Thursday, September 25, 2014

புலி விளையாட்டு

காட்டில் வேடிக்கை பார்க்கச்சென்றவனை
எதேச்சையாக கவனிக்கும்
புலியொன்று அடித்துக்கொல்கிறது


அதை கவனிக்கும்
இன்னொரு மனிதன்
தனது அலைபேசியில்
கவனமாக பதிவு செய்கிறான்

அடுத்த ஐந்து நிமிடங்களில்
அந்த பதிவு நகரமெங்கும் பரவுகிறது
இணையம், பத்திரிக்கை, தொலைக்காட்சி
என்று மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிறது

கருணையற்ற வேட்டைக்கண்கள் முன்பு
தனது கைகளை கூப்பியபடி அமர்ந்திருக்கும்
மனிதனின் இறுதிக்கணத்தை பார்த்து
நகரத்தின் மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள்

காப்பாற்றாமல் படம் எடுத்தவனின்
பொறுப்பற்றத்தனத்தை
திட்டி தீர்க்கிறார்கள்

அப்படி செய்திருந்தால்
அவனையுமல்லவா புலி கொன்றிருக்குமென்று
சிலர் வாதாடுகிறார்கள்

புலி அடித்த மனிதனை பற்றிய
விதவிதமான ஊகங்கள் நகரெங்கும் பரவுகின்றது

அவன் தற்கொலை செய்ய
உத்தேசித்து காட்டுக்குச்சென்றவன்

என்னதான் இருந்தாலும்
புலி அப்படி செய்திருக்கக்கூடாது

புலி பயந்திருக்கும்

அந்த மனிதன் எதற்கு
புலியின் வீட்டுக்குள் செல்ல வேண்டும்

புலியை எல்லாம் கைது செய்ய முடியுமா?
என்னதான் இருந்தாலும் தப்பு அந்தாளு மேலதான்

எவ்வளவு நுட்பமாக பதிவு செய்திருக்கிறான்
கண்டிப்பாக கேனான் கேமராவேதான்

புலிக்கும் அவனுக்கும்
இடையே நடந்த இறுதி உரையாடல்
தெரிந்துக்கொள்ள நகரமக்கள் விழைகிறார்கள்

தனது வாழ்வின் இறுதியில்
ஏன் புலியை பார்த்து கும்பிட்டான்
படம் எடுத்தவனை பார்த்து கும்பிடவில்லை

புலி ஏன் பத்து நிமிடங்கள்
அமைதியாக காத்திருந்து பிறகு தாக்கியது

புலிக்கும் அவனுக்குமான
அந்தரங்கத்தை அறிந்துக்கொள்ள
முடியாமல் மீண்டும் மீண்டும் வீடியோவை
பார்த்து குழம்பி தவிக்கிறார்கள்

புலி அடித்த மனிதனுக்காக
ஒருக்கணம் கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்

இனி யாரும் புலியுடன் பேசக்கூடாது என்று
தங்கள் குழந்தைகளுக்கு போதனை செய்கிறார்கள்

இது எதுவும் தெரியாத புலி
நகரின் எல்லையில் இருக்கும் வனத்தில்
ஒரு ஜென்துறவி போல
தனிமையின் சூன்யத்தை பார்த்துக்கொண்டிருக்கிறது.

அதனிடம் எந்த தத்துவச்சிக்கல்களும் இல்லை
எந்த கேள்விகளும் இல்லை
எந்த குற்றவுணர்வும் இல்லை
எந்த பெருமிதமும் இல்லை
கனவுகள் இல்லை
அடுத்தவேளைக்கான
இரை பற்றிய கவலை கூட இருப்பதாக தெரியவில்லை
அடுத்து செய்யக்கூடிய திட்டம் எதுவுமில்லை
அது மனிதனல்ல
அது வெறும் புலி
அவ்வளவே

Saturday, September 20, 2014

எழுத்தால் இருளைக் கடந்தவன்

(இம்மாத 'உயிர் எழுத்து' இதழில் வெளியான எனது கட்டுரை) 

இந்த வருடத்துக்கான சாகித்ய அகாடமியின் 'யுவபுரஸ்கார்' விருது 'கால்கள்' நாவல் எழுதிய எழுத்தாளர் அபிலாசுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொடர்ந்து படைப்புலகில் இயங்கிவரும் தகுதியான இளம் எழுத்தாளருக்கு விருது கிடைத்துள்ளது. விருதுஅறிவிப்பின் இரண்டுநாட்களுக்கு முன்புதான் நாங்கள் அவரது அடுத்த நாவல் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். 

அபிலாஷை நேரில் சந்தித்தது ஓர் இலக்கியக்கூட்டத்தில்தான். சென்னை மேற்கு கே.கே.நகரில் இருக்கும் டிஸ்கவரி புக் பேலசில் நடந்த விஜயமகேந்திரனின் நூல் விமர்சனக்கூட்டத்துக்கு வந்திருந்தார். கூட்டம் முடிந்ததும் நல்ல மழை. பெரும்பாலானோர் கடைக்கு வெளியே மழைக்காக ஒதுங்கியிருந்தார்கள். மாடியில் அபிலாசும், நானும் இன்னும் சில நண்பர்களும் மட்டும் இருந்தோம். 'உயிரோசை'யில் கவிதைகள் எழுதியுள்ளேன் என்று என்னை அறிமுகம் செய்துக்கொண்டேன். 

பேஸ்புக் வந்திராத காலம் அது. வலைப்பதிவர்கள் பலர் செறிவாக எழுதிக்கொண்டிருந்த காலம். இணையப்பத்திரிக்கைகள் செல்வாக்கு நிறைந்த காலம். மனுஷ்யபுத்திரன் நடத்திவந்த உயிரோசை என்ற இணையத்தளம் இளம் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தி செறிவான கட்டுரைகளையும், கவிதைகளையும் வெளியிட்டுக்கொண்டிருந்த காலம். எங்கள் அலுவலக ஊழியர்கள் மட்டுமே படிக்கும் உள்வலைத்தளம் ஒன்றுள்ளது. பெரும்பாலும் அவரவர் மொழியில் எழுதும் சுதந்திரம் அங்குண்டு. அதில் எங்கள் அலுவல ஊழியர்கள் கவிதை, கட்டுரை,சிறுகதைகள் எழுதுவார்கள். அந்த வலைத்தளம் தவிர அலுவலகம் வெளியில் இயங்கும் இணையப்பத்திரிக்கைகளிலும் எழுதுவார்கள். அவர்களில் சிலர் அவ்வபோது கேண்டீனில் சந்தித்து தாங்கள் படித்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்வார்கள். திண்ணை,கீற்று,உயிரோசை போன்ற இணையதளங்களில் வெளியாகும் தங்கள் கவிதை,கதைகளை பெருமையாக மற்றவர்களிடம் காட்டுவார்கள். அது போன்ற தருணமொன்றில்தான் அபிலாசின் எழுத்துக்கள் அறிமுகமானது. அலுவலக நண்பர் உயிரோசை இணையத்தளத்தில் வெளியான அபிலாசின் கட்டுரையை எனக்கு லிங்க் அனுப்பி வைத்தார். கட்டுரை படிக்க தனித்துவமான மொழியில் மிகசெறிவாக சுருக்கமாக இருந்தது. அன்றிலிருந்து உயிரோசையை தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். எனது முதல் கவிதையை உயிரோசைக்கு அனுப்பி வைக்க பிரசுரம் ஆனது. தொடர்ச்சியாக கவிதைகள் மட்டுமே எழுதிக்கொண்டிருந்த வேளையில்தான் அபிலாஷை முதலில் சந்தித்து என்னை அறிமுகம் செய்துக்கொண்டு பேச ஆரம்பித்தேன். அபிலாஷை சந்திக்கும்வரை அவர் கட்டுரை, மொழிபெயர்ப்பு கவிதைகள் எழுதுபவர் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரை சந்தித்து பேசிய சில நிமிடங்களில் அவர் கதை, கவிதை, சிறுகதை, நாவல் என்று பலதுறைகளில் இயங்குபவர் என்று தெரியவந்தது. பிறகு அவர் உயிரோசையில் எழுதுவதையும், அவரது பிளாக்கில் எழுதுவதையும் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன். அடிக்கடி போனிலும் எப்போதாவது அபூர்வமாக மட்டுமே நேரிலும் சந்தித்து பேச ஆரம்பித்தோம். 

