Saturday, October 30, 2010

இவருக்கு ஓட்டு போடுங்க

நண்பர்களுக்கு...

நவம்பர்-14 க்குள் இவருக்கு ஓட்டு போடுங்க




இவரைப்பற்றி
http://edition.cnn.com/2010/LIVING/04/01/cnnheroes.krishnan.hunger/




நன்றி
என்.விநாயக முருகன்

Friday, October 29, 2010

ஆற்றுப்படை

மருத்துவக் காப்பீடு விற்கும்
நண்பரை சந்திக்க நேரிட்டது
உடல்நலனை விசாரித்தார்
உள்ளம் நெகிழ

என் நெஞ்சுவலிப் பற்றி கேட்டார்
மிகுந்த அக்கைறையோடு
சுவரிருந்தால் சித்திரமென்றார்

மூட்டுவலிப் பற்றி விசாரித்தார்
கனிவாய் தாயன்போடு
உடல் வளர்த்தால்
உயிர் வளருமென்றார்

பு‌திதாக வந்திருந்த
காப்பீட்டுத் திட்டத்தை
பரிவாக விவரித்தார்

பத்து வகை நோய்களுக்கு
பணம் தருவதாக நம்பிக்கையளித்தார்
சுலபத்தவணை வசதியென்றார்
குறைந்தப்பணமே ஆகுமென்றார்

இறந்துப்போனா‌‌‌ல்
பணம் கட்ட தேவையில்லையென்றார்
ஆறுதலாக இருந்தது





நன்றி
என்.விநாயக முருகன்

Sunday, October 24, 2010

தனிமைச்சிறை - குறும்படம்

சென்னை வ‌ந்து வேலை தேடிக்கொண்டிருந்த நாட்களில் பகலெல்லாம் நண்பர்களது ரூமில் அடைந்து கிடப்பேன். அநேகமாக எல்லா நண்பர்களும் வேலைக்கு செ‌ன்று விட எஞ்சியவர்களும் அவர்களது தோழிகளுடன் சினிமா அல்லது பீச் செ‌ன்று விட்டிருப்பார்கள். நான் மட்டும் ரூமிற்குள் அடைந்து கிடப்பேன். பத்து மணிக்கு ஜெராக்ஸ் கடைக்கு செ‌ன்று பயோடேட்டா பிரிண்ட் அவுட் எடுப்பேன். டீக்கடை செ‌ன்று ஒரு தம் அடித்து டீ சாப்பிடுவேன். எவ்வளவு நேரம் சாலையை பார்த்துக்கொண்டிருப்பது? டீக்கடைக்காரன் ஒருமாதிரி நினைப்பான் எ‌ன்று மீண்டும் கிளம்பி ரூமுக்கு வ‌ந்து விடுவேன். பரணில் ஏதாவது சினிமா கவர்ச்சி புத்தகம் இருக்கும். எடுத்து படிப்பேன். அடு‌த்த சிகரெட் பற்ற வைக்கும்போது பசி உலுக்கும். இன்னொரு டீ கூட வடை சாப்பிட டீக்கடை செல்வேன்.


காலை பதினொரு மணிக்கு வேலைவெட்டி எதுவுமில்லாமல் ஒரு ரூமிற்குள் அடைந்துகிடப்பது இருக்கிறதே. அந்த கொடுமையை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும். மதியம் இரண்டு மணியிலிருந்து நான்கு மணி வரை போவது தெரியாது. மெஸ்ஸில் சாப்பிட்டு வ‌ந்து உறங்கி விடலாம். காலை பதினொரு மணியிலிருந்து ஒரு மணி வரை தனிமைச்சிறையில் இருக்கும்போது பலநேரங்களில் விபரீத எண்ணங்கள் ஓடும். தற்கொலை; வலி, புறக்கணிப்பு, கோபம் எ‌ன்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் மனதுக்குள் பல அலைகள் ஓடும்.

எனது அலுவலகத்தில் வேலைபார்க்கும் லதாமகன் மூலமாக இந்த குறும்படத்தை பார்க்க நேரிட்டது.லதாமகனுக்கு நன்றி. படம் உலுக்கி விட்டது. காரணம் நான் இந்த வலியை வெறுமையை உணர்ந்துள்ளேன். நீங்களும் உணர்ந்திருக்கலாம். கவிஞர் அய்யப்ப மாதவனை டிஸ்கவரி புக் பேலஸில் (சொற்கப்பல் இலக்கிய நிகழ்ச்சி எ‌ன்று நினைவு) சந்தித்து இரண்டொரு வார்த்தை பேசியுள்ளேன். அவரைப்பற்றி அதிக எண்ணிக்கையிலான கவிதைகள் எழுதக்கூடியவர் எ‌ன்றுதான் என் மனதுக்குள் ஒரு பிம்பம் இருந்தது. இந்த குறும்படம் மூலம் அவரது இன்னொரு பரிமாணம் எனக்கு அறிமுகமாகியுள்ளது. படத்தில் வந்திருக்கும் ‌மிக நேர்த்தியான ஒளிப்பதிவு குறிப்பிடத்தக்கது.

யூட்யூப் சுட்டி:

1. http://www.youtube.com/watch?v=mXPnbSiry5Q
2. http://www.youtube.com/watch?v=D6WVxC2wAx4

Friday, October 15, 2010

ஜே.பி.சாணக்யா என்னும் கலைஞன்

ஜே.பி.சாணக்யா என்னும் கலைஞனை "ஆண்கள் படித்துறை" என்னும் அவரது அற்புதமான சிறுகதையோடு அறிமுகப்படுத்துகிறேன். அன்னம்மாள் கணவனை இழந்தவள். மத்திய வயதை தாண்டியும் கட்டுடலோடு அந்த ஊர் ஆண்களை அலைய விடுபவள். அன்னம்மாள் காசுக்காக உடம்பை விற்கும்பாலியல் தொழிலாளி அல்ல. அவளை யாரும் கட்டாயப்படுத்தவும் முடியாது. அவள் முடிவு செய்யும் ஆண்களே அவளோடு படுக்க முடியும். ஆண்களை ஒரு பரிதாபத்துகுரிய பிறவியாகவோ, அற்ப ஜீவனாகவோத்தான் அவள் பார்த்திருக்க முடியும். உறவுக்குக்காக அவள் பணம் ஏதும் பெற்றுக் கொள்வதுமில்லை. அல்லது காமத்தின் மூலம் ஆண்களை வென்று விட்டதாக அவளுக்கு உள்ளுக்குள் உவகை. அதன் மூலம் பகலில் தைரியமாக ஆண்களது முகங்களை எதிர்கொள்வதில் அவளுக்கு அப்படியொரு ஆனந்தம். அவளுக்கு லலிதா என்றொரு மகள். லலிதா அம்மாவுக்கு நேர் எதிரி. கற்பு, குடும்பம் பற்றிய கறாரான மதிப்பீடுகளை கொண்டிருக்கும் அவள் செல்வம் என்ற வாலிபனை காதலிக்க, செல்வத்திற்கோ லலிதா உடல் மீதுதான் ஆசை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகுதான் செக்ஸ் என்பதில் லலிதா கறாராக இருக்கிறாள். அன்னம்மாள் முதல்முறையாக தனது மகள் திருமணத்துக்காக காமத்தை விலை பேசுகிறாள். விலை பேசுவது வேறு யாரிடமும் இல்லை. செல்வத்திடம். அன்னம்மாள்,செல்வம் உறவை பார்க்கும் லலிதா தூக்கு மாட்டிக் கொள்கிறாள். ஆணாதிக்க சூழலில் கணவனை இழந்த ஒரு பெண் தன் சுயத்தையும், இருப்பையும் காப்பாற்ற காமத்தைத்தான் ஆயுதமாக எடுத்தாக வேண்டிய நிலையை ஆண்கள் உருவாக்கி வைத்திருக்கும் அவலத்தை அன்னம்மாள் கதாபாத்திரம் காட்டுகிறது. ஆண்களை எதிர்க்க காமத்தை விட்டால் மரணம் தவிர வேறு வழி இல்லை என்பதை லலிதா காட்டுகிறாள். காமத்தை ஆண்களுக்கு எதிரான ஆயுதமாக மாற்றியும் அன்னம்மாள் கடைசியில் தோற்றுவிட, ஆண்கள் எல்லா நேரத்திலும் வெற்றிப்பெற்றவர்களாக மாறுவதை வாழ்வின் முரண் என்பதை விட வேறு என்ன சொல்ல முடியும்? கதா - காலச்சுவடு போட்டியில் இந்த சிறுகதை முதல் பரிசு பெற்றது. எஸ்.ரா முன்பொருமுறை தனக்கு பிடித்த நூறு சிறுகதைகளில் "ஆண்களின் படித்துறையை" குறிப்பிட்டுள்ளார்.

“பிளாக் டிக்கட்” சிறுகதையில் அலிபாபா பிளாக் டிக்கட் விற்கும் ரவுடி. பாரி தியேட்டர் கெளண்டரில் டிக்கட் குடுக்கும் வேலை செய்கிறான். தியேட்டர் நிர்வாகம் பெரியவர் கையிலிருந்து அவரது மகன் சின்ன செட்டியார் கைக்கு மாறுகிறது. பெரியவர் இருந்தவரை சுதந்திரமாக தியேட்டரில் பிளாக் டிக்கட்டும், செய்து வந்த விளிம்புநிலை மனிதர்களுக்கு சின்னவர் அதிகாரத்துக்கு வந்ததும் சோதனை வருகிறது. போலீஸ்காரர்களும், சில நாகரீகமான ஆட்களும் கூட பிளாக் டிக்கட் விற்கிறார்கள். இவர்களோடு அலிபாபாவால் போட்டியிட முடியவில்லை. அலிபாபாவும், பாரியும் சமாதானமாகி கூட்டாக தொழில் செய்யும் நேரத்தில் அலிபாபாவை யாரோ வெட்டி விடுகிறார்கள். பாரியை போலீஸ் கைது செய்கிறது. விளிம்புநிலை மனிதர்களை மோதவிட்டு அதிகார வர்க்கம் வேடிக்கை பறக்கிறது. திட்டம் போட்டு செஞ்சிட்டானுவ என்று அவர்கள் பேசிக்கொள்வதோடு கதை முடிகிறது. பிளாக் டிக்கெட் கதையில் சாணக்யா விவரிக்கும் புற உலக வர்ணணைகள் துல்லியமானதும், யதார்த்தமானதுமாய் அமைந்துள்ளது. குறிப்பாக தியேட்டர் கழிவறைகளில் நடக்கும் பாலியல் தொழில், பிளாக் டிக்கட் விற்கும் சிறுவர்களின் புற உலகத்தை யதார்த்தமாக சாணக்யா பதிவு செய்கிறார்.

