Monday, June 15, 2009

சிறுகதை : டெர்மினேட்டர் - ஜட்ஜ்மெண்ட் டே ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)

சிறுகதை : டெர்மினேட்டர் - ஜட்ஜ்மெண்ட் டே ('உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்காக எழுதப்பட்டது)கிபி 3500. கேலக்ஸி ஆய்வுக்கூட மையத்தில் அவர்கள் நின்றுக்கொண்டிருந்தார்கள். அந்த அதி உன்னத ஆராய்ச்சியின் முடிவை தெரிந்துக்கொள்ளும் ஆர்வம் அனைவரது முகங்களிலும் இருந்தன. தன் கைப்பையை திறந்த சோனா அந்த தீப்பெட்டி சைஸ் கம்ப்யூட்டரை மேசைமேல் வைத்தாள். சுபா தன் நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை தீப்பெட்டி மேல் ஒட்டினாள்.

அட புதுசா இருக்கே. என்ன மாடல்? சோனா கேட்டாள்.
S017 - என்றாள் சுபா.
எவ்வளவு டேட்டா பதிவு செய்யலாம்?
100TT (TT- டெராபைட்,டெராபைட்)

ஸ்டிக்கர் பொட்டு அளவு இருந்த அந்த குறுந்தகடு சுழல ஆரம்பித்தது. தீப்பெட்டி அளவு திரையில் சில பைனரி எண்கள் மின்னி மறைந்தன.

ஏதாவது நல்ல செய்தி உண்டா? கேட்டபடி இளமாறன் வந்துக்கொண்டிருந்தார். இளமாறன் அந்த ஆய்வுக்கூட தலைவர். சுபா மற்றும் சோனா அவரது உதவியாளர்கள்.

நம்ம கம்ப்யூட்டர்ல இருக்கற எல்லா குரல்களோடும் கம்பேர் செய்துட்டேன். மேட்ச் ஆகல சார்.

இந்த இடத்தில் இந்த கதைக்கான ஒரு முன்னோட்டம்.

கிபி 3500 ல் தமிழ் பேசும் மக்கள், தமிழர் அடையாளங்கள், அவர்கள் மொழி எல்லாம் அழிந்துப்போயின.அது திட்டமிட்ட நிகழ்வா அல்லது இந்த உலகத்தில் எல்லா தொன்மையான இனத்துக்கும் ஏற்படும் இயல்பா என்றெல்லாம் தெரியவில்லை. சில நூறு தமிழர்களே எஞ்சினர். அவர்களையும் கல்லால் அடித்துக் கொன்று விட்டார்கள். தப்பி பிழைத்த பத்து இருபது பேர்கள் ஏதோ ஒரு கிரகத்தில் தலைமறைவாக இருந்தார்கள். தங்களை போல வேறு யாரும் மொழி பேசுகிறார்களா என்று தேடிக் கொண்டிருந்தார்கள். கேலக்ஸி ஆய்வுக்கூடம் ரேடார், சாட்டிலைட் கண்களில் மண்ணைத் தூவி ரகசியமாக இயங்கி வந்தது.

நம்மகிட்ட எஞ்சியிருந்தது இந்த ஒரேயொரு குரல்தான். அதுவும் என்னனு புரியல - சுபா சொன்னாள்.

ஒருவேளை நம் முன்னோர்கள் பேசின சங்கத்தமிழா? சோனா கேட்டாள்.

சங்கத்தமிழ் எல்லாம் சரி பார்த்துட்டோம். எதுவும் பொருந்தலயே -சுபா

நீங்க இந்த குரலை எங்க கண்டுப்பிடிச்சீங்க? சோனா கேட்டுகொண்டிருக்கும்போதே மதன் கேலக்ஸி செண்டர் உள்ளே வந்தான்.

போன வாரம் அரசாங்கத்துக்கு தெரியாம பூமிக்கு போய்ட்டு வந்தோம். அங்க கிழக்கு பகுதியில ஒரு மியூசியம் இடித்துப்போட்டிருந்தார்கள். அங்கத்தான் அந்த சி.டி கெடச்சது. மொத்தமா எரிச்சுட்டாங்க. நொறுங்கிப்போன சிடியைத்தான் பொறுக்கிட்டு வந்தோம். நம்மகிட்ட இருக்கற டெக்னாலஜியை வச்சு எல்லா சில்லுகளையும் ஒட்ட வச்சு கேட்டோம்.

இளமாறன் குறுக்கிட்டார். அதுல இந்த ஒரேயொரு குரல் மட்டுந்தான் இருக்கு. மற்ற தகவல்களை ரெக்கவரி செய்ய முடியல - இளமாறன் முடித்தார்.

