Monday, June 14, 2010
செம்மொழியான தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
இறந்த பின்னர்
ஏது ஊரே.ஏ...ஏ...ஏ
யாவரும் சவங்கள்
உண்பது வரிசை
உடுப்பது கிழிசல்
உறைவிடமெங்கே முள்வேலி
செத்துப் பிழைத்தோ...தோ...தோம்
பிழைத்தும் சாவோம்...வோ...வோ...வோம்
தீதும் சூதும்
பிறர் தர வாழு எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
சிறு குழந்தை முதல்
பேரிளம் பெண்களும் வரையிலே
உடம்பினை புணர்ந்து
கூறுபோடும்
விகாரைகள், மகா வம்சங்கள்
முள்வேலிக்குள் நீளும் கைகள்
ஒலிக்கின்ற அழுகுரலும்,வதைகளும்,
பசிக்கின்ற வயிறுகளும்,
மறைக்கின்ற அறிக்கைகளும்ம்ம்ம்ம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழியான தமிழ்மொழியாம்
செம்மொழி. செம்மொழி
தமிழ்மொழி தமிழ்மொழி அ..அ..ஆ...ஆ..ஆ...
குட்டிமணி முதல்
முத்துக்குமார் வரை
செத்துப் போனவர்
எத்தனையோ எத்தனையோ
ஓ...ஓ...ஓ...ஓ
ஓ...ஓ...ஓ...ஓ
இரண்டு லட்சம் பேர்
குருதியில் சிவந்த மொழி
எங்கள் மொழி தமிழ் மொழியாம்
செம்மொழியான
தமிழ் மொழியாம்ம்ம்ம்ம்ம்
அ..அ..ஆ...ஆ..ஆ...
Friday, June 11, 2010
ஒரு பயணம் - இரண்டு நண்பர்கள்
கிரெனாடோ பைக் ஓட்ட எர்னஸ்டோ பின்னால் அமர மூட்டை முடிச்சுகளுடன் அந்த ஓட்டை பைக் தடதடக்க நண்பர்கள் இருவரும் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். நெடுஞ்சாலை, மலைகள்,வயல்களை ரசித்தபடி பயணம் செல்கிறது. திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வாய்க்காலில் விழுகிறது. எர்னஸ்டோ வைத்திருந்த ஒரு பை கீழே விழுந்து உருள பதறிப்போய் அதை எடுக்கிறான். பையில் இருப்பது அவனது செல்ல நாய்க்குட்டி கம்பா. பயணத்தின் நடுவில் தனது காதலி சிச்சினாவை சந்தித்தால் அவளிடம் தருவதற்காக கம்பாவை எடுத்து வந்திருந்தான் எர்னஸ்டோ. கம்பா பத்திரமாக இருப்பதை பார்த்து எர்னஸ்டோவுக்கு உயிர் வருகிறது. மகிழ்ச்சியில் அவனுக்கு கீழே விழுந்த அடி கூட பெரிதாக வலிக்கவில்லை.பயணம் தொடர்கிறது. ஜனவரி 13 1952 சரியாக 601 கிலோமீட்டர் பயணம். இருவரும் மிராமரில் இருக்கும் சச்சினா வீட்டை அடைகிறார்கள்.
சிச்சினா வீட்டில் அனைவரும் அன்பாக உபசரிக்கிறார்கள். பயண களைப்பு. நண்பர்கள் இருவரும் விருந்தை ஒரு பிடி பிடிக்கிறார்கள். சிச்சினாவிடம் கம்பாவை தந்துவிட்டு மீண்டும் பயணத்தை தொடர்கிறார்கள். அர்ஜெண்டைனா மொழியில் கம்பா என்றால் திரும்பி வருதலென்ற அர்த்தம். கண்ணீருடன் காதலி முத்தம் தருகிறாள். கூட பதினைந்து அமெரிக்கா டாலர்கள். வட அமெரிக்க சென்றால் தனக்கு ஒரு ஆடை வாங்கி தரச்சொல்லி சிச்சினா தந்த டாலர்கள். ஏற்கனவே எர்னஸ்டோ கவிஞன். இப்போது காதலியின் முத்தம். வழியில் எர்னஸ்டோ தனது டைரியில் இப்படி எழுதுகிறான். எனது இதயம் கடிகார பெண்டுலம் போல அவளுக்கும் வீதிகளுக்கும் இடையில் ஊஞ்சலாடுகிறது. பாப்லோ நெருடாவின் ஒரு கவிதையை அசைபோட்டபடி எர்னஸ்டோ வண்டி ஓட்டுகிறான்.
