ஆரம்பித்தோம். அப்போது தருண் தேஜ்பாலின் நாவல் ஒன்றை அபிலாஷ் கையில் வைத்திருந்தார். ரயிலில், பூங்காவில், காரில் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை இடையிடையே வாசித்துக்கொண்டே இருந்தார். அபிலாசின் வாசிப்பை விட என்னை அதிகம் பொறாமைப்பட வைத்தது இன்னொரு நிகழ்ச்சி. சென்னையிலிருந்து நாங்கள் சென்ற ரயிலிலும் மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்த விடுதியிலும் ஒருசிலருக்கு அபிலாஷை தெரிந்திருந்தது. இவர் விஜய் டிவியில வர்றவர் என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் சந்தோஷம் கலந்த வெட்கத்துடன் கோயம்புத்தூர் பெண்கள் சொல்வதை பார்க்க எனக்கு பொறாமையாக இருந்தது. அதற்கு ஊட்டியில் பழிதீர்த்துக்கொண்டேன். நாங்கள் படகுச்சவாரி செல்லும்போது எங்கள் படகுக்கு அழகான வடநாட்டு இளம்பெண்கள் வந்தார்கள். நான் கரையிலேயே இருக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க என்று அபிலாஷ் சொல்லிவிட்டார். ஏரிக்கரையில் அமர்ந்து பறவைகளை தீவிரமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அபிலாசும், நானும், பாலநந்தகுமாரும் அவ்வளவு பேசினோம். அரசியல், எழுத்து, சினிமா என்று பலவருடங்கள் கழித்து கல்லூரி நண்பர்களோடு பேசுவது போன்ற உணர்வு. தமிழ் இலக்கியம் படிப்பவர்களை விட ஆங்கில இலக்கியம் படிப்பவர்களே அதிகமாக தமிழ் நாவல்களையும்,கவிதைகளையும் படிப்பார்கள் என்பது எனது அபிப்ராயம். அபிலாசின் வாசிப்பு பரந்துபட்டது. கா.நா.சுவின் விமர்சனக் கட்டுரைகளிலிருந்து முகுந்த் நாகராஜன் ஏன் இப்போது கவிதைகள் எழுதுவதில்லை என்பது வரை எது பற்றி பேசினாலும் விரிவாகவும், ஆழமாகவும் தனித்த கோணத்தில் அவரது கருத்துகளை முன்வைப்பார். 

அபிலாஷ் நல்ல கட்டுரை எழுதுபவர் என்றே எனது அலுவலக நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ அவரை அப்படி பொதுமைப்படுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. உயிரோசை ஆரம்பித்த காலத்திலேயே அபிலாஷ் அப்படி இருந்தில்லை. கட்டுரைகள் எழுதுவார். திடீரென ஹைக்கூ கவிதைகளை மொழிப்பெயர்ப்பு செய்து எழுதுவார். பிறகு அடுத்த வாரம் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார். சிக்கலான மொழியில் இரண்டுமுறை வாசிப்பை கோரும் எழுத்தில் கட்டுரையின் நடை இருக்கும். ஆனால் அடுத்த வாரமே ஜாலியாக வேறொரு கட்டுரை வெளிவரும். பலதுறைகளில் ஆர்வம் கொண்ட புதுபுது விஷயங்களை தேடி படிக்கும் மனநிலையில் இருக்கும் ஒருவராலேயே இப்படி எழுத முடியும் என்று நினைத்துக்கொள்வேன். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். குறைவாக எழுதினால்தான் அது நல்ல எழுத்து என்று அவர் ஆரம்பத்தில் நினைத்ததாகவும் இந்த விஷயத்தில் மேலைநாடுகளில் இருக்கும் தொழில்முறை எழுத்தாளர்களை பாருங்க என்று மனுஷ்யபுத்திரன் அறிவுரை சொன்னதாக குறிப்பிட்டார். மனுஷ்யபுத்திரன்தான் தனது சோம்பேறித்தனத்தை உடைத்து நிறைய எழுத வைத்ததாக சொன்னார். எழுத்தாளன் என்பவன் தினமும் நாலு வரியாவது எழுதி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்பதில் எனக்கும் உடன்பாடுதான். 

'கால்கள்' அபிலாஷின் முதல் நாவல். இந்த நாவலுக்கு பிறகு அபிலாஷ் எழுதிய ப்ரூஸ்லீ பற்றிய ஒரு கட்டுரைத்தொகுப்பு வெளிவருகிறது. பிறகு அபிலாசின் முதல் கவிதைத்தொகுப்பு வெளிவருகிறது. இடையில் கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் என்ற கட்டுரைநூல். கிரிக்கெட் பற்றி தமிழில் ஆழமான பார்வையுடன் வெளிவந்த நூல்கள் மிகவும் குறைவு. துறைசார் நூல்களில் இருப்பது போன்று நுட்பமான தகவல்களும், ஆழமான பார்வையும், பல இடங்களில் தீவிர மொழியுடனும், சில இடங்களில் அங்கதமுமாய் எழுதப்பட்ட வகையில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க புத்தகம் என்பேன். "இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்" என்பது அபிலாஷின் சமீபத்திய புத்தகம் (முதல் கவிதைத்தொகுப்பு) 

