Friday, April 9, 2010

ராஜினாமா கடிதம்

ஒரு காதல்கடிதம் எழுதுவதை விட
ராஜினாமா கடிதம் எழுதுவது சுலபம்
மானே தேனே கண்மணி எ‌ன்று
போலியாக விளிக்க வேண்டாம்

ஒரு மொட்டைக்கடிதம் எழுதுவதை விட
ராஜினாமா கடிதம் எழுதுவது சுலபம்
கையெழுத்து காட்டிவிடுமோவெ‌ன்று
இடதுகையால் சிரமப்பட்டு
எழுத தேவையில்லை
இப்படிக்கு எக்ஸ் எ‌ன்று
பேடித்தனமாக முடிக்கவும் தேவையில்லை

ஒரு கவிதை எழுதுவதை விட
ராஜினாமா கடிதம் எழுதுவது சுலபம்
ராஜினாமா கடிதத்திற்கு
படிம‌ம் குறியீடு உத்தி
பிரச்சினைகள் இருப்பதில்லை

மேலாளரை பார்த்து
போடா மயிரென்பதோ
மேலாளரின் பிறப்பை சந்தேகிக்கும்
ஒற்றை வசைச்சொல்லை
உதிர்ப்பதோ இன்னும் சுலபம்
ஒரு ராஜினாமா கடிதம் எழுதுவதை விட

பணிச்சுமை தாங்காமல்
ஆலோசனை கேட்கும் நண்பனிடம்
இதையெல்லாம் எடுத்துச்சொல்வது
இன்னும் சுலபம்

(பிரைமோலெவியின் Unfinished Business கவிதை பாதிப்பில் எழுதியது)

(பிரம்மராஜன் அவர்கள் Unfinished Business கவிதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்)

3 comments:

  1. ஆம் சுலபம் தான்.. :-)
     

    ReplyDelete
  2. உங்களுக்கு அனுப்பிய மடலும் மொட்டைக்கடிதம் என தவறான முகவரி (navina14@hotmail.com) என கூகிளண்ணன் எனக்கே திருப்பி அனுப்பி விட்டார்.இணைப்பு அனுப்ப முடியவில்லை.ஹாட்மெயில்,யாஹூ உபயோகிப்பாளர் பயன்பாட்டில் கீழ்முகமாக செல்கிறது. எனவே ஜிமெயில் புதிய தபால் பெட்டி திறக்கவும்.

    புதிய முகவரி அனுப்பினீர்களென்றால் இணைப்பை அனுப்ப வசதியாக இருக்கும்.நன்றி.

    ReplyDelete