வழியில் பலமுறை மோட்டார் சைக்கிள் பழுதடைகிறது. உணவுக்கு கூட கையில் காசு இல்லாத நிலையிலும் சிச்சினா தந்த பணத்தை துளியும் செலவழிக்காமல் எர்னஸ்டோ பாதுகாக்கிறான். கிரெனாடோ அவனை கிண்டல் செய்கிறான். எர்னஸ்டோவுக்கு ஆஸ்த்துமா தொந்தரவு அதிகரிக்கிறது. பிப்ரவரி-15. 2306 கிலோமீட்டர் தூரம் பயணம். சீலேவை அடைகிறார்கள். சீலேவில் இவர்களுக்கு ஒரு மெக்கானிக் வண்டியை இலவசமாக ரிப்பேர் செய்து விருந்து தருகிறார். இரவு விருந்தில் அந்த மெக்கானிக் (சேகுவேரா பற்றிய நாவலில் வரும் இந்த பகுதியை ரசித்து படித்தேன்) மனைவியுடன் எர்னஸ்டோ நடனமாடுகிறான். எர்னஸ்டோ பெண்பித்தன் அல்ல. என்றாலும் வலிய வரும் தேவதையை பார்த்து ஒதுங்கி போகும் முனிவரும் அல்ல. அவளுடன் மறைவாக வெளியில் செல்லும்போது மெக்கானிக் பார்த்துவிட அந்த பெண் எர்னஸ்டோ மேல் பழியைப் போட்டு ஆர்ப்பாட்டம் செய்ய, ஊரே அவர்களை துரத்துகிறது. நண்பர்கள் இருவரும் பைக்குடன் ஓடுகிறார்கள்.
3573 கிலோமீட்டர் பயணம் முடிவடையும்போது மார்ச்-7-1952. அடகாமா பாலைவனத்தில் கிரெனாடோவும், எர்னஸ்டோவும் ஒரு தம்பதியினரை சந்திக்கிறார்கள். பனி இரவில் பாலைவனத்தில் தீ மூட்டி வட்டமாக அமர்ந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேசிக்கொண்டிருக்கையில், அந்த தம்பதியினர் கம்யூனிஸ்ட்டுகள் என்று தெரிய வருகிறது. அவர்களது நிலத்தை உள்ளூர் முதலாளிகள் பிடுங்கிக்கொள்ள பிழைப்புக்காக ஊர் ஊராக அலைந்துக் கொண்டிருப்பதும் தெரிய வருகிறது. எர்னஸ்டோ அவனது கம்பளி போர்வையை அந்த பெண்ணுக்கு தந்துவிட்டு விடைபெறுகிறான். மறுநாள் ஒரு கும்பல் கூலி வேலைக்கு ஆடு மாடுகள் போல லாரியில் ஆட்களை ஏற்றிக்கொண்டு செல்லும் இடத்தில் அந்த தம்பதியினரை மீண்டும் எர்னஸ்டோ சந்திக்கிறான். அந்த பெண்ணை மட்டும் விட்டுவிட்டு அவள் கணவனை லாரியில் ஏற்றுகிறார்கள். அந்த வேலையாட்கள் கொத்தடிமை போல நடத்தப்படுவதை பார்த்து எர்னஸ்டோ கொதிக்கிறான். அவர்களுக்கு குடிக்க தண்ணீராவது தரும்படி ஆத்திரத்துடன் கத்துகிறான். கூலியாட்களை அழைத்துச் செல்பவனுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது. எர்னஸ்டோ ஓடும் லாரி மீது கற்களை விட்டெறிகிறான். எர்னஸ்டோவை கிரெனாடோ சமாதானப்படுத்துகிறான். கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக் கிடையிலும் பாதுகாப்பாக வைத்திருந்த காதலியின் பணத்தை அந்த தம்பதியினருக்கு தந்து விடுகிறான். இது பிறிதொரு காட்சியில் எர்னஸ்டோ சொல்லும் வசனம் மூலமாக தெரிய வரும். பெருவின் கிராமங்களில் பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கிறார்கள். விவசாயிகள் படும் சிரமங்கள், அவர்களை சுரண்டி பிழைக்கும் கும்பல்,வர்க்க வேறுபாடுகள் எர்னஸ்டோவுக்குள் தீயை மூட்டுகிறது. அவன் இப்போதெல்லாம் அடிக்கடி டைரி எழுதுகிறான். நீண்ட பின்னிரவுகளின் தனிமையில் எதையோ ஆழ்ந்து யோசிக்கிறான்.
