Tuesday, December 8, 2009

அழைக்கிறேன், வாருங்கள்...

அழைக்கிறேன், வாருங்கள்...
-----------------------------------

பதிவுலக நண்பர்களே...
வணக்கம்.

சாரு நிவேதிதா சொல்வது போல புத்தக வெளியீட்டு விழா ஒரு கலாச்சார நிகழ்வு. அது ஒரு கொண்டாட்டம். அனுபவ பகிர்வு. (பக்கத்து மாநிலம் கேரளாவை பாருங்கள். ஷகீலாவை பாருங்கள் எ‌ன்றெல்லாம் சொல்ல வரவில்லை.) எழுத்தாளனையோ படைப்பாளியையோ கொண்டாட தேவையில்லை. அட்லீஸ்ட் படைப்புகளை, ந‌ல்ல எழுத்தை கொண்டாடலாம். இவ்வளவு பீடிகை எதற்கு என்றால் டிசம்பர் 30 முதல் ஜ‌ன‌வரி 10 வரை நடைபெற உள்ள 33வது சென்னை புத்தக கண்காட்சியை முன்னிட்டு அகநாழிகை பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள் வெளிவர உள்ளது.

வரும் டிசம்பர் 11 அன்று அகநாழிகை பதிப்பகம் சார்பாக புத்தக வெளியீட்டு விழா நடைபெற உள்ளது



அனைத்து புத்தகங்களும் வெளியீட்டு விழாவில் 10% தள்ளுபடியில் கிடைக்கும்.

நாள் : டிசம்பர் 11, 2009 வெள்ளிக்கிழமை
மாலை 5.30 மணி
இட‌ம் : டிஸ்கவரி புக் பேலஸ்,
6, மகாவீர் வணிக வளாகம்,
முனுசாமி சாலை, கே.கே.நகர் (மேற்கு),
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்),
சென்னை - 78.



தொடர்புக்கு:-

பொன்.வாசுதேவன்
பேச : +91 999 454 1010
மின்னஞ்சல் : aganazhigai@gmail.com
வலைத்தளம் : http://www.aganazhigai.com
aganazhigai@gmail.com


வாருங்கள். எழுத்தை கொண்டாடுவோம்.

Monday, December 7, 2009

நான்கு கவிதைகள்

சமாதானப் புறா
--------------
சமாதானப் புறாக்களை
ஏதாவதொரு மாநாட்டில்
பறக்கவிடுவதை
அடிக்கடி நீங்கள்
தொலைக்காட்சியிலோ நேரிலோ
பார்த்திருக்கலாம்
அதற்கப்புறம்
அந்த புறாக்கள்
எங்கு செல்கின்றன
என்னவாகின்றன
தெரிந்தால் சொல்லுங்களேன்



உப்பிட்டவரை
————————————

காலை தெருமுனையில்
பார்த்தேன் அவனை
உடம்பெல்லாம் உப்பு
தடவியபடியே இறங்கிக்கொண்டிருந்தான்
முகத்தை கவனிக்க முடியவில்லை
பாதாள சாக்கடை துர்நாற்றமோ
அலுவலகம் செல்லும் அவசரமோ
சரியாக நினைவில் இல்லை

மூங்கில் குச்சிகளோடு முங்கியவன்
தலைக்குமேல் கைகள் அசைகையில்
ரயில்களுக்கு டாட்டா சொல்லும் குழந்தைகளோ
கற்பூர ஆரத்திக்கு உருகும் பக்தர்களோ
சரியாக சொல்ல தெரியவில்லை


மதியம் 1:12 மணிக்கு
சிவப்பு நிற
டப்பாவை பிரிக்கையில்
முத‌ல் கவளம் ருசிக்கையில்
உப்பு வைக்க மறந்த
மனைவியை சபிக்கையில்
சரியாக வ‌ந்து தொலைத்தான்

அவன்
——————
எப்படி இருப்பான்
எ‌ன்ற கேள்விக்கு
எப்படி இருந்தால்
எனக்கு பிடிக்குமோ
அப்படித்தான் இருப்பான் என்றேன்.
நடுவில்
எப்படி எப்படியோ
மாறிவிட்டது எல்லாம்.
அவன் அப்படியேத்தான் இருக்கிறான்.


