(இயக்குநர் மஜீத் மஜிதியின் பிறந்த நாள் ஏப்ரல் 17 . எனது அலுவலகத்தின் பிளாக்கில் மஜீத் மஜிதி ஸ்பெஷலாக எழுதப்பட்ட கட்டுரை)
பொதுவாக தமிழ்படங்களில் சோக உணர்வூட்டும் காட்சிகளென்றால் ஹீரோவுக்கு கேன்சர். ஹீரோவின் அப்பாவுக்கு கண் தெரியாது. ஹீரோ அம்மா அழுவார். வீட்டு நாய் அழும். பூனை அழும். இவ்வளவு ஏன் படத்திற்கு டிக்கட் வாங்க கவுண்டருக்குள் கையை விட்டால் டிக்கட் தருபவர் கூட பிழிய,பிழிய அழுதபடியே டிக்கட் தருவார். விளிம்பு நிலை மனிதர்களை, அடித்தட்டு மக்களின் வாழ்வை சொல்வதென்றால் அநியாயத்துக்கு கேரக்டர்களை அழ விடுவது கூட ஒரு வித எதார்த்த மீறலே.
மஜீத் மஜீதி படங்களில் விளிம்பு நிலை மனிதர்களின் வாழ்க்கை பட்டவர்த்தமாக சொல்லப்பட்டிருக்கும். அதேநேரம் அந்த மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒருவித கவித்துவமோ, அழகியலோ ,நகைச்சுவையோ கலந்திருக்கும். மனிதநேயம் முற்றிலும் பட்டுப்போய் விட்டதோ என்று நினைத்துக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு பூ பூப்பதை காட்டுவார். கல்யாண்ஜி கவிதைகள் போல
கரீமிற்கு ஒரு மகன் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள். மனைவி நர்கீஸ். பெரிய மகள் செவித்திறன் இழந்தவள்.கரீம் ஒரு பொறுப்பான கணவன். ஒரு நடுத்தர குடும்பத்தின் தலைவன். ஊரின் ஒரு நெருப்புக் கோழிப்பண்ணையில் வேலை. கோழிகளுக்கு தீவணமிடுவது, அதன் முட்டைகளை சேகரிப்பது இப்படி ஜீவன் ஓடுகிறது. ஒரு நாள் பண்ணையில் வேலை செய்துக்கொண்டிருக்கும்போது இன்னொரு பணியாளர் வருகிறார். உனது மனைவி உன்னை தேடிக் கொண்டிருக்கிறாள். உனது மகளின் ஹியரிங் எய்டு கருவி காணாமல் கிணற்றில் விழுந்துவிட்டதாம் என்று சொல்கிறார். கரீம் வீட்டிற்கு அவசரமாக செல்கிறார். கரீமின் மகன், மகள்கள் மற்றும் அவன் வயதை ஒத்த சில சிறுவர்களும் சேர்ந்து அவர்களின் வீட்டின் அருகில் உள்ள ஒரு பெரிய பாழடைந்த கிணறு போன்றதொரு நீர்த் தொட்டியை சுத்தம் செய்து அதில் தங்க மீன்களை வளர்க்க செய்யும் முயற்சியில் அந்த தொட்டியில் விழுந்திருப்பதை அறிகிறார். இந்த மாதிரி சாக்கடையில் விளையாடதீர்கள். கிருமி பரவும். சாக்கடையில் மீன்கள் எல்லாம் வளர்க்க முடியாது. ஜூரம் வந்து படுத்துகிட்டா, என்று பொறுப்பான தகப்பனாக சொல்லிவிட்டு, தானும் இறங்கி ஒருவழியாக கருவியை கண்டுபிடிக்கின்றார். ஆனால் கருவி வேலை செய்யாமல் போனதை அறிந்து, மகன் மீது கோபம் கொள்கிறார்.