எர்னெஸ்டோவைப் பற்றி குறிப்பிட வேண்டிய ஒன்று முகத்துக்கு நேராக பேசிவிடுவது. பயணத்தின் போது ஒரு டாக்டர் உதவி செய்கிறார். டாக்டர் தான் எழுதிவைத்திருக்கும் நாவலை நண்பர்கள் இருவருக்கும் படிக்கக்கொடுத்து அபிப்ராயம் கேட்கிறார். எர்னெஸ்டோ, நாவல் மொக்கை - உங்களுக்கு தெரிந்த விசயத்தை மட்டும் செய்யுங்க என்று டாக்டரின் முகத்துக்கு நேராக சொல்ல, டாக்டர் திகைத்து நிற்கிறார். அந்த டாக்டர் இதுவரை யாரும் என்னிடம் இப்படி பேசியதில்லை.நீ மட்டும், உனக்கு மட்டுமே இப்படி சொல்லும் நேர்மை இருக்கிறது என்று பெருமையாக சொல்கிறார்.

ஜூன்- 8 - 1952 10223 கிலோமீட்டர்கள் பெருவின் சான் பாப்லோ இடத்திற்கு நண்பர்கள் இருவரும் செல்கின்றனர். அது தொழுநோயாளிகள் கூடாரம் இருக்குமிடம். அங்கு தொழுநோயாளிகளிடம் பேசக்கூட பயப்படுகிறார்கள். எர்னெஸ்டோ மருத்துவர்கள் எச்சரிக்கைகளை மீறி கையில் கிளவுஸ் கூட மாட்டாமல் நோயாளிகளிடம் அன்பாக பழகுகிறார்.கால்பந்து விளையாடுகிறார். ஒருகட்டத்தில் மருத்துவர்களது மனநிலையும் முற்றிலும் மாறி நோயாளிகளிடம் அன்பாக பழகுகின்றார்கள்.
ஜூன்-13 நள்ளிரவு. விடிந்தால் எர்னஸ்டோவின் பிறந்தநாள். மருத்துவர்கள், நர்ஸ்கள் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். ஆட்டம் பாட்டம். கேளிக்கைகள். முகாமை விட்டு எர்னஸ்டோ வெளியே வருகிறான். எதையோ தீவிரமாக யோசித்தபடியே அமேசான் நதியின் மறுகரையை பார்க்கின்றான். எர்னஸ்டோவை தேடி வருகிறான் கிரெனாடோ. நான் அவர்களுடன் பிறந்த நாளை கொண்டாடப்போகிறேன் எர்னஸ்டோ மறுகரையை காட்டுகிறான். இருட்டில் படகு இருக்குமிடம் தெரியவில்லை. எர்னஸ்டோ தாமதிக்கவில்லை. சட்டையை கழற்றுகிறான். கிரெனாடோ சுதாரிப்பதற்குள் அமேசான் நதியில் குதிக்கிறான். கிரெனாடோ அதிர்ந்து போய் கத்துகிறான். முட்டாள். திரும்பி வாடா. உன் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வேன்.கிரெனாடோ கதறி அழுகிறான். சத்தம் கேட்டு மருத்துவர்கள், நர்ஸ்கள் எல்லாம் வெளியே ஒடி வருகிறார்கள். எர்னஸ்டோ வெறியோடு நீந்தி மறுகரை செல்கிறான். கிரெனாடோ பக்கத்தில் இருக்கும் ஒரு மருத்துவரிடம் கேட்கிறான். இதுவரை இந்த நதியை யாரும் நீந்தி உயிரோடு கடந்திருக்கின்றார்களா? மருத்துவர் இல்லையென்று சொல்கிறார். எர்னஸ்டோ கடும் ஆஸ்துமா நோயாளி வேறு. அனைவரும் படபடப்போடு கவனிக்க மறுகரையில் விளக்கொலிகள், சத்தம், ஆரவாரம். எர்னஸ்டோ மறுகரையை களைத்து போய் தொடுகிறான். அங்கு இருக்கும் தொழுநோயாளிகள் அன்போடு எர்னஸ்டோவை தூக்கி சுமந்தபடி அவர்கள் முகாமிற்கு செல்கிறார்கள்.
