Monday, March 1, 2010

"சிவப்பை முன்வைத்து" - உயிரோசை கட்டுரை

இந்த வார உயிரோசை மின்னிதழில் வெளியான "சிவப்பை முன்வைத்து" எ‌ன்ற கட்டுரை...

என் வீட்டு வேலைக்காரி கறுத்து, தடித்த தமிழச்சி. 'போத்து' (எருமை) போல இருப்பாள்
- நடிகர் ஜெயராம்

சமீபகாலமாக தொலைக்காட்சியில் ஒரு விளம்பரம் பார்க்கின்றேன். இனவாத, வகுப்புவாத, நிறவெறிக்கு எதிராக உலகெங்கும் கண்டனங்களும், ஆர்ப்பாட்டங்களும் வலுத்து வரும் இந்த வேளையில் சத்தமில்லாமல் நம் வீட்டுக்குள் நுழைந்து மனதின் ஆழ்பகுதிக்குள் நிறவெறி பாசிச விதைகளைத் தூவிச்செல்லும் விளம்பரம் அது.


சினிமா நடிகையிடம் மேக்கப்மேனா‌‌‌க வேலைசெய்கிறார் ஒரு பெரியவர். வயதான நடுங்கும் கைகளால் அந்த நடிகை முகத்துக்கு கிரீம் பூசுகிறார்.பெரியவருக்குக் கை நடுங்க முகத்தில் கைபட, அந்த நடிகை கோபத்தில் காச் மூச்சென்று கத்துகிறாள். "உங்களுக்கு வயசாயிடுச்சு. வீட்டுக்குப் போய் உங்க பொண்டாட்டி, புள்ளைங்களுக்கு மேக்கப் போடுங்க" எ‌ன்று கத்துகிறாள். அந்த நேரம் ஸ்டுடியோவுக்கு சாப்பாடு கொண்டு வரும் பெரியவருடைய பெண் இதைக் கவனித்து விடுகிறாள். அடுத்த காட்சியில் பெரியவருடைய வீடு காட்டப்படுகிறது. பெரியவரிடம் அவரது பெண் மனக் கிலேசத்துடன் சொல்லுகிறாள்

"என்னையும் அவள மா‌தி‌ரி ஸ்டாரா ஆக்கிடுங்கப்பா..." பெரியவர் சொல்கிறார். "என் பொண்ணுக்கு நிரந்தர அழகுதான் வேணும். உனக்கு நான் மேக்கப் போடுகிறேன்." அந்த சிவப்பழகு கிரீமை முகத்தில் பூசுகிறார். அடு‌த்த வினாடி ஒரு அழகுப்போட்டி காட்டப்படுகிறது.முதல் பரிசு தனக்குத்தான் என்ற எதிர்பார்ப்பில் முதலில் சொன்ன அந்த சினிமா நடிகை அமர்ந்திருக்கிறாள். பெரியவருடைய பெண்ணுக்கு முத‌ல் பரிசு கிடைக்கிறது. நடிகைக்கு முகத்தில் ஈயாடவில்லை. பரிசைப் பெற்ற பெண் சொல்கிறாள். "உலகத்துல சில விஷயங்கள் நிரந்தரமில்லை. பேரு,புகழ் நிரந்தரமில்லை." நடிகைக்கு உண்மை புரிகிறது. மக்கள், பத்திரிகை நிருபர்கள் உற்சாகமாய் கைதட்டுகிறார்கள். அழகு நிரந்தரம் என்று அந்த விளம்பரம் முடிகிறது

எவ்வளவு கேடுகெட்ட சூடு சொரணையற்ற தேசத்தில் நாம் ஆட்டு மந்தைகள் போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதற்கு இந்த விளம்பரம் ஒரு உதாரணம். இந்த விளம்பரம் சொல்ல வருவது இதுதான். பெண் என்பவள் முட்டாக்.. (மன்னிக்கவும். இந்த இடத்தில் என்னால் கெட்ட வார்த்தை பயன்படுத்தாமல் இருக்கமுடியவில்லை.) இருந்தால் கூட பரவாயில்லை. ஆனா‌‌‌ல் அழகு குறிப்பாக சிவப்பழகு இல்லாமல் இருக்கக்கூடாது. அழகு நிரந்தரம் எ‌ன்று சொல்கிறார்கள். அழகு நிரந்தரம் எ‌ன்று சொல்லும்போதே மற்றதெல்லாம் நிரந்தரமற்றது எ‌ன்று சொல்லாமல் சொல்லுகிறார்கள். அதாவது படிப்பு நிரந்தரமற்றது. அன்பு நிரந்தரமற்றது. ந‌ல்ல குணங்கள் எதுவும் நிரந்தரமற்றது. நிரந்தமற்ற விஷயங்களைத் தேடி ஓடும் அற்ப மானிடப் பதர்களே... நில்லுங்க. எங்கள் சிவப்பழகுப் கிரீமை பூசிக்கொள்ளுங்கள்.