நான் அவன் இ‌ல்லை
--------------------

சத்தியமாக
நான் பிடுங்கிக் கொள்ள போவதில்லை
நான் அப்படிப்பட்டவனும் இல்லை
எடுக்கவா தொடுக்கவா
எ‌ன்று கேட்கும் ஆளுமில்லை
இருந்தாலும்
எதிர்ப்படும் இந்த பெண்கள்
எல்லாம் ஏனோ
அடிக்கடி முந்தானையை
சரிசெய்துக் கொள்கிறார்கள்

Saturday, December 5, 2009

உலகக் கவிஞர்கள் - 1

உலகக் கவிஞர்கள்
---------------------------
பிரம்மராஜன் அவர்கள் தொகுத்த சமகால உலகக் கவிதை (உயிர்மைப் பதிப்பகம்) படித்து கொஞ்சம் மண்டை காய்ந்து விட்டது. சில கவிஞர்கள் பெயர்களை எல்லாம் உச்சரிக்கையில் பல் சுளுக்கி விட்டது. இவர்களை நெட்டில் தேடி அலைந்தபோது சிலர் முகவரிகள் கிடைத்தது. இங்கு அவற்றை பதிவு செய்கின்றேன்.சில கவிஞர்களின் வலைத்தள முகவரிகள் மட்டும் கிடைக்கவில்லை. யாராவது பகிர்ந்துக்கொண்டால் படிக்க வசதியாக இருக்கும். சில்வியா பிளாத் கவிதைகளை நாகார்ச்சுனன் தளத்தில் தமிழ் மொழிப்பெயர்ப்பில் பார்க்கலாம். பாப்லா நெரூடா கவிதைகள் திண்ணை.காமில் கிடைக்கும். பிரம்மராஜன் அவர்களது வலைத்தளத்திலும் படிக்கலாம்...


உலகக் கவிஞர்கள் பட்டியல்
-------------------------
ஐரோப்பா
-----------
1.பெர்டால்ட் ப்ரக்ட் (ஜெர்மனி)
2.குந்தர் கூநர்ட் (ஜெர்மனி)
3.பால் ஸெலான் (ஜெர்மனி)
4.டாமஸ் ட்ரான்ஸ்ரோமர் (ஸ்வீடன்)
5.செஸ்வா மிவோஷ் (போலந்து)
6.ஸ்பிக்நியூ ஹெர்பர்ட் (போலந்து)

போலந்து
-----------
1.ததயூஸ் ரோஸ்விட்ச்ட்
2.அன்னா ஸ்விர்ஸைனிஸ்கா
3.விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா
4.இங்க்போர்க் பாக்மன் (ஆஸ்திரியா)

மத்திய ஐரோப்பா
-------------------
1.வாஸ்கோ போப்பா(செர்பியா)
2.மிராஸ்லாவ் ஹோலுப் (செக்கஸ்லோவாகியா)
3.யான் காப்லின்ஸ்கி (எஸ்டோனியா)
4.நினா கேஸியன் (ரொமானியா)
5.மாரின் ஸோரெஸ்க்யூ (ரொமானியா)
6.ஆக்னநெஸ் நெமிஸ் நேகி (ஹங்கேரி) - Ágnes Nemes Nagy
7.டெஸ்ஸோ டேன்டோரி (ஹங்கேரி)
8.நாஸோஸ் வாயெனா‌‌‌ஸ்
9.பெரன்ஸ் யூஹாஸ் (ஹங்கேரி) Ferenc Juhász
10.சேஸரே பவேசே
11.பிரைமோ லெவி (இத்தாலி)
12.பியர் பாவ்லோ பாஸோலினி (இத்தாலி)
13.பாட்ரீஸியா காவல்லி (இத்தாலி)
14.ஃபெர்னான்டா பெசோவா (போர்ச்சுகல்)
15.ஃபிலிப் ஜக்கோட்டே (ஃபிரான்ஸ்)
16.ப்ளெய்ஸ் ஸென்றார்ஸ் (ஸ்விட்ஸர்லாந்து)
17.ஹைன்ரிக் நார்பிராண்ட் (டென்மார்க்)