கடந்த ஆண்டு நாவல் எழுதவேண்டும் என்று எனக்குள் ஏதோவோர் எண்ணமும், உந்துதலும் கொந்தளிப்பான தீவிர மனநிலையும் தொடர்ந்து வந்துக்கொண்டே இருந்தது. அதற்குமுன்பு அப்படியெல்லாம் எந்தவித திட்டமிடலும் எனக்கு இல்லை. ஏதாவது தோன்றுவதை பிளாக்கில், பேஸ்புக்கில் எழுதுவது என்றுதான் நாட்கள் ஓடின. யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை. ஒருநாள் அபிலாசுக்கு போன் செய்து நான் ஒரு நாவல் எழுத ஆரம்பித்துள்ளேன். அது சரியா வருமா என்று தெரியவில்லை. எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. பத்து பக்கங்கள் எழுதி பார்த்தேன். சரியாக வரவில்லை. கிழித்துப்போட்டாலும் உறக்கம் வரவில்லை. திரும்ப எழுத வேண்டும் போல ஏதோ துரத்துகிறது என்று சொன்னேன். அபிலாஷ் தனது கால்கள் நாவலை பற்றியும், அதை என்ன மாதிரியான மனநிலையில் எழுத ஆரம்பித்தார் என்பதை பற்றியும் நிறைய பேசினார். 

போலியோவால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் கடல்கன்னி போல உட்கார்ந்திருக்கிறாள். அந்த காட்சிபடிமம் எனது மனதில் வந்ததும் ஏதோ ஓர் உத்வேகத்தில் எழுத ஆரம்பித்தேன் என்று சொன்னார். எனக்கும் அதுவே நடந்தது. இரை விழுங்கிய மலைப்பாம்பு போல சாலை நீண்டு வளைந்து கிடந்த ஒரு காட்சிபடிமம் எனது மனதுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. அதைத்தான் எப்படி இன்னும் விரிவாக எழுதுவது என்று தவித்துக்கொண்டிருந்தேன். ஒரு சொல் அல்லது ஒரு காட்சிபடிமம் மெல்ல மெல்ல வளர்ந்து பிரமாண்டமான கதையாக உருவெடுக்கும் என்று அபிலாஷ் சொன்னார். எழுதுங்க. உங்களால் முடியும் என்று ஒருமணி நேரம் வரை பல ஆலோசனைகள் சொன்னார். சரிதான் நம்மை ஊக்கப்படுத்த சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்த நாட்கள் அவராகவே போன் செய்து தொடர்ந்து நாவலை பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். மெல்ல மெல்ல தயக்கமும், பயமும் மறைந்து எனக்கு வேறுவிதமான கவலை வர ஆரம்பித்தது. நாவல் எழுதுவது ஒரு நல்ல அனுபவம். ஆறுமாதங்களோ ஒரு வருடமோ ஒரு நாவல் எழுதுவீர்கள். அந்த காலக்கட்டத்தில் உங்கள் அன்றாட வேலைகளை செய்துக்கொண்டே இருப்பீர்கள். குளித்துமுடித்து சாப்பிட்டு பஸ் பிடித்து அலுவலகம் சென்று மீண்டும் மாலை வீட்டுக்கு வருவது. இது ஓர் உலகம். ஆனால் உங்களுக்குள் இன்னோர் உலகம் சுழன்றுக்கொண்டே இருக்கும். அங்கே உங்கள் நாவலில் வரும் மனிதர்கள் இருப்பார்கள். நாவலில் வரும் சம்பவங்கள் நடக்கும். அங்கேயும் நீங்கள்தான் இருப்பீர்கள். ஆனால் இங்கே இருப்பவர்களால் அங்கே இருக்கும் உங்களை பார்க்க முடியாது. மற்றவர்கள் கண்ணுக்கு தெரியாமல் நீங்கள் உருவாக்கின உலகத்தில் நீங்கள் உருவாக்கின மனிதர்களோடு நடமாடிக்கொண்டிருப்பீர்கள். அது ஓர் அழகிய அனுபவம். அதை அனுபவித்தால் போதையாக இருக்குமென்று அபிலாஷ் சொன்னார். எனக்கு பயம் வந்துவிட்டது. நாவலை எப்படி எழுதுவது என்பதிலிருந்த கவலை மெல்ல மெல்ல திசைதிரும்பி நாவலை எப்படி முடிப்பது என்று மாற ஆரம்பித்தது. நான் எழுத எழுத அவரிடம் பகிர்ந்துக்கொண்டேன். முழுக்கதையை சொல்லாவிட்டாலும் என்னமாதிரி எழுதுகிறேன் என்னமாதிரி கதாபாத்திர அமைப்புகள் வருகின்றன என்று சொல்வேன். அவர் உடனே வேறு ஏதாவது படித்த நாவலை பற்றி பேசுவார். அதைப்பற்றி விவாதிப்போம். மனச்சோர்வு இல்லாமல் இருந்தது. இப்படியாக நான்கைந்து மாதங்கள் ஓடின. 

நாவலை எழுதி முடித்ததும் மென்பிரதியை அவருக்கு அனுப்பி இதை படித்துபார்த்து உங்கள் ஆலோசனை சொல்லமுடியுமா என்று கேட்டிருந்தேன். அப்போது அவர் கவிதைத்தொகுப்பு ஒன்று வெளியிடுவதற்காக தீவிரமாக உழைத்துக்கொண்டிருந்தார் என்று தெரியவந்தது. சரி. தொந்தரவு செய்ய வேண்டாமென்று அதிகம் வற்புறுத்தவில்லை. டிசம்பர் மாதம் நாவல் வெளியீட்டுவிழா என்று போன் செய்து தேதியை சொன்னேன். எனது கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழாவும் அன்றுதான் என்றார். எங்கள் இருவரின் புத்தகங்களும் ஒரே பதிப்பகம் என்பதாலும் ஒரே நாள் என்பதாலும் அழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. ஒரே மேடையில் அமர்ந்திருந்ததும் சந்தோஷமாக இருந்தது. 