கடந்த மாதம் டிஸ்கவரி புக் பேலசில் அபிலாசின் கவிதைத்தொகுப்பின் மீதான விமர்சனக்கூட்டம் நடந்தது. இந்திரன்,அமிர்தம் சூர்யா, உமாசக்தி, நரன், விஜயமகேந்திரன் போன்ற சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற சிறுகூட்டமாக இருந்தாலும் அபிலாஷின் எழுத்தை பற்றி நண்பர்கள் பேச,விவாதிக்க உண்மையில் ஏற்ற இடமாக அது இருந்தது. ஆச்சர்யமூட்டும் வகையில் அந்தச்சந்திப்பிலும் கூட்டம் முடிந்ததும் வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. புத்தகக்கடைக்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் குறைந்த முன்னிரவு சாலையில் கொட்டும் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக கவிதை எழுதுபவர்கள் அடுத்து சிறுகதை எழுதுவார்கள். பிறகு கொஞ்சநாளில் நாவல்கள் பக்கம் தாவிவிடுவார்கள். பிறகு ஒருபோதும் கவிதைகளின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். இந்த வசீகர பரிணாமவளர்ச்சி வரிசையை அபிலாஷ் திட்டமிட்டோ எதேச்சையாகவோ மீறுகிறாரோ என்று சந்தேகம் வந்ததுண்டு. இதைபற்றி அவரிடம் கேட்டேன். இது எப்படி நடந்ததென்று எனக்கும் தெரியவில்லை என்றார் சிரித்துக்கொண்டே. 

அவரது கட்டுரைகளில் கூட இதேபோன்ற நியதியை பின்பற்றுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் தோன்றும். ஒரு கட்டுரையை தீவிரமாக எழுதுவார். அடுத்து வெளிவரும் கட்டுரை கொஞ்சம் அங்கதமாக இருக்கும். ஆனால் நடையில் அதே துல்லியமான கறாரான ஒழுங்கு இருக்கும். அபிலாஷின் சினிமா கட்டுரைகளில் குறிப்படத்தக்கது அவர் ஆயிரத்தில் ஒருவன் (செல்வராகவன்) என்ற சினிமா பற்றி எழுதியது. அந்தக்கட்டுரை உயிர்மையில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அவர் அந்த படத்தின் நுட்பமான அம்சங்களை கவனித்து செறிவாக எழுதியிருந்தார். சாருநிவேதிதா அதற்கு எதிர்வினை செய்து அத்திரைப்படத்தை குப்பை என்று எழுதினார். அந்திமழை,காட்சிப்பிழை பத்திரிக்கைகளில் அபிலாஷ் எழுதி வரும் சினிமாக்கட்டுரைகளை நண்பர்கள் பலர் எனக்கு போன் செய்து படித்தீர்களா என்று கேட்டு அதை பற்றி விவாதிப்பது அடிக்கடி நடக்கும். அபிலாஷ் கட்டுரைகள் தனித்துவம் மிக்கதாக தெரிய இரண்டு விஷயங்கள் அவருக்கு உதவுகின்றன. கட்டுரைகளுக்கென்று அபிலாஷ் தேர்வு செய்யும் ஒருவித வசீகர மொழி லாவகம். ஒரு விஷயத்தை வேறொரு கோணத்தில் அவதானிக்கும் பாங்கு. கட்டுரைகளுக்கு மட்டுமல்ல கவிதைகளுக்கும் இதையே அவர் பயன்படுத்திக்கொள்கிறார். 

அபிலாஷின் கவிதைத்தொகுப்பு பற்றி தமிழவன் எழுதிய விமர்சனத்திலிருந்து.... 

"பொதுவாய் அபிலாஷின் கவிதையாக்கல் உத்தி என்பது இந்த எதிர்பாராத, சாதாரண விசயத்தை கவனித்து எதிர்பாராத இன்னொரு பார்வையை அதில் பதிய வைத்து கவிதையாக மாற்றுவது தான். இது பல கவிதைகளில் காணப்படுகிறது"

எங்கேயோ இருக்கும் இரண்டு மூன்று புள்ளிகளைகூட ஆச்சர்யமூட்டும் வகையில் ஒன்றாக இணைத்துவிடுவார். அவரது தனித்துவம் என்று நான் இதையே நம்புகிறேன். ரஜினியையும், பூக்கோவையும் இணைத்து ஒரு கட்டுரை எழுத அவரால் மட்டுமே முடியும். நீட்சேவும்,செந்திலும் என்று கட்டுரைக்கு தலைப்பு வைப்பார். 