ரஷ்யா
-------
1.ஓசிப் மெண்டல்ஷ்டாம்
2.மரீனா ஸ்வெட்டயேவா

கனடா
-------
1.மைக்கேல் ஓன்யாட்டே

லத்தீன் அமெரிக்கா
--------------------
1.பாப்லோ நெரூடா (சிலி)
2.ஆக்டேவியா பாஸ் (மெக்சிகோ)
3.ராபர்ட்டோ யூவாரோஸ்
4.கிளாரிபெல் அலெக்ரியா
5.ஜோஆவோ கேப்ரல் டி மெலோ நெட்டோ
6.தான்சி மோர்யோன்

மத்திய கிழக்கு நாடுகள்
------------------------
1.எஹுதா அமிக்ஹாய் (இஸ்ரேல்)
2.தாஹ்லியா ராவிகோவிச் (இஸ்ரேல்)
3.டேன் பேகிஸ் (இஸ்ரேல்)
4.மொஹமத் தர்வீஷ் (பாலஸ்தீனம்)
5.அடோனிஸ் (லெபனான்)
6.நஸீம் ஹிக்மெத் (துருக்கி)

ஆப்பிரிக்கா
------------
1.பிரேட்டன் பிரேடன்பாஹ் (தென்னாப்பிரிக்கா)
2.ஜெரிமீ க்ரோனின்
3.டென்னிஸ் ப்ரூடாஸ் (தென்னாப்பிரிக்கா)
4.டெர்க் வால்காட் (கரீபியா)
5.கோஃபி அவூனோர் (கானா)

ஆசியா
-------
1.டக்குமுரா கொட்டாரோ (நம்புங்க பெயரே இப்படித்தான்) (Takamura Kotaro) (ஜப்பானிய கவிஞர்)
2.ஏ.கே.ராமானுஜன் (இந்தியா)
3.ஜெயந்த மகாபத்ரா (இந்தியா)
4.ரியூச்சி தமுரா(Ryuichi Tamura ) (ஜப்பான்)
5.ஷன்டாரோ தனிக்காவா
6.சிமாகோ தடா
7.சப்பார்டி ஜோக்கோ தமோனோ (இந்தோனீசியா)
8.ஸோ சோங்-ஜூ (கொரியா)
9.யாங் லியூஹாங் (yang li yu huang) (சீனா)
10.ஷூடிங்
11.நகுயென் சி தியென்(வியட்நாம்)
12.சோங் ஹ்யோன்-ஜோங் (கொரியா)




ஒரு கவிதையை மொழிப்பெயர்ப்பது போல சிரமமான வேலையெதுவுமில்லை. ஒரிஜினா‌‌‌லிட்டி கெடாமல் அதேநேரம் தமிழ் சூழலுக்கும் ஏற்றவாறு கொண்டு வருவதற்குள் உயிர் போகிறது.நஸீம் ஹிக்மத்தின் ஒரு கவிதையை மொழிபெயர்த்தேன்.

நஸீம் ஹிக்மத்
——————————————
The Walnut Tree

my head foaming clouds, sea inside me and out
I am a walnut tree in Gulhane Park
an old walnut, knot by knot, shred by shred
Neither you are aware of this, nor the police

I am a walnut tree in Gulhane Park
My leaves are nimble, nimble like fish in water
My leaves are sheer, sheer like a silk handkerchief
pick, wipe, my rose, the tear from your eyes
My leaves are my hands, I have one hundred thousand
I touch you with one hundred thousand hands, I touch Istanbul
My leaves are my eyes, I look in amazement
I watch you with one hundred thousand eyes, I watch Istanbul
Like one hundred thousand hearts, beat, beat my leaves

I am a walnut tree in Gulhane Park
neither you are aware of this, nor the police


Nazim Hikmet

translated from Turkish by Gun Gencer

வாதாமரம்
—————————

மேகங்களை தூவும் என் தலை, கடல் என்னுள்ளும் வெளியும்
குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
ஒரு முதிர்ந்த மரம், முடிச்சுகளும், வளையங்களுமாய்
நீங்களோ காவல்துறையோ இது அறியாதது

குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
என் இலைகள் விரைந்தசையும், நீரில் விரையும் மீனென
என் இலைகள் தூய்மையானவை, பட்டுக்கைக்குட்டையின் தூய்மையென
பிடுங்கி, துடை, என் ரோஜாவை, உன் விழியில் வழியும் கண்ணீரை
என் இலைகள் என் கரங்கள், நூறாயிரம் கரங்கள் எனக்கு
நூறாயிரம் கரங்களால் தொடுகிறேன் உன்னை, தொடுகிறேன் இஸ்தான்புல்லை
என் இலைகள் என் விழிகள், வியப்போங்க பார்க்கிறேன்
நூறாயிரம் விழிகளால் பார்க்கிறேன், பார்க்கிறேன் இஸ்தான்புல்லை
நூறாயிரம் இதயங்களாய், துடிக்க, துடிக்கிறேன் என் இலைகளை

குல்ஹன் பார்க்கின் வாதாமரம் நான்
நீங்களோ காவல்துறையோ இது அறியாதது

(இஸ்தான்புல் - துருக்கியின் பழமையான நகரம்)
நன்றி http://www.cs.rpi.edu/~sibel/poetry/nazim_hikmet.html


டக்குமுரா கொட்டாரா கவிதையொன்ரை மொழிப்பெயர்த்தேன்

Extraordinary Chieko

Chieko sees what cannot be seen,
Hears what cannot be heard.

Chieko goes where no-one else can go,
Does what no-one else can do.

Chieko doesn’t see the physical me,
She yearns for the me behind me.

Chieko has lifted off the burden of pain
And drift into a realm of grace and beauty.

I hear her voice calling over and over to me
But Chieko no longer has a ticket to the human world.

அசாதாரணமான சிஎக்கோ

சிஎக்கோ கண்களுக்கு புலப்படாதவற்றை பார்ப்பாள்
காதுகளுக்கு கேட்காவற்றை கேட்பாள்

சிஎக்கோ யாரும் செல்லா இடங்களுக்கு செல்கிறாள்
யாரும் செய்ய முடியாதவற்றை செய்கிறாள்

சிஎக்கோ என்னை நானாய் பார்க்க மாட்டாள்
எனக்கு அப்பால் இருக்கும் என்னை காணத்தவிக்கிறாள்

சிஎக்கோ வலிகள் எல்லாவற்றையும் கடந்து விட்டாள்
அன்பு கலந்த ராஜ்யத்தில் கலந்து விட்டாள்

அவள் குரல் திரும்ப திரும்ப அழைப்பதை கேட்கிறேன்
ஆனால் சிஎக்கோவிற்கு , மனித உலகிற்கு திரும்ப வர அனுமதியில்லை..

நன்றி http://www.paularcher.net/translations/extraordinary_chieko.html




---- கொலைவெறி தொடரும்

Friday, December 4, 2009

நான்கு கவிதைகள்

ரயில் விளையாட்டு - 1
———————————————————————

அலுவலகத்துக்கு தாமதமாக
வ‌ந்த சகஊழியர்
சற்றுமுன் பார்த்த
ரயில் விபத்தை விவரித்தார்
முகம் நசுங்கிப்போன
மனிதனுக்காக பரிதாபப்பட்டார்.

அடு‌த்த ஊழியர்
அவர் கிராமத்தில் பார்த்த
தற்கொலையை சொன்னார்
தலை தனியாக கிடந்ததாம்

அலுவலக மேலாளர்
அவரது அப்பா
ஓடும் ரயிலிலிருந்து
தவறி விழுந்து
இறந்துப்போனதாக சொன்னார்

அடு‌த்த அரைமணி நேரத்துக்கு
ஆளாளுக்கு ரயில்கள் ஓட்டினா‌‌‌ர்கள்
ஆறாவது மாடியெங்கும்
அடிப்பட்டவர்களின் கை,கால்கள்
சிதறி துடித்தன