“கடவுளின் நூலகம்” என்ற சிறுகதை செம ஜாலியாக செல்லும். ஒரு நாற்பது வயது ஆள். பிரம்மச்சாரி. தினமும் அவனை ஒரு கல்லூரி பெண் சைட் அடிக்கிறாள். இருவரும் பேசாமலேயே பலநாட்கள் பார்த்துக் கொள்கிறார்கள். ஒரு நாள் அவளே உரிமையோடு வந்து அவரிடம் பேசுகிறாள். என் மீது என்ன கோபம்? என் காதல் பொய்யில்லை. ஏன் என்னிடம் பேச மறுக்கின்றீர்கள்? கேட்கிறாள். இவருக்கு குழப்பம். என்னடா இது? நாம் எப்ப இவளிடம் இதற்கு முன்பு பேசியுள்ளோம். மூளை குழம்பிவிட்டதா? செம ரகளையாக இருக்கும் இந்த கதை ஒரு வித திடுக்கிடலோடு சோகமாய் முடிகிறது. இது என்ன மாதிரி கதை? மேஜிக்கல் ரியலிசமா? எதார்த்தமா? தர்க்கத்தை மீறிய ஒரு வித பூடகத்தன்மை இந்தக்கதையின் முக்கிய அமசமாக இருக்கிறது. எது எப்படியோ.. எனக்கு சாணக்யாவை பிடிக்கிறது. சிடுக்குகளற்ற மொழி நடையில் இந்தக்கதை சலசலவென ஓடும் நீரோடை போல ஓடி திடீரென ஹோவென்ற சத்தத்துடன் விழும் பிரம்மாண்ட பேரருவி ஓசையில் முடிகிறது. (இந்தக்கதையின் முன் பகுதியில் லேசாக ஹாருகி முரகாமியின் ஒரு சிறுகதை வாடையடித்தது)

இந்தக்கதையின் கனவுத்தன்மை பற்றி சொல்லும்போது இன்னொரு கதையை பேசாமல் இருக்க முடிவதில்லை. ஜே.பி.சாணக்யா "கனவுப் புத்தகம்" சிறுகதையில் மிக செறிவாக காலத்தை கலைத்துப்போட்டு விளையாடியுள்ளார். ஒரு குளம். அதில் பால்யகாலத்தில் இருக்கும் இரண்டு சகோதரிகள் அவர்களது பால்யகாலத் தோழனுடன் நீந்தி விளையாடுகிறார்கள். தாமரை மலர்களை பறிக்க குளத்தில் முங்குகிறார்கள். காலம் ஓடுகிறது. அவர்கள் வளர்கிறார்கள். வாழ்ந்துக்கெட்ட குடும்பம். திருமணம் தடைபடுகிறது. முதிர்கன்னிகளை சந்திக்க வரும் அதே பால்யகாலத்தோழன் அவர்களோடு உறவு கொள்ளுகிறான். நீருக்கடியிலிருந்து மூன்று பிணங்களை கிராம மக்கள் மீட்டெடுக்கிறார்கள். அதுவரை அவர்கள் வாழ்க்கை எல்லாம் கனவுலகத்திலிருந்து கூறப்பட்டவையாக முடிகிறது.

சாணக்யாவின் எல்லா கதைகளிலும் காமம் அடிநாதமாக இழையோடுகிறது. காமத்தை பில்டர் செய்துவிட்டால் எந்தக் கதையுமே கதையாக இருக்காது. காமத்தை சாணக்யா சரளமாக எழுத்தில் கையாள்கிறார். அவன் வெற்றிலைப் போட்டு வாயை கொப்பளித்தான். என்று சரளமாக சொல்வது போல “அவள் மார்புகளைத் திரை விலக்கி உதடு பொருத்திக் கவ்வினான்” என்று எழுதிவிட்டு போகிறார். இந்த பாணியே அவரது கதைகளில் வணிக எழுத்துக்குரிய மேலோட்டமான பாலியல் கிளர்ச்சியை தராமல் , முகம் சுழிக்க வைக்காமல் நம்மை சகஜமாக கதைக்குள் இழுத்து செல்கிறது. உண்மையில் இவர் காட்டும் காமச்சித்தரிப்புகள் கிளுகிளுப்பாக இருப்பதில்லை. காமம் அதுவாகவே அதாவது அதன் சகஜத்தன்மையோடனே இவரது கதைகளில் வெளிப்படுகிறது. சாணக்யாவின் கதைகளில் வரும் பெண்கள் காமத்தை மிக இயல்பாக எதிர்கொள்வது ஆச்சர்யமாக இருக்கிறது. "கோடை வெயில்" சிறுகதையில் வேலையில்லாமல் இருக்கும் கணவனுக்காக அவள் மனைவி வசந்தா அவளது உறவினர் அண்ணன் முறை சொல்லி அழைக்கும் ஒரு போலீஸ்காரரோடு உறவு கொள்கிறாள். "ஆண்கள் படித்துறை"யில் அன்னம்மாள். “ரிஷப வீதி” கதையில் பாலியல் தொழிலாளர்களது உலகத்தையும், சிறுமிகளை புணர்வதில் இன்பமடையும் ஒரு வக்கிர ஆணின் செய்கைகளையும் சாணக்யா பதிவு செய்கிறார்.

காமம் தவிர இவரது சிறுகதைகளில் மனப்பிறழ்வுகளை எதிர்கொள்ளும் மனிதர்களை அதிகம் பார்க்க முடிகிறது. “பூதக்கண்ணாடி” கதையில் தீவிர மனப்பிறழ்வு ஒரு கொலையில் முடிகிறது. பூதக்கண்ணாடியின் சித்தி கொலை செய்யப்பட்டு அவளது குடிசைக்குள் புதைக்கப்பட்டு, சில வருடங்கள் கழித்து குடிசை புல்டோசரால் இடிக்கப்படும்போது பிணம் வெளியே வருகிறது. “மிகு மழை” சிறுகதையில் வரும் வேணியக்காளுக்கு அவள் கொடுமைக்கார கணவனால் மனப்பிறழ்வு ஏற்படுகிறது. முடிவில் அவள் ஆடைகளை கிழித்துக்கொண்டு தெருவில் அம்மணமாக நடக்க வீட்டிற்குள் வைத்து பூட்டி வைக்கிறார்கள். “அமராவதியின் பூனைகள்” கதையில் ரசாக் என்னும் ஒரு சிலம்பாட்டக்காரன் வருகிறான். ஊரே மெச்சும் ரசாக் அவன் மனைவி முன் தோற்று போகிறான். ஒருக்கட்டத்தில் அவனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியாமல் போகிறது. ரசாக்கின் மனைவி அமராவதிக்கும், ரசாக்கின் நண்பன் காசிக்கும் தொடர்பு ஏற்படுகிறது. அமராவதி வளர்க்கும் பூனையை சிலம்பால் அடித்துக் கொன்று கத்தியால் கீறி தூக்கில் தொங்க விடுகிறான்.

சாண்க்யாவின் கதைகளில் வரும் ஆண்களும் சரி. பெண்களும் சரி. பாலியல் சுயதேவை சரிவர பூர்த்தியடையாமல் ஏங்குகிறார்கள். ஒருக்கட்டத்தில் பாலியல் வேட்கையால் தீவிரமாக மனம் பிறழ்ந்து விபரீதமாய் மாறுகிறார்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் காமமே அடிப்படையாக இருக்கிறது. சாணக்யா அவரது உலகத்தில் காட்டும் மனிதர்களுக்காக நாம் கடவுளை பிரார்த்திக்கிறோம். அவர்கள் இப்படி செய்யலாமா? என்று நம்மை நாமே நொந்து கொள்கிறோம். இப்படியும் மனிதர்கள் இருப்பார்கள்? என்று திகைக்கிறோம்.என்ன செய்வது? இப்படியும் ஒரு உலகம் இருக்கத்தானே செய்கிறது. அங்கு மனிதர்கள் இப்படித்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். விளிம்புநிலை மனிதர்களது உளவியலையும்,புறச்சூழலையும் துல்லியமாக எழுத்தில் வடிக்கும், தனது அடர்த்தியான சிறுகதைகள் மூலம் கவனம் பெற்றுள்ள சாணக்யா என்னும் கலைஞனுக்கு, நவீன தமிழ் இலக்கிய உலகத்தில் தனி இடமொன்று எப்போதும் இருக்கும்.

(ஜே.பி. சாணக்யாவின் "கனவுப் புத்தகம்", "என் வீட்டின் வரைப்படம்" மற்றும் காலச்சுவட்டில் வெளியான சில சிறுகதைகளை முன்வைத்து எழுதப்பட்ட விமர்சனம்)

Thursday, October 14, 2010

The Proposal - அழகான காமெடி+காதல் கதை


எனக்கு ஹாலிவுட் படங்கள் அவ்வளவாக பிடிக்காது. கடந்த வாரம் ஒரு படம் பார்த்தேன். இ‌து ‌மிக அருமையான படம். ஆஹோ... ஓஹோவென்று சொல்ல முடியாவிட்டாலும் ஆரம்பம் முத‌ல் இறுதி வரை ரசிக்க முடிந்தது. பல இடங்களில் நகைச்சுவைக்கு பஞ்சம் இ‌ல்லை. ‌சில இடங்களில் தமிழ்ப்படங்களை போலவே குடும்ப செண்டிமெண்ட். சில இடங்களில் ரொமான்ஸ். குறிப்பாக சாண்ட்ரா புல்லாக்கின் (ஸ்பீடு படத்தில் பேருந்து ஓட்டும் அம்மணிதான்) நடிப்பு படத்தை தொய்வில்லாமல் இறுதிவரை ரசிக்க வைக்கிறது. படம் பெயர் The Proposal.

