Monday, July 1, 2013

ஓநாய் குலச்சின்னம்


ஓலோன்புலாக் என்ற பகுதி மங்கோலியாவின் சிறந்த மேய்ச்சல் புல்வெளி பிரதேசம். மலைகளும், பள்ளத்தாக்குகளும், ஏரிகளும் நிறைந்த பகுதி. அங்கு ஆடு,மாடுகளை பேணி வளர்க்கும் மந்தைக்கு சொந்தக்காரர் பில்ஜி என்ற மேய்ப்பர் அவரது மகன் பட்டு, மருமகள் கஸ்மாய் தவிர அவர்களின் ஒன்பது வயதுச் சிறுவன் பாயர் வசித்து வருகின்றார்கள். பில்ஜி சிறந்த வேட்டைக்காரரும் கூட. அவர்களுடன் திறமை மிக்க ஒரு மேய்ப்பர்குழு இருக்கின்றது. 

இவர்களுடன் ஜென்சென் என்னும் மாணவரும் அவரது சக மாணவ நண்பர்களும் இரண்டாண்டுகளாக தங்கியுள்ளார்கள். ஜென்சென் மற்றும் அவரது சக மாணவர்கள் பீஜிங்கிலிருந்து வந்தவர்கள். அவர்களுக்கு ஓலோன்புலாக் பூர்வீகம் கிடையாது. ஆடு மேய்ப்பது பற்றியும் , ஓநாய்களைப் பற்றியும், மங்கோலியர்களின் மேய்ச்சல் நிலங்களை ஆராய்ச்சி செய்யவும் ஜென்சென்னும்,அவரது நண்பர்களும் இரண்டாண்டுகளாக ஓலோன்புலாக்கில் தங்கியுள்ளார்கள்.  

மங்கோலியர்களுக்கும், சீனர்களுக்கும் கலாச்சார சிந்தனை வித்தியாசங்கள் உள்ளன. சீனர்கள் ஓநாய்களை துரதிர்ஷ்டமாக வெறுக்கத்தக்க விலங்காக பார்க்கின்றார்கள்.ஆனால் நாய்களை அப்படி கருதுவதில்லை. மங்கோலியர்கள் ஓநாய்களை கடவுளாக பார்க்கின்றார்கள். மங்கோலியர்களை  பொறுத்தவரையில் நாய்கள் என்பது ஒரு அடிமை விலங்கு.  என்னதான் நாய்கள் ஓநாய்களிலிருந்து வந்த வம்சமாக இருந்தாலும் நாய்கள் மங்கோலிய மனிதர்களுக்கு ஒரு சேவகன் மட்டுமே. அது வேட்டையாடும் அவ்வளவே. ஆனால் ஓநாய்கள் அப்படி அல்ல. அவை மனிதர்களை காட்டிலும் புத்திக்கூர்மை உடையவை. மனித நாகரீகமே ஓநாய்கள் நாகரீகம்தான். இவ்வளவு ஏன் ஒருக்காலத்தில் உலகின் பாதி நிலப்பரப்பை வெற்றிக்கொண்ட செங்கிஸ்கான் கூட ஓநாய் வளர்த்த பிள்ளைதான் என்று ஒரு மித் மங்கோலியர்களுக்கு உண்டு. மங்கோலிய குலச்சின்னமாக ஓநாய்கள் கருதப்படுகின்றன.

ஒருநாள் பில்ஜியும், ஜென்சென்னும் ஓநாய் கூட்டமொன்று மான்களை வேட்டையாடுவதை பார்க்கின்றார்கள். பிறகு அவர்கள் தங்கள் இடத்துக்கு வந்து விடுகின்றார்கள். மறுநாள் ஜென்சென்னை பில்ஜி அந்த வேட்டை பனி ஏரிக்கு அழைத்துச் செல்கின்றார். அங்கே பனி ஏரியில் இறந்து போன மான்களின் உடல் குவியல் குவியலாக இருக்கின்றன. சில மான்கள் குற்றுயிரும்,குலையுயிருமாக கிடக்கிறன. சில மான்கள் கடித்து குதறப்பட்டு பாதி உடல்கள் மட்டும் எஞ்சியுள்ளன. தங்கள் கால்கள் உறைந்த பனிக்கட்டிகளில் புதையுண்டு சில மான்கள் உயிருக்கு போராடுகின்றன. ஓநாய்கள் வேட்டையாடி விட்டு சில மான்களது உடல்களை இப்படி பனிக்குள் பாதுகாப்பாக்க சேமித்து வைத்து விட்டு சென்றுவிடும் என்று பில்ஜி சொல்கின்றார். ஜென்சென்னுக்கு ஆச்சர்யமாக இருக்கின்றது. தவிர ஓநாய்களின் வேட்டை தந்திரங்களை பில்ஜி விளக்க ஆரம்பிக்கின்றார். எப்படி உயரமான சுற்றுச்சுவரை உடைய தங்களது ஒரு ஆட்டு மந்தையை ஓநாய் கூட்டமொன்று தாக்கியது என்று சொல்கின்றார். ஒரு தலைமை ஓநாய் சுவற்றில் இரண்டு கால்களை வைத்து நிற்க அதன் மீது ஒவ்வொரு ஓநாயாக ஏறி தப்பியது என்றும், அந்த கடைசி தலைமை நாய் இறந்துப்போன ஆட்டு உடல்களை குவியலாகப் போட்டு அந்த உடல்கள் மீது ஏறி தப்பித்தது என்றும் விளக்குகின்றார். எல்லா ஓநாய்களும் ஏற்கனவே சில ஆடுகளை கொன்று அவற்றின் உடலை குவியலாக போட்டு கடைசி தலைமை நாய்க்கு ஏற்கனவே உதவி செய்து விட்டு தப்பிப்போனதையும் சொல்கின்றார். ஜென்சென்னுக்கு பிரமிப்பாக இருக்கின்றது.                                                        

