தமிழ் ஸ்டுடியோ மின்னிதழில் 'கதை சொல்லி' என்றொரு அற்புதமான பகுதி இருக்கிறது. அதில் தமிழின் முக்கியமான சிறுகதை ஆளுமைகளின் படைப்புகளை யாராவது ஒரு படைப்பாளியை விட்டு விமர்சனம் செய்ய சொல்கிறார்கள். ஆடியோ ஃபார்மெட்டில் கேட்க அருமையாக இருக்கிறது.
எ.ஸ்.ராமகிருஷ்ணின் "மிருகத்தனம்" என்ற சிறுகதையை மனுஷ்யபுத்திரனின் உணர்ச்சிகர குரலில் கேட்க முடிந்தது. மிருகத்தனம் சிறுகதையை மனுஷ்யபுத்திரன் விவரித்த விதம் அருமை. குறிப்பாக சுஜாதாவின் "வெள்ளைக்கப்பல்" சிறுகதையை மனுஷ்யபுத்திரன் விவரித்து விமர்சனம் செய்திருந்த பகுதியை ரசித்து கேட்டேன். சுஜாதாவின் சிறுகதைகளை பற்றி எனக்கு சில கருத்துகள் உண்டு. பொதுவாக சிறுகதைகள் எழுதும்போது கதாபாத்திரங்கள் மனஓட்டங்கள், புறச்சூழல் வழியாக கதையை நகர்த்த வேண்டும். ஆனால் சுஜாதாவின் கதைகளில் கதாபாத்திரங்களின் உரையாடல்கள் வழியாக அவர்கள் பேசும் வசனம் மூலமாக கதையின் மைய ஓட்டம் கட்டமைக்கப்பட்டிருக்கும். சுஜாதா கதைகளில் கதாபாத்திரங்கள் அதிபுத்திசாலியாக பேசுவார்கள். சுஜாதா வசனம் எழுதிய திரைப்படங்களிலும் இதே போக்கை காணலாம். எனவேதான் பெரும்பாலும் சுஜாதா கதைகள் நாடகம் என்ற கலைவடிவத்துக்கு (சினிமாவுக்கு கூட) நெருக்கமாக இருந்தது. வெள்ளைக்கப்பல் சிறு கதையை மனுஷ்யபுத்திரன் விமர்சனம் செய்த மனுஷ்யபுத்திரனும் இதே கருத்துகளை சொல்லி சொல்லி முடித்திருந்தார். எனக்கென்னவோ சுஜாதா சிறுகதைகளை விட எஸ்.ரா கதைகள் பிடித்துள்ளது. எஸ்.ராவை தமிழின் இந்த நூற்றாண்டில் பிறந்த மாபெரும் கதை சொல்லி என்று கூறலாம். முன்பு சொன்னபடி கதாபாத்திரங்கள் மனஓட்டங்கள், புறச்சூழல் வழியாக கதையை நகர்த்த வேண்டும். எஸ்.ராவை மாபெரும் கதை சொல்லி என்று கூற நான் தேர்வு செய்வது இந்த இரண்டு காரணிகளை வைத்துதான். "வெள்ளைக்கப்பல்" சிறுகதையை விட, எஸ்.ராவின் "மிருகத்தனம்" சிறுகதையை மனுஷ்யபுத்திரனால் ரசித்து உணர்ச்சிகரமாக கூறமுடிந்தது. மிக நுட்பமாக விவரிக்க முடிந்தது. அவரது குரலை கேட்டு பாருங்கள்.கூடு இதழில் வெளிவரும் இந்த கதைசொல்லி பகுதி புதுமையாக இருக்கின்றது. ஆர்வமாக தொடர்ந்து கேட்க ஆரம்பித்துள்ளேன். ஆதவன்,லா.ச.ரா குறிப்பாக எனது ஆல்டைம் ஃபேவரைட் அசோகமித்திரன் சிறுகதைகளை கேட்க ஆர்வமாக இருக்கிறது.
உண்மை தான் அருமையான மேற்கோள்கள்
ReplyDeleteநன்றி
ஜேகே