மார்கரெட் (சான்டாரா புல்லாக்) ஒரு புத்தக பதிப்பக கம்பெனியில் வேலை செய்கிறார். அவர் கனடாவிலிருந்து வந்து அமெரிக்காவில் வேலை செய்கிறார். அவரை பார்த்தாலே கம்பெனியில் இருக்கும் ஊழியர்கள் நடுங்குகிறார்கள். நம்ம ஆன்சைட் மேனஜர்கள் போல டெரர் ஆக இருக்கிறார். ஒருகட்டத்தில் அவரது அமெரிக்க விசா காலாவதியாகிறது. அவர் கனடாவிற்கே திரும்பியாக வேண்டிய கட்டாயம். சான்டாரா புல்லாக்கின் உதவியாளராக வேலை பார்க்கும் ரேயான் ரெனா‌‌‌ல்டை வற்புறுத்தி திருமணம் செய்து கொள்ள சொல்கிறார். அதன் மூலம் அமெரிக்கா குடியுரிமை விசாவை தக்க வைத்துக்கொள்வது சான்டாரா புல்லாக்கின் எண்ணம். முதலில் ரெனா‌‌‌ல்ட் இத்திட்டத்திற்கு மறுக்க, சான்டாரா புல்லாக் அவனுக்கு வேலையில் புரோமோஷன் வாங்கி தருவதாக சொல்ல ரெனா‌‌‌ல்ட் சம்மதிக்கிறான். இவர்கள் திருமணத்தை சந்தேகிக்கும் குடியுரிமை அலுவலர்கள் அவர்களை வேவு பார்க்கிறார்கள். தம்பதிகள் இருவரும் அலாஸ்காவில் இருக்கும் ரெனா‌‌‌ல்ட்டின் வீட்டிற்கு செல்கிறார்கள். ரெனா‌‌‌ல்ட்டின் அப்பா,அம்மா மற்றும் பாட்டி சந்தோஷமாக புதுமண தம்பதிகளை வரவேற்கிறார்கள்.


பிறகுதான் படத்தில் கச்சேரி களை கட்டுகிறது. அ‌ங்கு நடக்கும் ரகளைதான் படமே. இருவரும் போலியாக புதுமண தம்பதிகள் போல நடிக்கிறார்கள். ரெனா‌‌‌ல்ட்டின் பாட்டியாக வரும் மேரி ஸ்டீன் பெர்க் அடிக்கும் ரகளையும், சாண்ட்ரா புல்லாக் மாட்டிக்கொண்டு முழிப்பதும் செம ஜாலியாக படத்தை பல இடங்களில் சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது. ஒரு கட்டத்தில் சாண்ட்ரா புல்லாக்கால் தாங்க முடியாமல் உண்மையை ஒத்துக்கொண்டு அலாஸ்காவை விட்டு ஓட, அப்புறம்? மீதிக்கு படத்தை பார்க்கவும்.

அண்மையில் நான் ரசித்து பார்த்த ரொமான்ஸ் கலந்த ஒரு காமெடி படம் The Proposal. இந்த படத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கிறது. ஒருவேளை ஹாலிவுட்காரர்கள் குடும்ப உறவுகளை அன்பை மையப்படுத்தி எடுத்திருப்பதால் எனக்கு பிடித்துள்ளதோ..என்னவோ?

Monday, October 11, 2010

வித்தை - அகநாழிகை சிறுகதை


செப்டம்பர் மாத "அகநாழிகை" இதழில் வெளியான எனது வித்தை எ‌ன்ற சிறுகதை வாசிக்க.. சிறுகதையை வெளியிட்ட அகநாழிகை இதழுக்கு நன்றி...


வித்தை

கடைசி பெஞ்சில் என் பக்கத்தில் அமர்ந்திருந்த பொன்ராஜ்தான் அந்த கேள்வியை என்னிடம் கேட்டான். பள்ளிக்கூட காம்பவுண்டு பக்கத்தில் மண்டிக்கிடந்த கருவேலக்காட்டில் நானும்,அவனும் சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த கேள்வியை கேட்டான். எனக்கும் ஏற்கனவே அந்த சந்தேகம் இருந்தது.


பொன்ராஜ் வீட்டை தாண்டி தெருமுனையில் செல்லும்போது “அது எப்படிடா மூனு நாளா ஒன்னுக்கு கூட போகாம சைக்கிள் சுத்தறான்?” பொன்ராஜ் கேட்ட கேள்வி மனதில் ஓடியது. எனக்கு இருந்த அதே சந்தேகம் பொன்ராஜுக்கும் இருந்தது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அருகே செல்ல,செல்ல திடலில் கட்டியிருந்த லவுட்ஸ்பீக்கரின் ஒலி அதிகரித்தது. “நான் ஆணையிட்டால்…” எம்.ஜி.ஆர் பாடல் ஒலித்துக்கொண்டிருந்தது. தூரத்தில் அவன் சைக்கிள் சுற்றிக் கொண்டிருப்பது இங்கிருந்தே பார்க்க முடிந்தது.

தெரு முனையில் இருந்த காலித்திடலின் நடுமையத்தில் மூங்கில் கம்பு நட்டிருந்தது. மூங்கில் கம்பில் ஒரு ட்யூப்லைட் கட்டியிருந்தார்கள். அவன் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். திடலை சுற்றி வட்டவடிவத்தில் ஐந்து மூங்கில் கம்புகள் ஐந்தடிக்கு ஐந் தடி இடைவெளியில் அரண் போல ஊன்றியிருக்க, ஒவ்வொரு கம்பிலும் சணல் கயிற்றால் ட்யூப்லைட் இறுக்கி கட்டப்பட்டிருந்தது. ஐந்து மூங்கில்களையும் கயிற்றால் இணைத்து வட்ட திடலை சுற்றி வட்டவடிவத்தில் அரண் உருவாக்கியிருந்தார்கள்.

இன்று இரண்டாம் நாள். இரண்டு நாட்களாக அவன் கால்கள் தரையில் படவில்லை ; இரண்டு நாட்களாக அவன் உறங்கவில்லை என்பதுதான் ஊருக்குள் அதிசயமான பேச்சாக இருந்தது. அதைவிட பொன்ராஜ் சொன்னதுதான் எனக்கு அதிசயமாக இருந்தது. இரண்டு நாட்களாக அவன் வயக்காட்டுப்பக்கம் ஒதுங்கவில்லை. சைக்கிள் வித்தைக்காரன் காலையில் குளிக்கும்போது குடம், குடமாக தலையில் தண்ணீரை வாரி வாரி கொட்டினா‌‌‌ன். குளிக்கும்போதே அவன் ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவலை பொன்ராஜ் சொன்னபோது அது எனக்கு அதீத கற்பனையாக பட்டது. ஒருவேளை உண்மையாக இருக்குமோ?

நேற்று இரவு அவன் சைக்கிள் சுற்றும்போது மூன்று பேர் வட்டமாக சூழ்ந்து நின்றார்கள். பழைய ப்யூஸ் போன ட்யூப்லைட்டுகளை கையில் வைத்து அவன் வேகமாக சைக்கிள் சுற்றி வர,வர ஒவ்வொரு லைட்டாக அவன் முதுகில் நெஞ்சில்,முதுகில் அடித்து உடைக்க மக்கள் மெய்மறந்து நின்றார்கள். சிறுவர்கள் கைதட்டி உற்சாகமூட்ட கடைசி ட்யூப்லைட்டை அவன் நெற்றியில் அடித்து உடைத்தார்கள். இவ்வளவுக்கும் அவன் கொஞ்சம் கூட சைக்கிளின் வேகத்தை குறைக்காமல் மூங்கில் கம்பை சுற்றி,சுற்றி சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். அதைவிட ஆச்சர்யமாயிருந்தது பொன்ராஜ் சொன்னது. அந்த வித்தைக்காரன் குளிக்கும்போதே ஒன்னுக்கு போயிடுவானென்ற தகவல். அப்படியென்றால் இரண்டுக்கு? பொன்ராஜ்ஜிடம் அதுகுறித்து தெளிவான பதிலில்லை.

“நெஞ்சமுண்டு நேரமுண்டு ஓடு ராஜா…” எம்.ஜி.ஆர் பாடல் மைக் செட்டில் ஒலித்துக் கொண்டிருந்தது. சைக்கிள் வித்தைக்காரனை பார்த்தேன். அவனை சுற்றி சிறுவர்கள் நின்று கைதட்டிக் கொண்டிருந்தார்கள். அவன் சைக்கிளின் ஹேண்டில்பாரை இரண்டு கைகளால் பலமாக பிடித்துக் கொண்டு சற்று படுத்த நிலையில் சைக்கிளை ஓட்டியபடியே சுற்றினான். வலது காலை உயர்த்தியபடி இடதுகாலால் மட்டும் பெடல் ஓட்டி சைக்கிளை ஓட்ட சிறுவர்கள் விசிலடித்தார்கள்.

சைக்கிள் வித்தைக்காரனின் உதவியாளன் கையிலிருந்த சிறிய மைக்கை பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி, சுற்றி நடந்து வந்துக்கொண்டிருந்தான். அவன் கயிற்றை தாண்டி சென்று அருகிலிருந்த துணி கூடாரத்திற்குள் நுழைந்தான். எம்.ஜி.ஆர் பாடுவதை நிறுத்திவிட்டு வந்தான்… கையிலிருந்த மைக்கில் கத்தினான்.அவன் குரல் கொடூரமானதொரு காட்டெருமை குரலையொத்திருந்தது.

“அம்மாமாரே..அய்யாமாரே உசுர வச்சு வெளையாடுற ஆட்டம். ஜோரா கைதட்டுங்க…காசு போடுங்க.. ” இடதுகையிலிருந்த மைக்கில் பேசியபடியே வலது கையிலிருந்த ஒரு பெரிய கறுப்புநிற குடையை சைக்கிள்வித்தைக்காரனிடம் தூக்கிப்போட, அவன் சைக்கிளை ஓட்டியபடியே குடையை கேட்ச் பிடித்தான். சைக்கிள் ஹேண்டில்பரிலிருந்து கைகளை எடுத்து குடையை பிரித்தான். எனக்கு பிரமிப்பாக இருந்தது. கால்கள் தரையை தொடவில்லை. விரித்த குடையை தலைகீழாக பிடித்தபடியே திடலின் நடுவிலிருந்த மூங்கிலை சுற்றி ,சுற்றி சைக்கிள் ஓட்டினான்.

சில பெண்கள் கயிற்றுக்கு இந்தப்பக்கம் நின்றபடி சில்லறைகாசுகளை தூக்கி குடைக்குள் வீசினார்கள். ஒரு வெள்ளைவேட்டிக்காரர் கயிற்றை தாண்டி சென்று கசங்கி போயிருந்த ஐந்துரூபாய் தாளொன்றை குடைக்குள் போட்டு திரும்பினார்.