பனி ஏரியில் இறந்துக்கிடக்கும் சில மான்களை உணவுக்கு மட்டும் தங்கள் உணவுக்காக எடுத்துக்கொள்ளும் குழுவினர் உயிரோடு பனிச்சேற்றுக்குள் மாட்டிக்கொண்ட மான்களை விடுவித்து காட்டுக்கு அனுப்புகின்றார்கள். ஓநாய்களின் அந்த வெறிச்செயலை கண்டு கோபமடையும் ஓநாய்களை பலமாக நிந்திக்கின்றான். மான்கள் பாவம் என்கின்றான். பில்ஜிக்கு கோபம் வந்து விடுகின்றது. பில்ஜி ஓநாய்கள் தங்கள் குலச்சின்னம் என்கிறார். ஓநாய்களால் மட்டுமே மான்களின், கால்நடைகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றது. அதனால் மேய்ச்சல் நிலங்கள் அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன என்கின்றார். மேய்ச்சல் நிலங்களை சார்ந்தே எண்ணற்ற சிறு உயிர்கள் தங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன. சீனர்களாகிய நீங்கள் வெறும் புத்தகங்களை படித்து அதன் மூலம் அறிவை பெறுகின்றீர்கள். மங்கோலியர்கள் நாங்கள் படிப் பதில்லை. ஆனால் மேய்ச்சல் நில வாழ்க்கை, வேட்டைகள் மூலமே வாழ்வை பார்க்கின்றோம் என்கின்றார். படித்த சீனர்கள் நீங்கள் சொல்வதை எல்லாரும் நம்புகின்றார்கள். நீங்கள் எப்போதும் சிறிய உயிர்களை காப்பற்றும் முயற்சியில் பெரிய உயிர்களை அழித்து விடுகின்றீர்கள். மான்களின் மேல் இரக்கப்படும் நீங்கள் ஏன் புல்லும் ஒரு உயிர்தான் என்று ஏற்றுக்கொள்ள மறுக்கின்றீர்கள். மான்களாவது தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இயற்கை அந்த ஆற்றலையும் அபரிமித இனப்பெருக்க ஆற்றலையும் தந்துள்ளது. புற்களுக்கு அது இல்லை. ஒரு உயிரை சார்ந்தே இன்னொரு உயிர் இருக்கும் இந்த மேய்ச்சல் நிலங்களில் ஓநாய்களை பாதுகாப்பதன் மூலமே நாம் வாழ முடியும் என்கின்றார். தவிர ஓநாய்கள் மேய்ச்சல் நிலங்களில் வளைகளைத் தோண்டி அதில் வாழ்க்கையை நடத்தும் எலிகளையும், மர்மோட்டுகளையும் உண்கின்றன. ஓநாய்களின் எண்ணிக்கையால் எலிகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுகின்றன. எலிகள், மர்மோட்டுகளின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படுவதால் கொசுக்களின் எண்ணிக்கை குறைகின்றன என்றும் விளக்குகின்றார் இந்நாவலின் முக்கியமான பகுதியும் , மையக்கருத்தும் இந்த உரையாடலே. மங்கோலிய மேய்ப்பர்கள் இறந்தவர்களின் உடலை ஓநாய்களுக்கு விருந்தாக தந்து விடுகின்றார்கள். இதன் மூலம் அவர்களின் ஆன்மா நேரடியாக சொர்க்கத்திற்கு சென்று விடுவதாக நம்புகின்றார்கள். 

 இதனிடையில் பில்ஜி குழுவில் இருக்கும் சிலர் ஓநாய்குட்டிகளை குகைகளிலிருந்து திருடி எடுத்து வருகின்றார்கள். ஓநாய் தோல் வாங்கும் ஆட்களிடம் ஓநாய்குட்டிகளை விற்று காசு பார்ப்பது அவர்கள் நோக்கம். பில்ஜி அவர்களை எச்சரிக்கை செய்கின்றார். ஓநாய்கள் பழிவாங்கும் குணம் கொண்டவை. குறிப்பாக தாய் ஓநாய்கள் நம்மை சும்மா விடாது என்று எச்சரிக்கை செய்கின்றார். ஆனால் எல்லாரும் பில்ஜியை பழமைவாதி என்று ஏளனம் செய்கின்றார்கள். யாரும் பில்ஜி பேச்சை பொருட்படுத்தாமல் குட்டிகளோடு திரும்புகின்றார்கள்.               

பட்டுவும் அவனது நண்பன் லாசுருங்கும் இராணுவத்திற்காக ஒரு பெரிய குதிரை மந்தையை வளர்த்து வருகின்றார்கள். இரவோடு இரவாக அந்த மந்தைக்குள் நுழையும் ஓநாய்க்கூட்டம் ஒரு குதிரையை கூட மிச்சம் வைக்காமல் தாக்கி அழிக்கின்றது. நாவலின் இன்னொரு முக்கியமான பகுதி இது. ஓநாய்கள் எவ்வளவு சாதுர்யத்துடனும், பழிவெறியுடனும், போர் நுட்பங்களோடும் வேட்டையாடுகின்றது என்று விவரமாக சொல்லப்படுகின்றது. சும்மாவா சொன்னார் பில்ஜி. ஓநாய்களிடமிருந்துதான் செங்கிஸ்கானே போர்க்கலையை கற்றுக்கொண்டான். மனித நாகரீகமே ஓநாய்களிடமிருந்துதான் பரிணாம வளர்ச்சிப் பெற்றதை ஜென்சென் அறிந்துகொள்கிறான். பில்ஜி பேச்சை யாரும் மதிக்கவில்லை. விளைவு ஒரு மந்தையே அழிந்து விட்டது.                        

விஷயம் கேள்விப்பட்டு அங்கு வருகின்றார்கள் இராணுவப் பிரதிநிதி பாவோ சுங்காய் மற்றும் மேய்ச்சல் நில இயக்குநர் உல்ஜீ. ஓநாய் கூட்டத்தின் வெறிச்செயலைக் கண்டு திகைக்கும் அவர்கள் ஓநாய்க் கூட்டத்தை அடியோடு அழிக்க திட்டம் போடுகின்றார்கள். பாவோ அரசாங்க பிரதிநிதி. அரசின் திட்டம் என்னவென்றால் அந்த மேய்ச்சல் நிலத்தை நவீனப்படுத்தி அங்கு விவசாய நிலங்கள் கூடவே செங்கல் கட்டப்பட்ட வீடுகள்,நெடுஞ்சாலைகள், திரையரங்குகள், கடைகள் அமைப்பது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே ஓநாய்களை அழிக்க ஆரம்பிக்கின்றார்கள்.  

ஜென்சென் ஒரு ஓநாய்க் குட்டிகளை எடுத்து வந்து வளர்க்கின்றான். இதற்கு காரணம் ஜென்சென்னுக்கு ஓநாய்களின் மீது இருந்த காதலோடு, ஓநாய்களை நாய்களோடு கலக்க வைத்து ஒரு திறமையான வேட்டை நாயை உருவாக்குவதும். இதை மிக கடுமையாக எதிர்க்கின்றார் பில்ஜி. ஆனால் பாவோ எதிரியை வெல்ல எதிரியை பற்றி தெரிந்துக்கொள்வது அவசியம் என்று சொல்லி ஓநாய் வளர்க்க அனுமதி தருகின்றார். ஜென்சென் ஓநாய்க்குட்டியை வளர்ப்பதன் மூலம் ஓநாய்களின் தந்திரங்களை வாழ்க்கை முறைகளை மிக நுட்பமாக கற்றுக்கொள்கின்றான்.                   

