Friday, June 19, 2009

அவரவர் வானம்

அவரவர் வானம்
----------------------------
(என். விநாயக முருகன்)

25-G பஸ்ஸிற்குள் அப்படி என்னதான் ஒளிந்திருக்கு எ‌ன்று அரவிந்தனால் ஒருநாள் கூட பார்க்க முடிந்ததில்லை. 25-G பஸ்ஸில் சீட் எண்ணிக்கை 42 என்பது எழுதப்பட்ட விதி. இந்த எழுதப்பட்ட விதி பஸ்ஸிற்கு உள்ளேவா அல்லது வெளியேவா என்று அரசு தெளிவாக குறிப்பிடவில்லை. தொங்கிக் கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கையே 40 இருக்கும். படிக்கட்டில் தொங்குவது வாழும் கலையில் முக்கியமான யோக நிலை. ஏதாவது பிடிமானம் கிடைக்கலாம். அது படிக்கட்டுக் கம்பியா அல்லது படிக்கட்டில் தொங்குறவன் கையா என்றெல்லாம் யோசிக்கவே கூடாது. குறிப்பாக இந்த காலை எந்த இடத்தில் ஊன்றி நிற்பது என்றெல்லாம் தப்பித்தவறிக் கூட யோசிக்கக் கூடாது. உலகில் இரு. ஆனால் உலகோடு தொடர்பற்று இரு என்னும் தத்துவம் முதலில் அரவிந்தனுக்கு முதலில் புரியவில்லை. இரண்டாவது நாள் பஸ்ஸில் போகும்போதுதான் புரிந்தது. அரவிந்தன் இரண்டு வருடங்களாக இதே பஸ்ஸில்தான் வடபழனி செல்கிறான். ஒருநாள் கூட பஸ்ஸிற்க்குள் அப்படி என்னதான் ஒளிந்திருக்கு என்று பார்க்க முடிந்ததில்லை. நந்தனாருக்கு கூட ஏதோ ஒரு நாள் நந்தி விலகியதாமே.
அரவிந்தன் வேலை செய்யும் செல்போன் விற்கும் கடை வடபழனியில் இருக்கிறது. அவன் தங்கியிருந்தது திருவல்லிகேணி ரத்னா மேன்சனில். வாழும் கலை ரவிசங்கர் ஊரெல்லாம் வாழ்வது பற்றி உபதேசம் செய்கிறாராம். அரவிந்தன் மாதிரி நூற்றுக்கணக்கான ஆட்கள் ரத்னா மேன்சனில் இருந்தார்கள். இவர்கள் எல்லாருமே பெருநகரத்தில் உயிர் தப்பும் கலையை கற்று தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதில் விஷயம் என்னவென்றால் இவர்கள் யாருக்குமே ரவிசங்கர் என்ற பெயர் கூட தெரியாது. பெருநகரமே ரவிசங்கராக மாறி இவர்களுக்கு உயிர் தப்புதலையும், உயிர் பிழைத்தலையும் கற்றுத் தந்திருந்தது.


நத்தையொன்று ஊர்ந்து ஜெமினி பிளைஓவர் செல்லும். நத்தை இடதுபுறம் திரும்பி பாலம் அடிவழியாக சுற்றி பாம்குரோவ் வரும். அங்கே மேலும் சில அரவிந்தன்கள் முண்டியடிப்பார்கள். ஒருவழியாக நத்தை கூட்டிலிருந்து வடபழனியில் குதிக்கும்போது (கவனிக்க எந்த நத்தையும் குறிப்பிட்ட இடத்தில் நிற்பதேயில்லை. கொஞ்சம் தள்ளி நிற்கும். சில இடங்களில் நிற்காமலேயே போகும்) அரவிந்தன் யோகத்தின் உச்சத்தில் நனைந்திருப்பான். பஸ்ஸிலிருந்து குதிப்பதை வாழும் கலையில் குதியோக முத்திரை என்பார்கள். ஆழ்ந்த யோக நிலைக்கு சென்ற ஒருவனை சுயநிலைக்கு கொண்டுவர குதிமுத்திரை உதவும்.