இனி பாக்கபோறதுதான் ஜோரு..நெருப்பு வெளையாட்டு…மைக்கில் கத்திக்கொண்டிருந்தவன் சொல்ல கூட்டமே ஒருக்கணம் அமைதியானது. பெண்கள் திகைத்துபோய் சைக்கிள் வித்தைக்காரனை பார்தத்து. மைக்காரன் கூடாரத்துக்குள் சென்று ஒரு மண்ணெண்ணை கேனுடன் வந்தான். ஒரு கையில் சிறிய பந்தத்தை பற்ற வைத்து கேனை சைக்கிள் வித்தைக்காரனிடம் தர அவன் கேனிலிருந்து நாலைந்து மிடக்கு எண்ணெயை விழுங்கினான்.

பொன்ராஜும் வேடிக்கை பார்க்க வந்திருந்தான். முன்னால் கூட்டத்தின் தலை மறைக்க உயரமான கல்லின் மேல் நானும் பொன்ராஜும் ஏறிக்கொண்டோம். சைக்கிள் வித்தைக்காரன் பந்தத்தை வாங்கி வலது கையில் வைத்துக்கொண்டு சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். குடையும்,சில்லறை காசுகளும் மைக்காரனிடம் இருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் வாயிலிருந்து எண்ணையை காற்றில் கொப்பளித்து துப்பி பந்தத்தால் தீமூட்ட பெரும் ஜூவாலையுடன் காற்றில் நெருப்பு பறந்தது. கொள்ளிவாய் பிசாசு திடலில் சைக்கிள் ஓட்டுவது போலிருந்தது. கூட்டம் மிரண்டு போய் பார்த்துக்கொண்டிருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் ஒரு கையாலா ஹேண்டில்பாரை பிடித்து ஓட்டியபடியே சுற்றி வந்துக் கொண்டிருந்தான். மெய்மறந்து நின்ற கூட்டத்திற்கு ஒரு கையால் டாட்டா காட்டியபடியே சைக்கிள் ஓட்டினான். மைக் பிடித்திருந்தவ்ன் துணிக்கூடாரத்துக்குள் சென்றான். லவுட்ஸ்பீக்கரில் டி.எம்.சவுந்தராஜன் பாடல்கள் சன்னமாக ஒலிக்க ஆரம்பித்தது. கூட்டம் கொஞ்சம், கொஞ்சமாக களைய ஆரம்பித்தது. சைக்கிள் வித்தைக்காரன் இப்போது வேகத்தை குறைத்து சுற்றி வந்துக் கொண்டிருந்தான்.

இரவெல்லாம் தூங்காமல் சைக்கிள் ஓட்டுவான் என்று பக்கத்துதெரு பொன்ராஜ் சொன்னான். நேற்று இரவு விழித்திருந்து கவனிக்க முடியவில்லை. திண்ணையில் உட்கார்ந்து கவனித்துக்கொண்டே தூங்கிவிட காலையில் வாசலுக்கு சாணி தெளிக்க வந்த அம்மாவின் சலசலப்பில் விழித்து பார்த்தேன். அதிகாலை பனியிலும் சளைக்காமல் சைக்கிள் ஓட்டிக்கொண்டிருந்தான். தலையில் சிவப்பு நிற மப்ளரை சுற்றியிருந்தான். உடம்பில் போர்வை சுற்றியிருக்க குளிரிலும் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தான். ஒருவேளை சைக்கிளை விட்டு இறங்கி துணிக்கூடாரத்துக்குள் சென்று உறங்கியிருப்பானோ?தெரியவில்லை.

இன்று இரவு எப்படியாவது உறங்காமல் பார்க்க வேண்டும். பக்கத்து ஊரிலிருந்து பள்ளிக்கூடம் வரும் பால்பாண்டி அவன் ஊரில் இதுபோல சைக்கிள் வித்தை நடந்தபோது விடிய விடிய தூங்காமல் இருந்து உறுதி செய்ததை சொன்னான். துருவி,துருவி கேட்டபோது கண் அசந்துவிட்டதாக சொன்னான். அவன் அப்பாதான் கண் விழித்து அவன் காலை இறக்காமல் சைக்கிள் ஓட்டுவதை கவனித்ததாக சொன்னான். எனக்கு அதைவிட சந்தேகம் பொன்ராஜ் சொன்னதுதான். தூங்காமல் இருக்கலாம். அது எப்படி ஒன்னுக்கு இருக்க கூட இறங்காமல் ஓட்ட முடியும்? யாராவது லேசாக கண் அசரும் சமயம் பார்த்து இறங்கிபோய் வந்துவிடுவானோ?

சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வந்தேன். திண்ணையிலிருந்து பார்த்தால் திடலில் சைக்கிள் ஓட்டுவது தெரியும். இரவு பழுத்து கிடந்தது. ட்யூப் லைட்டுகள் வெளிச்சம் கண்கூசியது. துணிக் கூடாரத்துக்குள்ளிருந்து மைக்செட்காரன் சாப்பிட்டு முடித்து வந்தான். அம்பலக்காரர் வீட்டு பெண் தட்டில் இட்லிகளை எடுத்து வந்து சைக்கிள் ஓட்டுகிறவனிடம் தந்து விட்டு ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்

சைக்கிள் ஓட்டுகிறவன் திடலின் நடுமையத்திலிருந்த மூங்கில் கம்பை இடது கையால் இறுக்கமாக பிடித்தபடி சைக்கிளை பேலன்ஸ் செய்து நிறுத்தியிருந்தான். கால்களை பெடலிலிருந்து எடுக்கவில்லை. தட்டை ஹேண்டில் பார் மீது லாவகமாக வைத்து வலது கையால் இட்லியை தின்றுக் கொண்டிருந்தான். சாப்பிட்டு முடித்ததும் அம்பலக்காரர் வீட்டு பெண் ஒரு லோட்டாவில் தண்ணீர் கொண்டு வர அதை குடிக்காமல் நன்றாக கொப்பளித்து துப்பிவிட்டு மீண்டும் சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். திடலின் ட்யூப் லைட் வெளிச்சம் என் கண்களுக்கு ஆயாசமாய் இருந்தது. திடலை சுற்றி, சுற்றி வரும் சைக்கிளை திண்ணையிலிருந்து பார்த்தபடியே இருந்தேன்.

கண்கள் வலிப்பது போலிருக்க லேசாக தலையணையில் சாய்ந்து படுத்தபடியே அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிடுவானோ என்று உற்று கவனித்துக்கொண்டிருந்தேன். ஒருவேளை அவன் சைக்கிளை விட்டு இறங்கிவிட்டால் என்ன செய்யவேண்டும். தெருவை ஒரு முறை பார்த்தேன். அநேகமாக எல்லாரும் உறங்க ஆரம்பித்திருந்தார்கள். அவன் சாவதானமாக சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தான்.

மைக்செட்காரன் கூடாரத்திலிருந்து வெளியே வந்து போர்வையையும், மப்ளரையும் தந்துவிட்டு செல்ல சைக்கிளை மிதித்தபடியே மப்ளரை தலையில் கட்டிக்கொண்டான். போர்வையை உடலில் சுற்றியபடியே சைக்கிளை ஒட்ட ஆரம்பித்தான். தெருநாய்களின் அரவம் கூட குறைந்து கிடந்தது. சுவர்கோழிகள் க்ரீச்..க்ரீச்சென்று கத்திக்கொண்டிருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் என்னை பார்த்து லேசாக புன்னகைப்பது போலிருந்தது. அவன் கண்டிப்பாக ஒன்னுக்கு இருக்க இறங்கியாக வேண்டும். தெருவை மீண்டும் ஒருமுறை பார்த்தேன். தெருவில் கயிற்றுக்கட்டிலில் படுத்து கிடந்தவர்கள் நன்றாக குறட்டை விடும் சத்தம் கேட்டது. ஒருவேளை நான் கவனிப்பது தெரிந்து அவன் இறங்காமல் ஓட்டுவது போல நடிக்கிறானோ…?

சைக்கிள் முன்பு போல சீராக இல்லாமல் வளைந்து, வளைந்து சுற்றி வந்தது.சைக்கிள் வித்தைக்காரன் தடுமாறி, தடுமாறி ஒட்டுவது போல எனக்கு பட்டது. சைக்கிள் வித்தைக்காரன் மூங்கில் கம்பை பிடித்தபடியே சைக்கிளை ஒரு இடத்தில் நிறுத்திவிட அவசர, அவசரமாக அவன் கால்களை பார்த்தேன். திண்ணையிலிருந்து நான் பரபரப்பாய் எழுவதை சைக்கிள் வித்தைக்காரன் கவனித்திருக்கவேண்டும். என்னை பார்த்து சிரித்தபடியே அவன் மீண்டும் சைக்கிளை ஒட்ட அரம்பித்தான். மெல்ல,மெல்ல நானும் அந்த சைக்கிள் வித்தைக்காரனின் ஆட்டத்தில் பங்கேற்பது போலிருந்தது.

ஒவ்வொரு முறை அவன் சைக்கிளை ஸ்லோ செய்யும்போதோ, தடுமாறும்போதோ நான் அவன் கால்களை உன்னிப்பாக கவனிப்பதும் பதிலுக்கு அவன் என்னை கேலியாக பார்த்தபடி மீண்டும் சைக்கிளை மிதிப்பதும் ஒரு முடிவற்ற ஆட்டம் போல இருந்தது

இரவின் அடர்ந்த கானகத்தினுள் தண்ணீர் அருந்தும் ஒரு மறிமான் போலவோ வழி தெரியாமல் மரத்தை சுற்றி,சுற்றி வரும் ஒரு மறிமான் குட்டி போலவோ அவன் இருந்தான். மரத்தடியில் உன்னிப்பாக எந்த நேரமும் அதை அடிக்க காத்திருக்கும் சிங்கத்தை போல விழிப்பாக பார்த்துக் கொண்டிருந்தேன். சைக்கிள்வித்தைக்காரன் வேகத்தை குறைக்கும்போதெல்லாம் தூக்க கலக்கத்திலிருக்கும் நான் பதறிப்போய் விழித்தெழும் போதெல்லாம் , என்னை கிண்டல் செய்வது போலிருந்தது அவன் பார்வை. அதுபோன்ற தருணங்களில் அவன் இன்னும் உற்சாகமாய் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தான்.

ட்யூப்லைட் வெளிச்சம் கண்களை வலிக்க வைத்தது. மணியென்னவென்று தெரியவில்லை. இரவின் மடியில் தெரு கிறங்கி கிடந்தது. தூரத்தில் ஒற்றை கூட்ஸ் வண்டி ஓடும் சத்தம் இரவின் அமைதியை கிழிப்பது போலிருந்தது. பின்பனி இறங்குவது உணர முடிந்தது.அப்படியே உறங்கிப்போனேன். கண்விழிக்கும்போது அவன் வேப்பங்குச்சியால் பல் துலக்கியபடியே சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தான். அவன் என்னை கேலியாக பார்ப்பது போல இருந்தது. என்னை நினைக்க அவமானமாகயிருந்தது. எப்படி உறங்கினேன்? பாய், தலையணையை சுருட்டி வீட்டுக்குள் நுழைந்தேன்.

மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது பால்பாண்டி கிண்டல் செய்தான். “நாந்தான் அப்பவே சொன்னேனில்ல… அவன் ஒன்னுக்கு கூட இருக்க இறங்க மாட்டான்”

“அது எப்படிடா முடியும்?”

“அவன் தண்ணி குடிக்கமாட்டான்டா. தண்ணி குடிக்காமா ஒருவாரம் கூட எங்க ஊர்ல சைக்கிள் சுத்தியிருக்கான்.” பால்பாண்டி சொன்னான்.

“அப்படியில்லடா. காலம்பறவே கிளம்பி கக்கூஸ் போயிட்டு வந்துடுவாண்டா” பொன்ராஜ் சொல்ல பால்பாண்டி அதை மறுத்தான்.

எனக்கு குழப்பம் அதிகமானது. இன்று மூன்றாவது நாள். கடைசி இரவு. பேசாமல் நாம இன்னைக்கு கண்முழிச்சு பாக்கலாமே பொன்ராஜ் சொன்னது சரியென்று பட்டது.“முதல்ல நீ தூங்கிடு…நான் கண்முழிக்கறேன். அப்புறம் நான் உன்னை எழுப்பி வுடறேன்..நீ கண்முழிச்சு பார்த்துக்கோ.. ” பொன்ராஜ் இரவு சாப்பிட்டுவிட்டு பாய்,தலையணையுடன் என்வீட்டு திண்ணைக்கு வந்துவிடுவான். இன்று எப்படியும் கண்டுபிடித்துவிடுவோம்.

தெரு முனையில் பாட்டு சத்தம் கேட்டது. “நான் செத்து பொழச்சுவண்டா..எமன பார்த்து சிரிச்சவண்டா….” வழக்கம்போல எம்.ஜி.ஆர் பாடல். அம்பலக்காரர் ஒரு செவ்வந்தி மாலையை சைக்கிள்வித்தைக்காரனுக்கு போட்டு, பத்து ரூபாய் தாளொன்றை அவன் சட்டைப்பையில் திணிப்பது இங்கிருந்து தெரிந்தது. லவுட்ஸ்பீக்கர் பாடல் நின்றது.

“அம்பலக்காரர் அய்யாவுத்தேவர் அன்பளிப்பு பத்துரூபாஏய்ய்ய்…” மைக்செட்காரன் மைக்கில் உற்சாகமாக கத்திக்கொண்டிருக்க, அய்யாவுத்தேவரின் இரண்டாவது பெண் அந்த மாலையுடன் சுற்றும் சைக்கிள்காரனை விட்டு வாசல்படியில் நின்று ரகசியமாக ரசித்துக்கொண்டிருந்தது.

கடைசி நாள் களை கட்டியது. திடலுக்குள் கூட்டம் அதிகமாக இருந்தது. தண்ணீர் நிரப்பப்பட்டிருந்த ஒரு சில்வர் குடத்தை வாயால் கவ்வியபடியே சைக்கிள்வித்தைக்காரன் சைக்கிளை மிதித்தான். கைதட்டல் விசில் காதை கிழித்தது. இருட்ட ஆரம்பித்திருந்தது. திடலின் ட்யூப் லைட்டுகள் எரிய ஆரம்பித்தது. அவன் சைக்கிளின் முன் சக்கரத்தை மட்டும் உயர்த்தி பின்சக்கரத்தின் பேலன்ஸில இப்போது ஓட்டிக்கொண்டிருந்தான். சிறுவர்கள் கைதட்டினார்கள். திடலிலிருந்த கூட்டம் படிப்படியாக வடிய ஆரம்பிக்க அம்பலக்காரார் வீட்டிலிருந்து வழக்கம்போல இட்லித்தட்டு வந்தது. அம்பலக்காரரின் பெண் இட்லித்தட்டை சைக்கிள் வித்தைக்காரனிடம் கொடுத்துவிட்டு களுக்கென வெட்கத்துடன் சிரித்தபடியே வீட்டுக்குள் ஓடியது.

இரவு உணவை சாப்பிட்டு விட்டு திண்ணைக்கு வெளியே வரும்பொது பொன்ராஜ் தலை தெரிந்தது. பொன்ராஜ் எனக்கு பக்கத்தில் திண்ணையில் பாய் தலையணையுடன் அமர்ந்தான். எங்கள் மூவரை தவிர மொத்த தெருவும் உறங்க ஆரம்பித்திருந்தது. சைக்கிள் வித்தைக்காரன் எங்களை பார்த்தபடியே சைக்கிளில் சுற்றிக்கொண்டிருந்தான். இன்று அவனை கண்காணிக்க இரண்டு ஆட்கள் இருக்கிறோம்.

சைக்கிள் வித்தைக்காரன் நேற்று போல சிநேகமாக என்னை பார்த்து சிரிக்கவில்லை. மெளனமாக ஓட்டிக்கொண்டிருந்தான். எனக்கு தூக்கம் வந்தது. பொன்ராஜுக்கு தூக்கம் வந்தால் என்னை எழுப்பிவிட்டு அவன் தூங்க வேண்டும். கண்களை இழுத்துக்கொண்டு சென்றது. எவ்வளவு நேரம் தூங்கினேன் தெரியவில்லை. எல்லாரும் திடலுக்குள் ஓடினார்கள். சலசலவென சத்தம்.

“இதோ இறங்கப் போகிறார்” மைக்செட்டில் அலறியது. வந்த கோபத்தில் பொன்ராஜை அடித்து எழுப்பினேன்.அவன் தூக்க கலக்கத்தில் பேந்த ,பேந்த விழித்தான். திடலுக்கு முன் குவிந்திருந்த கூட்டம் மறைத்தது. அருகே ஓடினேன். சைக்கிள் வித்தைக்காரன் ஒரு பறவை போல இரண்டு கைகளை விரித்தபடி சைக்கிளில் இருந்து குதிக்க மைசெட்காரன் தனியாக வந்த சைக்கிளை பிடித்துக் கொண்டான். சைக்கிள் வித்தைக்காரன் குதித்து, குதித்து திடலை வட்டமாக சுற்றி வந்தான். மூன்று இரவுகளாய் தரையில் படாத அவன் கால்கள் தரையை தொட தயங்குவது போலிருந்தது. இரண்டடிக்கு ஒரு முறை கால்களை தரையில் அழுந்த பதித்து நடனமாடியபடியேவும், அந்தரத்தில் பறப்பது போலவும் சுற்றி,சுற்றி ஓடி வந்துக்கொண்டிருந்தான். மக்கள் ரூபாய், நெல்,அரிசி என போட்டி போட்டப்படி தந்தார்கள்.

ஒரு நீர்ப்பறவையின் தரைப்பயணம் போல் தடுமாற்றமாய் ஆரம்பத்தில் சுற்றி,சுற்றி ஓடியவன் இப்போது சரளமாக கால்களை நிலத்தில் ஊன்றி ஓடிக்கொண்டிருந்தான். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை;இது ஊரறிந்த உண்மையென்று லவுட்ஸ்பீக்கர் அலறியது. சைக்கிள் வித்தைக்காரன் கூட்டத்தில் நின்ற என்னை பார்த்து சிரித்தான். பொன்ராஜ் என்னை பார்த்தான். கோட்டை விட்ட பொன்ராஜ் மீது கடுப்பாக இருந்தது.

மாலை பள்ளிக்கூடம் விட்டு திரும்பும்போது திடல் வெறிச்சோடி இருந்தது.மூங்கில் கம்புகள் நட்டிருந்த இடத்தில் மண் குழிகள் மட்டுமே இருந்தது.மூன்று நாட்களாக தொடர்ச்சியாக உயிர்ப்போடு இருந்த திடல் பார்க்க மயானம் போல தெரிந்தது. அந்த சைக்கிள் வித்தைக்காரன் எப்படி சிறுநீர் கூட கழிக்காமல் மூன்று நாட்களாக சைக்கிள் ஒட்டினான் என்பதை கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போனதில் வருத்தமாயிருந்தது.

கடைசிப்பக்கம் கிழிந்துப்போன மாயாஜால கதையொன்றின் புதிர்த்தன்மையும்,ரகஸ்யங்களும் நிறைந்ததாய் இருந்தது அவனது வருகை யும் பொன்ராஜ் சொன்ன அந்த தகவலும். முக்கியமான அந்த தகவல் பின்னிருந்த ரகசியமொன்றை கண்டுபிடிக்காமல் போனதில் வருத்தமாக இருந்தது.

சைக்கிள் வித்தைக்காரன் ஊரைவிட்டு சென்றிருந்த இரண்டாம் நாள் எனது மாமா வீட்டுக்கு கிளம்பி கொண்டிருந்தேன். அம்மாவுடன் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் அதிகாலை இருட்டில் இறங்கியபோது அவனை பார்த்தேன். அதிசயமாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அதிகாலை இருட்டி ல் அந்த முகமும் உயரமும் தெளிவாகவே அடையாளம் தெரிந்தது. பேருந்து நிலையத்தின் வெளி வாயிலில் இடிந்திருந்த சுற்றுச்சுவர் அருகே குத்துக்காலிட்டு சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தான். சிறுநீர் கழித்து முடித்தவன் பழுப்பேறிய அழுக்கு வேட்டியை கணுக்கால்கள் தெரிய மடித்துக்கட்டி வேகமாக நடக்க ஆரம்பித்தான். சுற்றி ஒருமுறை பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த பழைய துருபிடித்த அட்லஸ் சைக்கிளை காணவில்லை. ஏமாற்றமாக இருந்தது.

நன்றி
என்.விநாயக முருகன்

Monday, October 4, 2010

சாமுத்ரிகா - உயிரோசை சிறுகதை


இந்த வார உயிரோசையில் வெளியான எனது சாமுத்ரிகா என்ற சிறுகதை வாசிக்க...