ரயில் விளையாட்டு - 2
———————————————————————

வரிசையாக ஐந்து வாண்டுகள்
ஒன்றின் இடுப்பை
ஒன்று பிடித்து ‌விளையா‌ட
காடு மலை பள்ளமென்று
சளைக்காமல் சென்றது ரயில்.
நடுவில் திடீரென
மண்டிப்போட்டு தவழும்
குழந்தையொன்று வர
திடீரென பதறிப்போய்
நின்றது ரயில்.
நானும் ச்சும்மாங்காட்டி
ரயில் கடக்கும் வரை
காத்திருந்து நடந்தேன்

(ரயில் விளையாட்டு - 2 ஏற்கனவே வார்ப்பு.காம் மின்னிதழில் வெளியானது)


சில அறிவிப்புகள்
————————————————
நாலு வாரங்களில் சிவப்பழகு
விளம்பரம் கீழே

ஆறே வாரங்களில்
தொப்பை குறைய
இன்னொரு விளம்பரம் இருந்தது

பக்கத்தில் மூன்று வாரத்தில்
யோகா பயிற்சியென்று
அடுத்த அறிவிப்பு

இன்னும் பல…
எட்டு வாரத்தில் குழந்தை பிறக்க
ஏழு வாரத்தில் கணிப்பொறி
ஐந்து வாரத்தில் நீச்சல்
ஒருவாரத்தில் ஆங்கிலம்

எப்படி கூட்டினாலும்
வருடத்துக்கு இரண்டை
விட்டு வைத்திருந்தார்கள்
என்ன திட்டமோ?



மழையளவு
——————————
வானிலைசெய்தி வாசிக்கும் பெண்
அடுக்கிக்கொண்டே போனா‌‌‌ள்.
திருநெல்வேலியில் ஆறு செண்டிமீட்டர்
கு‌ற்றால‌த்‌தி‌ல் ஐந்து செண்டிமீட்டர்
விழுப்புரத்தில் பத்து செண்டிமீட்டர்
நுங்கம்பாக்கத்தில் ஆறு செண்டிமீட்டர்
வாசலில் எட்டி பார்த்தேன்.
கூரையிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளை
கையில் பிடித்து தரையில் கொட்டுகின்றாள்.
எதிர் வீட்டுச் சிறுமி.
தவறுக்கு மன்னிக்கவும்…
நுங்கம்பாக்கத்தில் ஆறரை செண்டிமீட்டர்
தொலைக்காட்சிப்பெண் சிரிக்கின்றாள்.

Thursday, December 3, 2009

சாரு நிவேதிதா 15 ஆண்டுகளுக்கு் முன்பு எழுதிய கவிதை

சாரு நிவேதிதா 15 ஆண்டுகளுக்கு் முன்பு எழுதிய கவிதை

பளிச் கவிதை - -3-- "பயம்"

பயம்
-----
பனங்கையின்
செல்லரித்துச் சிதைந்த
இடுக்கின் வழி சென்று
விரிசலுற்றிருந்த சுவரில்
குஞ்சு பொரித்து -
கவிதை எழுதிக் கொண்டிருந்த
அவனைப் பார்த்து
இருப்பின் பயங்கொண்டு
வெளிக்கும் உள்ளுக்குமாக
தத்தளித்து அலைந்து கொண்டிருந்த சிட்டுக்குருவி
நான் இன்னமும் இருக்கிறேன்
நீ இருக்கிறாயா
எ‌னக் கேட்டு எழுதாமலேயே
காணாமல் போய்விட்ட
சிநேகிதன்
காரணம் சொல்லாமல்
வீட்டுக்கு வருவதைத் தவிர்த்த
சிநேகிதி
சத்தில்லாக் கவிதையெழுதும்
உன்னைச் சீந்த மாட்டேனெனச்
சொல்லிப் புறக்கணிக்கும்
மொழி
எழுத நினைத்து
எழுதாமல் விட்ட
கவிதையின் பொருளை
அவளிடம் விளக்க
தன்னிரக்கம் தன்னிரக்கம்
எ‌னச் சொல்லித்
தலையிலடித்துக் கொண்டே
ஓடினாள்
சிநேகிதி




நன்றி
விருட்சம் கவிதைகள் தொகுதி-2
(1993-1995 வரையிலான கவிதைகள்)

Wednesday, December 2, 2009

நன்றாக...

