Wednesday, July 21, 2010
காற்றுக்கென்ன வேலி…கடலுக்கென்ன மூடி
கிம்கிடக் படங்களின் சிக்கலே இதுதான். அவரது படங்களில் மிக மிக அபூர்வமாகவே வசனம் இருக்கும். படம் முழுதும் அமைதியாக செல்லும். அந்த அமைதியே கத்திபோல மனதில் இறங்கும். நாலு நாள் தூங்க முடியாது. படத்தின் அமைதி காதுக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கும். சற்று முன் ரயில் கடந்து சென்ற தண்டவாளம் போல மனது தடதடத்துக் கொண்டிருக்கும்.
டே-சாக் (Tae-suk ) க்கிற்கு ஒரு கெட்டப்பழக்கம். கெட்டப்பழக்கம் என்று கூட சொல்லமுடியாது. விநோத பழக்கம். ஆளில்லா வீட்டிற்குள் உரிமையுடன் நுழைந்து, அந்த வீட்டில் சிலநாட்கள் தங்கியிருந்து விட்டு திரும்பிவிடுவான். அந்த வீட்டிலிருந்து ஒரு தூசியை கூட களவாடமாட்டான். ஆனால் அந்த வீட்டின் உரிமையாளர்கள் போலவே சமையலறையில் நுழைந்து சமையல் செய்வான். அவர்கள் படுக்கையில் படுத்துக்கொள்வான். அவர்கள் டாய்லெட்டை உபயோகப்படுத்துவான். அவர்கள் வீட்டை சுத்தம் செய்வான். இறைந்துக்கிடக்கும் அழுக்கு துணிகளை துவைத்து அயர்ன் செய்வான். கையோடு கொண்டுசெல்லும் டிஜிட்டல் கேமாராவால் அந்த வீட்டின் அறைகளில் நின்று அவனையே போட்டோ எடுத்துக்கொள்வான். வெளியூர் சென்று செல்லும் வீட்டின் உரிமையாளர் வருவதற்குள் வீட்டிலிருந்து மாயமாக மறைந்து கம்பி நீட்டி விடுவான். எதையும் திருடி செல்லமாட்டான்.
தினமும் டே-சாக் தெருவில் மோட்டார் சைக்கிளுடன் செல்வான். வீடுவீடாய் சென்று கதவுகளில் விளம்பர பேப்பர்களை தொங்கவிட்டு செல்வான். மாலையில் வீடு திரும்பும் நபர்கள் கதவை திறந்தால் அந்த விளம்பர பேப்பர்களை எடுத்து விடுவார்கள். அப்படி யாரும் விளம்பர பேப்பர்களை எடுக்காத பட்சத்தில் அந்த வீட்டின் உரிமையாளர் ஊரில் இல்லை என்று அர்த்தம். டே-சாக் அதுபோன்ற வீடுகளில் ஒன்றை தேர்வு செய்து இரண்டு நாள் தங்கிவிட்டு செல்வான். டே-சாக் உண்மையில் ஒரு வித்தியாசமான திருடன் இல்லை சைக்கோ இல்லை.. சொல்ல தெரியவில்லை. அவன் வித்தியாசமானவன். யாருக்கும் அவனால் தொந்தரவு இல்லை. நீங்கள் இல்லாத இடத்தில் அவன் இருப்பான். அவன் இருக்கும் இடத்தில் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
வழக்கம்போல டே-சாக் ஒரு பூட்டப்பட்டுள்ள வீட்டிற்கு செல்கிறான். பூட்டை கள்ளசாவி போட்டு திறக்கிறான். சமையல் செய்கிறான். துணிகளை துவைக்கிறான். புகைப்படம் எடுத்துக் கொள்கிறான். ஆனால் அந்த பூட்டப்பட்டுள்ள வீட்டில் அவனை தவிர இன்னொரு நபரும் இருப்பது அவனுக்கு தெரியாது. அவன் அந்த வீட்டிற்குள் வநதது முதல் அவன் செய்யும் எல்லா செயல்களையும் அமைதியாக கண்காணித்தபடியே ஒரு ஜோடி கண்கள் இருக்கின்றது. அந்த கண்களுக்கு சொந்தக்காரி ஷன்-யவா(Sun-hwa). அவள் கணவன் கோபத்தில் சண்டை போட்டு அவளை அடித்து துன்புறுத்தி வீட்டிற்குள் வைத்து பூட்டி வெளியூர் சென்று விடுகிறான். அது தெரியாமல் டே-சாக் அந்த வீட்டிற்குள் நுழைந்துவிட்டான்.