பிறகு ஜனவரி மாதம் பேஸ்புக்கில் சிலர் என்னை தொடர்ந்து மோசமாக தாக்கி எழுத ஆரம்பித்தார்கள். ஏன் தாக்குகிறார்கள் என்றே தெரியவில்லை. புத்தகத்தை படிக்காதவர்கள் கூட என்னையும் எனது குடும்பத்தினரையும் திட்டி ஆபாசமாக விமர்சனம் என்ற பெயரில் பதிவுகள் எழுதினார்கள். பேஸ்புக் கணக்கை கூட மூடிவைத்துவிடலாமா என்று தோன்றியது. அப்போதுதான் அபிலாஷ் எனக்கு போன் செய்து "ஒன்றுமில்லை நீங்கள் உங்கள் நாவலை பேஸ்புக்கில் விளம்பரம் செய்ததால்தான் இப்படி நடக்கிறது. நீங்கள் ஒருவேளை பேஸ்புக்கில் இல்லாமல் போயிருந்தால் அல்லது விளம்பரம் செய்யாமல் அப்படியே புத்தகத்தை வெளியிட்டிருந்தால் எதுவும் நடந்திருக்காது" என்று சொன்னார். அடுத்தநாள் அவரது வலைதளத்தில் எனது நாவலை விமர்சனம் செய்து ஒரு கட்டுரை வெளியிட்டார். அபிலாஷ் எழுதிய கட்டுரைதான் எனது நாவலுக்கு வந்த முதல் விமர்சனம். கறாராக விமர்சனம் செய்திருந்தார். அதன்பிறகு பேஸ்புக் புழுக்களின் கொஞ்ச கொஞ்சமாக குறைந்தது.அபிலாஷ் என்னிடம் அடிக்கடி சொல்வார். உடனடியாக எந்தவித எதிர்வினையும் செய்யாதீர்கள். ஒரு நாவலை எழுதிமுடித்தால் அடுத்த படைப்பு பற்றி யோசித்து அதை நோக்கி நகர்ந்துச்செல்வதே நல்லது. நல்ல புத்தகம் என்றால் அது சில வருடங்கள் கழித்து கண்டிப்பாக பேசப்படும் என்றார். அது உண்மைதான் என்று தோன்றுகின்றது. உடனடி எதிர்வினை ஆரோக்கியக்குறைவை உண்டுசெய்து நம்மை நோயில் தள்ளிவிடும். 

பிப்ரவரி மாதம் ஊட்டியில் வசிக்கும் மலைச்சொல் கலை இலக்கிய சமூக மையம் அமைப்பின் நிறுவனர் பாலநந்தகுமார் எனக்கு போன் செய்து உங்கள் நாவலை இந்த வருடத்தின் விருது நாவலாக அறிவித்துள்ளோம். சென்னையில் இருந்து உங்கள் நண்பர்கள் யாரையாவது பேச அழைத்து வாங்க என்று சொன்னார். எனக்கு சென்னையில் நண்பர்கள் அவ்வளவாக இல்லை. அப்படியே இருந்தாலும் நேரில் அழைத்தால் முகத்தை திருப்பிக்கொண்டு போகின்றவர்கள்தான் அதிகம். நண்பர்கள் அதுவும் புத்தகத்தை பற்றி பேச யாரை அழைப்பது என்று தெரியவில்லை. அபிலாஷிடம் தயக்கத்துடன் கேட்டேன். அவர் உடனே வர சம்மதம் சொல்லிவிட்டார். அதுவரை அபிலாஷிடம் போனில்தான் பேசியிருக்கிறேன். அபூர்வமாக ஒன்றிரண்டு முறை நேரில் சந்தித்துக்கொண்டதோடு சரி. ஊட்டியில் அபிலாசுடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தது மறக்க முடியாத அனுபவம். 

சென்னையிலிருந்து கோயம்புத்தூர் ரயிலில் சென்றோம். நள்ளிரவு ஆகிவிட்டது. பாலநந்தகுமார் மேட்டுப்பாளையத்தில் தங்கும் விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். அங்கு இரவை கழித்துவிட்டு மறுநாள் காலை பத்துமணிக்கு மேல் காரில் மெதுவாக மலை ஏற ஆரம்பித்தோம். அப்போது தருண் தேஜ்பாலின் நாவல் ஒன்றை அபிலாஷ் கையில் வைத்திருந்தார். ரயிலில், பூங்காவில், காரில் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை இடையிடையே வாசித்துக்கொண்டே இருந்தார். அபிலாசின் வாசிப்பை விட என்னை அதிகம் பொறாமைப்பட வைத்தது இன்னொரு நிகழ்ச்சி. சென்னையிலிருந்து நாங்கள் சென்ற ரயிலிலும் மேட்டுப்பாளையத்தில் தங்கியிருந்த விடுதியிலும் ஒருசிலருக்கு அபிலாஷை தெரிந்திருந்தது. இவர் விஜய் டிவியில வர்றவர் என்று பக்கத்தில் இருந்தவர்களிடம் சந்தோஷம் கலந்த வெட்கத்துடன் கோயம்புத்தூர் பெண்கள் சொல்வதை பார்க்க எனக்கு பொறாமையாக இருந்தது. அதற்கு ஊட்டியில் பழிதீர்த்துக்கொண்டேன். நாங்கள் படகுச்சவாரி செல்லும்போது எங்கள் படகுக்கு அழகான வடநாட்டு இளம்பெண்கள் வந்தார்கள். நான் கரையிலேயே இருக்கிறேன். நீங்க போய்ட்டு வாங்க என்று அபிலாஷ் சொல்லிவிட்டார். ஏரிக்கரையில் அமர்ந்து பறவைகளை தீவிரமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அபிலாசும், நானும், பாலநந்தகுமாரும் அவ்வளவு பேசினோம். அரசியல், எழுத்து, சினிமா என்று பலவருடங்கள் கழித்து கல்லூரி நண்பர்களோடு பேசுவது போன்ற உணர்வு. தமிழ் இலக்கியம் படிப்பவர்களை விட ஆங்கில இலக்கியம் படிப்பவர்களே அதிகமாக தமிழ் நாவல்களையும்,கவிதைகளையும் படிப்பார்கள் என்பது எனது அபிப்ராயம். அபிலாசின் வாசிப்பு பரந்துபட்டது. கா.நா.சுவின் விமர்சனக் கட்டுரைகளிலிருந்து முகுந்த் நாகராஜன் ஏன் இப்போது கவிதைகள் எழுதுவதில்லை என்பது வரை எது பற்றி பேசினாலும் விரிவாகவும், ஆழமாகவும் தனித்த கோணத்தில் அவரது கருத்துகளை முன்வைப்பார். 

அபிலாஷ் நல்ல கட்டுரை எழுதுபவர் என்றே எனது அலுவலக நண்பர்கள்,பேஸ்புக் நண்பர்கள் பலரும் சொல்கிறார்கள். ஆனால் எனக்கென்னவோ அவரை அப்படி பொதுமைப்படுத்திவிட முடியாது என்று தோன்றுகிறது. உயிரோசை ஆரம்பித்த காலத்திலேயே அபிலாஷ் அப்படி இருந்தில்லை. கட்டுரைகள் எழுதுவார். திடீரென ஹைக்கூ கவிதைகளை மொழிப்பெயர்ப்பு செய்து எழுதுவார். பிறகு அடுத்த வாரம் உளவியல் பற்றி ஒரு கட்டுரை எழுதுவார். சிக்கலான மொழியில் இரண்டுமுறை வாசிப்பை கோரும் எழுத்தில் கட்டுரையின் நடை இருக்கும். ஆனால் அடுத்த வாரமே ஜாலியாக வேறொரு கட்டுரை வெளிவரும். பலதுறைகளில் ஆர்வம் கொண்ட புதுபுது விஷயங்களை தேடி படிக்கும் மனநிலையில் இருக்கும் ஒருவராலேயே இப்படி எழுத முடியும் என்று நினைத்துக்கொள்வேன். இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். குறைவாக எழுதினால்தான் அது நல்ல எழுத்து என்று அவர் ஆரம்பத்தில் நினைத்ததாகவும் இந்த விஷயத்தில் மேலைநாடுகளில் இருக்கும் தொழில்முறை எழுத்தாளர்களை பாருங்க என்று மனுஷ்யபுத்திரன் அறிவுரை சொன்னதாக குறிப்பிட்டார். மனுஷ்யபுத்திரன்தான் தனது சோம்பேறித்தனத்தை உடைத்து நிறைய எழுத வைத்ததாக சொன்னார். எழுத்தாளன் என்பவன் தினமும் நாலு வரியாவது எழுதி பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமென்பதில் எனக்கும் உடன்பாடுதான். 