அதுதான். பெருநகரெங்கும் பொமரேனியன்கள் குளுகுளுவென்று ஓடுகின்றனவே. அதை விட்டு நத்தையில் ஏறி ஏன் கஷ்டப்படவேண்டும்? பொமெரேனியனிடம் டிக்கட் எடுத்தால் போக வர எழுபது ரூபாய். அரவிந்தன் சம்பளம் மாசம் நாலாயிரம். இந்த பெருநகரத்தில் ஆயிரக்கணக்கில் கொடுத்து உடல் இளைக்க டிரெட் மில்லில் ஓடுகிறார்கள். சம்மணமிட்டு கண்ணை மூடி குண்டலினியை சம்பிலிருந்து டேங்குக்கு ஏற்றுகிறார்கள். அரவிந்தனுக்கு ஆயிரத்தைநூறு மிச்சம் (பஸ் பாஸ் வைத்துள்ளான்) கூடவே இலவச யோகக் கலை. தவிர இந்த பொமெரேனியன்கள் கிழக்கு கடற்கரைச் சாலை பக்கம்தான் அதிகம் ஓடுகின்றன. அங்கே வேலை செய்பவர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். மேலும் அரவிந்தனுக்கு வயது இருபத்தைந்து. தாராளமாக படியில் என்ன பழனிக்கோயில் விஞ்ச்சில் கூட தொங்கலாம். என்ன இறங்கும்போது கைப்பையிலுள்ள வாடிக்கையாளர்கள் ரசீது, சிம் கார்டுகள், பணம் கட்டிய ரசீது பத்திரமாக இருக்க வேண்டும்.

ஆனால் அரவிந்தனுக்கு இதை தாண்டியும் ஒரு பிரச்சினை இருந்தது. அதுவும் கடந்த இரண்டு வாரமாக இந்த பிரச்சினை நடு மண்டயில் அமர்ந்துக்கொண்டு அடிக்கடி டிங்டிங்கென மிஸ்டுகால் தந்தது. இரண்டு வாரம் முன்பு மேன்சனில் தங்கியிருந்தவர்களோடு மெரினா பீச்சில் கிரிக்கெட் விளையாட சென்றிருந்தான். ஞாயிறு ஒரு நாள் மட்டும்தான் அரவிந்தனுக்கு விடுமுறை. ஜீன்ஸ் பேண்ட்களை மாதம் ஒருமுறை ஏன் துவைக்கவே தேவையில்லை என்ற சட்டம் வந்ததிலிருந்து அவனுக்கு துணி துவைக்கும் கஷ்டம் அவ்வளவாக இல்லை. ஜட்டியைக் கூட வாரம் ஒரு முறை துவைத்துக்கொள்ளலாம் என்று சட்டத்தில் இடமிருந்தது. தவிர மேன்சனில் சிலர் சட்டத்திலுள்ள ஓட்டைகளை தெரிந்து வைத்திருந்தனர். ஜட்டியை இரண்டு நாள் இந்த பக்கம் இரண்டு நாள் அந்தப்பக்கம் என்று மாற்றி போட்டுக் கொள்ளலாம். துணி துவைக்கும் யோசனையை கைவிட்டு கிரிக்கெட் விளையாட சென்றான். உடன் சென்றவர்கள் ஜனா, பரமாணந்த், வசீகர் (தொந்தி வசீகர்) . மதனும் சேர்ந்துக் கொண்டான். அடுத்த பாராவுக்கு ஜனா போதும்.


ரத்னா மேன்சன் எதிரே இருக்கும் கன்னியப்பன் லாட்ஜில்தான் ஜனா தங்கியிருந்தான். ஜனா பொழைப்பும் அரவிந்தன் போலத்தான். இரண்டாவது ஓவர் முடிந்து வாக்கெட் பாக்கெட்டை பல்லால் கடித்த ஜனா அரவிந்தனிடம் கேட்டான்.

என்னடா கண்ணெல்லாம் சிவந்திருக்கு? ஆளு டயர்டா இருக்க. பீல்டிங் சொதப்புது. நைட் டைட்டா? கண்ணடித்தான்.

நீ வேற. சம்பளம் வர இன்னும் இரண்டு வாரம் இருக்கு அரவிந்தன் சொன்னான்.