காசி தியேட்டரில் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பார்த்ததும் சட்டென அடையாளம் கண்டுகொண்டேன். அவராக இருக்குமோ? என்ற கணநேர தயக்கம் கூட எழவில்லை. பத்துவருட இடைவெளியில் மாமாவின் உருவத்தில் எந்த மாற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை. முன் நெற்றி மட்டும் சற்று ஏறி வழுக்கையைக் காட்டியது. முகத்தில் லேசான சுருக்கங்கள். அன்று பார்த்தது போலவே இன்றும் காதோரம் டை அடித்திருப்பார் என்று யூகிக்க முடிந்தது. காபி சாப்பிட்டபடியே ஸ்ரேயா ஸ்டில்களை ரசித்துக் கொண்டிருந்தார். இத்தனை வருடங்களுக்குப் பிறகும் அவரை என்னால் துல்லியமாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததற்கு காரணம் அவரது சில்க் சட்டையோ, தும்பைப்பூ போன்ற வெளுத்த வேட்டியோ,கழுத்தில் சட்டை காலரில் அழுக்குப் படாமல் இருக்க கட்டியிருந்த கர்ச்சிப்போ இல்லை. தியேட்டரில் கண்ணாடிப் பெட்டியில் ‘கந்தசாமி’ பட எழுத்துகளுக்கு நாயகி ஸ்ரேயா நின்றிருந்த போஸ். அதை விழுங்கி விடுவது போல பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணமூர்த்தி மாமாவின் பார்வை. அவரால் மட்டுமே இப்படி உலகத்தில் இருபத்திநாலு மணிநேரமும் பெண்களைப் பற்றியே பேசிக்கொண்டும், ரசித்துக்கொண்டும் இருக்க முடியும்.

ஸ்ரேயா ஸ்டில்களை மறைக்கும்படி அவருக்கு முன்னால் நின்று அவரைப் புன்சிரிப்போடு பார்த்தேன். ஸ்டில்களிலிருந்து கவனம் கலையப்பெற்றவராய், கிருஷ்ணமூர்த்தி மாமா என்னைக் குழப்பமாகப் பார்க்க நான் சிரித்தேன். என் கண்களை ஒருகணம் உற்றுப் பார்த்தார்.

"என்னைத் தெரியலையா மாமா? நான் பாஸ்கி. கும்பகோணம். சாரங்கபாணி கோயில்..."

"டேய்..திருட்டுப் பயலே..முட்டைக்கண்ணா... எப்படியிருக்கடா?"

சந்தோஷத்துடன் கத்தியபடியே வயிற்றில் குத்தியபடி கட்டிப்பிடிக்க, நாலைந்து பேர் எங்களைக் கவனித்துவிட்டு, பிறகு சமோசா சாப்பிடுவதைத் தொடர்ந்தார்கள். என் கைகளைப் பற்றி குலுக்கக் கையெல்லாம் மரிக்கொழுந்து வாசம் ஏறியது.எனக்கு சங்கோஜமாக இருந்தது. மாமா இப்படித்தான். எப்போது பேசினாலும் எட்டூருக்குக் கேட்கும் சத்தத்தில் பேசுவார். வலது காலைத் தரையில் ஊன்றியபடி, இடது காலைப் பின்னாலிருந்த தூணில் சாய்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். இருவரும் காபி சாப்பிட்டபடியே பரஸ்பரம் விசாரிப்புகள், நிறைய நினைவூட்டல்கள். பரஸ்பரம் செல்போன் எண்களைப் பரிமாறிக்கொண்டோம். பேச்சினூடே அவரது கண்கள் முதுகுக்குப் பின்னால் கண்ணாடிப் பெட்டியிலிருந்த ஸ்ரேயா ஸ்டில்கள் மீது அடிக்கடி சென்று வருவதைப் பார்க்க முடிந்தது.

மாமா சிரித்தபடியே, "செமையா இருக்காடா.இடுப்பா அது? பவர் ஸ்டியரிங் போல லட்சணமா இருக்கு.சாமுத்ரிகா லட்சணப்படி" என்றார்.

"என்ன மாமா..இன்னும் உங்க ஆராய்ச்சி முடியலையா? " சிரித்தபடியே கேட்டேன்.

தியேட்டரில் காலைக்காட்சிக்குக் கூட்டம் அவ்வளவாக இல்லை. வெளியே மழை நசநசவென பெய்துகொண்டிருந்தது. தியேட்டர் மாடியிலிருந்து கண்ணாடி ஜன்னல் வழியாகக் கீழே பார்க்கச் சாலையில் மழைத்துளிகள் இறங்குவது தெரிந்தது. சாலையில் சில மனிதர்கள் விரித்த குடைகளைப் பிடித்தபடி சென்று கொண்டிருப்பது தெரிந்தது. அவர்கள் முகம்,உடல் தெரியவில்லை. சாலையில் குடைகள் நகர்ந்து செல்வது பெரிய சைஸ் ஆமை ஓடுகள் நகர்ந்து செல்வது போல இருந்தது. காலையிலிருந்து விடாமல் தூறிக்கொண்டிருக்கும் மழையின் காரணமாக இன்றைய தினம் மகா சோம்பலுமாய், அலுப்புமாய் இருந்தது. அலுவலகம் செல்லவில்லை. ரூமில் தனியாக இருப்பது போரடிக்க, பக்கத்திலிருந்த தியேட்டரில் காலைக்காட்சிக்கு கிளம்பி வந்து விட்டேன். சினிமா இடைவெளியில் வெளியில் வந்த என் கண்களில் கிருஷ்ணமூர்த்தி மாமா தெரிந்தார். தியேட்டரில் இடைவேளை பெல் ஒலிக்க, உள்ளே நுழைந்தோம். எனது இருக்கை பி-3. மாமா டி-5ல் அமர்ந்திருந்தார். தியேட்டரில் கூட்டம் இல்லாததால் நிறைய சீட்கள் காலியாகவே இருந்தன. நான் மாமா பக்கத்து சீட் காலியாகவே இருந்தது. அவரது சீட் பக்கத்தில் நான் அமர்ந்துகொண்டேன்.

"இன்னுமா கல்யாணம் பண்ணாம இருக்கே?" மாமா என்னைப் பார்த்துக் கேட்டார்.

"வீட்டுல பார்த்திக்கிட்டு இருக்காங்க மாமா. திருச்சியிலருந்து நேற்றுக்கூட ஒரு வரன் வந்துச்சு. முடிஞ்சுடுமுனு நினைக்கிறேன்" சொன்னேன்.

"சென்னைல எங்க மாமா இருக்கறீங்க?"

"போரூர்" என்று ஒற்றைச் சொல்லை உதிர்த்துவிட்டு மாமா அமைதியாகப் படம் பார்த்துக் கொண்டிருந்தார். திரையில் ஸ்ரேயா அபாயகரமாய் ஆடை அணிந்து ஆடிக்கொண்டிருக்க, மாமா வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருப்பது தியேட்டர் இருட்டிலும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. இந்த சென்னை நகரம் விசித்திரமானது. ஒரே ஊரிலிருந்து சென்னைக்குப் புலம்பெயர்ந்து வந்துள்ளோம். இதே சென்னையில் நானும் மாமாவும் பத்து வருடங்களாக வசித்து வருகிறோம். இதுவரை ஒருவர் கண்ணில் ஒருவர் தென்பட்டதில்லை. இவ்வளவுக்கும் போரூருக்கும், ஜாபர்கான்பேட்டைக்கும் பத்து கிலோமீட்டர் தூரம் கூட இல்லை. சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமே நிகழும் விசித்திரங்களில் இதுவும் ஒன்று.

திரையில் விக்ரம் பத்துப் பதினைந்து ஆட்களை சேவல் வேடம் போட்டு அடித்து துவைத்துக் கொண்டிருந்தார்.மாமா அசுவாரசியமாக கொட்டாவி விட்டார். ஸ்ரேயா வந்த காட்சிகளில் இருந்த மலர்ச்சி முகத்தில் இல்லை. பெண்களைப் பற்றியும், அந்த மாதிரி சப்ஜெக்ட்டிலும் மாமாவுக்கு பி.எச்.டி. பட்டம் கொடுக்கலாம்.அந்தளவுக்கு அவருக்கு விஷயம் தெரியும். அந்தக் காலத்தில் அரண்மனைகளில் பெரிய,பெரிய ஓவியர்கள் எல்லாம் இருந்தார்கள் என்று கதைகளில் படித்திருப்பீர்கள். அவர்களில் சிலர் பெண்ணின் தலைமுடியையோ,நகத்தையோ வைத்தே அவளது முழு உருவத்தை வரையும் ஆற்றல் கொண்டவர்கள் என்றும் படித்திருப்பீர்கள். காலப்போக்கில் அந்த ஆற்றலுடைய ஓவியர்கள் படிப்படியாக மறைந்து அதுபோன்றதொரு கலை முற்றிலும் அழிந்திருக்கலாம். ஆனால் மாமாவைப் பார்க்கும் போதெல்லாம் அது முற்றிலும் அழியவில்லை என்றே நினைக்கத்தோன்றும். மாமாவை வுமனைசர் என்று சொல்ல முடியாது. ஆனால் பெண்களின் சகலமும் அவருக்கு அத்துபடி. சாமுத்ரிகா லட்சணம் என்ற கலையை கரைத்துக் குடித்தவர் மாமா. ஒரு பெண்ணின் முகத்தையோ,முகத்தில் இருக்கும் மூக்கையோ, நெற்றிமேட்டையோ, கன்னத்தில் விழும் குழியையோ அவ்வளவு ஏன் அவள் நடையையோ, கால் கட்டைவிரலை வைத்தோ கூட அவள் முழு ஜாதகத்தையும் சொல்லிவிடுவார். உச்சபட்ச ஆச்சர்யமாக அந்தப் பெண்ணின் பெயரையோ கூட சொல்லி விடுவார். நம்புங்கள். உண்மை. பெரும்பாலும் அது சரியாகவே பொருந்தும்.

எனது பள்ளி நண்பர்களுடன் தேநீர்க்கடையில் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருப்பேன். மாமா சைக்கிளைத் தள்ளிக்கொண்டே வருவார். ஒரு ‘டீ சொல்லுடா’ என்று என்னை அதட்டிவிட்டு பெஞ்சில் அமர்வார். தேநீர் அருந்திக் கொண்டிருப்போம். ஏதாவது ஒரு பெண் தேநீர்க்கடையை கடந்து செல்வாள். அவள் முகம் கூட பார்த்திருக்கமாட்டார். அப்படி எதைத்தான் பார்த்துச் சொல்வாரோ? அவள் பெயர் மலரில் ஆரம்பிக்கும். அநேகமாக அவள் வீட்டிற்குப் கடைசிப்பெண்ணாக இருக்க வேண்டும் என்று சொல்வார். விசாரித்தால் அந்தப் பெண் பெயர் மல்லிகாவாக இருக்கும். சொன்னது போலவே அந்தப் பெண் வீட்டிற்கு கடைசிப்பெண்ணாக இருப்பாள். குத்துமதிப்பாக அடித்து விடுகிறாரோ என்று கூட ஆச்சர்யமாக இருக்கும். பெண்களை எப்படிக் கவர்வது என்று டிப்ஸ் தருவார். என்னடா நாற்பது வயதில் இப்படி பள்ளிக்கூட பசங்களிடம் போய் சகவாசம் வைத்துக் கொள்கிறோமே. அதுவும் அந்த மாதிரி விஷயங்களை எல்லாம் பேசுகிறோமே என்று துளிக்கூட மாமாவிடம் அசூயை இருந்ததில்லை.