இந்த விளம்பரத்தின் காட்சிகளைக் கூர்ந்து கவனித்தால் பல ‌விஷப் பாம்புகள் நெளிவது தெரியும். அழகால் மட்டுமே பெண்கள் பதவி,பணம்,புகழ்,பெயர் அடையமுடியும்.

எனக்கு இந்த இடத்தில் ‌நியாயமாக ஒரு கேள்வி எழுகின்றது. அழகு நிரந்தரம் என்கிறார்கள். நியாயம்தான். அப்படியென்றால் அந்த சினிமா நடிகைக்கு தானே முதல் பரிசு கிடைத்திருக்க வேண்டும்? போன வருட அழகிப்போட்டியில் ஒருத்திக்கு முத‌ல் பரிசு கிடைக்கிறது. இந்த வருட அழகிப்போட்டியில் இன்னொருத்திக்கு முத‌ல் பரிசு கிடைக்கிறது. அப்படியென்றால் போன வருட அழகு எங்கு போனது? அழகு என்பது ஒரு வருடத்துக்கு மட்டுமே நிரந்தரமா? அழகு நிரந்தரம் என்றால் அழகின் மூலம் கிடைக்கும் பேரு,புகழ் நிரந்தரமில்லை எ‌ன்று எப்படி ஒரு பதிலைச் சொல்லி அந்தப் பெண்ணால் முத‌ல் பரிசு பெற முடிந்தது?

இன்னொரு முக்கியமான கேள்வியும் வருகிறது.

"என்னையும் அவள மா‌தி‌ரி ஸ்டாரா ஆக்கிடுங்கப்பா" எ‌ன்று கேட்கும் மகளிடம் தந்தை இப்படி சொல்கிறார்.
"என் பொண்ணுக்கு நிரந்தர அழகுதான் வேணும். உனக்கு நான் மேக்கப் போடுகிறேன்." அப்படியென்றால் அந்தப் பெரியவர் இத்தனை வருடமாக அந்த நடிகைக்குப் பூசியது டூப்ளிகேட் கிரீமா? இத்தனை வருடமாகத் தொழில் சிரத்தையின்றித்தான் நடிகையிடம் பணிபுரிந்தாரா? தொழில் சிரத்தையின்றி பணிபுரிந்த ஒருவரைத் திட்டிய அந்த நடிகை மேல் என்ன தவறு இருக்கமுடியும்?நன்றி
-என்.விநாயக முருகன்

5 comments:

 1. அழகிகள் மாறாலாம், அழகு நிரந்தரமானது :)

  ReplyDelete
 2. பெண்களைக் கேவலப் படுத்தும் விதமாக வரும் விளம்பரங்களும் அதிகம்.

  ReplyDelete
 3. நியாயமான கேள்விகளைத்தான் கேட்டுள்ளீர்கள் வினய்.
   
  //எவ்வளவு கேடுகெட்ட சூடு சொரணையற்ற தேசத்தில் நாம் ஆட்டு மந்தைகள் போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம் //
   
  இதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
  இன்னொன்னு தெரியுமா? அதை வாங்கிப் பயன்படுத்தும் எந்தப் பெண்ணும், நாம் அழகிப்போட்டியில் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற எண்ணத்தில் வாங்குவதேயில்லை. ஏதாவது ஒன்றை முகத்தில் பூசும் பழக்கம் வழக்கமாகிவிட்டது. அவ்வளவுதான் :-)
  லக்ஸ் போட்டுக் குளிப்பவர்களெல்லாம் ஐஸ்வர்யாராய் போல ஆகிவிடுவோம் என்று நினைத்தா வாங்குகிறார்கள்? இல்லையே.
  ஏன் திடீர்னு இவ்வளவு கோபம்? :-))

  ReplyDelete
 4. 2010 2:37 AM


  ஜ்யோவ்ராம் சுந்தர் said...
  அழகிகள் மாறாலாம், அழகு நிரந்தரமானது :)March 2, 2010 3:39 AM

  //அழகிகள் மாறலாம்.அழகு நிரதரமானது.//

  அதேதான்!

  ReplyDelete