ஊர்லருந்து அப்பா போன் செஞ்சாரா? ஏதாவது சிக்குனிச்சாமா? ஜனா கேட்டான்.
அவரும் இரண்டு வருசமா பொண்ணு தேடிட்டு இருக்காரு. எங்க மாட்டுது.

ஜனாக்கு புரிந்து விட்டது. பார்த்துடா ஓவரா பண்ணாத. ஒவ்வொரு சொட்டும் பத்து சொட்டு ரத்தமாம்.

பந்தை தேய்த்தபடி கிண்டலுடன் ஜனா நகர, போடா எரும என்று அரவிந்தன் வாட்டர் பாக்கெட்டை ஜனா மேல் வீசினான். ஜனா கேட்ச் பிடித்து அவுட் என்றான்.


அன்று சாயங்காலம் அரவிந்தன் ராயல் சலூன் சென்றான். சலூனில் ஏதோ ஒரு புத்தகம் கிடந்தது. புரட்டினான். இந்த ஒரு விஷயத்தில் சென்னை அவனுக்கு பிடித்திருந்தது. ஊரில் காதை வெட்டி விடுவார்கள். இங்கே முடியை ஒவ்வொரு இழையாக பார்த்து பார்த்து வெட்டி விடுகிறார்கள். என்ன காது அறுபடாமல் இருக்க நூறு ரூபாய் தர வேண்டும். ஜனா கிண்டலடிதது நினைவுக்கு வந்தது. ஏதோ சிந்தனையில் நடுப்பக்கம் பார்த்தான். வாலிப வயதில் தெரியாமல் செய்த கைப்பழக்கம் அடைப்புக்குறிக்குள் சுய இன்பம். கெட்ட நண்பர்களின் சேர்க்கையால் தவறான வழிகளில் இந்திரியத்தை வீணாக்கி சக்தியை இழந்தவர்கள். திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள்...விளம்பரம் நீண்டிருந்தது முழுப்பக்கத்துக்கு. அரவிந்தனுக்கு வியர்க்க ஆரம்பித்தது (ஏ.சி சலூன்) . தமிழ்நாட்டில் கடந்த முப்பது வருடங்களாக இப்படி ஒரு பாரம்பரிய அரசியல் வார பத்திரிக்கை வருவதும், அதில் தலைமுறைகள் பல கண்ட சித்த வைத்தியர்கள் குடும்பம் இப்படி விளம்பரம் செய்வதையும் பார்க்கும் சந்தர்ப்பம் ஏனோ அரவிந்தனுக்கு இதுவரை வாய்த்ததில்லை. புத்தகத்தை அப்படியே வைத்து விட்டான். ஒருவேளை ஒவ்வொரு சொட்டும் பத்து சொட்டு ரத்தமா? கடவுளே. சின்னதாக ஒரு கணக்கு ஓடியது. பத்தாவது படிக்கறப்ப என்ன வயசு? மாசத்திற்கு இவ்வளவு.வருடத்திற்கு எவ்வளவு . தலை சுற்றியது. அரசியல் பத்திரிக்கையை தூக்கிப்போட்டவன் அந்த செய்தித்தாளை பிரித்தது இன்னொரு தப்பு. இரண்டாவது பக்கத்தை புரட்டினான். . வழக்கமான செய்திகள்தான். ஆனால் இன்று அவையெல்லாம் ஏனோ கவன ஈர்ப்பு தீர்மானம் போல அவன் முன் விஸ்வரூபமெடுத்தன. கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓடிப்போன பெண் - கணவன் கொலை.பக்கத்துக்கு பக்கம் இதை போன்ற அல்லது இதே செய்திகளே இருந்தன. திருமண வாழ்க்கையில் திருப்தி இல்லாதவர்கள். விளம்பரம் ஓடியது. அன்று இரவு அரவிந்தனுக்கு தூக்கம் போனது.