பாவோவின் இராணுவ வீரர்கள் மர்மோட்டுகளை அழிக்கின்றார்கள். மர்மோட்டுகளின் எண்ணிக்கையை குறைத்தால் ஓநாய்கள் உணவு இல்லாமல் அழிந்து விடுமென்று நம்புகின்றார்கள். மர்மோட்டுகளை குவியல் குவியலாக வேட்டையாடி கொல்கின்றார்கள். இடையே அந்த பகுதிக்கு வரும் வெளியாட்கள் அன்னப்பறவைகளை, வாத்துகளை வேட்டையாடி கொல்கின்றார்கள். அதி நவீன துப்பாக்கி மூலம் நரிகளை,ஓநாய்களை வேட்டையாடி கொல்கின்றார்கள். மிக மோசமான இனப்படுகொலைகளை இராணுவ வீரர்கள் செய்கின்றார்கள். தடுக்க வரும் முதியவர் பில்ஜியை அவமதிக்கின்றார்கள். இப்படியே வேட்டை தொடங்கி சில மாதங்களில் அந்த இடமே நிர்மூலமாகின்றது. ஒரு சில ஓநாய்களே எஞ்சுகின்றன. அவையும் மங்கோலியாவின் வெளிப்பகுதிக்கு ஓடி விடுகின்றன. ஓலோன்புலாக்கில் ஓநாய் இனமே அழிகின்றது. ஓநாய்கள் அதிகளவில் இல்லாததால் குதிரைகளின் இனப்பெருக்கம் அதிகரிக்கின்றது. ஆடு மாடு கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது. அவற்றுக்கு புல் தட்டுப்பாடு வருகின்றது. வேறு வழியில்லாமல் குதிரைகளை கொல்கின்றார்கள். ஆடு, மாடுகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகின்றார்கள். இயற்கை சங்கிலியிலிருந்து ஒரு கண்ணியை வெட்டியெடுக்க இயற்கை ஸ்தம்பித்து மழை வரத்து நின்று ஊரே சீரழிகின்றது. ஜென்சென் இயற்கைக்கு புறம்பாக கட்டிப் போட்டு வளர்த்த ஓநாய் குட்டியும் சூழலுக்கு ஏற்ப மாறாததால் விரைவில் நோய்வாய்ப்படுகின்றது. வேறு வழியில்லாமல் குழந்தையைப் போல வளர்த்த அந்த நோயில் துடிக்கும் ஓநாயை அவனே மண்வெட்டியால் தலையில் அடித்து கருணைக்கொலை செய்கின்றான். பில்ஜி இறந்து விடுகின்றார். அவரது கடைசி ஆசையின்படி அவரது எஞ்சிய உடலை காட்டுக்குள் கொண்டுச்சென்று போடுகின்றார்கள். ஓலோன்புலாக்கில் ஓநாய்க் கூட்டம் உண்ணும் கடைசி உடலாக பில்ஜியின் உடல் இருக்கின்றது.

ஊரை விட்டு பீஜிங் செல்லும் ஜென்சென் மீண்டும் இருபது ஆண்டுகள் கழித்து ஓலோன்புலாக் திரும்புகின்றான். ஊர் நவீனமாக மாறியுள்ளது. ஒரு ஓநாய் கூட இல்லை. வெறுமை படர்ந்த முன்னொரு காலத்தில் தான் வளர்த்த ஓநாய்க்குட்டியை கண்டெடுத்த அதன் குகை வாசலில் தனது புதிய நாவலின் சில பக்கங்களை கொளுத்திப் போட்டு ஊதுபத்தி ஏற்றி வழிபாடு செய்கின்றான். ஜென்சென்தான் இந்த நாவலின் ஆசிரியர் என்று நமக்கு தெரிகின்றது.


நாவல் முழுக்க ஓலோன்புலாக்கில் எலிகளோடும், மர்மோட்டுகளோடும், குதிரைகளோடும் , ஆடு ,மாடுகளோடும் ஒரு ஓநாய் அரசன் போல கம்பீரமாக உலாவிய மனதுக்குள் வெறுமை வந்து குடிக்கொள்கின்றது. இந்த உலகத்திலேயே ஆபாசமான விலங்கு மனிதன் என்று தெரிகின்றது. அதே நேரம் சர்வைவல் என்ற தியரிபடி மனிதனை விட எதுவும் வல்லமை இல்லை என்றும் தெரிகின்றது. ஆனால் மனிதனையும் விட மகத்தான சக்தி ஒன்று உள்ளது. அது இயற்கை. அதன் விளைவே இன்று நாம் சந்திக்கும் இயற்கை பேரழிவுகள்.





இந்நூலின் ஆசிரியரை பற்றி:-

ஜியாங் ரோங் 1946-ஆம் ஆண்டு ஜியாங்சூ-வில் பிறந்தார். அவருடைய தந்தையின் வேலை நிமித்தமாக, அவர்களுடைய குடும்பம் 1957-ல் பீஜிங்கிற்குக் குடிபெயர்ந்தது. 1966-ல் சென்ட்ரல் அகாதமி ஆஃப் பைன் ஆர்ட்டில் ஜியாங் கல்வி மேற்கொண்டார். கலாச்சாரப் புரட்சியைத் தொடர்ந்து, சீனாவில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளைவாக, அவருடைய படிப்பு இடையிலேயே தடைபட்டது. அவருடைய இருபத்தோராவது வயதில், 1967-ல், உள் மங்கோலியாவின் 'கிழக்கு உஜிம்கியூன் பேனர்' இல் அங்குள்ள நாடோடி மக்களோடு சேர்ந்து வாழ்ந்து உழைப்பதற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்தார். அங்கு செல்லும்போது தன்னோடு இரண்டு பெட்டிகள் நிறைய மேற்கத்திய செவ்வியல் படைப்புகளைக் கொண்டு சென்றார் மேலும் அங்கிருந்த பதினோரு ஆண்டுகளில் மங்கோலிய வரலாறு, கலாசாரம், மரபு ஆகியவற்றை தீர்க்கமாக அறிந்துகொண்டார். குறிப்பாக, மேய்ச்சல்நில ஓநாய்கள் பற்றிய புராணீகங்களை அறிவதில் தீவிர நாட்டமும் வேட்கையும் கொண்டிருந்தார். ஒய்வு நேரங்களில் அவை பற்றிய கதைகளைக் கேட்டறிந்ததோடு மேய்ச்சல் நில மக்களின் ஆசானும் குலச்சின்னமுமான ஓநாய்கள் குறித்து நேரடி அனுபவமும் ஞானமும் பெறுவதற்காக ஒரு ஓநாய்க் குட்டியை எடுத்து வளர்க்கவும் செய்தார்.
 

