Tuesday, July 13, 2010

அப்படி ஒரு காலம்

நன்றி உயிரோசை 12.07.2010


உடல் நிலை சரியில்லாததால் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்து வீட்டில் படுத்துக் கிடந்தேன். நண்பகல் இருக்கும். அபார்ட்மெண்ட் வாசலில் கூர்க்கா யாருடனோ கத்தியபடி வாக்குவாதம் செய்யும் சத்தம் கேட்டது. பால்கனியிலிருந்து கீழே பார்த்தேன். ஒரு சேல்ஸ்மேன் கையில் பஞ்சு பொம்மைகளுடன் கெஞ்சிக் கொண்டிருந்தான். பாவமாக இருந்தது. எங்கள் அபார்ட்மெண்டின் விதிகளில் ஒ‌ன்று சேல்ஸ்மேன்களைக் கண்டிப்பாக உள்ளே விடக்கூடாது.

"பொம்மை சார்…பொம்மை.." அந்தக் குரல் என்னை இருபது முப்பது வருடங்கள் முன்பு பால்யத்திற்கு அழைத்துச் சென்றது. அப்போதெல்லாம் இதுபோன்ற விதவிதமான குரல்கள் நண்பகலில் தெருக்களில் சுற்றிக் கொண்டேயிருக்கும்.

"பயனீ…பயனீய்" எ‌ன்று காலையில் ஒரு குரல் தெருவில் கேட்கும். ஒரு பெண் தலையில் மண்பானையுடன் பதநீர் விற்றுக்கொண்டு வருவாள். "ஓமத்திராகம்ம்ம்ம்" எ‌ன்று ராகத்துடன் இழுத்தபடியே தலையில் முண்டாசுடன் ஒருவர் சென்றுகொண்டிருப்பார். முண்டாசிற்கு மேல் கூடைக்குள் கண்ணாடி பாட்டில்கள் இருக்கும். பாட்டில்களில் ஓமத்திராவகம் இருக்கும். குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமப்பொடியை உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும்.ஓமப்பொடியைத் துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும்.ஓமத்திரவம் விற்பவனிடம் அரை மணி நேரமாவது மக்கள் பேசுவார்கள். அவன் குடிக்க தண்ணீர் கேட்பான். நீராகாரமே தருவார்கள். சிறுகூட்டம் அவனைச் சுற்றி இருக்கும். தேவைப்படுவோர் ஓமத்திராவகம் வாங்குவர்கள்.

அரைமணி நேரத்தில் "சாணேய்ய்…சாணேய்ய் புடிக்கலீயா.." இன்னொரு ராகம் கேட்கும். ஒரு முரட்டு மீசைக்காரர் தோளில் ஒரு இயந்திரம் தொங்கும். வீட்டில் உள்ள அரிவாள்மனை, கத்திகளுக்கு சாணை (கூர் ‌தீ‌ட்டுத‌ல்) பிடிப்பார்கள்.

"ஏம்பா அது ஆரு? மொகவெட்டு பார்த்தமாதிரி இருக்கே." திண்ணையில் அமர்ந்திருக்கும் ஒரு கிழவி நெற்றியில் கைவைத்து கூராக பார்க்கும். சாணை பிடிப்பவன் பக்கத்தில் இருக்கும் ஏதாவது சிற்றூர் அல்லது கிராமத்தின் பெயரை சொல்லி அறிமுகப்படுத்திக்கொள்வான். கூடவே இன்னார் பேரன் என்றோ இன்னார் என் சித்தப்பா என்றோ சொல்ல கிழவியும், சாணை பிடிப்பவனும் அரைமணிநேரம் திண்ணையில் பேசிக்கொண்டிருப்பார்கள். கிழவியிடமிருந்து சாணை பிடிப்பவனுக்கு வெற்றிலை பாக்கு இலவசமாகக் கிடைக்கும்.

"வாயில் பொடவேய்ய்ய்….. " இன்னொரு ராகம் ஒலிக்கும். தெருவில் உள்ள பெண்கள் எல்லாம் ஓடிவர ஆண்களுக்கு எரிச்சலாக இருக்கும். ஒரு பெ‌‌ரிய வீடு அல்லது திண்ணைக்குச் சென்று விதம் விதமாய் அவன் புடவைகளைக் காண்பித்துக் கொண்டிருப்பான். இரண்டு ரூபாய் கொடுத்தால் கூட போதும். மீதம் வாரத் தவணை அல்லது மாதத் தவணையில் வாங்கிக் கொள்வான். நம்பிக்கைதான் அப்போது ஆதாரம். தேன் விற்றபடி ஒருவன் சைக்கிளில் வருவான். திண்ணையில் கதைப் பேசிக் கொண்டிருக்கும் பெருசுங்க அவனைச் சுற்றி நின்று கொள்வார்கள். கொல்லிமலையில எடுத்தது என்பான். இ‌து வெறும் சக்கரை தண்ணீப்பா- இன்னொரு ஆள் கையில் ஊற்றி நக்கிப் பார்த்துச் சொல்ல, தேன் வியாபாரிக்கு மூக்கில் கோவம் வரும். "சக்கரைத் தண்ணினா‌‌‌ காசு கூட கொடுக்க வேணாம். இனா‌‌‌மா எடுத்துக்கோ"- சொல்ல ஒரு பெருசு தேனை எடுத்து ஆராய்ச்சி செய்யும்.