"காமசூத்ராவில் இருக்கும் கஷ்டமான போஸ் எது தெரியுமா?" எங்களைப் பார்த்துக் கேட்பார்

"இது என்ன குவிஸ் புரோகிராம் மாதிரி கேட்கிறார்?" எனக்குக் கடுப்பாக வரும். ஆனாலும் அது என்ன போஸ் என்று தெரிந்து கொள்ள ரகசியமாக ஆசை இருக்கும். மாமா எங்களை அற்பமாகப் பார்த்து சிரித்தபடியே விளக்க ஆரம்பிப்பார். டீக்கடை வைத்திருக்கும் மாணிக்கம் திட்டுவார்.

"ஏலே அறிவிருக்கா? சின்னப் பசங்கட்ட பேசுற பேச்சா?" கத்துவார்.

"போடா அறிவுகெட்டவனே.இதைவிட உலகத்துல உருப்படியான விஷயம் என்ன இருக்கு? ஏதோ நமக்குத் தெரிஞ்ச அனுபவத்தை சொல்லித்தரோம். பின்னால இவனுங்களுக்கு உதவுமில்லை."

டீக்கடை மாணிக்கத்தைப் பார்த்து மாமா சொல்வார்.

"நீ வூட்டுல உன் பொண்டாட்டிகிட்ட செய்யாததையா நான் சொல்லித் தரேன். மாமா கேட்க, ஏண்டா இவரிடம் வாயைக்கொடுத்தோம் என்றிருக்கும் டீக்கடை மாணிக்கத்துக்கு.

சபை கலையும் நேரத்தில் மாமா டீக்கடைப் பக்கத்தில் இருக்கும் பூக்கடையில் குண்டுமல்லி ஒரு முழம் வாங்கிக் கொள்வார். டீக்கடையில் காராசேவு பொட்டலமும் வாங்கிக் கொள்வார். உற்சாகமாக சைக்கிளை மிதித்தபடி வீட்டுக்குச் செல்வார். மாமா தலை மறைந்ததும் டீக்கடை மாணிக்கம் எங்களைப் பார்த்து ஒரு மாதிரி சிரிப்பார். "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்" என்று சொல்லிவிட்டு விஷமத்தோடு சிரிப்பார். டீக்கடை மாணிக்கம் சொல்வதன் அர்த்தம் வெகுநாள் வரை எனக்குப் புரியவேயில்லை. ஏதோ அறுக்க..ஆயிரத்தெட்டு என்று ரைமிங்காகச் சொல்வது மட்டுமே சுவாரசியமாக இருக்கும். அடுத்த நாள் மாலை மீண்டும் டீக்கடையில் சபை கூடும். மாமா கொஞ்சம் கூட லஜ்ஜையில்லாமல் முதல் நாள் அவர் வீட்டில் நடந்த விஷயங்களைச் சொல்வார். எல்லாமே பச்சை,பச்சையாக இருக்கும். டீக்கடை மாணிக்கம் தலையில் அடித்துக்கொள்வான். நாளடைவில் எனது பள்ளிக்கூட நண்பர்கள் மாமாவை ஒரு குரு ஸ்தானத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தார்கள். மாமா தலைக்குப் பின்னால் இருந்த ஒளிவட்டம் நாளுக்கு,நாளுக்கு விரிவடைந்து கொண்டே போனது.

படம் முடிந்து வெளியே வந்தோம். வெளியே மழைத் தூறலாக பெய்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் இரண்டு பக்கமும் தண்ணீர் வழிந்து சென்று கொண்டிருந்தது. காசி தியேட்டர் எதிரே இருந்த சிக்னல் மந்தமாய் இயங்கியது. ஓரிரு டூவீலர் ஓட்டுநர்கள் மட்டுமே மழையில் நனைந்து சென்று கொண்டிருந்தார்கள். பெரும்பாலானோர் டூவீலர்களை சாலையோரம் நிறுத்திவிட்டு கடைகளின் முன் ஒதுங்கியிருந்தார்கள். சிலர் சாலையோரத் தேநீர்கடைகளில் நின்று டீக்குடித்து கொண்டிருந்தார்கள். எனக்கு சாரலுக்கு இதமாக தம்மடிக்க வேண்டும் போல இருந்தது. மிதமாய் பசியெடுத்தது. மாமா ஏதாவது சாப்பிட்டுப் போகலாமென்று சொன்னார். திரையரங்கு பக்கத்திலேயே சரவணபவன் இருந்தது. நுழைந்தோம். மாமா அவருக்கு மசால் தோசை ஆர்டர் சொல்ல, நான் புரோட்டா சொன்னேன். ஹோட்டலில் ஆட்கள் மந்தமாய் இயங்கிக் கொண்டிருந்தார்கள். மழை வந்தால் மனிதர்கள் ஏன் சற்று மந்தமாய் மாறுகிறார்கள் என்று யோசித்தேன். இயந்திரத்தனமான நகர வாழ்க்கையின் தேர்ச்சக்கரம் சற்று வேகம் குறைந்திருப்பதைப் பார்க்க அழகாக இருந்தது.

எங்கள் எதிரே நாலு டேபிள்கள் தள்ளி ஒரு பெண் அமர்ந்திருந்தாள். அவள் தலைமுடி காற்றில் அலை அலையாக பறந்து கொண்டிருந்தது. முடியை மிக நேர்த்தியாக, அதிக சிரத்தையுடன் ஸ்ட்ரெயிட் பண்ணியிருப்பாள் என்று தோன்றியது.அவள் நிமிடத்திற்குப் பத்து முறை நெற்றியில் விழும் தலைமுடியை இடது கையால் ஒதுக்கிவிடுவது பார்க்க அழகாக இருந்தது. அவள் பக்கத்தில் அமர்ந்திருக்கும் இன்னொரு பெண் அவளது தோழியாகவோ, அக்காவாகவோ, தங்கையாகவோ இருக்கலாம். அவளும் அழகாக இருந்தாள். இரண்டு பேரில் யார் பேரழகி என்று போட்டியே வைக்கலாம். மாமா இரண்டு பேரையுமே ரசித்துக்கொண்டிருந்தார்

மாமா அடிக்கடி சொல்வது நினைவுக்கு வந்தது. கோரை முடி குடி கெடுக்கும். சுருட்டை முடி வாழவைக்கும். கூடவே சங்கு மாதிரி கழுத்திருக்கும் பெண்களைக் கல்யாணம் செய்தால் யோகம் அடிக்கும் என்பார். நீளமான மூக்கிருந்தால் செல்வம் நிறைய இருக்கும் என்பார். எனக்குக் குழப்பமாக இருக்கும்.எங்கள் தெரு முனையில் சதா சர்வநேரமும் ‘பசிக்குது...பசிக்குது’ என்று சுற்றிக் கொண்டிருக்கும் பெண்ணின் மூக்கு கூட நீளமாக இருப்பதாக பட்டது. ஒருநாள் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு என்ன தோன்றியதோ அன்றிலிருந்து என்னிடம் பிச்சை கூட கேட்பதில்லை.

நான் கல்லூரி சேர்ந்திருந்தபோது மாமா முன்பை விட மோசமானவராக மாறியிருந்தார். எப்போது பார்த்தாலும் செக்ஸ் ஜோக்குகள், இரட்டை அர்த்த வசனங்கள். அத்தை வீட்டில் இல்லாதபோது பீர் பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு என்னையும், என் நண்பர்களையும் வீட்டுக்கு அழைப்பார். மொட்டை மாடியில் அவருடன் பீர் அடித்தபடி ஊர்க்கதைகள் பேசுவோம். பலான படம் பார்க்கச் சென்று போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கி திரும்பிய பி.டி வாத்தியாரைப் பற்றி சிரிக்க, சிரிக்க, பேசுவோம். எங்கள் ஸ்கூல் பிசிக்ஸ் வாத்தியார் தன்னிடம் டியூசன் படிக்க வந்த பெண்ணை தஞ்சாவூர் அழைத்துச் சென்று சினிமா பார்த்து திரும்பியது. எல்லாரும் சிரிக்க, சிரிக்க மற்றவர்கள் அந்தரங்களை வம்புக்கிழுத்து ரசித்துக் கொண்டிருப்போம். பேச்சின் இறுதியில் எப்படியாவது அவரது ஆராய்ச்சியைக் கொண்டுவந்துவிடுவார். மாமா எங்களிடம் சமர்ப்பிக்கும் அவரது ஆராய்ச்சிக் கட்டுரையில் நாளுக்கு நாள் புதுப்புது கண்டுபிடிப்புகளும், நுண்மையான தகவல்களும் பெருகி கொண்டே சென்றது. மூக்கு நுனி கூராக இருந்தால் அதி புத்திசாலியாக இருப்பார்கள் என்பார். எலி மூக்கு போல லேசாகத் தூக்கி இருந்தால் "அந்த" விசயத்தில் அதிக ஆர்வம் இருக்கும் என்பார். என் நண்பர்கள் வாயைப் பிளந்துகொண்டு கேட்பார்கள்.

"சாமுத்ரிகா லட்சணம் என்ன சொல்லுதுன்னா கால் சுண்டு வெரலு தரையில படணும். தரையில படாம தூக்கிட்டு நின்னா அவ குடும்ப வாழ்க்கைக்கு ஒத்து வரமாட்டா. அப்புறம் கால் கட்டைவெரலு வளைஞ்சிருந்தா அவளுக்கு ரெண்டு புருஷன் இருப்பாங்க..." மாமா சொல்வதை என் நண்பர்கள் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

"காலு இல்லாத பொண்ணுங்கள பத்தி உங்க சாமுத்திரிகா லட்சணம் என்ன சொல்லுதாம்?" நான் கிண்டலாய்க் கேட்பேன்.மாமாவுக்கு சுள்ளென்று கோபம் வரும்.