1978-ல் பீஜிங் திரும்பி 'சமூக அறிவியல்களுக்கான சீன அகாதெமி'யில் தன் கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் தன் வாழ்வைக் கல்வி துறையாளராக அமைத்துக் கொண்டு 2006 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார்.

2004-ல் வெளியான இந்நாவல் ,அடுத்த இரண்டாண்டுக்குள் நாற்பது லட்சம் பிரதிகள் சீனாவில் விற்பனையானது. 'மேன் ஆசியன் விருது' தொடங்கப்பட்ட முதல் ஆண்டான 2007-ல் இந்நாவல் அவ்விருதைப் பெற்றது. நாவல் வெளியாகி சில ஆண்டுகள் வரை தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்த ஜியாங், இப்புத்தகத்தின் எந்தவொரு நிகழ்விலும் விருது வழங்கும் விழாக்களிலும் கலந்துக் கொண்டதில்லை. 'மேன் ஆசியன் விருது' வின் தேர்வுக்குழுவுக்கு இவர் அனுப்பிய புகைப்படம் மற்றும் வாழ்க்கைக் குறிப்பு மூலமே இவர் வெளி உலகுக்கு அறியப்பட்டார். எனினும் அந்த விருதையும் அவர் சென்று பெறவில்லை. ஜியாங்கின்இயற்பெயர்: லூஜியாமின்.


சி.மோகனின் மொழிப்பெயர்ப்பை உழைப்பை எப்படி சொல்வதென்று தெரியவில்லை. அபாரமென்று சொல்வதை விட வேறு எதுவும் எனக்கு எழுத தோன்றவில்லை.



ஓநாய் குலச்சின்னம்,
ஜியாங் ரோங், தமிழில் சி. மோகன்,
அதிர்வு பதிப்பகம், 38, இரண்டாவது தெரு, இராமலிங்க நகர்,
விருகம்பாக்கம், சென்னை 93,
பக்கங்கள் 672, விலை 500ரூ.              

Saturday, June 29, 2013

நான் ஏன் பிறந்தேன்?

நான் ஏன் நாவல்களை படிக்க வேண்டும்? நான் ஏன் கதை,கவிதை, கட்டுரைகளை வாசிக்க வேண்டும்? நான் ஏன் இலக்கிய வாசிப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஒரு நண்பர் என்னிடம் கேட்டார். அவருக்கு என்ன பதிலளித்தேன் என்று பிறகு சொல்கின்றேன்.

புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா என்று என்னைக் கேட்டால் கண்டிப்பாக இருக்க முடியும் என்றே பதில் சொல்வேன். பல்லே விளக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? குளிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியுமா? மலம் போய்விட்டு கழுவாமல் வர முடியாதா என்ன? கண்டிப்பாக சாத்தியம்தான். இதெல்லாம் சாத்தியம் என்னும்போது புத்தகங்கள் வாசிக்காமல் ஒருவரால் வாழ்நாள் முழுவதும் இருக்க முடியாதா என்ன? மேலே சொன்னவை எதுவும் ஒரு உயிர் வாழ்தலின் அத்தியாவசிய செயல்களில் இல்லை.

இங்குதான் உயிர் வாழ்வதற்கும்,உயிர் பிழைப்பதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்க வேண்டியது உள்ளது. உயிரின் அடிப்படை உணவு உண்பதும் (வேட்டை) , இன்னொரு உயிரை உற்பத்தி செய்வதும்(கலவி). உயிர் பிழைக்க இந்த இரண்டை செய்தால் போதும். இதைத்தான் விலங்குகள் இன்னமும் செய்து வருகின்றன. இதிலிருந்து படிப்படியாக முன்னேறி வந்ததே மனித நாகரீகம். மனிதனின் அடிப்படை குறிக்கோளும் உயிர் பிழைப்பதே. இருந்தாலும் இந்த உயிர் வாழும் வரை அவனுக்கு மேலும் சில சொகுசு வசதிகளும் , என்டர்டெயின்மெண்ட்களும் தேவைப்பட்டன. தலைக்கு கையை மடித்து வைத்துக் கூட அப்படியே உறங்கி விடலாம். ஆனால் மனிதன் தலையணையை கண்டுபிடித்தான். வாழ்க்கையை ருசியாக்கி கொள்ள என்டர்டெயின்மெண்ட்களை கண்டுபிடித்தான். தனது வேட்டைக் களைப்பை போக்கி மறுநாள் வேட்டைக்கு புத்துணர்வோடு கிளம்ப முதல் நாள் இரவு குடித்து விட்டு உறங்கினான். குடிக்கும்போது நடனம் ஆடினான். நடனம் ஆட முடியாதவர்கள் கூட இசைக்கருவிகளை இசைத்தார்கள். வேட்டைக்கு போன கதையை சிறுவர்களுக்கு சொன்னார்கள். தங்கள் அனுபவங்களை அடுத்த தலைமுறைக்கு சொன்னார்கள். பிறகு இவை கலை, இலக்கியமாக, நாடகமாக , கவிதையாக ,பாடல்களாக மாறி மாறி இன்று டிவி, சினிமா என்று வந்து நிற்கின்றது. எல்லாமே ஒரு மனிதனால் இன்னொரு மனிதனின் கதையை சொல்லுறதுதான். புத்தகங்கள் படிக்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழும் பலருக்கு ஏன் சினிமா பார்க்காமல் இருக்க முடியுமா என்ற கேள்வி எழமாட்டேங்குது என்று தெரியவில்லை. சினிமா பார்க்காமல் கூட இருக்க முடியும்தானே? 

