Tuesday, February 2, 2010

நான்கு கவிதைகள்

முன்னாள் காதலிகளை சந்திக்கையில்
———————————————————————————————

முன்னெப்போதும் இல்லாத
முன்னெச்சரிக்கையோடு
வார்த்தைகளை தேடிப்பிடித்து
பேச வேண்டியுள்ளது
ஒரு சதுரங்க ஆட்டத்தின்
நேர்த்தியோடும் சாதுர்யத்தோடும்
செயல்பட வேண்டியுள்ளது
எப்படி முடிப்பது ஆட்டத்தையென்று
உதறல் எடுக்கிறது

பலநேரங்களில்
அங்கிளுக்கு பை சொல்லுடாவென்று
அவர்களே செக்மேட் வைத்து
முடித்து விடுகிறார்கள்


கடைசிக் கோப்பை
——————————————————
கடைசிக்கோப்பை மதுவைப்பற்றி
கவிஞர்கள் பலர் சிலாகித்ததுண்டு

கிறிஸ்து அருந்திய
கடைசிக்கோப்பையும் கூடவே
முப்பது வெள்ளிக்காசுகளும் நினைவிலாடுகிறது

முத‌ல் கோப்பை மதுபோல
நண்பர்களோடு மோதி
போலியாக சந்தேகிக்க தேவையில்லை

ஒரு விருந்தில்
கடைசிக்கோப்பை மதுவின்போது
மேலாளரை நான் செருப்பால் அடிக்க
அவரும் சிரித்தபடி ஆமோதித்தது
நினைவிலாடுகின்றது

கடைசிக்கோப்பை
மதுவை குடிக்கும்போது
எதைக் கடித்தாலும் ருசிக்கின்றது

முத‌ல் காதலியின்
முத‌ல் முத்தம் போன்று
அவ்வளவு மகிழ்ச்சியானது

அவ்வளவு மூர்க்கமானது
அவ்வளவு கிக்கானது

பிரச்சினை என்னவென்றால்
கடைசிக்கோப்பை எதுவென்று
கணக்கு வைத்துக்கொள்வதுதான்


பின்னர்
-------
இந்த ஊரில்
எனக்கு தெரிந்து
எத்தனையோ பேர் இறந்துவிட்டார்கள்
கடைசியாக
எனக்கே எனக்கு மட்டும்
தெரிந்த ஒருவரும் இறந்துபோனா‌‌‌ர்
அதற்குபின்னர்
யார் இறந்ததும் எனக்கு தெரியவில்லை


பரிசோதனை
------------
மின்சார ரயிலில் கேட்டது
யாரோ யாரிடமோ
சொல்லிக்கொண்டிருந்தார்
சாவற வயசா சார்? அவனுக்கு.....
இப்படி அல்பாயுசல போயிட்டானே...
கலவரமாகிவிட்டது எனக்கு
சக்கரை கொழுப்பு போல
மாதாமாதம் இனி
சாவற வயசையும்
சரிபார்க்க வேண்டும்

6 comments:

  1. 3 & 4 சூப்பர். மற்ற இரண்டும் ரசிக்கத்தக்கவை.

    ReplyDelete
  2. நண்பரே அத்தனை கவிதைகளும் அருமை. அதிலும், ’பின்னர்’ கவிதை... அடேயப்பா! எவ்வளவு சொல்ல முடிகிறது உங்களால்....!!!

    ReplyDelete
  3. எனக்கு பிடிச்சது... மொத இரண்டு..

    ReplyDelete
  4. எனக்கு முதல் கவிதை ரொம்ப பிடிச்சிருக்குதுங்க விநாயகமுருகன்

    ReplyDelete
  5. நண்பரே நன்றாக இருந்தது,

    முதல் கவிதை ரொம்பவும் ரசிக்க முடிந்தது

    ஜேகே

    ReplyDelete
  6. அன்பு வினாயகமுருகன்,

    உங்கள் கவிதைகள் நிறைய படித்திருக்கிறேன்... ரொம்பவும் எளிமையாகவும், அர்த்தம் பொதிந்ததாகவும் இருக்கிறது... வாழ்த்துக்கள்.

    எனக்கு மூன்றாவது கவிதை ரொம்ப பிடித்தது... மடித்து வைத்த கை விசிறி மாதிரி, விரித்தவுடன், எத்தனை வண்ணங்களை எறிகிறது.

    அன்புடன்
    ராகவன்

    ReplyDelete