"நீ சின்ன பையன்டா. மீசை கூட மொளைக்கலை. இதெல்லாம் ஆயிரம் ஆயிரம் வருசமா அனுபவித்து எழுதுனது. உனக்குப் புரியாதுடா.நீ இப்பதான் பால்குடியை மறந்திருப்பே." மாமா சிரித்தபடியே சொல்வார். நண்பர்களும் ஆரவாரமாக மாமாவுடன் சேர்ந்துகொண்டு சிரிப்பார்கள்.

மாமாவுக்கு எப்படிப் பேசி எதிராளியை அடித்து வீழ்த்துவது என்பது நன்றாகவே தெரியும். மீசை முளைக்காத முகத்தைக் கிண்டல் செய்தால் அதன் மூலம் என் சுயத்தைக் காயப்படுத்தி என்னைத் தோற்கடித்துவிடலாம் என்பது அவருக்குத் தெரியும். என்னுடைய மற்ற நண்பர்கள் மாமாவுடன் சேர்ந்துக்கொண்டு சிரிப்பதன் காரணம் அவர்கள் மீசை முளைக்காத லிஸ்ட்டிலிருந்து அவசர அவசரமாக வெளியேறி விட்டேயாக வேண்டும் என்ற வேட்கையில் இருந்திருக்கலாம். மாமாவின் கட்சியில் சேர்ந்து அதன் மூலம் தாங்களும் பெண்கள் குறித்த அனைத்து விஷய ஞானங்களும் நிரம்பியவர்கள் என்று காட்ட விரும்பியிருக்கலாம். எனக்கு எரிச்சலாக வரும். மாமாவை ஒருமுறை கூட என்னால் பேசி ஜெயிக்க முடிந்ததில்லை. "இந்த ஆராய்ச்சியெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம். எவனோ பைத்தியக்காரன் அந்தக் காலத்துல எழுதியிருக்கணும். இதை எழுதினவன் நிச்சயம் செக்சுவல் பெர்வெர்ட்டாகதான் இருக்க வேண்டும். அதேநேரத்தில் மனதின் இன்னொரு மூலை ரகசியமாக மாமா சொன்னதை ரசிக்கவும், ஆராய்ச்சி செய்யவும் தூண்டும். குறிப்பாகத் தனிமையில் இருக்கும்போது பெண்களைப் பற்றி மனதில் கிளர்ச்சி எழும்போது அவர் சொன்ன அனுபவங்களும், கதைகளும் மண்டைக்குள் இடைவிடாது மோதிக்கொண்டே இருக்கும். பெண்களுக்கு காலில் நடுவிரலுக்கு அடுத்த விரல் ஒட்டியிருந்தால் பணம் கொட்டுமென்பார் மாமா. இப்போதும் நகரப் பேருந்திகளிலோ, சினிமா தியேட்டர்களிலோ, சாலை நடைபாதைகளிலோ நடந்துபோகும் பெண்களை எல்லாம் பார்க்கும்போதும் அவர்களது கால் பக்கம் என் கண்கள் ரகசியமாக செல்லும். நாளடைவில் ஒன்று எனக்குத் தெளிவாகப் புரிந்தது. மாமாவைப் பார்க்கும்போதெல்லாம் அவரது பேச்சை எதிர்க்கவேண்டும் என்று ஏனோ நான் விரும்புகிறேன். அவர் இல்லாத நேரங்களில் அவர் சொன்ன வித்தைகளையும், ஆராய்ச்சிகளையும் பற்றியுமே அதிக நேரம் நான் சிந்தித்துக் கொண்டிருக்கின்றேன். ஏன் இந்த முரண்பாடு என்று தெரியவில்லை.

மாமாவைப் பார்த்தேன். மாமா உற்சாகமாய் காபியை டம்ளருக்கும், டபராவுக்குமாய் மாற்றிக் கொண்டிருந்தார். எதிரே சாலையில் சிக்னலுக்குக் காத்திருந்த ஏஸி.பஸ்ஸை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். மழைத்துளிகள் பேருந்தின் மீதிருந்து வழிந்து கொண்டிருந்தன. மழைக்காலத்திலும் ஏ.ஸி பஸ்களில் பயணம் செய்கிறவர்களைப் பார்க்க வினோதமாக இருந்தது. மாமா என்னைப் பார்த்து கண் சிமிட்டினார். அவர் பார்வை என்னிடம் "அந்த இரண்டு பெண்களைப் பார்த்தியா? அவர்களது ஜாதகமே என் கையில்." என்பது போல இருந்தது. அந்த பெண்களைப் பற்றி இப்போது எதையாவது அளந்துவிட போகின்றார் என்று பட்டது. நான் மறுத்துப் பேசினால் அவர் ஏடாகூடமாக ஏதாவது சொல்லுவார். அல்லது என்னை கிண்டல் செய்து என் வாயை எப்படியும் அடைத்துவிடுவார். மாமா எதிர்ப்புறம் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜீன்ஸ் போட்ட பெண்ணை விழுங்கி விடுவது போல பார்த்தபடியே காபி குடித்துக்கொண்டிருந்தார். அந்தப் பெண் முடியை சுருள்,சுருளாக கர்லிங் செய்திருந்தாள். எனக்குச் சிரிப்பாக வந்தது. "அறுக்க மாட்டாதவன் இடுப்பைச் சுற்றி ஆயிரெத்தெட்டு கருக்கருவாளாம்." டீக்கடைக்காரன் சொல்லும் வாக்கியம் நினைவுக்கு வந்தது. மாமாவைப் பார்த்தேன்.

நான் தஞ்சாவூர் கல்லூரியில் படிக்கும் போதுதான் அது நடந்தது. நன்றாக நினைவுள்ளது. கடைசி செமஸ்டருக்காகத் தஞ்சாவூரிலேயே ரூம் எடுத்து கல்லூரி நண்பர்களோடு தங்கிவிட்டேன். எப்போதாவது மட்டுமே கும்பகோணம் செல்வதுண்டு. அப்படி ஒருமுறை கும்பகோணம் சென்றபொழுது ஊரிலிருந்த பள்ளி நண்பர்கள்தான் அந்தத் தகவலை என்னிடம் சொன்னார்கள். விஜயலட்சுமி அத்தை யாருடனோ ஓடிப்போய்விட்டாள் என்று சொன்னார்கள். என்னால் நம்பமுடியவில்லை. டீக்கடை மாணிக்கம் என்னைப் பார்த்து அதே விஷமத்தோடு சிரித்தார். மாமாவை ஊருக்குள் பார்க்க முடியவில்லை. அவர் யாரிடமும் சொல்லாமல் ஊரை விட்டு எங்கோ போய்விட்டதாகச் சொல்லிக்கொண்டார்கள். ஊருக்குள் கிருஷ்ணமூர்த்தி மாமாவைப் பற்றி எல்லாரும் ஒரு மாதிரியாகப் பேச ஆரம்பித்திருந்தார்கள். எனது மனதில் மாமாவின் தலைக்குப் பின்னாலிருந்த ஒளிவட்டம் மங்கலாகத் தொடங்கியது. தஞ்சாவூருக்கு மீண்டும் கிளம்பி வந்துவிட்டேன். இறுதியாண்டு அரியர்ஸ்களை க்ளியர் செய்யும் முயற்சியில் மூழ்கியிருந்தேன். நான் கல்லூரி முடித்துப் பட்டமேற்படிப்புக்கு சென்னை வந்து ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து காலம் உருண்டோட இத்தனை வருடம் கழித்து இப்போதுதான் இதோ காசி தியேட்டரில் சந்தித்து ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்.

"கோரை முடி தரித்திரம்டா.. சுருள் முடிதான் அதிர்ஷ்டமுனு சாமுத்திரிகா லட்சணம் சொல்லுது." நான் எதிர்பார்த்தது போலவே மாமா என்னிடம் சொன்னார்.

"என்ன மாமா..இன்னும் அடிச்சு வுடுற பழக்கம் போகலையா" கிண்டலுடன் கேட்டேன்.

"அடப் பயலே என் அனுபவம் உன் வயசுடா. சுருள்முடி பத்தி சாமுத்திரிகா லட்சணத்துல என்ன சொல்றாங்க தெரியுமா?" சொல்லிவிட்டு மாமா காபியை உறிஞ்சினார். மாமாவுக்கு எப்படி பதிலடி தருவது என்று எனக்குத் தெரியவில்லை. நான் ஒன்றும் சின்னப் பயல் இல்லை. மனதின் ஒரு மூலை என்னை வேகமாகப் பதில் தர தூண்டியது. சுள்ளென்று சூடாக அந்தப் பதில் இருக்க வேண்டும். அனிச்சையாக என்னை மீறி என் வாயிலிருந்து வந்த கேள்வியைக் கேட்டேன்.

"எதுனாச்சும் அடிச்சு வுடாதீங்க மாமா. சுருள்முடி இருக்கறவங்க எல்லாம் குடும்பப் பொண்ணுங்களா?" நான் முடிக்கவில்லை.

சட்டென மாமா முகம் மாறியது. அவரது முகம் ஒருகணம் இருண்டது போல தெரிந்தது. அதுவரை அவர் முகத்திலிருந்த மலர்ச்சி சட்டென மறைந்து இறுக்கமாக அவர் என்னைப் பார்த்தது போல தோன்றியது. கடுப்பில் நான் சற்று குரலை உயர்த்திப் பேசியது கிட்டத்தட்ட கத்தியது போல உணர்ந்தேன். பார்சல் கட்டிக்கொண்டிருந்த இரண்டொரு சர்வர்கள் என்னை விநோதமாகப் பார்த்தார்கள். பில்லைக் கொடுத்துவிட்டு அமைதியாக என்னுடன் வெளியே வந்தவர் காசி தியேட்டர் பஸ் நிறுத்தம் வரும்வரை எதுவும் பேசவில்லை. பஸ் வந்தவுடன், "பார்க்கலாம் மாப்பிள்ளை" என்று என் முகத்தைக் கூடப் பார்க்காமல் சொல்லிவிட்டு பஸ்சில் ஏறினார். தவறாக ஏதாவது சொல்லி விட்டேனா? குழப்பமாக இருந்தது. ஒருகணம் டீக்கடை மாணிக்கம் முகம் நினைவுக்கு வந்தது. விஜயலட்சுமி அத்தையை இழுத்துக் கொண்டு ஓடின சைக்கிள் கடைக்காரன் முகம் மங்கலாக வந்து மறைந்தது. குறிப்பாக, விஜயலட்சுமி அத்தையின் நெற்றியில் விழும் அந்த அழகான சுருள்முடிகள் வந்துப் போனது.


நன்றி
என்.விநாயக முருகன்