'கால்கள்' அபிலாஷின் முதல் நாவல். இந்த நாவலுக்கு பிறகு அபிலாஷ் எழுதிய ப்ரூஸ்லீ பற்றிய ஒரு கட்டுரைத்தொகுப்பு வெளிவருகிறது. பிறகு அபிலாசின் முதல் கவிதைத்தொகுப்பு வெளிவருகிறது. இடையில் கிரிக்கெட்டின் மாறும் நிறங்கள் என்ற கட்டுரைநூல். கிரிக்கெட் பற்றி தமிழில் ஆழமான பார்வையுடன் வெளிவந்த நூல்கள் மிகவும் குறைவு. துறைசார் நூல்களில் இருப்பது போன்று நுட்பமான தகவல்களும், ஆழமான பார்வையும், பல இடங்களில் தீவிர மொழியுடனும், சில இடங்களில் அங்கதமுமாய் எழுதப்பட்ட வகையில் இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க புத்தகம் என்பேன். "இன்னும் மிச்சமுள்ளது உனது நாள்" என்பது அபிலாஷின் சமீபத்திய புத்தகம் (முதல் கவிதைத்தொகுப்பு) 

கடந்த மாதம் டிஸ்கவரி புக் பேலசில் அபிலாசின் கவிதைத்தொகுப்பின் மீதான விமர்சனக்கூட்டம் நடந்தது. இந்திரன்,அமிர்தம் சூர்யா, உமாசக்தி, நரன், விஜயமகேந்திரன் போன்ற சில நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற சிறுகூட்டமாக இருந்தாலும் அபிலாஷின் எழுத்தை பற்றி நண்பர்கள் பேச,விவாதிக்க உண்மையில் ஏற்ற இடமாக அது இருந்தது. ஆச்சர்யமூட்டும் வகையில் அந்தச்சந்திப்பிலும் கூட்டம் முடிந்ததும் வெளியே மழை கொட்ட ஆரம்பித்தது. புத்தகக்கடைக்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் குறைந்த முன்னிரவு சாலையில் கொட்டும் மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். பொதுவாக கவிதை எழுதுபவர்கள் அடுத்து சிறுகதை எழுதுவார்கள். பிறகு கொஞ்சநாளில் நாவல்கள் பக்கம் தாவிவிடுவார்கள். பிறகு ஒருபோதும் கவிதைகளின் பக்கம் திரும்பவே மாட்டார்கள். இந்த வசீகர பரிணாமவளர்ச்சி வரிசையை அபிலாஷ் திட்டமிட்டோ எதேச்சையாகவோ மீறுகிறாரோ என்று சந்தேகம் வந்ததுண்டு. இதைபற்றி அவரிடம் கேட்டேன். இது எப்படி நடந்ததென்று எனக்கும் தெரியவில்லை என்றார் சிரித்துக்கொண்டே. 

அவரது கட்டுரைகளில் கூட இதேபோன்ற நியதியை பின்பற்றுகிறாரோ என்று எனக்கு சந்தேகம் தோன்றும். ஒரு கட்டுரையை தீவிரமாக எழுதுவார். அடுத்து வெளிவரும் கட்டுரை கொஞ்சம் அங்கதமாக இருக்கும். ஆனால் நடையில் அதே துல்லியமான கறாரான ஒழுங்கு இருக்கும். அபிலாஷின் சினிமா கட்டுரைகளில் குறிப்படத்தக்கது அவர் ஆயிரத்தில் ஒருவன் (செல்வராகவன்) என்ற சினிமா பற்றி எழுதியது. அந்தக்கட்டுரை உயிர்மையில் வெளிவந்தது என்று நினைக்கிறேன். அவர் அந்த படத்தின் நுட்பமான அம்சங்களை கவனித்து செறிவாக எழுதியிருந்தார். சாருநிவேதிதா அதற்கு எதிர்வினை செய்து அத்திரைப்படத்தை குப்பை என்று எழுதினார். அந்திமழை,காட்சிப்பிழை பத்திரிக்கைகளில் அபிலாஷ் எழுதி வரும் சினிமாக்கட்டுரைகளை நண்பர்கள் பலர் எனக்கு போன் செய்து படித்தீர்களா என்று கேட்டு அதை பற்றி விவாதிப்பது அடிக்கடி நடக்கும். அபிலாஷ் கட்டுரைகள் தனித்துவம் மிக்கதாக தெரிய இரண்டு விஷயங்கள் அவருக்கு உதவுகின்றன. கட்டுரைகளுக்கென்று அபிலாஷ் தேர்வு செய்யும் ஒருவித வசீகர மொழி லாவகம். ஒரு விஷயத்தை வேறொரு கோணத்தில் அவதானிக்கும் பாங்கு. கட்டுரைகளுக்கு மட்டுமல்ல கவிதைகளுக்கும் இதையே அவர் பயன்படுத்திக்கொள்கிறார். 

அபிலாஷின் கவிதைத்தொகுப்பு பற்றி தமிழவன் எழுதிய விமர்சனத்திலிருந்து.... 

"பொதுவாய் அபிலாஷின் கவிதையாக்கல் உத்தி என்பது இந்த எதிர்பாராத, சாதாரண விசயத்தை கவனித்து எதிர்பாராத இன்னொரு பார்வையை அதில் பதிய வைத்து கவிதையாக மாற்றுவது தான். இது பல கவிதைகளில் காணப்படுகிறது"

எங்கேயோ இருக்கும் இரண்டு மூன்று புள்ளிகளைகூட ஆச்சர்யமூட்டும் வகையில் ஒன்றாக இணைத்துவிடுவார். அவரது தனித்துவம் என்று நான் இதையே நம்புகிறேன். ரஜினியையும், பூக்கோவையும் இணைத்து ஒரு கட்டுரை எழுத அவரால் மட்டுமே முடியும். நீட்சேவும்,செந்திலும் என்று கட்டுரைக்கு தலைப்பு வைப்பார். 