இது ஏதாவது என்கிரிப்ட் செய்யப்பட்ட தமிழ் வார்த்தையா - சுபா கேட்டாள்.

எல்லா வித கிரிப்டாலஜி முறையையும் செய்துட்டோம். நோ வே. இது என்க்ரிப்டட் இல்லை - சோனா சொன்னாள். ஆனா தமிழ் வார்த்தைதான். அதை உறுதி செஞ்சுட்டோம். 1GB டிகிரிப்ட் அல்காரிதம் கூட பயன்படுத்திட்டோம். வேஸ்ட்.

மதன் சுபாவை பார்த்தான்.

அப்படினா இந்த உலத்தில நம்மள தவிர தமிழ் பேசுறவங்க யாருமே இல்லையா?

சுபா வேதனையோடு கேட்டதற்கு யாரிடமும் பதிலில்லை.

சிறிது நேரம் மௌனம்.

இது நம்மக்காலத்து குரல் மாதிரி தெரியல. நம்ம முன்னோருங்க யாராவது எதிர்காலத்தை கணிச்சு சொல்லியிருக்கலாம். அப்படி சொன்னதை ரகசிய குறியீடுகளா மாற்றி பதிவும் செய்திருக்கலாம்.

இளமாறன் பதில் ஆய்வுக்கூட அமைதியை கலைத்தது.

இருக்கலாம். ஆனா நமக்கென்ன பிரயோஜனம்? நாம தேடிட்டிருக்கிறது தமிழ் பேசுற யாராவது உயிரோட இருக்காங்களானு. செத்துப்போனவங்க பேசுனது பதிவு செஞ்சது எல்லாம் நமக்கு எதுக்கு?

மதன் கன்னத்தில் இறங்கியது இளமாறன் கை. சுபாவும், சோனாவும் அதிர்ந்தார்கள்.
சட்டென சுயநினைவுக்கு வந்த இளமாறன் அடுத்த வினாடியே மன்னிப்பு கேட்டார்.

மன்னித்து விடுங்கள் தோழரே.நான் முட்டாள்.மன்னித்து விடுங்கள்

மதன் முகத்தை திருப்பிக்கொண்டான். தீப்பெட்டி கம்ப்யூட்டரில் மின்னும் எழுத்துகளை பார்த்தான்.

சில வினாடிகள் கழித்து இளமாறன் பேசினார். நம்ம இனம் திட்டமிட்டே அழிக்கப்பட்டிருக்கிறது. தோழரே. நம் மொழியை கொன்றார்கள். . நம் கடவுளை கொன்றார்கள். நம் மக்களை கொன்றார்கள். நம் உணர்வுகளை கொன்றார்கள். வீரத்தை கொன்றார்கள். நம் நிலத்தை கொன்றார்கள். இன்று எஞ்சி இருப்பது இருபது பேர் மட்டுமே. நம் மொழி பேசும் வேறு யாராவது இருக்கிறார்களா தெரியவில்லை. அவர்களை தேடுவது அதே நேரம் இழந்த நம் அடையாளங்களை மீட்டு எடுப்பதும் நம் கடமை.

மதன் எங்கோ வெறித்தபடி இருந்தான். இளமாறன் தொடர்ந்தார்.

நம் இனம் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விட்டன. ஒரு சில குறிப்புகளை எப்படியோ காப்பாற்றி கண்டுப்ப்பிடித்து விட்டோம். அதேநேரம் கிபி இரண்டாயிரம் ஆண்டிலிருந்து மூவாயிரம் ஆண்டு வரை வாழ்ந்த நம் மக்களின் சமூகம் மொழி பழக்க வழக்கங்கள் பற்றிய எந்த பதிவுகளுமே இல்லை.

நாளை ஒருவேளை நாம் நூற்றுக்கணக்கில் பெருகினால் கூட எதைக்காட்டி நம் உரிமைகளை மீட்டெடுப்பது? நாம் இந்த உலகின் மூத்தக்குடி என்று நிருபிக்கும் கடமையும் நமக்கு இருக்கிறது. அதற்கு அடையாளங்களும், ஆதாரங்களும் தேவை.

மதன் கொஞ்சம் அமைதியானது போல தெரிந்தது. இளமாறன் மீண்டும் மன்னிப்பு கேட்டார்.

இது தமிழ் வார்த்தைதானு எப்படி உறுதியா சொல்றீங்க? மதன் கேட்டான்.

இளமாறன் சோனாவை பார்த்தார்.