நன்றாக நினைவில் உள்ளது

நவம்பர் மாத இறு‌தி‌ வியாழக்கிழமை. மாலை நான்கு மணி. இரண்டு நாட்கள் கழித்து பக்ரீத் பண்டிகை. மீர்சாகிப்பேட்டையில் கடைத்தெரு முழுதும் கலர் பொடிகள் தூவிய செம்மறி ஆட்டு மந்தைகள். அதன் மீது பள்ளிக்கூடம் விட்டு திரும்பும் சிறுவர்கள் கற்களையும், வாட்டர் பாக்கெட்டையும் வீசியபடி உற்சாகமாய் செ‌ன்றுக்கொண்டிருந்தனர் அவர்களை விட நான் உற்சாகமாய் செ‌ன்றுக்கொண்டிருந்தேன். ஆர்வம் கலந்த பதற்றம். மழை வரும் போல மேகங்கள் காட்சியளிக்க எதிரே ஒரு சாவு ஊர்வலம் அமைதியாக போய்க்கொண்டிருந்தது. ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் பேருந்து நிறுத்தத்தில் பர்தா போட்ட கல்லூரி பெண்கள் கண்களால் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள்.


ஐஸ்ஹவுஸ் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அகநாழிகை வாசு தலை தெரிந்ததும் இன்னும் ஆர்வம் தாங்க முடியவில்லை. "புத்தகம் பைண்டிங்க்ல இருக்கு வாங்க" எ‌ன்று பிரஸ் இருந்த சந்துக்குள் அழைத்துச் சென்றார்.

நர்சிம் புத்தகம் வ‌ந்து விட்டது. என்னுடையதும், பா.ரா வுடையதும் வரவில்லை. பதற்றமாகி விட்டது. நர்சிம்மின் அய்யனா‌‌‌ர் கம்மாவை புரட்டிக்கொண்டிருக்கையில் ‌சில நிமிடங்களில் எனது கோயில் மிருகம் தொகுப்பை கொண்டு வந்தார்கள். பதற்றம் ஓடி பரவசம் தொற்றிக்கொண்ட அந்த தருணத்தை மறக்க முடியாது. கவிதைத்தொகுப்பு திருப்தியாக வந்துள்ளது. நன்றி அகநாழிகை. நன்றி வாசு.

அகநாழிகை பதிப்பகம் புத்தக வெளியீட்டு விழாவை டிசம்பர் 11 அன்று நடத்த இருக்கிறது. அறிவிப்பு குறித்தான பதிவு விரைவில்.

அனைவரையும் அழைக்கின்றோம்.

நன்றி
என்.விநாயக முருகன்


பி-கு

(இரண்டு நாட்களாக வேலைப்பளு. இர‌வி‌‌ல் சாமகோடாங்கி போல வீடு திரும்புவதால் புத்தக முன் அட்டையை ஸ்கேன் செய்ய முடியவில்லை.)

Tuesday, December 1, 2009

பறப்பதற்கு ஆசை - கவிதை/உரையாடல் கவிதை போட்டிக்காக

கவிதை/உரையாடல் கவிதை போட்டிக்காக...

பறப்பதற்கு ஆசை
—————————————————

வண்ணத்துப்பூச்சி எனக்கு பிடிக்கும்
வண்ணத்துப்பூச்சி ஓவியங்களும் பிடிக்கும்
வண்ணத்துப்பூச்சி பற்றிய
கவிதைகளை ‌மிகவு‌ம் பிடிக்கும்
சொல்லிக்கொண்டே போனவனிடம்
உடலெல்லாம் முட்கள் கொண்ட
நெளியும் கூட்டுப்புழுவொன்றை காட்டினேன்
குமட்டிக்கொண்டு வருவதாக சொன்னான்

இருப்பதை விட்டு
பறப்பதன் அர்த்தம் புரிந்தது


நன்றி
என்.விநாயக முருகன்


குறிப்பு : (இது ‘உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது)...