மறுநாள் யோகம் கைவிட்டு போனது. 25G-ல் பிடிமானம் வழுக்கியது. யோகத்தில் கவனம் செலுத்த முடியவில்லை.. பாம்குரோவில் இறங்கி வேறு ப‌ஸ் மாறினா‌‌‌ன்.அன்று அலுவலகத்தில் அரவிந்தனுக்கு இரண்டு பு‌திய செய்திகள் காத்து இருந்தன. ஒபாமா பதவியேற்றதால் இந்திய தகவல் தொழில்நுட்ப ஆட்களுக்கு பாதிப்பில்லை. இரண்டாவது செல்போன் கடை முதலாளி மனைவி கார் டிரைவரோடு மகாபலிபுரம் போனது. அ‌ங்கு அறையெடுத்து தங்கியது. இ‌து முதலாளிக்கு தெரிந்தும் அவர் கண்டுக்காம விட்டது. முத‌ல் செய்தியை பி.பி.சி, சி.என்.என்னில் சொன்னார்கள். இரண்டாவது செய்தியை அலுவலத்தில் வேலை பார்க்கும் ராமசாமி சொன்னான். விஷயம் விபரீதமாகி இருந்தால் தந்தியில் வந்திருக்கும். நம்ம முதலாளி தங்க முதலாளி எ‌ன்று ராமசாமி நக்கலாக பாடிக்கொண்டு நகர்ந்தான். இரண்டு வாரங்களாக அரவிந்தனுக்குள் கவலை ரேகைகள் படர்ந்து பெரிய நெட்வொர்க்கையே பின்னியிருந்தது. நெட்வொர்க்கின் எந்த முனையை பார்த்தாலும் இதே பிரச்சினைதான் டவர் மேல் ஏறி நின்று பயமுறுத்தியது. யாரிடம் கேட்கலாம்? இ‌து உண்மையா? அரவிந்தன் குழப்பத்தோடு வடபழனியில் வந்துக் கொண்டிருந்தபோது எதிரே கண்ணில்பட்டது அந்த போஸ்டர்.மின்சார வாரியம் பொதுமக்களுக்கு சீதனமாக தந்த பீரோ மேல் ஒட்டியிருந்தது அந்த போஸ்டர். கொட்டை எழுத்துகளில்

சலவித ரகசிய வியாதிகளுக்கும் அணுகவும். சிகிச்சை செலவு குறைவு

----------------------
மீனாட்சிசங்கர் சிட்லபாக்கத்திலிருந்து புறப்படும்போது மணி பத்து. வெயில் கிளம்பியிருந்தது. மீனாட்சிக்கு வயது ஐம்பத்தைந்தை தாண்டியிருந்தது. அவருடைய மூன்றாவது பெண் பத்மாவும் வயசுக்கு வந்தது மீனாட்சிக்கு கூடுதல் கவலை. கூடுதல் கவலையில் கொஞ்ச நஞ்ச முடியும் முன்பக்கம் உதிர்ந்திருந்தது. பெருநகரில் மீனாட்சி போன்ற அநேகர் பேண்டின் பின்பக்க பாக்கெட்டில் சின்ன சைஸ் சீப்பு வைத்திருந்தார்கள். பத்மா கவலையை விடுங்கள். இரண்டாவது பெண் ராஜிக்கே இன்னும் வரன் அமையவில்லை. ஒரு DTP செண்டரில் டைப் அடிக்கிறாள். ஒருவழியாக செட்டில் ஆன முதல் பெண் விஜி இப்போது திரும்பி வந்து விட்டாள் விஜி புருஷன் ஷேர் ஆட்டோ ஓட்டுகிறான். சொந்த ஆட்டோக்கு பணம் கேட்கிறான். மீனாட்சி கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் பக்கத்தில் ஒரு மூத்திரச்சந்தில் பத்துக்கு பத்து இடத்தில் கிளினிக் வைத்துள்ளார். அகத்தியர் சித்த வைத்திய நிலையம். டாக்டர் மீனாட்சி. பார்வை நேரம் 10 to 5.