ஆனால் புத்தகங்கள் படிப்பதாலேயே ஒருவருக்கு எல்லாம் தெரிந்துவிடுமா என்றால் அதுவும் யோசிக்க வைக்கும் கேள்விதான். வாழ்க்கையில் எல்லாருக்கும் எல்லாமே தெரிந்து விடாது. நமக்கு தெரியாத விஷயங்களை மற்றவர்களது வாழ்க்கை அனுபவங்கள் ஊடாக தெரிந்துக் கொள்ளலாம். அது எந்த பார்மேட்டில் கிடைத்தாலும் சரிதான். சினிமா பார்மேட்டை விட புத்தகங்கள் வழியாக கொஞ்சம் அதிகப்படியான வாழ்பனுபவம் கிடைக்கும். அதை விட நேரடியாக வாழ்க்கையை வாழ்ந்தே பார்த்து விட்டால் இன்னும் உத்தமம். புத்தகங்களே படிக்காத எத்தனையோ விஷயம் தெரிந்த ஆட்களை எங்கள் ஊரில் பார்த்துள்ளேன். ஆனால் அவர்கள் எல்லாருமே வாழ்க்கையிலிருந்து விஷயத்தைக் கற்றுக் கொண்டவர்கள். நீங்கள் அப்படிப்பட்ட மேதைகள் என்றால் உங்களுக்கு புத்தகங்கள் தேவைப்படாது.


ஒரு பொடியன் பள்ளிக்கூடம் முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். தரையை பார்த்துக்கொண்டே நடந்து வந்தவன் கண்ணில் ஒரு கசங்கிய பழைய பத்து ரூபாய்த் தாள் தட்டுப்பட்டது. சிறுவன் சந்தோஷமாக அந்தப் பத்து ரூபாயை எடுத்து சட்டைப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான்.

அன்றிலிருந்து அந்தப்பையன் எப்போது சாலையில் நடந்தாலும் தரையைப் பார்த்துக் கொண்டே நடக்க ஆரமபித்தான். இப்படியே நாற்பது வருடங்கள் ஓடிவிட்டன. அந்தப்பையன் வளர்ந்து முதியவர் ஆகி இறந்தும் விட்டான். இந்த நாற்பது வருடங்களில் அந்தப்பையன் தரையைப் பார்த்துக்கொண்டே நடந்ததில் பத்து நூறு ரூபாய் தாள்கள் , பத்து ஐம்பது ரூபாய் தாள்கள் , இரண்டு ஐநூறு ரூபாய் தாள்கள், பிறகு கொஞ்சம் சில்லறை காசுகள் , ஒரு தங்க மோதிரம், ஒரு வெள்ளி செயின் என்று மொத்தமாக ஒரு பத்தாயிரம் மதிப்புள்ள சொத்து அவனுக்கு கிடைத்ததாம். ஆனால் இந்த நாற்பது வருடங்களில் அவன் வானத்தை ஒருநாள் கூட பார்த்ததில்லை. இந்த நாற்பது வருடங்களில் அவன் இழந்தது கிட்டத்தட்ட ஆயிரம் முழுநிலவுகள், பதினைந்தாயிரம் சூரிய உதயம், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். இரவில் வானம் என்ன நிறமென்று கூட அவனுக்கு மறந்துப்போனது. இலையுதிர் கால மரங்கள் எப்படி இருக்குமென்று மறந்துப்போனான். அணில்கள் எப்படி கிளைகளில் தாவுகின்றன என்று தெரியாது. கிளியின் நிறம் என்னவென்று தெரியாது. பனித்துளிகள் வானில் இருந்து இறங்குவதை கவனிக்க தவறிவிட்டான். இந்த நாற்பது வருட வாழ்க்கையில் ஒவ்வொரு பருவகாலத்திலும் மரங்களில் என்ன நிறப்பூக்கள் பூக்கின்றன என்று அவனுக்கு தெரியாமலேயே போனது.

நான் அன்றாடம் வேலைக்கு செல்கின்றேன். நிறைய பணம் சம்பாதிக்கின்றேன். எனது குடும்பத்தை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன் நான் ஏன் நாவல்கள்,இலக்கியம் படிக்க வேண்டும்? நான் ஏன் சக மனிதர்களின் வாழ்க்கையை கவனிக்க வேண்டுமென்று ஒரு நண்பர் கேட்டாரல்லவா? அவருக்கு நான் சொன்ன கதைதான் இது

Saturday, June 22, 2013

ஒரு மனோதத்துவ நிபுணரும் அவரது நவீனக்கவிதையும்

ஒரு மனோதத்துவ டாக்டரிடம் பேசிக்கொண்டிருந்தேன். பொதுவாக நான் மனோதத்துவ நிபுணர்களிடமும், சாமியார்களோடும் (குறிப்பாக கார்ப்பரேட் சாமியார்கள்) உரையாடுவதை தவிர்க்கவே விரும்புவேன். காரணம் அவர்களோடு உரையாடி ஜெயிக்கவே முடியாது. அவர்களிடம் பேச ஆரம்பித்த ஐந்து நிமிடங்களிலே நமது ஐடியாலஜியை அப்படியே நமது மண்டைக்குளிருந்து உருவி அவர்களது ஐடியாலஜியை பொருத்தி விடுவார்கள்.

விஷயத்துக்கு வருகின்றேன்.

இந்த பேஸ்புக்கில் கிறுக்கறது, லைக் போடுறது,கமெண்ட் போடுறது எல்லாம் கூட ஒருவகை மனோவியாதிதான் என்று சொன்னார் டாக்டர். ஒருக்கணம் அதிர்ந்து விட்டேன். 

இப்படித்தான் முன்பு இன்னொரு மனோதத்துவ நிபுணரிடம் உரையாடியபோது அவர் சொன்னார். "அடக்க முடியாத காமத்தின் வெளிப்பாடே கலைப்படைப்புகள். ஒருத்தன் செக்சில் திருப்தியடைந்து விட்டால் அவன் கதை,கவிதை மாட்டான்." என்றார். இது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால் பொதுவாக மனோதத்துவ நிபுணர்கள் கலை, இலக்கிய செயல்பாடுகளுக்கு எதிராக அல்லது குறைந்தபட்சம் அட போங்கய்யா நீங்களும், உங்க கவிதையும் என்று சலித்துக் கொள்பவர்களாகவே இருக்கின்றார்கள்.

"ஆடும் கூத்து" என்ற திரைப்படம். டிவி.சந்திரன் இயக்கியது. இந்தப் படத்தை பற்றி ஏற்கனவே இங்கு எழுதியுள்ளேன். இந்த படத்தில் நவ்யாநாயர் ஹீரோயின். அவர் கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். படத்தில் அவர் பெயர் மணிமேகலை. சுட்டித்தனமான பெண். அப்பா செல்லம். நல்ல படிப்பாளி. அசோகமித்திரன்,ஜெயகாந்தன் என்று தரமான புத்தகங்களை நூலகங்களில் தேடி தேடி எடுத்து படிப்பாள். திடீரென ஒருநாள் மணிமேகலைக்கு பூர்வஜென்ம நினைவுகள் வந்துவிடும். அவளது நடவடிக்கைகள் அடியோடு மாறிவிடும். அவள் சொல்லும் எதையும் யாரும் நம்ப மாட்டார்கள். அவள் எல்லா விஷயங்களையும் அவளது சொந்தக் கற்பனையிலிருந்து உருவாக்கி சொல்வதாக அனைவரும் நம்புவார்கள்.  

