Friday, April 16, 2010

சின்னஞ்சிறு சொர்க்கம்‏


(இயக்குநர் மஜீத் மஜிதியின் பிறந்த நாள் ஏப்ரல் 17 . எனது அலுவலகத்தின் பிளாக்கில் மஜீத் மஜிதி ஸ்பெஷலாக எழுதப்பட்ட கட்டுரை)

தமிழில் இதுவரை குழந்தைகள் அக உலகை நேர்மையாக பதிவு செய்திருக்கும் ஏதாவது படம் வந்திருக்கா எ‌ன்று கேட்டபோது ஒரு நண்பர் சிபாரிசு செய்த பட்டியல். குழந்தையும் தெய்வமும், அஞ்சலி, சபாஷ் பாபு, லிட்டில் சூப்பர் ஸ்டார் சிலம்பரசன் நடித்த ‌சில படங்கள். (குறிப்பாக ‘எங்க வீட்டு வேலன்’) அட..ங்கொக்கமக்கா…

மூன்றுமாதம் முன்பு கே.கே நகர் டிஸ்கவரி புக்பேலஸில் “பசங்க” படம் பற்றிய ஒரு கருத்தரங்கு நடந்தது. “பசங்க” படத்துக்கு தங்கயானை ‌‌விருது கிடைத்த கையோடு இயக்குநர் பாண்டிராஜ் பேசினார். அவர் நடிகர் நாசரை சந்தித்தபோது தான் ஒரு குழநதைகள் படம் எடுக்க இருப்பதாக சொல்ல, அப்போது நாசர் கேட்டாராம். “நீங்க எடுக்க போறது குழந்தைகள் பார்க்கும் படமா? குழந்தைகள் நடிக்கும் படமா?” எ‌ன்று. குழந்தையும் தெய்வமும், அஞ்சலி, சபாஷ் பாபு,எங்க வீட்டு வேலன் போன்ற படங்கள் எல்லாம் குழந்தைகள் நடித்தது. அவ்வளவே. குழந்தைகள் பார்க்கும் படம் என்றால் அது கார்ட்டூன் மட்டுமே எ‌ன்று நாசர் சொன்னார். கூட்டத்தின் முடிவில் ஓரிரு நிமிடங்கள் பாண்டிராஜுடன் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. நான் அவரிடம் சொன்னேன். குழந்தைகள் பார்க்கும் படம், குழந்தைகள் நடிக்கும் படம் தவிர மூன்றாவது ஒரு வகை உள்ளது. குழந்தைகள் அக உணர்வுகளை சொல்லும் படம். உங்கள் “பசங்க” படம் சில்ட்ரன் ஆப் ஹெவனுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை எ‌ன்று. சில்ட்ரன் ஆப் ஹெவன் போலவே தமிழ்ச்சூழலில் ஒரு படம் எதிர்பார்க்க முடியாது. எடுக்கவும் முடியாது. அதே நேரம் எங்க வீட்டு வேலனை குழந்தைகள் படம் என்று கொண்டாடுவதையும் அனுமதிக்க முடியாது. முகுந்த நாகராஜனின் குழந்தைகள் பற்றிய கவிதைகள் படிக்கும்போது எனக்குள் ஒரு இனம்புரியாத பரவசம் ஏற்படும்.அதுபோல மஜீத் மஜிதியின் திரைப்படங்களில் காட்டப்படும் குழந்தைகளின் அக உலகை பார்க்கும்போதும் இனம்புரியாத பரவசம் ஏற்படும்.

சிறுவன் அலி தனது தங்கை ஜாராவின் பழைய நைந்துப்போன ஷுக்களை தைத்துவிட்டு வீடு திரும்புகிறான். வழியில் காய்கறிக்கடை செல்கிறான். கடை வெளியிலிருக்கும் உபயோகமில்லாத குப்பைகளுக்கு அருகே ஷு இருக்கும் பிளாஸ்டிக் கவரை வைத்து உள்ளே நுழைகிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக ஷு இருந்த பிளாஸ்டிக் கவரை எடுத்துச் செல்கிறான். கடைக்குள் சென்ற அலி உருளைக்கிழங்குடன் திரும்பி வந்து பார்த்தால் கவர் மிஸ்ஸிங்.


ஷு தொலைந்துபோன விவரத்தை அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்கிறான் அலி. காரணம், குடும்பத்தின் வறுமை. அலியின் அம்மா குழந்தை பெற்று சில நாட்களே ஆகிறது. தவிர நோயாளியும்கூட. அலி, ஜாராவின் அப்பாவுக்கோ நிரந்தர வேலையில்லை. ஐந்து மாதம் வாடகை பாக்கி வேறு.

அண்ணனும், தங்கையும் இறுதியில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறார்கள். ஜாரா அலியின் ஷு வை அணிந்து காலையில் பள்ளிக்கு செல்ல வேண்டும். அலிக்கு மதியத்திற்குப் பிறகுதான் வகுப்பு. (ஈரானில் பெண்களுக்கு காலை வேளையிலும், ஆண்களுக்கு மதிய வேளையிலும் பள்ளிக்கூடம் நடக்கின்றது) ஜாரா வந்த பிறகு அவளிடமிருந்து ஷு வை வாங்கி அணிந்து சென்றால் ஷு தொலைந்ததை தந்தையிடம் சொல்லாமல் மறைத்து அவரது கோபத்திலிருந்து தப்பிக்கலாம்.