இப்பல்லாம் சி‌‌த்த மருத்துவத்தை யார் சார் நம்புறாங்க. எல்லாம் மாடர்னா ஆயிடுச்சு. எத சொன்னாலும் ஆயிரத்தெட்டு கேள்வி. யானை லத்தியை தேன்ல குழைச்சு மூணு நாள் சாப்பிடு. சரியா போயிடுமுனு சொன்னா கண்ணுல ஒத்தி வாங்கிட்டு போவாங்க.இந்த பொடியனுங்க அமெரிக்கா போய் அரைகுறையா படிச்சுட்டு வர்றானுங்க. டாக்டருனு கடையை போடுறானுங்க. இவனுங்களும் அங்க ஓடுறானுங்க.மீனாட்சி யாரோ தெரிந்த நண்பர் கிளினிக் எப்படி போகுது எ‌ன்று கேட்டதற்கு பஸ்ஸில் புலம்பிக் கொண்டு வந்தார்.

பேப்பர்ல விளம்பரம் தர்றலாம்ல? நண்பர் கேட்டார்.

மீனாட்சி ஜன்னல் வெளியே பார்த்தார். சிட்லபாக்கத்தில் புறாக்கூடு போல இருக்கும் ஒண்டுக்குடித்தனம் நினைவில் ஆடியது. இரண்டு மாச வாடகை பாக்கியை நினைத்துக்கொண்டார்.நல்லவேளை ஹவுஸ் ஓனர் எதுவும் கேட்கவில்லை. ஓனருக்கு மடிப்பாக்கத்தில் வேறு சில வீடுகள் இருந்தன. எல்லாம் சின்னதாக இருந்தன. அதனால் மீனாட்சியிடம் சிட்டுக்குருவி லேகியத்தை வாங்கிக்கொண்டு நடையைக்கட்டினா‌‌‌ர். அவரை சமாளித்தாகிவிட்டது. இந்த கிளினிக் வாடகை பிரச்சினை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.மீனாட்சிக்கு தொழிலில் இரண்டுமுனைப் போட்டி. ஒ‌ன்று இந்த அரசியல் பத்திரிக்கைகளில் நடுப்பக்கம் அல்லது பி‌ன்பக்கம் தரும் லாட்ஜ் டாக்டர்கள். இரண்டாவது ஆங்கிலமருத்துவர்கள். முதல் ரக ஆட்களை கூட மீனாட்சி மன்னிக்க தயாராக இருந்தார். ஆயிரம் பேரை கொன்றாலும் கைராசி என்று பெயர் வாங்கிவிட்டால் போதும். போட்டியை சமாளித்துவிடலாம். இந்த இரண்டாவது ரகம்தான் மீனாட்சியை மண்டையி‌ன் பி‌ன்பக்க முடியை உலுக்கிக்கொண்டிருந்தது. அவர்கள் செய்யும் தர்க்கங்களும், சொல்லும் நியாயங்களும் மீனாட்சிக்கு பற்றி எரிந்தது.நேற்றுக்கூட ஒரு டி.வி. நிகழ்ச்சி.சீரியல்கள் எல்லாம் முடிந்த ஏகாந்த நேரத்தில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சி. டைக்கட்டிய ஒரு டாக்டர். பக்கத்தில் ஒரு அழகான இளம்பெண். ஒரு நேயர் கடிதம். டாகடர் சுயஇன்பம் செய்யுறது தவறா?

மீனாட்சிக்கு மட்டும் அந்த டி.வி தவணைப் பாக்கி நினைவுக்கு வராவிட்டால் டி.வி யைப் போட்டு உடைத்திருப்பார். அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. அது எச்சி துபபற மாதிரி ஒரு இன்சிடெண்ட். ஆகவே உலக இளைஞர்களே உரிமைக்கு கைகொடுப்போம் என்று தத்துப்பித்தென பேச மீனாட்சிக்கு பற்றிக் கொண்டு வந்தது. கைகொடுப்போம் அதோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. டி.வி டாக்டர் லாட்ஜ் டாக்டர்கள் சித்த மருத்துவர்களை ஒரு பிடி பிடித்தார். ஊருக்கு ஊர் லாட்ஜுகளில் ரகசியக் கூட்டம் போடும் தீவிரவாதிகள் என்று திட்டி வைத்தால் மீனாட்சிக்கு எரியாதா? வாலிப வயோதிக அன்பர்களெல்லாம் குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட்டால் மீனாட்சி போன்றவர்கள் எங்கே கடை போடுவதாம்? இத்தனை வயதுக்கு பிறகு அதுவும் பொருளாதார பின்னடைவுனு வேற சொல்றாங்க. இந்தக் காலத்தில மீனா‌ட்சிக்கு சாப்ட்வேர் கம்பெனில்லேயா வேலை கிடைக்கும்? கிடைத்தாலும் அதில் ஆயிரத்தெட்டு வேர்கள் சொல்கிறார்கள். எந்த வேரை படிப்பது? மீனாட்சிக்கு தெரிந்த ஒரே வேர் கொல்லிமலையில் தேடி எடுத்த அமுக்கிராங் கிழங்கு வேர்.