மணிமேகலைக்கு மனநிலை சரியில்லையென்று அவளது தந்தை வீட்டுக்கு ஒரு சைக்கியாரிஸ்டை அழைத்து வருவார். மணிமேகலை பெரிய படிப்பாளி என்று அவள் அப்பா டாக்டரிடம் சொல்வார். டாக்டர் அவள் என்ன மாதிரி புத்தகங்களை படிக்கிறாள் என்று கேட்க, அவளது தந்தை மாடியில் இருக்கும் மணிமேகலை அறையை காட்டுகிறார். டாக்டரும் மணிமேகலை அறைக்கு செல்வார். புதுமைப்பித்தன்,மெளனி, ஜெயகாந்தன், பஷீர்,தி.ஜா, அசோகமித்திரன், பாரதியார்.... டாக்டர் பயந்துபோய் பேயை பார்த்தது போல அலறியடித்துக்கொண்டு மாடி அறையிலிருந்து வெளியே ஒடி வருவார்.

"ஒரு ஆள் இரண்டு ஆள் இல்லை..பிள்ளைவாள்...உள்ளே ஒரு நாசகார கும்பலே இருக்கிறது. வெரி டேஞ்சரஸ் கைஸ்" சொல்லியபடியே பயந்துபோய் வீட்டை விட்டு வெளியே ஓடுவார்.

மணிமேகலை தந்தை அந்த புத்தகங்களையெல்லாம் ஒளித்து வைப்பார். பிற்பாடு ஒரு காட்சியில் மணிமேகலை நார்மலாகத்தான் இருக்கிறாள் என்று அவர் ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்போது, மணிமேகலை தயங்கியபடியே ஒளித்து வைத்த அந்த புத்தகங்களையெல்லாம் எடுத்து வந்து தந்தையிடம் கேட்பாள்.

“நான் சொன்னது பொய்யில்லைனா...இவங்க சொல்றதும் பொய்யில்லைலே? இவங்கள உள்ளே சேர்த்துக்கலாமா?” என்று கேட்பாள்.
 
மனோதத்துவ நிபுணர்களுக்கு  ஏன் எழுத்தாளர்களை பார்த்தால் காண்டாகின்றது. நான் நினைக்கின்றேன். ஒருவிதத்தில் மனோதத்துவ நிபுணர்களும், எழுத்தாளர்களும் ஒரே வேலையை செய்கின்றார்கள் என்று நினைக்கின்றேன். இருவருமே மனதின் சிக்கலான சூட்சுமங்களை ஆராய்ச்சி செய்கின்றார்கள். தன்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளை நுட்பமாக கவனிக்கின்றார்கள். காமம் எங்கிருந்து உருவாகின்றது என்று உற்று கவனிக்கின்றார்கள். மனதின் விசித்திரமான செயல்பாடுகளை அணு அணுவாக பதிவு செய்கின்றார்கள். எழுத்தாளன் என்றால் அதை அவனது பாத்திரப்படைப்பிற்கு பயன்படுத்திக் கொள்கின்றான். மனோதத்துவ நிபுணர் அதை அவரது ஆராய்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கின்றார். கேஸ் ஸ்டடியாக மாற்றி வைத்துக் கொள்கின்றார்       

சரி. எங்கள் உரையாடலுக்கு வருகின்றேன். 

"ஒரு எழுத்தாளன் என்பவன் அடிப்படையில் மனோதத்துவம் தெரிந்தவனாகவே இருக்க முடியும். அப்போதுதான் அவனால் எழுத முடியும். ஆனால் ஒரு மனோதத்துவ நிபுணரால் கலை இலக்கிய தளத்தில் செயல்பட முடியாது. வட்டிக்கடைக்காரனிடம் வெற்றுத்தாளை கொடுத்தால் அதில் அவன் எண்களை மட்டும்தான் கிறுக்குவான்" என்றேன்.

டாக்டருக்கு கோபம் வந்து விட்டது. 

"யார் சொன்னது? எங்களுக்கும் எழுத வரும்" - என்றார்.

டாக்டர் மேசை டிராயரை திறந்தார். ஸ்கிரிப்லிங் பேட்டை எடுத்து எதையோ யோசிக்க ஆரம்பித்தார். பின்பு வேகமாக எழுத ஆரம்பித்தார். எழுதி முடித்தவுடன் என்னிடம் அதைக் கொடுத்தார். வாங்கி பார்த்து விட்டு ஆடிப்போய் விட்டேன். பிரமாதமாய் இருந்தது கவிதை. கண்டிப்பாக இவர் ஏதாவது இலக்கியப்பத்திரிக்கையில் புனைப்பெயரில்எழுதுபவராகத்தான் இருக்க முடியும்.  

"ஆஹா ஆஹா பிரமாதம் பிரமாதம்" என்றேன்.
                 
ஸ்கிரிப்லிங் பேட்டில் அந்த நவீனக்கவிதை இருந்தது இப்படி.

வட்டம்               
-------------
வட்டம்
வட்டத்திற்குள் வட்டம்
வட்ட வட்டமாய் வட்டம்
வட்டமே வட்டமாய்
வட்டத்திற்குள் வட்டம்       

Thursday, January 24, 2013

முந்தி பிறந்தவன்

நான் இரண்டாயிரத்து பதிமூன்றில்
நின்றுக்கொண்டு
இரண்டாயிரத்து அறுபத்திமூன்றிற்கான
கவிதைகளை எழுதிக்கொண்டிருக்கின்றேன்
நான் ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்திருக்க வேண்டும்

அல்லது
எனது கவிதைகள்
ஐம்பது வருடங்கள் முந்தி பிறந்து விட்டன
அல்லது
நீங்கள் ஒரு ஐம்பது வருடங்கள் பிந்தி பிறந்தால்
வானத்திலிருந்து இறங்கி வந்த இரண்டு தேவதூதர்கள்
ஒய்எம்சிஏ திடலில் நின்றுக்கொண்டு
எனது கவிதைத்தொகுப்பை விமர்சிப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
பச்சைநிறக் கொம்புகள் கொண்ட இரண்டு ஏலியன்கள்
எனது கவிதையை படித்து
கழிவிரக்கம் கழிவிரக்கமென்று
தலையில் அடித்துக்கொண்டுச் செல்வதை பார்த்திருக்கலாம்

அல்லது
நீலக்கண்களும் பொன்னிற கூந்தலுங்கொண்ட
தேவேலோக சுந்தரிகள் (ஒட்டிப்பிறந்த சகோதரிகள்)
எனது கையெழுத்து வேண்டி புத்தகக்கடை வாசலில்
ஏக்கத்துடன் தவமிருப்பதை பார்த்திருக்கலாம்

அல்லது
…….
…….
…….