டே-சாக் அந்த வீட்டின் அழுக்கு துணிகளை எடுத்து துவைக்கிறான். ஷன்-யவா அமைதியாக வீட்டின் இன்னொரு மூலையில் இருந்தபடி அவனது செயல்களை கவனிககிறாள். அவளுக்கு அவனது செயல்கள் ஆச்சர்யமாக இருக்கிறது.டே-சாக் சமைத்து சாப்பிட்டு வீட்டின் பின்புறம் கோல்ப் விளையாடுகிறான். டே-சாக்கிற்கு பிடித்த விளையாட்டு கோல்ப். ஷன்-யவா வீட்டின் கண்ணாடி சன்னல் வழியே அவனையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். இரவு வருகிறது. அந்த வீட்டின் படுக்கையில் படுத்தபடி பாலியல் கிளர்ச்சியுடன் கனவு காண்கிறான். ஷன்-யவா அவனையறியாமல் படுக்கையறை வாசல்கதவு பின் நின்றபடி கவனிககிறாள். திடீரென சலனம் கேட்டு திரும்பும் டே-சாக் அங்கு அமைதியாக நின்றபடி அவனையே வெறித்தபடி பார்க்கும் ஷன்-யவாவை பார்த்துவிடுகிறான். திடுக்கிட்டு படுக்கையிலிருந்து எழுகிறான். ஆளில்லா வீட்டில் நுழைந்தால் இதென்ன ஒரு பெண் இருக்கிறாளே என்று மனதில் நினைத்தபடி மெதுவாக எழுந்து வாசலுக்கு ஓட பார்க்கிறான். தொலைபேசி ரிங் அடிக்கிறது. ஷன்-யவா மெல்ல நடந்து சென்று தொலைபேசியை எடுக்கையில் டே-சாக் வேகமாக அந்த வீட்டிலிருந்து நழுவ பார்க்கிறான். ஷன்-யவா பயங்கர சத்தத்துடன் கத்தியபடியே தொலைபேசியை வைக்க, அந்த சத்தத்தில் திகைத்துபோய் டே-சாக் நின்றுவிடுகிறான். கணவன் அடித்து துன்புறுத்தியதால் ஷன்-யவா கன்னம், உதடுகளில் ரத்தம் கட்டி வீங்கியிருக்கிறது. அவள் ஏக்கத்துடன் டே-சாக்கை பார்க்கிறாள். ஷன்-யவாவை பார்த்தபடியே
டே-சாக்கை அந்த வீட்டிலிருந்து வெளியேறுகிறான்.
சாலையோரமாக மோட்டார்சைக்கிளை நிறுத்திவிட்டு டே-சாக் சிந்திக்கிறான். அவன் மனம் தடுமாறுகிறது. அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த சோகமும்,ஏக்கமும் அவனை தடுமாற வைக்கிறது. மோட்டார்சைக்கிளுடன் மீண்டும் அந்த வீட்டிற்கு திரும்புகிறான். அவன் திரும்பும் முன் அந்த பெண்ணின் கனவன் அங்கு வந்து விடுகிறான்.
ஷன்-யவாவுக்கும் அவளது கணவனுக்கும் வாக்குவாதம் நடக்கிறது. அமைதியாக அடி உதையை வாங்கி அமர்ந்திருக்கும் ஷன்-யவாவுடன் அவளது கணவன் முரட்டுத்தனமாக உடலுறவு வைக்க முயல்கிறான். வீட்டின் பின்புறம் நிற்கும் டே-சாக் அந்த காட்சியை பார்த்தபடியே வெறியோடு கோல்ப் பந்தை மட்டையால் அடிக்கிறான். பந்து சத்தம் கேட்டு ஷன்-யவா அதிர்ச்சியுடன் கண்ணாடி சன்னல் வழியாக பார்க்கிறான். திடீரென தன் வீட்டிற்குள் ஒரு மூன்றாவது நபர் நுழைந்து கோல்ப் ஆடுவது கணவனுக்கு திகைப்பாக இருக்கிறது. ஆத்திரமடைகிறான். மனைவியை சந்தேகமாய் பார்க்கிறான். டே-சாக்கை திருடனென்று நினைத்து செல்போனில் போலீஸை அழைத்தபடியே பதற்றத்தோடு வெளியே வருகிறான்.டே-சாக் நிதானமாக கோல்ப் மட்டையால் பந்தை அடிக்க, பந்து ஷன்-யவா கணவனை பதம் பார்க்கிறது. டே-சாக் ஷன்-யவாவை பார்க்கிறான். அவள் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக நிற்கிறாள். அடுத்த பந்தை எடுத்து குறிவைத்து அடிக்கிறான்.கையிலிருந்த செல்போனை பறிக்கிறது. ஷன்-யவாவின் கணவன் செயலிழந்து சுருண்டு கிடக்கிறான். டே-சாக் அமைதியாக அந்த வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் அமர்கிறான். ஆக்சிலரேட்டரை திருகி சப்தமெழுப்ப, ஷன்-யவா வீட்டை விட்டு வெளியே வந்து பின்சீட்டில் அமர்கிறாள். ஒரு வார்த்தைக்கூட பேசாமல் அவர்கள் இருவரும் பைக்கில் செல்கிறார்கள்.