எனது நண்பர்கள் சிலருடன் இருக்கும்போது அபிலாசின் ஏதாவது கட்டுரை பற்றி பேச்சு எழும். "உங்களுக்கு அவரை தெரியுமா? அவரோடு நட்பில் இருப்பது சிக்கலான விஷயம் ஆச்சே" என்று ஆச்சர்யமாக கேட்பார்கள். அவர்கள் ஆச்சர்யத்தை பார்த்துதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் அவரோடு இருந்த நாட்களில் அபிலாஷ் கால்கள் நாவலில் வரும் மதுபோல சிலநேரங்களில் முரட்டு பிடிவாதம் கொண்ட குழந்தையாக தெரிகிறாரோ என்றுகூட நினைத்தது உண்டு. ஆனால் அது ஒரு பாவனைதான் என்று தோன்றியது. உலகத்தில் சிக்கலான விஷயம் குழந்தைகளுடன் நட்பில் இருப்பதுதான். ஆனால் ஆபத்தில்லாத விஷயமும் அதுவே. ஊட்டியிலிருந்து சென்னைக்கு திரும்பிவந்ததும் அபிலாஷ் ஊட்டி பயணம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் இறுதியில் "கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான் இவ்வளவு சிரித்து உற்சாகமாக இருந்திருக்கிறேன். அதன் பிறகான என் வாழ்க்கையில் தான் ஏதோ கோளாறு இருக்கிறது என நினைத்தேன். வயிற்றில் அமிலம் கட்டிய ஆட்களை கடவுள் என்னைச் சுற்றி படைத்து வைத்திருக்கிறார். அடுத்த நாள் காலை சென்னை வந்த பின்னரும் இதோ இப்போது வரை அந்த சந்தோஷத்தின் தடம் என் உதடுகளில் இருந்து நீங்கவில்லை. ரொம்ப நாள் தங்காது. ஏதாவது ஒரு சென்னை இலக்கியவாதியை பார்க்காமலே போய் விடுவேன்?" என்று எழுதியிருந்தார். இந்த பயம்தான் எனக்கும் சென்னை நண்பர்களை பார்த்து. அதனால்தான் ஊட்டிக்கு வர முடியுமா என்று தயக்கத்தோடு கேட்டேன். 

அபிலாஷின் 'கால்கள்' நாவல் பற்றி வெகுசிலரே குறிப்பிட்டிருக்கிறார்கள். அது பற்றி அவருக்குள் உள்ளுக்குள் ஏதாவது வருத்தம் இருக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு அந்த ஆதங்கம் இருந்தது. உங்கள் நாவலை பற்றி அடிக்கடி பேஸ்புக்கில் எழுதுங்க என்று சொல்வேன். ஆனால் அவர் அதை தீர்மானமாக மறுத்துவிடுவார். ஒரு நாவல் எழுதப்பட்ட சில காலங்கள் கழித்தே அது பேசப்படக்கூடுமென்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பார். அவரது இந்த நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்தபோது எதிர்கால திட்டங்கள் பற்றி நிறைய சொன்னார். கவிதைக்காக இன்மை.காம் என்ற இணைய இதழ் தொடங்கியுள்ளதாக சொன்னார். கவிதை கருத்தரங்கம் ஒன்றை தொடங்குவது பற்றிய தனது கனவை அவர் சொன்னார். "முன்பைக்காட்டிலும் கவிதை பற்றி விவாதிக்கும் கூட்டங்கள் குறைந்து வருகின்றன. குற்றாலத்தில் நடந்தது போல வருடத்துக்கு ஒருமுறை ஊட்டியில், கொடைக்கானலில் ஒரு பட்டறை நடத்தினால் எப்படியிருக்கும்" என்று கேட்டார். அதுபற்றி விரிவாக பேசினோம். சென்னை திரும்பியதும் விரிவாக திட்டமிடலாம் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் சென்னை திரும்பியதும் வேலைப்பளு அது இதுவென்று தள்ளிக்கொண்டே போய்விட்டது. முதலில் மாதம் இருமுறை பத்திரிக்கையை கொண்டுவருவது என்றுதான் திட்டமிட்டிருந்தார். முதல் மாதம் அப்படித்தான் வந்தது. ஆட்களிடமிருந்து கவிதைகளை வாங்குவதும், அதை தேர்வு செய்வதும், பிறகு படங்களை வடிவமைப்பு செய்பவரோடு நேரம் செலவழிப்பதும் என்று பணிச்சுமை இழுப்பதால் இன்மை.காமை மாதம் ஒருமுறை மட்டுமே கொண்டுவர போகிறேன் என்றும் வருத்தத்தோடு சொன்னார்.

கடந்த மாதம் பேசும்போது இரண்டாவது நாவல் எழுதிமுடித்துவிட்டதாகவும் இப்போது எடிட்டிங் வேலையில் இறங்கியுள்ளதாகவும் உற்சாகமாக சொன்னார். நேற்று சாகித்ய அகாடமி இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் தேசிய விருது பட்டியலில் அவர் பெயர் அறிவித்திருந்ததை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்து சொன்னேன். இந்த விருது அவருக்கு மேலும் உற்சாகத்தையும்,தெம்பையும் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கீகாரமும், உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டுக்களும்தானே மனிதனை தொடர்ந்து ஆர்வமாக இயங்க வைக்கின்றன.