நீங்கள்
ஒரு ஐம்பது வருடங்கள் முந்திப்பிறந்து விட்டீர்கள்
அதை விட குறிப்பாக
இந்தக்கவிதையை ஒரு ஐம்பது வருடங்கள் முந்தி
படித்துத் தொலைத்து விட்டீர்கள்



நன்றி
என்.விநாயக முருகன் 

Friday, September 21, 2012

குஞ்சுண்ணியும், வேதாளமும்

எழுதி எழுதியே எழுத்தாய் போன
குஞ்சுண்ணியின் கதையிது

குஞ்சுண்ணிக்கு திடீரென
பேய்க்கதைகள் எழுதும் ஆசை வந்தது

நடுநிசியில் எழுந்த குஞ்சுண்ணி
ஊர்க்கோடி கல்லறை நோக்கி
தனியாக நடக்க ஆரம்பித்தார்

நூறாண்டு வயதான
முருங்கை மரத்தடியில்
பேப்பர் பேனாவுடன் அமர்ந்தார்

இரிசிக் காட்டேரி
இரத்தக் காட்டேரி
ஆலகால பேய்
ஆளை கொள்ளும் பிரம்ம ராட்சஷன்
கதாபாத்திரங்களை வரிசையாக எழுத ஆரம்பித்தார்

ஏதேதோ கிறுக்க ஆரம்பித்தார்
என்ன எழுதியும் குஞ்சுண்ணிக்கு
திருப்தி வரவில்லை
எல்லாமே ஏற்கனவே எழுதியாயிற்றே
இனி நடக்கப்போவதும் எழுதப்பட்டவையே

குஞ்சுண்ணி கண்மூடி வேண்டினார்
எண்டே பகவதி அம்மே அருள் பாவிக்கனும்
ஒரு வல்லிய கதையை தரணும்
கண்ணை திறந்தார்
எதிரே
வெளுத்த முடி வேதாளமொன்று
குறுநகையோடு நின்றது

நடுங்கி போனார் குஞ்சுண்ணி
எண்டே அம்மே அலறினார்

நோக்கா குஞ்சுண்ணியே அஞ்சற்க
உனக்கு ஞான் உதவி செய்யும்

நீ அறியா மரித்துப்போனவர்களின்
கதை சொல்கின்றேன். கேள்

நீ பிரான்ஸ் காப்கா அறியுமோ
அவன் தற்கொலை செய்த கதை சொல்கின்றேன்
கவனமாய் கேள்

குஞ்சுண்ணி சொன்னார்
காப்கா கதை தெரிந்ததுதானே
துப்பாக்கியால் சுட்டுக்கொள்ளுமுன்
அவன் என்னுடன்தான்
அரைமணிநேரம் கதைத்தான்
எனது நாவல் என்றால் அவனுக்கு உயிர்

வேதாளம் திகைத்தது

குஞ்சுண்ணியே கவனமாய் கேள்
உனக்கு பாரதியாரை தெரியுமா
அவரை மிதித்துக்கொன்ற யானையின் பெயர் .....

குஞ்சுண்ணி இடைமறித்தார்
நான் அப்ப திருவல்லிக்கேணியில்தானே இருந்தேன்
நாடி வைத்தியரை கூட நான்தான் அழைத்து வந்தேன்
தெரிந்த கதைதானே. வேறு சொல்

வேதாளம் சலிப்புடன் சொன்னது
குஞ்சுண்ணியே உனக்கு ஆத்மாநாம் தெரியுமா
கிணற்றில் விழுந்து இறந்த அவரை
இங்குதான் புதைத்தார்கள்

ஆத்மாநாம்..
அட நம்ம ஆதி
அவனுக்கு நான் என்றால் உயிர்
சாவதற்கு முன்னால்
அவனிடம் பேசிய ஒரே ஆள் நான்தான்

வேதாளம் எரிச்சலுடன் கேட்டது
உனக்கு கவிஞர் அய்யப்பனை தெரியுமோ?
குடித்து குடித்தே இரத்தம் கக்கி இறந்தவர்

அய்யப்பனோ...அறியாமலோ
அவன் என்னை பற்றி
ஆறு கவிதைகள் புகழ்ந்து எழுதியுள்ளானே
நீ படித்ததில்லையா?

வேதாளத்திற்கு வியர்க்க ஆரம்பித்தது
குஞ்சுண்ணியே இதுதான் இறுதி கதை
முன்னொரு சமயம்
இரத்தினபுரி தேசத்தில்
ரங்கராஜனென்று ஒருத்தன் இருந்தான்

அவன் எழுதாத விஷயமே இல்லை
திடீரென ஒருநாள்
அவன் இறந்தும் போனான்
அவன் கதை அறிவாயோ?
வேதாளம் கேட்டது

குஞ்சுண்ணி சொன்னார்
நம்ம ரங்குதானே
நானும் அவனும்
கோனார் தோப்பில்
மாங்காய் திருடி சாப்பிட்டுள்ளோம்
எனது எழுத்தை கண்ணில் ஒற்றிக்கொள்ளுவான்

வேதாளம் தலை கிறுகிறுக்க
முருங்கை மரத்திற்கு தாவியது

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத
குஞ்சுண்ணி
வேதாளத்தை தோளில் சுமந்தபடி திரும்பினார்


நன்றி
என்.விநாயக முருகன்

Thursday, June 21, 2012

ஆடுகளம்
-----------------
ஒரு மாலை வேளையில்
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு மெல்லிய தலையசைப்பு

ஒரு புன்சிரிப்பிற்கு பிறகு
ஒரு அன்பான கைகுலுக்கல்
ஒரு நலம் விசாரிப்பில்

இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது
ஒரு நிதானமான
தேநீர் பருகலுக்கு பிறகு
இந்த ஆட்டம் தொடங்கப்பட்டது

நமக்கான இடத்தை தேர்வு செய்து
கறுப்பும் வெண்மையும்
கலந்த கட்டங்களின் முன்பாக
நேருக்கு நேர் அமர்கின்றோம்