——-
கிரெனாடோவும், எர்னஸ்டோவும் பயணத்தின் இறுதிக்கட்டத்தை தொடும்போது ஜூலை-26,1952 . கிட்டத்தட்ட 12425 கிலோமீட்டர்கள். எர்னஸ்டோ இப்போதெல்லாம் ஆழ்ந்த சிந்தனையில் அடிக்கடி மூழ்குகிறான். பயணம் நிறைய கற்றுக் கொடுத்துள்ளது. கிரெனாடோவை விட்டு பிரிந்து எர்னஸ்டோ விடைபெறும் நேரம். எர்னஸ்டோ படிப்பை தொடர வேண்டும். கிரெனாடோ வேலைக்கு செல்ல வேண்டும். எர்னஸ்டோவை ஓர் உள்ளூர் சரக்கு விமானத்தில் ஏற்றி வழியனுப்பும் கிரெனாடோ சரக்கு விமானம் பார்ப்பதை பார்த்தபடியே நிற்கிறான். திரை கருமையாகி சேகுவாராவை பற்றிய சில குறிப்புகள் காட்டப்படுகின்றன. 1967 அக்டோபரில் அமெரிக்கா ராணுவம் அவரை கொலை செய்த குறிப்பு காட்டப்படுகிறது. முகத்தில் சுருக்கங்களுடன் வயதான தோற்றத்துடன் நிற்கும் கிரெனாடோ வானத்தை வெறித்துப்பார்த்தபடி நிற்கிறார்.
உலகில் இரண்டு வித மனிதர்கள் இருக்கிறார்கள்.
அக்கிரமங்களை மவுனமாக பார்த்துக்கொண்டும், சகித்துக்கொண்டும் நெடுந்தூரம் ஆயாசமாய் பயணிப்பது. கிரெனாடோ போல
அதர்மம் தலை விரித்தாடும்போது எதிர்த்து வீரமரணம் அடைவது. வலிகளும், வேதனைகளும் நிறைந்த இந்த குறுகியப் பயணம் அவ்வளவு சுகமாக இருக்காது. நம் பாஷையில் பிழைக்க தெரியாதவர்கள்.
ஆனால் இவர்களும் இல்லையென்றால் இந்த உலகம் எப்போதோ சுற்றுவதை நிறுத்தியிருக்கும்.
ஜூன்14 சேகுவேரா பிறந்த நாள். சே சொன்ன ஒரு வாசகத்தை இங்கு பகிர விரும்புகின்றேன்.
“உலகின் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு சமயமும் அடக்கமுடியாத ஆத்திரத்தால் உங்களால் குமுறிக் கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே!!!”