தன் காலுக்குப் பொருந்தாதபோதும் அலியின் பெரிய காலணியை அணிந்து பள்ளி செல்கிறாள் ஜாரா. கூட படிக்கும் மற்ற குழந்தைகளின் விலை உயர்ந்த காலணிகள் அவள் மனதில் ஏக்கத்தை உருவாக்குகிறது. தவிர ஒவ்வெரு நாளும் பள்ளி முடிந்ததும் அலியிடம் ஷுவை கொடுப்பதற்கு குறுகலான தெருக்கள் வழி அவள் ஓட வேண்டியிருக்கிறது.

ஒரு காட்சியில் ஓடிவரும்போது சாலையோர சாக்கடை நீரில் ஷூ விழுந்து அடித்துச்செல்கிறது. ஜாரா அழுதபடி அமர்ந்திருக்க ஒரு கடைக்காரர் ஷூவை எடுக்க உதவி செய்கிறார். படத்தில் எனக்கு மிகவும் பிடித்த காட்சி இது.

தினமும் வகுப்பு தொடங்கிய பிறகே அலியால் பள்ளிக்கூடம் செல்லமுடிகிறது. தினமும் தாமதமாக வருவதால் தலைமையாசிரியரால் எச்சரிக்கப்படும் அலி, ஒருமுறை வீட்டிலிருந்து யாரையேனும் அழைத்து வரும்படி பணிக்கப்படுகிறான். வகுப்பாசிரியரின் பரிந்துரையால் அந்த முறையும் தண்டனையிலிருந்து தப்பிக்கிறான் அலி.

இதனிடையில் தொலைந்து போன தனது ஷுவை தனது பள்ளியில் படிக்கும் சிறுமி ஒருத்தி அணிந்திருப்பதை ஜாரா கண்டுபிடிக்கிறாள். தனது அண்ணனுடன் அந்த சிறுமியை பின்தொடர்கிறாள். இருவரும் அந்த சிறுமியின் வீட்டை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால், அந்த சிறுமியின் தந்தை கண் தெரியாதவர் (இவர்தான் முதல் காட்சியில் குப்பை வண்டி தள்ளி வந்தவர்) என்பது தெரிந்ததும் அலியும்,ஜாராவும் ஒன்றும் பேசாமல் வீடு திரும்புகிறார்கள்

இந்நிலையில் அலியின் பள்ளியில் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான தேர்வு நடக்கிறது. அதில் கலந்து கொள்ளாமல் தவிர்க்கும் அலி, பந்தயத்தில் மூன்றாவது பரிசாக ஒரு ஜோடி ஷு என்பது தெரிய வந்ததும் ஆசிரியரிடம் கெஞ்சி தானும் போட்டியில் கலந்து கொள்கிறான். போட்டியில் எப்படியும் மூன்றாவதாக வந்துவிடுவதாக கூறும் அலி, தனக்கு கிடைக்கும் ஷுவை கடையில் கொடுத்து அதற்குப் பதில் ஜாராவுக்கு ஒரு ஜோடி ஷு வாங்கித் தருவதாக வாக்களிக்கிறான்.


பந்தயத்திற்கான நாளும் வருகிறது. அலி ஓடும் போது பின்னணியில் ஜாரா அலிக்கு ஷுவை கொடுக்க ஓடிவரும் சத்தமும், அவர்களது உரையாடலும்,காட்சியும் ஒலிக்கிறது. பந்தயக்கோட்டை தாண்டி வரும் தன்னை பரவசத்துடன் தூக்கும் ஆசிரியரிடம் நான் மூன்றாதாகத்தானே வந்தேன் என்று கேட்கிறான். மூன்றாவதா..? முதல் பரிசே கிடைத்துவிட்டது என்கிறார் ஆசிரியர். அலியின் முகாம் ஏமாற்றத்தில் வாடிப் போகிறது.


வீட்டிற்கு வருகிறான் அலி. தண்ணீர் தொட்டி அருகே நிற்கும் ஜாரா அண்ணனின் வாடிய முகத்தை பார்க்கிறாள். அவளது முகமும் வாடி விடுகிறது. வீட்டிலிருந்து அவளது சின்ன தங்கையின் அழுகுரல் கேட்க, அவள் உள்ளே செல்கிறாள்.


பந்தயத்தில் ஓடியதால் அலியின் ஷு நைந்து கிழிந்து போயிருக்கிறது. வீட்டின் முன்னாலிருக்கும் தண்ணீர்த்தொட்டியின் அருகே அமர்ந்து ஷுவை கழற்றுகிறான். கால்களில் பல இடங்களில் காயங்கள். வலியும் ஏமாற்றமுமாய் கால்களை தொட்டி நீரில் அமிழ்த்துகிறான் அலி. நீருக்குள் இருக்கும் அவனது கால்களை தங்க நிற மீன்கள் சுற்றி சுற்றி வந்து முத்தமிடுவதுடன் படம் முடிகிறது.


மூன்று நாட்களுக்கு மேல் எனக்குள் தாக்கம் ஏற்படுத்தியது எ‌ன்று பி.சி..ஸ்ரீராம். தனக்கு பிடித்த பத்து படங்களின் பட்டியலில் இந்த படமும் இருப்பதாக ஒரு பேட்டியில் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருந்தார்.

2 comments:

  1. பிற்ந்த நாள் வாழ்த்துகள்.

    பகிர்விற்கு நன்றி.

    மஜித் மஜிதி குறித்து சூரிய கதிர் இதழுக்காக ஜனவரியில் எழுதிய கட்டுரை என் பதிவில் http://butterflysurya.blogspot.com/search/label/suriyakathir

    ReplyDelete
  2. இயக்குனருக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக, மிக அற்புதமாக சில்ரன்ஸ் ஆப் ஹெவன் பட கதையை விவரித்துள்ளீர். மீண்டும் ஒரு முறை படம் பார்த்த திருப்தி. நன்றி

    ReplyDelete