எனது நண்பர்கள் சிலருடன் இருக்கும்போது அபிலாசின் ஏதாவது கட்டுரை பற்றி பேச்சு எழும். "உங்களுக்கு அவரை தெரியுமா? அவரோடு நட்பில் இருப்பது சிக்கலான விஷயம் ஆச்சே" என்று ஆச்சர்யமாக கேட்பார்கள். அவர்கள் ஆச்சர்யத்தை பார்த்துதான் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் அவரோடு இருந்த நாட்களில் அபிலாஷ் கால்கள் நாவலில் வரும் மதுபோல சிலநேரங்களில் முரட்டு பிடிவாதம் கொண்ட குழந்தையாக தெரிகிறாரோ என்றுகூட நினைத்தது உண்டு. ஆனால் அது ஒரு பாவனைதான் என்று தோன்றியது. உலகத்தில் சிக்கலான விஷயம் குழந்தைகளுடன் நட்பில் இருப்பதுதான். ஆனால் ஆபத்தில்லாத விஷயமும் அதுவே. ஊட்டியிலிருந்து சென்னைக்கு திரும்பிவந்ததும் அபிலாஷ் ஊட்டி பயணம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கட்டுரையின் இறுதியில் "கல்லூரியில் படிக்கிற காலத்தில் தான் இவ்வளவு சிரித்து உற்சாகமாக இருந்திருக்கிறேன். அதன் பிறகான என் வாழ்க்கையில் தான் ஏதோ கோளாறு இருக்கிறது என நினைத்தேன். வயிற்றில் அமிலம் கட்டிய ஆட்களை கடவுள் என்னைச் சுற்றி படைத்து வைத்திருக்கிறார். அடுத்த நாள் காலை சென்னை வந்த பின்னரும் இதோ இப்போது வரை அந்த சந்தோஷத்தின் தடம் என் உதடுகளில் இருந்து நீங்கவில்லை. ரொம்ப நாள் தங்காது. ஏதாவது ஒரு சென்னை இலக்கியவாதியை பார்க்காமலே போய் விடுவேன்?" என்று எழுதியிருந்தார். இந்த பயம்தான் எனக்கும் சென்னை நண்பர்களை பார்த்து. அதனால்தான் ஊட்டிக்கு வர முடியுமா என்று தயக்கத்தோடு கேட்டேன். 

அபிலாஷின் 'கால்கள்' நாவல் பற்றி வெகுசிலரே குறிப்பிட்டிருக்கிறார்கள். அது பற்றி அவருக்குள் உள்ளுக்குள் ஏதாவது வருத்தம் இருக்குமா என்று எனக்கு தெரியாது. ஆனால் எனக்கு அந்த ஆதங்கம் இருந்தது. உங்கள் நாவலை பற்றி அடிக்கடி பேஸ்புக்கில் எழுதுங்க என்று சொல்வேன். ஆனால் அவர் அதை தீர்மானமாக மறுத்துவிடுவார். ஒரு நாவல் எழுதப்பட்ட சில காலங்கள் கழித்தே அது பேசப்படக்கூடுமென்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பார். அவரது இந்த நம்பிக்கை எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். ஊட்டியில் நாங்கள் தங்கியிருந்தபோது எதிர்கால திட்டங்கள் பற்றி நிறைய சொன்னார். கவிதைக்காக இன்மை.காம் என்ற இணைய இதழ் தொடங்கியுள்ளதாக சொன்னார். கவிதை கருத்தரங்கம் ஒன்றை தொடங்குவது பற்றிய தனது கனவை அவர் சொன்னார். "முன்பைக்காட்டிலும் கவிதை பற்றி விவாதிக்கும் கூட்டங்கள் குறைந்து வருகின்றன. குற்றாலத்தில் நடந்தது போல வருடத்துக்கு ஒருமுறை ஊட்டியில், கொடைக்கானலில் ஒரு பட்டறை நடத்தினால் எப்படியிருக்கும்" என்று கேட்டார். அதுபற்றி விரிவாக பேசினோம். சென்னை திரும்பியதும் விரிவாக திட்டமிடலாம் என்று முடிவெடுத்திருந்தோம். ஆனால் சென்னை திரும்பியதும் வேலைப்பளு அது இதுவென்று தள்ளிக்கொண்டே போய்விட்டது. முதலில் மாதம் இருமுறை பத்திரிக்கையை கொண்டுவருவது என்றுதான் திட்டமிட்டிருந்தார். முதல் மாதம் அப்படித்தான் வந்தது. ஆட்களிடமிருந்து கவிதைகளை வாங்குவதும், அதை தேர்வு செய்வதும், பிறகு படங்களை வடிவமைப்பு செய்பவரோடு நேரம் செலவழிப்பதும் என்று பணிச்சுமை இழுப்பதால் இன்மை.காமை மாதம் ஒருமுறை மட்டுமே கொண்டுவர போகிறேன் என்றும் வருத்தத்தோடு சொன்னார்.

கடந்த மாதம் பேசும்போது இரண்டாவது நாவல் எழுதிமுடித்துவிட்டதாகவும் இப்போது எடிட்டிங் வேலையில் இறங்கியுள்ளதாகவும் உற்சாகமாக சொன்னார். நேற்று சாகித்ய அகாடமி இளம் எழுத்தாளருக்கான யுவபுரஸ்கார் தேசிய விருது பட்டியலில் அவர் பெயர் அறிவித்திருந்ததை பார்த்துவிட்டு போன் செய்து வாழ்த்து சொன்னேன். இந்த விருது அவருக்கு மேலும் உற்சாகத்தையும்,தெம்பையும் கொடுத்திருக்கும் என்று நினைக்கிறேன். அங்கீகாரமும், உரிய நேரத்தில் கிடைக்கும் பாராட்டுக்களும்தானே மனிதனை தொடர்ந்து ஆர்வமாக இயங்க வைக்கின்றன.

Wednesday, August 13, 2014

புதிய புத்தகம் பேசுது - ராஜீவ்காந்தி சாலை

ஆகஸ்ட் மாத "புதிய புத்தகம் பேசுது" இதழில் வெளிவந்துள்ள "ராஜீவ்காந்தி சாலை" நாவல் விமர்சனம்.  

நன்றி:- சா.சுரேஷ்
 
 
 

Tuesday, August 5, 2014

தேவதைகளின் உலகம்

மலைகள்.காம் இதழில் "தேவதைகளின் உலகம்" என்ற சிறுகதை வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...

Sunday, July 27, 2014

சென்னை மாநகர வெளியில் ராஜீவ் காந்தி சாலை

நன்றி:- ந.முருகேச பாண்டியன்

தமிழ் இந்துவில் ராஜீவ்காந்தி சாலை நாவல் பற்றிய ஒரு விமர்சனம் வெளிவந்துள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...  


சென்னை நகரைச் சுற்றிலும் இயற்கை எழிலுடன் விளங்கிய கிராமங்கள் நகரமயமாதலின் காரணமாக இன்று சிதிலமாகிக்கொண்டிருக்கின்றன இயற்கை வளமான பிரதேசத்தின் ஊடே மாமல்லபுரத்தினை நோக்கிச் செல்லும் ராஜீவ் காந்தி சாலை வெறுமனே போக்குவரத்திற்கானது மட்டுமல்ல.

பாரம்பரியமான கிராமங்கள், ஐ.டி. கம்பெனிகள் என இரு வேறு உலகங்களைப் பிரிக்கும் எல்லையாக ராஜீவ் காந்தி சாலை விளங்குகிறது. பன்னாட்டுத் தகவல்தொடர்புக் கம்பெனிகளின் வருகையினால் செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர் போன்ற பாரம்பரியமான கிராமங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்வைத்து விநாய முருகன் எழுதியுள்ள ராஜீவ் காந்தி சாலை அண்மையில் தமிழுக்கு வந்துள்ள முக்கியமான நாவலாகும்.

கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர்கூட செம்மஞ்சேரி கிராமத்திற்கு அப்பால் எளிய கிராமிய வாழ்க்கை நிலவியது . இன்று ஆறு வழிப் பாதைகளில் விரையும் வெளிநாட்டுக் கார்கள் வேறு உலகுக்கு அழைத்துச் செல்கின்றன. ஐ.டி. கம்பெனிகள் அடுக்கு மாடிகளில் வந்தவுடன், காலங்காலமாக அங்கு வாழ்ந்துவந்த மக்கள் காணாமல் போயினர். பெரிய வணிக வளாகங்கள், நட்சத்திர விடுதிகள், இறக்குமதியான கார்கள். அழகான இளைஞர்களும் இளைஞிகளும் எனச் சூழலே மாறிப்போனது.