Friday, June 4, 2010
பூஜ்யங்கள் - விகடன் கவிதை
(நன்றி ஆனந்தவிகடன்)
பூஜ்யங்கள்
---------
ஆறாவது வகுப்பு
ஈ பிரிவில் மறக்கமுடியாதவன்
வே. அரங்கநாயகம்
வருடத்துக்கு நாலு முறை
கணக்குப் பாடத்தில்
முட்டை எடுப்பான்
ஒரு தேர்வில்
பத்தோடு பத்தை பெருக்கி
பத்துக்கு பிறகு
பத்து பூஜ்யங்களை போட்டது
உலக பிரசித்தம்
வாத்தியார் வெங்கடரமணி
அதை சுழித்து
பத்து முட்டைகள் போட்டது
கூடுதல் சுவாரஸ்யம்
கோழிப்பண்ணை வைக்கலாம்டா
கிண்டலடித்தலும் வையமாட்டான்
பூஜ்யங்களுக்கு மதிப்புள்ளன
புன்னகையோடு சொல்வான் முரடன்
பத்தாம் வகுப்பில்
பாதியை தாண்டாத
அரங்கநாயம் போட்டோவை
வெகுநாட்களுக்கு பிறகு
செய்தித்தாள்களில் பார்க்க நேரிட்டது
மத்திய அமைச்சராம்
ஆயிரம் கோடி ஊழலாம்
சட்டென எண்ண வரவில்லை
எத்தனை பூஜ்யங்கள்?
நன்றி
-விநாயக முருகன்
Monday, May 31, 2010
மூன்று கவிதைகள்
—————————————————————
முதல் கவிதை இந்த வார விகடனில் வெளிவந்துள்ளது.
1.
இப்போதெல்லாம்
ரயில் நிலையத்தில்
பேருந்து நிலையத்தில்
விமான நிலையத்தில்
வழிபடும் இடத்தில்
இன்னும் ஆயிரம் ஆயிரம்
காரணங்களுக்கு
ஆடைகளை களைந்து
சோதனை செய்கிறார்கள்
கவனமிருக்கட்டும்
ஒரு
அடையாள அட்டையென்பது
ஆடை களையும் சடங்கிலிருந்து
தற்காலிகமாக தப்பிக்க
தரப்பட்டுள்ள சிறுசலுகையே
(நன்றி - ஆனந்த விகடன்)
2
நாளுக்கு நாள்
எனது அடையாள அட்டைகள்
பெருகிக் கொண்டே செல்கின்றன
உடம்பில் புதுபுது மச்சங்களும்,மருக்களும்
உற்பத்தியாவதை போல
கடைசியாக வந்து சேர்ந்தது
வாக்காளர் அடையாள அட்டை
எனது மருத்துவ நண்பரிடம்
கேட்டபொழுது
வளர்சிதை மாற்றம்
பயப்பட தேவையில்லெயென்கிறார்
3
சாலையோர நடைபாதையில்
அனாதையாக கிடந்தது
அடையாள அட்டை
முகத்தை தவிர
வேறெதுவும் புலப்படவில்லை
அந்த பழுப்பேறிய
நைந்துப்போன அட்டையில்
நூறாண்டுகளாய்
சலித்து நின்ற மரமொன்று
இலைகளை உதிர்த்து விட்டு
மிக மிக சந்தோஷமாய்
மண்ணை முத்தமிட்ட
கணம் போல சிரித்திருந்தது
அந்த முகம்
நன்றி
-என்.விநாயக முருகன்
Tuesday, May 25, 2010
இரண்டு கவிதைகள் - உயிரோசை & கீற்று.காம்
போன்சாய் மரம்- சில ஆலோசனைகள்
போன்சாய் மரங்களை
வளர்ப்பது சாதாரண விஷயமல்ல
வெயிலில் அதிகநேரம்
வாடவிடக்கூடாது.
வாரத்திற்கு ஒருமுறை
இலைகளைக் கிள்ளி
தண்டுகளைக் கட்டி
பிள்ளைகள் போல
பராமரிக்க வேண்டும்
தண்ணீரை ஊற்றக்கூடாது
தெய்வத்தின் மீது
தூவும் மலர்களைப் போல
தெளிக்க வேண்டும்
குறிப்பாக
பூச்சிகளை அண்டவிடக்கூடாது
போன்சாய் மரங்களை
உயரமாய் வளரவிடக்கூடாது
பக்கவாட்டில் கிளைபரப்பினாலும்
பிரச்சினைதான்
கறாராக வெட்டிவிடவும்
போன்சாய் மரங்களுக்கு
தாய்மண் இருந்ததில்லை
தாய்மண்ணுக்குக் குரல்கொடுக்கும்
போன்சாய் மரங்கள்
அதிகநாள் இருந்ததில்லை
அவற்றை மட்டும்
வளர்க்கவே வளர்க்காதீர்
என்ன செய்யலாம்?