சோனா பதில் சொன்னாள். குரல் உச்சரிப்பு தொணி. நம்மகிட்ட இருக்கற சில பழைய தகவல்களோடு ஒத்துப்போகிறது. நீங்க அந்த குரல் பதிவு செஞ்ச சி.டியை கண்டுப்பிடிச்சது தமிழ் மொழி மியூசியத்துல. சி.டி உடைந்து கிடந்தது. கார்பன் டெஸ்ட் செய்தோம். கிபி 2008 ஆம் வருடம் இந்த சிடி உருவாக்கப்பட்டிருக்கலாம். அந்தக் காலத்தில் தமிழ் பேசியவர்கள்தான் இதை பதிவு செய்திருக்க வேண்டும்.

எப்படி சொல்ற? - மீண்டும் மதன் கேட்டான்.

சி.டியோட ஒரு துண்டுல 16X 47GB னு போட்டிருக்கு. கிபி 1990 வரை பிளாப்பி பயன்பாட்டில் இருந்தன. பிறகுதான் சிடிக்கள் வந்தன. 2020க்கு பிறகு சிடிக்கள் புழக்கத்தில் இல்லைனு நம்மக்கிட்ட ஒரு வரலாற்று குறிப்பு இருக்கு.

இளமாறன் மதன் தோளில் ஆறுதலாக தட்டிகொடுத்தார்.

சுபாவை பார்த்தார். எங்க உங்ககிட்ட இருக்கற பதிவு செய்த நம்ம குறுந்தகடை போடுங்க. சுபா மீண்டும் நெற்றியில் ஒட்டியிருந்த ஸ்டிக்கர் பொட்டை சுழல விட்டாள். அந்த குரல் ஒலித்தது. கேலக்ஸி ஆய்வுக்கூடத்தில் எஞ்சி தப்பிய இருபது தமிழர்களும் அந்த குரலைக் கேட்டார்கள். அந்தக் குரல் ஒலித்தது இப்படி....

ஹே தோளுமிய்ய
ஹே தார்மிய்ய
ஹே தோளுமிய்ய தயா
ஹே பையா ஹே பைய்யா
ஹே தயா ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா
ஹே தூம தூம பைய
ஹே தூமிலே தூமிலே
தூம தூம கோயா

அதற்கு பிறகு எதுவும் இ‌ல்லை.

11 comments:

 1. ஹே அடக் படக் டிமிக்கடிக்கிற டோலிமையா டப்ஸா
  உட்டா பாரு கப்ஸா!

  மொழி நடையில் உள்ளது! இது நிச்சயமாக தமிழே தான்! இந்த தமிழை தான் நாம் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்!

  ReplyDelete
 2. வால்பையன் - இ‌து போன்ற இலக்கியமெல்லாம் தொகுக்க வேண்டிய காலக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இல்லாவிட்டால் கி.பி 3500 ல் நாம் சந்ததிகள் நம்மை பற்றி ஒரு முடிவுக்கு வர முடியாது. :)

  ReplyDelete
 3. ரொம்ப ஆர்வமா படிச்சேன்.. வாழ்த்துக்கள் நண்பரே!

  ReplyDelete
 4. நன்றி தமிழ் பிரியன்
  -என்.விநாயக முருகன்

  ReplyDelete
 5. ம்ம், அறிவியல் புனைவுகளில் கற்பனைக்கு எல்லையே இல்லை. சுவாரஸ்யம். All the best.

  அனுஜன்யா

  ReplyDelete
 6. நன்றி அனுஜன்யா
  -என்.விநாயக முருகன்

  ReplyDelete
 7. நன்றாக இருக்கிறது தொடர்ந்து எழுதுங்கள் நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 8. நன்றி தோழரே...
  ஒரு நிமிடம் பயந்துவிட்டேன். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் எ‌ன்று பயமுறுத்தும் தொணியில் சொல்கிறீர்களோ எ‌ன்று. தாங்கள் சிம்பு ரசிகரோ எ‌ன்று. நல்லவேளை வீட்டுக்கு ஆட்டோ அனுப்பாமல் வாழ்த்தி Follower ஆனதற்கு மீண்டும் நன்றி வடிவேலன்.

  ReplyDelete
 9. படிப்பவரை கடைசி வரி வரைக்கும் சுண்டி இழுத்து போகும் கதை..
  மிகவும் நன்றாக இருந்தது..

  ReplyDelete
 10. நன்றி தோழரே...
  அது என்னங்க பெயர் நிழல்?

  ReplyDelete
 11. வாவ்! இதே கருத்துள்ள கதையை நானும் எழுதியுள்ளேன். தமிழ் அழிவு, க்ரையானிக்ஸ் என ஆச்சர்யமூட்டும் ஒற்றுமை :)

  இங்கே http://beyondwords.typepad.com/beyond-words/2009/05/shortstory_sciencefiction.html

  ReplyDelete