கிராமத்தினர் தங்களுடைய விவசாய நிலங்களை விற்றுவிட்டு, மாறிவரும் பண்பாட்டு மாற்றத்தினை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ரியல் எஸ்டேட்காரர்கள் சிறிய நிலவுடைமை யாளர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கைப்பற்றிய விவசாய நிலத்தின் மூலம் பெரும் கோடீஸ்வரர்களாக ஆயினர். தங்கவேலு செட்டியார், அன்னம், ராசு படையாச்சி போன் றோர் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்தியடிக்கப்பட்டுச் சிறிய கடைகள் வைத்துப் பிழைக்கின்றனர். குடும்ப உறவுகளின் சிதைவில் மனித மதிப்பீடுகள் சிதலமடைகின்றன.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசிக்கொண்டு சாப்ட்வேர் கம்பெனிகளில் பணியாற் றும் இளைஞர்களும் உற்சாகமாக இல்லை. எப்போதும் வேலையிலிருந்து நீக்கப்படலாம் என்ற பதற்றத்துடன் பணி யாற்றுகிறவர்களைப் பயம் நிழலாகத் தொடர்கிறது. நிறுவனங்களில் பணம், அதிகாரப் போட்டிக்காக நடை பெறும் சம்பவங்கள் அலுவலர்களின் மன அமைதியைச் சிதைக்கின்றன. அழகிய இளம் பெண்கள், காதல், குடும்பம் என வாழும் இளைஞர்கள் ஆடம்பர மனநிலையுடன் வாழ முயலுகின்றனர்.

பத்தாண்டுப் பணியில் முப்பதாண்டு முதுமையை ஏற்படுத்தும் மென்பொருள் கம்பெனியின் வேலைப் பளு பற்றி அழுத்தமான கருத்துகளை விநாயக முருகன் முன்வைத்துள்ளார். சாப்ட்வேர் கம்பெனிகளைச் சார்ந்து வாழும் அடித்தட்டு ஊழியர்கள், கார் ஓட்டுநர்கள் பற்றிய விவரிப்பு ஐ.டி. நிறுவனங்கள் பற்றிய இன்னொரு பிம்பமாகும்

ஆணும் பெண்ணும் சேர்ந்து பணியாற்றும் ஐ.டி. நிறுவனங்களில் நடைபெறுவதாக மிகைப்படுத்திச் சொல்லப்படும் பாலியல் சீரழிவுகள் பொதுப்புத்தி சார்ந்தவை. ஆண்-பெண் சேர்ந்து பணியாற்றுகின்ற பிற நிறுவனங்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் போலத்தான் சாப்ட்வேர் கம்பெனிகளிலும் நிகழ வாய்ப்புண்டு. ஆனால் நாவல் முன்னிறுத்தும் பாலியல் சம்பவங்கள் சராசரி மனிதர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தும். என்றாலும் மனிதர்கள் இப்படியெல்லாம் தங்களுடைய வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது ஏன் என யோசிக்க வைக்கிறது நாவல்.

வளமான பொருளியல் வாழ்க்கை, வசதியான வீடு, நட்சத்திர விடுதிகள், அமெரிக்கா பயணம் என வாழும் சாப்ட்வேர்காரர்களின் இன்னொரு முகம் கொண்டாட்டமானது. சாதியை மறுத்து காதல் திருமணம் செய்து கொண்டு புதிய தடத்தில் பயணிக்கின்ற இளைய தலைமுறையினர் பற்றி நேர்மறையாகச் சித்திரிக்காதது நாவலில் பலவீனமான அம்சம்.

மனப் பிறழ்வடைந்து சாலையில் சுற்றித் திரிவோர், உயரமான கட்டி டதில் இருந்து குதித்துத் தற்கொலை செய்கிறவர்கள் என நாவல் வாழ்வின் இருண்ட பக்கங்களை விவரித்துள்ளது. எல்லாவற்றிலும் அவசரம் என வேகம்வேகமாகத் தேடி அலையும் மனிதர்கள் மனப் பிறழ்வடைவது இயல்பாக நடைபெறலாம் என நாவலாசிரியர் எச்சரிக்கிறார். நகரத்தின் பிரமாண்டமான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி கொள்ளவிய லாமல், சூழலின் அபத்தம், வெறுமை குறித்துக் காத்திரமான சம்பவங்களை நாவல் முன்வைத்துள்ளது.

நானூறு வருடங்களாகக் கடலைத் தழுவி விரிந்துகொண்டிருக்கும் சென்னை மாநகரின் பதிவாக ராஜீவ் காந்தி சாலை நாவல் நீள்கிறது எனவும் வாசிக்கலாம்.

Sunday, June 8, 2014

ராஜீவ்காந்தி சாலை - நாவல் விமர்சனம்

இம்மாத உயிர்மையில் இமையம் அவர்கள் எழுதியுள்ள விமர்சனக்கட்டுரை வெளியாகியுள்ளது. நண்பர்கள் பார்வைக்கு....

விமர்சனம் – இமையம்

எல்லாக் காலத்திலும், எல்லா மனிதர்களுக்கும் பெரும் சவாலாக, பெரும் அதிசயமாக, உண்மையான அதிசயமாக இருப்பது வாழ்க்கைதான். அந்த அதிசயத்தை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முயல முடியும். அப்படியான ஒரு முயற்சிதான் விநாயக முருகனுடைய ராஜீவ் காந்தி சாலை நாவல்.

 தமிழ் இலக்கியம், இந்திய இலக்கியம் என்பது அநேகமாக குடும்பத்தைப்பற்றி மட்டும்தான் அதிகம் பேசியிருக்கிறது. அதிகம் அழுதிருக்கிறது. பெரும் திரளான மக்கள் குறித்து, ஒரு சமூகத்தில் குறிப்பிட்ட காலத்தில் சமூகம் பெற்ற மாற்றங்கள் குறித்து, பொது சமூக வாழ்வு குறித்து அநேகமாக எழுதப்படவில்லை. தனி மனித இழப்பிற்கு, சோகத்திற்கு, கண்ணீருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் – பெரும் சமூக நிகழ்வுக்கு கொடுக்கப்படுவதில்லை, ஏன்?