ஓர் இனம் அழிக்கப்படும்போது
நாம் செய்ய வேண்டிய
சில கடமைகள் உள்ளன
ஷெல்லடிகளின் சத்தம்
செவிகளில் விழாமலிருக்க
தொலைக்காட்சிப் பாடலின்
ஒலியளவை அதிகரிக்கலாம்
செய்தித்தாள்களில் வரும்
சினிமா பக்கங்களை தவிர
எஞ்சியவற்றை கிழித்து விடலாம்
சில அறிக்கைகள் விடலாம்
சில கணக்குகளை போடலாம்
சில எதிரிகளை திட்டலாம்
சில துரோகிகளை சபிக்கலாம்
ஆத்திரப்படலாம்
எரித்துக் கொள்ளலாம்
அடித்துக் கொள்ளலாம்
விதியெனலாம்
மதிகெட்டவர்களெனலாம்
தப்பி பிழைத்தவர்களின்
கண்ணீரை கேட்டுவைக்கலாம்
பிறகொரு நாளில்
நிதானமாக
நாலுவரி கவிதையெழுதலாம்
நன்றி
-என்.விநாயக முருகன்
Saturday, May 8, 2010
ஊர்க்கோல வாழ்வை நச்சி
புண்ணியம் பலவுண்டாம்
கூடத்தில் படுக்கவைத்து
திண்ணையில் விடியவிடிய
பேசிக்கொண்டிருக்க மாட்டார்களாம்
மின்சார சுடுகாடெல்லாம்
கணினி மயமாம்
அஞ்சே நிமிடத்தில்
காரியம் முடித்து
பார்சலும் கொடுப்பார்களாம்
அர்த்தஜாமத்தில் எழுந்தமர்ந்து
அடிவாங்க தேவையிருக்காதாம்
அன்பாகவே கவனிப்புண்டாம்
உடன் வந்தவர்களை
உபசரிக்க ஊழியர்களுமுண்டாம்
எனது கவலையெல்லாம்
நான் செல்லும் அமரர் ஊர்தி
போக்குவரத்து நெரிசலில்
மாட்டக் கூடாதென்பதில்தான்
இன்னொருமுறை சாக தயாரில்லை நான்
அடுத்த கவலை எனது
கண்ணீர் அஞ்சலி போஸ்டரில்
யாரும் சிறுநீர் அடித்துவிடக்கூடாதென்பதில்
Sunday, May 2, 2010
அட..ங்கொய்யால
ஊழல்களில் சுவாரசியமில்லையாம்
எந்த தொலைக்காட்சியும்
கண்டுக்கொள்வதில்லை
மூன்று கொலைகள் செய்தால்
மட்டுமே
முதல் பக்கத்தில் பிரசுரமாம்
வண்ண புகைப்படம் வர
நான்கு கொலைகளாம்
சிவனே வந்தாலும்
சின்ன வீட்டுடன்
கையும் களவுமாய்
பிடிபடாதவரை
பிரபலமில்லையாம்
நாயே ஆனாலும் சரி
பேயே வந்தாலும் சரி
மனிதனை கடித்தால் செய்தியில்லையாம்
நடுவானில் வெடிக்க வேண்டும்
தலை துண்டிக்கப்பட வேண்டும்
கதற கதற ஓட ஓட
எல்லாமே எங்களுக்கு
சுட சுட வேண்டும்
ஆறாத வரை புதுக்கஞ்சிதான்
அப்ப கஞ்சிக்கு செத்தவன்?
அட..ங்கொய்யால
இதென்ன வெட்டிப்பேச்சு
அவனை பத்தி