இந்நிலையில் கரீமின் பராமரிப்பிலிருக்கும் கோழி ஒன்று பண்ணையிலிருந்து தப்பி விடுகிறது. அதற்கு கரீமின் கவனக் குறைவே ஒரு காரணமென சொல்லப்பட, எப்படியும் வேலை பறிபோய்விடுமென நினைக்கிறார், பின் வேலையிலிருந்தும் விலகுகிறார். வீட்டிற்கு சோகமாக வரும் கரீம் என்ன நடந்தென்று கேட்கும் மனைவியிடம் எனக்கு வேலை பிடிக்கவில்லை. ஊமை நெருப்புக்கோழிகளிடம் வேலை செய்ய பிடிக்கவில்லை. சம்பளம் நல்லா இல்லை. வேறு வேலை தேடப்போகிறேன் ஏதேதோ சொல்லி விடுகிறார். ஹியரிங் எய்டை அருகிலிருக்கும் நகரத்திற்கு எடுத்துக்கொண்டுசென்று அதனை சரிசெய்ய முயலும் அவனுக்கு அதை சரிசெய்ய இரண்டு மாதங்களாகும் என்று பதில்வருகிறது. புதிதாக வாங்கலாமென்றால் யானை விலை,குதிரை விலை. என்ன செய்வது என்று சோகமாக வெளியே வரும் கரீமின் டூவீலரில் ஒருவர் ஏறிக்கொண்டு ஒரு இடத்தில் இறக்கிவிடுமாறு சொல்கிறார். அதற்கு பணமும் தருகிறார். அந்த நகரத்தில் அதையே ஒரு தொழிலாக பலர் செய்வதை கவனிக்கிறார். அதையே தொடர்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக நகரத்திலிருந்து கிடைக்கும் பொருட்களையும் பணத்தையும் கொண்டு தனது வீட்டை சிறிது சிறிதாக புணரமைத்து வருகிறார். இதற்கிடையில் ஒருமுறை வீட்டின் பின்புறத்தில் பழைய தட்டுமுட்டு சாமான்களை சேகரித்துக் கொண்டிருக்கும்போது கரீமிற்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. கால் எலும்பு முறிந்து படுக்கையில் விழுகிறார்.
அதனால் மனைவியும் காது கேளாத மகளும் கீரைகளை பறித்து அருகிலுள்ளவர்களுக்கு விற்று சம்பாதிக்கின்றனர். மகன் வேலைக்கு போகிறான். ஆசையாய் செய்து வைத்த கதவு விலைபோகிறது. எல்லாவற்றையும் படுத்தபடியே பார்த்து கண்ணீர்விட்டபடியே கரீம். சூழ்நிலை ஒரு மனிதனை புரட்டி எடுக்கும் காலம். மைத்துனன் உதவியுடன் மருத்துவமனைக்கு சென்றுவரும் வழியில், கரீமுடன் அவனது மகனும் அவனது நண்பர்களும் பிரயாணப்படுகிறார்கள். அந்த வண்டியிலிருக்கும்
பூந்தொட்டிகளை வீடுகளில் இறக்கிவைக்க சிறுவர்களுக்கு அதற்கு ஊதியமாக தங்க மீன்கள் கொடுப்பதாக சிலர் சொல்கிறார்கள். அதே வண்டியில் ஒரு பிளாஸ்டிக் தொட்டியில் சில தங்க மீன்களையும் சுமந்தபடி வருகிறார்கள். தங்க மீன்களை வளர்ப்பது சிறுவர்களின் நெடுநாள் கனவு.
வழியில் ஒரு வீட்டில் தொட்டிகளை இறக்கும்போது அந்த பிளாஸ்டிக் தொட்டி உடைந்து தண்ணீர் வழிய ஆரம்பிக்கின்றது. பதறிப்போய் அருகிலுள்ள வாய்க்காலில் உள்ள நீரை அள்ளி நிரப்பும் நோக்கில் அங்கே தூக்கிக்கொண்டு ஓடுகிறார்கள், சிறுவர்கள். பிடிநழுவி கீழே விழுந்து உடைந்த பிளாஸ்டிக் தொட்டியிலிருந்து அனைத்து மீன்களும் கீழே சிதறித்துடிக்கிறன. கனவு மீன்கள் தரையில் துடிப்பதைப்பார்த்தபடியே சிறுவர்கள் அழுதுகொண்டே கைகளால் வாய்க்காலில் தள்ளிவிடுகிறார்கள்.