பேப்பர்ல விளம்பரம் தர்றலாம்ல? நண்பர் கேட்டது மனதில் ஓடியது. மீனாட்சியும் ஏதேதோ செய்து பார்த்துவிட்டார். முன்பு வாழை மட்டையில் மடித்து தருவார். சரவணா ஸ்டோரில் சல்லிசாக வாங்கி வ‌ந்த பிளாஸ்டிக் டப்பாவில் சூரணம் அடைத்து விற்றார். அட...டப்பா நல்லா இருக்கே எ‌ன்று இப்போது டப்பாவை மட்டும் வாங்கி செல்கிறார்கள். அதான் பர்மா பஜாரில் இப்ப பிளாக்ல வயாகரா மாதிரி விக்க ஆரம்பிச்சுட்டாங்களே. மீனாட்சி வெளியே பார்த்தார். ப‌ஸ் கோடம்பாக்கத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.இந்த மாசம் வீட்டு வாடகைப்பாக்கி சமாளித்தாகிவிட்டது. கிளினிக் பாக்கிக்கு வழி செய்து விட்டால் போதும். நாலு டப்பா வித்தால் போதும். இந்த மாசம் ஓட்டிவிடலாம். விஜி பிரச்சினை என்ன செய்வது தெரியவில்லை. இந்த கல்யாணம் குழந்தையெல்லாம் இல்லாமல் இருந்தால் உலகம் எப்படி மகிழ்ச்சியாக இருக்கும் என்று மீனாட்சிக்கு ஒருகணம் எண்ணம் ஓடியது. சட்டெ மனதின் இன்னொரு மூலை அவரை அதட்டியது. ஒருவேளை எல்லாருக்கும் ஆண்மைசக்தி இல்லாவிட்டால், பிறகு அமுக்கிராங் கிழங்கின் படைப்பு ரகசியம் என்ன? நமக்கு வேலை என்ன? மீனாட்சிக்குள் தத்துவ விசாரம் ஓடியது. சும்மாவா சொன்னா‌‌‌ங்க? கட்டிவனுக்கு பல கவலை; கட்டாதவனுக்கு ஒரே கவலை.


கோடம்பாக்கத்தில் மீனாட்சி இறங்கும்போது மணி பன்னிரெண்டு. வெயில் கொளுத்தியது. கர்ச்சீப்பால் மண்டையை துடைத்தார். மெயின் ரோட்டிலிருந்து கிளைத்த மூத்திர சந்துக்குள் நுழைந்து இடதுபுறம் திரும்பினா‌‌‌ர். டீக்கடை முன்பு தலைப்பாக்கட்டுக்காரன் டபராவில் சிம்பொனி வாசித்தான். தூரத்தில் பார்க்கும்போதே அவரது கிளினிக் தெரிந்தது. கிளினிக்கின் மூடிய ஷட்டரை தயக்கத்துடன் பார்த்தபடியே டீக்குடித்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன். மீனாட்சி வேகமாக நடந்தார்.


-என். விநாயக முருகன்

3 comments:

 1. அந்த கவிதையோடு என்னால் தொடர்புபடுத்த முடியவில்லையே தோழர்

  ReplyDelete
 2. தப்பான பதிவுக்கான Commnet?
  Which one you have mentioned Prakash? :(

  ReplyDelete
 3. உயிரோடை சிறுகதை போட்டிக்கான கதை இது இல்லையா? அங்கே பின்னூட்டத்தில் இதை தான் தந்திருக்கிறீர்கள்

  ReplyDelete