 கடந்த இருபதாண்டுகளாக பெற்றோர்களுடைய ஒரே கனவாக இருந்தது தங்களுடைய குழந்தைகள் – ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கவேண்டும் என்பதுதான். அதே மாதிரி கடந்த இருபதாண்டுகளில் படித்த எல்லா மாணவர்களுடைய கனவும், ஆசையும், லட்சியமும் ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்க வேண்டும் என்பதுதான். ஒரு தலைமுறையினரின் வாழ்வாக வரவேற்க்கப்பட்ட ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோர்களைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. கடந்த இருபதாண்டுகளில் தமிழ் இலக்கியமோ, இந்திய இலக்கியமோ அதிகம் பேசியிருக்க வேண்டிய, விவாதித்திருக்க வேண்டிய வாழ்க்கை முறை இது. நிஜத்தில் அப்படி எதுவும் நிகழவில்லை. அந்த விசயத்தில் ராஜீவ் காந்தி சாலை – முக்கியமானது.
வாழ்வின் லட்சியமாகவும், பிறவியின் பயனாகவும் மதிக்கப்பட்ட வரவேற்கப்பட்ட ஐ.டி. கம்பனிகள் கொண்டு வந்தது என்ன? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது, எப்படி பார்க்கிறது, அதோடு ஐ.டி. கம்பனிகளில் பணிபுரிவோரின் மனநிலை, வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பது குறித்து விநாயக முருகன் தெளிவாக எழுதியிருக்கிறார். ஒரு ஐ.டி. கம்பனி உருவாகிறது. ஐநூறு ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கிறது. நல்ல சம்பளமும் வழங்கப்படுகிறது. உண்மைதான். ஐ.டி. கம்பனிகள் அமைகிற இடத்தில், சுற்றுப்புறச் சூழலில், அங்கு வசிக்கக்கூடிய மக்களின் வாழ்க்கையில், சமூக வாழ்க்கையில் என்ன மாற்றம் நிகழ்கிறது என்பது குறித்து இலக்கியப் படைப்புகள் வாயைத் திறப்பதில்லை. தனியார் பன்னாட்டுக் கம்பனிகளுக்கு அரசோ, தனியாரிடமிருந்தோ வழங்கப்படும் ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் நிலங்களை நம்பி வாழ்ந்த மக்கள் என்னவானார்கள் என்பது குறித்து இதுவரை போதிய பதிவுகள் இல்லை. ஐ.டி. கம்பனிகள் மூலம் ஒரு பிரிவினர் வேலை பெறுகின்றனர். அதே நேரத்தில் ஒரு பிரிவினர் வேலை இழக்கின்றனர் என்பதை இந்த நாவல் சுட்டிக்காட்டுகிறது. ஜேசிபி – என்கிற ஒரு இயந்திரம் ஒரு நாளைக்கு ஆயிரம் மனிதர்கள் செய்யக்கூடிய வேலையை செய்து முடிக்கிறது. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்த மக்கள் அநாவசியக் குப்பைகளைப்போல இருப்பிடத்திலிருந்து, உழைப்பிலிருந்து அகற்றப்படுகிறார்கள். தெருவோர வாசிகளாக மாற்றப்படுகிறார்கள். வளர்ச்சி, மேம்பாடு, முன்னேற்றம், நாகரீகம் என்பது குறித்து நாம் வைத்திருக்கும் மதிப்பீடுகள் தவறானவை என்று விநாயக முருகன் சொல்கிறார். இதற்கு காரணம் நம்முடைய கல்வி. நாம் எதை கல்வியாக கற்க வேண்டுமோ அதற்கு நேர் எதிரானதையே கற்றிருக்கிறோம்.

 ராஜீவ் காந்தி சாலை – நாவல் சென்னை வாழ்வை பேசுகிறது. குறிப்பாக கடந்த இருபதாண்டுகால சென்னை வாழ்வு. நூறு இருநூறு ஆண்டுகளில் அடைய வேண்டிய வளர்ச்சியை இருபதே ஆண்டுகளில் சென்னை பெற்றிருக்கிறது. பிரம்மாண்டமான சாலைகள், பிரம்மாண்டமான பாலங்கள், பிரம்மாண்டமான கட்டிடங்கள். இவற்றிற்கு போட்டி போடுவது மாதிரி மனிதர்களின் தேவைகளும், கனவுகளும, ஆசைகளும் பிரம்மாண்டமாகிவிட்டன. இந்த பிரம்மாண்டங்கள் யாருடைய வாழ்வை மேம்படுத்துகிறது, யாருடைய வாழ்வில் மண்ணை அள்ளிப்போடுகிறது என்ற கவலை நாவல் முழுவதும் இருக்கிறது.

 மெத்தப் படித்தவர்கள், அதி புத்திசாலிகள், நல்ல வேலை, நல்ல சம்பளம் வாங்குகிறவர்கள் ஏன் மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள்? முறையற்ற வகையில் உறவு கொள்கிறார்கள், காதலியோடு படுத்திருந்ததை படம் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டுகிறார்கள், ஓயாத பாலியல் தொல்லையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறார்கள், பைத்தியமாகிறார்கள், ஆண் பாலியல் தொழிலாளியாக மாறுகிறார்கள், கார், பைக், பிளாஸ்மா டி.வி, ஐ.போன், சாம்சங் கேலக்ஸி எல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு வகையான வெறுமையையே கொண்டுவந்து சேர்க்கிறது. வெறுமையிலிருந்து, மன அழுத்தத்திலிருந்து மீள்வதற்கு தற்கொலைதான், பாலியல் விஷமங்கள்தான் சிறந்த தேர்வாக இருக்கிறது. ஐந்து மணிநேர பயணம், பனிரெண்டு மணிநேர வேலை என்கிற போது ஒருவன் இயல்பான நிலையில் இருக்க முடியுமா? அதோடு வேலை எப்போது பறிபோகும் என்ற கவலை, பிராஜக்ட் வருமா? வராதா? என்ற கவலை, பெஞ்ச் சிஸ்டம் குறித்த அச்சம், எல்லாவற்றுக்கும் மேலாக போலியான பேச்சு, சிரிப்பு, நட்பு, நடிப்பு என்றாகி கடைசியில் தனிமனித, குடும்ப, சமூக வாழ்க்கையிலும் போலி என்ற நிலையில் மனம் கொள்ளும வெறுமை – எப்படி ஐ.டி. துறையில் வேலை பார்க்கும் மனிதர்களிடையே நிலவுகிறது என்பதை இந்த நாவல் கூடுதல் அழுத்தத்துடன் பேசுகிறது.

ஐ.டி. கம்பனியில் வேலை பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கையை ஒரு பக்கம் விவரிக்கும் நாவல் மற்றொரு பக்கம் ஐ.டி. கம்பனிக்கு நிலம் கொடுத்தவர்களின் வாழ்க்கையையையும், நிலத்தோடு தொடர்புடைய, கிராமத்தோடு தொடர்புடைய மனிதர்களின் அவல வாழ்வையும் விவரிக்கிறது. ஐ.டி. கம்பனிகளில் வேலை பார்ப்பவர்களின் பெயர்கள், கௌசிக், ப்ரணாவ், ப்ரணிதா, சுஜா, ரேஷ்மா, பிரேம் குமார். இப்பெயர்கள் நமக்கு மிக முக்கியமான செய்தி ஒன்றை சொல்கிறது. பெயர் வைப்பதில் தமிழர்கள் பெரிய மாற்றம் பெற்றுள்ளனர்.

முன்பு நிலத்திற்கான மதிப்பு என்பது, செம்மண்ணா, கருமண்ணா, உவர் மண்ணா, வானம் பார்த்த பூமியா, கிணறு, ஏரிப் பாசனம் கொண்டதா – என்பதை வைத்து தீர்மானமாயிற்று. இன்று நிலத்திற்கான மதிப்பு என்பது, பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரி, கோவில், கம்பனிகள் – சாலை வசதி – இவை எல்லாம்தான் தீர்மானிக்கிறது. காணாமல் போனது குளங்கள், ஏரிகள், ஓடைகள், தரிசு, புறம்போக்கு நிலங்கள் மட்டுமல்ல. பறவைகள், பனைமரங்களும்தான். அதோடு காணாமல் போனவர்கள் குறி சொல்பவர்கள், கைரேகை, கிளி ஜோசியக்காரர்கள், ஈயம் பூசுபவர்கள், சாணை பிடிப்பவர்கள், அம்மி கொத்துபவர்கள், பழனீ விற்பவர்கள், புடவை வியாபாரிகள் என்று எல்லோருக்காகவும் கவலைப்படுகிறார் விநாயக முருகன். 