பின் ஒரேயொரு மீனை ஒரு பையில் போட்டுக்கொண்டு சோகமாய் திரும்பும் சிறுவர்களை தெம்பாக்க கரீம் ஒரு பாடல் பாடுகிறார். பாடலினூடே ஊர் வந்து சேர்கின்றனர். கரீமின் மகன் ஒற்றை மீனை தங்களது சுத்தம் செய்து வைத்திருக்கும் தொட்டியில் விட ஓடுகிறான். தனியே அமர்ந்திருக்கும் கரீம் வீட்டு ஜன்னல் வழியாக ஒரு குருவி நுழைந்து அலைமோதுகிறது. கதவை திறந்து அதற்கு வழிக்காட்டுகிறார். அவனது பழைய நெருப்புகோழி பண்ணையிலேயே மறுபடியும் வேலையில் சேர அழைப்பு வருகிறது. காலொடிந்த கரீம் உள்ளே இருந்தபடியே செய்தியை கேட்கிறார். வெளியே நிற்கும் மனிதன் வீடு மதில் மீது ஒரு இனிப்பு பொட்டலத்தை வைத்துவிட்டு செல்கிறார்.
கரீம் ஒருவித சலமனற்ற முகத்துடன் ஒடிந்த காலுடனும் கோழிப்பண்ணை செல்கிறார். அங்கு ஒரு நெருப்புக்கோழி நர்த்தனமாடுவதை பார்க்கிறார்.கரீமின் முகத்தில் நம்பிக்கை ஒரு ஒளியைப்போல மெல்ல பரவுகிறது. இசையோடு எழுத்துக்கள் மேல் நோக்கிநகர படம் முடிகிறது.
இந்த படத்தில் ஆயிரம் கவிதைகள் உள்ளன. அப்பாவின் மனது குளிர காதுகேட்கிறது என்று பொய் சொல்லும் மகள், அதனால் மகிழும் கரீம் அடுத்த வினாடியிலேயே இன்னும் மகளுக்கு காது கேட்கவில்லை எனத்தெரிந்து பதறுவது. வீட்டு கூரை மேல் ஏறி கரீம் ஆண்டெணா மாட்டும்போது மனைவியிடம் இந்த இடம் கோடைக்காலத்தில் அருமையாக இருக்கும்.நீயும் நானும் இங்கு படுத்துக்கொள்ளலாம். வீட்டினுள் குழந்தைகள் டி.வி பார்க்கட்டும் என்று சொல்லும்போது மனைவி நர்கீஸ் வெட்கப்பட்டு உங்க சட்டை பொத்தான் கிழிந்துள்ளது என்று சொல்வது. தொலைந்த நெருப்புக்கோழியைத் தேடி அதேபோல வேடமணிந்து கரீம் செல்வது. வேலையை விட்டு துரத்தியபின் பண்ணையில் நின்றிருக்கும் நெருப்புக் கோழிகளை பார்த்து இதெல்லாம் சரியில்லை என்று கண்கலங்குவது, அதற்கு நெருப்புக்கோழிகள் தலையை உயர்த்தி கரீமை பார்ப்பது. நகரத்தில் கரீமின் ஒவ்வொரு நாட்களும், கிணறு சுத்தப்படுத்தபட்டு மிகத்தூய்மையாக இருப்பதை கண்டு தந்தை அதிர்ச்சி அடையும் காட்சி. நீல நிற கதவை எடுத்து வயலில் செல்வது. கிளைமாக்ஸில் அந்த சிறுவர்களின் நடிப்பு. எல்லாமே கவிதை.
அங்காடித்தெரு பட விமர்சனத்தில் சாரு எழுதிய வரிகள் இவை.
வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்தால் இந்த உலகம் இந்தக் கணமே அழிந்து போய் விடும். இவ்வளவு அவலங்களுக்கு இடையிலும் உலகம் ஏன் இயங்கிக் கொண்டிருக்கிறது என்றால் இந்த இருளின் இடையிலும் ஏதோ ஒரு ஒளிக்கீற்று கசிந்து கொண்டிருக்கிறது என்பதனால்தான்.
super sharing thanking .
ReplyDeleteநல்ல பகிர்வு.பூங்கொத்து!
ReplyDelete