கட்டங்களின் நிற வேறுபாடுகளை
எதேச்சையாக கவனிக்கும் நாம்

திடீரென நமது முகங்கள்
எதிரெதிர் சந்தித்துக்கொள்வதின்
தர்மசங்கடத்தை உணர தொடங்குகிறோம்

நாம் இருவரும் எதுவும் பேசிக்கொள்ளாமல்
சதுரங்க காய்களை அடுக்குகின்றோம்
களத்திற்கு செல்லும் சாமுராய்

தனது கொலைவாளை
மிருதுவான எண்ணெய் துணியால்
துடைப்பதை போன்று
அவ்வளவு நேர்த்தியாக

ஆட்டத்தை முதலில் ஆரம்பிக்கும் நீ
உனது படைவீரனை களம் இறக்குகின்றாய்

குதிரையிலிருந்தபடி அவனை வீழ்த்தும்
என் ஆவேசம் கண்டு
நீ அரண்டு போகிறாய்
உனது பயம் ரசிக்க வைக்கின்றது

ஒரு வளைவில் திரும்பும்போது
உனது யானை படைகள்
என்னை வழிமறித்து தாக்குகின்றன
தடுமாறி விழுபவனை பார்த்து
மதகுருமார்களும் படைவீரர்களும்
கைகொட்டி சிரிக்கின்றார்கள்

ஆட்டம் மெல்ல மெல்ல
கட்டுப்பாட்டை மீறி போகின்றது
ரெளத்திரம் கொள்ளும்
எனது படைவீரர்கள்
ஆவேசத்துடன் பாய்கின்றனர்

வஞ்சகமும் வெறியும் கலந்த
நமது மதகுருமார்களின் போதனைகள்
கொலைக்களமெங்கும் எதிரொலிக்கின்றன

இதுநாள் வரை ஆடுகளத்திற்கென்று
வரையறுக்கப்பட நியதிகள் உடைபடுகின்றன

நாம் அமர்ந்திருக்கும்
அறையெங்கும் குருதி வாசனை
கவிழ தொடங்குகிறது

நம்மிடம் இன்னும்
ஐந்து போர்வீரர்கள் மட்டும்
எஞ்சியுள்ளார்கள்
யார் யாரை கொல்வார்கள்
என்று தீர்மானிப்பது கடினமாயுள்ளது

ஆசுவாசப்படுத்திக்கொள்ளும் பொருட்டு
எழுந்து வெளியில் செல்லும் நான்
நடுங்கும் கைகளுடன்
ஒரு சிகரெட் பற்றவைத்து
களத்திற்கு திரும்பி வருகின்றேன்
பதற்றமாக சதுரங்க களத்தை
பார்வையிடுகின்றேன்

நான் இல்லாத நேரத்தில்
எனது சதுரங்க காய்களை
யாரும் நகர்த்தி வைக்கவில்லையென்று
உறுதி செய்கின்றேன்
முதுகில் குத்தி கொலை
செய்யப்படவில்லையென்று
ஆசுவாசமடைகின்றேன்

ஆட்டத்தை தொடங்கும்போது
இருந்த நமது முகங்கள்
இப்போது இங்கு இல்லை
அவை வேறொருவடையதாய் மாறியிருக்கின்றன

கூடுமானவரை
நானும் நீயும்
இந்த ஆட்டத்தை
தள்ளி போடவே விரும்புகின்றோம்

இந்த 64 கட்டங்களில்
எங்கோ ஒளிந்துள்ளது
மரணமும்
மரணத்தை தள்ளிபோடும்
இந்த விளையாட்டும்

இன்னும் சில நிமிடங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில மணித்துளிகளில்
இந்த ஆட்டம் முடியலாம்
இன்னும் சில யுகங்களில்
இந்த ஆட்டம் முடியலாம்

கருணையற்ற இந்த இரவு
நீண்டுக்கொண்டே செல்கின்றது



நன்றி

என்.விநாயக முருகன்

Monday, April 16, 2012

மகாகவி

ஒரு கவிஞன்
அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம்
அலாரம் வைத்து எழுந்துக் கொள்கிறான்

குளியலறை சென்று
குழாயில் தண்ணீர் வருகின்றதாவென்று
சரி பார்க்கின்றான்
தூக்க கலக்கத்தில் கவிதை போல
நிழலாடுகின்றது ஏதோவொன்று
தண்ணீர் ஒழுகும் ஓட்டை வாளியை பார்த்தக்கணம்
அவன் கற்பனை வடிந்து விடுகின்றது

பல்துலக்கி டிபன் சாப்பிட்டு அலுவலகம் விரைகின்றான்
பேருந்தில் நடத்துனர்
கிழித்து கொடுக்கும் பயணச்சீட்டு
அவனை கவிஞனென உணரவைக்கின்றது
பயணச்சீட்டின் பின்புறம் பேனாவால்
இரண்டு வரி எழுதுகின்றான்

அலுவலக தேநீர் இடைவெளியில்
அவன் மேலும் இரண்டு வரிகளை யோசிக்கின்றான்
மதிய இடைவெளியில்
முதல் இரண்டு வரிகளை திருத்தி அழிக்கின்றான்
அலுவலக மேலாளர் வசவிற்கு
பிறகு கழிப்பறை செல்கின்றான்.
அங்கு இரண்டு வரிகள்

இடையே பங்குச் சந்தை முதலீடு
முடிச்சூர் சாலையின் ரியல் எஸ்டேட்
மகள் பெயரில் காப்பீடு திட்டம்
மாமனார் ஊருக்கு செல்ல
தட்கலில் முன்பதிவு
மகனுக்கு கல்வி லோன்
மகளுக்கு பள்ளிகூட விண்ணப்பம்
இன்னும் பல பல வேலைகளுக்கு இடையில்
வரிகள் வளர்கின்றன

மாலை வீடு திரும்பும்போது
பத்தாவது வரி முழுமையடைகிறது
இரவு உணவிற்கு பின்னர்
குறிப்பேடு,பேனாவுடன்
தூங்கி போகும் அவன்
திடீரென படிமம்,இருண்மையென அரற்ற
யோவ் பேசாம மூடிகிட்டு தூங்கமாட்ட
மனைவி அதட்டுகிறாள்

ஒரு கவிஞன்
புரண்டு படுக்கிறான்

காலையிலிருந்து
பொறுத்து பொறுத்து பார்த்த
ஒரு கவிதை
தன்னைத்தானே எழுதிக் கொள்ள ஆரம்பிக்கின்றது

நன்றி
என்.விநாயக முருகன்