பிறகு டே-சாக் தான் செல்லும் பூட்டிகிடக்கும் வீடுகளுக்கெல்லாம் ஷன்-யவாவையும் அழைத்துச் செல்கிறான். கொடுமைக்கார கணவன் பிடியிலிருந்து தப்பி வந்த ஷன்-யவாவுக்கு டே-சாக் மீது இனம் புரியாத காதல். பூட்டிகிடக்கும் ஆளில்லா வீடுகளில் அவர்கள் இருவரும் ஒன்றாக தங்குகிறார்கள். சமைக்கிறார்கள். துணி துவைக்கிறார்கள். புகைப்படம் எடுத்துக்கொள்கிறார்கள். உறங்குகிறார்கள். இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்வதேயில்லை. மவுனம் அவர்களது பொது மொழியாக இருக்கிறது. மவுனத்தால் இருவரும் ஆயிரம் விசயங்களை பரிமாறிக்கொள்கிறார்கள். இருவரும் ஒருமுறை பூட்டி கிடக்கும் ஒரு வீட்டிற்கு செல்லும்பொது அந்த வீட்டின் உரிமையாளர் திடீரென வந்துவிடுகிறார். அவர் ஒரு குத்துச் சண்டை வீரர். டே-சாக்கை செமத்தியாக மொத்தி அவனுடன் ஷன்-யவாவையும் வெளியே துரத்தி விடுகிறான். இன்னொரு பூட்டிகிடக்கும் வீட்டுக்கு செல்லும்போது அங்கு ஒரு வயதான பெரியவர் அநாதையாக நுரையீரல் புற்றுநோயால் ரத்தம் கக்கி இறந்துகிடப்பதை பார்க்கிறார்கள். அதிர்ந்து போய் ஓட முயற்சி செய்யும் டே-சாக் கையை பிடித்து தடுக்கும் ஷன்-யவா அமைதியாக அந்த பெரியவரின் உடலை பார்க்கிறாள். இருவரும் சேர்ந்து அந்த பெரியவரை ஒரு துணியில் கட்டி ஒரு ஈமச்சடங்கிற்கு உரிய அனைத்து மரியாதையுடன் அவரை ஒரு சவப்பெட்டியில் வைத்து வீட்டின் பின்புறம் புதைத்துவிடுகிறார்கள்.
வெளியூர் சென்றிருக்கும் அந்த பெரியவரின் குடும்பம் முன்னதாக வீட்டிற்கு வந்துவிட அவர்கள் டே-சாக்கையும்,ஷன்-யவாவையும் திருடர்கள் என்று நினைத்து விடுகிறார்கள். இருவரையும் போலீஸில் பிடித்து கொடுத்து விடுகிறார்கள். பணத்துக்காக நடந்த கொலை என்று போலீஸ் சந்தேகப்படுகிறது. டே-ஷாக் கையிலிருக்கும் கேமராவில் அவன் படம் எடுத்த வீட்டின் புகைப்படங்களை எல்லாம் பார்த்து அந்த வீட்டின் உரிமையாளர்களுடன் விசாரணை செய்கிறார்கள். அவர்கள் எதுவும் திருடு போனதாக புகார் கொடுக்காத நிலையில் அந்த பெரியவர் இயற்கையாக மரணமடைந்ததாக போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் சொல்கிறது.
ஆனால் ஷன்-யவாவின் கணவன் அவன் மனைவியை கடத்தி வந்துவிட்டதாக காவல்துறை மேலதிகாரியிடம் புகார் தருகிறான். காவல்துறை மேலதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து டே-சாக்கை ஜெயிலில் தள்ளுகிறான். வலுக்கட்டாயமாக வீட்டுக்கு வரும் மனைவியிடம் அன்பாக இருப்பது போல நடிக்கிறான்.ஷன்-யவாவுக்கோ டே-சாக் நினைவாகவே இருக்கிறது. முன்பு டே-சாக்குடன் சென்ற வீடுகளுக்கெல்லாம் அவள் தனியாக சென்று வருகிறாள்.