ராஜீவ் காந்தி சாலை மற்றொரு மிக முக்கியமான பிரச்சினையை பேசுகிறது. பாலியல் குறித்து அதிகம் பேச வேண்டும். அதிகம் எழுத வேண்டும். ரசிக்கும்படியாக. போற்றும்படியாக. அகப்பாடல்களைப் போன்று. உடலை துணியால் மூடிக்கொள்கிறோம். ஆனால் மனதை எதைக்கொண்டு மூட முடியும்? மனித மனத்தின் ஆசைகள், குரூரங்கள், வக்கிரங்கள், ஒவ்வொன்றும் நாம் புனிதர்கள் அல்ல என்பதை நிரூபிக்கின்றன. விமான நிலைய கழிப்பறையிலும், ரயிலின் ஏ.சி. கோச் கழிப்பறையிலும் ஆண் பெண் நிர்வாணப் படங்களை வரைந்து வைக்கும் மேல்தட்டு வர்க்க மனதின் செயலை நாம் எப்படி புரிந்துகொள்வது? எல்லா நிகழ்வுகளும் நம் கண்முன்னேதான் நிகழ்கிறது. அதை நாம் பார்ப்பதில்லை. விநாயக முருகன் பார்த்திருக்கிறார். எழுதியிருக்கிறார். மனித மனத்தின் விசித்திரங்களை, குரூரங்களை. சரியாகவும். சற்று மிகையாகவும்.

 இந்த நாவல் ஆபாசமாக எழுதப்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? காமம் – பணம் இதுதான் மனித வாழ்க்கை. மனிதனுடைய அத்துணை கீழ்மையான செயல்களுக்கும் இவைதான் காரணம். அதற்காக இந்த இரண்டையும் விட்டுவிட முடியுமா? முடியாது. காரணம் காமமும் பணமும்தான் வாழ்வின் அடிப்படை. தமிழக இந்தியக் குடும்ப அமைப்பு புனிதமானதுதானா? புனிதம் – புனிதமற்றது இதை எப்படி வரையறுப்பது? எப்படி விளக்குவது? தனிமனித வாழ்க்கையிலிருந்தா? சமூக வாழ்க்கையிலிருந்தா?

 நாம் நம்முடைய பெண்களை கன்னியாஸ்திரி மடத்தில் இருக்கும் பெண்களைப்போல இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இதனால்தான் எல்லாக் குழப்பமும ஏற்படுகிறது. நாம் நமது பெண்கள் மீது ஏற்றி வைத்திருக்கும் புனிதங்கள் ஆபத்தானவை. அந்தப் புனிதங்கள் மிகையானது மட்டுமல்ல உண்மையானதுமல்ல.

இரண்டு குழந்தைகளை விட்டுவிட்டு புது காதலனுடன் ஓடிப்போகும் பெண்கள், காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்யும் பெண்கள், ஒரே ஆணுடன் படுக்கும் தாயும், மகளும், ஒரே ஆணுக்காக போட்டியிடும் மூன்று பெண்கள், ஒரே ஆணுடன் ரகசியமாக மாறிமாறி படுக்கப்போகும் தோழிகள் இப்படி பல விநோதங்கள். இந்த விநோதங்கள் இப்போதுதான் நடக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால் இப்போது கூடுதலாக நடக்கிறது என்று சொல்ல முடியும். விநோதங்கள் கூடுதலாக நடப்பதற்கு இப்போது வசதிகள் அதிகம். வாய்ப்புகள் அதிகம். காம செயல்பாடு என்பது முன்பு இரண்டு நபர்கள் சம்பந்தப்பட்டதாக, இருட்டில் நடப்பதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. கேமராவால் படம் எடுக்கப்படுவதாக, காட்சிப்பொருளாக, வியாபாரப் பொருளாக, உலகத்திற்கே காட்சியாக்கப்படும் விசயமாக, காலத்திற்கும் அழியாத மீண்டும் மீண்டும் பார்க்கப்படும் காட்சியாக மாற்றப்படுகிறது. தொழிற்நுட்பம் மனிதர்களை ரகசியம் அற்றவர்களாக மட்டுமல்ல, அந்தரங்கம் அற்றவர்களாக மட்டுமல்ல, நிர்வாணமாக்கிவிட்டது.

நிஜம், நடந்தது என்ன, குற்றம், நீயா நானா, நித்திய தர்மம், உண்மையை பேசுவோம், பேச தயங்குவதை பேசுவோம், நில், கவனி, சொல் போன்ற நிகழ்ச்சிகளின் வழியே நம்முடைய வீர தமிழச்சிகள், காதலனுடன், கணவனுடன், அடுத்தவளின் கணவனோடு செய்த காம விளையாட்டுகளை சொல்ல மட்டுமல்ல – செய்தும் காட்டுகிறார்கள். அந்தரங்கத்தை காட்சிப்படுத்துகிறவர்களில் படித்தவர், படிக்காதவர் என்ற வேறுபாடு இல்லை. இதைத்தான் வளர்ச்சி, முன்னேற்றம், தொழிற் நுட்ப புரட்சி என்று சொல்கிறோமா என்பதே விநாயக முருகனின் கேள்வி.
நவீன வாழ்வு, நவீன தொழிற்நுட்பம், அதிகப்படியான பணம், வசதிகள், விசித்திரம், வக்கிரம், மன அழுத்தம், விவசாய நிலத்தோடு தொடர்புடைய வாழ்க்கைப்போய் தொழிற்சாலைகள் உருவாகும்போது, ஏற்படும்போது – தனிமனித வாழ்வில், குடும்ப, சமூக வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை எழுதியிருக்கிறார். அதிகப்படியாகவும் எழுதியிருக்கிறார்.

 படைப்புக்கான வெளி எது, படைப்புக்கான வெளியை எது உருவாக்குகிறது – எதார்த்தமா, கற்பனையா, அறிவா, அனுபவமா, படிப்பா என்றால் எல்லாம் சேர்ந்துதான் என்று ராஜீவ் காந்தி சாலை நாவல் சொல்கிறது.

நாவலில் மனிதர்கள் வருகிறார்கள். பெறுகிறார்கள். இழக்கிறார்கள். யாரிடத்திலும் காயம் இல்லை. புண், சீழ், வலி, கண்ணீர், ஓலம், அலறல், அழுகை, கதறல், ஒப்பாரி இல்லை. வெறும் தகவல்களாக – வெறும் வாக்கிய அமைப்புகளாகவே இருக்கிறது. ஒரு படைப்பின் அடிப்படை – சிரிப்பு – கண்ணீர். எல்லா தகவல்களையும் கொட்டி தீர்க்க வேண்டும் என்ற ஆவேசம் இருக்கிறது. கடந்த காலமும் வாழ்க்கையும் மேலானது, புனிதமானது என்ற எண்ணம் நாவலாசிரியரிடம் அழுத்தமாக இருக்கிறது. நேற்றைக்கு இன்று மோசம். இன்றைக்கு நாளை இன்னும் மோசம். தகவல்களையும் பதிவு செய்ய வேண்டியது காலத்தின் தேவை. அந்த வகையில் ராஜீவ் காந்தி சாலை நாவல் கவனத்திற்குரியது. 

Saturday, June 7, 2014

மறைந்துப் போனவர்களின் நிழல்கள்


மலைகள்.காம் ஐம்பத்தொன்றாவது இதழில் "மறைந்துப் போனவர்களின் நிழல்கள்" என்ற சிறுகதை வெளியாகி உள்ளது. நண்பர்கள் பார்வைக்கு...