"பழைய அண்டா..குண்டா…பித்தள பாத்திரத்துக்கு ஈயம் பூசலியோ ஓஓ..ஈயம்" எ‌ன்று ஒரு குரல் ஒலிக்கும். தெருமுனையில் மரத்தடியில் ஈயம் பூசுபவன் மகனோ, மனைவியோ அமர்ந்து துருத்தியால் காற்று அடித்துக் கொண்டிருப்பார்கள். தீக்கங்குகள் மின்மினிக்கள் போல பறக்கும். ஈயம் பூசித் தருபவன் வீடு, வீடாகச் சென்று அண்டா, குண்டாக்களை வாங்கியபடி மரத்தடிக்குச் செல்வான். அடுத்த அரைமணி நேரத்தில் ஒரு வயதான பெரியவர் தோளில் மஞ்சள் பையுடன் வருவார். அம்மி கொத்தலையோ ஓஓ..அம்மி எ‌ன்று குரல் கொடுப்பார். வரிசை, வரிசையாக எறும்பு ஊர்வது போல அம்மிக் கொத்துவார். "என்னமா வீட்டுள்ள கருவாட்டுக் குழம்பா…?" பேசிக்கொண்டே வேலையைக் கவனிப்பார். சிவப்பாய் உயரமாய் ஒருவர் வருவார். "வல்லீலீஈஈ… வல்லீலீஈஈ" எ‌ன்று குரல் ஒலிக்கும். வேறொன்றுமில்லை. வளையல் என்பதைத்தான் அவர் அப்படி சொல்கிறார் என்று அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டும். அநேகமாக எல்லாருமே இப்படித்தான். பொருட்களைக் கூவிக்கூவி விற்பதால் நாளடைவில் எழுத்துகளை சுருக்கி ராகம் போல மாற்றிவிடுவார்கள். குரல்கள் தெருக்களில் ஒலித்துக் கொண்டேயிருக்கும். பழைய ஈயம் பித்தளைக்கு பேருச்..ச..ம்ப..லம்...!!" புலியாமுத்து.. இருக்கா புலியாமுத்..தோ...ய்"


ஒவ்வொரு குரலும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். கட்டைக்குரல். கீச்சுக்குரல் என்று. ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வொரு தாளலயம் இருக்கும். சில குரல்கள் பழகியவர்களுக்கு மட்டுமே புரியும்படி சங்கேதமாய் இருக்கும்.அலுமினியப் பாத்திரங்கள் விற்பவர் விநோதமாய் கூவிக்கொண்டு வருவார். ஒரு வார்த்தைகூட புரியாது. ஒரு சைக்கிளில் பாத்திரக்கடையையே தொங்கிக் கொண்டு வருவது பார்க்க அதிசயமாய் இருக்கும். புடவை வியாபாரிகள் போலவே இவர்களும் தவணையில் விற்பார்கள். சிலர் பழைய பாத்திரங்களையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்துப் புதுபாத்திரங்கள் வாங்கிக் கொள்வார்கள்.

பிற்பகல் தெருக்களில் குறிசொல்பவர்கள், கைரேகை சொல்பவர்கள்,கிளி ஜோஸ்யமென்று குரல்கள் நிரம்பியிருக்கும். சிலருக்குப் பழைய சோறு கூட கிடைக்கும். உண்டு விட்டு ஏதாவது மரத்தடியில் குட்டித்தூக்கம் போடுவார்கள். யாராவது ஒரு பொடியன் கிளியிடம் வம்பு இழுக்க கிளி ஜோஸ்யக்காரன் தூக்கத்திலேயே அதட்டுவான். மாலை வேளைகளில் தேங்காய்பன், கைமுறுக்கு,சோன் பப்டி எ‌ன்று விதவிதமாய் விற்றுக் கொண்டு வருவார்கள்.

தெருக்கள் முழுதும் குரல்கள் ததும்பிக் கொண்டேயிருக்கும். யாரும் கதவை அடைத்துக் கொள்ள மாட்டார்கள். இவர்கள் யாருமே எங்கள் ஊரைச் சேர்ந்தவர்களாய் இருக்க மாட்டார்கள். ஆனா‌‌‌ல் இவர்கள் இல்லாமல் எங்கள் ஊர் தெருக்களில் உயிரோட்டம் இருக்காது. இப்போதெல்லாம் தெருக்களில் அலைபவர்களை மக்கள் சந்தேகத்துடனேயே பார்க்கின்றார்கள். ஒருவித வெறுமையுடனும், இனந்தெரியாத பயத்துடனும் இருக்கிறது பெருநகரத் தெருக்கள். பால்யகால தெருக்கள் பற்றிய நினைவுகள், வேப்பங்கிளைகளிலிருந்து உதிரும் மழைத் தூறலைப் போல இருக்கிறது.

முந்தைய கட்டுரைகள் 1 2

4 comments:

 1. இன்னும் அனேகம் பேரைக் காணவில்லை முருகன்.

  உப்பு விற்கும் செட்டியார், எண்ணெய்ச் செட்டியார், பம்பாய் மிட்டாய்க்காரன், ப்யாஸ்கோப்புத் தாத்தா, ஆப்பம் விற்கும் ஆயா, தொடர்ந்து சைக்கிள் ஓட்டுபவர்.

  இன்னும் சொல்லலாம். நல்ல ஞாபகக் கிளறல் இது.

  ReplyDelete
 2. உங்கள் எழுத்து நடை மிகவும் அருமை. சில நிமிடங்கள் நான் என் பிறந்த கிராமத்திற்கு பயணித்து திரும்பினேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. கண்கள் கலங்கியது விநாயகம்.

  ReplyDelete
 4. நன்றி ஜரின்
  நன்றி உதய்
  நன்றி பா.ரா

  ReplyDelete