கிம்கிடக்கின் படங்களுகே உரிய ஒருவித புதிர்த்தன்மையோடு கூடிய குறியீடுகள் இங்குதான் ஆரம்பிக்கின்றது. ஜெயிலில் இருக்கும் டே-சாக் யார் கண்ணிலும் படாமல் மறைவாக இருக்க விரும்புகின்றான். அடிக்கடி ஜெயில் கதவுகளின் மேல், சுவர்களின் மேல் ஏறி மறைந்துக்கொள்கிறான். அவனை காணாமல் திகைக்கும் காவல்துறை அதிகாரிகள் அவனை கண்டுபிடிக்கும் போதெல்லாம் அடித்து துவைக்கிறார்கள். ஒருமுறை சாப்பாடு கொண்டுவரும் காவலர் பின்னால் மறைந்துக்கொள்கிறான். அவன் தப்பித்துவிட்டதாக நினைக்கும் காவலர் அதிர்ச்சியடைகிறார். காவலர் முதுகுக்கு பின்னால் மறைந்து நிற்கும் டே-சாக் நிழல் ஜெயில் சுவரில் விழுகிறது. அவனது நிழலசைவை வைத்து கண்டுப்பிடிக்கும் காவலர் அவனை அடித்து துவைக்கிறார்.
டே-சாக் இப்போதெல்லாம் காற்றை விட வேகமாக நகர நிழலை விட வேகமாக மறையும் பயிற்சி எடுக்கிறான். மனிதர்களின் கண்களிலிருந்து மறைய விரும்புகிறான். இந்த உலகிலிருந்து துண்டித்துக்கொள்ள விரும்புகிறான். நிழலை வைத்துக்கூட அவனை யாரும் கண்டுபிடிக்க முடிவதில்லை.ஜெயிலுக்குள் வரும் காவலர் டே-சாக்கை காணாமல் திகைத்து போகிறார். காவலர் இடதுப்பக்கம் திரும்பும்போது டே-சாக் அவரது வலதுப்பக்கம் மறைந்துக்கொள்கிறான். காவலர் வலதுபக்கம் திரும்பும்போது டே-சாக் அவரது இடதுப்பக்கம் மறைந்துக் கொள்கிறான். அவர் பின்னால் திரும்பினால் டே-சாக் மின்னல் வேகத்தில் அவரது முதுகிற்கு பின்னால் சென்று மறைந்துக்கொள்கிறான்.அவன் நிழலை கூட கண்டுபிடிப்பது சவாலாக இருக்கிறது. டே-ஷாக் காற்றில் கரைந்துவிட்டான். அவன் காற்று. அவன் மனம். இரண்டுமே எடையற்றவை. அவனை ஸ்தூல உடலோடு பார்க்க முடியாது. அவனை பார்க்க சூட்சும உடல் வேண்டும். இந்த உலகில் டே-சாக்கை இரண்டு பேர் மட்டுமே பார்க்க முடியும்.ஒன்று டே-சாக் . இரண்டாவது ஷன்-யவா. டே-ஷாக் ஷன்-யவா சேர்ந்தார்களா? படம் அழகிய கவிதை போல முடிகிறது.
படத்தில் ஷன்-யவா டே-ஷாக் இடையே ஒருவரி கூட வசனம் இல்லை. அவர்களுக்குள் ஓராயிரம் காதல் இருக்கிறது. படம் முழுக்க அமைதி.அமைதி.அமைதி. படம் முடிந்ததும் அந்த அமைதி பார்வையாளர்களது மனதிற்கு இடம்பெயர்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
அருமையான விமர்சனம் ...வாழ்த்துக்கள்
ReplyDeleteதலைப்பே வித்தியாசமாக இருந்தது . அதற்கு தகுந்தாற்போல் உங்களின் விமர்சன பதிவும் அருமை . பகிர்வுக்கு நன்றி .
ReplyDeleteபுது படத்தையும் கதை நயத்தையும் அருமையாக விமர்சித்திர்கள் விநாயகமுருகன்...
ReplyDeleteஅறிமுகத்திற்க்கு நன்றி எனக்கு இது புதிது
ஜேகே
ஒன்னுமே சொல்ல தோனல...
ReplyDeleteநன்றி சரவணன்
ReplyDeleteநன்றி பனித்துளி சங்கர்
நன்றி ஜேகே
நன்றி அசோக்